செவ்வாய், 29 அக்டோபர், 2019

நாலாயிர திவ்விய பிரபந்தம்

நூல் சிறப்பு!

நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார்,  2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. பெரியாழ்வார், 9. ஆண்டாள், 10. தொண்டரடிப்பொடியாழ்வார், 11. திருப்பாணாழ்வார், 12. திருமங்கையாழ்வார் என்ற 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்த 4000 பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். இதில் திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

திவ்விய எனும் சொல் திருமாலையும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும் குறிக்கும். இந்த நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும், அவை

1. திருப்பல்லாண்டு, 2. பெரியாழ்வார் திருமொழி, 3. திருப்பாவை, 4. நாச்சியார் திருமொழி, 5. பெருமாள் திருமொழி, 6. திருச்சந்தவிருத்தம், 7. திருமாலை, 8. திருப்பள்ளி எழுச்சி, 9. அமலனாதிபிரான், 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு, 11. பெரிய திருமொழி, 12. திருக்குறுந்தாண்டகம், 13. திருநெடுந்தாண்டகம், 14. முதல் திருவந்தாதி, 15. இரண்டாம் திருவந்தாதி, 16. மூன்றாம் திருவந்தாதி, 17. நான்முகன் திருவந்தாதி, 18. திருவிருத்தம், 19. திருவாசிரியம், 20. பெரிய திருவந்தாதி, 21. திருஎழுகூற்றிருக்கை, 22. சிறிய திருமடல், 23. பெரிய திருமடல், 24. இராமானுச நூற்றந்தாதி.

இதில்
முதலாயிரம்  -947 பாடல்கள்
பெரிய திருமொழி -1134 பாடல்கள்
திருவாய்மொழி  -1102 பாடல்கள்
இயற்பா  -817 பாடல்கள்

என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

முதலாயிரம்

பெரியாழ்வார் (திருப்பல்லாண்டு 12, திருமொழி 461),
ஆண்டாள் (திருப்பாவை 30, நாச்சியார் திருமொழி 143),
குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி 105),
திருமழிசையாழ்வார் (திருச்சந்தவிருத்தம் 120),
தொண்டரடிப்பொடியாழ்வார் (திருமாலை 45, திருப்பள்ளி எழுச்சி 10),
திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரான் 10),
மதுரகவியாழ்வார் (கண்ணிநுண்சிறுத்தாம்பு 11)

இரண்டாவதாயிரம்

திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20, திருநெடுந்தாண்டகம் 30)

மூன்றாவதாயிரம்

பொய்கை ஆழ்வார் (முதல் திருவந்தாதி 100),
பூதத்தாழ்வார் (இரண்டாம் திருவந்தாதி 100),
பேயாழ்வார் (மூன்றாம் திருவந்தாதி 100),
திருமழிசை ஆழ்வார் ( நான்முகன் திருவந்தாதி 96),
நம்மாழ்வார் (திருவிருத்தம் 100, திருவாசிரியம் 7, பெரிய திருவந்தாதி 87),
திருமங்கை ஆழ்வார் (திருஎழுகூற்றிருக்கை 1, சிறிய திருமடல் 40, பெரிய திருமடல் 78,
திருவரங்கத்தமுதனார் (இராமானுச நூற்றந்தாதி 108)

நான்காவதாயிரம்

நம்மாழ்வார் (திருவாய்மொழி 1102) ஆகிய பாடல்களைக் கொண்டது.
-------------------------

கருத்துகள் இல்லை: