சனி, 19 அக்டோபர், 2024

காஞ்சி மடம்....

தெரியுமா உங்களுக்கு காஞ்சி மடம் ஜயேந்திர பெரியவா நிர்வாகத்தில் இருந்த போது  எத்தனையோ சோதனைகளை சந்தித்திருக்கிறது.  வருவோர் போவோர்  ஜாஸ்தி. செலவு கட்டுக்கடங்காமல் போனதும் உண்டு. ஓஹோ பெரியவா எல்லாரையும் பணம் கேட்பாளோ? அதான் இல்லை. ஒருத்தரையும் ஒரு தம்பிடி கொடு என்று கேட்டதே இல்லை. பணம் ஒரு பொருட்டாக என்னிக்கு பெரியவா மதிச்சிருக்கா.  எப்படியோ மடம்  நிலைமையை சமாளிச்சுண்டு தான் வந்தது. ஒரு சம்பவம் சொல்றேன். அதை நான் நேரிலே பார்த்ததாக இருக்க அவசியம் இல்லை. யாரோ சொன்னதை திருப்பி கூட  சொல்லலாமே. ஏதோ ஒரு கிராமத்தில் பெரியவா  கேம்ப். அன்னிக்கு நிலைமை என்னன்னு கேட்டா சுத்தமாக ஒரு சாமானும் இல்லை. அரிசி, பருப்புவகையரா  ஒரு குந்து மணி கூட கிடையாது.  துடைச்சு விட்டாப் போல ஆயிடுத்து.  மட நிர்வாக மேனேஜர், சமையல் கட்டு நிர்வாகி காரியதரிசி  எல்லோருக்கும் கவலை. எப்படி வரவாளை எல்லாம் உபசரிக்கிறது. எப்படி  நிலைமையை சமாளிக்கிறது. ஒண்ணுமே ஸ்டாக் இல்லை. எப்படியோ அன்னிக்கு  ராத்திரியை சமாளிச்சுடலாம்.  மறுநாள் காலை?? வேறு வழி எதுவும் தோன்றவில்லை. நேராக பெரியவா கிட்ட விஷயத்தை கொண்டு போக வேண்டியது தான். அப்புறம் ஈஸ்வரோ ரக்ஷது. மெதுவாக  பெரியவா கிட்டே போய் விஷயத்தை எடுத்து சொன்னார்கள். அவர் எந்த கவலையும் பட்டதாக தெரிய வில்லை.

அவர்களுக்கோ ஆச்சர்யம். ''ஒரு வார்த்தை காஞ்சிபுரம்  மடத்துக்கு  தெரியப்படுத்தினாலோ, யாராவது  ஒன்று இரண்டு பெரிய மனுஷாள்,  தனவான்களுக்கு சேதி போனாலோ  போதுமே நிலைமை சமாளிச்சுடலாமே'' ஆனால் பெரியவரை பொறுத்தவரையில்  ஓஹோ அப்படியா சரி, சரி. காமாட்க்ஷி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்து விட்டார். ஓஹோ அப்படியா என்று ஏதோ ஒரு  சாதாரண செய்தியை எடுத்துக் கொள்வது போல இந்த காதிலே வாங்கி அந்த காதுலே விட்டுட்டாரே  என்று மற்றவர்களுக்கு கவலையில்  ஆழ்ந்தனர். நேரம் ஓடியது இரவு கழிந்தது. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. பெரியவா சம்பந்தப்பட்ட ஒண்ணு ஒண்ணும் அதிசயமும் ஆச்சர்யமும் தானே. சுமார் ஏழுமணி அளவில் சூரியன் உக்ரமா மேலே  எகிரிண்டு இருக்கறபோது ஒரு  வண்டி எங்கிருந்தோ வந்து  அவர்கள் தங்கி இருக்கிற இடத்திலே  வாசலிலே நின்றது. வண்டி நிறைய  மூட்டை மூட்டையா அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ பெரியவா யார்கிட்டே  சொல்லி அரேஞ்ஜ் பண்ணினா?
விஷயம் இது தான். பெரியவா முகாம் போட்டிருந்த ஊருக்கு பக்கத்திலே  ஒரு கிராமம். ஒரு பிரபல தனவான் வீட்டிலே ஒரு திருமணம் நடக்க  ஏற்பாடாகி இருந்தது. அந்த திருமண விருந்துக்கான எல்லா உணவுப் பொருட்கள் தான் அந்த வண்டி நிறைய. ஆனால் ஏதோ கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் நடக்க முடியாத நிலை.
வாங்கி விட்ட அத்தனை உணவுப் பொருள்களையும் என்ன செய்வது? என்று எந்த தனவான் குடும்பம் யோசித்தது. சின்ன ஊர் எங்கும் அதை பண்டம் மாற்ற முடியாது. செலவு தான் பண்ணியாக வேண்டும். அவர்கள் கூடிப் பேசி என்ன செய்வது என்று யோசித்த போது ஒருவர் சொன்னது அவர்களுக்கு சரியாக பட்டது.
''அடுத்த ஊர் ஏதோ ஒன்றிலே காஞ்சி மடத்திலே இருந்து சுவாமி வந்து  முகாம் போட்டிருக்கான்னு கேள்வி பட்டேன். விஷயம் விசாரித்து இது எல்லாத்தையும் அங்கே அனுப்பினா அவாளுக்கு அன்ன தானம் பண்ணுவதற்கு ரொம்ப உபயோகமாகும். நமக்கும் நல்லபடியாக ஒரு காரியம் பண்ண சந்தோஷம் மிஞ்சும் ''என்கிறார்".
''எனக்கு அந்த கிராமம் தெரியும்". பெரியவா முகாம் போட்டிருக்கான்னும் கேள்விப்பட்டேன். நானே  கூட போறேன். எனக்கும் பெரியவா தரிசனம் கிடைக்கும்'' என்று அவர்களில் ஒருவர் வண்டியில் ஏறிக்கொண்டார்.
 

அங்கே எல்லோருக்கும் இது மிக சிறந்த உபாயம் என்று தோன்றவே  உடனே விசாரித்து வண்டியை அங்கே அனுப்பியிருக்கிறார்கள்.
மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப் போய், பெரியவரிடம் ஓடிப்போய் எதிரே நின்றார்கள்.
விஷயம் சொன்னார்கள். '' நான் தான் சொன்னேனே. காமாட்க்ஷி பாத்துப்பானு. உங்களுக்கு என் வார்த்தையிலே சந்தேகமோ, இல்லை  காமாட்க்ஷி மேலே அத்தனை நம்பிக்கை இல்லையோன்னு தான் தோண்றது என்று சொல்லி விட்டு  சிரித்தார். "சரி போங்கோ வேலையை பாருங்கோ''
எந்த ஒரு விஷயத்திழும்  சிறிதும்  குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் ஆச்சர்யங்கள்  தானாகவே  நிகழ்கின்றன. பெரியவா சந்ம்பந்தப்பட்ட  எல்லாமே இப்படித்தான்.
''நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’  என்று பெரியவர்கள் அனுபவ பூர்வமாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.  மஹா  பெரியவா வார்த்தைகள் அருள்வாக்கு.

கருத்துகள் இல்லை: