வியாழன், 31 டிசம்பர், 2020

அருள் மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்



 
மூலவர்:சுவேதாரண்யேஸ்வரர்
அம்மன்:பிரமவித்யாம்பிகை
தல விருட்சம்:வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர்:திருவெண்காடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்
தேவாரப்பதிகம்

வாரப்பதிகம் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.   
       
திருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.   
       
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 11 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91-4364-256 424  
      
பொது தகவல்:ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது.

கரையில் சூரியதீர்த்தலிங்க சன்னதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.   
       
பிரார்த்தனை:இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.  
      
நேர்த்திக்கடன்:நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.  
      
தலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நடராஜர் :  இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.

அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

பிள்ளையிடுக்கி அம்மன்: திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.

புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்தில் மூர்த்திகள் (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.

பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.   
       
ஸ்தல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.  தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

கருத்துகள் இல்லை: