செவ்வாய், 14 ஜூலை, 2015

பூண்டி ஆற்று ஸ்வாமிகள்
ஒரு நாட்டை ஆளும் மன்னர் தன் பணி நிமித்தம் எல்லா இடங்களுக்கும் சென்று நிறை குறைகளைக் கண்டறிவது இயலாத ஒன்று.அது போன்ற சந்தர்ப்பங்களில் தன் அந்தஸ்துக்குச் சமமான பிரதிநிதிகளை(மந்திரிகளை)குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி தகவல்களை அறிந்து வரச் சொல்வார்.இது அரசாட்சிக்கு மட்டுமில்ல...ஆன்மிகத்துக்கும் பொருந்தும்.இங்கே மன்னன் என்பவன் மகேசனுக்கு சமம் மந்திரி என்பவர் மகான்களுக்குச் சமம்.மேலே சொன்ன உதாரணத்தைப் போல் தன் ஒருவனால் மட்டும் குடிமக்களைப் பாதுகாக்க முடியாது என்று கருதியோ என்னவோ மகான்களைத் திக்கெங்கும் அவதரிக்க வைத்தான் ஆண்டவன்.இறைவனிடம் மக்கள் வேண்டும் வரங்களை தங்களின் தவ பலத்தால் வழங்கினார்கள் மகான்கள்.அவர்களது பிணிகளைத் தீர்த்தார்கள்.இவரிடம் போ...உனது பிரச்சனை தீரும் என்று பகாவனே சில மகான்களை அடையாளம் காட்டி அனுப்பி வைத்த நிகழ்வுகளையும் நம் புராண வரலாற்றில் படித்து இன்புறலாம்.இந்திரியங்களை அடக்கி ஆண்ட மகான்கள் இந்தியாவில்தான் பெருமளவில் பிறப்பெடுத்தார்கள்.உலகளாவிய ஆன்மிகத்தில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.இந்த மண்ணில் நிகழ்ந்த இதிகாசங்களும் புராணங்களுதான் ஆன்மிகத்தின் தேவையையும் அவசியத்தையும் அனைவருக்கும் அடிகோடிட்டுக் காட்டின.உதாரணத்துக்கு ராமாயணத்தையும் மகாபாரத்தையும் சொல்லலாம்.
ஆன்மிகம் என்பது தினமும் கோயிலுக்குப் போய் தொழும் கடவுள் வழிபாடு மட்டுமல்ல..கருணை தொண்டு பரோபகாரம் போன்ற நற்சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்ள வேண்டும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.அதுவே சிறந்த ஆன்மிகம்.இப்படிப்பட்ட நற்குணங்களுடன் வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள்தான் மகான்கள்.இறப்பு என்பது இவர்களது தேகத்துக்குத்தானே தவிர ஆன்மாவுக்கு அல்ல.இன்றும் பல அதிஷ்டானங்களில் இவர்கள் சூடசுமமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.உள்ளன்போடு தன்னைத் தேடி வரும் பக்தர்களை ஆசிர்வதித்து அருள்கிறார்கள் அவர்களுடன் பேசுகிறார்கள்.மகான்களில் பலர் கருவில் இருந்து உருக் கொண்டதாகத் தெரியவில்லை.அப்படி என்றால் எவ்விதம் இந்த பூமிக்கு வந்தார்கள் இவர்களுக்கு ஜனன ஜாதகம் கிடையாதா?ஆன்ம பலத்தை இவர்கள் அடைந்த ரகசியம் புரியாதா?இப்படிப் பல கேள்விகள் விடை தெரியாத புதிர்தான்!ஷீரடி பாபா திடீரென ஒரு நாள் ஷீர்டி கிராமத்தில் வேப்பமரத்தடியில் தோன்றியதாக அவரது திவ்ய சரித்திரம் சொல்கிறது.பூண்டி ஆற்று ஸ்வாமிகளும் அப்படித்தான்!
மிக சமீப காலத்தில் ஸித்தி ஆன சித்த புருஷர் பூண்டி ஸ்வாமிகள்.1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் வளர்பிறை திரயோதசி கூடிய அனுஷ நடசத்திரத்தன்று காலை சுமார் 9.40 மணிக்கு கலசப்பாக்கத்துக்கு அருகில் உள்ள பூண்டி கிராமத்தில் முக்தி ஆனார் இவர்.மூன்று நாட்கள் பக்தர்களின் அஞ்சலி தரிசனத்துக்குப் பின் இவரது உடல் ஆகம விதிப்படி பதும ஆசனத்துடன் சமாதி கண்டது. ஸ்வாமிகளின் உடலை சமாதிக்குள் இறக்கிய பின் அவரது தேகத்தைச் சுற்றி மூட்டை மூட்டையாக விபூதி,தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை இட்டு நிரப்பினார்கள் அவரது பக்தகோடிகள்.நடமாடும் தெய்வம் என்று நாமெல்லாம் போற்றி வணங்கும் காஞ்சி மகா பெரியவரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டவர் இந்த பூண்டி ஸ்வாமிகள்.
பூண்டி ஆற்று ஸ்வாமிகள் என்பது பிற்பாடு வந்த பெயர்.அதற்கு முன் வரை இவர் அழுக்குச் சாமி என்றும் மூட்டைச் சாமி என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.அதற்குக் காரணமும் உண்டு.முதன் முதலாக ஸ்வாமிகள் கலசப்பாக்கத்துக்கு(திருவண்ணாமலை-வேலூர் சாலையில் வரும் ஊர்)வந்தபோது ஓர் அழுக்கு மூட்டையுடன் காணப்பட்டாராம்.தவிர உடலில் ஒன்றன் மேல் ஒன்றாக பல விதமான அழுக்குச் சட்டைகளை அணிந்திருந்தாராம்.அதிலிருந்து இவரை இந்தப் பெயர்களிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள்.ஆற்று ஸ்வாமிகள் என்று இவரை பக்தர்கள் அழைக்க ஆரம்பித்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு.அது 1943-ஆம் வருடம்...கலசப்பாக்கம் ஆற்றில் அப்போது தண்ணீர் இல்லை.எனவே சுட்டெரிக்கும் ஆற்று மணலில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.சூரியனின் வெம்மையான கிரணங்கள் ஸ்வாமிகளைப் பாதிக்கக் கூடாது என்று விரும்பிய உள்ளூர்க்காரர்கள் சிலர் இவர் அமர்ந்திருந்த இடத்துக்கு மேலே நிழல் விழும் வண்ணம் ஒரு கூரையை அமைத்தனர்.இவர் அமர்ந்த நேரமோ என்னவோ...கலசப்பாக்கம் பகுதியில் திடீரென பேய் மழை பிடித்துக் கொண்டது.எங்கெங்கோ கொட்டிய நீரெல்லாம் வடிகால் தேடி கடைசியில் இந்த ஆற்றில் கலந்தது.விளைவு ஆற்றின் இரு கரையெங்கும் தொட்டுக் கொண்டு பிரவாகம் எடுத்து ஓடியது வெள்ளம்.ஸ்வாமிகளுக்குப் போட்டிருந்த கூரை வெள்ளத் தோடு அடித்துக் கொண்டு போய் விட்டது.மழை ஓரளவு விட்ட பிறகு உள்ளூர்க்காரர்கள் சிலர் ஓடி வந்து ஸ்வாமிகள் அமர்ந்திருந்த இடத்தை ஆராய்ந்தனர்.அங்கே கூரையும் தெரியவில்லை ஸ்வாமிகளையும் காணவில்லை.பதைபதைத்துப் போனார்கள்.ஸ்வாமிகள் ஜல சமாதி ஆகி விட்டதாகத் தீர்மானித்து விட்டார்கள்.
மூன்று நான்கு நாட்கள் ஓடின. கலசப்பாக்கம் ஆற்றில் திரண்ட வெள்ளம் மெள்ள வடியத் தொடங்கியது. அப்போது ஆற்றங்கரைக்கு வந்த விவசாயி ஒருவர்.ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.அங்கே-ஸ்வாமிகளுக்கு நிழல் தருவதற்காகப் போடப்பட்டிருந்த கூரையின் ஒரு பகுதி மணலில் குத்திட்டு நின்றிருந்தது.அட ஸ்வாமிகளுக்கு மேலே இருந்த கூரை ஆயிற்றே இது?என்று சந்தேகப்பட்டு அங்கே பள்ளம் பறித்தார்.என்னே ஆச்சரியம்...ஆற்றின் உள்ளே சில அடி ஆழத்தில் ஸ்வாமிகள் எந்த நிலையில் அமர்ந்து நிஷ்டையைத் தொடங்கினாரோ.அதே நிலையில் அப்படியே காணப்பட்டார்.பரம சந்தோஷம் அடைந்த அந்த விவசாயி ஊருக்குள் ஓடிப் போய் விஷயத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டி வந்தார்.பிறகு ஸ்வாமிகளை அவரது நிஷ்டை கலையாமல் மெள்ள வெளியே தூக்கி வந்து கரையில் அமர்த்தினார்கள் ஊர்க்காரர்கள்.வெள்ளத்தோடு போய் விட்டார் என்று கருதப் பட்டவர்.அப்படியே உருக்குலை யாமல் மீண்டு வந்திருக்கிறார் என்றால் இவர் சாதராணப் பிறவி அல்ல என்று தீர்மானித்து அவருக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.
கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த ஆரம்ப நாட்களில் ஊர் எல்லையில் இருக்கும் அடர்ந்த புதருக்குள் சென்று அமர்ந்து அங்கே நிஷ்டையில் கூடி விடுவது வழக்கம். இவர் இருக்கும் இடத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியாது; அவரது தவத்துக்கும் தொந்தரவு இருக்காது.கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் கிராமவாசிகள் இருவர் இவரிடம் வந்தனர்.இருவருமே நண்பர்கள்.ஏதோ ஒரு பிரச்சனையைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்டனர்ஸ்வாமிகளிடம்.வந்தவர்களில் ஒருவனை உன்னிப்பாகக் கவனித்த ஸ்வாமிகள்.நீ மண்ணில் போகப் போகிறாயப்பா என்றார்.ஆனால் அந்த இருவருக்கும் இதன் பொருள் அப்போது விளங்கவில்லை, அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்.மறுநாள் காலை அந்த இருவரின் ஒருவன் இறந்து விட்டான். அவனைப் பார்த்துதான் ஸ்வாமிகள் மண்ணில் போகப் போகிறாய் என்று முதல் நாள் குறிப்பால் சொல்லி இருக்கிறார்.இதன் விளக்கம் பிறகுதான் இன்னொருவருக்குப் புரிந்தது.இப்படி ஸ்வாமிகளின் சித்து விளையாட்டுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன.பூண்டி ஆற்று ஸ்வாமிகளின் சமாதித் திருக்கோயில் அமைந்திருக்கும் இடம் அருகே முன் காலத்தில் ஒரு ஒட்டுத் திண்ணை வீடு இருக்கும்.இந்தத் திண்ணைதான் ஸ்வாமிகளின் குடியிருப்பு.1960-ஆம் ஆண்டு முதல் அவர் சமாதி ஆன1978-ஆம் ஆண்டு வரை சுமார் 19 வருடங்கள் இந்தத் திண்ணையை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.இவர் மல ஜலம் கழித்தோ குளித்தோ எவரும் பார்த்ததில்லை.இதே இடத்தில் அமர்ந்த வண்ணம்தான் தன்னைத் தேடி வந்த பலரது பிரச்சனைகளையும் தீர்த்தாராம்.
அந்தக் காலத்தில் இந்த வீட்டுக்கு எதிரே இருக்கும் டீக்கடைக்காரர் தினமும் காலை வேளையில் டீ கொண்டு வந்து கொடுப்பார்.பெரும்பாலும் எதையும் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் ஸ்வாமிகளுக்கு இல்லை.எனவே அந்த டீக்கடைக்காரரே தான் கொண்டு வந்த டீயை ஸ்வாமிகளின் வாய்க்கு அருகே வைத்து சாப்பிட வைப்பாராம்.இதுபோல் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை தான் விரும்பினால் மட்டுமே உண்பாராம்.வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் தோலை உரித்துக் கொடுத்தால் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே அதை ஒரு மூலையில் தூக்கி எறிந்து விடுவாராம். இப்படித் தூக்கி எறியப்பட்ட பழக் குவியல்களும் உணவுப் பொருட்களும் ஒரு இடத்தில் குவிந்திருக்கும். ஆனால் அதில் இருந்து எந்த விதமான ஒரு தூர்நாற்றம் வராது.மாறாக சுவையான ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும்.பக்தர்கள் சிலர் ஸ்வாமிகளின் வாயில் சிகரெட்டை வைத்து தீக்குச்சியால் பற்ற வைப்பார்கள்.அதை ஒரு இழுப்பு இழுத்து விட்டு தூக்கி எறிந்து விடுவார்.அவரது வாயில் இருந்து புகை வெளியே வராது.இத்தகைய பக்தர்களுக்கு வேறு ஒரு சிகரெட்டையோ பீடியையோ தருவார்.அதை ஸ்வாமிகளின் பிரசாதமாகக் கருதி எடுத்துச் செல்வார்கள்.
ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றி அறிந்த ஒரு பெண்மணி சென்னையில் இருந்து புறப்பட்டு கலசப்பாக்கம் வந்தார்.வருகின்ற வழியில் சில திருடர்கள் இந்தப் பெண்மணியை வழி மறித்து மிரட்டி அவர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை எல்லாம் களவாடிச் சென்று விட்டனர். ஏதடா...ஸ்வாமிகளைப் பார்க்க வந்திருக்கும் இடத்தில் இப்படி ஆகிப்போச்சே?என்று அந்த பெண்மணி அழாத குறைதான்.என்றாலும் ஸ்வாமிகளைத் தேடி ஊருக்குள் வந்திருக்கிறார்.அப்போது ஸ்வாமிகள் ஆற்றங்கரையில் இருந்தார்.களவு போன நகைகளை வேண்டி ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து புலம்பினார்.அதுவரை மவுனமாக இருந்த மகான் விடு...அழுது புலம்பாதே...கலசப்பாக்கத்தில் ஒருவன் இருக்கிறான்.அவனிடம் போய் நான் கேட்டதாகச் சொல்லி ஒரு இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வா...என்று அந்த ஆசாமியின் பெயர் சொல்லி அனுப்பினார்.
தங்க நகைகள் களவு போனதற்கும் இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வருவதற்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையுடனேயே.ஸ்வாமிகள் சொன்ன ஆசாமியிடம் போய் விஷயத்தைச் சொன்னார். அவரும் ஒரு கம்பியை கொடுத்து அனுப்பினார்.அதை பவ்யமாக எடுத்து வந்து ஆற்றில் உலவிக் கொண்டிருந்த ஸ்வாமிகளிடம் கொடுத்தார் பெண்மணி.அந்தக் கம்பியைத் தன் கையில் வாங்கி மேலும் கீழும் பார்த்து விட்டு அடுத்த விநாடியே பெண்மணிடம் கொடுத்தார் மகான்.அதைக் கையில் வாங்கிய பெண்மணியின் விழிகளில் பிரகாசம்.தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.போம்மா போ...இது இப்ப இரும்பு இல்லே.சொக்கத் தங்கம்.புலம்பாம பத்திரமா வீடு போய்ச் சேர் என்று அனுப்பி வைத்தார்.அதுபோல் கை வேறு கால் வேறாகப் பிரித்துக் காண்பிக்கும் ஹடயோகக் காட்சியில் ஒரு சுடுகாடு அருகே ஸ்வாமிகள் இருந்தபோது இதைப் பார்க்க நேர்ந்த கிராமவாசிகள் சிலர் திகைத்துப் போய் விட்டனர்.பிறகு சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஒன்றானபோது வியந்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஏராளமான குடில்கள் உண்டு.1963-ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தங்கி இருந்தார் திருமதி தலையார்கான்(பார்ஸி)சித்தர்கள் சமாதிகளைக் கண்டு தரிசிப்பதற்காக இந்தப் பெண்மணி இங்கு தங்கி இருந்தார்.அப்போது அவரது குடிலில் இருந்து விலை உயர்ந்த தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகள் ஒரு நாள் திருடு போய் விட்டன.உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த அம்மையார் தன் புகாரைத் தெரிவித்தார்.உயர்ந்த இடத்தில் செல்வாக்கு பெற்றவர் இந்தப் பெண்மணி என்பதால் ஏழு பிரிவுகளாக போலீஸ் படை சென்று திருவண்ணாமலையின் சுற்று வட்டாரக் கிராமங்களை முற்றுகையிட்டு திருட்டுக் கும்பலை சல்லடை போட்டுத் தேடியது.
இந்த ஏழு பிரிவில் அரக்கோணம் காவல் நிலையத்தில் சப இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரவரதன் குழுவினரும் ஒரு பிரிவினர்.ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் இரு கான்ஸ்டபிள் ஆகியோருடன் திருட்டுக் கும்பலைப் பிடிக்கப் புறப்பட்டார் சுந்தரவரதன்.அரக்கோணத்தில் இருந்து கிளம்பி போளூர் வந்ததும்.ஒரு கான்ஸ்டபிள் சுந்தரவதனிடம் சார்...பக்கத்திலேயே ஒரு சாமீ இருக்கார்.ரொம்ப ராசியானவர்.அவரைப் பார்த்துவிட்டுப் போனா குற்றவாளியை நாம் பிடிச்சுடலாம் என்றார்.அதன்படி இவர்கள் நால்வரும் போகிற வழியில் பூண்டி ஸ்வாமிகளைத் தரிசித்தனர்.மகானை ஏற்கெனவே அறிந்த கான்ஸ்டபிள்.அவரது வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார்.அதை வழக்கம்போல் ஒரு இழப்பு இழுத்து விட்டுத் தூர எறிந்தார்.பிறகு வேறு ஒரு சிகரெட்டைக் கொடுத்து போ போ...போற காரியம் நல்லா முடியும் என்றார்.பிறகு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்தனர்.குற்றவாளியைப் பிடிக்க இவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட தானிப்பாடி என்கிற கிராமத்துக்கு வந்தனர்.அந்த ஊரில் கேடி கட்டய்யன் என்பவன் போலீஸ் பதிவேட்டில் இடம் பெற்ற திருடன்.ஆகவே அவனது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தலாம் என்று அங்கே சென்றனர் போலீஸார்.இவர்கள் போனபோது மாலை ஐந்து மணி இருக்கும்.கட்டய்யனின் மனைவி மட்டும் அப்போது வீட்டில் இருந்தாள்.புருஷன் எங்கேம்மா?என்று சுந்தரவரதன் விசாரணையை ஆரம்பிக்க...அதற்கு அவர் வயல் வேலைக்குப் போயிருக்காரு.வர்றதுக்கு ராவாயிடும் என்று சொன்னாள்.அப்போது ஸ்வாமிகளிடம் சிகரெட் வாங்கிய கான்ஸ்டபிள்.தம் அடிப்பதற்காகத் தனியே ஒதுங்கி வீட்டின் கொல்லைப் பக்கம் ஒரு வைக்கோல்போர் அருகே வந்தார்.
வீட்டின் உள்ளே பல வகையிலும் சோதித்த குழுவினர்.சந்தேகப்படும்படியாக அங்கே எதுவும் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்தனர்.வந்தவர்கள் தங்களுடன் வந்த கான்ஸ்டபிளை மட்டும் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் சப்இன்ஸ்பெக்டர் தன்னைக் கவனித்து விடப் போகிறாரே என்கிற பயத்தில் சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார் கான்ஸ்டபிள். அப்போது அவர் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது.அதாவது வைக்கோல்போர் திடீரென அசைய ஆரம்பித்தது.இந்த நேரம் பார்த்து சுந்தரவரதனும் அவரது குழுவினரும் இங்கே வந்து விட்டனர். இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சிகரெட்டைப் பட்டென்று கிழே போட்டு அணைத்து விட்ட கான்ஸ்டபிள் சார்...இந்த வைக்கோல்போர் மெள்ள அசையுது சார் என்றார்.அவ்வளவுதான்.... சந்தேகப்பட்டவர்கள் பரபரவெனச் செயல்பட்டு வைக்கோல்போரைப் பிரிக்க முற்பட...உள்ளே கேடி கட்டய்யன் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.பிறகென்ன...அவனைப் பிடித்து முறைப்படி விசாரிக்க...பார்ஸி பெண்மணியிடம் திருடியது தானே என்பதை ஒப்புக் கொண்டான் நகைகள் மீட்கப்பட்டன.
பாத்தீங்களா சார்...பூண்டி சாமீ கொடுத்த சிகரெட்டைப் பத்த வைக்கறதுக்காகத் தோட்டத்துப் பக்கம் மட்டும் நான் போகலேன்னா ஒரு திருடனை இந்நேரம் கோட்டை விட்டிருப்போம்.அதான் சாமியே ஆசிர்வாதம் பண்ணி இந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்திருக்கிறார் போலிருக்கு என்று சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் உற்சாகம் பொங்கச் சொல்லி இருக்கிறார்.அதே போல் திரும்பும்போது பூண்டிக்கு இந்தக் குழு மீண்டும் வந்தது.சிகரெட் கான்ஸ்டபிளைப் பார்த்த பூண்டி மகான் என்னப்பா...போன காரியம் நல்லபடியா முடிந்தா?என்று கேட்க... அந்த போலீஸ் படையே மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது.ஸ்வாமிகளின் சமாதி திருக்கோயில் கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. பலிபீடம் நந்திதேவர் முன்புறம் இருக்க...கருவறையில் லிங்கத் திருமேனியுடன் அதிஷ்டானம் அமைந்துள்ளது.கருவறைக்கு வெளியே இரு பக்கமும் விநாயகர் மற்றும் முருகப் பெருமானின் திருவடிவங்கள் கருவறையில் முன்புறம் லிங்கத் திருமேனி பின்புறம் திருவாசியுடன் ஸ்வாமிகளின் திருவுருவம்.இடக்காலை மடித்து வைத்து வலக் காலைத் தொங்க விட்டபடி சின்முத்திரை காண்பித்து ஸ்வாமிகள் அருள் புரிந்து வருகிறார்.ஸ்வாமிகளின் உற்ஸவர் விக்கிரகமோ நம்மை எல்லாம் ஆசி புரியும் வண்ணம் அமைந்துள்ளதுஸ்வாமிகளுக்கு உடன் இருந்து பணிவிடை செய்த சுப்பிரமணிய சாமி என்பவர் இப்போதும் இங்கே வசித்து வருகிறார்.ஸ்வாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள் இன்றைக்கு அவரது திருச்சந்நிதி தேடி வந்து தங்களது மனக் குறைகளைக் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.அந்தக் குறைகளைத் தானே களைந்து அவர்களைக் காத்து வருகிறார் இந்த அற்புத மகான்!

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு



தியாகராஜர் 'பிரபவ வருடம் பூசத்திங்கள் கிருஷ்ண பட்சம் ஞாயிற்றுக் கிழமை சமாதியடைந்தார். அதற்கு ஆறு நாள்களுக்கு முன்னால் குன்றில் அமர்ந்த படி ராமர் அவருக்குத் தரிசனம் தந்து பூமியில் தியாகராஜரின் காலம் முடியும் நாள் நெருங்கி விட்டது என்று கூறினார். சஹானா ராகத்தில் அமைந்த தியாகராஜரின் 'கிரிவை' என்ற கிருதி இதைத் தெரிவிக்கிறது. பின்னர் அவர் சன்னியாசம் ஏற்று நாதபிரம்மானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். காவிரிக் கரையில் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட அவர் தன் சீடர்களை அழைத்து இருதிகாலத்திற்க்கு பின் தனது உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். சவக் குழியில் எவ்வளவு உப்பு இட வேண்டும் என்பதைக்கூடச் சொன்னாராம். குறிப்பிட்ட அந்த நாளில் பிராமணர்களுக்குத் தானங்கள் அளித்து, பின்னர் தியாகராஜர் சீடர்கள் அவரது கிருதிகளைப் பாடிய படியிருக்க யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். சட்டென்று அவரது சிரசிலிருந்து ஒரு பெரும் ஜோதி வெளிப்பட்டது. தியாகராஜர் சமாதியடைந்தார். ஆங்கில நாள் காட்டியின் படி அன்று 1847 ஆம் வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி, தியாகய்யரின் பேரன் பஞ்சாபகேசய்யா இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

தியாகராஜர் தனது சமாதிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே பல சன்னியாசிகள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். மராட்டிய மன்னர் பரம்பரையின் தூரத்து உறவுக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இந்த இடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து திருவையாறில் காலமான சாதுக்களை அடக்கம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்தது. தியாகராஜரின் சீடர்கள் அவரது சமாதிக்கு மேலே துளசி மாடம் ஒன்றை அமைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜர் முக்தியடைந்த திதியில் பஞ்சாபகேசய்யாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அவரது சீடர்கள் அனைவரும் அதற்காக அங்குக் கூடினர். அப்போதெல்லாம் அது ஒரு ஸிரார்த்தம் போலச் சம்பிரதாயச் சடங்காக எந்த இசை நிகழ்ச்சியும் இல்லாமல் நடந்தது.1855 ஆம் ஆண்டு இருபத்திரெண்டு வயதில் பஞ்சாப கேசய்யா மரணமடைய சீடர்களும் திருவையாறுக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அவரவர் தத்தமது ஊர்களில் திதியை நடத்தினர். பிருந்தாவனம் மறக்கப்பட்டுப் புதர் மண்டியது. 1903 வாக்கில் தியாகராஜரின் சீடர்களில் ஒரு சிலரே எஞ்சியிருந்தனர். இவர்களில் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரும், சுந்தர பாகவதரும் தமது குருவின் சமாதி சிதிலமடைந்திருந்ததை அறிந்து திருவையாறுக்கு வந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் அந்த இடத்தைக் கண்டு பிடித்துப் புனருத்தாரணம் செய்தனர். சமாதியின் பின் பக்கத்தில் தியாகராஜரை பற்றிய குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் அவர்கள் பதித்தனர்.

அன்று தியாகராஜரின் சீடர்களில் மூன்று பரம்பரைகள் பிரபலமாக இருந்தன. வாலாஜாப்பேட்டை தில்லை ஸ்தானம், உமையாள்புரம், வாலாஜாப் பேட்டை பரம்பரை வேங்கடரமண பாகவதர் மற்றும் அவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரிடமிருந்து வந்தது. தியாகராஜர் அவர்களிடமிருந்து நேரடியாகச் சங்கீதம் பயின்ற இவர்கள் அவரைப் பற்றித் தனித்தனியாக வரலாறு எழுதினார்கள். தில்லை ஸ்தானம் பரம்பரை ராம ஐயங்காரிடமிருந்து வந்தது. தியாகராஜரின் கிருதிகளை வரிசைப்படுத்தியவர்களில் முன்னோடி இவர். உமையாள்புரம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தாம் மேலே குறிப்பிடப்பட்ட கிருஷ்ண சுந்தர பாகவதர்கள், தில்லை ஸ்தானம் ராம ஐயங்காரின் சீடர்கள் தில்லை ஸ்தானம் சகோதரர்களான நரசிம்ம பாகவதரும், பஞ்சு பாகவதரும் கும்பகோணத்தில் வசித்து வந்த மூத்தவர்கள். ஹரிகதை வித்தகர். தில்லை ஸ்தானத்தில் வசித்து வந்த இரண்டாமவர் இசைக் கலைஞர். 1908 இல் ஒரு முறை சென்னை சென்ற நரசிம்ம பாகவதர் சென்னை தங்க சாலையிலிருந்த தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில் பல இசைக் கலைஞர்களைக் கூட்டினார். சென்னை நகரத்தின் பழைய சபாக்களில் ஒன்றான பக்தி மார்க்க பிரசங்க சபாவின் செயலாளரான முனுசாமி நாயுடுவும் அந்தக் கூட்டத் திற்கு வந்திருந்ததார். இசைக் கலைஞர்கள் அனைவரும் தியாகராஜரின் இசையினால் வாழ்ந்து கொண்டிருப்பதால் தங்கள் கடப்பாட்டைத் தெரிவிக்கும் முகமாகத் திருவையாற்றில் ஆண்டு தோறும் ஆராதனை விழா எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பாகவதர் சபை முன் வைத்தார். ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்றோர் அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் அதை ஏற்றுக்கொண்டது.

1909 இல் இசைக் கலைஞர்கள் பலரும் ஆராதனையில் பங்கெடுக்க முன் வந்ததால் திருவையாற்றில் ஐந்து நாள் இசை விழா நடத்த வேண்டி வந்தது. ஆராதனைக்கு நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கிய விழா ஆராதனை நாளன்று நிறைவு பெற்றது. இனி வரும் ஆண்டுகளில் இதையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. தில்லை ஸ்தானம் நரசிம்ம பாகவதரும் அவரது சகோதரர் பஞ்சு பாகவதரும் இந்த விழாவிற்கான தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தியாகராஜரின் இசைப் பரம்பரையின் நேரடிச் சீடர்கள் என்பதால் ஆராதனை நாளன்று சமாதிக்கு அபிஷேகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இசைக் கலைஞர்கள் வேறு இரண்டு கட்டுப்பாடுகளை விதித்தனர் ஒன்று பெண்கள் எக்காரணத்தைக்கொண்டும் சமாதியின் முன் பாட அனுமதிக்கப்படமாட்டார்கள் இரண்டு நாதஸ்வரக் கலைஞர்கள் சமாதியிலிருந்து விலகியே இருக்க வேண்டும். மிகச் சிறந்த வித்வான்களைக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கூட்டம் இந்த ஏற்பாட்டிற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஆராதனை நாளன்று இரவில் தியாகராஜர் உருவப்படத்தின் பூப்பல்லக்குப் பவனிக்கு ஏற்பாடு செய்து நாதஸ்வரக் கலைஞர்கள் தங்கள் இசை அஞ்சலியைச் செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 1940வரையிலும் இந்த ஏற்பாடே தொடர்ந்தது.

1909 வாக்கில் ஆராதனை விழா மிகவும் பிரபலமடைந்திருந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு பல கச்சேரிகளுக்கும், ஹரிகதா காலட்சேபங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 1910 இல் விழாவிற்கான நிதி தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. நரசிம்ம பாகவதர் ஆராதனை விழாவில் கலந்து கொள்ளாமல் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் தனியாக நடத்தினார். திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, புதுச்சேரி ரங்கசாமி ஐயர், கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்ற பல இசைக் கலைஞர்கள் அவரது அணியில் இருந்தனர். நரசிம்ம பாகவதர் சகோதரர்களில் மூத்தவர் என்பதால் இவரது அணி 'பெரிய கட்சி' என்று அழைக்கப்பட்டது. பஞ்சு பாகவதர் திருவையாறிலேயே ஆராதனை விழாவை நடத்தினார். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் நேமம் நடேச பாகவதர் பல்லடம் சஞ்சீவ ராவ் போன்றோர் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர். இந்த அணி 'சின்னக் கட்சி' என்று அழைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் விழாக்கள் நடத்தப்பட்டன. நரசிம்ம பாகவதர் 1911 இல்  அதை ஒட்டிய சில ஆண்டுகளிலோ மரணமடைந்த காலம் வரை இந்த நிலை நீடித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு பெரிய கட்சியும் விழாவைத் திருவையாற்றிலேயே கொண்டாடத் தலையிட்டது. இரண்டு கட்சிகளுமே ஆராதனை விழாவைத் திருவையாறிலேயே அதுவும் ஒரே சமயத்தில் நடந்த முடிவு செய்ததால் அங்குப் பதற்றம் நிலவியது. ஏற்கனவே பண நெருக்கடியிலிருந்த சின்னக் கட்சி முக்கியமான சங்கீத வித்வானும் முசிறி சுப்பிரமணிய ஐயரின் குருவுமான சென்னையைச் சேர்ந்த பிரபலஸ்தர் டி.எஸ். சபேச ஐயரை வளைத்து அவரிடம் சென்னையில் நிதிதிரட்டித் தரும்படிக் கேட்டுக் கொண்டது. இந்தக் கட்சி பச்சையப்ப முதலியார் சத்திரத்திலும் பெரிய கட்சி கல்யாண மஹால் சத்திரத்திலும் ஆராதனை விழாவை நடத்தின. ஆராதனை நாளின் போது சின்னக் கட்சி முதலில் சமாதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் பெரியக் கட்சி தனது வழிபாட்டைப் பின்னர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் அமலில் இருந்தது.

இந்தப் பூசலும் கட்சி கட்டலும் பல வித்வான்களை மிகவும் துயரில் ஆழ்த்தின. ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களில் முதன்மையானவர். 1913 இல் பெரிய கட்சியின் அழைப்பின் பேரில் அவர் ஆராதனை விழாவில் கலந்து கொண்டார். ஜனவரி 16 ஆம் தேதி இரண்டு கட்சிகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ததோடு இருவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்தார். ஆனால் சமாதியில் பூஜை செய்வதற்கான உரிமை யாருடையது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தியாகராஜரின் இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருக்கு தான் வழங்கப்பட வேண்டும் என்று சின்னக் கட்சி கூற பெரிய கட்சியோ தியாகராஜரின் தமையனார் சபேசனின் பேரனும் அன்று உயிரோடிருந்த ஒரே வாரிசுமான ராமுடு பாகவதருக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று எண்ணியது. இரண்டு கட்சிகளிடையே கருத் தொற்றுமை ஏற்படவில்லை. முத்தையா பாகவதர் இரு கட்சியினரும் ஒன்று சேரும் வரை ஆராதனை விழாவில் கலந்து கொள்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துச் சென்று விட்டார். 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சின்னக் கட்சி தியாகராஜ பரப்பிரம்ம வைபவ பிரகாச சபை என்று பெயரிட்டுப் பதிவு பெற்ற சபையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டது. சென்னையில் உள்ள பண்டிட் லஷ்மணாச்சாரின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற முதல் கூட்டத்தில் அவர் தலைவராகவும், ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் உதவித் தலைவராகவும், சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் செயலாளராகவும், டி.எஸ். சபேச ஐயர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்ட பஞ்சு பாகவதர் சமாதியில் பூஜை செய்யும் உரிமையை மட்டும் தனக்குத் தக்கவைத்துக் கொண்டார். பதிவு பெற்ற சபையானதால் இந்தச் சபாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்ததோடு ஏகப்பட்ட நிதியும் வசூலானது. இதனால் ஆராதனை விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அந்தச் சபை வரவுசெலவுக் கணக்குகளை மிகுந்த பொறுப்புடன் அச்சிட்டு நன்கொடையாளர்களுக்கு வழங்கியது. பெருகிவரும் கூட்டத்தைச் சமாளிப்பதற்காக1915 இல் பாலாயி சத்திரத்திற்கு மாறிய விழா 1917இல் அங்கிருந்து புஷ்ய மண்டபத்திற்கு நகர்ந்தது.பெரிய கட்சியோ மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையையே தனது நிதி ஆதாரங்களுக்காகப் பெருமளவு சார்ந்திருந்தது. அவரும் மனமுவந்து உதவிவந்தார். சில ஆண்டுகளில் 2000 ரூபாய்வரை வசூலானது.

1918 இல் பண்டிட் லஷ்மணாச்சார் இறக்கவே பூச்சி ஐயங்கார் சின்னக் கட்சி சபையின் தலைவரானார். 1919இல் அவர் இறக்க மாயவரம் வீணை வைத்தியநாத ஐயரும், அவருக்குப் பின் தஞ்சாவூர் கோவிந்த பாகவதரும் தலைவரானார்கள். இவ்விருவருமே பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே மரணமடைந்து விட்டனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக இருந்த சூல மங்கலம் வைத்தியநாத ஐயருக்கு இதனால் பெருங்கிலி உண்டாகி தலைவர் பதவியை ஏற்க மறுத்துச் செயலாளராகவே தொடர்ந்தார். இதன் பிறகு தலைவர் பதவி காலியாகவே இருந்தது. பஞ்சு பாகவதர் இறந்த பிறகு அவரது விருப்பத்திற்க்கு இணங்க அவரது சீடரான ராஜகோபால பாகவதர் சின்னக் கட்சியின் சார்பில் சமாதியில் பூஜை செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டார். பெரிய கட்சியின் சார்பால் ராமுடு பாகவதரே பூஜையைச் செய்து வந்தார்.

1920 களில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும், மலை கோட்டைக் கோவிந்தசாமிப் பிள்ளையும் தத்தமது கட்சிகளின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். இருவருமே பிறரை மதிக்காத சுபாவம் கொண்டவர்கள். இதனால் அவர்கள் பலரைப் பகைத்துக் கொண்டனர். என்றாலும் இருவரும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்ததால் நிதி குவிந்து கொண்டேயிருந்தது. விழா நிகழ்ச்சிகள் மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தப்பட்டன. 1923 இல் வைத்தியநாத ஐயர் வரவுசெலவுக் கணக்குகளைச் சரியாகக் காட்டாததால் கோபமுற்ற சூலமங்கலம் சௌந்திரராஜ பாகவதர், டி.எஸ். சபேச ஐயர், கல்யாணபுரம் விஸ்வநாத சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஸ்ரீதியாகராஜ பரப்பிரம்ம பக்த கான சபா என்ற பெயரில் மூன்றாவது அணி ஒன்றை ஆரம்பித்துப் புஷ்ய மண்டபத்தில் தனியாக விழா எடுத்தனர். இந்த முயற்சி நீடிக்கவில்லை அடுத்த வருடமே அது நின்று போயிற்று. இதனால் சூலமங்கலம் வைத்தியநாத ஐயரின் கை ஓங்கியது. மறு வசத்தில் காஞ்சிபுரம் நாயனா பிள்ளை, நாதஸ்வரக் கலைஞர்களான திருவிடை மருதூர் வீராசாமிப் பிள்ளை, திருவீழிமிழலைச் சகோதரர்கள் ஆகியோர் கோவிந்தசாமிப் பிள்ளைக்குப் பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்தினர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பெங்களூர் நாகரத்தினம் மாளின் வரவும் நிகழ்ந்தது. 'வித்யா சுந்தரி' 'கானகலா விஷாரத்' பெங்களூர் நாகரத்தினம்மாள்.

பெங்களூர் நாகரத்தினம்மாள் 1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மைசூரைச் சேர்ந்த வக்கீல் சுப்பராவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தேவதாசி குலத்தவரான புட்டுலக்ஷ்மிக்கும் பிறந்தார். நாகரத்தினம் பிறந்த சில நாள்களிலேயே பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். தாயும் குழந்தையும் வறுமையில் வாடினர். மைசூர் அரசவையைச் சேர்ந்த சமஸ்கிருதப் பண்டிதரான கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரி என்பவர்  புட்டுலக்ஷ்மிக்கு அடைக்கலம் அளித்தார். அவர் நாகரத்தினத்திற்குச் சமஸ்கிருதம் கற்பித்தார். நாகரத்தினம் மிக விரைவிலேயே அந்த மொழியைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தார். இதைப் பொறுக்க மாட்டாமல் கிரிபட்டர் நாகரத்தினத்திற்கு ஒன்பது வயது இருக்கும் போது தாயையும் மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். துன்பத்திலும் மனம் தளராத புட்டுலக்ஷ்மி தன் மகளை மகாராஜாவே அழைக்கும் படி பிரபலமாக்கிவிட்டு தான் மைசூர் மண்ணை மிதிப்பேன் என்று சூளுரைத்து மைசூரை விட்டு வெளியேறினார். தன் மகளுக்கு நல்ல சங்கீத ஆசிரியரைத் தேடி அலைந்த அவர் காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் உறவினரான தனகோடி அம்மாளைச் சந்திப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். ஆனால் தனகோடி அம்மாளோ வயதாகி மரணப் படுக்கையில் இருந்தார். ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் படியாக இருவருக்கும் சொன்னார்கள். கையில் பணமில்லாத தால் தாயும் மகளும் பெங்களூர் சென்று புட்டுலக்ஷ்மியின் சகோதரர் வேங்கடஸ்வாமி அப்பாவிடம் தஞ்சம் புகுந்தனர். நாகரத்தினத்திற்குச் சங்கீதம் கற்றுத் தருவதற்காகப் பிரபல வயலின் வித்வான் முனிசாமியப்பா ஏற்பாடு செய்யப்பட்டார். அவளுக்கு நாட்டியமும் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளும் கற்பிக்கப்பட்டன. ஆண்டுக் கட்டணமான நாற்பது ரூபாயைப் புட்டுலக்ஷ்மி பெரும்பாடுபட்டுத் தேற்றிக் கொடுத்து வந்தார். பின்னர் நாகரத்தினம் மைசூரின் பெரிய வித்துவானான பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்டார். கிருஷ்ணப்பா வீணை சேஷண்ணாவிடம் சங்கீதம் பயின்றவர். சேஷண்ணா மைசூர் சதாசிவராவின் சீடர். சதாசிவராவ் வாலாஜாப் பேட்டை வேங்கடரமண பாகவதரிடம் சங்கீதம் கற்றவர். இப்படியாக நாகரத்தினமும் தியாகராஜரின் இசைப் பரம்பரையில் ஒருவரானார். நாகரத்தினத்திற்குப் பதினான்கு வயதிருந்த போது புட்டுலக்ஷ்மி இறந்தார்.

1893 இல் வீணை சேஷண்ணாவின் இல்லத்தில் கச்சேரி நடத்துவதற்காக நாகரத்தினம் அழைக்கப்பட்டார். வெற்றிகரமாக நடந்த அந்தக் கச்சேரியைப் பற்றிக் கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் தன் மகள் ஜெயலக்ஷ்மி மணி ருதுவான போது இசை நிகழ்ச்சி நடத்த நாகரத்தினத்திற்கு அழைப்பு விடுத்தார். தன் தாயாரின் சூளுரைக்கு ஏற்ப நாகரத்தினம் அரசின் அழைப்பிற்கிணங்கி மைசூர் மண்ணில் முதல் முறையாகக் காலடி எடுத்து வைத்தார். கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரியும் அதில் கலந்து கொள்ள வேண்டிவந்தது. இந்தக் கச்சேரிக்குப் பிறகு நாகரத்தினம் அரசவைக் கலைஞரானார். இத்தருணத்தில் மைசூர் நீதிபதியான டி.நரஹரி ராவ் அவருக்கு ஆதரவாளரானார். 1903 இல் நாகரத்தினம்மாள் இசைத் தட்டு உலகிலும் பரபரப்பாகப் பேசப்பட்டார். கல்கத்தா கௌஹர் ஜானைப் போல அவரும் கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியாவின் இசைத் தட்டுகளுக்காகப் பாடத் தொடங்கினார். அது தென்னிந்தியா முழுவதும் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தது. 1905 இல் சி.எஸ். ராஜரத்தின முதலியாரின் ஆதரவோடு சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர் ஜார்ஜ் டவுன் சீனிவாச அய்யர் தெருவில் பத்தாம் இலக்க வீட்டை அமர்த்திக் கொண்டார். கிரகப் பிரவேசத்தன்று பிடாரம் கிருஷ்ணப்பா கன்னடக் கிருதிகள் அமைந்த கச்சேரி ஒன்றை நிகழ்த்தினார். இதற்குப் பரிசாக அவருக்கு வைர மோதிரம் அளிக்கப்பட்டது. சென்னையில் பூச்சி ஐயங்காரின் ஆதரவும் கிடைத்தது. சம்பாதித்த பணத்தை நாகரத்தினம்மாள் நல்ல முறையில் முதலீடு செய்ததால் அவருக்கு வருமானம் பெருகியது. வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர் இவர் தான். மாறிவரும் சமூகச் சூழலை உன்னிப்பாக அவதானித்து வந்த அவர் சதிர்க் கச்சேரியின் காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்து அதை நிகழ்த்துவதை விட்டு விட்டார். ஹரிகதையும் கர்நாடக சங்கீதமும் நிகழ்த்துபவரானார்.

அவரது புகழ் எங்கும் பரவியது. சமஸ்கிருதத்தில் அவருக்கிருந்த திறமை கலைஞர்களிடமிருந்தும் வித்வான்களிடமிருந்தும் அவருக்குப் பெருமை பெற்றுத் தந்தது. 1929 இல் சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம மாநாட்டை அவர் தனது சமஸ்கிருத உரையோடு தொடக்கி வைத்தார். 1905 க்கும் 1934 க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் 116 நகரங்களில் 1235 நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார்.1934 இல் வெளியான சனாதன தர்ம பிரசார சபா விழா மலரில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் யு.பி. கிருஷ்ணமாச்சார் என்ற அறிஞர் பட்டியலிட்டுள்ளார். ராஜ முந்திரியில் நடந்த கண்ட பேர விழாவில் அவரைப் பாராட்டி இரட்டைக் கவிஞர்களான திருப்பதி வேங்கடேசக் கவிகள் சமஸ்கிருதக் கவிதை வாசித்தனர். மேலும் அவருக்குச் சந்தன மாலையுடன் வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதில் நடந்த விவாதம் ஒன்றின் போது திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்த முத்துப் பழனி என்பவர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமஸ்கிருத பண்டிதர் என்று சபையிலிருந்த அறிஞர்கள் குறிப்பிட்டனர். அவர்களின் அறியாமையைக் கண்டு நாகரத்தினம் பெரும் வியப்படைந்தார். அந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர் 18 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மனின் ஆசைக்கிழத்தியான முத்துப் பழனி என்பவர் தான் என்ற விவரம் அவருக்குத் தெரியும். அவர் தனது மறுப்பைத் தெரிவித்த போது அங்கிருந்தவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. சென்னை திரும்பியதும் அவர் முத்துப் பழனியின் இன்னொரு நூலான காமரசம் நிரம்பிய 'ராதிகா சாந்தவனமு' என்ற நூலை வெளியிட்டு தன்னைப் போன்ற தேவதாசிகள் பலரும் பெரிய சமஸ்கிருத வித்வான்கள் என்பதை நிரூபிக்க முயன்றார். 1911 இல் வாவில்லா ராமசாமி சாஸ்திரிலு அண்ட் ஸன்ஸ் வெளியிட்ட அந்த நூல் சீர்தருத்தவாதியான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது. அன்று போலீஸ் கமிஷனராக இருந்த கன்னிங்காம் புத்தகத்தின் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனால் அந்தப் புத்தகத்தின் புகழ் அதிகரித்தது. அது தடை செய்யப்பட்டது. 1947 இல் தான் அந்தத் தடை நீங்கியது.

நாகரத்தினம்மாளுக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே வந்தது. பல விருதுகளும் பதக்கங்களும் அவருக்குக் கிடைத்தன. என்றாலும் தனக்கு ஒரு குழந்தையில்லாதது அவருக்குப் பெரும் துயரத்தை அளித்து வந்தது. இதனால் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தார். ஆனால் அந்தப் பெண் 1921 இல் அவளது பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் நாகரத்தினம்மாளுக்கு விஷம் கொடுக்க முயன்றதாகச் சந்தேகம் ஏற்பட்டது. நல்ல காலமாக நாகரத்தினம் அந்த விஷமிடப்பட்ட பாலை அருந்தவில்லை. அந்தப் பெண்ணுடனான உறவை அவர் அத்துடன் முறித்துக் கொண்டார். அந்த ஆண்டு அவருக்குத் தியாகராஜரின் உருவப்படம் ஒன்று கிடைத்தது. அதை வழிபட ஆரம்பித்தார். தியாகராஜர் ஒரு நாள் அவர் கனவிலும் தோன்றினார். நாகரத்தினம்மாளுக்கு அவர்தான் தன்னை விஷத்திற்குப் பலியாவதிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் தான் அவரது குரு பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தியாகராஜர் சமாதியின் பரிதாப நிலை பற்றி எழுதப்பட்டிருந்தது. நாரத்தினம்மாள் உடனடியாகத் திருவையாறு புறப்பட்டுச் சென்றார்.

நாகரத்தினம்மாளும் தியாகராஜ ஆராதனையும்....

பெரிய கட்சியில் அவரது நண்பர்கள் பலர் இருந்ததால் நாகரத்தினம்மாள் அந்தக் கட்சியின் ஆதரவை முதலிலேயே வென்று விட்டார். சமாதி இருந்த இடம் ராஜா ராமண்ணாஜி சூர்வே என்பவரது வசமிருப்பதாக அவர்கள் மூலமாகத் தெரியவரவே நாகரத்தினம் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை விற்பதில் சட்டரீதியான வில்லங்கங்கள் இருந்தாலும் நாகரத்தினம் தனது வசமுள்ள சில சொத்துகளை மாற்றாக வைத்து ஒருவழியாக ஏற்பாடு செய்து விட்டார். இரண்டு கட்சிகளும் நடப்பவற்றை அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. நாகரத்தினம்மாள் சற்றும் தாமதியாமல் தனது சொந்தச் செலவிலேயே தியாகராஜரின் கற்சிலை ஒன்றைச் செய்வித்துப் பிருந்தாவனத்தின் முன் பிரதிஷ்டை செய்தார். சின்னக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் இந்தச் சிலையைப் பற்றி மோசமாகப் பேசி வந்தார். பிருந்தாவனத்தை விக்கிரகம் மறைப்பதாக ஒரு சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. நாகரத்தினம்மாள் அந்த இடத்தை வாங்கி விட்டதால் எவராலும் எதுவும் பேச முடியவில்லை. சமாதியின் மீது கோவில் எழுப்புவதற்கான அடிக்கல் 1921 ஆண்டு அக்டோபர் 27 இல் இடப்பட்டுப் பணியும் தொடங்கியது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு கட்சிகளின் ஆராதனை விழாக்களும் நடந்து வந்தன, ஒரே ஒரு வித்தியாசத்துடன். பெரிய கட்சி ஆராதனை நாளன்று தனது விழாவைத் தொடங்கி ஐந்து நாள்கள் நடத்தியது. சின்னக் கட்சி ஆராதனைக்கு நான்கு நாள்கள் முன்பாகத் தனது விழாவைத் தொடங்கி ஆராதனையன்று முடித்துக் கொண்டது. எப்படியோ திருவையாறு மக்களுக்கு ஒன்பது நாள்கள் தொடர்ச்சியாக நல்ல விருந்து கிடைத்தது வயிற்றுக்கும் செவிக்கும்.

கோயில் பணி 1925 இல் முடிந்து கும்பாபிஷேகம் ஜனவரி 7 இல் நடந்தது. ராமுடு பாகவதர் தினசரிப் பூசைக்கான பூசாரியாக நாகரத்தினம்மாளால் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு சின்னக் கட்சியின் விழா மூன்றாம் நாள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையும், நாகரத்தினம்மாளும் திருவையாறு சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஐயரிடம் சென்று இரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விழாவை நடத்த வில்லை என்றால் அங்குச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழக்கூடும் என்பதை எடுத்துக் கூறினர். அவர் சின்னக் கட்சியினரைச் சென்று பார்த்து பெரிய கட்சியினரோடும் நாகரத்தினம்மாளோடும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சந்திப்புக்கு ஏற்பாடாகிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கோவிந்தசாமிப் பிள்ளைக்கும், வைத்தியநாத ஐயருக்கும் தகராறு மூண்டதால் இரு கட்சியினரும் பரஸ்பரம் விழாக் கொண்டாட்டங்களை நடக்க விடுகிறேனா பார் என்று மிரட்டிக் கொண்டார்கள். அன்று மாலை சின்னக் கட்சியினர் வைத்தியநாத ஐயர் அரியக்குடி [அவர் அப்போது அந்தக் கட்சிக்கு வழி நடத்துபவராக மாறியிருந்தார்] இருவரின் தலைமையில் திருவையாறு மாஜிஸ்திரேட் ஏ.வி. சுப்பையாவைச் சந்தித்து ஆராதனை விழா நடக்கும் மறுநாள் 'பந்தோபஸ்து' தரும்படி கேட்டுக் கொண்டனர். மாஜிஸ்திரேட் இரண்டு கட்சியிரையும் அழைத்து ஆராதனையன்று காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் பெரிய கட்சி தனது பூஜைகளை முடித்துக் கொள்ள வேண்டும். சின்னக் கட்சியினர் ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பூஜை செய்வதற்குச் சமாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் உத்தரவு இட்டார். எல்லாம் சுமுகமாக நடப்பதற்காகப் போலீஸ் காவலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மறுநாள் நாகரத்தினம்மாளும் கோவிந்தசாமிப் பிள்ளையும் ராமுடு பாகவதரைப் பெரிய கட்சியின் பூஜையை ஒன்பது மணிக்குள் முடிக்கச் சொல்லி சமாதிக் கோவில் கதவைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டனர். பூஜைக்காக வந்த சின்னக் கட்சியினர் போலீஸை அழைத்தனர். போலீஸ் பூட்டை உடைக்க உத்தர விட்டது. ஆனால் ராமுடு பாகவதர் சமயத்துக்கு வந்து அவரே கதவைத் திறந்து விட்டார். மேலும் தான் சின்னக் கட்சியின் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டேன் என்று எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டுக்கு உறுதி மொழியும் அளித்தார். போலீஸ் சமாதி இருந்த இடத்தில் நுழைந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தது. 1926 இல் சின்னக் கட்சி தனது ஆராதனை விழாவைப் புஷ்ய கல்யாண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றியது. அந்த ஆண்டு நாகரத்தினம்மாள் சமாதி தனக்குப் பாத்தியப்பட்டது என்றும் தன்னால் நியமிக்கப் பட்டவரைத் தவிர யாரும் பூஜை செய்யக் கூடாது என்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரு கட்சியினரின் ஆராதனை விழாக்களும் முன்பு போலத் தொடர்ந்தன.

நாகரத்தினம்மாள் சின்னக் கட்சியோடு மோதிக் கொண்டது போல் பெரிய கட்சியோடும் உறவை முறித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. 1927இல் பெரிய கட்சி நடத்திய ஒர் இசை அஞ்சலி விழாவில் கலந்து கொள்ள வந்த நாகரத்தினம்மாள் பாடுவதற்காக மேடையேறினார். ஆனால் பக்கவாத்தியக்காரர்கள் பெண்களுக்கு சமாதிக்கு முன்பு பாட அனுமதியில்லை என்று கூறி வாத்தியங்களைக் கீழே வைத்து விட்டனர். கோப முற்று வெளியேறிய நாகரத்தினம்மாள் சொந்தமாகவே விழா எடுக்கத் தீர்மானித்தார். இப்படியாக பெங்களூர் நாகரத்தினம்மாள் கட்சி ஒரு மூன்றாம் அணியாக உருவெடுத்து பெரிய கட்சி விழா எடுத்த அதே நாள்களில் சமாதியின் பின்னால் விழா நடத்தத் தொடங்கியது. பெண்களும் இளம் இசைக் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட்டனர். மற்ற இரு கட்சிகளின் விழாக்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டு இந்தக் கட்சியின் விழாகளைகட்டியது. தனது கட்சியின் விழாக்களுக்கெல்லாம் நாகரத்தினம்மாள் தன் கைப்பணத்தைச் செலவழித்து வந்தார். இறுதியாகத் தன் சென்னை வீட்டை விற்று விட்டு 1930 இல் நிரந்தரமாகத் திருவையாறுக்குக் குடிவந்து விட்டார். மேலும் ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை வசூல் செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றார். தனது பருத்த உடலையும் தூக்கிக்கொண்டு தொலை தூரங்களுக்குக்கூட ஆராதனை விழா நிதி திரட்டு வதற்காகத் தளராமல் சென்று வந்தார்.

1930 இல் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மாரடைப்பு வந்து அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக நலியத் தொடங்கியது. 1931இல் அவர் இறப்பதற்கு முன்னால் பெரிய கட்சியின் ஆராதனை விழாவை ஏற்று நடத்தும் பொறுப்பைத் திருவீழிமிழலைச் சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற வித்வான்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். காஞ்சிபுரம் நாயனா பிள்ளையும் 1934 இல் அவர் மரணமடையும் வரையிலும் முக்கியப் பங்கு வகித்துவந்தார். நாடகக் கம்பெனிகளான தஞ்சாவூர் சுதர்ஸன சபா நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் குழு போன்றவை பெரிய கட்சி ஆராதனை விழாவில் பங்கேற்றன. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விழா நல்ல முறையில் நடந்து வந்தது. ஆனால் நாகரத் தினம்மாள் நடத்திய விழா தான் வெகு விமரிசையாக நடந்தது. 1938 இல் நாகரத்தினம்மாள் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களையும் விலை கொடுத்து வாங்கித் தியாகராஜ ஆசிரமம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார். திருவையாறு வக்கீல் சி.வி. ராஜகோபாலாச்சாரி போன்ற பிரமுகர்களும் அவரது விழாக்களில் பங்கேற்றனர். இந்தச் சூழ்நிலையில் பெரிய கட்சி, சிறிய கட்சியோடு இணைவது பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

சின்னக் கட்சியிலும் இதே உணர்வு தான் இருந்தது. அக்கட்சியில் நிதி திரட்டுவதிலும் ஆராதனை விழாவிலும் முக்கியப் பங்காற்றிவந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற இளம் கலைஞர்கள் ஆராதனை விழாவை இணைந்து நடத்தும் படி வலியுறுத்தினர். மூத்த கலைஞர்களான மகாராஜபுரம் விஸ்நாத ஐயரும், பல்லடம் சஞ்சீவராவும் கூட இதே போன்ற எண்ணம் கொண்டிருந்தனர். சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் வயதாகிக் கொண்டு வந்ததால் அவருக்கும் விழாவை நடத்துவது சிரமமாக இருந்தது. 1939 இல் காவேரி டெல்டா பகுதியின் தனி அலுவலராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய். கிருஷ்ண சாமி, ஐ.சி.எஸ். ஒன்று பட்ட ஆராதனை விழா நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வம் காட்டினார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் 1940 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். நாகரத்தினம்மாள் அணி சார்பில் நாகரத்தினம்மாளும் சி.வி. ராஜகோபாலாச்சாரியும், பெரிய கட்சி சார்பில் திருவீழிமிழலைச் சகோதரர்களும், சின்னக் கட்சி சார்பில் முசிறியும் செம்மாங்குடியும் கலந்து கொண்டனர். ஆராதனை விழாவை நடத்துவதற்காகப் புதியதோர் அமைப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் கீழ்க்காணும் நிபந்தனைகள் விதித்து இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டார். அ.சின்னக் கட்சியினரின் பூஜை செய்யும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் ஆராதனை நாளன்று ராஜகோபால பாகவதர் சமாதியில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். ஆ. நாதஸ்வரக் கலைஞர்களை மேடையில் கச்சேரி நடத்த அனுமதிக்கக் கூடாது. இ. பிராமணர்களுக்கான போஜனம் சின்னக் கட்சியின் வழிமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.

தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா 1940 ஜனவரியில் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு ஆராதனையையும் அது நடத்தியது. இரு அணிகளும் இணைந்ததைக் கேள்விப்பட்ட ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதரும் ஆராதனையில் கலந்து கொண்டார். சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் ஹரிகதை நடத்திக்கொண்டிருந்த போது நாகரத்தினம்மாள் மேடையில் ஏறி அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் செய்து வரவேற்றது. அந்த ஆண்டு ஆராதனை விழா மிகவும் வெற்றிகரமாக நடந்தது. பெண்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர். நாதஸ்வர வித்வான்களை மேடையேற்ற அனுமதிக்காததைக் கண்டித்து டி.என். ராஜரத்தினம் பிள்ளை தனது எதிர்ப்பைக் காட்டியதால் அந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது. சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் வைதீகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்த வருடங்களில் நடந்த ஆராதனை விழாக்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. முசிறி போன்ற பெரிய வித்வான்கள் பங்கெடுத்துக் கொண்ட போதும் 1934 இல் தியாகராஜரைப் போல அவரும் சன்னியாசம் வாங்கிக் கொண்டார். அவரைப் போலவே மூன்று நாள்கள் கழித்துக் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான சூலமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1941 இல் தான் பஞ்சரத்ன கீர்த்தனைகளை அனைவருமாகப் பாடும் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தபட்டது. அதற்கு முன்பெல்லாம் பல்லடம் சஞ்சீவராவ் பைரவி ராகத்தில் அமைந்த 'சேதுலரா'வை மட்டும் வாசிப்பார். இந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்றும் கூடப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடத் தொடங்குவதற்கு முன் புல்லாங்குழல் கலைஞர்கள் அந்தக் கிருதியை இசைப்பார்கள்.

திருவையாற்றைத் தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்ட நாகரத்தினம்மாள் தனது நாள்களை அவரது குருவான தியாகராஜரைத் தியானிப்பதிலேயே கழித்தார். உள்ளூர் மக்கள் அவரை ஒரு ரிஷியைப் போலப் பாவித்தார்கள். 1946 இல் சித்தூர் வி. நாகையா தியாகராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகவைத்துத் தியாகையா என்ற படத்தை எடுத்தார். படம் நல்ல வசூல் கண்டது. நாகரத்தினம்மாளின் விருப்பத்திற்கிணங்க நாகையா திருவையாறுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அந்தப் படத்திலிருந்து கிடைத்த வருமானத்தில் 'தியாகராஜ நிலையம்' என்ற சத்திரத்தைக் கட்டினார். 1948 ஜனவரி மூன்றாம் ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனது உயிலை எழுதி வைத்தார். தனது எல்லாச் சொத்துகளையும் நகைகள் உட்பட தியாகராஜர் சமாதியின் பரிபாலனத்திற்காக அளித்திருந்தார். வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்ட் அந்தச் சமாதிக்கும் அதைச் சுற்றியிருந்த நிலங்களுக்கும் உரிமை பெற்றது. அவர் தனது உயிலில் பெண் கலைஞர்களோ பாடகர்களோ தேவதாசிகள் உட்பட சமாதியில் நிகழ்ச்சிகள் நடத்துவதை எவரும் தடை செய்ய முயலக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். 1949 இல் விஜய நகரம் மகாராணி வித்தியாவதி தேவி அவருக்குத்தியாகராஜ சேவா சந்தா என்ற பட்டத்தை அளித்தார்.

1952ஆம் ஆண்டு மே மாதம்19ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருப்பதாகக் கூறினார். அப்படியே அவர் மூச்சும் ஒடுங்கியது. அவரது உடல் ஊர்வலமாகத் தியாகராஜர் சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டு மண்டபமும் கட்டப்பட்டது. அந்தச் சிலை தியாகராஜர் சமாதியைப் பார்த்த படி அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் எதிரில் தான் இன்று வித்வான்கள் ஆராதனையின் போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த கோலார் ராஜம்மாள் என்ற தேவதாசி தியாகராஜரின் சமாதிக்கு மின் வசதியை அமைத்துக் கொடுத்தார். தியாகராஜ ஆராதனை விழா இன்று உலகம் முழுவதையும் கவரும் விழா. இதற்கெல்லாம் காரணம் சில இசைக் கலைஞர்களும் ஒரு பெண்ணும். அந்தப் பெண் நாகரத்தினம்மாள்.

ஆராதனை விழாக் கொண்டாட்டங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் பூஜைகள் தனித்தனியாக தான் செய்யப்படுகின்றன. ஆகையால் இன்றும் கூட ஆராதனை நாளன்று தியாகராஜருக்கு மூன்று அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முதலாவது பழைய சின்னக் கட்சியில் இன்று இருப்பவர்களும் ராஜகோபால பாகவதரின் வழித் தோன்றல்களுமாகச் செய்வது இரண்டாவது பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்டின் சார்பாக நடைபெறுவது. இறுதியாக தியாகப் பிரம்ம மஹோத்சவ சபாவினால் செய்யப்படுவது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படுவது இந்த அபிஷேகத்தின் போது தான். நாம் ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சியில் காண்பதும் இதைத்தான்.

                                                                             🌺சுபம்🌺


 இன்றே தர்மம் செய்யுங்கள்
 ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்.இன்னொரு கையால் உலகவாழ்வில் செயலாற்றுங்கள்.
 பணத்தைத் தேடி அலைந்து திரியாதீர்கள்.கடவுளின் திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதே மேலான இன்பம்.
 ஒரு சிறு புல்லைக் கூட படைக்கத் திறனற்றவராக இருக்கும் நமக்கும் உணவு உடையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி காட்டுவது நம் கடமை.
 தர்மம் செய்வதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடுவது கூடாது.வாழ்வு நிலையற்றது என்பதை மறத்தல் கூடாது.
 மற்றவருக்கு உபதேசித்து திருத்துவதற்கு முன்னால் நம்மை நாமே தப்பு செய்யாமல் சரியான பாதையில் வாழக் கற்றுக் கொண்டால் போதும்.
 சேவை செய்பவர்களுக்கு தைரியம் மன ஊக்கம் இவற்றோடு மனதில் அமைதி முக மலர்ச்சியும் தேவையான அடிப்படையான பண்புகள்.
 காஞ்சி மஹா பெரியவா

சிதம்பரம் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.(மே 1, 2015)

பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
ஏராரும் மணிமன்றில் எடுத்ததிரு வடிபோற்றி
திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை“தில்லை மூதூர் ஆடிய திருவடி”என்றும்,”தில்லையுட் கூத்தனே”என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம்.அது சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல்.‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள்.எனவே சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும்.அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு;பிண்டமாகிய உடலிலும் உண்டு.அண்டத்திலுள்ளது பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்.தகரம் சிறுமை.பராகாசம் தகராகாசம் எனும் இவ்விரண்டு ஆகாயங்களும் ‘பரை’ அல்லது ‘சித்சத்தி ’வடிவின. இவ்விரு ஆகாசங்களில் இருந்துகொண்டு ஐயன் ஐந்தொழிற் கூத்தியற்றி அண்ட பிண்டங்களை இயக்குகின்றான்.
பரமாண்டத்தின் இருதயகமலமாகக் கருதப்படுவது புண்ணிய பூமியாகிய பாரதத் திருநாட்டின் அங்கமாகிய மாதவஞ்செய் தமிழ்நாட்டின் தில்லை மூதூர்.தில்லை என்பதே பழமையான பெயர். சிதம்பரம் என்பது காலப்போக்கில் தோன்றி நிலைபெற்றுவிட்ட பெயர்.இதயகமலத்தில் இறை என்னும் பதிப்பொருள் ஞானப்பிரகாசமாக சிவப்பிரகாசமாக, அறிவொளியாக அருட்சோதியாகத், தன்னை அன்பால் நினைவார் நினையும் வடிவில் எழுந்தருளுவதை தெய்வப்புலவர் “மலர்மிசை யேகினான்” என்று சுட்டினார்.திருவாதவூர்ப் பெருந்தகை,“மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி” என விரித்துரைத்தார். இந்த இதயகமலத்தை,’அனாகதம்’ எனும் பெயரால் யோகியர் குறிப்பர்.
மேலானது உயர்ந்தது எனும் பொருள்படும் பரம் என்னும் பெயர் ஆண்பால் விகுதியேற்றுப் ‘பரன்’ எனவும் பெண்பால் விகுதியேற்றுப் ‘பரை’ எனவும் ஆகும்.பரம்- சிவம்; பரன் –சிவன்; பரை- சிவசத்தி. பராகாசம் அல்லது ஞானாகாசம் சித்சத்தி வடிவம். பரையிடமாக நின்று உரையுணர்வுக் கெட்டா ஒருவன் பஞ்சாக்கரத்தால் வரைமகள் காணும்படிக் கருணையுருக் கொண்டு ஆடிதலைப் பேணுபவருக்குப் பிறப்பில்லை என்பது நம் ஞானசாத்திரமாகிய உண்மைவிளக்கம்.
பரை பக்குவ ஆன்மாக்களுக்குத் திருவருளாகச் சிவத்தைக் காட்டும்; பக்குவமிலாத ஆன்மாக்களுக்குச் சிவத்தை மறைத்து, மறைப்புச்சத்தியாகிய திரோதானமாக நின்று உலகத்தைக் காட்டும்.
சிவத்தைக் காட்டுவது ‘ஞானநடனம்’ என்றும், பிரபஞ்சத்தைக் காட்டுவது ‘ஊனநடனம்’ என்றும் சாத்திரம் பேசும். இவ்விரு நடனங்களின் இயல்பைத் திருவாதவூரிறை,
“ஊனை நாடக மாடுவித்தவா
உருகி நானுனைப் பருக வைத்தவா
ஞான நாடக மாடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே”
(திருச்சதகம் 95)என்றருளினார்.
பிண்டமாகிய உடலில் இருந்துகொண்டு அதனை இயக்கும் உயிர்போல, உயிரின் உள்ளிருக்கும் தகராகாசமாகிய ஞானாகசத்தில் சிவம் இவ்விருவகை நடனங்களையும் இயற்றுகிறது; ஊன நடனத்தால் உலகபோகங்களை ஊட்டிப் பக்குவம் வரச் செய்கிறது; ஞான நடனத்தால் சிவானந்தமாகிய சிவபோகத்தை அருளுகின்றது. இதனை, “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, என்றும், “மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க” என்றும் மணிவாசகர் மொழிந்தருளினார்.
ஆணவ இருளினால் மறைப்புண்டு கிடப்பாருடைய கண்கள் ஞானாகாச வியாபகத்தில் வியாப்பியமாகக் கலந்திருந்தும் இந்தத் திருக்கூத்தினைக் காணும் தகைமை உடையன அல்ல. பலபிறவிகளிலும் ஈட்டிய சிவபுண்ணியப் பயனால் சிவகுருவின் அருள் கிடைத்து ஆணவ இருள் நீங்கப் பெற்றவரே இந்நடனத்தைக் காணும் பேறு பெறுவர். ஞான நடனக் காட்சியால் விளைவது அந்தமிலா ஆனந்தமாகிய சிவபோகம்.சிவசத்தியால் மலவாசனை நீங்கப்பெற்ற ஆன்மா இச்சிவபோகத்தை ஞானசத்தியால் அனுபவிக்கும். இவ்வனுபவத்தைத் தெய்வச் சேக்கிழார், “உணர்வின் நேர்பெற வருஞ்சிவபோகம்” என்றார். இந்தப் போகம் ஐம்புலன்களின் வழி நுகரப்படும் ‘சுவை ஒளி ஊறு நாற்றம் ஓசை’ போன்றதொன்றன்று. ஞானம் அல்லது அறிவால் அனுபவிக்கப்படுவது.
அதனால், நம் அருணகிரி மாமுனிவரும், “ அறிய அறிய அறியாத அடகள் அறிய அடியேனும், அறிவுள் அறியும் அறிவூர அருள்வாயே” (உத்தரமேரூர்)”பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் களமான பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் தருள்வாயே”(கருவூர்)“எப்பொருளுமாய அறிவையறி பவரறியும் இன்பந்தனை”(பொது) “அறிவும் அறியாமையும் கடந்த அறிவுதிரு மேனி” பொது) எனப்பல திருப்புகழ் மறையில் எடுத்தோதியமை காண்க.‘உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை” , “ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச்”சேருமாறு ஐம்பொறிகளாலும் அடையப் பெற்றவர்கள் நம் சைவசமயாச்சாரியர்களாகிய நால்வர். அவர்களுக்கும் முன்னதாக அருளப்பெற்றவர்கள் பதஞ்சலி முனிவர் வியாக்கிரபாத முனிவர் ஆகிய இருவருமாவர்.
பதஞ்சலி முனிவர் ஆதிசேடனின் அவதாரமாகப் பூவுலகில் முனிவராகத் தோன்றியவர். அத்திரி முனிவரும் அவருடைய பத்தினியார் அநசூயா தேவியாரும் மகப்பேறு விரும்பித் தவம் முயன்றனர். எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்த அநசூயாதேவியின் கரங்களில் இறைவனின் அருளால் ஆதிசேடன் சிறுநாகப் பாம்பின் குட்டியாகத் தோன்றினான். அச்சமடைந்த அநசூயாதேவி கையைஉதறினாள். பாம்புக்குட்டி அவளுடைய பாதங்களில் வீழ்ந்தது. அதனால் பதஞ்சலி என்று பெயர் பெற்று மனித உடலும் பாம்பின் வாலும் பெற்று வளர்ந்தது.யோக சூத்திரம் செய்த பதஞ்சலி இம் முனிவரின் வேறாவர் என்பது அறிதல் வேண்டும்.
பதஞ்சலி முனிவரும் மத்தியந்த முனிவர் மைந்தரான வியாக்கிரபாத முனிவரும் தில்லையில் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். இருவரும் செய்த தவம் சைவநெறிப்படிச் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவே.இருவரும் தில்லைவனத்தில் தவம் செய்யும் நாட்களில் விடியும் முன்னெழுந்து வைகறைப்போதில் மரங்களின் மீதேறி மலர் பறிப்பர். பதஞ்சலி முனிவர் பாம்புடலினராதலின் மரக்கொம்புகளைச் சுற்றிப் படர்ந்து மேலேறுவர்.மந்தியந்த முனிவரின் மைந்தர், மரங்களின் மீதேறிக் கோட்டுப் பூக்களைப் பறிக்கும்போது பனியீரத்தால் வழுவாதிருக்கும் பொருட்டுப் புலியின் கால்கலையும் மையிருளில் வண்டு புழு அரிக்காத மலர்களைக் காணக் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களை வேண்டிப் பெற்றமையால் புலிக்கால் முனி எனப்பட்டார். இவர் வழிபட்ட்தால் தில்லை ‘புலியூர்’ எனப்பட்டது. புலிக்கு வடமொழியில் வியாக்ரம் எனப் பெயர். எனவே, இவர் விய்ரபாத முனிவர் எனப்பட்டார்.
முனிவர் இருவரும் ஆற்றிய தவவழிபாட்டினை ஏற்று மகிழ்ந்த எம்பிரான்,” இங்குக் கொள வேறேதும் உண்டோ” என வினவினான்.திருக்கூத்துக் கண்ட முனிவர் இருவருக்கும் இத்தரிசனத்திற்கு மேல் வேண்டுவதொன்றுமில்லை. ஆயினும், நிலவுலகில் ஆன்மாக்கள் படுகின்ற துயரினை நீக்கக் கருணையுள்ளம் கொண்டு, பெருமானே! மின்னல் போலும் வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினால் தரிசிக்கும்தோறும் நிறைந்த ஞானவொளியாகிய இச்சபையிலே, அன்பையுடைய துணைவியாகிய உமாதேவியுடனே, இன்று முதல் எக்காலமும் ஆனந்த நடனம் அருளத் திருவுளம் இரங்க வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். தேவர்கள் தேவனாகிய மகாதேவன் திருவருளும் அங்கு அவ்வண்ணமே செய்ய இரங்கியது.
யான் எனது என்னும் வஞ்சத் தலைமையினையுடைய ஆன்மாக்கள் படுந் துன்பத்தினை எண்ணீ, முனிவரிருவரும் கருணையினால் வேண்ட இன்றும் நிகழ்வதுவே தில்லை மன்றுள் நிக்ழும் எம்பிரானின் திருக்கூத்து.தில்லை வனத்துள் எம்பிரான் ஆடிய மேடை அம்பலம் அல்லது மன்றம் எனப்படும். அம்பரம்- ஆகாசம்.ரகரவொற்று இங்கு லகரவொற்றாகத் திரிந்து, அம்பரம் அம்பலம் ஆயிற்று. இது வெட்டவெளி. மன்று என்பது கூத்தாடும் மேடை. இது எவ்விடத்துள்ளாரும் கூத்தினைக் கண்டின்புறுமாறு உயரமான, நாற்றிசையும் திறந்த வெளி. இவ்வெளி காலப்போக்கில் மூன்று திசைகள் அடைக்கப்பட்டுளதாயிற்று.நெல்லுக்குப் பாயும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போலவும், நல்லார் ஒருவருளரேல் அவர் பொருட்டுப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயன்படுவது போலவும் இவ்விருவருக்கும் வெளிப்பட்ட திருக்கூத்து மையல் வாழ்வில் உழலும் நமக்கும் கிடைத்தது.
இருமுனிவரும் செய்தருளிய உபகாரங்கள் பல. தனக்கெனத் திருமேனியில்லாத பரம்பொருளைத் தன் கருணையையே திருவுருவாக, அத் திருமேனி கொண்டு ஆடலைக் கண்டவர்க்கெல்லாம் முத்தி கிடைக்க அருள் செய்தனர். தேவர் முதலிய நம்மினும் பெரியர் யாராலும் செய்விக்க முடியாத பெருமானின் திருக்கூத்தை நம்பொருட்டு மண்ணின்மேல் தில்லையில் நிகழச் செய்தனர். அதனால் கயிலைமலையைக் காட்டிலும் தில்லை வனத்தை உயரச் செய்தனர். தில்லைத் திருக்கோவில் வழிபாட்டுப் பூசாவிதி, நித்திய நைமித்திய காமிய உற்சவ விதிகளைப் பதஞ்சலி பத்ததி எனும் நூலாக உதவினர். உலகில் உள்ள சிவாலயங்களிலெல்லாம் பொருந்தி உயிர்களுக்கு அருள்செய்யும் சிவகலைகள் அனைத்தும் அர்த்தசாம பூசையின்போது தில்லையில் வந்து குவியும்படி செய்தனர். தில்லையில் அர்த்தசாமபூசையை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்.




சனி, 4 ஜூலை, 2015

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் திருப்பதி பெருமாளை ஸ்வாமி தரிசனம் செய்தார்.






சம்பவம்-ஒன்று)
ஒரு பெண் குழந்தை.ஐந்து வயது இருக்கும்.அந்த குழந்தை 25 பைசா காசு வைத்திருந்தது.சிறிது நேரத்தில் பைசா காணவில்லை.எல்லா இடமும் தேடியும் கிடைக்கவில்லை.அந்த குழந்தை வாயில் முழுங்கி விட்டது என்று எல்லோரும் அழுதார்கள்.என்ன செய்வது என்று தெரியவில்லை.ஸ்ரீ மகா பெரியவா சிரித்துக் கொண்டார்.பின் அவர்களிடம் இந்த பெண் குழந்தையை வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று எல்லா உடைகளையும் உதறி பாருங்கள் என்று அந்த குழந்தையின்
அம்மாவிடம் சொன்னார்.அதன்படியே செய்ததில் குழந்தையின் பாவாடை வழியாக குழந்தையின் இடுப்பில் அந்தக் காசு ஒட்டிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
(சம்பவம்-இரண்டு)
ஒரு லம்பாடி கூட்டம்.அதில் ஒரு மாது மிகவும் குண்டாக இருந்தார்.ஒரு நான்கு பேர் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து ஸ்ரீ மகா பெரியவாளிடம் இவளை பாம்பு கடித்து விட்டது என்றனர்.ஸ்ரீ மகா பெரியவா,"நீ பாம்பை பார்த்தாயா?" என்றார்.இல்லை.பாம்புதான் கடித்தது என்றனர்.'சரி கொஞ்சம் சர்க்கரை,அரப்பு,தேன் கொண்டு வா" என்றார்.சர்க்கரையை அவள் வாயில் போடு"என்றார்.'எப்படி இருக்கு'என்றார். 'தித்திப்பாக இருக்கு என்றாள்.'அரப்பை (சீயக்காய் பொடி)போடு என்றார். 'இப்ப எப்படி இருக்கு' என்றார்.அந்த மாது கசக்கிறது என்றாள்."சரி போ பாம்பு கடியில்லை" என்றார்.
"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்" என்றார்.

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
* நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம்.நமக்குள் அழுக்கை (பாவங்களை)ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம்.இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.
* வாக்கு மனம் உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம்.அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.
* நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.
* வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை.மகிழ்ச்சியோ நிம்மதியோ அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.
* காஞ்சி மஹா பெரியவா

எல்லாம் நமக்காகவே!
卐 தர்மம் செய்ய எண்ணம் வந்து விட்டால் நினைத்தவுடன் செய்து விட வேண்டும்.இல்லாவிட்டால் மனம் மாறி விடும்.
卐 பணத்தை தேடுவது மட்டுமே வாழ்க்கைஅல்ல.தினமும் கொஞ்சம் நேரமாவது கடவுளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும்.
卐 நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன.இதில் ஒரு கையால் கடவுளின் திருவடியையும் மற்றொரு கையால் உலக விஷயத்தையும் பிடியுங்கள்.
卐 கடவுள் மீது பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை.எல்லாம் நமக்காகத் தான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
卐 காஞ்சி மஹா பெரியவா



வரதட்சணை
கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என யுகங்கள் நான்கு வகைப்படும்.இந்த நான்கு யுகங்களிலும் யுகத்திற்கு ஏற்றவாறு செய்யவேண்டிய தர்மங்களை நமது இந்து மத நூல்கள் கூறிகின்றன.இந்த நான்கு யுகங்களிலும் மனிதர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விஷயங்கள் அநேகமாக ஒன்றாகத்தான் இருக்கும்.ஆனால் சில விஷயங்களில் சில மாறுதல் இருக்கும்.
மனிதர்களுக்கு பிரம்மச்சரியம் கிருஹஸ்தம் வானப்பிரஸ்தம் சன்யாசம் என நான்கு ஆஸ்ரமங்கள் உண்டு.இதில் கலி தவிர மற்ற மூன்று யுகங்களிலும் பிரம்மச்சரியத்துடனேயே தன் வாழ்நாள் பூராவும் இருக்கலாமென்று மதநூல்கள் கூறுகின்றன.இது ஆண்களுக்கான விதி.
பெண்களுக்கோவெனில் கன்னிகா சுமங்கலி விதவா என்று மூன்று நிலை மாத்திரமே.இந்த மூன்று நிலையில் கன்னிகா நிலையிலேயே ஒரு மாது தன் வாழ்நாள் முழுவதும் இருக்கக் கூடாது என்பது நியதி.சீக்காளியாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ கல்யாணம் நடப்பது அரிது என்று தெரிந்தால் அது சமயம் சாளிக்கிராமத்தை வைத்து அதற்குக் கல்யாணத்திற்குச் செய்யவேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து அந்த சாளிக்கிராமத்திலுள்ள பகவானையே பர்த்தாவாக கணவனாக கொண்டு பூஜித்து வழிபட்டு தன் காரியங்களையும் செய்து கொண்டே சுமங்கலி நிலையில் அவள் வாழ வேண்டும்.இரண்டாவதாக வாழை மரத்திற்கு எல்லா வைதீக கல்யாண சடங்குகளையும் செய்து பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விட வேண்டும்.இது விதவா நிலையைக் குறிக்கும்.
அன்று முதல் விதவா நிலையை அடைந்து விதவா தர்மத்தைக் கடைபிடித்து வாழவேண்டும்.இந்த இரண்டையும் தவிர கன்னிகா நிலையிலேயே வாழ்ந்ததாக வரலாறும் கிடையாது.எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.
தற்காலத்தில் பலர் வரதட்சணைக் கஷ்டத்தினாலோ அல்லது குடும்பத்தைப் பராமரிப்புச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையினாலோ அல்லது சந்தோஷமாக உல்லாசமாக சுதந்திரமாக இருக்கவேண்டுமென்ற எண்ணத்தாலோ கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார்கள்.
வரதட்சணை என்பது உண்டு.ஆனால் வரனுக்கு மாப்பிள்ளைக்கு தட்சணை கொடுப்பது என்பதல்ல!.வரன் புருஷன் பெண்ணை தானமாகப் பெறுகிறான்.அந்த தானத்திற்குப் பிரதிபலனாக புருஷன் பெண்ணுக்குக் கொடுப்பது என்ற பழக்கம் உண்டு.அதை வைத்துத்தான் வரன் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்றாயிற்று.ஆனால் அது மாறி, இன்று வரனுக்குக் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்று நடை முறையில் வந்துவிட்டது.
அதே போல் கன்னிகாதானம் என்பதனால் கன்னிகையை தானம் செய்யும்பொழுது சக்திக்கு ஏற்றவாறு பெண்ணை நன்றாக அலங்கரித்து தட்சணையுடன் கூட தானம் அளிப்பது வழக்கம்.இதெல்லாம் வெறும் வழக்கங்களே தவிர வரதட்சணை என்பதற்கு சாஸ்திரங்களில் ஆதாரம் ஒன்றும் கிடையாது.
அதே போல் ஜானுவாசம் என்று சொல்லக் கூடிய மாப்பிள்ளை அழைப்பு ஒன்று. அதாவது கல்யாணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை முதலியவர்களை வரவழைப்பது என்பது மரபு.ஆனால் இப்பொழுது போல் மாப்பிள்ளைக்கு புதிய உடை ஊர்வலம் கச்சேரிகள் எல்லாம் பழக்கத்தை ஒட்டியும் பொருளாதாரத்தை ஒட்டியும் வளர்ந்ததே.
கல்யாணம் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொண்டது.அதற்கும் பெரிய பெரிய கல்யாண மண்டபங்கள் தேவையல்ல.வீட்டிலேயே அதைச் செய்து விடலாம்.நண்பர்களுக்கு பந்து வர்க்கத்தினருக்குத் தெரிவிக்க வேண்டி மாலையில் ஏதோ ஓர் இடத்தில் வரவேற்பு வைத்துக் கொண்டு விடலாம். மாப்பிள்ளை அழைப்புச் செலவு கல்யாணச்செலவு இவைகளை கணிசமாக குறைத்துக் கொண்டு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இதில் பெண்கள் தான் முக்கிய பங்கு எடுத்து நடத்த வேண்டும். நடத்தவும் முடியும்.
அதாவது தங்கள் கல்யாண காலத்திலே 'தங்கள் தகப்பனார் என்ன கஷ்டத்துக்கு உள்ளானார்.எவ்வளவு பணச் செலவு செய்தார்.அதனால் கண்ட பலன் என்ன? என்பதை எல்லாம் சிந்தித்து தங்கள் பிள்ளைகளின் கல்யாணங்களை இவ்விதம் நடத்தவேண்டும்.அதே நேரம் பெண்களுக்கு கல்யாணம் என்று வரும்போது முடிந்த அளவு பொருளாதார சௌகரியம் செய்து கொடுத்து கல்யாணத்தை கட்டாயம் முடித்து விட வேண்டும்.
ஆகவே பெண்கள் கல்யாணத்தைத் தாமதப்படுத்தாமல் பையன்களை மேற்சொன்ன முறையில் தயாரிக்க வேண்டும்.இதன் பொறுப்பு பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கையிலும் இருக்கிறது.பெண்கள் கண்ணீர்விடுவது நாட்டிற்கு நல்லதல்ல.ஆகவே எந்த ஒரு காரியத்திலும் பெண்கள் மனம் கலங்கும்படி கண் கலங்கும்படி வாழக் கூடாது.சமுதாயம் அப்படி வாழ விடவும் கூடாது.



ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..
இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
27. ரேவதி
சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

குருசாமி அம்மையார் {கண்டமங்கலம்}
நாம் வணங்கும் தெய்வங்களில் ஆண் தெய்வமும் உண்டு பெண் தெய்வமும் உண்டு.அதுபோல் சித்த புருஷர்களிலும் பெண் மகான்கள் இருந்துள்ளனர். ஆன்மிகத்திலும் தொண்டுள்ளத்திலும் இவர்கள் சிறந்து விளங்கி பக்தி நெறி தழைக்க அரும் பாடுபட்டுள்ளனர். ஔவையார் காரைக்கால் அம்மையார் மங்கையர்க்கரசியார் என்று நம் தமிழகத்தில் எத்தனையோ பெண் அருளாளர்கள் இருந்துள்ளனர்.இறை பக்தியின் மேன்மையை இவர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.இறை தரிசனத்தையும் பெற்றிருக்கிறார்கள். புதுவை(பாண்டிச்சேரி)மாநிலத்தில் ஒரு பெண் சித்தர் ஜீவ சமாதி கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்னருள் புரிந்து வருகிறார்.புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலத்தில் இந்த அம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.கண்டமங்கலத்தில் பிரதான சாலையிலேயே உள்ள சமரச சுத்த சன்மார்க்க நிலைய வளாகத்தில் இந்த சமாதி திருக்கோயில் இருக்கிறது. பிரதான சாலையை ஒட்டி இது அமைந்திருந்தாலும் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம் மரங்கள் சூழ.. இயற்கை எழிலோடு விளங்கிறது.
புதுவை மக்களுக்கும் எண்ணற்ற வெளியூர் பக்தர்களுக்கும் அருள் பாலித்து வாழ்ந்து வந்த இந்தப் பெண் சித்தரின் திருநாமம் ஸ்ரீகுருசாமி அம்மையார்!இந்த வழியே பயணப்படும் ஏரளாமான பக்தர்கள் சமாதித் திருக்கோயிலைத் தரிசித்துப் பலன் பெற்று வருகிறார்கள். 1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி அம்மையார் வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எங்கே இருக்கிறது கண்டமங்கலம்?
விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்-45ஏ)வருகிற ஒரு பேருந்து நிறுத்தம் அரியூர் மெயின் கேட்.இங்கு இறங்கிக்கொண்டால் இரண்டே நிமிட நடை தூரத்தில் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம்.பிரதான சாலையிலேயே இருப்பதால் கண்டுபிடிப்பதிலும் போக்குவரத்திலும் எந்தச் சிரமமும் இருக்காது.
விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது.அரியூர் அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவு பாண்டியில் இருந்த 17 கி.மீ. தொலைவு சமாதி அமைந்துள்ள இடத்தில் பாதி விழுப்புரம் மாவட்டத்திலும் மறு பாதி புதுவை மாநிலத்திலும் இருக்கிறது. கண்டமங்கலம் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது.அரியூர் என்பது புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது.இதனால்தான் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள பகுதியை கண்டமங்கலம் அரியூர் என்றே வழங்கி வருகிறார்கள். குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி சுதந்திர காலத்துக்கு முன் அதாவது 1947-க்கு முன் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது எல்லையாக அமைந்தமையால் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை எல்லையில் பிரெஞ்சுப் படையும் தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தன் வீரர்களை நிறுத்திக் காவல் காத்து வந்ததாம்.எனவே இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவ சமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி வழயாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும் அவர்களை விரட்டிவிடுவார்கள் இரண்டு படையினரும்.காரணம் போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்கவிட மாட்டார்களாம்.
தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும் பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம் தொடர்ந்து வந்தது.எனவே குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை நிம்மிதியாகத் தரிசிக்க வரும் பக்தர்களை பிரெஞ்சப் படைகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்தது.எங்கே தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என்று பிரெஞ்சுப்படை பயந்தது.காலம் உருண்டோட...எல்லாப் படைகளும் தொலைந்தொழிக்க பின்னர்தான் இந்த ஜீவ சமாதி ஒரு வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.
குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி இங்கே எப்படி அமைந்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்.இந்தப் அம்மையாரைப் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். வட நாட்டில் இருந்து இங்கே வந்தவர் குருசாமி அம்மையார் என்பது ஒரு செய்தி.கால்நடை யாகப் பல பகுதிகளுக்கும் சென்ற இவர்.கடைசியாக வந்து அமர்ந்து இந்த கண்டமங்கலத்தில் தான்.இந்த இடத்தின் சூழலும் அமைதியும் அம்மையாருக்குப் பிடித்துப் போக...இங்கே மரத்தடியில் தங்கி தன் இருப்பிடமாக ஆக்கிகொண்டார்.சாப்பாடு என்பதைப் பற்றி கவலை கொள்ளாமல் எந்நேரமும் தியானத்திலேயே இருப்பாராம்.யாரோ ஒரு வட நாட்டுப் பெண் சாது தங்கள் ஊருக்கு வந்து தியானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.என்பதை அறிந்த அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள். அம்மையாரிடம் வந்து அருள் கேட்பார்களாம்.தங்களுக்குள்ள மனக் குறை வியாதி வீட்டில் நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருக்கும் தடைகள் போன்றவற்றை அம்மையாரிடம் கொட்டுவார்களாம்.அவர்களின் குறைகளை எல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டு ஆசி புரிந்து அனுப்பி வைப்பாராம்.அதன் பின் நிம்மதியுடன் வீடு திரும்புவார்கள் பக்தர்கள்.
குருசாமி அம்மையார் சாதாரணமானவரா...இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்த வந்த சில நாட்களிலே தங்கள் குறைகள் அகலப் பெற்றனர்.அதன் பின் அம்மையாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இவரது இருப்பிடம் தேடி வந்து வணங்கிச் செல்வார்கள்.அப்படி வருபவர்களில் பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின் தியானமும் அருட் பணியும் தடைபடாமல் இருப்பதற்காக போதிய இட வசதியை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.இன்னும் சிலர் நில புலன்களையும் சில சொத்துகளையும் அம்மையார் பெயருக்கு எழுதிக் கொடுத்து சந்தோஷப்பட்டனர். வருமானத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் சாது என்ன செய்வார்?தான் தங்கி இருக்கும் இடத்தில் தினமும் தண்ணீர் தானம் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார்.தன் இடத்துக்கு வரும் அனைவருக்கும் உணவிட்டு மகிழ்வாராம்.
சித்த புருஷர்கள் என்றால் அவர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும்தானே!அதுபோல் குருசாமி அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது.அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல் முழுக்க காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்தெடுத்த விழுதை பூசிக்கொண்டு சற்று நேரம் ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக் குளிப்பது வழக்கமாம்.அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக் கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண் பக்தர்கள் சிலரே மிளாகயை அரைத்து அம்மையாரின் மேல் பூசிவிடுவார்களாம். இப்படி மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து எடுத்து வரக் கூடாது.இப்படி அரைத்துக் கொடுத்த பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும் என்று என் அம்மா கூறி இருக்கிறார்.அப்படி இருக்கும்போது இதை உடலில் பூசிக் கொண்டு சிரித்த முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி வழங்குவாராம் அம்மையார்.மிளகாய் அரைக்கும்போது பெண்கள் என்ன நினைத்துப் பிரார்த்தித்தாலும் கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்று அம்மா கூறி இருக்கிறார் என்று சொல்லி மெய் சிலிக்கிறார் பாண்டிச்சேரியில் இன்று வசிக்கும் பெண்மணி ஒருவர்.
உடல் முழுக்க மிளகாய் அரைத்த விழுதுகள் அப்பி இருக்க...அதோடு அருகில் இருக்கும் கிணற்றில் இறங்கி விடுவாராம்.கிணற்றின் மேல் அவர் கால் வைப்பதுதான் தெரியுமாம்.அடுத்த கணம் கிணற்றுக்குள் இருப்பாராம்.எப்படி இறங்குவார் என்பது எவருக்குமே தெரியாதாம்.கிணற்றுக்குள் இருக்கும் அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்கக் கூடாதாம்.அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை.அவரது தலைமுடி கிணற்றில் நீர்ப் பரப்பு மேல் படர்ந்து இருந்தது.அவரைக் காணவில்லை என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார் என்பதும் எவருக்கும் தெரியாது.தரைக்கு வந்தவுடன் அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது அவரது ஈரமான தலைமுடியில் இருந்து சிதறும் நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெறிக்கும். அந்த நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன் பலரும் அம்மையாரை நெருங்கவார்களாம்.நீர்த் துளிகள் பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்.
இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின் மூலவர் விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது. இதற்காகப் பல பெண் பக்தர்களும் இங்கு வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத் தருகிறார்கள்.ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக்கொண்டு.அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால் அது நிச்சியம் பலித்துவிடும் என்கிறார்கள்.மற்றபடி வியாழக்கிழமைகளில் பால் எலுமிச்சம்பழச் சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.அன்றைய தினத்தில் இந்த மடம் இன்று செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் வள்ளலார் ஆன்மிகப் பேரவை அன்னதானக் குழுவினர் அன்னதானம் செய்கின்றனர்.
குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, இங்கு இருக்கும் இடம் சில காலத்துக்கு வெளியுலகுக்குத் தெரியாமலே இருந்து வந்தது என்று சொல்லி இருந்தோம். காரணம்.செடி கொடிகளும் முட்புதர்களும் ஒரு கட்டத்தில் சமாதியை மூடிவிட்டிருந்தன.தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர் யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.அப்படி வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார்.அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக்கொண்டே இருந்த நடராஜரை ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது.குருசாமி கோயிலுக்குப் போ...அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன எனபதே அந்த அசரீரி.
இதன் பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் பயணப்பட ஆரம்பித்தார்.அரியூர் பகுதி வந்ததும். ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார்.ஆம்! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின்போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து. நான் இங்கேதான் குடிகொண்டிருக்கிறேன்.என்று சொல்ல... சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர் பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார்.சமாதியைக் கண்டு பிடித்தார்.பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.
நடராஜரின் இந்த திருப்பணிகளுக்கு உள்ளூர்க்காரர்கள் சிலரும் உதவ முன்வந்தனர்.அதன் பின் குருசாமி அம்மையாரின் திருவுருவப் படத்தைப் பாதுகாத்து வரும் ஒரு அன்பரை மங்கலம்பேட்டையில் கண்டுபிடித்து, அதை வாங்கினார்.படத்தில் உள்ள உருவத்தைக் கொண்டு அம்மையாருக்கு ஒரு திருமேனி வடிக்கச் செய்தார்.அந்தத் திருமேனியே இன்று நாம் தரிசிப்பது! வழிபாட்டையும் அன்ன தானத்தையும் அந்த ஜீவ சமாதியில் துவங்கி வைத்தார். குருசாமி அம்மையாருக்கு செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளைக் கஷ்டப்பட்டுக் கண்டறிந்து அவற்றைக் கொண்டு கல்வி உட்பட பல திருப்பணிகளைச் செய்தார் நடராஜர்.
1970-ஆம் ஆண்டு நடராஜ சுவாமிகளை மறைந்துவிடவே அவரின் சீடரான சீதாராம் என்பவர் இந்தப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினார்.இந்த இரு அருளாளர்களின் பெருமுயற்சியால்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி இன்று நம் தரிசிக்க கிடைத்திருக்கிறது. என்றே சொல்லலாம்.நடராஜ சுவாமிகள் சீதாராம் சுவாமிகள் ஆகிய இருவரின் சமாதிகளும் அம்மையாரின் சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே அமைந்துள்ளன.புதுவை மாநிலத்தில் சமாதி கொண்ட இந்த குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அவருடைய எண்ணற்ற பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மையாரின் ஜீவ சமாதித் திருக்கோயிலைத் தரிசித்து அவரது அருள் பெற்று, வாழ்வில் வளம் பெருக்குவோம்!
தவம்:கண்டமங்கலம்-அரியூர்.
சிறப்பு:ஸ்ரீகுருசாமி அம்மையார் மடம்.
எங்கே இருக்கிறது:விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-45ஏ)வருகிற ஒரு பேருந்து நிறுத்தம்-அரியூர் மெயின் கேட் இங்கு இறங்கிக்கொண்டால் இரண்டே நிமிட நடை தூரம்.விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது.அரியூர் அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் பாண்டியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
எப்படி போவது:விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரியூர் மெயின் கேட் நிறுத்தம் அல்லது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நின்று செல்லும்.இதில் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.பிரதான சாலை என்பதால் ஏராளமான பேருந்து வசதி உண்டு.தொடர்புக்கு:வள்ளலார் ஆன்மீகப் பேரவை அன்னதானக் குழு, கண்டமங்கலம்-அரியூர்.{மொபைல்: 9486623409, 9884816773.}