செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஸ்ரீகுருவாயூரப்பனின் மகிமை

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். 

நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.

தம் முன் தோன்றிய ஸ்ரீ குருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” என்றார் குருவாயூரப்பன்.

ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?

‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”

‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”

‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”

‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”

‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.

‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் உண்மையான பக்தி ஒன்றைத்தான்!பக்தி செய்வோம்...

பவுர்ணமி கிரிவலம் தோன்றியது எப்படி?

பவுர்ணமி கிரிவலம் தோன்றியது எப்படி?

பக்தர்களை தன்னை நோக்கி ஈர்த்து, அவர்களுக்கு ஞானமும் முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது.

திருவண்ணாமலையில் வருடத்தின் அனைத்து நாட்களும் கிரிவலம் சென்று வழிபடலாம் என்றாலும், பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வணங்குவதையே பெரும்பாலான பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடும் வழக்கம் எப்படி ஏற்பட்டடு, முதன் முதலில் கிரிவலம் சென்றது யார், எதற்காக கிரிவலம் சென்றார் என்ற புராண கதையை திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

○ *திருவண்ணாமலை* *கிரிவலம் :*

திருவண்ணாமலை என்றதுமே நினைவிற்கு வருவது கிரிவல வழிபாடு தான். எத்தனையோ கோவில்களில் மலையை வலம் வந்து வழிபடும் முறை இருந்தாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் மட்டுமே மகத்தான பலன்களும், முக்தியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இங்கு மட்டுமே சிவனே மலையாக அமர்ந்து காட்சி தருவதால், மலையை வலம் வந்து வணங்குவது, சிவனை வலம் வந்து வணங்குவதற்கு இணையானதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் எப்படி உருவானது என்பதற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

○ *மலையாக அமர்ந்த* *சிவன் :*

ஜோதி வடிவமாக தோன்றி விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் காட்சி அளித்த பின் மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார் என புராணங்கள் சொல்கின்றன. அவர் நடத்திய ஒரு திருவிளையாடல் தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது.

☆அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதி தேவி ஆவார்.☆

லிங்க வழிபாடு, லிங்கோத்பவர் வழிபாடு தோன்றிதும் திருவண்ணாமலையில் தான் என்பதால் இது சிவனுக்கு விருப்பமான தலமாகவும் சொல்லப்படுகிறது.

○ *பார்வதிக்கு சிவன்* *அளித்த* *வரம் :*

ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் துன்பப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்ட து. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான், அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதி தேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

○முதலில் கிரிவலம் வந்தவர் :

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார் அதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனது உடலின் இட பாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.

○பார்வதி சிவனிடம் வைத்த கோரிக்கை :

அப்போது பார்வதிதேவி, 'நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார்.

இந்த முறையில் தான் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவு ள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பட்டீஸ்வரம் துர்கை...

பட்டீஸ்வரம் துர்கை...

கும்பகோணத்தை கோயில் நகரம் என்பார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இதையடுத்து உள்ளது பட்டீஸ்வரம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அற்புதத் திருத்தலம்.

காமதேனுவின் மகள் பசு பட்டி. உமையவள், சாப விமோசனம் பெறுவதற்காக, இங்கே தவமிருந்தாள். சிவபூஜை செய்தாள். பார்வதி தேவிக்கு உதவுவதற்காக பட்டியும் வந்து பணிவிடைகள் செய்தாள். பால் சுரந்து தந்தாள். மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு  பாலபிஷேகம் செய்து, பூஜித்து வந்தாள் பார்வதி. பட்டி வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊருக்கு பட்டீஸ்வரம் எனப்பெயர் அமைந்தது.

காமதேனு உள்ளிட்ட பசுக்கள் வழிபட்டதால், சிவபெருமானுக்கு தேனுபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. பிரமாண்டமான சிவாலயம் என்றாலும் இங்கே துர்கையின் ராஜ்ஜியம்தான். பொதுவாகவே, எல்லா சிவாலயங்களிலும்  கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள் துர்கை. மகாவிஷ்ணு ஆலயங்களிலும் கோஷ்டத்தில்தான் இருப்பாள். அங்கே அவளுக்கு விஷ்ணு துர்கை என திருநாமம் உண்டு.

ஆனால் இங்கே, தனிச்சந்நிதியில், அற்புதமாகக் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில் ஒய்யாரமாக அழகு ததும்பக் காட்சி தருகிறாள். மூன்று கண்களைக் கொண்டிருக்கிறாள் துர்கை. எட்டு திருக்கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். நிமிர்ந்த கோலம், நின்றகோலம்.

எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். ஆனால், சாந்தமாக காட்சி தருகிறாள். அவளின் இதழோரம் ததும்பும் புன்னகையே அவளை சாந்த சொரூபினி எனச் சொல்கிறது.

மிகுந்த வரப்பிரசாதி இந்த பட்டீஸ்வரம் துர்கை. ஆதித்த கரிகாலனுக்கு இஷ்ட தெய்வமாகவும் சோழர்களின் குலதெய்வமாகவும் திகழ்ந்தாள் என்றும் வரலாறு விவரிக்கிறது. தேனுபுரீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட போது, துர்கைக்கு இப்படியான சந்நிதி இல்லை என்றும் சொல்வார்கள். பின்னர் அடுத்தடுத்து வந்த காலகட்டங்களில், துர்கையை இங்கே ஸ்தாபித்து, தனிக்கோயிலாகவே எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள்.

பட்டீஸ்வரமும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் காய்ந்த பூமியாகிவிட்டதாம். மழை தப்பியதால் இந்த நிலையாம். எல்லோரும் வறுமையில் தவித்து மருகினார்கள். ஊரே கூடிப் பேசியது. பின்னர், பட்டீஸ்வரம் துர்கையின் சந்நிதிக்கு ஓடிவந்து, அவளிடம் முறையிட்டது அன்றிரவே, நல்ல மழை பெய்தது. காடுகரையெல்லாம் நிறைந்தது. மக்கள் மகிழ்ந்து போனார்கள். அன்று முதல், துர்கையின் சாந்நித்தியத்தை, சோழ தேசம் முழுவதும் தெரிந்து தரிசிக்க வந்தது. கேட்டதைத் தரும் அன்னை பட்டீஸ்வரம் துர்கை என்று இன்றைக்கும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
பட்டீஸ்வரம் துர்கைக்கு, தாமரை ரொம்பவே இஷ்டம். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலை கொண்டு துர்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்கையை மனதார நினைத்து தீபமேற்றினால் போதும். நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்கையாக நினைத்து வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்று சேருவார்கள். இதுவரை இருந்த அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்க்கை.

மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடக்க வேண்டும் என்றோ வீடு வாசல் வாங்கவேண்டும் என்றோ குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றோ உங்கள்  பிரார்த்தனை இருந்தால் வீட்டில், ராகுகால வேளையில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள்.

மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடந்தேறும். வீடு வாசல் வாங்கும் நிலை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பின்னர், பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியை அப்படியே உண்டியலில் செலுத்திவிடுங்கள். சாந்த மனசுக்காரி துர்கையை வழிபடுங்கள்; சந்தோஷ வாழ்வைத் தந்திடுவாள் பட்டீஸ்வரம் நாயகி.

*dg*

காஞ்சி வரதர்...

காஞ்சி வரதர்...

முன்னொரு காலத்தில் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த  யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்ததால், மகா விஷ்ணுவுக்கு வரதராஜர் எனப் பெயராயிற்று.  

யாகத்தில் அளித்த அவர் பாகத்தை ஒரு  சித்திரை மாத திருவோண நன்னாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர,கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மந் நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்னாளே சித்திரை மாதத்து திருவோண நாளாக உள்ளது.


அந்நாளில் தேவர்கள்  ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய  வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாராயணன்  சம்மதித்தார். உடன் ஐராவதம்  என்ற யானையே மலை வடிவு கொண்டு நாராயணனைத் தாங்கி  நின்றது.  
இதனால் இக்கோயிலுக்கு அத்திகிரி என்று மற்றொரு பெயரும் உண்டு. பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.

அதன்படி, அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்குச் செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்ல வேண்டும். இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.

வாசுகி நாகத்தை காப்பாற்ற விஷம் அருந்திய நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்...

வாசுகி நாகத்தை காப்பாற்ற விஷம் அருந்திய நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்...

எந்தக் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பழைமையான சில கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் எனவும் தாயார் லோகநாயகி என்ற திருநாமத்தோடும் பக்தர்களால் அழைக்கப்படுகின்றனர். இந்தக் கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் விளங்கி வருகிறது. குறிப்பாக, இந்தத் திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் சற்று பட்டையாக இருக்கும். குறிப்பாக, இந்த சிவலிங்கம் செந்நிறமாகக் காட்சி அளிக்கிறது. இது மிகவும் சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மூலவர் சிவலிங்கத்தின் பிரதான ஆவுடையார் மட்டுமல்லாமல், சிவலிங்கத்தை சுற்றி தரைப்பகுதியில் ஆவுடையார் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் இரண்டு ஆவுடையார்கள் மீது காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, இந்தத் திருக்கோயிலில் சிவபெருமான் சன்னிதியை சுற்றி எட்டு யானைகள் கோஷ்டத்தில் சிவபெருமானை தாங்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் காணப்படும்.

அமுதம் பெறுவதற்காக தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது  வாசுகி நாகம் மத்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதிக உழைப்பின் காரணமாக வேதனையுற்ற வாசுகி நாகம் தனது விஷத்தை உமிழ்ந்தது. அந்த விஷம் பாற்கடலில் பரவிய காரணத்தினால் தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

தேவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் வாசுகி நாகம் கக்கிய விஷத்தை விழுங்கினார். அப்போது அவரது உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியது. இதைக் கண்ட பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்கு செல்லாமல் நிறுத்திவிட்டார்.

வாசுகி நாகத்தின் விஷமானது சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி விட்டது. இந்த நிகழ்வை குறிப்பிடுவதற்காகவே சிவபெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தேவர்களின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் விஷத்தை உண்ட காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். அதேபோல் இவருக்கு திருநீலகண்டன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தினமும் வரும் பிரதோஷ வேளையிலும் (4.30 - 6) பிரதோஷ தினத்தன்றும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயில் நீலகண்ட பெருமானை தரிசித்து தீர்வு பெறுகின்றனர். இக்கோயில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் காரமடையில் உள்ளது.

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

குரு என்பவர் யார்?

குரு என்பவர் யார்?

தண்ணீரைத் தொடாமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது; குரு இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. அத்தகு குருவின் தன்மைகளைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.

ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய  ஜ்ஞானாஞ்ஜன - ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேன  தஸ்மை ஸ்ரீ-குரவே நம:

“நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.”

இந்த ஸ்லோகம், நம்முடைய அறியாமையை நீக்கி உண்மையான ஞானத்தை விருத்தி செய்ய உதவுபவர் ஆன்மீக குரு என்று விளக்குகின்றது. ஆன்மீக குருவின் மூலமாகநாம் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைய முடியும்.

ஆன்மீக ஞானத்தை அடைவதற்கு குருவிடம் சரணடைய வேண்டும் என்பது ஸ்ரீமத் பாகவதத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (11.3.21), அதாவது பரம சத்தியத்தைப் பற்றிய திவ்ய ஞானத்தை அறிய விரும்புபவர் ஆன்மீக குருவை அணுக வேண்டும்.

ஆன்மீக குரு புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆன்மீக குருவின் தகுதிகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தன்னுடைய உபதேசாமிருதம் என்னும் நூலின் முதல் ஸ்லோகத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:

“பேச்சின் தூண்டுதல், மனதின் தேவைகள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு, பாலுறுப்புகள் ஆகியவற்றின் தூண்டுதல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய நிதான புத்தியுள்ள ஒருவர் உலகம் முழுவதிலும் சீடர்களை ஏற்கும் தகுதி வாய்ந்தவராவார்.”

குரு சீடப் பரம்பரையில் வர வேண்டும்

பகவத் கீதையில் (4.2), ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:, உன்னதமான பகவத் கீதையின் இந்த விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் (பரம்பரையின்) மூலமாகப் பெறப்பட்டு அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஆன்மீக குருவானவர் அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையில் வருபவராக இருத்தல் அவசியம்.

கலி யுகத்தில் நான்கு குரு சீடப் பரம்பரைகள் உள்ளன; அவற்றில் ஏதேனும் ஒரு பரம்பரையில் வரும் ஆன்மீக குருவையே ஒருவர் அணுக வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனத்தில் படித்தால், அங்கு பெறப்படும் சான்றிதழ் எப்படி செல்லாததோ, அதுபோல நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெறாத ஆன்மீகமும் வீணான கால விரயமே.

உண்மையான குரு என்பவர், அங்கீகரிக்கப்பட்ட நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வருபவராக இருக்க வேண்டும்.

நான்கு சம்பிரதாயங்கள் –அடிப்படை விளக்கம்

1.   ருத்ர சம்பிரதாயம்: இது சிவபெருமானால் விஷ்ணு ஸ்வாமியை ஆச்சாரியராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும்.

2.   ஸ்ரீ சம்பிரதாயம்: இது லக்ஷ்மி தேவியினால் தோற்றுவிக்கப் பட்டு ஆதிஷேசனின் அவதாரமான இராமானுஜாசாரியரால் பரப்பப்பட்டது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஸ்ரீ சம்பிரதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. விசிஷ்டாத்வைத-வாதம் என்பது ஸ்ரீ சம்பிரதாயத்தின் தத்துவமாகும்.

3.   குமார சம்பிரதாயம்: பிரம்மதேவரின் நான்கு சனகாதி குமாரர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்பிரதாயம், நிம்பார்க ஆச்சாரியரால் பரப்பப்பட்டது. துவைதாத்வைத-வாதம் என்னும் தத்துவத்தை நிலைநாட்டிய நிம்பார்க சம்பிரதாயம், தற்போது பெரும்பாலும் அவருக்குப் பின் வந்த வல்லபாசாரியரின் பெயரில் அறியப்படுகிறது.

4.   பிரம்ம சம்பிரதாயம்: பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்டு மத்வாசாரியரின் மூலமாக பரப்பப்பட்டது பிரம்ம சம்பிரதாயம், அல்லது பிரம்ம-மத்வ சம்பிரதாயம். ஆச்சாரியர் மத்வர் சுத்த-த்வைத-வாதத்தை தனது தத்துவமாக நிலைநாட்டினார்.

நான்கு சம்பிரதாயங்களுக்கு இடையில் தத்துவ நுணுக்கங்களில் வேறுபாடு உள்ளபோதிலும், அடிப்படையில் நான்கு தத்துவங்களும் பகவான் விஷ்ணுவை அல்லது கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, அவருக்கு தொண்டு செய்யும் பக்திப் பாதையைப் பயிற்சி செய்பவர்களாக உள்ளனர். வாழ்வில் பக்குவமடைய விரும்புவோர் இந்த நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் வரும் குருவிடம் சரணடைய வேண்டும். இந்த நான்கு பரம்பரையில் வராத எந்தவொரு நபரும் ஆன்மீக குருவாக முடியாது.

பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயம்

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு சைதன்ய மஹாபிரபு தோன்றினார். சைதன்ய மஹாபிரபு, மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த ஈஸ்வர புரியை தனது குருவாக ஏற்ற காரணத்தினால், சைதன்யரைப் பின்பற்றுபவர்கள் பிரம்ம-மத்வ சம்பிரதாயத்தின் ஒரு கிளையாக, பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இப்பரம்பரையில் வந்த பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் 64 கௌடீய மடங்களை நிறுவி, அதற்கு அடித்தளம் அமைத்தார். அவரது சீடரான ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய ஆன்மீக குருவின் கட்டளையின்படி அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவி கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

சீடனின் கடமைகள்

“ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” (பகவத் கீதை 4.34)

உண்மையான ஆன்மீக குருவை பகவானின் நேரடி பிரதிநிதியாக ஆராதிக்க வேண்டும். ஏனெனில், அவர் பகவானின் நெருங்கிய சேவகர் என்று எல்லா சாஸ்திரங்களும் ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர். கிருஷ்ணருக்கும் ஜீவனுக்கும் இடையில் ஒரு பாலமாக அவர் செயல்படுகிறார். அடக்கம், கேள்விகள் கேட்டல், தொண்டு செய்தல் ஆகியவை சீடனின் முக்கிய கடமைகள் என்பதை நாம் கீதையிலிருந்து அறிகிறோம்.

 “சீடனானவன் தனது ஆன்மீக குருவின் போதனைகளை தனது இதயத்தில் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும், அவற்றைத் தவிர வேறு எதையும் விரும்பக் கூடாது. குருவின் பாதங்களில் பற்று கொண்டிருப்பதால் உத்தம கதியை அடைய முடியும், அவரது கருணையால் ஆன்மீக ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” (ஸ்ரீ-குரு-வந்தனம் 2)

போலி குருக்கள்

ஆன்மீக குருவானவர் வேதங்களையும் வேத வழி வந்த நூல்களையும் பின்பற்றி தன்னுடைய சீடர்களையும் அவற்றை பின்பற்றுமாறு போதனை செய்வார். இன்றைய சமுதாயத்திலோ பல்வேறு போலி ஆன்மீக குருக்கள் மக்களைத் தம்முடைய சுய புகழுக்காகவும் செல்வத்திற்காகவும் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கின்றனர். காவி உடை அணிந்த எந்த ஒரு நபரும் குரு என்று மக்கள் நம்பி விடுகின்றனர். குறைந்த காலத்தில் அதிகமான சொத்துக்களைச் சேகரித்த ஏராளமான மடங்களை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மக்களிடத்தில் தற்காலிகமான பௌதிக ஆசிகளை வழங்கி அவர்களிடமிருந்து நிறைய செல்வத்தைப் பெறுகின்றனர்.

அதுபோன்ற குருக்கள் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அத்தகு சமூக நலச் செயல்கள் அனைத்தும் நாட்டை ஆளும் சத்திரியர்களுக்கு (தலைவர்களுக்கு) உண்டான செயல்களாகும். இத்தகு செயல்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று காவி உடை அணிந்துள்ளவர்கள் அனைவரையும் ஆன்மீகவாதிகள் என்று நம்மால் கூறி விட முடியாது.

பொதுமக்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள செய்திகளை அறியாத காரணத்தினால், இதுபோன்ற போலி குருமார்களிடம் செல்கின்றனர். இஃது அவர்களுடைய ஆன்மீக அறிவின்மையை எடுத்துக் காட்டுகிறது. பலருடைய தவறுகள் ஊடகங்களில் வெளிவந்த பிறகும்கூட, ஆன்மீக அறிவற்ற நபர்கள் அவர்களைப் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது.

ஒருமுறை வல்லப ஆச்சாரியர் தனது சீடர்களுடன் கானகம் வழியே சென்றார். அப்போது அங்கு ஒரு நீளமான பாம்பு இறக்கும் தருவாயில் ஆயிரக்கணக்கான எறும்புகளால் கடிக்கப்படுவதைக் கண்டனர். சீடர்கள் தங்களது குருவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த பாம்பு தனது முற்பிறவியில் போலி ஆன்மீகவாதியாக இருந்தது என்றும், அந்த ஆயிரக்கணக்கான எறும்புகள் அவரது சீடர்களாக இருந்தனர் என்றும் அவர் பதில் கூறினார். இன்றைய உலகிலுள்ள போலி ஆன்மீக குருமார்களின் நிலையும் அவர்களைப் பின்பற்றும் சீடர்களின் நிலையும் அதுபோன்றது என்பது உறுதி.

எனவே, போலி குருமார்களைத் தவிர்த்து உண்மையான ஆன்மீக குருவிடம் தஞ்சமடைந்து வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.

தீர்த்த யாத்திரை என்றால் என்ன?

தீர்த்த யாத்திரை என்றால் என்ன, அதன் பலன்கள் என்னென்ன..... என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்....

காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை. ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம். காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு. ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும். அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும். சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும். இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்). மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது. வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து. ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும். கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம். பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம். அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது. தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம். ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும். தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.

ஒரு குட்டிக்கதை

ஒரு குட்டிக்கதை

ராமர் காட்டில் இருக்கும் போது ஒரு ஆற்றங்கரையில் அது வரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார்.

ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி.

சிறிது நேரத்தில், சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். இவர் வேள்விதான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.

துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார்.

பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண் திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.

மீண்டும் கண் மூடி தியானத்தில்
ஆழ்ந்தார்.

திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார்.

ரொட்டிகளை சிறிது சிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்து விட்டு அமர்ந்தார்.

துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

 நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.

துறவி சொன்னார், ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.

அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்.

ரொட்டி சுட்டீர்கள் சரி ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை? கேட்டார் ராமபிரான்.

துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது.

அதன் போக்கில் விட்டு, பிறகுதான் விட்டுப்பிடித்து அதற்கு தண்டனை தர வேண்டும்.

சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?

அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன்.

இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை! என்றார் மெதுவாக!

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது.

அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.

இறைவனிடம் சரணடைய வேண்டும் என்றால் என்ன?

இறைவனிடம் சரணடைய வேண்டும் என்றால் என்ன?

கிருஷ்ணரிடம் சரணடையும் முறை ஹரி–பக்தி–விலாசத்தில் (11.676) விவரிக்கப்பட்டுள்ளது:

ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விஷ் வாஸோ
கோ ப்த்ருத்வே வரணம் ததா:
ஆத்ம–நிக்ஷேப-கார்பண்யே
ஷட்-விதா ஷரணாகதி.

சரணாகதி என்றால், பகவானுடைய பக்தித் தொண்டிற்கு இறுதியில் தன்னை வழிநடத்தக்கூடிய மதக் கொள்கைகளை ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தில் தன்னுடைய நிலைக்கு ஏற்ற குறிப்பிட்ட கடமையை ஒருவன் நிறைவேற்றலாம், இருப்பினும், அவன் தனது கடமையைச் செய்து கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வரமாட்டான் என்றால், அவனது செயல்கள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.

 கிருஷ்ண உணர்வின் பக்குவநிலைக்கு ஒருவனைக் கொண்டுச் செல்லாத எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார். தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றதிற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும்.

பூரண கிருஷ்ண உணர்வுடன் பகவானின் பக்தித் தொண்டில் ஒருவன் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட உடனேயே, அவன் ஜட இயற்கையின் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுபடுகின்றான். ஞானத்தை விருத்தி செய்தல், யோக முறையின் படி தியானம் செய்தல் போன்ற பற்பல தூய்மைப்படுத்தும் வழிகளும் தர்மங்களும் இருக்கின்றன என்றாலும், கிருஷ்ணரிடம் சரணடைபவன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணரிடம் எளிமையாக சரணடைதல், அவனை தேவையற்ற கால விரயத்திலிருந்து காக்கும். இதன் மூலம், அவன் உடனடியாக எல்லா முன்னேற்றத்தையும் அடைந்து, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.

பொருளுரை / ஶ்ரீமத் பகவத் கீதை 18 66

சனி, 19 அக்டோபர், 2024

அறிவு இல்லாத மனிதர்கள்

அறிவு இல்லாத மனிதர்கள்


😭😭😭 இவர்களுக்கு பணம் மட்டுமே பிராதானம். நம் குருநாதரை பற்றியே கவலை இல்லை அவரின் காரை பற்றி மட்டும் ஏன் கவலை பட போகிறார்கள். ஒரு விஷயம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 1954 மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம்  தேதி பெரியவா பட்டத்திற்கு வந்த நாளில் அன்றன்று நடக்கும் கணக்குகளை சந்திர மௌளீஸ்வரர் சன்னதியில் இரவு படிப்பது வழக்கம். அப்போது மின்சார விளக்குகள் கூட கிடையாது. அவ்வாறு பெரியவா பட்டம் ஏற்ற நாளின் இரவு கணக்கு படிக்கப்பட்டது அன்றைய கணக்குப் படி 19,450 ரூபாய் கடனில் இருந்து. ஆனால் இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் மடத்திற்கு சொத்துக்களை சேர்த்து வைத்த பெரியவாளின் ஒரு புகைப்படம் மடத்தில் இருக்க கூடாது, அவரின் பெயர் இருக்க கூடாது, அவர் பயன் படுத்திய வாகனம் இருக்க கூடாது ஆனால் அவர் சேர்த்து வைத்த சொத்துக்கள், பணம், பேர் மட்டும் வேண்டுமோ? அரசியலோடு  சம்மந்த படுத்தி பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இருப்பினும் ஒரு சில எடுத்து காட்டுக்களை இங்கே தருகிறேன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பயன் படுத்திய கார், காமராஜர் பயன் படுத்திய கார் இன்றைக்கும் பத்திரமாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் செக்கிழுத்த செக்கை பத்திரமாக வைத்துள்ளார்கள் ஆனால் இங்கே நம் ஜகத் குருவின் கார் நம் கண்களில் கண்ணீரை வரவழிக்கிறது. இப்படி கல் நெஞ்சாக இருக்கும் நீங்கள் எல்லாம் ஒரு முறை திருவண்ணா மலை சென்று யோகி ராம் சுரத்குமார் அவர்களின் ஆசிரம் சென்று பாருங்கள். அவர் பயன் படுத்திய பொருட்களை எப்படி பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று போய் பாருங்கள். அவரின் நகம், தலைமுடி, அவர் இறுதியாக மருத்துவமணையில் இருந்த போது பயன் படுத்திய கட்டில் முதற்கொண்டு பத்திர படுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் இங்கு பெரியவாளின் பதுகையையே ஆட்டையை போட்டார்கள்.  இதே போல் இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இதெல்லாம் உரியவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது அந்த சந்திர மௌளீஸ்வர் தான் சொல்ல வேண்டும். 😭😭😭

 

 

 

ஆதிசங்கரர்....

ஆதிசங்கரர் நனது சன்யாசிகளுடைய தீட்க்ஷை பெறுவதற்காக குருவை தேடி சென்றார். ஒரு வழியாக தனது குருவை கோவிந்த பகவத்பாதாளை ஓம்காரேஷ்வரர் ஷேத்ரத்தில் கண்டார் ஆதிசங்கரர்.  பயங்கர மழை கொட்டிக் கொண்டுயிருந்தது. அப்போது நர்மதா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவிந்த பகவத்பாதாளோ நர்மதை நதியின் அருகே ஒரு குகையில் தனது சீடர்களுடன் இருந்தார். நர்மதா நதி குகையின் உள்ளே வர தொடங்கி கொஞ்சம கொஞ்மாக குகை மூழ்க தொடங்கியது.

அப்போது தான் சங்கரர் அங்கே வந்து கோவிந்த பகவத்பாதாளிடம் சன்யாச தீட்க்ஷையும், தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டும் என்று சங்கரர் கேட்க கோவிந்த பகவத்பாதாளோ இந்த நர்மதை நதி குகைக்குள் வராமல் நீ தடுத்தால் நான் உனக்கு உபதேச மந்திரத்தையும், உன்னை சிஷ்யனாகவும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார். உடனே சங்கரர் மனம் உருகி வேண்டிக் கொண்டு ஒரு ஸ்லோகத்தை சொல்லி நர்மதையை தனது கமண்டலத்தில் அடைத்தார். அப்போது கோவிந்த பகவத்பாதால் கண்டேன் சிஷ்யனை என்று கூறிய படி குகையில் இருந்து ஓடி வந்து சங்கரரை கட்டி அனைத்துக் கொண்டு, சன்யாச தீட்க்ஷையும் கொடுத்து, தனது சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார். பிறகு சங்கரர் கமண்டலத்தில் அடங்கி இருந்த நர்மதா நதியை குரு கேட்டுக் கொண்டதற்கு இனங்க கமண்டலத்தில் இருந்த நீரை மீண்டும் அதே நதியில் விட்டார் ஆதிசங்கரர்...

சுமார் 2500 வருடத்திற்கு மேல் நடந்த இந்த நிகழ்விற்கு பின் நர்மதா நதி குகைக்கு உள்ளே வரவில்லை. சென்ற ஆண்டு தான் மீண்டும் குகையினுள் நர்மதா நதியில் இருந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குகைக்குள் தண்ணீர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது...