புதன், 19 செப்டம்பர், 2018

அரவானின் தியாகம்!

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.

கருத்துகள் இல்லை: