புதன், 19 செப்டம்பர், 2018

தெய்வமே தந்தையாகி விட்டார் என்றால் உங்களால நம்ப முடிகிறதா?

அது தான் சத்தியம் பிறந்தவுடன் எனக்கு பெற்றோர் எனக்கு வச்ச பெயர் ராமசேஷன். நானும் என் சகோதரி சீதா லட்சுமியும் இரட்டையர்களாக பிறந்தோம். பிறந்தவுடனே என் உடம்பு ரொம்ப சீரியஸாகி விட்டதாம். அவள் பிழைத்து விடுவாள். ஆண் குழந்தைக்கு தான் ஆபத்து என்று டாக்டர்கள் கை விரித்து விட்டார்களாம். எங்கம்மா உடனே என்னை திருச்சி தென்னூரிலுள்ள பிள்ளையார் கோயிலில் போட்டு விட்டு இந்த பிள்ளையை காப்பாத்தறது உன் பொறுப்பு. அவனை உனக்கு தத்துக் கொடுத்து விட்டேன். என்று அந்த வினாயகரிடம் மனப்பூர்வமாக வேண்டியிருக்கிறார். அதனால் தான் என் பெயர் வினாயகராம் ஆனது. மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். எனக்கு அப்பாவே குருவானது என் பாக்கியம். என் தந்தை ஹரிஹர சர்மா தான். இந்த கடவாத்யக் கலையை எனக்கு கற்றுத் தந்தார்.

அதே போல் தெய்வமே இன்னொரு அப்பாவாக வந்து என்னை காப்பாற்றியதை எல்லாம் நினைவத்து பார்த்தால் எனக்க என்ன பேசுவதென்றே தெரியவில்லை. (கண் கலங்குகிறார்).

எங்களுக்கு குலதெய்வம் வேதாரண்யத்திலுள்ள தேத்தாக்குடி அய்யனார் என்றாலும் காஞ்சி மஹா பெரியவரை தான் குல தெய்வமா நினைக்கிறேன். எங்களுக்கும் காஞ்சி சங்கர மடத்திற்கும் உள்ள சம்பந்தம் இன்று நேற்று வந்ததல்ல. வழி வழியாக வந்ததெய்வீக பந்தம் இது. எங்க பெரியப்பா, ஒரு ஆசுகவி. அதாவது நினைத்த நேரத்தில் கவிதை எழுதக் கூடிய மஹா ஞானஸ்தர். ஒரு முறை மஹா பெரியவர் இவரை கூப்பிட்டு கவி குஞ்சரம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார். உடனே பெரியவரை நினைத்து ஒரு கவிதை பாட (கடகடவென்று சொல்கிறார்) அவர் கண்ணுக்கு பெரியவர் சிவனாக தெரிந்ததாக சொல்லி கேள்விப்பட்டு பிரமித்திருக்கிறேன். என் அண்ணா அதாவது பெரியப்பாவின் மகன் பிரதோஷம் வெங்கட்ராமனும், தன் அப்பா வழியில் சங்கரமடத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மஹா பெரியவர் மீது அவருக்கு அபார பக்தி. காஞ்சிபுரத்திலுள்ள தனது வீட்டையே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா இல்லம் என்று மாற்றி விட்டார். பங்காரு அம்மன் தோட்டத்திலிருக்கும் அந்த இல்லத்தை எங்கள் குல தெய்வ கோயிலாக்கி விட்டோம். அண்ணா இறந்த பின்பும் எந்தவித குறையும் இல்லாமல் அங்கே பூஜை, புனஸ்காரங்கள் எல்லாம் அமோகமாக நடக்கிறது. நான் எனது மூன்று மகன்கள், ஒரே மகள் எல்லோரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கே போய்விடுவோம்.

மானாமதுரை கடம் என்றால் ரொம்ப பிரசித்தம். அந்த ஊரில் ஏராளமாக கடப்பானை செய்து விற்பார்கள். அப்போது மஹா பெரியவர் இருந்த நேரம். மானாமதுரையில் வாங்கிய புது கடத்தை எடுத்து கொண்டு காஞ்சிபுரம் போய் அவரிடம் கொடுத்தேன். இப்படி வித்வான்கள் சமயத்தில் கொடுக்கும் வாத்யக் கருவிகளை தொட்டு பார்த்து விட்டு தந்துவிடுவார் மஹா பெரியவர். நான் கடத்தை கொடுத்தவுடன் விரல்களால் சில வினாடிகள் வாசித்து பார்த்தார் பாருங்கள். நான் நெகிழ்நது போய் விட்டேன். அதை இனி நான் வாசிக்க கூடாது என்று நினைத்து இங்கே வைத்து விட்டேன். (மாடியிலுள்ள ஹாலில் இருக்கும் மண்டபத்தில் வைக்கப்படிருப்பதை காட்டுகிறார்). அது பக்கத்திலிருக்கும் இன்னொரு தங்க மூலாம் பூசப்பட்ட கடப்பானை ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் பிறந்த நாளுக்காக நான் காஞ்சிபுரம் போன போது தந்தது. நான் மடத்தில் வாசித்ததெல்லாம் கணக்கே கிடையாது. எத்தனையோ முறைகள். ஒவ்வொரு முறையும் அங்கே வாசிக்கின்ற போது நான் வெறொரு தெய்வீக உலகிற்கு போய்விடுவேன்.

நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையில் நடந்தது எல்லாமே அதிசயங்கள். ரொம்ப சாதாரணமான வினாயகராமை இவ்வளவு தூரம் ஏற்றி வச்சது மஹா பெரியவரின் அனுக்கிரஷம். அவர்களை திரும்ப திரும்ப நினைக்கிறது தான் கைமாறு. அவர்களை நாம் நினைக்க வைப்பதற்கே அந்த மஹான்களின் அனுக்கிரஷம் வேண்டும். பக்தி என்றால் நாம நமக்கு ஏற்றபடி எல்லாம் நடக்கும் என்று எண்ணுவதற்கு அல்ல. நமக்கு கிடைச்சதெல்லாம் பக்தி தான். ஏன் இது கிடைச்சுது. ஏன் கிடைக்கலை போன்ற எல்லாவற்றுக்குமே காரணத்தை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு வேண்டும்.

ஒரே ஒரு உதாரணம். நான் முதல் முதலில் திருவையாறில் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வாசிக்க ஆசைப்பட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கலை. அப்புறம் பல முறை விரும்பியும் நடக்க வில்லை. வருத்தப்பட்டேன். அந்த பக்குவம் நமக்கு வரலையே சில வருடங்கள் கழித்து அந்த வாய்ப்பு எப்படி அமையறது பாருங்கள். 1964ம் வருஷம் நான் ஒரு கச்சேரியில் செம்மங்குடிக்கு வாசிக்கிற போது யாரும் எதிர்பாராத விதமா எம்.எஸ்.சுப்புலட்சுமி வந்து முன்வரிசையில் அமர்கிறார். என் வாசிப்பை பார்த்து விட்டு கொஞ்சம் நாளிலேயே எம்.எஸ்.ஸிடம் அழைப்பு. அவர் ஐ.நா. சபையில் பாட அமெரிக்க போன போது நானும் போனேன். முதன் முதலில் அப்போது தான் விமானத்தில் ஏறுகிறேன். ஐ.நா.வில் எவ்வளவு பெரிய வரவேற்பு. எவ்வளவு பெரிய பெருமை. அப்புறம் எத்தனையோ கச்சேரிகள் எம்.எஸ்.ஸூடன். சொல்லப்போனால் அவர் கடைசி மூச்சு வரை வாசிக்கிருக்கேன். திருவையாறில் தட்டிப்போனது இதற்கு தான் என்று அப்புறம் தான் புரியறது. பகவான் கொடுக்க இந்த உயர்ந்த கலையை அவருக்கே அர்ப்பணம் பண்ணுகிறேன்.

கருத்துகள் இல்லை: