சனி, 3 மே, 2014

பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான்!

மெட்ராஸை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது மூன்றாவதாக கருவுற்றாள். எட்டாவது மாசம். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை. ரெண்டு பேரும் பெரியவாளுடைய தர்சனத்துக்கு போனார்கள். அப்போ பெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தார். கூட அவளுடைய மாமாவும் போனார்.
“பெரியவா……இவ என் மருமாள். மொத ரெண்டும் பொண் கொழந்தேள்……இந்தத் தடவையாவது பிள்ளைக் கொழந்தை பொறக்க அனுக்ரகம் பண்ணணும்”

“ஏன்? ரெண்டு பொண்ணோட மூணாவது பொண்ணு பொறந்தா………ஜாஸ்தின்னா சொல்றே?” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டார். பின் தொடர்ந்தார்…….” இது எத்தனாவது மாசம்?”

“எட்டு நடக்கறது”

“ஏழு மாசம் கழிச்சு எங்கிட்ட வந்து பிள்ளை பொறக்கணும்…ன்னா…நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு” பாவம். இவரால் எதுவுமே முடியாதாம்! என்ன ஒரு நடிப்பு!
மருமாளின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்தது. பெரியவா அவளை பார்த்துக் கொண்டே, மாமாவிடம் “அவ ஏண்டா அழறா?” என்று கேட்டுக் கொண்டே எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் ஒன்றை எடுத்து தன் வலது தொடையில் தேய்த்துக் கொண்டே இருந்தார். பிறகு அப்பழத்தை அவளிடம் குடுத்து, ” இந்தா…….இதை சாப்டு! போயி பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிட்டு வா…….போக முடியுமொல்லியோ?”

பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிவிட்டு வந்தார்கள். மடத்தில் நான்கு நாட்கள் தங்கிவிட்டு போகச்சொல்லி உத்தரவானது. நான்காம் நாள் கிளம்பும்போது அவளிடம் “இப்டி வா! ஒனக்கு புள்ளைக் கொழந்தை பொறந்தா…….சந்திரமௌலி ன்னு பேர் வெக்கறையா?”
“பெரியவா என்ன சொல்றேளோ……அப்டியே நடக்கறோம் பெரியவா” நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்கள். அழகான பிள்ளைக் குழந்தை பிறந்தது. ஏழுமாசம் கழிச்சு குழந்தையை பெரியவாளிடம் அழைத்து வந்தனர். அப்போ பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார்.

“சந்த்ரமௌளிதானே?……..” ஞாபகமாக கேட்டார்.

“பெரியவா சொன்னபடி சந்திரமௌலி ன்னுதான் வெச்சிருக்கோம்…..ஆனா, கொழந்தையோட தலைல முன் நெத்திலேர்ந்து பின் கழுத்து வரைக்கும் நீளமா ஒரு பள்ளம் இருக்கு” என்று சொன்னாள்.

“கொழந்தைய நல்ல வெளிச்சத்ல கீழ துணிய விரிச்சு போடு! தலைல பள்ளம் இருக்கா….பாக்கலாம்” என்று சொன்னபடி வாழைபழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து கீழே கிடந்த குழந்தையின் முன்னால் வைத்தார்.

“இந்த பழம் எல்லாம் நோக்கு வேணுமா?…..ஒன்னால இதெல்லாத்தையும் சாப்ட முடியுமா?” விளையாட்டு தாத்தாவாக குழந்தையிடம் கேட்டார். அதுபாட்டுக்கு கையை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.அப்புறம் அம்மாவிடம் “இதெல்லாத்தையும் இவனுக்கு குடுக்கலாமா?” என்றார்.

“கொழந்தை பால்தான் சாப்டுவான்….”அம்மாக்காரி சொன்னாள்.

“எல்லாத்தையும் நன்னா மாவாட்டம் பெசைஞ்சு ஜலம் ஊத்தி கரைச்சு கஞ்சியாட்டம் பண்ணிக் குடு” என்று சொல்லி எல்லாப் பழங்களையும் அம்மாவிடம் குடுத்தார்.

“உத்தரவு பெரியவா…….ஆனா, இந்த தலைல பள்ளம்….” இழுத்தாள் அம்மாக்காரி.

“இவ…..எங்கிட்ட பிள்ளைக் கொழந்தை வேணும்…ன்னு எந்த ஊர்ல இருக்கறச்சே கேட்டா?” கணவரிடம் கேட்டார்.

“பண்டரீபுரத்ல”

“அங்க….பாண்டுரங்கனை தர்சனம் பண்ணினாளோ?”

“பண்ணினோம் பெரியவா”

“வெறும் தர்சனம் இல்லே…அஞ்சு ரூவா குடுத்தா, ஸ்வாமியோட தலைல இருக்கற தலைப்பாகையை எடுத்துட்டு காட்டுவா………அந்த பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான் பள்ளமா இருக்கும்…..வடக்கே, பக்தாள்ளாம் ஸ்வாமியை கையால தொட்டு கும்படற பழக்கம் உண்டு. அதே மாதிரி பாண்டுரங்கன் தலைல எல்லாரும் கையை வெச்சு வெச்சு, ஸ்வாமிக்கு தலைல பள்ளமே விழுந்துடுத்து! இவ, பிள்ளை வேணும்…ன்னு பாண்டுரங்கன்கிட்ட கேட்டாளோல்லியோ?…..அதான், கொழந்தையோட தலைலையும் பள்ளம் இருக்கு….செரியாப் போய்டும்”

தெய்வத்தின் அனுக்ரகத்தால் தெய்வத்திடம் பிள்ளைவரம் வேண்டி அனுப்பப்பட்டு, அத்தெய்வத்தின் சாயலாகவே பிறக்க அந்த குழந்தை என்ன பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்! அதை கருவில் சுமந்த தாய் எத்தனை பாக்யசாலி!

பெரியவா சொன்னபடி அந்த பழங்களை கஞ்சி மாதிரி பண்ணி, நாலு நாள் குடுத்ததும் ஊர் திரும்ப உத்தரவானது. ரயிலில் குழந்தையோடு கிளம்பி வரும்போது, குழந்தைக்கு உடை மாற்றும் போது, அதிசயமாக தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்துவிட்டிருந்தது!

தொகுப்பு:Mr.ராமசாமி (நன்றி)
 

கருத்துகள் இல்லை: