செவ்வாய், 31 மே, 2022

குழந்தை சித்தர் பகுதி இரண்டு

[ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.]

குழந்தையானந்தர் சித்தர்-2
***** **** ****  **** ***  **** ***   **
(இறுதி பகுதி)

இந்த நிலையில் குழந்தையை எங்கே விடுவது? என்று அவர்கள் யோசித்தனர்.  அடுத்த நொடியில் கோயிலுக்குள்ளே இருந்து பலமான மணியோசை கேட்டது.  வாயில் கதவுகள் தானே திறந்து கொண்டன. மூவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.  கர்ப்பக் கிருகத்தின் அருகில் மீனாட்சியின் காலடியில் குழந்தையை விட்டாள் திரிபுரசுந்தரி.  ‘’தாயே! நாங்கள் வேண்டிக் கொண்டபடியே இந்தக் குழந்தையை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டோம்.  இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு’’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

அர்ச்சகர் வரும் வரையில் காத்திருந்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு வரும்படியாக காத்தவராயனிடம் சொல்லிவிட்டு, பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினர்.  

மாலை நேரத்தில் தினப்படி கோயில் பூஜைக்காக வந்த அர்ச்சகர், கோயில் கதவுகள் விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்துப் பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.   அம்மனின் காலடியில் குழந்தை இருப்பதையும்,  குழந்தையுடன் காத்தவராயன் இருப்பதையும் கண்டார். காத்தவராயன் நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினார்.  கோயிலின் கதவுகளைப் பூட்டிய சாவி தன்னிடம் இருக்கும் போது,  அவைகள் தாமாகத் திறந்து கொண்ட அதிசயம், மதுரை மீனாட்சி அம்மனின் அருளைத் தவிர வேறு எதனால் இருக்க முடியும்? என்று முடிவுக்கு வந்தார் அர்ச்சகர்.  அம்பிகையைத் தொழுதார், இது அம்மனின் குழந்தை என்று சொல்லிவிட்டு,  குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார்.   அன்று முதல் குழந்தையானந்தர் அந்தக் கோயிலிலேயே அம்மன் குழந்தையாக, அவளது சொந்தப் பிள்ளையாகவே வளர ஆரம்பித்தார்.  

ஒவ்வொரு நாள் மாலையிலும், அர்ச்சகர் தனது கோயில் வேலைகளை முடித்துக் கொண்டு கதவுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்புவார். குழந்தை அங்கேயே இருக்கும்.  இரவு நேரங்களில் மீனாட்சியம்மன் மனித உருவில் வந்து குழந்தையுடன் கொஞ்சுவாள்.  அவர்கள் இருவரும் பேசும் பேச்சொலியை அர்ச்சகர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்.

தெய்வத்தின் குழந்தையாக அவர் வளருகின்ற  காலத்தில், அவருக்கு உபநயனமும் செய்யப்பட்டது. ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் சூட்டப்பட்டது.  குழந்தை ராஜகோபாலனுக்கு மனிதர்களின் கர்ம விணைகளைப் போக்கும் மகா சக்தி வந்து குவிந்தது.  அவருக்கு பறவைகளைப் போல பறக்கின்ற சக்தியும் கிடைத்தது.  அஷ்டமா சித்துகளில் ஒன்றான லகிமா எனப்படும் சித்தின் துணையினால், அவர் தனது உடலை லேசாக்கிக் கொண்டு, எடையற்ற நிலையில் ஒரு பறவையைப் போலப் பறந்தார்.  அவரது முகத்தைப் பார்த்தாலே கர்ம வினைகள் மறையும். மனதில் குதூகலம் உண்டாகும்.  அமைதி ஏற்படும்.   சிலர் அந்தக் குழந்தை சித்தரின் முகத்தைக் காண்கிற போது, பேரானந்தப் பரவச நிலையை அடைந்துவிட்டனர்.

இறைவன் அவருக்கு நந்தி வித்தையை அருளிச் செய்தான்.  அவர் தன்னிடம் வந்து தங்களது குறைகளை சொல்லி அழுது குமுறும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை, காது கொடுத்து கருணையோடு கேட்பார்.  அவர்களது நெற்றியில் தன்னுடைய விரலை பதிப்பார்.  அடுத்த நொடியில் அவர்களுடைய பிரச்சனைகள் விலகி துயரங்கள் தீர்ந்துவிடும்.

மனஉளைச்சலாலும், உடல் நோய்களினாலும், வறுமையாலும் பீடிக்கப் பட்ட மனிதர்கள் அவரை அனுகி, தங்கள் துன்பங்களைப் போக்கிக் கொண்டனர். குழந்தையானந்த சித்தரின் ஸ்பரிசத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் நீங்கி குணமடைந்தனர்.  தோல்வி கண்டு துவண்டவர்கள் வெற்றி நடை போட்டனர்.

அவருடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து பரவ ஆரம்பித்தது. இதைக் கேள்விப்பட்ட மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள்,  என்ன காரணத்தினாலோ, அவளுக்கு குழந்தையானந்தரை பிடிக்கவில்லை.  அவரது புகழையும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கையும் அவள் வெறுத்தாள்.

கர்மவினையின் காரணமாக, அவள் குழந்தையானந்தருக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தாள்.  பலப்பல சூழ்ச்சிகள் செய்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.   அவளுடைய பொறாமைத்தீ காட்டுத் தீ போல பரவியதால்,  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவளாக, குழந்தையானந்தரின் பெற்றோருக்கு சொல்ல முடியாத துன்பங்களையும்,  வேதனைகளையும் ஏற்படுத்தினாள்.  இதன் உச்சகட்டமாக சித்தரின் தந்தையார் கொலை செய்யப்பட்டார்.

தன் கணவன் கொலையுண்டதைக் கண்ட மனைவி திரிபுர சுந்தரி,  அவருடன் உடன் கட்டை ஏறினாள்.  ஒருவழியாக ராணி மங்கம்மாவின் ஆட்சி முடிந்து, சொக்கநாத நாயக்கர் அரியணை ஏறினார்.  

அந்த சமயத்தில் தென்னகத்தில்(காசி) இருந்து, கணபதி பாபா என்கிற சித்தர் மகான் ஒருவர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார். அம்மனை தரிசித்த சித்தருக்கு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கண்ணில் பட்டான்.  அவனுடைய அழகும், தேஜஸும் அவரைப் பெரிதும் கவர்ந்தன.  ஒரு நிமிடம் கண்களை மூடி தியானித்தார்.  உண்மை பளிச்சென்று புரிந்தது.

‘ஒ! இங்கே இருப்பவன் என்னுடைய சீடன் ‘ என்று அம்பாள் மூலம் உணர்ந்து கொண்டார் பாபா.  சிறுவனை தன் அருகில் வரச் சொல்லி அழைத்தார்.

குழந்தையானந்தரும் அவர் அருகில் வந்தார்.  ‘ஐயா! நானும் உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.  வாங்க போகலாம்’ என்று அழைத்ததோடு,  பாபாவின் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

பாபா அவருக்கு பல ஆன்ம விசயங்களைப் போதித்தார்.  பலவிதமான ஆன்ம சக்திகளை வழங்கினார்.  குழந்தையானந்தரும்,  பாபாவும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு சேவை செய்தனர்.

வியாதியினால் வாடி வாழ்க்கையைத் தொலைத்த மக்களுக்கு, மருந்தாக இருந்து நோய் நீக்கினர்.  மனதில் ஏற்படும் குழப்பம், பயம், எண்ணற்ற குடும்பச் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றையும் தீர்த்து வைத்து, ஏழைகளின் குடும்பத்திலும், மனங்களிலும் மகிழ்ச்சி விதைகளைத் தூவி இறைப்பணி செய்து வந்தனர்.

தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல்,  அவர்கள் அங்கிருந்து விஜயநகரம் சென்றும் மக்கள் சேவை செய்தனர்.  பிறகு விதர்ப்ப நாடு சென்று, அங்கேயும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினர்.  அங்கிருந்து காசிக்குச் சென்றனர்.  காசியில் பல அற்புதங்களை நிகழ்த்திய குழந்தையானந்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.

காசியில் சமாதி நிலை அடைந்த மகா சித்தர் குழந்தையானந்தர், தமிழகத்தில் மீண்டும் அவதரித்து,  திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால்’ அது தான் உண்மை! சிலகாலம் திருவண்ணாமலையில் தங்கி சித்தாடல்களை நிகழ்த்தினார்.  அவரது கருணையினால் மக்கள் குறைகள் நீங்கினர். வளவாழ்வு பெற்றனர்.  நோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  இவ்வாறு மக்களுக்குத் தொண்டு செய்த அந்த அற்புதச் சித்தர் ஒரு நல்ல நாளில் ஜோதி வடிவத்தில் அண்ணாமலையாருடன் கலந்து விட்டார்.  இது இரண்டாவது சமாதி நிலை.

இந்த இரண்டாவது சமாதியிலும் அவர் முழுமையாக அடங்கிவிடவில்லை.  அவர் செய்ய வேண்டிய பணிகள் மீதமிருந்தன போலும்,  எனவே இரண்டாவது சமாதியில் இருந்தும் அவர் மீண்டார். உயிர்த்தெழுந்து காஞ்சிபுரம் சேர்ந்தார்.   

இரண்டு முறை சமாதியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சித்தர் என்று கேள்விப் பட்டதும், மக்கள் பெரும் ஆர்வத்தோடு அவரை தரிசிக்க வந்தனர்.  பிறவிப்பயனை பெற்றிட அவரது கருணையை யாசித்தனர்.  வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை தடையின்றி வழங்கிய வள்ளல் குழந்தையானந்த சித்தர், சில காலம் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து,  பின் அங்கிருந்து மதுரைக்கும், தென்காசிக்கும் பயணம் செய்தார்.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நன்மைகளை அளித்தார்.  மேன்மைகளை உருவாக்கினார்.  அவரை தரிசித்தவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அடைந்தனர். பல புதிய திருப்பங்களைப்  பெற்று வாழ்வில் உயர்ந்தனர்.  இந்த நிலையில் தென்காசியில் குழந்தை சித்தர் சமாதி அடைந்தார்.

பிறகு தென்காசி சமாதியில் இருந்து உயிர்த்தெழுந்து, மதுரையை அடுத்த சித்தாலங்குடிக்கு  வந்து பல சித்தாடல்களை நிகழ்த்தி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு, குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால், தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார்.

1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலகுண்டு சென்றார்.  அங்கு தனக்கு தன் சீடர்கள் மூலம் ஒரு கோயிலை நிர்மானித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். பின்னர்’ அங்கிருந்து வத்தலகுண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்தாலும், சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.



கருத்துகள் இல்லை: