திங்கள், 9 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 31ॐ

கல்யாண மண்டபம் யாகசாலையை அடுத்து உள்ள அர்த்த ஜாம சுந்தரரைத் தரிசனம் செய்துகொண்டு பக்கத்தில் உள்ள சங்குடன் கூடிய "பாலகணபதி"யைத் தரிசனம் செய்யலாம். இதே பிரகாரத்தில் சனீஸ்வரருக்குத் தனி சன்னதி கிழக்கே பார்த்து உள்ளது. தவிரவும் நவகிரகங்களுடனும் சனீஸ்வரர் இடம் பெற்று இருக்கிறார். இதை அடுத்து உள்ள தேவ சபையானது சித்சபைக்கு மேற்கே தென் திசையை நோக்கி உள்ளது. உற்சவ மூர்த்திகள் இங்கே வைக்கப்பட்டுள்ளதோடு தீட்சிதர்களின் தினசரி கூடும் இடமாகவும் உள்ளது. இங்கே கூடித் தான் கோவில் நடைமுறைகள் வழிபாடுகள் பற்றிய முடிவுகள் கோவில் நிர்வாகம் பற்றிய முடிவுகள் முதலியன தீட்சிதர்களால் எடுக்கப்படும். சிதம்பரம் கோவிலில் 5 பிரகாரங்கள் உள்ளன. இதில் 2வது பிரகாரத்தில் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த 2வது பிரகாரத்தைப் "பிராணமயகோசம்" எனவும் சொல்லுகிறார்கள். நம் உடலில் பிராணன் எவ்வளவு முக்கியமோ அவ்வலவு முக்கியத்துவம் கோபுரங்களுக்கும் உண்டு. கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பது ஆன்றோர் வாக்கு! கோவில் நடை கூடக் குறிப்பிட்ட காலம் வரை தான் திறந்து இருக்கும். இறையைத் தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆனால் இந்தக் கோபுரங்கள் நம்மால் இறை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் கோவில் மூடிய பின்பு கூட இவற்றின் தரிசனத்தால் நமக்கு இறை தரிசனம் கிடைத்த மாதிரி மனம் நிம்மதி அடைகிறது. இந்தக் கோபுரங்கள் அவ்வப் பொழுது வந்த அரசர்களால் பராமரிப்பும் திருப்பணியும் செய்யப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான மன்னர்கள் எனச் சரித்திரம் குறிப்பிடுபவை பல்லவர்களின் நந்திவர்மன், ஹிரண்யவர்மன் சோழ அரசர்களில் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த முதலாம் பராந்தகன், பாண்டியர்களில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

தெற்குக் கோபுரம் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசனால் திருப்பணி செய்யப்பட்டதாய்ச் சொல்லப்படுகிறது. இதை ஒட்டி ஒரு சுப்ரமணியர் கோவில் வடக்கே பார்த்து உள்ளது. தவிரவும் சதாசிவ மூர்த்தி என்ற சிவனின் ஒரு ரூபத்திற்கு எனத் தனி சன்னதியும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே உள்ளது. இதை அடுத்து நாம் காண்பது 8 அடிக்கு உயரமான மிகப் பெரிய "முக்குறுணி விநாயகர்". இவருக்குப் பெரிய படி அளவு 6 படிக்கு அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கே தவிர மதுரையில் மீனாட்சி சன்னதியில் இருந்து ஸ்வாமி சன்னதிக்குப் போகும் வழியில் தெற்கு கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு "முக்குறுணி விநாயகர்" அமர்ந்திருப்பார். அவருக்கும் இதே மாதிரி முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை நைவேத்தியம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்யப்படும். முன் பதிவில் போட்டிருக்கும் லிங்கத் திருமேனி சிதம்பரம் மூலநாதரின் லிங்க ஸ்வரூபம் இல்லை. அது நான் புகுந்த ஊரான பரவாக்கரைக்கு அருகில் உள்ள "கருவிலி" எனப்படும் சற்குணேஸ்வரபுரத்தின் "சற்குணேஸ்வரர்" ஆவார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: