புதன், 18 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி :37 ॐ
ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே: 2

காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும் எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப்பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கையும் இடப்பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" என சொல்லப்படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப்படுகிறது.

திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப்படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்து சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம்.

சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப்படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப்படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப்படும் கூத்தாகச் சொல்லப்படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை, போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப்படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப்படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய் சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும் இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.

கெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும் ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன் தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி முனிவர்களின் கர்வம் அடக்கப்படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் என சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டுகளிக்க ஆசைப்பட்டாள் இறைவி அவளின் ஆசையை நிறை வேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்து சொல்லப்படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப்படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்து கைகள் ஒன்றில் பாம்பு காணப்படுகிறது.

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே "கெளரி தாண்டவம் எனச் சொல்லப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை "ஆதி சபை" என அழைக்கிறார்கள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: