செவ்வாய், 22 அக்டோபர், 2013

வேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ்டி ஸ்பெஷல்

குருவாய் வருவாய் முருகா!கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அவ்வூர் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகப்பெருமானே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துச்சுவாமி தீட்சிதர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஓருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுபாலகனாய் வந்து, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை ""குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில், சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்று வழிபடலாம். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதரும் முருகனைப் போற்றுகிறார்.

பிள்ளைகள் கருத்துக்கு முன்னுரிமைகொடுங்க!முருகனுக்கு தனி வழிபாடும், முக்கியத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் இருந்து அவரைப் பிரித்து இந்த திருவிளையாடல்களை சிவன் நிகழ்த்தினார். இதற்காக, பெற்றோரை உலகமாகக் கருதி, அவர்களைச்சுற்றி வந்த விநாயகருக்கு, ஞானப்பழத்தைக் கொடுத்தார். எதிர்பார்த்தபடியே முருகனும் கோபம் கொண்டு பெற்றோரை பிரிந்தார். மேலும், தன் மகனின் பெருமையை உலகறியச் செய்ய, மந்திர நாயகனான அவர், ஒரு மந்திரத்திற்கு பொருள் தெரியாதது போல் நடித்து, மகன் மூலம் உபதேசம் பெற்றார். குடும்பத்தில் பிள்ளைகளின் கருத்துக்கும் பெரியவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகுடும்பம் அமைந்தது.

கருவறைக்குள் திரைச்சீலை:இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் கொழும்பிலிருந்து 230 கி.மீ., தூரத்தில் உள்ளது. இவர் "கதிரேசன் என்று போற்றப்படுகிறார். கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது. சந்நிதியின் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிஅமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது. விழாவின் போது யானைமீது, முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய ஒரு பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாகக் கருதி மக்கள் வழிபடுகின்றன். இக்கோயிலின் பின்புறமிருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடும் கோயில் இது. கிரகபாதிப்பை போக்கும் பாடல்: ராசிபலனை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் விருப்பம் அதிகம். நம் பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் "கந்தர் அலங்காரம் என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகனை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.""நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்), சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதைப் பாடினால் கிரக பாதிப்பு நீங்கும்.

நோய் தீர்க்கும் சந்தனம்: அழகே உருவான முருகப்பெருமானுக்கு, சூரபத்மனுடன் போரிட்ட போது மார்பில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துடன் அவர் அமர்ந்துள்ள தலம் திருத்தணி. சூரனுடன் போரிட்ட கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை என இத்தலம் பெயர் பெற்றது. அவரது காயத்தின் வலி குறைய சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த சந்தனமே இங்கு பிரசாதமாக தரப்படுகிறது. அது நோய் தீர்க்கும் எனும் நம்பிக்கையுடன் பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். சந்தனம் அரைப்பதற்காக கோயிலில் கல் ஒன்றும் உள்ளது.

திருப்புகழின் பொருள்: முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்தார். "திரு என்றால் "அழகு, ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், "திருப்புகழ் என்று பெயர் உண்டானது.

அறுபடை வீடுகள்:திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள். மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல, முருகனின் படை வீடுகள் திகழ்கின்றன. முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களுக்குள்ளும் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் படை வீடுகளின் சிறப்பை விரிவாகக் கூறுகிறது.

தாயில்லாமல் இவர் இல்லை: முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தையால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வரம் பெற்றிருந்தான். ஒரு கட்டத்தில், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார். பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை "சிவசக்திபாலன் என்றும் அழைப்பர்.

வழித்துணையாய் வா முருகா! கந்த சஷ்டி பிரார்த்தனை:
*முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.
* முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழையே மட்டுமே பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருளவேண்டும்.
* மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.
* முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.
*எங்கள் எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய
வரங்களை வாரி வழங்க பன்னிரு கரங்களுடன் வந்தருள்வாயாக.
*கருணைக்கடலே! கந்தப்பெருமானே! நமசிவாயத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வரும் சுப்பிரமணியனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே!
எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.
* திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரகதோஷம் எதுவும் என்னைத் தாக்காமல் காத்தருள வேண்டும்.
*மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.
*கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.
* தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும், எனக்கு வழித்துணையாக வருவாயாக.
* சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் செழிக்க வந்தருள்வாயாக.
விரதம் இருப்பதால் என்ன நன்மை?

விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும், மனம் வலிமைபெறும். இறைவனது அருள் நமக்கு கிடைக்கும். ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும். விரதத்திற்கு மறுநாள் நாம் சாப்பிடும்போது ஜீரண உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும். பணி புரிபவர்கள் அனைவருக்கும் வார விடுமுறை தேவைப்படுவது போல, ஆலயங்களுக்குச் சென்று அருள் பெற விரும்பும் நாம், ஆரோக்கியமாக இருக்க விரதங்கள் தேவை. இதற்காக வாரத்தில் ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவையாவது உண்ணாமல் இருந்து, தங்களுக்கு பிடித்தமான கடவுளுக்காக விரதமிருப்பது உடலுக்கும், மனதுக்கும் சிறந்தது.
பெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெரியுமா?

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவபெருமான் உணர்த்தியது தீபாவளித் திருநாள்(ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி) ஒன்றில்தான் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் தனது மேனியில் பாதியை அம்பிகைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவனின் இடப்பாகம் வேண்டி பார்வதி இருந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என்றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரியுடன் மனிதர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.

ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனைமட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார். பரமேஸ்வரன், பார்வதியே! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்பினவனல்ல. மோட்சத்தை விரும்பினவன். மவுனநிலை வகித்த பெருந் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான் எனக் கூறியருளினார். அத்தருணம், சென்றுகொண்டிருந்த முனிவரைப் பார்வதி தேவி அழைத்து, பிருங்கியே! நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உங்களுக்கு? எனக் கோபமாகச் சொன்னாள் இறைவி. உடனே முனிவர், தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு  சிவபெருமான் ஓர் ஊன்றுக் கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி இந்த அவமதிப்பையும் சிவபெருமான் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்து, கயிலாசத்தை விட்டு பூலோகத்தை அடைந்து, கவுதமர் என்னும் முனிவரது ஆசிரமத்தில் தங்கினார். பன்னிரண்டு வருடம் மழையின்றி மடிந்தும், ஒடிந்தும், வாடியுமிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் பூத்து பரிமளித்து எங்கும் நறுமணம் வீசியது. மரங்கள் முதலாயின பூத்துக் காய்த்துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. அப்போது தர்ப்பை  முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து,  அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ? என்று கூறி வணங்கி நின்று, ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கி நின்றார்.

இவ்வாறாக பார்வதி தேவி கவுதமரை நோக்கி, தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும் அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர், தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர் எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார். இந்த கேதாரீஸ்வரர் விரதம்  புரட்டாசி மாதப் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது.  அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி  தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில்  இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும்.  அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல்  ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி  இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து , அர்ச்சனை செய்து  முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து  பூஜித்து கேதரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும் என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார். பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார்.

விரதத்தின் 21 வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசிர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து  அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே கேதார கவுரி விரதமாகும். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, உலகு தரு கவுரி எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம்;  கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 (சோடஷ)கவுரிகளின் திருவடிகளைப் போற்றி, வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஞான கவுரி: ஒரு முறை சக்திதேவி,உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலில் பாதி பாகத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பாள். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.

சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, அன்பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.

யோக கவுரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கிறாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகேஸ்வரி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமாலாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கவுரி வீற்றிருக்கிறாள்.

சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சியளிக்கிறாள்.

கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்தபோதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீசுரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி-வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும்,பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி-வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகிறார்கள்.

சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை-வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும்.இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும்.  விரத நாட்களில்  உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

விரத பலன் : கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.
பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
இனிமையான இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்?

இன்று உள்ள காலகட்டத்தில் குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, பணிச்சுமை போன்ற பலவிதமான காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பையோ, பிரச்சனைகளையோ பரிமாறிக் கொள்வது குறைந்து வருகிறது. மனம் ஒத்த தம்பதிகளாக நூற்றுக்குப் பத்து பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ மனமில்லாமல் தங்களில் யார் பெரியவர் என்ற மனநிலையிலேயே காலத்தை கழித்து விடுகின்றனர். காலப்போக்கில் கணவன், மனைவி இருவருமே குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்ற சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் வாழும் காலம் வரை கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும். இப்படி இல்லறத்தை நடத்துபவர்களும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடப் போகின்றவர்களும் கீழே உள்ள சிறுகதையைப் படித்து இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சுமனை என்பவள் உத்தமமான பதிவிரதை. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்தவள். இவள் திடீரென மரணம் எய்ததும், சொர்க்க லோகத்துக்குச் செல்கிறாள். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்போது அங்கே சாண்டல்யன் என்பவன் எப்படியம்மா உனக்கு இப்படி ஒரு வரவேற்பு? ஏதேனும் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து, உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடித்தாயா? என்று கேட்கிறான். அதற்கு சுமனை, சந்நியாச வாழ்க்கை எல்லாம் வாழவில்லை. பெண்களுக்கே உரிய தர்மப்படி என் கணவரைப் போற்றி வாழ்ந்தேன். அவருக்கு உரிய கடமைகளை நான் முறையாகச் செய்தேன். அவ்வளவுதான் என்றாள். வியந்தான் சாண்டல்யன். அப்படி, என்ன, எவரும் செய்யாததை நீ உன் கணவனுக்குச் செய்தாய்? என்று எதிர் கேள்வி கேட்டான். என் கணவர் மனம் வருந்தும்படி எந்த நாளும் ஒரு செய்கையை நான் செய்ததில்லை. எப்போதும் கனிவான வார்த்தைகளையே பேசி வந்தேன். கணவருக்கு எந்த ஒரு தொந்தரவையும் தர மாட்டேன். என் கணவருக்குப் பிடித்ததை மட்டுமே சமைப்பேன். பணி நிமித்தம் கணவர் வெளியே எங்காவது சென்றிருந்தால், அவர் திரும்பி வரும்வரை தெய்வ வழிபாட்டில் இருப்பேன்.

அசதியின் காரணமாக அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது எத்தகைய முக்கியமான செய்தி என்றாலும், அவரை எழுப்பவே மாட்டேன். இதை வாங்கிக் கொடுங்கள்... அதை வாங்கிக் கொடுங்கள் என்று அவரை நச்சரிக்க மாட்டேன். எனக்குப் பணம் தாருங்கள் என்று அவரிடம் எந்த நாளும் நான் கேட்டதே இல்லை. அவர் ஊரில் இல்லை என்றால், நான் என்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன். என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போக... சாண்டல்யன் அதிசயித்தான். அவளை வணங்கினான். இதைப் படிக்கும் கணவன்மார்களுக்கு, தங்களது மனைவியும் இப்படி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்கிற ஏக்கம் வருவது இயற்கை! உண்மை ! எதிர்பார்ப்பு ! ஆனால், பதிவிரதா தர்மத்தில் இருந்து சுமனை இம்மியும் நழுவாமல் இருந்ததற்கு, உத்தமமான அந்தக் கணவனும் ஒரு காரணம் என்பது உண்மை. இல்லறம் என்பது கணவனும் மனைவியும் இணைந்து நடத்துகிற நல்லறம் ! அதில் கண்ணீரும், கவலையும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் ! கணவனும் மனைவியும் ஒருவர் மீது மற்றொருவர் செலுத்துகிற அன்பே, இந்த இல்லறத்தின் மூலதனம் ! இதயம் மட்டும் உறுதி கொண்டதாக அமைந்து விட்டால், ஒரு சுண்டெலிகூட யானையைத் தாக்கி விடும் என்பது மேலைநாட்டுப் பழமொழி. உங்கள் இதயங்களை உறுதி கொண்டதாக ஆக்குங்கள். இல்லறம் நல்லறமாக மாறும்.
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
மனிதனுக்கு உண்மை தேவை அறிவியலா? ஆன்மிகமா?

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

வெய்யில் சுட்டெரிக்கும் போது உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது. வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது. ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை. மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது,காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க
நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம். இத்தனையும் தந்த விஞ்ஞானம், இதை போற்றுவதை விட்டுவிட்டு ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேட்கலாம். அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது. கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது. எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும். ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிகாட்டும். நிரந்தரமான சந்தோஷமே ஆன்மிகத்தின் இறுதி நோக்கம். நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரலாம் ஆனால் மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கும் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே. சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான். மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும். சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறது ஆன்மிகம். பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறது அறிவியல். சொல்லும் முறையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

அறிவியல் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக!
ஆன்மிகம் என்பது என்ன தேவை என்பதை அறிவது அல்ல
தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
தமிழ் மாதங்கள் பிறந்தது எப்படி?

தமிழ் மாதம் என்றால் சித்திரை, வைகாசி என ஆரம்பித்து மாசி, பங்குனி என முடிவது நம் அனைவருக்கும் தெரியும். இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வந்தது, யார் பெயர் வைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா, இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால் மாதங்களுக்கு பெயர்கள் வந்தது எப்படி என்பது உங்களுக்கு சுலபமாகப் புரிந்து விடும். சம்ஸ்கிருத வார்த்தைகளே நாளடைவில் மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

சித்ரா நட்சத்திரத்தன்று தான் சித்திரை மாசத்தில் பவுர்ணமி வரும் .அதனால் சித்திரை மாதம் என்றானது.

விசாக சம்மந்தமானது வைசாகம். விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நட்சத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உண்டு. இதில் பூர்வம் என்றால் முன், உத்தரம் என்றால் பின். பூர்வ/ உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும், ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் ஆயிற்று. இந்த இரு நட்சத்திரங்களில் ஒன்றில் பவுர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா என்ற எழுத்து உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் மறைந்து, மீதமுள்ள வண த்தை ஓணம் என்கிறோம். அது  மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பவுர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச், ர என்ற கூட்டெழுத்து மறைந்து ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பவுர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நட்சத்திரம் தான் கார்திகை. இந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பவுர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பவுஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பவுர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் பல்குனி எனப்படும. அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

சமஸ்கிருதம்                                            தமிழ்

சைத்ர                                                            சித்திரை
வைஸாயுகயு                                            வைகாசி
ஆநுஷி / ஜ்யேஷ்ட                                  ஆனி
ஆஷாட                                                         ஆடி
ஸ்யுராவண​:                                                ஆவணி
ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ                   புரட்டாசி
ஆஸ்யுவிந​:                                                  ஐப்பசி
கார்திக:​                                                            கார்த்திகை
மார்கயூஸீயுர்ஷ​:                                        மார்கழி
தைஷ்யம்/ பவுஷ​:                                       தை
மாக                                                                    மாசி
பாயுல்குயூந​:                                                   பங்குனி.
வழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது?

காலை வேளையே மிகவும் சிறந்தது. உங்களைப் பார்த்து உங்கள் வாரிசுகளும் காலையிலேயே எழும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். காலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் வீடு சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் நீராடி, 7.30 மணிக்குள் பிரார்த்தனையை முடித்து விடுங்கள். 5 நிமிடம் வணங்கினாலும், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட்டால் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.
அணில் கதைக்கு ஆதாரம் எது?

நாம் ஒருவர் செய்யும் பணியில், ஏதோ ஒரு உதவி செய்தாலே போதும்! அந்த சிறு பங்களிப்பை ராமருக்கு அணில் உதவி செய்தது போல என்ற உவமையுடன் குறிப்பிடுவர். உண்மையில், இந்த நிகழ்ச்சி ராமாயணத்தில் இடம் பெற்றதா என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ, தமிழில் கம்பராமாயணத்திலோ, இந்தியில் துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் போது அணில் உதவியதாக தகவல் இல்லை. இது ஒரு கர்ணபரம்பரை கதை. ஆனால், எல்லா மொழி மக்களிடமும் இந்தக்கதை பிரசித்தமாகி விட்டது.  இந்தக் கதை எதில் தான் இருக்கிறது என்றால், திருமாலின் அடியவர்களான ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை 27வது பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. அணில் பற்றிய குறிப்பு அதில் வருகிறது. அடியவர்களின் பாதத்தூளியை (தூசு) தலையில் ஏற்றுக் கொண்ட அடியவர் இவர் என்பதால், அணிலையும் பெருமையாகப் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது.
விஞ்ஞானம் முடிவடையும் இடத்தில் மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது சரியா?

விஞ்ஞானம் ஒரு விஷயத்தை வெளிப்படையாக ஆராய்கிறது. மெய்ஞ்ஞானம் அதே விஷயத்திற்கு உள்முகமாக விளக்கம்தருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நேர், எதிர்மறை பலன் உண்டு என்கிறது அறிவியல். (நியூட்டனின் மூன்றாம் விதி) அதையே ஆன்மிகமும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எல்லாம் அவரவர் செய்த வினைப்பயன் என்று எச்சரிக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞ் ஞானமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை அல்ல. பாதை வெவ்வேறானாலும், உண்மையை அறிவது தான் இவற்றின் நோக்கம்.