திங்கள், 9 செப்டம்பர், 2019

சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் வைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.


_______________________________________________________________________________________

கருத்துகள் இல்லை: