வியாழன், 30 ஜனவரி, 2014

நன்மையில் முடிந்த முனிவரின் சாபம்!

சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார். அவற்றின் பின்னால் ஓடினார். அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன. பிறகு முனிவர் அதை தேடி பிடித்து, மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன்? என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது. பிறகு சிறிது யோசித்து விட்டு, இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார். அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர் அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின. சுதீட்சண முனிவரால் சபிக்கப்பட்ட அந்தக் குரங்குகள்தான் ராமாயணத்தில் சுக்கிரீவனின் படைத்தளபதிகளாக வரும் நலன், நிலன் எனும் வானரப்படை வீரர்கள். இந்த விஷயம் பிரம்மஞானியான ஆஞ்சநேயருக்குத் தெரியாமலா இருக்கும்? பிற்காலத்தில் இதை ஆஞ்சநேயர் சொல்ல, அதன்படியே சீதையை மீட்க இலங்கைக்குப் போவதற்காகக் கடலில் சேது பாலம் அமைக்கப்பட்டபோது ராமபிரான், மற்றவர்கள் எடுத்துக்கொடுக்கும் அனைத்துக் கற்களையும் நலனும் நிலனும் மட்டுமே கடலில் வைக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். அதனால் பெரிய, பெரிய பாறைகளும் தண்ணீரில் மூழ்காமல் மிதந்து எளிதில் பாலம் கட்டப்பட்டது. இவ்வகையில் சுதீட்சண முனிவரின் சாபம் ராம கைங்கர்யத்திற்கு நன்மையாகவே முடிந்தது.

கருத்துகள் இல்லை: