ஞாயிறு, 3 நவம்பர், 2019

4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்

சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒரு முறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டி கொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
___________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை: