ஞாயிறு, 17 ஜனவரி, 2021

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோவில்

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோவில்




மூலவர்:தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
உற்சவர்:தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம்:பாபநாசதீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:குமரிகண்டம்
ஊர்:கன்னியாகுமரி
மாவட்டம்:கன்னியாகுமரி
மாநிலம்:தமிழ்நாடு
   
திருவிழா:புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.   
       
தல சிறப்பு:இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம். கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 -ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி - 629702, கன்னியாகுமரி மாவட்டம்.போன்:+91- 4652 - 246223  
      
பொது தகவல்:கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.

கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும். சுசீந்திரம் கன்னியாகுமரியின் வடக்கே 10 கி.மீ,. தொலைவில் உள்ளது.
 
பிரார்த்தனை:கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது. இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
 
      
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.  
      
தலபெருமை:விவேகானந்தர் நினைவு மண்டபம் : குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.

1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.

பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.

கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.

முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம். வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.
 
தல வரலாறு:முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர் அடக்கியாண்டனர். தர்மம்  அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும். பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள். திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாள் செல்ல செல்லக்  கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார். அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம்  தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும் போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால்,  தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை  எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!

விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!
 



அழகு கொஞ்சும் ஐந்து முகங்கள்; ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள்; ஐந்து சிரங்களையும் அலங்கரிக்கும் அழகான மணிமகுடங்கள். மகுடத்துக்கு மகுடம் போல அழகானதொரு சந்திர கலை; அழகிய திருக்கரங்கள் பத்து; இடக்கரங்களில், சங்கு, பாசம், கேடயம், வில் மற்றும் செங்கழுநீர் பூவை ஏந்தியும், வலக்கரங்களில் சக்ரம், அங்குசம், வாள், அம்பு, நாரத்தம்பழம் ஆகியவற்றை ஏந்தியும், ஸர்வாபரண பூஷிதையாக மஞ்சள்நிறப் பட்டாடை உடுத்தி உதயகால சூரியனின் ஒளி போல தேஜோமயமாக ஜொலிக்கிறாள் விஜயா நித்யா.
 
ஜயம் என்றால் வெற்றி என்று பொருள். விஜயம் என்றால் விசேஷமான வெற்றி. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்றே பொருள். தன் பக்தனுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பைக் கொடுப்பதே விஜயா நித்யாவின் பணி. பள்ளியிலும் கல்லூரியிலும் பரீட்சையில் வெற்றி; வேலைக்கான தேர்வில் வெற்றி; வேலையில் வெற்றி; முன்னேற்றத்தில் வெற்றி; வியாபாரத்தில் வெற்றி; வரவு செலவில் வெற்றி; சந்தோஷத்தில் வெற்றி; எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையிலேயே வெற்றி.. இப்படி தொட்டதெல்லாம் துலங்கும்படியான ஒரு வாழ்க்கை சாத்தியமாகுமா?
 
கற்பனையிலும் கனவிலும் மட்டும் கண்ட வெற்றிகளை நிஜமாக்க, விஜயா நித்யாவின் பேரருள் இருந்தால் சந்தேகமில்லாமல் சாத்தியமாகும்.இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றி என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு வெற்றி கிடைப்பதற்கு உழைப்பும் திறமையும் மட்டும் போதாது. மிகுந்த திறமையும், கடின உழைப்பும் இருந்தும் பலர் சோபிக்க முடியாமல் குடத்திலிட்ட விளக்காகவே விளங்குவதை நாம் பார்க்க முடியும். திறமையையும் உழைப்பையும் சரியானபடி பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த இரண்டையும் சரியான நேரத்தில் வெளிக்கொண்டு வருவது இறையருள் மட்டுமே! அப்படி வெற்றியடையச் செய்பவள் விஜயா நித்யா மட்டுமே!
 
வியாபாரமாக இருந்தாலும், வழக்காக இருந்தாலும் தன்னையே சரணமென்று பணிந்து வணங்கும் பக்தனுக்கு நியாயமான வெற்றியை அருள்கிறாள். தன் பக்தனை எந்த இடத்திலும் துவள விடாமல் ஜெயிக்க வைக்கிறாள்.
 
உலகில் வெற்றிபெற்ற பலரும், குடும்ப வாழ்வில் நிம்மதி இழந்து தவிப்பதை நாம் கேள்விப்படுகிறோம். இதை விஜயா தேவி போக்குவதோடு மட்டுமல்லாமல் குடும்ப ஒற்றுமைக்கும் வழிவகுக்கிறாள். இவளை முறையாக ஆராதனை செய்தால் - குடும்பத்தில் உள்ள மனஸ்தாபங்கள், கருத்து வேற்றுமைகள் மறைந்து மன சந்தோஷமும் ஒற்றுமையும் பெருகும்.
 
பண்டைய காலங்களில் போருக்குச் செல்லும் அரசர்கள், விஜயா தேவியை வழிபட்டு, அதன் பின்னரே புறப்படுவார்கள். புரட்டாசி மாத சுக்லபட்ச தசமியன்று சாயங்காலத்துக்குப் பின்னர் நட்சத்திரங்கள் உதயமாகும் காலத்துக்கு விஜயா என்றே பெயர்; அந்த நேரத்தில் துவங்கப்படும் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் (இதுதான் நம்மால் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது).
 
புலனடக்கம் மிகக் கொண்டு கடும் அனுஷ்டானங்களுடன் மனத்தை வென்ற சாதகன், இவளை முறையாக இவளது சக்ரத்தில் பூஜிப்பானாகில், அவனால் அடைய முடியாதது ஏதுமில்லை. அவன் வாழ்வில் எப்போதும் இன்பம் மட்டுமே நிலைத்திருக்கும். உலகியல் வாழ்வின் அனைத்து கூறுகளிலும் வெற்றியைத் தொட்டு, ஆன்ம வாழ்விலும் தன்னைத் தான் உணர்ந்து ஆன்ம வெற்றியையும் அடைவான். உபாஸனேதி சவும்யாம் ச ப்ரயோகே பீமதர்சனாம் எனும் வாக்கின்படி, நிஷ்காம்யமாக தன்னை வணங்கும் பக்தனுக்கு அவனது சகல காரியங்களிலும் வெற்றியைத் தருகிறாள் விஜயா தேவி. பிரதிபலன் எதிர்பார்க்காமல் வணங்கும்போது அம்பிகையை சவும்ய ரூபிணியாக - சாந்த வடிவில் வணங்கும்படி ஸம்ஹிதைகள் அறிவுறுத்துகின்றன. அதேசமயம் குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து அதாவது எதிரிகளை வெல்லவோ, வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகவோ பூஜிக்கும்போது, அம்பிகையை உக்ர ரூபிணியாக தியானிப்பது வழக்கம். சிங்கத்தில் அமர்ந்த கோலத்திலும், அவளது பரிவாரங்கள் புலிகளின் மேல் வீற்றிருக்கும் கோலத்திலும் அம்பிகையை தியானித்து பூஜிக்க வேண்டும். இம்முறை, குருவின் நேரடி வழிகாட்டிதலில் செய்யப்படுதலே நலம் பயக்கும்.
 
விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை:
 
ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயதாயை நம:
ஓம் ஜேத்ர்யை நம:
ஓம் அஜிதாயை நம:
ஓம் வாமலோசனாயை நம:
 
ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் அந்தஸ்திதாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஜினாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் குலோத்பவாயை நம:
ஓம் க்ருசாங்க்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் க்ஷõமகண்டாயை நம:
ஓம் த்ரிலோசனாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமேச்வர்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் காமப்ரியாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமாசார விஹாரிண்யை நம:
ஓம் துச்சாங்க்யை நம:
ஓம் நிராலஸ்யாயை நம:
ஓம் நீருஜாயை நம:
ஓம் ருஜ நாசின்யை நம:
ஓம் விசல்யகரிண்யை நம:
ஓம் ச்ரேஷ்டாயை நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவன்யை நம:
ஓம் படாயை நம:
ஓம் ஸந்தின்யை நம:
ஓம் சக்ரநமிதாயை நம:
ஓம் சந்த்ரரேகாயை நம:
ஓம் ஸுவர்ணிகாயை நம:
ஓம் ரத்னமாலாயை நம:
ஓம் அக்னி லோகஸ்தாயை நம:
ஓம் சசாங்காயை நம:
ஓம் அவயவாம்பிகாயை நம:
ஓம் தாராதீதாயை நம:
ஓம் தாரயந்த்யை நம:
ஓம் பூர்யை நம:
ஓம் பூரிப்ரபாயை நம:
ஓம் ஸ்வராயை நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாயை நம:
ஓம் பூரிசுத்தாயை நம:
ஓம் மந்த்ர ஹுங்காரரூபிண்யை நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் ஞானாயை நம:
ஓம் க்ரஹகத்யை நம:
ஓம் ஸர்வப்ராண ப்ருதாம்வாராயை நம:
 
விஜயா நித்யாவுக்கான பூஜை :
 
முதலில் லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.
 
யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்
 
என்று கூறி, லலிதா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம் குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர் அன்றைய நித்யாவான விஜயா நித்யாவை, அவளது யந்திரத்திலோ படத்திலோ தியானிக்கவும்.
 
ஜயப்ரதாம் ஸ்ரீ விஜயாத்ம போத
ஸெளக்ய ப்ரதாம் மோக்ஷவிதான க்ஷõம்
ஜயாதி ரூபாம் விஜயாமஜேயாம்
ஐகாரரூபாம் ப்ரணமாமி நித்யாம்
 
என்று கூறி, விஜயா நித்யா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.
 
மேற்கூறிய நாமாவளியால் தேவிக்கு உகந்த சாமந்தி, மந்தாரை போன்ற மஞ்சள் நிற புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும். அவல் கொண்டு செய்யப்பட்ட நிவேதனங்களைச் சமர்ப்பிக்கவும். பின்னர் தேவியின் காயத்ரியைக் கூறி, கற்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.
 
விஜயா தேவிக்கு உகந்தவை:
நாட்கள்: வளர்பிறை துவாதசி, தேய்பிறை சதுர்த்தி
புஷ்பம்: மஞ்சள்நிறப் பூக்கள்
நைவேத்யம்: அவல்
காயத்ரி மந்திரம்:
 
விஜயா தேவ்யை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

தாலியின் மகிமை

“தாலி மகிமை”

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார் பாலகிருஷ்ணசாஸ்திரிகள். தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி
இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின் போது நடந்த திருமணங்களில் புது மணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் ”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக
மாறியிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது

அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்

அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்

மூலவர்:ஏகாம்பரநாதர்
உற்சவர்:உற்சவர்சொர்ணாம்பாள்
அம்மன்:காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:சிவகங்கை
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கச்சி
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்:பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
 
திருவிழா:பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.   
       
தல சிறப்புஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501,போன்:+91- 44-2722 2084.
 
பொது தகவல்:மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
 
பிரார்த்தனை:இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
 
 நேர்த்திக்கடன்:சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.  
      
தலபெருமை:காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
 
 தல வரலாறு:கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
 
 சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

அருள் மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்

அருள் மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்
 
மூலவர் :திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
அம்மன்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநீரகம்
ஊர் :திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
-திருமங்கையாழ்வார்   
       
திருவிழா:வைகுண்ட ஏகாதசி   
       
தல சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள் பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 94435 97107, 98943 88279  
      
பொது தகவல்:இத்தல இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஜெகதீஸ்வர விமானம் எனப்படும்.  இத்தல இறைவனை அக்ரூரர் தரிசனம் செய்துள்ளார்.   
       
பிரார்த்தனை:ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.  
      
நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.  
      
தலபெருமை:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம்  எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம்,  திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.   
       
தல வரலாறு:"நீரகத்தாய்' என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே  இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.   
       
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!

பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!
 
புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.
 
மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன்.  நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.
 
வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.
 
தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.
 
அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.
 
புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.
 
டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
 
காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.

கிருஷ்ணர் துதி

கிருஷ்ணர் துதி!

கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

பொருள் : தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.

நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

பொருள் : நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் : பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலையார்ச்சுத:
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

பொருள் : சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

த்வம் ஆதி அந்தோ பூதானாம் த்வமேவ ச பராகதி:
விஸ்வாத்மன் விஸ்வ ஜநக: விஸ்வகர்த்த: பிரபோவ்ய:

பொருள் : உலகத்தை தேகமாகக் கொண்டவரே, உலகத்தைப் படைத்தவரே, உலகத்தை அழிப்பவரே, ஹே பிரபோ, அழிவற்றவரே, பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என (ஆக்கல், காத்தல், அழித்தல்) முத்தொழிலையும் செய்பவரே உம்மை வணங்குகிறேன்.

யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ
யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருத்வா நீதிர் மதிர் நம:

பொருள் : எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.

தேவகி ஸூத கோவிந்த வாஸுதேவ ஜெகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ணா த்வாம் அஹம் சரணம் கத:

பொருள் : தேவகியின் மகனான கோவிந்தனே வாசுதேவனே, உலகத்தின் தலைவனே எனக்கு ஒரு மகனைத் தந்து அருள்வீர்.

பகவான் கூறியது

நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

பொருள் : நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம் !

மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

 மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக் குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள் பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.

ராகு

ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகன்    -அழகன்.
பிள்ளையார்    -சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன்    -அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன்    -செந்நிறம் உடையவன்.
வேள்    -எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன்    -வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன்    -சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன்    -கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன்    -ஆறு முகங்களை உடையவன்.
குரு    -சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன்-சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன்    -தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன்    -கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன்    -வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன்    -கங்கை மைந்தன்
கார்த்திகேயன்    -கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன்    -மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன்    -சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன்    -அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன்    -மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன்    -கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன்    -உமாதேவியின் மைந்தன்.
சண்முகன்    -ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன்    -நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன்    -காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன்    -துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன்    -எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி    -     உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன்    -சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன்-சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன்-தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி    -சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன்    -பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி    -மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன்    -வள்ளியின் கணவன்.
பாகுலேயன்    -கார்த்திகேயன்.
விசாகன்    -வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன்    -கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி  - செல்வன்.
முத்தையன்    -முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன்    -வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார்.  ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.