செவ்வாய், 25 ஜூன், 2019

பகவதாஷ்டமி 25.06.2019 ஆனி தேய்பிறை பிறை வாழ்க்கையில் பிரச்சனைகளை தீர்க்கும் அஷ்டமி விரதம்.


அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

* மார்கழி தேய்பிறை அஷ்டமி - சங்கராஷ்டமி

* தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி

* மாசி தேய்பிறை அஷ்டமி - மகேஸ்வராஷ்டமி

* பங்குனி தேய்பிறை அஷ்டமி - திரியம் பகாஷ்டமி

* சித்திரை தேய்பிறை அஷ்டமி - ஸ்நாதனாஷ்டமி

* வைகாசி தேய்பிறை அஷ்டமி - சதாசிவாஷ்டமி

* ஆனி தேய்பிறை அஷ்டமி -  பகவதாஷ்டமி

* ஆடி தேய்பிறை அஷ்டமி - நீலகண்டாஷ்டமி

* ஆவணி தேய்பிறை அஷ்டமி - ஸ்தானுஷ்டாமி

* புரட்டாசி தேய்பிறை அஷ்டமி - ஜம்புகாஷ்டமி

* ஐப்பசி தேய்பிறை  அஷ்டமி -  ஈசான சிவாஷ்டமி

* கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - ருத்ராஷ்டமி

அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.

சிவபெருமானின்  அவதாரங்களில் ஸ்ரீபைரவர் அவதாரமும் ஒன்று. சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீபைரவர் அவதாரம் 64 வகைகள் உண்டு .

பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயிற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முழந்தாளில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். 

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு  ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது. மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை  மேற்கொள்வோம்.

கருத்துகள் இல்லை: