வெள்ளி, 5 ஜூலை, 2019

திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்-பகுதி:2
                           ஸ்ரீதர ஐயாவாள்

{ஐயாவாள் வீட்டுக் கிணற்றில்,கங்கை பொங்கி வந்த கதையைப் பார்ப்போம்}

ஒருமுறை ஐயாவாள் வீட்டில் சிரார்த்தம் வந்தது.பிராமணர்கள் சாப்பிடுவதற்காக வீட்டில் சமையல் தயார் செய்யச் சொல்லிவிட்டு காவிரியில் குளிக்கக் கிளம்பினார் ஐயாவாள்.வழியில் யாரோ ஓர் ஆசாமி பசியால் துடித்துக் கொண்டிருந்தான்.அவனது நிலையைப் பார்த்ததும் ஐயாவாள் மிகவும் வருந்தினர்.கொஞ்சமும் தாமதிக்காமல் அவனைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.பிரமாணர்களுக்கென்று ஆசாரத்துடன் சமைத்து வைக்கப்பட்டிருந்த சிராத்த உணவை அவனுக்குக் கொடுத்தார்.பசியால் தவித்த அந்த ஆசாமியை ஈசனின் வடிவமாக எண்ணி போஜனம் செய்வித்து அனுப்பினார் ஐயாவாள்.பிறகு சாஸ்திரக் கோட்பாடுகள் கருதி வீட்டை மறுபடியும் நீரால் கழுவி சுத்தம் செய்தார்.புதியதாக வேறு ஆசாரமான சமையல் தயாராவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.இன்னொரு முறை ஸ்நானம் செய்வதற்காகக் காவிரிக்கரைக்குச் சென்றார்.எல்லாம் வீட்டில் தயாரான பின் உணவு உண்பதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அந்தணர்களை வீட்டுக்கு அழைத்தார்.ஐயாவாளின் மேல் வெறுப்பில் இருந்த சில அந்தணர்கள் இன்னும் மனம் மாறாமல் இவரைக் காயப்படுத்துவதற்குத் தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தனர்.

சிராத்தம் நடக்கும் நாளன்று பிராமணர் அல்லாத ஆசாமியை அழைத்து போஜனம் செய்து வைத்திருக்கிறார்.எனவே இவரது வீட்டுக்கு எந்த ஓர் அந்தணரும் சிராத்த உணவு உட்கொள்ளச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.சாஸ்திரப்படி இது தவறில்லை என்று ஐயாவாள் எவ்வளவோ விளக்கியும் எவரும் சமாதானம் அடையவில்லை.இறுதியில் ஐயாவாளை ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகச் சொல்லி அவரை விலக்கி வைத்துவிட்டனர்.எல்லாம் ஈசனின் செயலே என்று தீர்மானித்து அன்றைய சிராத்தத்தை பிரமாணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்து முடித்தார் ஐயாவாள்.இதோடு முடியவில்லை அந்த அவஸ்தை.அடுத்த சில நாட்களுக்குள் ஐயாவாள் இல்லத்தில் இன்னொரு சிராத்தம் வந்தது.அதையாவது பிராமணர்களை வைத்து முறையாக நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஐயாவாள்.

எனவே ஏற்கனவே வீட்டுக்கு வருவதாக இருந்த பிரமாணர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டு தகுந்த பிராயச்சித்தம் செய்யத் தயாராக இருந்தார்.அதன்படி பிராமணர்களைச் சந்தித்துக் கேட்டார்.அதற்கு கங்கையில் மூழ்கிவிட்டு வந்தால் உங்களை மீண்டும் எங்களோடு இணைத்துக் கொள்கிறோம்.உங்கள் வீட்டில் நடக்கும் சிராத்தத்தில் சாப்பிட வருகிறோம் என்றனர்.நீங்கள் இப்போது சொன்ன பிராயச்சித்தம் சற்று கடினமாக இருக்கிறது.அத்தனை தூரம் யாத்திரை செல்ல எனது உடல் நலம் ஒத்தழைக்காது தவிர அடுத்தடுத்த நாட்களில் என் முன்னோருக்குச் செய்ய வேண்டிய சிராத்தங்களும் வருகின்றன.எனவே இப்போது நான் பயணிக்க முடியாது.வேண்டுமானால் கங்கையை இந்த இடத்துக்கே வரவழைத்து ஸ்நானம் செய்துவிடுகிறேன்.எனக்கு மீண்டும் ஆதரவளியுங்கள்.ஓகோ கங்கே கங்கே என்று கங்காதேவியை நினைத்து துதித்து உம் வீட்டுக் கிணற்றில் முழுகிவிட்டால் கங்கையில் குளித்த பலன் கிடைத்துவிடும் என்று பார்க்கிறீரா?அப்படியே இனத்தாரோடு சேர்ந்துவிட்டலாம் என்று கணக்குப் போடுகிறீர்களா?என்றெல்லாம் கேலி பேசினர்.

அதற்கு ஐயாவாள் உறுதியாக நான் கங்கையில் ஸ்நானம் செய்கிறேன் என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.எல்லோரும் பார்க்கும்படி காசியம்பதியில் ஓடும் கங்காநதியை இந்தத் திருவிசநல்லூருக்கு வரவழைத்து பொங்கிப் பிரவகிக்கும் கங்கை நீரில் ஸ்நானம் செய்கிறேன் என்றுதான் சொன்னேன் என்றார்.இதைக் கேட்டு அங்கு திரண்டிருந்த அந்தணர்கள் அனைவரும் எகத்தாளமாகச் சிரித்தனர்.பிறகு அவர்களில் ஒருவர் என்ன ஓய் உமக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?கங்கையை எப்படி உம்மால் வரவழைக்க முடியும்?என்று பரிகசிக்க அனைவரும் கைகொட்டிச் சிரித்தனர்.ஐயாவாளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.மிகவும் மனம் வருந்தி தன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் உள்ள கிணற்றடிக்குச் சென்றார்.கங்காஷ்டகம் எனும் ஸ்தோத்திரத்தை மனம் உருகிப் பாடினார்.ஈசனின் அம்சாவதாரமான ஐயாவாள் உருகி அழைக்க அங்கே கங்கை வந்ததில் வியப்பு என்ன இருக்க முடியும்?ஆம் ஐயாவாளுக்கு அருகில் இருந்த கிணற்றில் கங்கையானவள் பொங்கிப் பெருகி கடகடவென்று வெளியே வழிந்தாள்.பல மாநிலங்களை வாழ வைக்கும் கங்காதேவிக்கு திருவிசநல்லூர் என்கிற சிறு கிராமம் எம்மாத்திரம்?

அக்ரகார வீதி எல்லாம் கங்கை நீர் கொப்பளித்து ஓடியது.இதுவரை ஐயாவாளைப் பரிகசித்து வந்த அந்தணர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.தெருவெங்கும் வெள்ளம்.இனியும் இது தொடர்ந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அந்தணர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஐயாவாளின் இல்லத்துக்கு ஓடோடி வந்தனர்.ஐயா எங்களை மன்னிக்கவேண்டும்.உங்களைத் தவறாக நினைத்து விட்டோம்.நீர் உண்மையிலேயே மகா புருஷர்தான்.கங்கையை உடனே அவளது பிரதேசத்துக்குத் திருப்பி அனுப்பவிடும் என்று பதறினார்கள்.ஐயாவாளின் முகத்தில் மலர்ச்சி.திருவிசநல்லூர் வாழ் அந்தணர்களே புனிதமான இந்த கங்கையில் நான் ஸ்நானம் செய்துவிட்டேன்.கங்கை இப்போது போய்விட்டால் நீங்கள் எல்லாம் வெகுதூரம் பயணித்துத்தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.எனவே எல்லோரும் இப்போதே ஸ்நானம் செய்து கொள்ளுங்கள் என்றார்.ஆனால் திருவிசநல்லூர் அந்தணர்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு முற்றிலும் அகலாததால் அப்போது ஸ்நானம் செய்யும் எண்ணத்தில் அவர்கள் இல்லை.

ஐயாவாளே உண்மையான சாதுக்களிடம் சகல தீர்த்தங்களும் வாசம் செய்கின்றன.எனவே உம் வடிவில் கங்கையை நாங்கள் தரிசிக்கிறோம்.அந்த பாக்கியமே எங்களுக்குப் போதும்.இந்த கங்கையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.சரி கங்கா ஸ்நானம் வேண்டாம் என்று இப்போது நீங்கள் சொன்னாலும் உலகத்தாரின் நலனுக்காக கங்காதேவியானவள் என்றென்றும் இந்தக் கிணற்றில் வாசம் செய்யட்டும்.இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுலபமாக கங்கா ஸ்நானம் செய்யட்டும் என்று கூறிய ஐயாவாள் ஸ்லோகம் ஒன்றைச் சொல்லிப் பிரார்த்திக்க கங்காதேவியானவள் அந்தக் கிணற்றுக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள்.
இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் நடந்தது.எனவே இப்போதும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அந்தக் கிணற்றில் கங்காதேவி பொங்கி வருகிறது.எனவே இந்தப் புனித நாளில் இங்கு ஸ்நானம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள்.மகான் வரவழைத்த கங்கையில் நீராடினால் சகல வளங்களும் வாழ்வில் பெருகும்.

திருநாமம் : ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்

தலம் : திருவிசநல்லூர் என்கிற திருவிசநல்லூர்

சிறப்பு : ஸ்ரீ ஐயாவாள் திருமடம்

எங்கே இருக்கிறது : கும்பகோணத்தில் இருந்து காவிரிக்கரை ஓரமாகச் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு;கும்பகோணத்திலிருந்து 2, 2ஏ, 2பி, 38 ஆகிய நகரப் பேருந்துக்கள் உண்டு.தவிர தனியார் பேருந்துகளும் உண்டு.இறங்க வேண்டிய இடம்:திருவிசநல்லூர் மடம்.அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்தால் ஐயாவாள் மடத்தை அடைந்துவிடலாம்.

தொடர்புக்கு:ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சாரிடபிள் டிரஸ்ட்
திருவிசநல்லூர் அஞ்சல்,பின்கோடு 612 105.
வேப்பத்தூர் வழி,கும்பகோணம் ஆர்.எம்.எஸ்
தஞ்சை மாவட்டம்;போன்:0435-246 1616.

கருத்துகள் இல்லை: