வியாழன், 24 செப்டம்பர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11
 


திருக்கச்சிநம்பிகள் & இளையாழ்வான்

இளையாழ்வான் தாய் சொன்னது போல் திருக்கச்சி நம்பிகளைத் தரிசிக்கச் சென்றார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பேரருளானனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தார். பின்னர், திருக்கச்சி நம்பிகளிடம் கங்கை யாத்திரை சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அனைத்தையும் சொல்லி தனக்கு தாங்கள் தான் குருவாக இருந்து "காலட்சேபம்" பண்ணியருள வேண்டும் என்று வேண்டினார்.

திருக்கச்சி நம்பிகளோ தன்னுடைய குலத்தினைக் காரணம் காட்டி, "நான் அந்தணர் குலத்தில் பிறக்காத காரணத்தால், நான் உனக்கு காலட்சேபம் பண்ணுவது வர்ணாசிரமத்திற்கு எதிரானது" என்று மறுத்துவிட்டார். காஞ்சி பேரருளானனுக்கு சாலக்கிணற்றிலிருந்து அபிசேகத்திற்கு நீர் எடுத்து வரும் பணியை செய்து வருமாறு கூறினார். இளையாழ்வானும் அவ்வாறே செய்தார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகள் ஆலவட்டம் வீசும் பணி செய்து முடித்தபின், ஆலயத்திலேயே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளின் கால்களை அமுக்கி, குருவிற்கு செய்யும் பணியாக எண்ணி செய்தார்.

உறங்கி எழுந்த திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வானிடம், "நீர் என்ன செய்தாலும் நான் உன்னை சிஷ்யானாக ஏற்கப்போவது இல்லை" என்றார். இளையாழ்வானுக்கு எப்போதாவது திருக்கச்சி நம்பிகள் தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வார் என்று, நம்பிக்கையுடன் பேரருளானுக்கு நீர் எடுத்துவரும் பணியைச் செய்து வந்தார்.

 மீண்டும் யாதவப்பிரகாசரிடம் காலட்சேபம்

சில தினங்கள் கழித்து, வடநாட்டிற்கு கங்கை யாத்திரை பயணம் மேற்கொண்ட யாதவப் பிரகாசர் தன் சிஷ்யர்களுடன் திருப்புட்குழி வந்தார். இளையாழ்வான் காஞ்சிபுரத்தில் சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்துவரும் கைங்கரியம் செய்வதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். 'இளையாழ்வானை கரடி, புலி, விஷ ஜந்துகள் கொன்று விட்டதாகத் தானே நினைத்தோம், இவன் எப்படி இங்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், தன் சிஷ்யர்களிடம் சொல்லி இளையாழ்வானை காலட்சேபத்திற்கு அழைத்து வருமாறு சொல்ல, இளையாழ்வானும் காலட்சேபம் நடக்கும் திருப்புட்குழிக்கு வந்து சேர்ந்தார். இன்றும் திருப்புட்குழி விஜயாசனப் பெருமாள் திவ்யதேசத்திற்குச் சென்றால், இளையாழ்வான் யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் பண்ண இடத்தினை காணலாம்.

இளையாழ்வான் காலட்சேபம் கேட்க வந்ததும் வழக்கம்போல் காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. இதனிடையே இளையாழ்வானின் அன்னை காந்திமதி இறைவனடி சேர்ந்தார். இளையாழ்வானுக்கு மிகுந்த துயரம். தாய் இறந்த பின்பும் காலட்சேபம் சென்று கொண்டிருந்தார்.

திருக்கச்சி நம்பிகளின் குரு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் காஞ்சிக்கு வருவதை நாளைய பதிவில் அறிந்திடலாம்..

எம்பெருமானார் வாழித்திருநாமங்கள்

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே!
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே!
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே!
சுத்த மகிழ்மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே!
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே!
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே!

எண்திசை யெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே!
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்கு உரைத்தான் வாழியே!
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே!
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே!
தண்தமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே!
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே!
தெண்திரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே!
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே!.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே!.

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத் துறந்தான் வாழியே!
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே!
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே!

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)
சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே.
[
 *உபதேச ரத்தினமாலை*

27,★இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்*
என்றையினும் இன்றி இதனுக்கு ஏற்றம் என்தான்?*
என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்*
 நாற்திசையும் கொண்டாடும் நாள்.

28, ★ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்*
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்!*
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும்*
சித்திரையில் செய்ய திருவாதிரை.

29, ★எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா*
வந்துதித்த நாள் என்னும் வாசியினால்*
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே!*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்.

இன்னும் அனுபவிப்போம்...


உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

கருத்துகள் இல்லை: