வெள்ளி, 26 ஜூன், 2015

ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் {காஞ்சிபுரம்}
பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் ஆகும். இக்கோயிலில் 3-ஆம் பிரகாரத்தில் பல்லவ ராஜகோபுரம் அமைந்துள்ளது. 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அக்கோபுரம் தான் கோயிலின் பிரதான வாயிலாக இருந்துள்ளது.அக்கோபுரத்துக்கு அருகே பல்லவ மண்டபம் இருந்துள்ளது. இது 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிதிலமடைந்து அழிந்துள்ளது.பல்லவர் மண்டபம் இருந்ததற்குச் சான்றாக 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் கல்வெட்டுடன் கூடிய தூண் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இத்தூண் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது.
கடந்த 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்தில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பல்லவ ராஜகோபுரம் அருகே ஆயிரம் கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆயிரம் கால் மண்டபம் :ஆயிரம் கால் மண்டபத்துக்குள் 2 மேடைகளும், மண்டபத்துக்கு மேலே ஒரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் போது ஸ்ரீ ஏலவார்குழலியை(காமாட்சியம்மன்) கன்னிகாதானம் செய்து வைப்பதற்காக வரும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்காக ஒரு மேடையும், ஸ்ரீ ஏகாம்பரநாதருக்காக ஒரு மேடையும் என அமைக்கப்பட்டுள்ளது.திருக்கல்யாணம் நடைபெறுவதற்காக ஆயிரம் கால் மண்டபத்துக்கு மேலே ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைக்குச் செல்ல வசதியாக சுட்ட செங்கற்களால் படிக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளது.மண்டபத்துக்குள் விகடசக்கர விநாயகர் மற்றும் சண்முகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆயிரம் கால் மண்டபம் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றளவும் விளங்குகிறது.
16-ஆம் நூற்றாண்டு தொடங்கி கடந்த 1988-ஆம் ஆண்டு வரை ஏகாம்பரநாதர்- ஏலவார்குழலி திருக்கல்யாணம் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்து வந்துள்ளது. கடந்த 1988-ல் திருக்கல்யாண மேடையின் தூண்கள் சரிந்ததாலும், மேலே செல்லும் படிக்கட்டுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், திருக்கல்யாண வைபவத்தை மேலே நடத்த பொதுப்பணித்துறை அனுமதிக்கவில்லை.இந்நிலையில் நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோயில்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசின் நிதிக்குழு நிதி ஒதுக்கியது. அந்த வகையில் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களும் ரசாயனக் கலவை மூலம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. மேலும் மண்டபத்தில் உள்ள விகடசக்கர விநாயகர், சண்முகர் சன்னதி கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டன.திறந்த வெளியாக இருந்த ஆயிரம் கால் மண்டபத்துக்குப் பாதுகாப்பு கருதி சுற்றிலும் கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மேல் மேடைக்கு செல்லும் படிக்கட்டுகளும் புதுப்பிக்கப்பட்டன.
திருக்கல்யாணம்:புதுப்பிக்கப்பட்ட பின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் அன்று இரவு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை ஆயிரம்கால் மண்டபத்துக்கு மேலே உள்ள மேடையில் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.திருக்கல்யாணத்தின் போது ஆயிரம் முதல் 2 ஆயிரம் பக்தர்கள் வரை ஆயிரம் கால் மண்டபத்துக்கு மேல் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை பொதுப்பணித்துறை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .





லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது.இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில்,கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள்.ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும் சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

{முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது.}

"பழு' என்றால் ஆலமரம்.எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார்.

தல வரலாறு:கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், ""விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,'' என்றார்.அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் "அருந்தவநாயகி' எனப்படுகிறாள்.


ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசம் 

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா நவமணி மாலை 

நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசத்தை  நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம்  புரிவார் என்பது திண்ணம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு
1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி
நாதனவர் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா அமலனவர்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீ மஹா பெரியவா  புனிதரவர்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா தேவரவர்
கண்ணிரண்டும் தினமும் காக்க
2. புவியிறைஞ்சும் ஸ்ரீ மஹா  பெரியவா புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீ மஹா  பெரியவா பக்த சேவகர்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவர் ஸ்ரீ மஹா  பெரியவா என்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியார்  ஸ்ரீ மஹா  பெரியவா என்
நாசியினை நயந்து காக்க
3. கண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா என் தெய்வமவர்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீ மஹா  பெரியவா விமலரவர்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீ மஹா  பெரியவா  பரமரவர்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீ மஹா  பெரியவா மாதவர் என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
4. தூயசுடர் வடிவான  ஸ்ரீ மஹா  பெரியவா அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீ மஹா  பெரியவா நவநீதரவர்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸ்ரீ மஹா  பெரியவர்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸ்ரீ மஹா பெரியவா வள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
5. குரு ஸ்ரீ மஹா பெரியவா பகவனவர் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா உத்தமர் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீ மஹா  பெரியவா  என்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீ மஹா  பெரியவா போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
6. கனிவுமிகு ஸ்ரீ மஹா  பெரியவா கடவுளவர்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா இறையவர் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீ மஹா  பெரியவா பதியவர் என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீ மஹா  பெரியவா  என்
பாதவிரல் பத்தும் காக்க
7. இருதொடையும் ஸ்ரீ மஹா பெரியவா ஈசரவர்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீ மஹா  பெரியவா
வானவர்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீ மஹா  பெரியவா என் வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீ மஹா  பெரியவா ஆண்டவர் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீ மஹா  பெரியவா கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீ மஹா  பெரியவா பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீ மஹா  பெரியவா அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீ மஹா  பெரியவா உடனே காக்க
9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீ மஹா  பெரியவா என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீ மஹா  பெரியவா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ சிவனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் காஞ்சி சேர்
ஸ்ரீ மஹா  பெரியவா சித்தர் காக்க.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர ! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !! ஜெய ஜெய சங்கர !!!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர ! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !! ஜெய ஜெய சங்கர !!!

சனி, 25 ஏப்ரல், 2015

ராத்திரி

1. முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;
2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாம்படி:-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி:-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி:-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாம்படி:-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி:-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

Navratri_Golu

புதன், 11 பிப்ரவரி, 2015

64 திருவிலையாடல்கள்-1
வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்!
சோழநாட்டிலுள்ள வணிகர் ஒருவரின் வாழ்வில் தன் விளையாடலைச் செய்தார் சிவபெருமான். அந்த வணிகருக்கு திருமணமாகி, நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. வணிகர் தனது மகளை, மதுரையில் வசிக்கும் தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக அவள் இளமையாக இருக்கும்போதே பேசி முடித்திருந்தார். தங்கையும், அவளது மகனும் கூட இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அந்தப் பெண் வயதுக்கு வந்துவிட்டாள். அந்த வாலிபனும் இளம் காளையானான். ஆனால், தன் மாமா மகளை மணப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறி, மதுரையில் வசித்த இன்னொரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். மாமா மகள் அதிர்ச்சியடைந்தாள். மாமனார் மருமகனிடம், என் மகளை மணப்பதாக வாக்குறுதி அளித்து அதை மீறி விட்டாயே, என தங்கை மகனைக் கண்டித்தார். அதனால் என்ன மாமா! உங்கள் மகளையும் திருமணம் செய்து கொள்கிறேன், இரண்டாம் தாரமாக. கொஞ்சம் பொறுங்கள், என்றான். இந்தக் கவலையிலேயே வணிகரும், அவரது மனைவியும் இறந்து விட்டனர். அனாதையாகி விட்டாள் அந்த அபலைப் பெண். அவள் பட்ட துயரத்திற்கு அளவேயில்லை. இருப்பினும், சில நல்ல உறவுக்காரர்கள் அவளுக்கு ஆறுதல் கூறி, பெண்ணே! அத்தை மகனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை. உன் விருப்பமும், உன் தந்தையின் விருப்பமும் அதுவாகத்தானே இருந்தது, என்றனர்.
வணிகர் மகள் ஊர் பஞ்சாயத்தில், தன் அத்தை மகனின் வாக்குறுதிப்படி, தன்னை இரண்டாம் தாரமாக அவருக்கே மணமுடித்து வைக்கவேண்டுமெனக் கோரிக்கை வைத்தாள். பஞ்சாயத்திலுள்ள உறுப்பினர்களும், அனாதையான அவள் மீது இரக்கம் கொண்டு, அந்தப் பையனையே அவளுக்கு மணம் முடித்துவைக்க தீர்மானம் நிறைவேற்றி மதுரையில் இருந்த அவனுக்கு ஓலை அனுப்பினர். அந்தப் பையன் சோழநாட்டுக்கு வந்து அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு, வண்டியில் ஊர் திரும்பினான். அவனுடன் அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிலரும் வந்தனர். திருப்புறம்பியம் என்ற ஊருக்கு அவர்கள் வந்தார்கள். அவ்வூர் பந்தல், தோரணம், விளக்குகள் என விழாக்கோலம் பூண்டிருந்தது. சம்பந்தர் அங்கு வந்திருப்பதாகவும், அவரை வரவேற்கவே ஊர் விழாக்கோலம் பூண்டுள்ளதையும் அறிந்தனர். உடனே வண்டியில் வந்த எல்லாரும், இரவில் அங்கு தங்கி, மறுநாள் சம்பந்தரை தரிசித்து விட்டு மதுரைக்கு பயணத்தைத் தொடரலாம் என முடிவெடுத்தனர். ஒரு வன்னி மரத்தடியில் தங்கி களைப்பில் அயர்ந்து உறங்கினர். அப்போது ஒரு பாம்பு அங்கு வந்து வணிகரின் மருமகனைத் தீண்டி விட்டது. அவன் அலறினான். எல்லோரும் விழித்து பார்த்தபோது அவன் துடிதுடித்து இறந்தான். வணிகர் மகள் அழுது புரண்டாள். இரண்டாம் தாரமாகவாவது உங்களுடன் வாழலாம் என இருந்தேனே! இப்போது என்ன செய்வேன்? என தரையில் விழுந்து புரண்டாள். பொழுது விடிந்தது. ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு இந்த தகவல் கிடைத்து விட்டது. அவர் வன்னிமரத்தடிக்கு வந்தார். சம்பந்தரின் பாதங்களில் விழுந்து அந்தப் பெண் கதறினாள். பெற்றவர்களை இழந்த நான் கணவராக இருந்தவரையும் இழந்தேனே என அவள் வருந்தி அழுதது கண்டு, சம்பந்தரே உருகிப் போனார்.
கவலைப்படாதே மகளே! அந்த சிவபெருமான் தேவர்களுக்காக ஆலகால விஷத்தை உண்டு அவர்களைக் காத்தது போல, உன்னையும் காப்பார், என்றார். அந்த சிவனை நினைத்து, இறைவா! இவனை நம்பித்தானே இரண்டு சுமங்கலிகள் உள்ளனர்! அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமை இல்லையா? என உருக்கமாக வேண்டினார். என்ன ஆச்சரியம்! அவனது உடலில் இருந்த விஷம் படிப்படியாக இறங்கியது. அவன் உயிர் பெற்று எழுந்தான். சுற்றியிருந்தவர்களும், மணப்பெண்ணும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகனே! நீ இந்தப் பெண்ணை என் முன்னிலையிலேயே திருமணம் செய்து கொள், என்றார். அதற்கு அந்த பையன், ஐயனே! என் உற்றார் மதுரையில் உள்ளனர். அவர்களை சாட்சியாக வைத்து மணந்தால்தானே நன்றாக இருக்கும், என்றான். அதற்கு சம்பந்தர்,இவ்வூர் சிவனே உன்னைக் காத்தார். அதற்கு காரணம் இந்தப் பெண் உன் மீது கொண்ட அன்பு தான். உனக்கு சாட்சி தேவை என்றால் இந்த வன்னிமரத்தையும், இவ்வூர் சிவாலயத்திலுள்ள கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கின்றன. இதை விட வேறென்ன சாட்சியைத் தேடப்போகிறாய்? நான் சொல்வதைத் தட்டாதே. அவள் கழுத்தில் தாலிகட்டு, என்றார். வணிகன் மகன் அதற்கு மேல் மறுத்துப் பேசவில்லை. சம்பந்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தான். திருமணம் இனிதே நடந்தது. அவர்கள் அவரிடம் ஆசிபெற்று மதுரை சென்றனர். வணிகர் மகள் தன் தந்தை இறந்து போனதால் அவரது முழு செல்வங்களையும் இங்கு கொண்டு வந்திருந்தாள். எனவே, மூத்த மனைவியும், அத்தையும் அவளை அன்போடு வரவேற்றனர். பணத்துக்கு எங்குமே மதிப்பு தானே! ஆனால், இந்த சந்தோஷம் வெகுநாள் நீடிக்கவில்லை. தன் இரண்டாம் மனைவி கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டு, அந்த இளைஞன் தன் வியாபாரத்தை பலமடங்கு பெருக்கினான்.
அவர்களது இனிய இல்லறத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், மூத்த மனைவி ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒருவனுக்கு ஒரு மனைவி என்றால் தான் இன்பம்! இன்னொருத்தி பக்கம் தலை வைத்து விட்டால், அவனுக்கு அன்றே நிம்மதி போய்விடும்! இந்த இளைஞனோ, சூழ்நிலைக் கைதியாய் இரண்டாம் திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானவன். இரண்டாம் மனைவிக்கு குழந்தை பிறக்காத வரையில் பிரச்னை இல்லாமல் இருந்தது! ஆனால், பிறந்தவுடன் மூத்தவளின் பிள்ளைகள் முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டார்கள். இத்தனைக்கும், சிற்றன்னை கொண்டு வந்த பொருளைக் கொண்டு விருத்தியடைந்த வியாபாரத்தில் கிடைத்த பலனை அவர்களும் அனுபவிக்கத் தான் செய்தார்கள். சிற்றன்னையும், தன் கணவனுக்காக அதைப் பொறுத்துக் கொண்டாள். பொறுமையின் சின்னம் தான் அவள்! ஆனால், இரக்கமுள்ளவர்களைத் தான் உலகம் மதிக்காதே! அந்த இரக்கத்தை ஏமாளித்தனம் என எண்ணி ஏறி மிதிக்குமே! அந்த கதிக்கு ஆளானாள் இரண்டாம் மனைவி. மூத்தவளின் பிள்ளைகள் செலவாளிகள் மட்டுமல்ல! பணம் தந்த தைரியத்தால் மகாகோபக்காரர்களாகவும், முரட்டுப்பிள்ளைகளாகவும் இருந்தனர். இரக்கமுள்ள இரண்டாம் மனைவியின் மகனோ, அம்மாவைப் போல சாதுவாக இருந்தான். பெரியம்மா பெற்ற பிள்ளைகள், அந்த சாதுப்பிள்ளையிடம் வம்பு இழுப்பார்கள். சண்டை வலுக்கும். இப்படியாக, குடும்பத்தில் நிம்மதி போனது. இரண்டாம் மனைவி தனக்கும், தன் பிள்ளைக்கும் இழைக்கப்டும் அநீதி கண்டு விம்முவாளே தவிர, வணிகத்தில் கவனம் செலுத்தும் தன் கணவனிடம் இதுபற்றி சொல்லவில்லை. சொன்னால் அவனது நிம்மதி போய்விடக்கூடாதே என நினைத்தாள். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அமைதி காத்தாள்.
ஒருநாள், சண்டை வேறுமாதிரியாக திசை மாறியது. இரண்டாம் மனைவிக்கு அந்த வீட்டில் இருக்க உரிமையே கிடையாது என்பது போல பேச்சு எழுந்துவிட்டது. மூத்தவள் தன் பிள்ளைகளுக்கு ஆதரவாக இரண்டாமவளை அழைத்து, ஏய்! உனக்கும், இந்த வீட்டுக்கும் என்னடி சம்பந்தம் இருக்கிறது? நீ இந்த வீட்டுக்கு ஒழுங்காக வந்தவளா! பின்வாசல் வழியாக வந்தவள் தானே! என் புருஷன் உன் அத்தை மகன் என்பதால், அவரை மயக்கி எப்படியோ இந்த வீட்டுக்குள் வந்துவிட்டாய்! உனக்கும், அவருக்கும் கல்யாணம் நடந்துவிட்டதாக கதை கட்டினாய்! திருப்புறம்பியம் கிராமத்தில் வைத்து கல்யாணம் நடந்ததாகச் சொன்னாயே! அதற்கு என்னடி ஆதாரம்? நீ முறையாக அவரை மணக்க வேண்டுமென்றால் மதுரைக்கல்லவா அழைத்து வந்திருக்க வேண்டும்! போடி போ! ஒழுங்கற்றவளே! என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள். தனக்கு சம்பந்தப்பெருமான் முன்னிலையில் திருமணம் நடந்ததை எப்படி அவள் நிரூபிக்க முடியும்? ஊர் பஞ்சாயத்தாரிடம் சென்றாலும், நீ ஏதோ ஒரு ஊரில் திருமணம் நடந்ததாகச் சொல்கிறாய், அதற்கு சாட்சியாக யாரையாவது அழைத்து வா, என்று தானே சொல்வார்கள். என்ன செய்வது? என்று சிந்தித்தவளின் நினைவில்,ஆம்... சாட்சி இருக்கிறது. சம்பந்தப்பெருமான் சில சாட்சிகளைச் சொன்னாரே! வன்னிமரமும், கிணறும், சிவ லிங்கமும் சாட்சியாக இருந்தனவே. இவற்றை விட சிறந்த சாட்சி என்ன! என எண்ணியவளாய், எனக்கு இவையெல்லாம் சாட்சியாக இருந்தன. சீர்காழி திருக்குமாரன், பார்வதியிடமே பால் குடித்த பாலகன் திருஞானசம்பந்தரே எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார், என பெருமிதத்துடன் சொன்னாள் இரண்டாம் மனைவி.
ஏய் நம்புகிற மாதிரி கதை சொல்லு! லிங்கமும், கிணறும், வன்னிமரமும் பேசாது என்கிற தைரியத்தில் தான் இப்படியெல்லாம் பொய் சொல்கிறாய். நீ என் கணவரை அம்மி மிதித்து அக்னி சாட்சியாக திருமணம் செய்தாயா? இந்தக் கேள்விக்கு முதலில் பதில் சொல். இல்லாவிட்டால், நீ காதில் பூ சுற்றுவது போல கதை சொல்கிறாயே! வன்னி, கிணறு, லிங்கம் என்று...அவற்றை சாட்சிக்கு இந்த மதுரைக்கு வரவழைக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால், என் புருஷனுக்கும்,உனக்கும் திருமணம் நடந்ததை ஒப்புக் கொள்கிறேன், என்றார். திருப்புறம்பியத்திலுள்ள வன்னியும், கிணறும், லிங்கமும் சாட்சிக்கு மதுரைக்கு எப்படி வரும்? கடுமையான நிபந்தனை அல்லவா! இளையவளால் கண்ணீர் தான் வடிக்க முடிந்தது. ஆனாலும், நம்பிக்கையுடன் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றாள். பொற்றாமரைக்குளத்தில் நீராடினாள். சுவாமி சன்னதிக்குச் சென்று, இறைவா! எனக்கு வந்த சோதனையைப் பார்த்தாயா! தாய், தந்தையை இழக்க வைத்து அனாதையாக்கினாய்! இளமையிலேயே என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்க செய்த முடிவை மாற்றி, இன்னொருத்தியை அவருக்கு துணைவியாக்கினாய். போராடி பெற்ற வாழ்க்கையை மீண்டும் பறிக்கப் பார்க்கிறாய். நானும் என் பிள்ளையும் என்ன செய்வோம்! சரி...இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. இனி திருப்புறம்பியத்தில் எனக்கும் என் கணவனுக்கும் நடத்தி வைத்த திருமணம் நிஜமென்றால், அங்கே சாட்சிக்காக உன் லிங்கவடிவையும், வன்னியையும், கிணறையும் வைத்தாரே ஞானசம்பந்தர்! அந்த மூன்றும் இங்கே எழுந்தருள வேண்டும்! என்றாள். இளையவளின் உருக்கமான கண்ணீர், சுந்தரேஸ்வரப் பெருமானின் மனதையே கரைத்து விட்டது. அப்போது அசரீரி ஒலித்தது.
மகளே! வருந்த வேண்டாம். உன் திருமணத்திற்கு சாட்சியாகக் கேட்ட மூன்றும் இந்த கோயிலின் வடகிழக்கே தோன்றியுள்ளன. முதலில் நீ போய் அவற்றைப் பார். பின்னர், உன் மூத்தவளை அழைத்து வந்து காட்டு! என்றது. அவள் ஓடிச்சென்று அவற்றைப் பார்த்து வணங்கினாள். ஆனந்தக் கண்ணீருடன் வீட்டுக்கு ஓடினாள். மூத்தவளை அழைத்து வந்தாள். அவள் அந்த அதிசயத்தைக் கண்டு விக்கித்து நின்றுவிட்டாள். ஊராரும் அதைப் பார்த்து சிறியவளின் பக்தியைப் பாராட்டினர். இந்த தகவல் அவளது கணவனுக்கும் தெரியவே, இளையவளைத் தனக்கே தெரியாமல் அவமானப்படுத்தியதற்காக மூத்தவளை கண்டபடி திட்டினான். அவள் தலை குனிந்து நின்றாள். அவளை ஒதுக்கி வைக்கப் போவதாகவும், இனி அவள் தன் மனைவியே அல்ல என்றும் அவன் ஊரார் முன்னிலையிலேயே சொன்னான். இரக்கம் மிக்க இரண்டாம் மனைவி, அன்பரே! அவ்வாறு சொல்லாதீர்கள்! அக்கா என்னை திட்டியதால் தான், இந்த அதிசயம் நிகழ்ந்தது. இதெல்லாம் அந்த சோமசுந்தரரின் திருவிளையாடல் என்பது புரியவில்லையா! இந்த விளையாடல் நிகழக்காரணமே இந்த சகோதரி தான்! அவர்களிடமும் நீங்கள் வழக்கம்போல் அன்புடன் இருக்க வேண்டும், என்றாள். இளையவளுக்கு துன்பமிழைத்தும், தன் மேல் அவள் அன்பு காட்டியது கண்டு தன்னை மன்னிக்க வேண்டினாள். மூத்தவளின் பிள்ளைகளும் தங்கள் சித்தியின் அன்பு கண்டு வெட்கத்தில் தலை குனிந்தனர். அதன்பின், அவர்கள் தங்கமான பிள்ளைகள் ஆயினர். மீண்டும் ஒற்றுமை ஏற்பட்டது அந்தக் குடும்பத்தில்! திருவிளையாடல் புராணம் படித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். உங்கள் அனைவர் இல்லங்களிலும் செல்வவளம் பெருகட்டும்!

அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
நாலை மறுநாள் ஞாயிற்றுங்கிழமை கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடக்கவுள்ளது
மூலவர் :மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர்,முயற்சிநாதர் )
உற்சவர் :பஞ்சமூர்த்தி
அம்மன் :லலிதாம்பிகை, சவுந்திரநாயகி
தல விருட்சம் :மந்தாரை, வில்வம்
தீர்த்தம் :சூரியபுஷ்கரிணி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :திருமீயச்சூர்
ஊர் : திருமீயச்சூர்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார் அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே.திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 56வது தலம்.
திருவிழா:தைமாத ரதசப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும்.
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 119 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி திருக்கோயில், திருமீயச்சூர் - 609 405. திருவாரூர் மாவட்டம்.போன்:+91-4366-239 170, 94448 36526.
பொது தகவல்:கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
வேண்டுதல்:மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இது காளிதேவி பூஜித்த தலம்.
அருணனின் கதை: சூரியனின் தேரோட்டி யார் என்றால் "அருணன்' என்பீர்கள். இவரது கதையை மியச்சூரில் தான் கேட்க முடியும். காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது. அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.
சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் "அருணோதயம்' என வழங்குவர் என்றும் அருள் செய்தார். அருணன் சிவபக்தனாக திகழ்ந்தான். சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து, சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு "மேகநாதன்' என்ற பெயரில் அருளுகிறார். சுவாமியின் கருவறை விமானம் யானையின் பின் பக்கமான கஜப்பிருஷ்ட வடிவில் உள்ளது. இந்த விமானத்தின் மேல் மூன்று கலசங்கள் உள்ளன. சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் "மீயச்சூர்' என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர் மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.கிளியுடன் துர்க்கை: மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.
சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில், தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் ஆகியவற்றிலும், திருமியச்சூரிலும் உள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது. எட்டு கரங்களுடன் உள்ள இவளை "சுகப்பிரம்ம துர்க்கா தேவி' என்று அழைக்கின்றனர். "சுகம்' என்றால் "கிளி'. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். "சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சுலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்.
லலிதா நவரத்தின மாலை: லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,"லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?''என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்," "பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,''என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,"லலிதா நவரத்தின மாலை' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
இரண்டு லிங்கம்: இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக தி உண்டு என்பார்கள்.
சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.
கொலுசு காணிக்கை:இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.
பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.
தல வரலாறு:பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக "மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.





நற்செயலில் ஈடுபடுங்கள்!
* மனம் போன போக்கில் வாழக்கூடாது.சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வது,கேட்பது, பேசுவது,தின்பது என்றில்லாமல் மனக்கட்டுப்பாட்டுடன் வாழுங்கள்.
* பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து கோபப்படுவது எளிது.ஆனால் அன்பினால் அவரைத் திருத்த முயல்வதில் தான் பெருமை இருக்கிறது.
* ஒருவரின் மனநிறைவைப் பொறுத்தே அவரது வாழ்க்கைத்தரம் அமையும்.ஆனால்,ஆடம்பரத்துடன் இருப்பதையே வாழ்க்கைத்தரம் என தவறாக பலரும் நினைக்கிறார்கள்.
* ஏதாவது நல்ல செயலில் எப்போதும் ஈடுபடுங்கள்.இதனால் தீய எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
* எண்ணம்,சொல்,செயல் இந்த மூன்றாலும் உயிர்களுக்கு நன்மை உண்டாக்குவதே சத்தியம்.தீமையை உண்டாக்குவதெல்லாம் அசத்தியம்.
* நம் உண்மையான வடிவம் ஆனந்தம் தான்.ஆனால் அந்த நிலையை மறந்து மனதால் துக்கப்படுவதை இயல்பாக்கிக் கொண்டு சிரமப்படுகிறோம். இதைத் தவிர்க்க வேண்டும்.
{காஞ்சி மஹா பெரியவா}

தேடினால் கிடைப்பான்
* சமத்துவம் என்பது சொல் அளவில் மட்டுமே இருக்கிறது. கடவுளை முழுமையாக அறிந்த ஞானியின் கண்ணுக்கு உலகமே சமமாகத் தோன்றும்.
* தேடாத வரைக்கும் தான் கடவுள் எங்கோ இருப்பதாகத் தோன்றும். ஆனால்,அவனை தேடத் தொடங்கி விட்டால் நமக்கு அருகிலே இருப்பதை அறிய முடியும்.
* நோய்,துன்பம்,வறுமை குறுக்கிடும்போது பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.நமக்கு துன்பம் செய்தவரையும் மன்னிக்கும் பெருந்தன்மைவேண்டும்.
* உடல்,உடை இவை மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது.மனதில் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கு கடவுளின் திருவடியைச் சிந்திப்பது ஒன்று தான் வழி.
* இந்த உலகத்தைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதே நைவேத்யம் படைப்பதன் நோக்கம்.   {காஞ்சி மஹா பெரியவா}



குரங்கை அடிக்காதே!

ஸ்ரீமடத்தில் மேனாவில் அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார் பெரியவா.ஏராளமான கூட்டம்.தட்டு தட்டாக பழங்கள்,தேன் பாட்டில்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.திடீரென்று ஒரு குரங்குப்படை உள்ளே வந்தது. அட்டகாசம்தான்!பழங்கள் குதறப்பட்டன!தேன் பாட்டில்கள் உருண்டன!பெரியவாளிடம் போய் விஷமம் பண்ணிடுமோ?என்று சிஷ்யர்களுக்கு ஒரே கவலை.
பெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே இல்லை." ஒண்ணும் பண்ணாதீங்கோ அதுகளை"விரலை சொடுக்கி ஈஸ்வராக்ஞை பிறந்தது!கொண்டுவந்த தடிகள் செயலிழந்து நின்றன.ஒருவழியாக தாங்கள் வந்த கைங்கர்யத்தை முடித்து கொண்டு ராம காரியத்துக்காக போய் விட்டன வானரங்கள்.
பெரியவா அப்போது ஒரு கதை சொன்னார்.........
தஞ்சாவூர் பக்கத்தல ஒரு க்ராமத்துல குரங்குகளோட தொல்லை தாங்கலை.அசட்டுத்தனமா மாட்டிண்ட ஒரு குரங்கை ஒர்த்தர் தடியால அடிச்சதில் உள்காயம் உண்டாகி கொஞ்ச நாள்ல அது செத்து போய்டுத்து. அடுத்தாப்ல அவருக்கு பொறந்த குழந்தைகளுக்கு பேச்சு வரலை.பொண் குழந்தை கல்யாணம் பண்ண வேண்டியிருந்தது.என்கிட்டவந்து அவர் பண்ணின பாவத்தை சொல்லி அழுதார்.மண்ணால குரங்கு பொம்மை பண்ணி உங்க ஊர் கிராம தேவதை கோவில்ல காணிக்கை மாதிரி குடுத்துடு.மனசொப்பி கல்யாணம் பண்ணிக்கறவனா பாத்து விவாஹம் பண்ணி குடு" என்றாராம்.அதன்படியே நடந்து அந்தஊமைபெண்ணுக்குசுட்டித்தனமா பேசற குழந்தையும் பிறந்ததாம்."குரங்கை அடிக்க கூடாது.அதுகள்கிட்ட கருணை காட்டணும்.ராம சேவகா பரம்பரை.நமக்கு தொந்தரவு குடுத்தா கூட ஆஞ்சநேயரை நெனனச்சுண்டு அதுகளை விட்டுடணும்"பெரியவா இருந்த சிறிய அறைக்குள் சிஷ்யர்களோ பக்தர்களோ போகமுடியாதே தவிர,எலி, அணில்,பக்ஷிகள் எல்லாம் சர்வ சுதந்திரமாக உள்ளே சுற்றித்திரியும்.போய் மரச்சொம்பில் ஏறும்; உள்ளே எட்டி பார்க்கும்"ஜில்" என்று ஜலம் கண்ணில் பட்டதும் தாகம் தீரும்வரை குடித்துவிட்டு வெளியே ஓடி விடும்.பெரியவா அவைகளின் வரவையும்,போக்கையும் ஆனந்தமாக பார்த்து அனுபவித்துக்கொண்டிருப்பார்.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
குத்து விளக்கு - நிலை விளக்கு; கோட்டுக்கால் - தந்தக்கால்;
பஞ்ச சயனம் - ஐந்து தன்மைகளைக் கொண்ட படுக்கை
(வெண்மை, மிருது, வாசனை, அழகு, குளிர்ச்சி);
கொங்கை - மார்பகம்; மலர் - மலரையொத்த விசாலமான; மைத்தடம் - மை தீட்டிய;
தத்துவம் - ஸ்வரூபம், உண்மை, நடைமுறை, குணம், உடல் அமைப்பு, பலம்,
வலிமை, தேகபலம், இந்திரியபலம்;

பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் :காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் :7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் :ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை :செவ்வாய்
எழுதிய நூல் :முதல் திருவந்தாதி
பாடல்கள் :100
சிறப்பு :திருமாலின் சங்கின் அம்சம்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !
இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார்.வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர்.இவர் காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார்.பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார்.திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார்.கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார்.அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார்.மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர்.சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார்.தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.
ஹரியும் சிவனும் ஒன்றுதான்.ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.சிவனை வெறுக்க வேண்டாம்.சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம்.இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும் இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார்.ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார்.அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர்.இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார்.இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பொய்கையாழ்வார்,திருமங்கை ஆழ்வார்.1
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில்,அஷ்டபுஜம்,காஞ்சிபுரம்)
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,திருமங்கை ஆழ்வார்.1
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில்,திருக்கோயிலூர்,விழுப்புரம்)
பொய்கையாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்.1
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்.2
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,திருப்பதி,சித்தூர்,ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்,தொண்டரடி பொடியாழ்வார்.1
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி)

அம்பாளின் ஸ்வரூபம்-உமாஹைமவதி ( ஸ்ரீ பெரியவா )

நீதான் பரமேசுவரன் சரீரம் என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார்.சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரத்துக்குள் பல சரீரங்கள் இருக்கின்றன.இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால் அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும் அது இவற்றுக்குப் பிராண வாயுவாகவும் இருக்கிறது. பிரபஞ்சம் அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு,புத்தி,சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனைம் சாக்ஷ£த் அம்பாள்தான்.உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன.உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஒடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது.அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால் அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள்.கர்ணகவசம் மாதிரி பிரிக்கவே முடியாத கவசம்.

அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக இவள் பாதி-அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம்.சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார்.நான் பசு என்று சொன்னால் அது'ப'என்கிற ஒரு சப்தமும்'சு'என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது?எப்படியிருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைப்பு உண்டாகிறது.வாக்கும் அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் சொல் என்றால் பொருளாக அந்த மூலப்பொருள் இருக்கிறது.

அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள் காரியங்கள் எல்லாமும் அவள்தான்.அவளின்றி நம் சரீரம்,மனசு, உயிர் எதுவுமில்லை.சரீரம் த்வம் சம்போ.பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய் என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசாரியாள் அடுத்த ஸ்லோகத்தில் நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார்.அந்த மூலமான மனஸிலிருந்து சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது.அது மேலும் மேலும் ஸ்தூலமாகி,காற்று, அக்னி,ஜலம்,மண் எல்லாம் வந்தன.இதெல்லாமும் நீதான் என்கிறார்.இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார். த்வயி பரிணதாயாம் நஹி பரம்.

சம்பு என்ற உயிருக்கு சரீரம் என்று சொன்னாலும்,உயிர்,உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான்.நீயேதான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் என்கிறார்.த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.

இங்கே நம் சங்கராச்சாரியார் சொல்வது உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்.உள்ளேயிருக்கிற உயிர் அந்தர்யாமி அவரே என்கிற ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது.ஆனால் அப்போதுகூட உடம்பு உயிர் என்ற வித்தியாசம் துவைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார்.எங்களிடம் இருக்கிற துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான பரம ஞானமும் பரமானந்தமும் நீதான்.இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள் இரண்டு மாதிரி ஆகி சிவயுக்தி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய் என்கிறார்.இது பாவம்தான். வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான்.அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒனறுதான்.அத்வைதம்தான்.

ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால் அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்?காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ?அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை கூட உண்டாக்குகிறார்கள்.ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை.மனசு,எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி.அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் சந்தோஷப்படுமா?அவள் இருந்தால் மட்டும் போதாது.அவளைப் பார்க்க வேண்டும் பேசவேண்டும் என்று ஆசைப்படும்.

எவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர் முடியவில்லை.அருவமாகவே நாம் அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் இல்லை.இப்படிப்பட்ட நமக்காகவே நாம் அன்பு செய்வதற்காகவே அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள்.ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா?இப்படித்தான் க்ருத காடின்யவத் என்கிற நியாயப்படி பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய் ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.

அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்.சாதாரணமாக பத்துப் பேருக்கு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால் அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்.அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது.சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனுடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன.மகா பாபங்களைச் செய்து காரியத்தில் செய்யாவிட்டாலும் மனஸினால் மகா பாபங்களை நினைத்து ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும் கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான்.அவளுடைய அன்பையும் அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்கூடப் பார்க்க முடியாது.அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.இத்தனை ஸெளந்தரியம் லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால் துளி ஜுரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது.அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள்.எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி,புவனேசுவரி,துர்க்கை,காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.

ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால்,அதற்கு உபயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும் அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வர்ணாத்மிகேஸர்வ மந்த்ராத்மிகே என்று'சியாமளா தண்டகத்தில் 'ஸ்துதி செய்கிறார்.வர்ணம் என்றால் நிறம் என்று நினைப்பீர்கள். வர்ணம் என்றால் அக்ஷரம் என்று அர்த்தம்.ஒலி வடிவான அக்ஷரங்களும் ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான்.அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை.ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள்.ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள்.அப்போது அவற்றின் அதிர்வுகளைப் பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன.நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள்.இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது.மாத்ரு என்றால் தாயார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும் எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன.இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம்.மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான்.கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்.அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால்,அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில்,சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள்.இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம்.அதிலிருந்து இந்த நாம ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள்.அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது.அ-சிருஷ்டி;உ- பரிபாலனம்;ம-சம்ஹாரம் என்பார்கள்.அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம்.இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால் உ-ம -அ -என்றாகும்.அதுதான் உமா என்பது.உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது.

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
   போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
    சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

ஒருத்தி-ஒரு பெண்ணுக்கு(தேவகி);ஒருத்தி-மற்றொரு பெண்ணுக்கு (யசோதை);தரிக்கிலான்-பொறுக்க,சகிக்க மாட்டாதவன்;கஞ்சன்- கயவன்,கம்சன்;அருத்தித்து-யாசித்து,உத்தேசித்து பிரார்த்தனை செய்து;திருத்தக்க-பிராட்டியும் ஆசைப் படத்தக்க,லக்ஷ்மியும் விரும்பும்;சேவகம்-வீரியம்,வீரிய குணம்,ஏவியதை செய்வது, குற்றேவல்;