திங்கள், 23 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 41 ॐ
  {தில்லை வாழ் அந்தணர்கள்}

மேலே உள்ள ஊர்த்துவத் தாண்டவம் திருவாலங்காட்டில் காணக் கிடைப்பது. இந்தத் திருவாலங்காடு சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில் சென்னைக்கு மேற்கே 37 அல்லது 40 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத்தலம் தான் ரத்னசபை ஆகும். இன்னொரு திருவாலங்காடு ஆடுதுறைக்கு அருகே உள்ளது. அந்தத் தலம் ரத்னசபை அல்ல. சிலர் சந்தேகங்கள் கேட்கும் போது  ஆடுதுறை அருகே உள்ள தலம் தான் ரத்னசபை என நினைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கும் சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்காகவே மீண்டும் நினைவு படுத்தி உள்ளேன். இங்கே மட்டும் இடக்காலைத் தூக்கி ஆடியபடி நடராஜர் இருப்பார். மற்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தக் கோலத்தைத் தான் நாட்டிய சாஸ்திரத்தில் லலாட திலகம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இறைவன் தன் காதுக் குழையை மாட்டிக் கொள்ளக் காலைத் தூக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் சரி அல்ல. வலக்காலைத் தூக்கி அதன் உதவியால் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் அபிநயம் அது. இப்போது இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கைலையில் இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அந்தணர்களாக மாறி அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும் இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். அந்தச் சிவ கணங்களே தில்லை வாழ் அந்தணர்கள் என்று கருதப்படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்
திரு நீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கூறுகின்றார். திருஞானசம்மந்தரும் தில்லைவாழ் அந்தணர்களைத் தாம் சிவகணங்களாகவே கண்டதாய்க் கூறுகிறார். நடராஜரையும், சிவகாமசுந்தரி அம்மையையும் தங்களில் ஒருவராகவே காணும் அவர்கள் இன்று வரை தில்லைச் சிதம்பரம் கோயிலில் நடராஜருக்குப் பூஜை செய்யும் உரிமையையும் கோவிலின் நிர்வாக உரிமையையும் தாங்களே வைத்துக் கொண்டு பணி செய்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களையும் அவர்களின் பணி எத்தகையது என்பதையும் பார்க்கலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: