ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 16
இளையாழ்வானை திருவரங்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்
பெரிய நம்பியிடம் இளையாழ்வான் ஆளவந்தார் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
"இந்தத் தெய்வத் திருமனிதரைக் காணும் நாள் எந்நாளோ?" என்றார் இளையாழ்வான். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரைக் காண விருப்பம் இருந்தால் உடனே புறப்பட்டு வரும்படியும் கூறினார் பெரிய நம்பி.
இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பெரிய நம்பிகளுடன் திருவரங்கத்திற்குச் சென்றார்.
திருவரங்கத்து எல்லையை அடைந்தவுடன், கொள்ளிடம் ஆற்றின் அருகே கூட்டம் கூட்டமாக சீடர்கள், மக்கள் திரண்டிருந்தனர். அங்கு பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சந்தித்துப் பேசுவதை அறிந்த இவர்கள் "என்ன என்று விசாரிக்கலாம்" என்று, பெரிய நம்பி விசாரித்தார். அவர்கள் கூறிய செய்தி பேரிடியாக இருந்தது.
ஆளவந்தார் இறைவனடி அடைந்து விட்டார். "விதி நம்மை வஞ்சித்து விட்டது" என்று புலம்பினார் இளையாழ்வான். ஆளவந்தாருக்குச் செய்யும் சம்பிரதாய சடங்குகளைச் சீடர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
🌺🌹 மடங்கிய மூன்று விரல்கள்
காஞ்சியிலிருந்து வந்த இளையாழ்வானுக்கு ஆளவந்தாரின் திருமேனி தரிசனம் மட்டுமே கிடைத்தது. ஆளவந்தாரின் வலக்கையில் மூன்று விரல்கள் முடங்கியிருந்ததை இளையாழ்வான் கண்டார். அப்போது அருகில் உள்ள சீடர்கள்களிடம் விசாரித்தார். ஒருவருக்கும் அதுபற்றிய சரியான காரணம் கூற இயலவில்லை.
"ஆளவந்தாருக்கு ஏதேனும் மனக்குறை உண்டோ?" என்று கேட்டார் இளையாழ்வான். அப்போது ஒரு சிஷ்யன் கூறினார்:
1. வியாச சூத்திரத்திற்கு வசிஷ்டாத்வைத வியாக்யானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அது முடியாமல் போய்விட்டது.
2. பராசருடைய திருநாமமும், திருவாய்மொழியை அருளிச் செய்த நம்மாழ்வாருடைய திருநாமமும் விளங்கும்படியாக, அப்பெயர்களை இரண்டு பிள்ளைகளுக்குச் சாத்த வேண்டும்.
3. அவர்களுடைய கல்வி அறிவுக்கான நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்க விரும்பினார்.
"இம்மூன்றும் நடைபெறாமலே போய்விட்டது" என்றார் அந்த சீடன்.
இதைக்கேட்ட இளையாழ்வான், ஆளவந்தாரை வணங்கினார். அவரது மனதில் ஓர் உறுதி ஏற்பட்டது. அந்த மன உறுதியுடன், "இறைவன் திருவருள் எனக்குக் கிடைக்குமானால் இம்மூன்றையும் நான் நிறைவேற்றுவேன்!" என்றார். உடனே, ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் நிமிர்ந்தன. இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
அருகிலிருந்த அனைவருக்கும் இளையாழ்வான் இதைச் செய்து முடிக்கக் கூடியவர் என்று தான் தோன்றியது. ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ இயக்கத்தைத் தலைமை ஏற்கும் தகுதி உடையவர் இளையாழ்வானே என்று அங்குள்ள பெரியோர்கள் கருதினார்கள்.
ஆளவந்தாரின் சாமக் கிரியைகள் நடைபெற்றது. இளையாழ்வான் மிகுந்த வருத்தம் கொண்டிருந்தார். 'தனக்கு குருவும் சரியாக அமையவில்லை. இனியாவது இவரை குருவாக பற்றிக் கொள்ளலாம் என்று பார்த்தால், இவரின் திருமேனி தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைத்தது' என்று நொந்து கொண்டார்.
'எனக்குக் குருவாக ஆளவந்தாரைக் கொடுக்காத இந்த திருவரங்கத்துப் பெருமாளை இப்போது தரிசிப்பதில்லை. அவர் நினைத்திருந்தால் குருவிடம் சிஷ்யனாக இருக்கும் பாக்கியத்தைக் கொடுத்திருப்பார் அல்லவா? எனக்குக் குரு தரிசனம் கொடுக்காத, திருவரங்கத்து பெரிய பெருமாளைத் தரிசிக்கப் போவதில்லை' என்று சொல்லிக்கொண்டு, காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார்.
நாம் சாதாரணமாகவே திருவரங்கத்திற்குச் செல்ல நேரிட்டால், நிச்சயம் அரங்கனைத் தரிசித்துவிட்டு வருவோம். இல்லையெனில் கோபுரத்தைப் பார்த்தாவது தரிசித்துவிட்டு வருவோம்.
ஆனால், வைஷ்ணவர்களுக்கு குரு இல்லையேல் பெருமாளே இல்லை. குருவின் தரிசனம் கிடைத்தால்தான் அரங்கனைத் தரிசிப்பார்கள். குரு அவ்வளவு உயர்ந்தவர்கள். இப்போது, இளையாழ்வானும் குரு தரிசனம் கிடைக்காததால் காஞ்சிபுரத்தில் இருந்து, திருவரங்கத்திற்கு இவ்வளவு தூரம் நடந்து வந்தும், அரங்கநாதனை தரிசிக்கவில்லை என்றால், குருவின் தரிசனம் எவ்வளவு அவசியமானது?!
கே.13:− இளையாழ்வார் என்னும் இராமானுஜரின் உடன் பிறந்தோர் எத்தனைப் பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?.
விடை:− இராமானுஜருக்கு இரண்டு இளைய சகோதரிகள் இருந்தார்கள்.
அவர்களது பெயர் பூமிநாச்சியார், கமலாம்பாள் என்பதாகும்.
கே.14:− இராமானுஜரின் சிற்றன்னையாகிய பெரிய பிராட்டியின் முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டியது யார்? என்ன பெயர் சூட்டினார்?
விடை:− பெரியபிராட்டியின் முதல் குழந்தைக்கு, "கோவிந்தன்" என்ற திருநாமத்தை, தாய்மாமன் ஆகிய பெரிய திருமலை நம்பிகளே சூட்டியருளினார்.
கே.15:− குழந்தைக்கு அந்தப் பெயரிடக் காரணம் என்ன?
விடை:− சத் ஆத்ம குணங்களை உடைய அக்குழந்தை, சர்வ வித்தைகளிலும் தேர்ந்தவனாய், வைதிக பட்சத்தில் நிலை நிற்பான் என்கிற தீர்க்க த்ருஷ்டியால், இப்பெயர் இடப்பட்டது.
கே.16:− குழந்தை "கோவிந்தன்" யாருடைய அம்சம்? அவர் எப்போது அவதரித்தார்?
விடை:− குழந்தை "கோவிந்தன்" கருடனின் அம்சமாகும்.
அவர் இராமானுஜர் அவதரித்து எட்டு,ஆண்டுகளுக்குப் பின்னர், கலியுகம் 4127, குரோதன ஆண்டு (1025ம் ஆண்டு), தைத்திங்கள், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.
கே.17:− இராமானுஜரின் சிற்றன்னையின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன? அவரது திருநட்சத்திரம் என்ன?
விடை:− இரண்டாவது குழந்தையின் பெயர் சிறிய கோவிந்தன் என்னும் சிறிய கோவிந்தப் பெருமாள் ஆகும்.
அவர் மாசிமாதம் அச்வினி நட்சத்திரத்தில் அவதரித்தார்
கே.18:− இளையாழ்வார் இராமானுஜர் இளமையில் யாரிடம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றார்? எந்த வயது வரை?
விடை:− இராமானுஜர், தமது தந்தை கேசவ சோமாயாஜியிடம், தமது பதினைந்தாவது வயது வரையிலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.
கே.19:− இராமானுஜரின் கைங்கர்யங்களால் ப்ரீதி அடைந்த ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், இராமானுஜருக்கு இட்ட திருநாமம் என்ன?
விடை:− "ஶ்ரீபூதபுரீசர்"
கே.20:− இராமானுஜரின் தங்கைகள் யாருக்கு வாழ்க்கைப் பட்டனர்?
விடை:− முதல் தங்கை பூமிநாச்சியார், புருஷமங்கலம் என்று கொண்டாடப்படுகின்ற மதுரமங்கலம் வாதூல கோத்ரம் அனந்த தீட்சிதருக்கும்,
இரண்டாவது தங்கை கமலாம்பாள், திருக்கச்சி நடாதூர் அக்ரஹாரம் ஶ்ரீவத்ஸ கோத்ரம், குருகைக் காவலப்பரின் திருக்குமாரர் மஹாதயாதீசருக்கும் வாழ்க்கைப்பட்டனர்.
கே.21:− இளையாழ்வார் இராமானுஜருக்கு எந்த வயதில் திருமணமானது?
விடை:− இராமானுஜருக்கு, அவரது 16வது வயதில், தஞ்சாம்பாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.
கே.22:− இராமானுஜரின் திருத்தகப்பனார் எப்போது திருநாடு அலங்கரித்தார்? (பரமபதித்தார்?)
விடை:− இராமானுஜருக்குத் திருமணமான மறுமாதமே, அவரது திருத்தகப்பனார் பரமபதித்தார்.
கே.23:− திருத்தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றிய இரு நம்பிகள் யார்?
விடை:− பெரிய திருமலை நம்பிகளும், திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றினர்.
கே.24:− தந்தை மறைந்த சோகத்திலிருந்து விடுபட, இராமானுஜரும், அவரது தாயாரும் செய்தது என்ன?
விடை:− ஶ்ரீபெரும்புதூரை விட்டு, திருக்கச்சி என்னும் காஞ்சீபுரம் வந்து குடியேறினார்கள்.
கே.25:− இராமானுஜர் யாரிடம் தமது வேதாந்தக் கல்வியைத் தொடர்ந்தார்?
விடை:− "வேத விருட்சம்" "வேத சாகரம்" என்றெல்லாம் தொண்டை மண்டலத்திலும், அண்டை மண்டலங்களிலும் புகழ் பெற்றவரான, காஞ்சிக்கு மேற்கே சுமார்
9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புட்குழியின் "யாதவப்ரகாசர்" என்னும் அத்வைத வேதாந்தியிடம், தமது கல்வியை இராமானுஜர் தொடர்ந்தார்.
கே.26:− இராமானுஜர் கூடவே தங்கியிருந்து, உடன்சென்று, யாதவப்ரகாசரிடம், வேதாந்தக் கல்வியைப் பயின்றவர் யார்?.
விடை:− இராமானுஜரின் சிற்றன்னையின் முதல் புதல்வரான கோவிந்தன்.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
இளையாழ்வார் அத்வைத சந்நியாசியான யாதவப்பிரகாசரிடம் பாடம் கற்றபோது உலகில் பேதம் கிடையாது. பரமாத்மா மட்டுமே உண்மை. மற்றவை பொய் என்று அத்வைத சித்தாந்தத்தை போதித்தார். இந்த அத்வைத விளக்கத்தில் இளையாழ்வார் திருப்தி அடையவில்லை. அந்த விளக்கங்களில் எழும் கேள்விகளுக்குப் பதில்களையே தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலம் தந்தருளினார்.
சித்தாகிய ஜீவாத்மா ஈச்வரனாகிய பரமாத்மாவில் இருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க இவ்விரண்டாவது வார்த்தையை அருளினார் பேரருளாளன். அதோடு ஜடப்பொருட்களான அசித் மற்றும் சித்தாகிய ஜீவாத்மாவுடன் கூடிய (விசிஷ்ட) பரமாத்மாவே முழுமையான உண்மை. அதாவது விசிஷ்டாத்வைதமே பூர்ணமான மதம் என்பதை தேவப்பெருமாளே ஸ்தாபித்து கொடுத்தார்.
இதை நம் பூர்வாச்சாரியர்கள் பல வழிகளில் விளக்கியுள்ளார்கள். ஒரு எடுத்துகாட்டை பார்ப்போம். அத்வைதத்தில் கயிறு பாம்பாகத் தோன்றுவதாகச் சொல்லப்படும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
_கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல ப்ரம்ஹம் மட்டுமே உள்ளது, அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம்._
அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? ப்ரம்ஹத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக் கொள்கை.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 5 அக்டோபர், 2020
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 16
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக