விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்...
ஒருவர் மிக மிக நல்லவராக, தான தர்மங்களை செய்து வாழ்பவராக, பிறர் துன்பங்களை பொறுக்க முடியாமல் உதவிகள் செய்பவராக இருப்பார்.
ஆனால், அவருக்கு பல மன வேதனைகளும் சோதனைகளும் வருவது உண்டு. அவர் அவற்றை பொருட்படுத்தாமல் தன்னுடைய காரியத்திலேயே கண்ணாக இருப்பார்.
அவரின் நலம் விரும்பிகள் இந்த மனிதர் மிக நல்லவராக இருக்கிறார். ஆனால், ஏன் இவருக்கு மட்டும் இது போன்ற சோதனைகள் வருகின்றது என்று நினைப்பார்கள்.
இதை விதி என்பதா அல்லது துரதிஷ்டம் என்பதா என்று வாதிடுவார்கள். இப்படி பலரும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன? இந்த சந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் எழுவதுண்டு.
அதேபோல், ராமாயண காவிய நாயகனான ராமருக்கும் இந்த சந்தேகம் இருந்தது. அவரும் மனிதனாக பிறப்பெடுத்தவர் அல்லவா? அவர் தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காக தனது குருவை நாடினார்.
"உண்மையில், விதி என்றால் என்ன, அதிர்ஷ்டம் என்றால் என்ன?"
இந்தக் கேள்வியை ஸ்ரீராமர் ஒரு நாள் வசிஷ்டரைக் கேட்க, அவர் பதில் கூறுகிறார்.
"ராமா! நாம் செய்த வினைகளின் பயனாக ஏற்படும் இன்ப, துன்பங்களைத்தான் விதி என்றும், அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எத்தனையோ வாசனைகள் அல்லது எண்ணங்கள் உள்ளன. அவைதான் வாக்கினால் செய்யப்படும் கர்மங்களாகவும், உடலினால் செய்யப்படும் கர்மங்களாகவும் பரிணமிக்கின்றன. அவன் வாசனைகள் எப்படியோ, அது மாதிரித்தான் அவன் செய்யும் கர்மங்களும் இருக்கும். எப்படி கிராமத்துக்கு போக விரும்புகிறவன் கிராமத்துக்கும், நகரத்திற்குப் போக விரும்புகிறவன் நகரத்திற்கும் போவானோ, அது மாதிரி பூர்வ ஜன்மத்தில், பலன் மீது உள்ள தீவிரமான ஆசையினால் பெருத்த முயற்சியின் பேரில் செய்யப்படும் கர்மம்தான் இந்த ஜன்மத்தில் விதியாக மாறுகிறது.
மனிதன் தனது முயற்சியினால் இந்த உலகில் எதையும் அடைய முடியும். விதியைக் கொண்டு முடியாது. முன் ஜன்ம வாசனைகள் அல்லது கர்மாக்கள் என்னும் நதி மனிதனை நல்ல வழியிலோ தீய வழியிலோ இழுத்துச் செல்லுகிறது. ஆனால், மனிதன் முயற்சி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். முயற்சி என்பது ஆன்மிக நாட்டமாகவும் இருக்கலாம்.
மனிதனுடைய மனது ஓர் குழந்தையைப் போன்று சஞ்சலமுடையது. அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்குத் திருப்பவும் முடியும் அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் திருப்பலாம்.
ஆகவே, மனிதன் தனது முழு முயற்சியினால்தான் அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்கு திருப்ப வேண்டும். உலகில் மனிதன் எந்தெந்தக் காரியங்களில் ஈடுபடுகிறானோ, அதிலேயே தன்யமாகி விடுகிறான். ஆகவே, ராமா, நீ உன் முயற்சியைக் கொண்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கம் இல்லாத பதவியை அடை.
பிறகு, அந்த நல்ல வாசனையையும் துறந்து பிரம்மத்தோடு ஐக்கியமாகு! என்று கூறுகிறார் வசிஷ்டர்.
ஸ்ரீராமருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து வசிஷ்டர் சொன்னதிலிருந்து நாம் செய்யும் கர்மங்கள் மற்றும் எண்ணங்களில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றவையாக மாறுகிறது.
*பைரவி*
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 15 நவம்பர், 2024
விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக