செவ்வாய், 31 மே, 2022

குழந்தை சித்தர் பகுதி ஒன்று

குழந்தையானந்தர் சித்தர்.
--------------------------------------

மதுரையில் அன்னை மீனாட்சியின் தீவிர பக்தர்களாக வாழ்ந்த தம்பதியர் ராமசாமி ஐயரும், அவரது தர்மபத்தினி திரிபுரசுந்தரி அம்மாளும்.  இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.  அவர்கள் எல்லா விரதங்களும் அனுஷ்டித்தனர்.  கோயில் குளங்களுக்குச் சென்று வந்தனர்.  புண்ணிய தீர்த்தமாடினர். ஆனாலும் திரிபுர சுந்தரிக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர்களது பெற்றோரும், உற்றோரும் சொன்னதன் பேரில்,  அவர்கள் அன்னை மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டியதோடு, உருக்கமான ஒரு வேண்டுகோளையும் தெரிவித்தனர்.  ‘’அம்மா உனது அருளால் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டானால்,  அந்தக் குழந்தையை உன் கோயிலிலேயே விட்டு விடுகிறோம்’’ என்பதுதான்  அந்த விநோதமான வேண்டுதல்.

இப்படி இவர்கள் வேண்டிக் கொண்டு கோயிலில் இருந்து வீடு திரும்பிய போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்களது வீட்டில் அழகான இரண்டு ஆண் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு அழகான குழந்தைகளும் தம்பதியரைப் பார்த்ததும், ‘’இந்தப் பொம்மைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம்’’ என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அவர்கள் இருவரும் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதே விளங்கவில்லை.  மிக அழகான அந்த இரண்டு குழந்தைகள் யார்?  அவர்கள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்?,  சுற்றுப் பக்கத்து வீடுகளில் இதுவரையில் அந்தக் குழந்தைகளை தாங்கள் பார்த்தது இல்லையே?  என்று இது போன்ற ஏராளமான கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

திரிபுரசுந்தரி குழந்தைகள் கொடுத்த பொம்மைகளை திருப்பிப் பார்த்தார்,  அவருக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டது.  காரணம் அந்தப் பொம்மையின் அடிப்பாதங்களில் சங்கும் சக்கரமும் வரையப்பட்டு இருந்தது.  அதை அவர் சந்தோஷத்தோடு தனது கணவரிடம் காண்பித்தார்.

‘’ஆஹா!, அம்பாள் கண் திறந்து அனுக்கிரகம் செய்துவிட்டாள்.  நமக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கப் போகிறது.  அதில் ஒரு குழந்தையின் கால்களில் சங்கு, சக்கர ரேகைகள் இருக்கும்,  அதைத்தான் இந்தப் பொம்மை உணர்த்துகிறது.  உடனே இதை பூஜை அறையில் கொண்டு போய் வைத்துக் கொள்’’ என்றார்.

கணவரின் வார்த்தைகளினாலும், நடந்த அதிசயமான நிகழ்ச்சிகளினாலும் பிரமித்துப்போன திரிபுரசுந்தரி பரபரப்பாகிவிட்டார். உடனே லலிதா  சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை முனுமுனுத்தபடி அந்த மரப்பாச்சி பொம்மைகளை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து,  வீட்டில் இருந்த பொரியை நைவேத்தியம் செய்தாள்.

சற்று நேரத்தில், முன்பு வந்த குழந்தைகள் இரண்டு பேரும் தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு அவர்களை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள்.  அவர்கள் இரண்டு பேரும்,  ‘’அந்தப் பொம்மையைக் கொடுங்கள்,  எங்களுக்கு நேரமாகிறது. நாங்கள் போக வேண்டும்’’ என்று ஒரே தொனியில் பரபரப்போடு கேட்டனர்.

இது என்ன? இந்தக் குழந்தைகள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்து பொம்மைகளை கொடுத்துவிட்டு, இப்போது கேட்கிறார்களே?  ஓ அதுதான் குழந்தை குணம் என்பது என்று நினைத்துக் கொண்டே,  ‘’கொஞ்சம் இருங்கள்,  பூசை அறையிலே வெச்சிருக்கேன்,  கொண்டு வந்து தரேன்’’என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்த திரிபுரசுந்தரி திடுக்கிட்டுப் போனார். காரணம் சற்று நேரத்துக்கு முன்னால் அங்கே வைத்து பொரி நைவேத்தியம் செய்த போது இருந்த இரண்டு பொம்மைகளும் இப்போது காணவில்லை.  அவைகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.  குழந்தைகளிடம் வந்து பொம்மை காணவில்லை என்று எப்படி சொல்லுவது? அவர்கள் தான் திருடிவிட்டதாக எண்ண மாட்டார்களா? ஐயோ ஜகதாம்பிகே, இது என்ன சோதனை என்று மனதுக்குள் உருகியபடி கண்களை மூடி உட்கார்ந்தாள்.  மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டினாள்.

அடுத்த நொடியில் அவள் அருகே அந்த இரண்டு பொம்மைகளும் வந்தன.  மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளை கையில் எடுத்தாள்.  அந்தப் பொம்மைகளில் இருந்து தெய்வீக மணம் வீசியது.  இதுநாள் வரையில் அதுபோன்ற வாசனையை அவள் அனுபவித்ததே இல்லை.  அது இந்த உலகத்தின் வாசனையே அல்ல என்பது திரிபுரசுந்தரிக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நடக்கும் ஆச்சரியத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  இருந்த அவள்,  கையில் பொம்மைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.  அங்கே இதுவரையில் குழந்தைகளின் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்து.  இப்போது சட்டென்று அமைதி ஏற்பட்டு விட்டது.  கூடத்தில் நின்ற குழந்தைகளைக் காணவில்லை.

திரிபுரசுந்தரி தன் கணவனை அழைத்து,  குழந்தைகள் எங்கே? என்று கேட்டாள்.  அவர் அங்கு வருகின்ற நேரத்தில் அதிசயப்படும் விதமாக அவள் கையில் இருந்த பொம்மைகளும் திடீரென்று காற்றில் மறைந்துவிட்டது  ஆனால்’ அந்தத் தெய்வீக மணம் மட்டும் பொம்மைகள் இருந்தது உண்மைதான்,  நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் உண்மைதான் என்று சொல்வதைப் போல சாட்சியமாக கூடத்தில் சுற்றி வந்தது.

மூச்சு வாங்க நடந்தவைகளை தன் கணவனிடம் சொல்லி முடித்தாள் திரிபுரசுந்தரி.

அதைக் கேட்ட ராமசாமி ஐயர், ‘’நம் வீட்டுக்கு வந்திருந்த குழந்தைகள் வேறு யாருமல்ல,  சாட்சாத் மீனாட்சி அம்மனும்,  சோமசுந்தரப் பெருமானும் தான்.  அவர்கள் உன் வயிற்றில் உருவாகப் போகும் ஒரு சக்தி மிக்க பேரொளியைப் பற்றிச் சொல்வதற்காக மானுட வடிவத்தில் குழந்தைகளாக வந்திருக்கிறார்கள்.  பயம் வேண்டாம்,  சந்தோஷமாக இரு’’ என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்று அம்மனின் சிலைக்கு முன்பாக அமர்ந்து மனமுருகி வேண்ட ஆரம்பித்தார்.    

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்த பிறகு, இறைவியின் கட்டளைப்படியே கி.பி 1607 ஆம் வருடம், புஷ்ய மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திரிபுரசுந்தரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அவர் தான் குழந்தையானந்த சித்தர்.  

அடுத்த நொடியில் அந்த இடத்தில் உலகையே மயக்கும் விதமாக மிக அற்புதமான வாசனை வீசுவதை மருத்துவப் பெண்களும்,  உறவினர்களும்,  ராமசாமி ஐயரும் உணர்ந்தனர். தெய்வக் குழந்தையான குழந்தையானந்தா சுயம்புவாக அவதாரம் செய்தார் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.  தெய்வீக வாசனையின் காரணமாக தன்னிலை மறந்த அனைவரும் சுயநினைவு அடைந்த போது, அந்தக் குழந்தைக்குப் பக்கத்தில் மற்றொரு குழந்தையும் இருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தனர்.

இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை இரண்டு குழந்தைகள் வந்து கொடுத்தனர் அல்லவா?  அதனால் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அறிந்த தம்பதியர் பெருமகிழ்ச்சி கொண்டனர்.  இரண்டு குழந்தைகளில் குழந்தையானந்த சித்தரின் பாதங்களில் மட்டும் சங்கு சக்கர ரேகைகள் இருப்பதைப் பெற்றோரும், மற்றோரும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து மகிழ்ந்தனர்.

குழந்தையானந்தருக்கு ராமன் என்று பெயர் வைத்தனர்.  மற்றொரு குழந்தைக்கு லட்சுமணன் என்று பெயரிட்டு அழைத்தனர்.  தெய்வீகக் குழந்தையான சித்தரின் சிரிப்பு காண்பவர் அத்தனை பேரையும் மயக்கியது.  அவருடைய சிரிப்பில் மகிழாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.  மற்றவர்களுக்கே இத்தனை மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருக்குமானால், பெற்றவர்களின் ஆனந்தத்தை வார்த்தைகளினால் விளக்க முடியுமா?

அவர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் அளவேயில்லை.  ஆனாலும், அவர்களுடைய மனத்தில் துயரத்தின் ரேகைகள் மிக அழுத்தமாக விழுந்தன.  காரணம் குழந்தை பிறந்த பத்தாவது நாள் மதுரை மீனாட்சியம்மனிடம் அவனை விட்டு விடுவதாக வேண்டிக் கொண்டிருந்தனர் அல்லவா?  அந்த வேண்டுதல் நினைவுக்கு வந்தவுடன் அவர்களுடைய மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.  மனத்தை சோகமயமான மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

குழந்தை பிறக்கும்  வரையில் பிறந்தால் போதும்,  அதைப் பார்த்துவிட்டு கோயிலுக்கே நேர்ந்து விட்டு விடலாம் என்று தோன்றியது.  ஆனால்’ இப்போது குழந்தை பிறந்ததும், அதை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துடித்தாள் திரிபுரசுந்தரி.  அவளது நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமையில் இருந்தது.  வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது,  குழந்தையைப் பிரியவும் கூடாது,  இது எப்படி சாத்தியம்?  பெற்ற தாயின் துயரம் யாராலும் போக்க முடியாததாக இருந்தது.  இந்த நிலையில் ராமசாமி ஐயர் ஒரு முடிவுக்கு வந்தார்.    

இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.  தாங்கள் வேண்டிக் கொண்டபடி குழந்தையானந்த சித்தரை கோயிலில் விட்டு விடலாம்.  ஒரு குழந்தை தங்களிடம் வளரட்டும் என்று தீர்மானம் செய்தார்.  இதன்படிச் செய்தால் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும்,  ஒரு குழந்தையும் பெற்றோரிடம் வளரும் என்று அவர் எண்ணமிட்டார்.  இதைச் செயல்படுத்த அவர் காத்தவராயன் என்பவரோடு மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது’ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கோயில் கதவு சாத்தப்பட்டு விட்டது.  பூஜைகள் முடிந்து அர்ச்சகர் கோயிலை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.

தொடரும்,.....


கருத்துகள் இல்லை: