அருள் மிகு காமாக்யாதேவி திருக்கோவில்
மூலவர்:காமாக்யாதேவி
தீர்த்தம்:பிரம்மபுத்திரா
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கவுகாத்தி
மாவட்டம்:கவுகாத்தி
மாநிலம்:அஸ்ஸாம்
திருவிழா:நவராத்திரி
தல சிறப்பு:சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும். இதை காமரூப் என்றும் சொல்வார்கள். அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம்.
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி, 2.30 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி - 781 010, அசாம் மாநிலம்.போன்:+91- 361- 273 4624, 273 4654
பொது தகவல்:கவுகாத்தியில் தாரா, பைரவி, புவனேஸ்வரி ஆகியோருக்கு கோயில்கள் அமைந்துள்ளன. அருகிலுள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நரகாசுரனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனுக்கு "அஷ்வகிரந்தா' என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. மேலும் நவக்கிரகங்களுக்கென தனி ஆலயமும், சூரியனுக்கு மட்டும் தனியாக ஒரு கோயிலும் உள்ளன.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான்.
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் என்று இதை சொல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே இருக்கிறது. அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருளாக இருக்கும். மின் விளக்குகள் கிடையாது. மிகவும் பொறுமையுடன் குகையின் சுவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி கீழே இறங்க வேண்டும். பாதாளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
கருவறை அமைப்பு: கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை "மேரு வடிவம்' என்கிறார்கள். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது. அங்குள்ள பூஜாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர்.
கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த யோனிபீடத்தை தொட்டு தரிசனம் செய்ய வேண்டுமானால் பண்டாக்களை(துணை பூஜாரிகள்) அணுக வேண்டும். மேடையின்கீழ் ஓடும் தண்ணீரை "சவுபாக்யகுண்ட்' என்று அழைக்கிறார்கள். குகையிலிருந்து வெளியேறும்போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர காமேஸ்வரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிரகாரத்தில் காமாக்யாதேவி"தசமகா வித்யா' என்ற பெயரில் பத்துவித தோற்றங்களுடன் காட்சி தருகிறாள். பிரகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானஸாதேவி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் மறுகரையில் "மயில்மலை' அல்லது "பஸ்மாசலமலை' எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த "காமதகனம்' நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் "உமானந்த சிவா' கோயில் ஒன்றும் இருக்கிறது. இவரை தரிசித்து விட்டு, அருகிலுள்ள அனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். இதன்பிறகே காமாக்யாவின் குகைக்கோயிலுக்கு செல்வார்கள். சென்று திரும்பும்போது, காளிதேவி தன் பரிவாரங்களுடன் சுடலையில் (சுடுகாடு) காட்சி தருவதை தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனிவடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகிலிருந்து இயற்கையாக ஊறிவரும் நீரே பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிப்போர் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். வசந்த காலத்தின்போது- ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. காரணம். அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம். இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீருற்று செந்நிறத்தில் வருவது அதிசயம்! இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லையென்றாலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம். இவ்வாலயத்தில் பைரவர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன.
காமாக்யா தேவியை
""மஹா மாயா மஹா காளீ மஹா மாரீ க்ஷீதா த்ருஷா!
நித்ரா த்ருஷ்ணா சைகவீரா காலராத்ரிந் துரத்யயா!!''
என்ற ஸ்லோகம் சொல்லி வணங்குவோம்.
இந்த ஸ்லோகத்தின் பொருளையும் கேளுங்கள்.
""மஹா மாயா! மஹா காளீ! மஹா மாரீ என்ற பெயர்களைக் கொண்டவளும், பசி, தாகம், தூக்கம், ஆசை ஆகியவற்றை வெற்றி கொண்டவளும், நிகரற்ற வீரியம் படைத்தவளும், தன்னை எவரும் மீறமுடியாமல் காலத்தை கடந்து நிற்கும் காலராத்ரி தேவியே! எங்களுக்கு அருள்செய்'' என்பதாகும்.
தல வரலாறு:மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விஸ்வகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் "காமரூப்' என அழைக்கப்படுகிறது. தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதிதேவி நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
முற்காலத்தில் இந்தப் பகுதி காமரூபம், ஹரிசேத்திரம், பிரக்ஜோதிஷபுரம் என்ற பெயர்களில் விளங்கியது. இரண்யாட்சகன் பூமியை அபகரித்துச் சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணு ஸ்வேத வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். அந்த வராக வடிவத்திலேயே பூதேவியை மணந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்குப் பிறந்த மகனே நரகாசுரன். மகாவிஷ்ணு நரகாசுரனை பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கி வைகுந்தம் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியிடம், இவன் உலகத்துக்கு மிகவும் கெடுதல்கள் புரிவான்; அதனால் கொல்லவும் படுவான் என்று எச்சரித்தார். அப்போது பூமாதேவி, அப்படியாயின் என் கைகளால்தான் இவன் மரணம் அடைவான் என்னும் வரத்தைத் தாருங்கள் என்று கேட்க, மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்து வைகுந்தம் சேர்ந்தார். பல வரங்களைப் பெற்ற நரகாசுரன் அனைத்துலகையும் அடிமைப்படுத்தி பல்வேறு கொடுமைகள் புரிந்து வந்தான். பல யுகங்கள் கடந்தன. சக்தி தேவியின் மாயாவடிவமான காமாக்யா தேவியை வழிபட்டு மேலும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன்.
இந்த நிலையில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தார். அப்போது தேவர்கள் நரகாசுரனை அழிக்குமாறு கிருஷ்ணரை வேண்ட, அவரும் மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார். கடும்போர் நடந்த நிலையில் வரத்தின் காரணமாக கிருஷ்ண பகவானால் கொல்ல முடியவில்லை. அப்போது நரகாசுரன் மிகவும் கேவலமாகப் பேச, கோபம் கொண்ட சத்யபாமா வில்லை தன் கையில் எடுத்தாள். கிருஷ்ணர் அஸ்திரத்தைத் தர, நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாத பூமாதேவியின் அம்சமான சத்யபாமா அம்பை எய்தாள். நரகாசுரன் மடிந்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பகுதி இதுதான் என்று சொல்லப்படுகிறது. நரகாசுரனுக்கு வரங்கள் பல தந்து, பின் அவன்மேல் கோபம் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டிருந்த காமாக்யா தேவி, அசுரனின் வதத்திற்குப் பின் மீண்டும் வந்து கோவில் கொண்டாள் என்கிறார்கள்.