பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்!
நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்? என்ற கேள்விக்கு ஒன்றும்
கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான
பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம்.
ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு
வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, "சஞ்சித கர்மா என்றனர்.
இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர்
கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு
உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து
விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம்
கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த
ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை,
பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே?
என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ பிரார்த்தம்! இப்படி
வந்திருக்கு... என்று தலையிலடித்துக் கொள்கிறார்.
இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா
இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, "ஆகாமி
கர்மா என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும் சஞ்சித
கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே
தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க
முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம்
செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது. அந்த
பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும்,
அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித
கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும்
கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம்
செய்யலாம். அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க
வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன்
பலன், "ஸ்டாக் செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ
ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது.
கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை எப்படி அறுத்து தள்ளுவது?
ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த
ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி,
ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து
விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே
இராது. முடியுமா என்று பாருங்கள்.