வெள்ளி, 15 நவம்பர், 2024

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு மூன்று பெரியோர்கள் பதில் சொல்லி விட்டார்கள்...
 

மக்கள் கேட்ட கேள்விகள்

கடவுள் எங்கே இருக்கிறான்?
 

மனதுக்குள் இருக்கிறானா?
 

வெளியே இருக்கிறானா?
 

அவனுக்கு உருவம் உண்டா?இல்லையா?
 

நேரடியாகப் பார்க்கலாமா?
அல்லது மறைவாக இருக்கிறானா?
 

அவன் ஒருவனா? பல வடிவங்களில் உள்ளானா?

இந்த எல்லா கேள்விகளுக்கும் மகான்கள் பதில்
சொல்லியிருக்கிறார்கள்.
 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பதில் :
அழுக்கடைந்த கண்ணாடியில் சூரிய கிரணம் பிரதிபலிப்பதில்லை. அது போல மாயைக்குட்பட்ட அசுத்த ஆத்மாக்களின் இருதயத்தில் ஈஸ்வர தேஜஸ் தோன்றுவதில்லை. ஆனால் தெளிவான கண்ணாடியில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல தூயோரின் மனத்தில் பகவான் தோன்றுகிறான்.

ஒரு லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் நீரைக் கலந்துவிட்டால், அதிலுள்ள தண்ணீர் முற்றும் வற்றி, பால் மட்டும் கிடைக்க நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும். சாதாரண இல்லறத்தானுடைய மனம் தண்ணீர் கலந்த பால் போன்றது. உண்மையான பக்தனுடைய நிலையை அடைய அவனுக்கு நீண்ட காலமும், நெடிய முயற்சியும் தேவை. (இதற்குப் பின்னர்தான் கடவுள் தரிசனம்)
 

கம்பர் பதில் : ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
  பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
  ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
   உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு
இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
 

பொருள் : இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவே தான்; அப்படி அல்ல என்றாலும் அல்ல தான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில் தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!
 

அப்பர் பதில்

விறகில் தீயினன் பாலில்
   படுநெய்போல்
மறைய நின்றுளன்
    மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு
   உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய
    முன் நிற்குமே
 

பொருள் : விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.          அப்படியிருந்தும் நம் கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நமக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார் அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும் கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக் கண்டு இன்புறுவோமாக.
 

திருமுலர் பதில்

உள்ளத்தும் உள்ளன்
    புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன்
   புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை
   புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை
   புறத்தில்லை தானே.
 

பொருள் : பக்தியுடன் வழிபடுவோர், எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்திலும் காணலாம்; வெளியிலும் காணலாம். உள்ளத்தும் இல்லை; புறத்தும் இல்லை என்று கூறும் நாத்தீகர்களுக்கு உள்ளத்தும் புறத்தும் வெளிப்படாது மறைந்து நிற்பான்.

.......................................................

''தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம்
      ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி
     ச்ராத்தமாஹூர் மநீஷிண:''

-மஹா பாரதம்,
அநுசாஸந பர்வம் ஸ.145

"இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —
மஹா பாரதம்,
அநுசாஸந பர்வம் ஸ.145

கருத்துகள் இல்லை: