விநாயகர் பெயர்கள்
கணங்கள் என்போர் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர்.
இவர்களை பதினெண் கணங்கள் என்பர்.
இவர்களுக்கு அதிபதி விநாயகர் கணபதி என்று அழைக்கப்பெறுகிறார்.
விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகிறது.
இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும்.
விநாயகரின் 12 அவதாரங்கள்
வக்ரதுண்ட விநாயகர்:
இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
கஜானனபவிநாயகர்:
சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.
மயூரேசர்:
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
உபமயூரேசர்:
சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.
பாலச்சந்திரர்:
தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.
சிந்தாமணி:
கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
கணேசர்:
பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.
கணபதி:
கஜமுகாசுரனை வென்றவர்.
மகோற்கடர்:
காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
துண்டி:
துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
வல்லபை விநாயகர்:
மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.
இதைத் தவிர்த்து விநாயகரை 32 விதமான மூர்த்தங்கள் பெற்று விளங்குகிறார். அந்த மூர்த்தங்களின் பெயர்கள்
1. பால கணபதி
பால" என்பது "இளம்" அல்லது "சிறு பராயம்" எனப் பொருள்படும். கணபதியைச் சிறு பராயத்தினராகக் கொண்டு வழிபடுவதற்கான வடிவம் ஆகையால் இதற்கு "பால கணபதி" எனப் பெயர் ஏற்பட்டது.
2. தருண கணபதி
நண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர்.
3. பக்தி கணபதி
நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர்.
4. வீர கணபதி
சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர்.
5. சக்தி கணபதி
செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.
6. துவிஜ கணபதி
சந்திரன் போன்ற வெண்மை நிறமும் நான்கு முகமும் கொண்டவர். நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற்கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர்.
7. சித்தி கணபதி
பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.
8. உச்சிட்ட கணபதி
இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.
வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.
உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும்.
பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும்.
மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு.
இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.
9. விக்ன கணபதி
பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார்.
10. க்ஷிப்ர கணபதி
செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார்.
11. ஏரம்ப கணபதி
விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட வடிவம். நேபாளத்தில் இவ்வடிவம் மிகவும் புகழ் பெற்றது..
விநாயகக் கடவுளுக்கான தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவம் முக்கியமானது.
12. லட்சுமி கணபதி
எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு தேவிமார்களோடு விளங்குவர்.
13. மஹா கணபதி
செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.
14. விஜய கணபதி
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர்.
15. நிருத்த கணபதி
பொன்போன்ற நிறத்தோடு மோதிரங்களணிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவருராகவும் விளங்குவர்.
16. ஊர்த்துவ கணபதி
நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.
17. ஏகாட்சர கணபதி
செந்நிற மேனியோடு செம்பட்டாடையுடன் செம்மலர் மாலை அணிந்து முக்கண்ணுடன் பிறையை சூடியிருப்பார். மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம், இவைகளை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகம் உடையவர். பத்மாசனத்தில் வீற்றிருப்பவர்.
18. வர கணபதி
செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.
19. திரயாக்ஷர கணபதி
திரயாக்ஷர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார்.
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் இவற்றைத் தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர்.
21. ஹரித்திரா கணபதி
மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.
22. ஏகதந்த கணபதி
பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர்.
23. சிருஷ்டி கணபதி
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர்.
24. உத்தண்ட கணபதி
நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்தினகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை ஏந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர்
25. ரணமோசன கணபதி
பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர்.
26. துண்டி கணபதி
அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.
27. துவிமுக கணபதி
தந்தம், பாசம், அங்குசம், இரத்தினபாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுநீலமேனியர். செம்பட்டாடையும். இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர்.
28. மும்முக கணபதி
வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் இவற்றை உடையவர். பொற்றாமரையாசனத்தின் நடுப் பொகுட்டில் மூன்ற முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம், பூப் போன்ற சிவந்த நிறம் உடையவர்.
29. சிங்க கணபதி
வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.
30. யோக கணபதி
யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.
31. துர்க்கா கணபதி
சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக் கை, பெரியமேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி, நாவற்பழம் இவற்றை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையுடன் விளங்குபவர்.
32. சங்கடஹர கணபதி
இளஞ்சூரியன் போன்ற வண்ணத்துடன், இடது பாகத் தொடையில் அம்மையை உடையவர். அம்மை பசிய மேனியவளாக, நீலப் பூவை ஏந்திய இருப்பாள். வலது கையில் அங்குசம் வரதம் உடையவர். இடது கையில் பாசம், பாயசபாத்திரம் ஏந்தியவர். செந்தாமரைப் பீடத்தில் நிற்பவர். நீலநிறமான ஆடையணிந்தவர்.