அருள்மிகு மரகதாம்பிகை உடனாய இருதயாலீசுவரர் திருக்கோவில்
திருநின்றவூர்
அடியவரின் அகத்தில் தோன்றிய ஆண்டவர் ஆலயம் கொண்டு அருளும் அற்புதத் திருத்தலம்."பூசலார் நாயனார்" திருஅவதார திருத்தலம். "சுந்தரமூர்த்தி நாயனார்"நினைத்து பாடிய வைப்புத் தலம்.சுமார் 1300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளை உள்ளடக்கிய புண்ணிய திருத்தலம் இதுவாகும்.
ஆண்டவரின் திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களில் ஒருவரான "பூசலார் நாயனார்"திருஅவதாரம் செய்த திருத்தலம் திருநின்றவூர் ஆகும்.திருத்தொண்டர் புராணம் என்கிற பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார், பூசலார் நாயனார் வரலாற்றை மிக அழகாக பதிவு செய்துள்ளார்.கி.பி.7ம் நூற்றாண்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் உதித்த பூசலார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று ஆவல் எழுந்தது. குடும்ப சூழ்நிலை வறுமையில் இருந்த காரணத்தால் அவரால் இயலவில்லை. உதவி செய்யவும் யாரும் முன் வரவில்லை.எனவே ஆலயத்தை மனதிலேயே கட்ட முடிவெடுத்தார்.
மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருள் பேரு இன்றி
என்செய்வேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ் உறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத்தேடி சிந்தையால்
திரட்டிக் கொண்டார்.
-சேக்கிழார்
ஒரு இலுப்பை மரத்தடியில் நல்ல சுபமுகூர்த்த நாளில் தியான நிலையில் அமர்ந்து தனது வேலையைத் தொடங்கி இயல்பாக கோவிலை எவ்வாறு அமைக்க வேண்டுமோ!அதே போல் மனத்தால் நினைத்து தான் கோயிலைக் கட்டி முடித்தார்.பிறகு, குடமுழுக்கு நன்நாளையும் கணித்து விட்டார்.இச்சம்பவத்தை சேக்கிழார் பெரியபுராணத்தில் மிக அழகாக பாடியுள்ளார்.
இதே நேரத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன்“காடவர்கோன்” காஞ்சியில் கயிலாசநாதர் ஆலயத்தை மிகுந்த பொருட்செலவில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டிமுடித்தான்.
குடமுழுக்கு நாளை வேத விற்பன்னர்களைக் கொண்டு தீர்மானித்தான்.பூசலார் கட்டிய ஆலயமானது பக்தி மயத்தோடு அமைக்கப்பட்டது.ஆனால் பல்லவன் கட்டிய ஆலயமானது நிறைந்த பொருட்களோடும் ஆணவத்தோடும் கட்டப்பட்டது.ஆனால் இரு ஆலயங்களுக்கும் ஒரே நாளில் குடமுழுக்கு விழா நடைபெற இருந்தது.
தங்க ஏற்பாடுகள் நடைபெற்ற தருணத்தில் அரசனின் கனவில் இறைவன் தோன்றி"அன்பனே! நீ குடமுழுக்கு விழா நடத்தப் போகும் கோயிலுக்கு நாளை நான் வருவதாக இல்லை.திருநின்றவூரில் வாழும் நம் அன்பன் ஒருவன் நெடிது நாட்களாக நினைத்துக் கட்டி முடித்த கோயிலில் நாளை விடியலில் ககுடமுழுக்கு விழா. நான் அங்கு எழுந்தருளப் போகிறோம். ஆதலால் நீ வைத்திருக்கும் குடமுழுக்கு விழாவை பின்னொருநாள் வைத்துக் கொள்க"என்று கூறினார். இச்சம்பவத்தை சேக்கிழார் பெரியபுராணத்தில் மிக அழகாக பாடியுள்ளார்.
நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடு நாள் நினைத்து செய்த
நன்று நீடுஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்
-சேக்கிழார்
உடனே பல்லவ மன்னன் தன் பரிவாரங்களுடன் திருநின்றவூர் வந்தடைந்தான்.பணக்கோயில் எழுப்பிய வேந்தனும் மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரையொருவர் கண்டனர்.பூசலார் கட்டிய கோயிலின் குடமுழுக்கு விழாவை அரசன் காண விழைந்தபோது பூசலார் என் இதயத்தைப் பாருங்கள் என்று கூறி தியானித்தார்.
அரசனும் அரசியும் உட்பட அங்குள்ள அனைவரும் பூசலாரின் இதயத்தில் இறைவனைக் கண்டனர். அனைவரும் பணிந்து பூசலாரின் பூரண ஆசியைப் பெற்றனர்.பிறகு மனத்தால் எழுப்பிய ஆலயத்தில் குடமுழுக்கு விழாவை நடத்தி சில காலம் மனத்தால் அர்ச்சனை செய்து பிறகு பூசலார் முக்தி அடைந்தார் என்பது வரலாறு.பூசலார் வாழ்ந்த காலத்திலேயே இக்கோவில் காட்டப்பட்டதாக சேக்கிழார் பதிவு செய்யவில்லை.
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தின் ஓடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார்.
கல்வெட்டுச் செய்தியை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொது பிற்காலத்தில் அதாவது பூசலார் முக்தியடைந்து சில ஆண்டுகளில் பல்லவ மன்னனால் இக்கோவில் கட்டப்பட்டது தெரிகிறது.இத்தலத்தில் அவதரித்த பூசலார் இருதயத்தில் உதித்த இறைவன் என்பதால் "இருதயாலீசுவரர்"என்ற திருநாமம் பெற்றார். இத்தல இறைவிக்கு "மரகதாம்பிகை"என்பது திருநாமம்.
"ஆடம்பரத்தோடு வழிபடுபவர்களை ஆண்டவர் ஏற்பதில்லை. அகம் நிறைந்த உண்மையான பக்தியை மட்டுமே இறைவன் ஏற்கிறார்.மேலும் இறைவனை வழிபடுவதற்கு எந்த வரைமுறையும் கிடையாது.எப்படியும் வழிபடலாம்"என்பதற்கு இவ்வரலாறு தக்க சான்றாகும்.
நீண்ட செஞ்சடையனார்க்கு
நினைப்பினால் கோயிலாக்கி
பூண்ட அன்பு இடையறாத
பூசலார் பொற்றாள் போற்றி! போற்றி!
வைப்புத்தலம்:"தம்பிரான் தோழர்""வன்தொண்டர்" என பல பெயர்களால் போற்றப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் நினைத்து பாடிய வைப்புத்தலம் ஆகும்.63 நாயன்மார்களை உள்ளடக்கி பாடிய "திருத்தொண்டர் தொகை"யில் இத்தலத்தை பாடியுள்ளார்.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையான் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்! (சுந்தரர்)
கோவில் அமைப்பு:மூலவர் அருள்மிகு இருதயாலீசுவரர் கிழக்கு நோக்கியும் அம்மன் அருள்மிகு மரகதாம்பிகை தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்."கசபிருட்டம்" என்ற அமைப்பில் தூங்கானை மாடவடிவில் சுவாமியின் விமானம் அமைந்துள்ளது.சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர்,வள்ளி,தெய்வானையுடன் சுப்பிரமணியர்,நந்திதேவர்,சண்டிகேசுவரர்,நடராசப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை:பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் நினைத்து கோயில் கட்டியதால் இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.இதயநோய் குணமாக இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிசேகம் செய்தும் பட்டுவேட்டி பட்டுபுடவை ஆகியவை அணிவித்தும் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பக்தி மிக்க இதயநோய் மருத்துவர்கள் கூட தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
தலசிறப்பு:மூலவர் சன்னதியின் மேற்புறம் இருதய வடிவத்தில் அமைத்துள்ளது பல்லவர் கால சிற்பக் கலைக்கு தகுந்த சான்றாகும்.மூலவர் சன்னதியிலையே பூசலார் நாயனாரின் திருவுருவம் அமைத்திருப்பது தனி சிறப்பாகும்.
தல விருட்சம் இலுப்பை மரம்
அருள்மிகு மரகதாம்பிகை
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு இருதயாலீசுவரர்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
போக்குவரத்து வசதி:சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் அணைத்து இரயில்களும் திருநின்றவூரில் நின்று செல்லும். திருநின்றவூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் திருத்தலம் அமைந்துள்ளது.இரயில் நிலையத்திலிருந்து ஏராளமாக ஆட்டோ வசதி உள்ளது.
இருப்பிடம்:திருநின்றவூர்
தரிசன நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை
முகவரி:அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில்,திருநின்றவூர்,திருவள்ளூர்:602 024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக