ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20
தஞ்சம்மாளின் செயல்கள்
மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும் அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார். பெரிய நம்பிகளும் இளையாழ்வானின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
காஞ்சிபுரம் வந்த பெரிய நம்பிகளையும், அவரது பத்தினியையும் தம் இல்லத்தின் ஒரு பகுதியில் தங்குமாறு இளையாழ்வான் சொல்ல அவரும் சம்மதித்தார். இளையாழ்வான் வீட்டில் அவர்கள் தங்கினார்கள். இளையாழ்வான் பெரிய நம்பிகளிடம் வீட்டில் இருந்தவாறே காலட்சேபம் பயின்று வந்தார். நம்பிகள் வியாச சூத்ர அர்த்தத்தை கற்றுக் கொடுத்தார்.
ஒரு சமயம் வீட்டிற்கு ஸ்ரீ வைஷ்ணவர் வர, அவருக்கு உணவிடும் படி தஞ்சம்மாளிடம் சொன்னார் இளையாழ்வான். ஆனால், தஞ்சம்மாளோ உணவு ஏதும் இல்லை என்று கூறிவிட்டாள். அப்போது இளையாழ்வான் உள்ளே சென்று பார்த்த பொழுது ஒரு பாத்திரம் நிறைய பழைய சாதம் இருப்பதைக் கண்டார். "வீட்டில் உணவை வைத்துக்கொண்டே, ஸ்ரீ வைஷ்ணவருக்கு உணவில்லை என்று சொல்வது அபச்சாரம் இல்லையா?" என்று தஞ்சம்மாளிடம் தன் சினத்தை வெளிப்படுத்தினார். வீட்டிற்கு வந்த பாகவதற்கு உணவில்லை என்பது பெரிய அபச்சாரம்.
ஆனால், எல்லை மீறிய சினத்தை இளையாழ்வான் கட்டுப்படுத்திக் கொண்டு தஞ்சம்மாளை திட்டுவதோடு விட்டுவிட்டார். இது தஞ்சம்மாள் செய்த இரண்டாவது பிழை. முதல் பிழை திருக்கச்சி நம்பிகள் உணவருந்திய போது இலையைக் கையால் எடுக்காமல் கோலால் எடுத்து, குப்பையில் போட்டு வீட்டை சுத்தம் செய்து, தானும் சுத்தப்படுத்திக் கொண்டது.
இப்போது நடக்கும் சம்பவத்தின் மூலம் தஞ்சம்மாள் பெரிய பிழையைச் செய்கிறாள். அதுதான் அவள் இளையாழ்வானைப் பிரிய காரணமாக அமைந்தது. இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாள் அப்பேற்பட்ட மனம் படைத்தவளா என்று எண்ண வேண்டாம். ஆளவந்தார் காஞ்சிபுரம் வந்தபொழுது ஸ்ரீ வைஷ்வண சம்பிரதாயத்திற்கு இளையாழ்வானைத்தான் ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் அல்லவா? அந்த வேண்டுதல் தான் இப்போது தஞ்சம்மாளுக்கும், இளையாழ்வானுக்கும் உண்டான பிரிவு மூலம் நிறைவேறப் போகிறது.
காஞ்சி பேரருளாளன் எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடியவர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ சாம்ராஜ்யம் உருவாவதற்கு இந்த காஞ்சி பேரருளாளனின் அருள் தான் காரணம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறப்பு பெற்ற ஆச்சாரியர்கள், 12 ஆழ்வார்களில் மூன்று ஆழ்வார்கள் அவதாரம் பண்ணியது என்ற எல்லா சிறப்பும் காஞ்சிபுரத்திற்கு உரியதே. எல்லோருடைய பிரார்த்தனை எதுவானாலும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியவர் காஞ்சி பேரருளாளன். அவர் தான் இப்பொழுது ஆளவந்தாரின் பிரார்த்தனையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
சரி, தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன?
!! சாதீயத்திற்காக சம்சாரபந்தத்தை துறந்த ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் !!
சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். அவரின் தாம்பத்ய வாழ்வில் மூன்று முறை ராமானுஜரின் மனைவி இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்துகிறார்.
திருக்கச்சி நம்பிகளுக்கு வீட்டின் நடையிலேயே உணவு அளிக்கிறார் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள். அதன் பின், வைணவர் ஒருவருக்கு ஆகாரம் அளிக்குமாறு கூற வீட்டில் ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிவிடுகிறார்.
ராமானுஜரின் குரு பத்தினியாருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து நீர் அள்ளும் போது தகாத சொற்கள் கூறி அதன்காரணமாக அவர்கள் வீட்டை விட்டே வெளியேறுவதற்குக் காரணமாயிருக்கிறார். இந்த மூன்று நிகழ்வுகள் அவரை துறவறத்துக்கு தூண்டுவதாக அமைந்தன.
ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளோ மிகுந்த ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவள்.
ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளோடு பேசுவதையே விரும்பாதவள்; அவரையே குருவாக ஏற்றுக் கொண்டது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.
இந்த நிலையில் ராமானுஜர் தஞ்சம்மாளிடம், ‘திருக்கச்சி நம்பிகளை அமுதுண்ண அழைத்துள்ளேன். விரைவில் தளிகை (சமையல்) செய்’ என்றார்.
தஞ்சம்மாள் வேண்டா வெறுப்பாக தளிகை செய்ய, ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை அழைத்து வர புறப்பட்டுப்போனார். நம்பிகளோ, வேறு வேலை இருந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ராமானுஜரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
தஞ்சம்மாள் இரண்டு திண்ணைகளுக்கிடையில் இருக்கும் நடைபாதையில் அவரை அமரச் செய்து உணவிட்டாள். திருக்கச்சி நம்பிகள் சென்றபின் அவர் சாப்பிட்ட இலையைக் கோலால் எடுத்தெறிந்து, வீடு முழுவதும் சாணம் தெளித்து சுத்தம் செய்து, தானும் குளித்துவிட்டு, புதியதாக சமையல் செய்து ராமானுஜரின் வருகையைப் பார்த்துக் காத்திருந்தாள்.
விவரம் அறிந்த ராமானுஜர் கோபம் கொண்டார். தன் பக்தி மார்க்கத்திற்கும் மனித நேயத்திற்கும் வைணவ வளர்ச்சிக்கும் தஞ்சம்மாள் உறுதுணையாக இருக்கமாட்டாள்; உபத்திரமாகத்தான் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டார்.
இன்னொரு சமயம், ராமானுஜருக்கு எண்ணெய்த் தேய்க்க ஒரு வைணவர் வருவார். ஒருநாள் அந்த வைணவர் பசிக்கிறது என்றுகூற, ராமானுஜர் தஞ்சம்மாளை அன்னமிடச் சொல்கிறார்.
அவளோ தளிகை இன்னும் செய்யவில்லை என்கிறாள். அப்படியா? சரி! பழைய சாதம் இருக்குமே! அதைப் போடு என்கிறார்.
தஞ்சம்மாள் அதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். அப்போது உள்ளே சென்று பார்த்த ராமானுஜர், உணவு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டார்.
மற்றொரு சமயம் பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட ராமானுஜர் அவரையும் அவரது மனைவி விஜயாம்பாளையும் தம் இல்லத்திற்கு அழைத்து வந்தார்.
அவர்களை வீட்டில் இருக்கச் செய்து மேல்மாடியில் பெரிய நம்பிகளிடம் உபதேசம் பெற்று வந்தார். ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார்.
அப்போது தஞ்சம்மாளுக்கும் விஜயம்பாளுக்கும் கிணற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த போது மனஸ்தாபம் ஏற்பட்டது.
விஜயம்பாள் எடுத்த குடத்து நீர்த்துளிகள் தஞ்சம்மாளின் குடத்து நீரில் சிந்திவிட்டன. மிகுந்த ஆசாரம் பார்க்கும் தஞ்சம்மாள், விஜயாம்பாள் பிராமணளாக இருப்பினும் தன் தாழ்ந்தவள்; செல்வத்திலும் தனக்குச் சமமாக இல்லை என்று கருதி, ‘ஏம்மா! குரு பத்தினி என்ற நினைப்போ?’ என்று கேட்டுவிட்டாள்.
பெரிய நம்பிகளும் விஜயம்பாளும் ராமானுஜர் வருவதற்கு முன் கிளம்பிவிட்டனர்.
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து வந்த ராமானுஜர் செய்தி அறிந்து மிகவும் விசனப்பட்டார். சாதி வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என்ற தம் கொள்கைகளுக்கு தன் மனைவியே எதிரி என்று புரிந்து கொண்ட ராமானுஜர்,
‘சற்றே ஏறுமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்’
என்பதற்கேற்ப துறவறம் மேற்கொண்டார். ஓடும் உதிரத்தில் உருண்டு விழும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ? என்ற உண்மை தஞ்சம்மாளை போன்று பலருக்குப் புரியாமல் இன்றளவும் இருப்பது புரியாத புதிரேயாகும்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 5 அக்டோபர், 2020
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக