செவ்வாய், 22 அக்டோபர், 2024

வாசுகி நாகத்தை காப்பாற்ற விஷம் அருந்திய நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்...

வாசுகி நாகத்தை காப்பாற்ற விஷம் அருந்திய நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்...

எந்தக் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பழைமையான சில கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் எனவும் தாயார் லோகநாயகி என்ற திருநாமத்தோடும் பக்தர்களால் அழைக்கப்படுகின்றனர். இந்தக் கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் விளங்கி வருகிறது. குறிப்பாக, இந்தத் திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் சற்று பட்டையாக இருக்கும். குறிப்பாக, இந்த சிவலிங்கம் செந்நிறமாகக் காட்சி அளிக்கிறது. இது மிகவும் சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மூலவர் சிவலிங்கத்தின் பிரதான ஆவுடையார் மட்டுமல்லாமல், சிவலிங்கத்தை சுற்றி தரைப்பகுதியில் ஆவுடையார் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் இரண்டு ஆவுடையார்கள் மீது காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, இந்தத் திருக்கோயிலில் சிவபெருமான் சன்னிதியை சுற்றி எட்டு யானைகள் கோஷ்டத்தில் சிவபெருமானை தாங்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் காணப்படும்.

அமுதம் பெறுவதற்காக தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது  வாசுகி நாகம் மத்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதிக உழைப்பின் காரணமாக வேதனையுற்ற வாசுகி நாகம் தனது விஷத்தை உமிழ்ந்தது. அந்த விஷம் பாற்கடலில் பரவிய காரணத்தினால் தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

தேவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் வாசுகி நாகம் கக்கிய விஷத்தை விழுங்கினார். அப்போது அவரது உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியது. இதைக் கண்ட பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்கு செல்லாமல் நிறுத்திவிட்டார்.

வாசுகி நாகத்தின் விஷமானது சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி விட்டது. இந்த நிகழ்வை குறிப்பிடுவதற்காகவே சிவபெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தேவர்களின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் விஷத்தை உண்ட காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். அதேபோல் இவருக்கு திருநீலகண்டன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தினமும் வரும் பிரதோஷ வேளையிலும் (4.30 - 6) பிரதோஷ தினத்தன்றும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயில் நீலகண்ட பெருமானை தரிசித்து தீர்வு பெறுகின்றனர். இக்கோயில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் காரமடையில் உள்ளது.

கருத்துகள் இல்லை: