கந்தபுராணம் பகுதி பதினேழு
ஒம் சரவணபவ
வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன், அவரிடம் பேசினான். முருகா ! உன்னைப் பெற்றதால் அந்த பரமசிவனார் பாக்கியசாலி ஆகிறார் அன்பனே ! எங்கள் அசுர வம்சத்திற்கும், தேவ வம்சத்திற்கும் காலம் காலமாக தீராப்பகை இருந்து வருகிறது. அதை நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். உன் தந்தை பரமேஸ்வரனே எனக்கும், என் சகோதரர்களுக்கும் சகல சக்தியையும் அருளியிருக்கிறார். அவ்வகையில், உன்னையும் அவரைப் போலவே வழிபட காத்திருக்கிறேன். அதனால், எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே, என்றான் பணிவான வார்த்தைகளால். வடிவேலன் இடிஇடியென சிரித்தான்.தாரகா ! நன்றாக இருக்கிறது உன் பேச்சு. உலகத்தை சிருஷ்டிக்கும் பரமசிவனாரின் கருணையே உன்னை அழிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில், பரமசிவானார் உனக்கு வரமளிக்கும் போது என்ன சொன்னாரோ அதை மீறி விட்டாய். இறைவன் வரம் தருவது உலகத்திற்கு நன்மை செய்வதற்காக, நீயோ, உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறாய். பிற உயிர்களைத் துன்புறுத்துகிறாய். பிறரை மதிக்காதவனுக்கும் கொடுமைப்படுத்துபவனுக்கும் இறைவன் கொடுத்த வரங்கள் பலிப்பதில்லை. சிவனார் இட்ட கட்டளைப்படி உன்னை ஒழிக்கவே வந்திருக்கிறேன். உன் மரண ஓலையைப் பிடி, என்றார் கம்பீரமான குரலில். அவ்வளவு தான் ! தாரகனுக்கு பொறுமை போய், அசுரகுணம் தலைக்கேறி விட்டது. சிறுவனே ! இங்கே நின்று என்ன உளறிக் கொண்டிருக்கிறாய் ! நான் விஷ்ணுவையும், பிரம்மனையும், இந்திரனையும் வென்றவன். விஷ்ணு அவரது சக்கரத்தை என் மீது ஏவியபோது, அது என் நெஞ்சில் பட்டு பதக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார். அத்தகைய தைரியம் படைத்த என்னை ஒழித்து விடுவேன் என சாதாரணமாகச் சொல்கிறாயா ? என் முன் நிற்கும் தகுதி கூட உனக்கு இல்லை. ஓடி விடு. போய், தாய், தந்தையுடன் சுகமாக இரு, என்றான் ஆணவத்துடன். கர்வம் பிடித்தவனே ! தன் சுயபலத்தை தம்பட்டம் அடிப்பவன் வீரனே அல்ல ! தைரியசாலிகள் செயலில் தான் எதையும் காட்டுவார்கள். அதை மற்றவர்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள்; புகழ்ந்து தள்ளுவார்கள். உன்னை நீயே புகழந்ததன் மூலம் இறைவனிடம் பெற்ற வரத்தை இழந்து விட்டாய். வா போருக்கு, என்று அறைகூவல் விடுத்தார் முருகன். பொறுமையிழந்த தாரகன், முருகனின் மீது அம்பு மழை பொழிய, அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார் கந்தப்பெருமான். அதிபயங்கர யுத்தம் நடந்தது. எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கி, தாரகனின் தும்பிக்கையை துண்டு துண்டாக்கினார் வடிவேலன். ஆனால், அது மீண்டும் முளைத்தது. பல மாயங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிழைத்த அவன் ஒரு கட்டத்தில் கிரவுஞ்ச மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். கந்தன் கிரவுஞ்ச மலை மீது தன் வேலை எறிந்தார். அதன் சக்தி தாளாமல் மலையாய் நின்ற கிரவுஞ்சன் என்ற அந்த அசுரன். தன் உயிரை விட்டான். உயிரற்று சாய்ந்த மலையை வேலால் கிழித்த வேலவன். உள்ளிருந்த வீரபாகு மற்றும் வீரர்களை மீட்டார். அவர்கள் ஆரவாரத்துடன் வெளியே வந்தனர். மறைந்திருந்த தாரகன் வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற பெயர்களில் மூன்று வடிவங்களை எடுத்தான். மூன்று நகரங்களை அமைத்து அதில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான், பரமசிவனார் போல் உருமாறி, அந்த நகரங்களை எரித்தே அழித்தார். அங்கிருந்து தப்பிய தாரகனை வேலெறிந்து வீழ்த்தினார். சற்றும் எதிர்பாராத விதமாக தாரகன் போர்களத்தில் வீழ்ந்து மாண்டான். வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தாரகனின் படை சிதறியது. அவர்களை வீரபாகு தலைமையிலான தேவர் படைதுவம்சம் செய்தது, போர்களத்தில் ஒரு அசுர உயிர் கூட மிஞ்சவில்லை தாரகன் மடிந்தான் என்ற செய்தியறிந்து அவனது மனைவி கவுரியும், மற்ற ஆசைநாயகியரும் ஓடோடி வந்தனர். அன்பரே ! விஷ்ணுவாலும், தேவவேந்திரனாலும் வெல்ல முடியாதவரும், பரமசிவானாரிடம் சாகாவரம் பெற்றவருமான உங்களுக்கா இந்தக்கதி நேர்ந்தது ! இனி நீங்கள் சென்றுள்ள உலகத்திற்கே வருவோம். ஒரு சிறுவனிடம் உங்கள் கணவன் தோற்றான் என்று பிறர் பேசுவது எங்கள் காதில் விழும்முன் உங்களை நாடி வந்து விடுகிறோம், என்று கதறினர். தன் தந்தை இறந்த செய்தியறிந்து, தாரகனின் மகன் அசுரேந்திரன் ஓடிவந்தான். அவன், தந்தையின் உடலின் மீது விழுந்து கதறினான். அப்பா ! ஒரு சிறுவனிடம் தோற்று அசுர குலத்திற்கு தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே ! இது எப்படி சாத்தியமாயிற்று ? ஆயினும், உங்களுக்கு நேர்ந்த இழுக்கிற்கு பிராயச்சித்தம் செய்வேன், எந்த சிறுவன் உங்களைத் தோற்கடித்தானோ, அந்த சிறுவனுக்கு பாடம் புகட்டுவேன், இது சத்தியம், என்று சபதம் செய்தான். பின்னர் அகில், சந்தனக்கட்டைகளை அடுக்கி, அதன் மீது தந்தையின் உடலை வைத்து, சகல மரியாதைகளுடன் தகனம் செய்யச் சென்றான். அவனது தாய்மார்கள் தங்களையும் சிதையில் வைத்தும் தகனம் செய்யும்படி அடம்பிடிக்கவே. அவர்களையும் சிதையில் அமர வைத்து தீமூட்டினான். இறுதிக்கிரியைகளை முடித்த பின் கோபமும் வருத்தமும் பொங்க தன் பெரியப்பா, சூரபத்மனின் நகரான வீரமகேந்திர பட்டணத்தை வந்தடைந்தான்.
தொடரும்..🙏🌺
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 25 டிசம்பர், 2020
கந்தபுராணம் பகுதி பதினேழு
கந்தபுராணம் பகுதி பதினாறு
கந்தபுராணம் பகுதி பதினாறு
ஒம் சரவணபவ
வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன், அங்கிருந்து தப்பித்தால் போது மென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு, ஒரு குகையில் ஒளிந்திருந்தான். தேவப்படைகள் ஆராவாரம் செய்தன. இருப்பினும், அவனைக் கொன்றாக வேண்டும் என்ற முருகனின் கட்டளை வீரபாகுவை உந்தித்தள்ளவே, அவன் கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றானோ இல்லையோ, பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக் கொண்டான். இவனுடைய வருகைக்காகவே காத்திருந்த கிரவுஞ்சமலை தன் வாசலை மூடிக் கொண்டது. அது தாரகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டது. ஒரே இருள்... கண் தெரியாமல் திண்டாடினான் வீரபாகு. இருப்பினும், தட்டுத்தடுமாறி எங்காவது தாரகன் ஒளிந்திருக்கிறானா என தடவித்தடவி பார்த்தான். அங்கிருந்து வெளியே செல்லவும் முடியவில்லை. முருகா ! இதென்ன சோதனை. வீரபாகு என்ற சொல் கேட்டால் உலகமே நடுங்கிய காலம் முடிந்து விட்டதா ? என் வீரச்சரிதம் அவ்வளவு தானா ? உன் கட்டளையை நிறைவேற்றாமல் தோற்று விடுவேனா ? உமா தேவியின் புத்திரனே ! என்ன செய்வது என புரியவில்லையே, என முருகனைத் தியானித்தான். உள்ளே சென்ற வீரபாகு வெளியே வராதது கண்டு தேவப்படைகள் வெளியே வருந்தி நின்றனர். உடனே வீரகேசரியும், லட்சம் பூதகணங்களும் குகைக்குள் புகுந்து, வீரபாகுவை மீட்கச் சென்றனர். படைகள் தன்னருகே வந்ததும், கிரவுஞ்ச மலை தன் வாசலை மிகப்பெரிய அளவில திறந்தது. அவர்கள் காற்றினும் வேகமாக உள்ளே புகுந்தனர். அவ்வளவு தான். லட்சம் பேரையும் உள்ளடக்கி வாயை மூடிவிட்டது. எங்கும் இருள். படைகள் திணறின.இதுதான் சமயமென வெளியே நின்ற தேவப் படைகளை அசுரர்கள் துவம்சம் செய்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தாரகன் வேறொரு வாசல் வழியாக வெளியேறி விட்டான். அட்டகாசமாக சிரித்தான். வீரபாகுவாம் வீரபாகு... அவனை ஒழித்து விட்டேன், என ஆர்பரித்து சிரித்தான். அசுரப்படைகள் ஹோவென எழுப்பிய கூச்சல் அந்தப் பகுதியை நிலநடுக்கம் ஏற்பட்டால் போல் நடுங்கச் செய்தது. அப்போது நாரதர் அங்கு வந்தார். சிதறி ஓடிய படையைக் கண்டார். உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். முருகா ! நீ இருந்தும் இப்படி நடக்கலாமா ? தாரகன் உன் தம்பி வீரபாகு, வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா என்பதே தெரியவில்லை. இன்னும், நீ அமைதியாய் இருந்தால், தேவர்களின் இனமே அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா ? என்றார். முருகன் ஆவேசப்பட்டார். வாயுவை அழைத்தார். வாயு பகவானே ! நீர் உடனடியாக தேரில் குதிரைகளைப் பூட்டு, தேர் கிரவுஞ்ச மலைக்கு செல்லட்டும், என்றார். நாரதர் மகிழ்ந்தார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். அவர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும், சூரியனையும் மிஞ்சும் ஒளியையும், இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான். அந்த இளைஞனைப் பார்த்ததும். அவன் மனதில் தானாகவே ஒரு மரியாதை பிறந்தது. ஏனோ அவன் அருகில் சென்று அவனை பார்க்க வேண்டும் என தோன்றியது. அவன் தன் தூதனை அழைத்தான்.தூதனே ! அந்த தேரில் நிற்கும் இளைஞன், இவ்வளவு தேஜசுடன் திகழ்கிறானே ! இதுபோன்ற அழகுள்ளவனை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே, சிவபெருமானின் நெற்றியிலிருந்து கிளம்பும் தீப்பொறிகளை விட அதிக பிரகாசமாக இவன் முகம் விளங்குகிறதே ! இவனைப் பார்த்தால், கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருக்கிறதே ! அழகில் மன்மதன் கூட இவன் அருகே நிற்க முடியாது போல் தோன்றுகிறதே ! என்றான். தூதன் அவனிடம், எங்கள் மாமன்னரே ! தாங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே. இவ்வுலகில் இவரை யாரோ என நினைத்துவிடாதீர்கள். ஆலகால விஷத்தை உண்டவரும், யாராலும் அணுக முடியாதவரும், மன்மதனை எரித்தவரும், எமனையே உதைத் தவருமான பரமேஸ்வரனின் இளைய புத்திரன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து அவதாரம் செய்தவன். அவனை வடிவேலன் என்றும், முருகன் என்றும், குமரன் என்றும், கந்தன் என்றும், கடம்பன் என்றும், கார்த்திகேயன் என்றும் இன்னும் பல திருநாமங்களாலும் புகழ்வர் அவனது பக்தர்கள். இவனை எதிர்க்க இவரது தந்தை பரமேஸ்வரனால் கூட முடியாது, என்றான். உடனே தனது தேரை முருகனின் தேர் அருகில் கொண்டு நிறுத்தும்படி சாரதிக்கு உத்தரவிட்டான். முருகனைக் கண்கொட்டாமல் பார்த்தான். ஆறு முகங்கள், 12 கரங்கள், அனைத்திலும் ஒளிரும் ஆயுதங்கள், கமலம் போல் முகம்... இத்தனையும் தாரகனைக் கவர்ந்தன. மெய்மறந்து அப்படியே நின்றான். இந்த உலகில் கெட்டதுக்கு தான் காலம்; நல்லதுக்கு காலமில்லையே, என்பார்கள். தானம், தவமெல்லாம் செய்தும் கடவுள் சிலர் பக்கம் வருவதே இல்லை. முனிவர்கள் கூட பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் தான் கடவுள் காட்சி கொடுப்பாராம். ஆனால், கேடு கெட்ட குணங்களை உடைய ஒரு அசுரன் முன்னால் அவன் கூப்பிடாமலே வந்து நிற்கிறார். தன்னை எதிர்க்கப் போகிறான் எனத் தெரிந்தும் நிற்கிறார். ஏன் தெரியுமா ? நல்லவர்களை ஆட்கொள்வது இறைவனுக்கு எளிது, அவனுக்கு சொர்க்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டு விடுகிறது. அசுரகுணங்கள் கொண்டவர்களைத் தான் திருத்தி ஆட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான் கடவுள் கெட்டவர்கள் பக்கமே அதிகமாகச் செல்கிறார். கெட்டவர்கள் பணக்காரர்களாக இருக்கும் ரகசியம் கூட இதுதான். அதற்காக, நான் கெட்டவனாக மாறி விடட்டுமா ? என கேட்காதீர்கள்.
தொடரும்...💐🙏
கந்தபுராணம் பகுதி பதினைந்து
கந்தபுராணம் பகுதி பதினைந்து
ஒம் சரவணபவ
முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு ! நான் யாரையும் அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. என்னை தனிப்பட்ட முறையில் திட்டுபவர்களைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் அடியார்களுக்கு ஒரு துன்பமென்றால், அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன். பத்மாசுரனின் சகோதரர்கள் அதைத் தான் செய்கிறார்கள். எனவே, அவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன். முதலில், இந்த தாராகசுரனை ஒழிக்க வேண்டும். யானை முகம் கொண்ட அவனையும், அவனது படையையும் சாதாரணமாக எடை போட்டு விடாதே. எப்போதுமே, எதிரிகள் நம்மை விட வலிமை வாய்ந்தவர்கள் என்பதை யாரொருவன் அலட்சியம் செய்கிறானோ, அவனை வெற்றிதேவி நெருங்கமாட்டாள். இதை நீ மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீ உடனே தாரகனின் கோட்டைக்குள் செல். நமது படைத்தலைவர்கள் ஐம்பத்து நான்கு பேரை உடனழைத்துச் செல். அவர்களது தலைமையில், நம்மோடு வந்த படையில் பாதி பேரை அணிவகுக்கச் செய். ஒட்டுமொத்த தலைமை பொறுப்பு உன்னைச் சேரும். துணைப் படைத்தலைவராக தம்பி வீரகேசரியை நியமித்து விடு. உம்...சற்று கூட தாமதிக்க வேண்டாம். நான் பின்னாலேயே கிளம்பி வருகிறேன், என்றார். வீரபாகு படைகளை கணப்பொழுதில் ஆயத்தப்படுத்தி, தாரகனின் கோட்டை நோக்கி புறப்பட்டான். இந்நேரத்தில், அசுரர்கள் வாழ்ந்த மகேந்திரபுரி பட்டினத்தில் அபசகுனங்கள் தோன்றின. கழுதைகள் கத்துவது போல மேகக்கூட்டங்கள் சப்தம் எழுப்பின. வானத்தில் இருந்து ரத்த மழை பெய்தது. நரிகள் காரணமின்றி ஊளையிட்டன. மேகம் சூழ்ந்ததால் சூரியனைக் காணவில்லை. அதிகாலை வேளையில் சூரியின் உதிக்காத நாள் ஒரு நாட்டுக்கு நல்லதைச் செய்யாது. மக்கள் துன்பப்படுவர். கடும் மழை காலத்தில் கூட சூரிய ஒளி அதிகாலைப் பொழுதில் தெரியாவிட்டால் ஆபத்து விளையும். அசுரர் வீட்டுப் பெண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து அலங்கரிக்கச் சென்ற போது, தங்கள் கணவன்மாரின் தலையற்ற உடல்கள் கண்ணாடியில் தெரிவது போல் கண்டு அலறினர். நீர்நிலையில் வானவில் தெரிந்தது. இவையெல்லாம், தங்கள் நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரப்போகிறது என்பதை உணர்ந்தனர் அசுரர்கள். ஆனாலும், ஜென்மபுத்தி மாறுமா ? அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு பொடியாக்கி விட்டன வீரபாகுவின் படைகள். கோட்டைக்குள் முருகனின் படை நுழைந்து விட்டது யென்ற தகவல், தாரகனுக்கு பறந்தது. உடனடியாக அவன் போர் முரசறைந்தான். கையில் பல்வேறு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, தாரகனின் படைகள் தேவ படைகளுடன் மோதின. இருதரப்பிலும் பயங்கர சேதம். இருதரப்புமே சமநிலையில் தான் போரிட்டன. வீரபாகுவை ஒழித்துக் கட்ட தாரகனே நேரில் போர்களத்துக்கு வந்து விட்டான். அவனை துணைத்தளபதி வீரகேசரி எதிர்த்தான். இருவரும் அம்பு மழை பொழிந்தனர். தாரகன் விடுத்த அம்புகளை வீரகேசரி தன் அம்புகளால் அடித்து நொறுக்க, பதிலுக்கு வீரகேசரி விடுத்த அம்புகளை, தாரகன் தன் கதாயுதத்தால் அடித்து நொறுக்கி விட்டான். ஒரு கட்டத்தில், வீரகேசரி மீது அதிபயங்கர அம்புகளை ஏவினான். அவற்றை தடுக்க முடியாத கேசரி மயக்கமடைந்து கீழே விழுந்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட வீரபாகு, தாரகனின் முன்னால் வந்தான். தாரகா ! மரியாதையாக சரணடைந்து விடு. என் கண்ணில் பட்ட எதிரிகள் உயிர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என் காலில் விழு என எச்சரித்தான். தாரகன் நகைத்தான். ஏ பொடிப்பயலே ! உன் தலைவன் முருகனே எனக்கு தூசு. அப்படியிருக்க, நீயெல்லாம் ஒரு ஆளா! நீ அனுப்பிய உன் துணைப்படைத்தளபதி, என் அம்புகளின் தாக்கத்தால் மயங்கிக்கிடப்பதைப் பார்த்துமா, உனக்கு புத்தி வரவில்லை. உன்னை என் ஒரே அம்பில் மாய்த்து விடுவேன். சிறுவன் என்பதால் விடுகிறேன். ஓடி விடு என எச்சரித்தான். வீரபாகு பயங்கரமாக சிரித்தான். அம்பு மழை பெய்யச் செய்தான். எதற்கும் கலங்காத தாரகன், தன் தும்பிக்கையாலேயே அத்தனையையும் நொறுக்கிவிட்டான். கோபத்தில் தன் கதாயுதத்தால், பூமியின் மீது ஓங்கி அடித்தான். அதன் பலம் தாங்காத பூமி, இரண்டாகப் பிளந்துவிட்டது.வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் வெப்பத்துக்கே உண்டு என்று அறிவியல் ரீதியாகச் சொல்வார்கள். இதை நமது ஆன்மிகம் என்றோ கண்டுபிடித்திருக்கிறது. தாரகன் வீரபாகு மீது ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை எய்தான். இந்த அம்பு எய்யப்பட்டால், அந்த இடம் தீப்பிடித்து நாசமாகி விடும். இப்போது குண்டு போட்டால், தீப்பிடிப்பது போலத்தான் இதுவும். பதிலுக்கு வீரபாகுவும் அதை விட சக்தி வாய்ந்த ஆக்னேய அஸ்திரத்தை எய்தான். தாரகன் விடுத்த அம்பால் எரிந்த தீயை, வீரபாகுவின் அம்பு உருவாக்கிய தீ அணைத்து விட்டது. திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்த பிறகும், கோபம் தணியாமல் நிற்க, சிவபெருமான் நரசிம்மத்தை விட அதிக கடுமை கொண்ட சரபேஸ்வர வடிவம் எடுத்து, நரசிம்மரின் கோபத்தை அடக்கியது போன்ற நிலைமை இங்கே இருந்தது. இப்படியாக வாருணம், ஸெளரம், நாராயணாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களால் இருவரும் போரிட்டனர். எதற்கும் பணியாத தாரகனை நோக்கி, தன்னிடமிருந்து கடைசி அஸ்திரமும், எப்பேர்ப்பட்ட இடத்தையும் பொடிப்பொடியாக்கும் வீரபத்திரம் என்ற அஸ்திரத்தை வீரபாகு எய்தான். நெருப்பு ஜூவாலையைக் கக்கிக் கொண்டு, அது தாரகனை நோக்கிப் பாய்ந்தது. அதன் உக்கிரத்தை தாரகனால் தாங்க முடியவில்லை.
தொடரும்..🌹🙏
கந்தபுராணம் பகுதி பதினான்கு
கந்தபுராணம் பகுதி பதினான்கு
ஒம் சரவணபவ
அனைத்தும் அறிந்த முருகன், அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல, பெண்களே ! நீங்கள் யார் ? எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் ? என்றார். ஐயனே ! இந்த அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தாலும், தங்களைப் போல் கருணையுள்ளவரும், அழகானவருமாக யாருமில்லை. கருணைக்கடலே ! நாங்கள் கேட்கும் வரத்தை எங்களுக்கு மறுக்காமல் தர வேண்டும், என்றனர். அதற்கென்ன தருகிறேனே. என்ற முருகனிடம், அவர்கள் ஏதும் கேட்கத் தோன்றாமல் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றனர். பெண்ணே மாப்பிள்ளையிடம் தன் காதலைத் தெரிவிப்பது என்பது இந்தக்காலத்தில் ஏற்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். முருகப்பெருமானே காதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான் ! அப்பெண்களின் விருப்பத்தை அறிந்த முருகன், அவர்களை அணைத்துக் கொண்டார். கன்னியரே ! என் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை நானறிவேன். ஆனால், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என் பிறப்பின் நோக்கம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்ல ! சூரபத்மனை அழிப்பதற்காக என் தந்தை என்னைப் படைத்தார். மேலும், காதலுக்கு பெற்றவர்கள் அங்கீகாரம் தர வேண்டும். முதலில், பெற்றவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். பெற்றவரைப் பகைத்து ஏற்படும் காதல் நிலைப்பதில்லை. எனவே, நம் காதல் கனிந்து திருமணம் ஆகும் வரை. நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், என்றார். அந்தக் கன்னியர் அவரது திருவடிகளில் விழுந்து, அவரது கட்டளைக்கு அடிபணிவதாகவும், அவரது பணி முடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முருகன் அமிர்தவல்லியிடம், அமிர்தா ! நீ தேவலோகம் செல். தேவலோகத் தலைவன் இந்திரனின் மகளாக வளர்ந்து வா. உன் சகோதரி சவுந்தர்யா, பூலோகம் சென்று, அங்கே ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சிவமுனிவரின் மகளாக வளர்ந்து வரட்டும். சூரபத்மவதம் முடிந்த பிறகு, உங்களை நான் மணந்து கொள்கிறேன், என்றதும். அப்பெண்கள் மகிழ்வுடன் தலையசைத்தனர். பின்னர் முருகன் தன்வடிவத்தை மாற்றிக் கொண்டு, பாலமுருகனாகி கைலாயம் சென்றார். அவரை அள்ளியெடுத்த பார்வதி, பரமேஸ்வரர் அவரைத் தங்கள் நடுவில் இருத்திக் கொண்டனர். இக்காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் ஓடோடி வந்தனர். காணக்கிடைக்காத சோமாஸ்கந்த வடிவத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தனர். (இப்போது கூட சில கோயில்களில், முருகன் சன்னதி நடுவில் இருக்க, சிவ, பார்வதி சன்னதி இருபுறங்களிலும் இருப்பதைக் காணலாம். தமிழகத்தில் மிகப்பெரிய சோமாஸ்கந்த சன்னதி. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ளது) இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், சிவபெருமானிடம், ஐயனே ! முருகப்பெருமான் தங்களுக்கு பாலனாகவும், வெளியே வந்தால் சுப்பிரமணியராய் விஸ்வரூபம் எடுக்கும் அபார சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார். அவரைக் கொண்டு சூராதிசூரர்களை வேரறுக்க வேண்டும். தேவருலகம் பாதுகாக்கப்பட வேண்டும், என்றனர். ஒருவன் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், அவனிடம் ஏதாவது கேட்டால், உடனே கொடுத்து விடுவான். கணவனின் மகிழ்ச்சியான சூழலைப் பயன்படுத்தி மனைவியும், மனைவியின் மகிழ்ச்சியைப் பயன்படுத்தி கணவனும் காரியம் சாதித்துக் கொள்வார்கள் இல்லையா ? அதுபோல், தேவர்களும் சமயம் பார்த்து கேட்ட கோரிக்கை உடனே ஏற்கப்பட்டது. சிவபெருமான் தன் மைந்தனிடம், முருகா ! உன் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோரை அழிப்பது மட்டுமல்ல. அவனது வம்சத்தில் ஒருவர் கூட இந்த பூமியில் வாழக்கூடாது. பலலட்சம் அசுரர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிழைத்திருந்தால் கூட உலகிற்கு ஆபத்து. அவர்களை வேரறுத்து விட வேண்டும், என்றதுடன், அவரது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார்.பார்வதிதேவி தன் மகனைத் தழுவி, பாலகனே ! நீ பகைவர்களை அழித்து, வெற்றி வேலனாக திரும்பி வா, என ஆசியளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு, சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். காற்றினும் கடுகிச் செல் என்று சொல்வதை இசைத்தான். காற்றை விட வேகமான ஊடகம் உலகில் வேறு ஏதுமில்லை. எனவே முருகனுக்கு வாயுவே சாரதியாக அமர்த்தப்பட்டான். பிரம்மரிஷி வசிஷ்டரும், தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா, முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள், யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின. சூரர்கள் ஆட்சி செய்யும் மாயாபுரி பட்டணத்தை அடையும் முன்பாக ஒரு பெரிய மலையை படைகள் அடைந்தன. அப்போது, நாரதர் முருகனிடம் சுப்பிரமணியா ! இதை மலையெனக் கருதாதே. அகத்தியரிடம் ஒரு காலத்தில் ஒரு அசுரன் சேஷ்டை செய்தான்.
தொடரும்..💐🙏
கந்தபுராணம் பகுதி பதிமூன்று
கந்தபுராணம் பகுதி பதிமூன்று
அன்பு மகனே ! நீ கூறுவது வாஸ்தவம் தான். தனக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால், அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மந்திரங்களை பிறரறிய வெளிப்படுத்துபவன், நரகத்தையே அடைவான். ஓம் என்பது சாதாரணமான மந்திரமல்ல. உலகம் உருவாவதற்குரிய ரகசியங்களை உள்ளடக்கிய மந்திரம். சரி... மகனே! அதன் பொருள் எனக்கும் கூட தெரியாது. அதற்காக பிரம்மனைச் சிறையில் அடைத்தது போல் என்னையும் அடைத்து விட மாட்டாயே ! என்று சொல்லிச் சிரித்தார் சிவன். சிவனால் உருவாக்கப்பட்டதும் அவருக்கே மட்டுமே பொருள் தெரிந்த ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தனக்குத் தெரியாதென்று அவர் ஏன் மறைத்தார் தெரியுமா ? அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பாபா பிளாக்ஷீப் ஹேவ் யூ எனி உல் என்ற ஆங்கிலப்பாட்டு மிக நன்றாகவே தெரியும். ஆனால், தெரியாதவர்கள் போல் நடித்து, எல்.கே.ஜி., படிக்கும் தங்கள் குழந்தையைச் சொல்ல வைத்து கேட்பார்கள். காரணம், தங்கள் குழந்தையின் மழலை மழையில் நனைய வேண்டுமே என்பதற்காக, இப்படித்தான் சிவனுக்கும் ஆசை.
தனக்கு அதன் பொருள் தெரிந்தாலும், தன் மகனின் வாயால் கேட்டால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் தான். அது மட்டுமல்ல, தன்னை விட தன் மகன் உயர்ந்தவன் என்பதை பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட, வயதில் பெரியவராயினும், தன்னிலும் சிறியவர்களுக்கு சில விஷயங்கள் தெரியுமானால், அதைக் கேட்டறிவதில் தவறு இல்லை என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காக ! இதற்காக கைகட்டி, வாய் பொத்தி, முட்டுக்காலிட்டு, முருகன் ஆசனத்தில் இருக்க, மிகவும் பணிவாக அவரருகில் கீழே அமர்ந்து காதைக் கொடுத்தார். தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தனர், எங்கும் நிசப்தம். இளைஞனாயிருந்த முருகன் பால முருகனாக மீண்டும் மாறினான். தந்தையின் காதில் மந்திரத்தின் பொருளைச் சொன்னான்.
ஆன்மிக உலகம் ஓம் என்ற பதத்திற்கு பல விளக்கங்களைச் சொல்கிறது. இதற்குரிய பொருளாக கணிக்கப்படுவது என்னவென்றால், இந்த உலகமே நான் தான் என்பதாகும். ஆம்...சிவன் தன் ஆத்மாவின் வடிவமாக முருகனைப் பிறப்பித்தார். அவரது ஒட்டுமொத்த சக்தியும் அவருக்குள் அடக்கம் என்று பொருள் சொல்வதுண்டு. பின்னர் கயிலை திரும்பிய சிவன், மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் மனம் மகிழ்ந்தாள். முருகப்பெருமானின் புகழ் வைகுண்டத்திலும் பரவியது. அவனது ஆணையால் தான், திருமால் உலகத்திலுள்ள அரக்கர்களை அழித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் முருகனுக்கு மேலும் பெருமை தந்தது.
இதற்காக அவர் தசாவதாரம் எடுத்து வருவதாக சிவனே பார்வதியிடம் சொன்னார். சூரபத்மனை அழிக்க வந்த தன் மருமகனுக்கு தன் சக்தியை வழங்கவேண்டும் என்று விரும்பினார் உபேந்திரன் என அழைக்கப்படும் திருமால் பாற்கடலில் பையத்துயின்ற அந்த பரந்தாமன், ஒருமுறை விழித்துப் பார்த்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கொடிகளை ஒத்த இடையை உடைய அழகிய பெண்கள் வெளிப்பட்டனர். தந்தையே வணக்கம் ! என்ற அப்பெண்களில் முதலாவதாக வந்தவள் அமுதவல்லி, அடுத்து வந்தவள் சவுந்தர்யவல்லி. இருவரையும் உச்சிமோந்த திருமால், என் அன்பு புத்திரிகளே ! நீங்கள் இருவரும், என் மருமகன் முருகனுக்காக பிறந்தவர்கள். அவனின் புகழ் எல்லையற்றது, என்று கூறி முருகனின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட அந்த பெண்களின் உள்ளத்தில், முருகனைப் பார்க்காமலேயே காதல் பிறந்து விட்டது.
தங்கள் அன்புக்காதலனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது. ஒருநாள் அமுதவல்லி, தன் தங்கையிடம் சவுந்தர்யா ! நாம் முருகப்பெருமானுக்காகவே பிறந்திருக்கிறோம். உலகில் வல்லவன் யாரோ, அவனை அடைவதில் பெண்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வீரம்மிக்க ஆண்கள் உலகில் ஆங்காங்கே தான் இருப்பார்கள். தன் பக்கத்தில் இருப்பவனுக்கும், நண்பனுக்கும், சக மனிதனுக்கும் துன்பமிழைப்பவன் வீரன் அல்ல. பிறரது நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிபவன் எவனோ, அவனே சுத்த வீரன். முருகப்பெருமான் தனக்காக அல்லாமல், உலக நன்மை கருதி, சூரபத்மனை அழிக்கப் பிறந்திருக்கிறார். அவர் நம் கணவரானால், நம்மைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யாருமிருக்க முடியாது. அமிர்த சவுந்தர்ய முருகன் என்று அவர் பெயர் பெறுவார்.
அமுதமாகிய நான் அவருடன் இணைந்தால், அழிவில்லாத புகழ் பெறுவேன். சவுந்தர்யமாகிய நீ அவருடன் இணைந்தால், அவர் இளமைப் பொலிவுடன் திகழ்வார், என்றான். இருவரும் என்றேனும் ஒருநாள், முருகன் தங்களைத் தேடி வருவான் என எதிர்பார்த்தனர். காலம் சென்றதே தவிர முருகன் வரவில்லை. எனவே, இருவரும் தங்கள் அலங்காரங்களைக் களைந்து விட்டு, வெள்ளை பட்டு உடுத்தி, நாணல் காட்டுக்குச் சென்றனர். இடுப்பில் ஒட்டியாணத்துக்கு பதிலாக, நாணல்புல்லை கயிறாகத் திரித்து கட்டிக் கொண்டனர். முருகனின் புகழ்பாடி தவத்தில் ஆழ்ந்தனர். நீண்ட நாட்களாக தவம் தொடர்ந்து. அந்த கன்னியரின் தவத்தை மெச்சிய முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றினார். அப்பெண்கள் பேருவகை அடைந்தனர். என்ன செய்ய வேண்டுமென்பது புரியவில்லை. கைகூப்பி வணங்கினர். ஓடிவந்து, ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்..
தொடரும்...🌺🙏
கந்தபுராணம் பகுதி பன்னிரெண்டு
கந்தபுராணம் பகுதி பன்னிரெண்டு
ஒம் சரவணபவ
பிரம்மன் முருகனைப் பற்றி ஏற்கனவே அறிவார். அவன் தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல; சாட்சாத் பரமசிவனின் நேரடி வடிவம் என்பதை உணர்ந்தவராதலால், மிகவும் பவ்வியமாக முருகன் முன் கை கட்டி நின்றார். வணக்கம் சிவமைந்தரே ! தாங்கள் அழைத்த காரணம் என்னவோ ? முருகன் பவ்வியமாக பேச ஆரம்பித்தான். பிரம்மனே, நீர் எங்கிருந்து வருகிறீர்? எதற்காக இங்கு வந்தீர் ? முருகா ! நான் பரமனைத் தரிசிக்க வந்தேன். என்னுலகம் சத்தியலோகம். அங்கிருந்து தான் என்படைப்புத்தொழிலை நடத்துகிறேன். இவ்வுலகத்தில் இயக்கத்துக்கு காரணமானவனே நான் தான் ! என்று பெருமையடித்துக் கொண்டார் பிரம்மன். ஓ! அப்படியானால் நீர் பெருமைக்குரியவர் தான். சரி... எந்த அடிப்படையில் நீர் உயிர்களைப் படைக்கிறீர் என நான் தெரிந்து கொள்ளலாமா ? என்று ஒன்றுமறியாதவன் போல் அப்பாவியாய்க் கேட்டான் முருகன். சிறுபிள்ளையான உனக்கு அதெல்லாம் புரியாது முருகா ! நான் வரட்டுமா ? என்றார் பிரம்மா. முருகனுக்கு கோபம் வந்து விட்டது. சற்றே அவரை அதட்டி நிறுத்திய முருகன், ஓய் ! நான் கேட்டதற்கு பதில் சொல்லி விட்டு புறப்படும். உம் இஷ்டத்துக்கு என் வீட்டுக்குள் வந்தீர். உம் இஷ்டத்துக்குப் போவதாகச் சொல்கிறீர் ! மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர். உம்.... என்றதும் நடுங்கிவிட்டார் பிரம்மா. உலகத்தையே கலக்கிய ஆட்டை அடக்கியவன் முருகன். நாமெல்லாம் அவன் முன் எம்மாத்திரம் ? என்பதை நினைவுபடுத்திக் கொண்டு திரும்பவும் கை கட்டி நின்று, முருகப்பெருமானே ! எனையாளும் சிவ மைந்தனே ! படைப்பின் இலக்கணத்தைச் சொல்கிறேன் கேள். படைப்புகள் ஓம் என்ற பிரணவத்தின் அடிப்படையில் அமைகின்றன, என்றார். ஓஹோ ! ஓம் என்று சொன்னீரே ! அந்த மந்திரத்தின் பொருள் தெரிந்தால் தானே நான் படைப்பின் ரகசியத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும், என்றான் முருகன். முருகா ! இது புரியவில்லையா உனக்கு ! ஓம் என்றால் பிரம்மன். அதாவது அந்த மந்திரத்துக்குரிய பொருளே நான் தான். நான் தான் எல்லாம், என்றார். இதைக்கேட்டு முருகன் ஏதும் சொல்லவில்லை. வீரபாகு ஓடி வந்தான். பிரம்மாவின் தலையில் ஓங்கிக் குட்டினான். பிரம்மா ! என்ன உளறுகிறாய். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாத நீ, படைக்கும் தகுதியை இழந்தாய். போதாக்குறைக்கு பொய்யும் சொல்கிறாய். நான்கு தலைகள் இருந்தும் உமக்கு அறிவு மட்டும் இல்லவே இல்லை, என்றவன் அவரை இழுத்துப் போய், சிறையில் அடைத்து விட்டான். பிரம்மனுடன் வந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பிரம்மாவை விடுவிக்க அவர்கள் நேராக சிவனிடம் ஓடினர். அங்கு போனால் தானே சிபாரிசுக்கு ஆள் பிடிக்க முடியும் ! பிரம்ம லோகத்தினர் சொன்னதை சிவபெருமான் புன்னகையுடன் கேட்டார். நடந்ததை எல்லாம் நன்றாய் அறிந்த அந்த பரம்பொருள், இந்த உலகத்தை முருகனே படைத்துக் கொண்டிருப்பதை கண்டார். மகனின் அளப்பரிய அறிவாற்றலை நேரில் காணப் புறப்பட்டார் அவர். குழந்தை வேலன் படைக்கும் தொழிலைச் செய்து கொண்டிருப்பதை மூன்று கண்களாலும் மகிழ்வோடு பார்த்தார். நம் வீட்டுக் குழந்தைகள் களிமண்ணில் பொம்மை செய்தாலோ, அழகான சித்திரங்கள் வரைந்தாலோ, திருக்குறளை அடிபிறழாமல் மழலை மொழியில் சொன்னாலோ, எப்படி மகிழ்வோமோ, அதுபோல் தன் குழந்தையின் சிருஷ்டியைப் பார்த்து பார்த்து பூரித்தார். வேலனை மார்போடு அணைத்து முத்த மழை பொழிந்தார். முருகா ! நீ செய்தது என்னவோ நியாயம் தான் ! அதற்காக உன்னிலும் வயதில் பெரியவருக்கு மரியாதை தந்திருக்க வேண்டாமா ? பிரம்மனை விட்டு விடு, என்றார் தந்தையே ! இதென்ன நீதி ! எனக்காக என் தம்பிகள் இணைந்து இந்த ஸ்கந்தகிரியை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவன் நான். உங்கள் லோகத்துக்கு வருபவர்கள். என்னையும் வணங்க வேண்டும் என்பது நீங்கள் வகுத்த நியதி. இதை மீறினார் பிரம்மா. அது மட்டுமல்ல, ஒரு தொழிலைச் செய்பவன், அது பற்றி தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்ற பிரணவம். அதற்குரிய பொருளே அவருக்கு தெரியவில்லை. அப்படியிருக்க, அந்த அஞ்ஞானி படைப்புத்தொழில் செய்ய அதிகாரமே இல்லையே. அதனால், அவரை சிறையில் அடைத்திருக்கிறேன். இது என் உள்நாட்டு விஷயம். இதில் தலையிடாதீர்கள், என்றான். சிவன் இது கேட்டு மகிழ்ந்தாலும், கோபமடைந்தார் போல்காட்டிக் கொண்டு, முருகா ! பிரம்மனை விடுதலை செய் என்று சொல்வது உன் தந்தை. தகப்பனின் சொல்லை மீறுவது மகனுக்கு அழகல்ல, என்றார். தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்த முருகன். அவரை விடுவித்து விட்டான். பிரம்மன் தலைகுனிந்து நின்றார். பிரம்மா ! கவலைப்படாதே. ஓம் என்ற மந்திரத்தின் பொருளை இனியாவது அறிந்து கொள். தெரியாமல் ஒரு பணியைச் செய்யக் கூடாது என்ற முருகனின் வாதம் சரியே, என்றார் சிவன். தேவர்கள் எல்லாம் பொருளைத் தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது முருகன் சொன்னான். தந்தையே ! இது சாதாரண விஷயமல்ல. மிகப்பெரிய ரகசியம். இதை உலகத்தினர் யாரும் அறியக் கூடாது. அதற்கு சில தகுதிகள் வேண்டும் என்பதை தாங்கள் தானே அறிவுறுத்தியிருக்கிறீர்கள். அந்தத் தகுதிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், என்றான்.
தொடரும்..🌺🙏
கந்தபுராணம் பகுதி பதினொன்று
கந்தபுராணம் பகுதி பதினொன்று
ஒம் சரவணபவ
விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம். எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான். தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒரு கலாட்டா செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். எல்லாரையும் கலாட்ட செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு அதற்கு அசைபவனா என்ன ! அந்த வீரச்சிங்கம், ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று. இந்த சம்பவத்தை வாழ்வியலோடு ஒப்பிடலாம். கடவுள் இருக்கிறார் என்பது தெரிந்தும், ஒவ்வொரு ஜீவனும் தங்களை உயர்ந்த ஒரு பிறவியாகக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் திரிகின்றன; அநியாயம் செய்கின்றன. இறைவன் அவற்றை தம் பக்கம் இழுக்கிறான். அவை அவனைச் சரணடைந்தால், தனக்கும் ஐக்கியமாக்கிக் கொள்கிறான். திருந்தாத ஜென்மங்களை கடுமையாகச் சோதிக்கிறான். இங்கே ஆடு அடங்கிப் போனதால், அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க ! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, சிவமைந்தனே இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார். முருகன் சிரித்தான். நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையில் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும், என்றார். நாரதர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இதன்பிறகு கைலாயம் திரும்பினார் முருகன். ஒருநாள் நான்முகனான பிரம்மா சிவதரிசனத்துக்கு வந்தார். இறைவனை வணங்கிவிட்டு புறப்பட்டார். அப்போது வழியில் முருகன் தன் தளபதிகளோடு உரையாடிக் கொண்டிருந்தான். பிரம்மன் அவனைப் பார்த்தும் கண்டுக் கொள்ளாமல் சென்றார். ஓய் பிரம்மா ! இங்கே வாரும், என்றான் முருகன்.
தொடரும்...🙏🌸
கந்தபுராணம் பகுதி பத்து
கந்தபுராணம் பகுதி பத்து
ஒம் சரவணபவ
மேருமலையையே கிள்ளி எறியும் பாலமுருகனின் செயல்கண்டு இந்திராதி தேவர்கள் ஆச்சரியமும் ஆத்திரமும் கொண்டனர். உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற மாயை கண்களை மறைத்தது. எனவே, சிறுவன் என்றும் பாராமல், முருகனைத் தட்டிக் கேட்டனர்.ஏ சிறுவனே ! உன் விளையாட்டை நிறுத்தப் போகிறாயா, இல்லையா ? என இந்திரன் ஆவேசமாகக் கேட்டான். தேவர் தலைவனே ! நானோ சிறுவன். நீயோ பெரும்படையுடன் வந்துள்ளாய். சிறுவர்கள் விளையாடுவது என்பது இயற்கை தானே ! என் விளையாட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே, என்றான். வருணன் இந்த பேச்சின் குறுக்கே புகுந்தான். கடலுக்குள் புகுந்து ஆமைகளையும், திமிங்கலங்களையும் கசக்கி பிழிந்து விளையாடுகிறாய். இது தவறில்லையோ ? என்றான். வருணனே ! பிதற்றாதே. பூலோகத்தில் குழந்தைகள் ஏரிகளில் இறங்கி மீன்பிடித்து விளையாடுகிறார்கள். நானும் ஒரு சிறுவன் தான். என் வீரத்தை சுயசோதனை செய்து கொள்ளும் பொருட்டு அவற்றை பிடித்து விளையாடுகிறேன். ஒரு வேளை என் கையால் அவை உயிர்விட்டால் கூட, அவற்றுக்கு முக்தியே கிடைக்கிறது. பிறப்பற்ற நிலையால் ஆனந்தம் கொண்டு, அவை சிவலோகப் பதவியை அடைந்துள்ளன. கணங்களாகவும், என் தாயின் கண்களுக்கு அழகு சேர்ப்பனவாகவும் அவை உருவெடுத்துள்ளன. அதனால் என் அன்னை மீனாட்சி என்ற திருநாமம் பெற்றிருக்கிறாள். தேவர்களே ! என் பிறப்பின் ரகசியம் உங்களுக்கு மறந்து விட்டதோ ! நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ? என்றார். தேவர்களும் முருகனை எதிர்த்துப் பேசினர். குழந்தாய் ! அந்த சிவனும், பார்வதியுமே ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும் தன்மை படைத்தவர்கள். உனக்கு ஏது அந்த சக்தி ? ஏதுமறியா சிறுவனான நீ, இதோடு நிறுத்திக் கொண்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம், என்று மிரட்டினர்.வேலன் அந்த வாய்ச்சொல் வீரர்களின் மீது சிகரத்தின் ஒரு பகுதியைப் பிடுங்கி வீசி எறிந்தான். தேவர்கள் சிதறியடித்து ஓடினர். தேவேந்திரன் அம்புமாரி பொழிந்தான். அவையெல்லாம் மலர்மாலைகளாகி கந்தனின் கழுத்தில் விழுந்தன. முருகன் தன் கையிலிருந்த சின்னஞ்சிறு அம்புகளை தேவர்கள் மீது அடித்தான். ஒரு அம்பு தேவவேந்திரன் வீற்றிருந்த ஐராவதம் யானையின் மத்தகத்தை குத்திக் கிழித்தது. அது அலறியபடியே விழுந்து இறந்துது. யானை மீதிருந்த இந்திரன் தரையில் உருண்டான். இதைப் பார்த்து கந்தன் கைகொட்டி சிரித்தான். இந்திரனுக்கு ஆத்திரம் அதிமாகி தன் வஜ்ராயுதத்தை வடிவேலன் மீது எறிந்தான். அதை அவன் சுக்கு நூறாக்கினான். அனைத்து ஆயுதங்களும் தீர்ந்து போகவே நிர்க்கதியான தேவர்கள் உயிர்பிழைக்க ஓடினர். அவர்களின் பலரைக் கொன்றான் வடிவேலன். தேவர்கள் பிரகஸ்பதியிடம் ஓடினர். அவர்தான் தேவர்களுக்கு குரு. தங்கøள் காப்பாற்றும்படி வேண்டினர். நடந்த விபரத்தை தன் ஞானத்தால் அறிந்த குரு, சிவமைந்தனிடம் மோதியது உங்கள் தவறல்லவா ? உங்கள் ஆணவத்தால் அறிவிழந்தீர்களே ! என்னிடம் பாடம் படித்தும் முட்டாள்களாக இருக்கிறீர்களே ! என் பெயரைக் கெடுத்து விட்டீர்களே ! சரி... நானே போய் அவரிடம் சரணடைகிறேன். என்று கூறி புறப்பட்டார்.பாலமுருகனைச் சந்தித்து, அவனை வாழ்த்தி வணங்கி நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சிவபெருமானே பிரகஸ்பதி என்று சொல்வாரும் உண்டு. அப்படியிருக்கும் போது, தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்கலாமா என்றால், குருவுக்கு குருவான முருகனிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பணியில் இருக்கிறீர்கள். மேலதிகாரி வயதில் குறைந்தவராக இருந்தாலும், அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது போலத்தான் இதுவும்.பிரகஸ்பதியின் வேண்டுகோளை ஏற்ற பாலமுருகன் சினம் தணிந்தான். இறந்த தேவர்களை உயிர்பெறச் செய்தான். அவர்களின் ஆணவத்தை அழித்து, பக்தி ஞானத்தைக் கொடுத்தான். தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதத்தில் ஆறுமுகங்களும், 12 கைகளும் விண்ணுயரம் உயர விஸ்வரூப காட்சி தந்தான்.
தொடரும்..🙏🌺
கந்தபுராணம் பகுதி ஒன்பது
கந்தபுராணம் பகுதி ஒன்பது
ஒம் சரவணபவ
குளத்தில் நீந்திய மீன்களில் பல முனிவர்களாக வடிவெடுத்தன. அவர்கள் பற்பல சாபங்களால் மீன்களாக மாறியிருந்தவர்கள். கந்தனுக்கு ஊட்டப்பட்ட பாலின் மகிமையால் அவர்கள் தங்கள் சுயரூபமடைந்து, கந்தக்குழந்தையை வாழ்த்தி விட்டுச் சென்றனர். இளமையில் மகான்களின் ஆசி கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்த ஆசி காலம் முழுமைக்கும் நன்மை தரும். பார்வதிதேவி தன் மகனை வளர்த்த கார்த்திகை தேவியரை அழைத்தாள். அன்னையரே ! தாங்கள் என் மகனை என்னிடமே ஒப்படைத்து விட வேண்டும். இனி அவனை நான் சிவலோகத்தில் வளர்ப்பேன். அவனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்த தங்களுக்கு நன்றி, என்றாள். கார்த்திகை பெண்களுக்கு கண்ணீர் முட்டியது. பெற்றவள் குழந்தையைக் கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா ? ஆனாலும், தங்கள் ஸ்தனங்களில் இருந்து பாலூட்டியதால் வடிவேலனுடன் ஏற்பட்ட பாசப்பிணைப்பு அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. சிவபெருமான் அப்பெண்களைத் தேற்றினார். மங்கையரே ! பற்றும் பாசமும் தற்காலிகமானவை. அவற்றை உதறி விட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். ஆயினும், உங்கள் பெருமையை இந்த உலகம் அறிய வேண்டும். கார்த்திகை பெண்களான உங்களால் இந்த குழந்தை உங்கள் பெயரால் கார்த்திகேயன் எனப்படுவான். நீங்கள் ஆறுபேரும் ஒருங்கிணைந்து ஒரு நட்சத்திரமாக வானில் ஜொலிப்பீர்கள். உங்கள் திருநட்சத்திர நாளில் கந்தனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெறுவர். பணம் வேண்டுபவன் அதைப் பெறுவான். பசு வேண்டுபவனுக்கு அவை ஏராளமாய் பெருகி தாரளமாய் பால் தரும். கல்வி வேண்டுபவன் அதில் பிரகாசிப்பான். இந்த ஆசாபாசங்களெல்லாம் வேண்டும் என்பவனுக்கு சிவலோகமே கிட்டும், என்றார். இவ்வார்த்தைகளால் அந்தப் பெண்கள் ஆறுதலடைந்தனர். அவர்கள் ஒன்றாய் இணைந்து நட்சத்திரமாய் மாறி, விண்ணில் ஜொலிக்கத் துவங்கினர். பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயமலை வந்தார் சிவபெருமான். பார்வதிதேவி தன்மகனைக் கொஞ்சி மகிழ்ந்தாள். பாலமுருகன் செய்த சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல, தன் அரைஞாணில் கட்டப்பட்ட தங்க மணிகள் கலகலவென ஒலிக்க அவன் அங்குமிங்குமாய் ஓடுவான். ஆறுதலைகளிலும் குட்டி குட்டியாய் அணிந்திருந்த கிரீடங்களின் ஒளி, எங்கும் பிரகாசிக்க அந்த ஒளியை தேவர்களின் கண்கள் கூசும்படி அங்குமிங்கும் திருப்பி விளையாட்டுக் காட்டுவான். தன் தந்தையின் வாகனமான நந்திதேவரின் மீது விழுந்து உருண்டு புரள்வான். பூலோகம் வந்து கடல்களில் குதித்து திமிங்கலங்களை பிடித்து விளையாடி மகிழ்வான். ஏழு கடல்களை கலக்கி அவற்றை ஒரே கடலாக மாற்றினான். மிகப்பெரிய ஆடு, சிங்கம், புலி முதலானவற்றின் மீது அமர்ந்து உலா வருவான். (முருகனுக்கு மயில் வாகனம் கிடைத்தது பிற்காலத்தில் தான்) இந்திரனின் வில்லான (இந்திர தனுசு) வானவில்லை எடுத்து வந்து அதன் நாண் மீது அமர்ந்து அந்தரத்தில் பறப்பான். மலைகளைப்பிடுங்கி எறிந்தான். இப்படியாக விளையாடும் அவனை யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. சிவமைந்தனின் இந்த சேஷ்டைகள் தேவர்களுக்கு பொறமையை ஏற்படுத்தியது. அந்த பொறாமையை ஏற்படுத்தியதும் சாட்சாத் முருகன் தான். வல்லவன் ஒருவன், தன்னை விட சக்தி மிகுந்த ஒருவனைப் பார்த்து விட்டால் பொறாமை கொள்வது இயற்கை தானே ! தங்களை விட உயர்வான சக்தி பெற்று வளரும் இச்சிறு குழந்தையின் வீரத்தைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அவர்கள் யார் தெரியுமா ? எமன், வருணன், சூரியன், அக்னி, குபேரன், வாயு ஆகிய பெரிய இடத்துக்காரர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனிடம் முருகன் செய்யும் சேஷ்டைகள் பற்றி கூறினர். இந்திரனே ! சூரனை அழிக்கப் பிறந்ததாக சொல்லப்படும் முருகன். அதற்குரிய பயிற்சியை எடுக்காமல், நம்மால் படைக்கப்பட்ட பொருட்களை அழித்துக் கொண்டிருக்கிறான். நான் ஏழு கடல்களுடன் விசாலமாக விளங்கினேன். என் பொருட்களை ஒன்றாக்கி விட்டான். கடலுக்குள் கிடக்கும் முதலைகளைப் பிடித்து பூஜை செய்கிறான். (முதலை பூஜை என்பது பிரம்மாண்டமானது. இதை கேரளாவிலுள்ள கோயில்களில் காணலாம். முதலை வடிவ பொம்மை செய்து, பூஜை நடத்துவார்கள். சபரிமலையில் மதிய பூஜையில் இது விசேஷம்) இப்படி வந்த வேலையை விட்டுவிட்டு, இருப்பவற்றை நாசமாக்கத்தான் இவன் பிறந்தானா ? என்றான் வருணன். எமன் ஓடி வந்தான்.இந்திராதி தேவரே ! தங்கள் அடிமையான என்னிடம் உயிர்களை அழிக்கும் சக்தி கொடுத்துள்ளீர்கள். இவனோ, உலக உயிர்களை தானே அழிக்கிறான். அப்படியானால் எனக்கென்ன மரியாதை இருக்கிறது? என் பெருமையைக் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால், நீங்கள் தான் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும், என்றான். குபேரன் தன் பங்கிற்கு, இந்திரரே ! அவன் தலைகளிலுள்ள கிரீடங்களில் ஜொலிக்கும் வைரங்கள், குபேரனான என்னிடம் கூட இல்லை. அவன் என்னை விட செல்வந்தனாக இருக்கிறான். அப்படியானால், எனக்கெதற்கு குபேர பட்டம் ? என்றான்.இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, இந்திரனின் மனதிலும் ஊறிக்கிடந்த பொறாமை உணர்வு வெளிப்பட்டது.எனது பலம் மிக்க தனுசை விளையாட்டு பொருளாக அவன் வைத்திருக்கிறானே ! அப்படியானால் தேவர்களின் தலைவனாய் இருந்து என்ன பயன் ? இந்த முருகனைத் தட்டி வைத்தால் தான், என் பதவி நிலைக்கும், என மனதிற்குள் கருதியவனாய், தனது ஆதரவாளர்களுடன் முருகனை அடக்கி வைக்க தன் ஐராவதம் யானை மீதேறி புறப்பட்டான். சூரியன் முதலான தேவர்கள் தங்களுடையே தேரேறி வந்தனர். அவர்கள் மேருமலையை அடைந்த போது, அதன் சிகரங்களை பாலமுருகன் லாவகமாக கிள்ளி எறிந்து பந்தாடிக் கொண்டிருந்தான்.
தொடரும்..🌺🙏
கந்தபுராணம் பகுதி எட்டு
கந்தபுராணம் பகுதி எட்டு
ஒம் சரவணபவ
குழந்தைகளை வளர்க்க முன்வந்த கார்த்திகை பெண்களை சிவபெருமான் பாராட்டினார். அப்போது திருமால் அப்பெண்களிடம், தேவியரே ! நீங்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் சரவணப்பொய்கை சென்றனர். தாமரை மலர்களின் மீது குளிர்நிலவாய் காட்சியளித்தனர் குழந்தைகள். அவர்களை குளத்தில் இறங்கி வாரியெடுத்தனர் கார்த்திகை பெண்கள், அப்போது, அவர்களை அறியாமலே அவர்களின் தாய்மை நெஞ்சத்தில் பொங்கிச் சுரந்த பாலை ஊட்டினர். குழந்தைகள் படுசுட்டிகளாக இருந்தன. அவர்களின் விளையாட்டிற்கு அளவே இல்லை, சிறிது காலத்தில் அவர்கள் தத்தி தத்தி நடைபயில ஆரம்பித்தனர். தள்ளாடி விழுந்தனர் ஓடியாடி விளையாடினர். இதைப் பார்த்து தாய்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது. இங்கே இப்படியிருக்க, சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினாள்.. ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டமல்ல, தன் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழும் அளவுக்கு ஓடினாள். அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர். அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார். ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்க்க. அவர்கள் வயிற்றில் கர்ப்பம் தரித்தது. இதைப் பார்த்த பார்வதிதேவி கோபத்துடன். பெண்களே ! நீங்கள் என் மணாளனை மயக்கும் விழிகளால் பார்த்து அவரது மனதைக் கெடுத்து கர்பமானீர்கள். இந்த கர்ப்பம் உங்கள் வயிற்றை விட்டு வெளியேற நீண்டகாலம் ஆகும். இதை சுமந்த படியே வாழ்ந்து வாருங்கள், என சாபம் கொடுத்தாள். அப்பெண்கள் கலங்கியழுதனர்.சிவன் அவர்களிடம், பெண்களே ! ஒரு ஆண்மகன் பிறபெண்களை உற்று நோக்கினால் என்ன தண்டனையோ, அதே தண்டனை பெண்ணினத்திற்கும் உண்டு, ஆண்கள் தங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்திருக்க பெண்ணினமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்வே உலகத்துக்கு உதாரணமாக அமையட்டும். இருப்பினும், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் என் தேவியராகி விட்டதால், உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள், என்று உத்தரவிட்டார். பத்துமாதம் கடந்தும் அவர்களுக்கு பிரசவிக்கவில்லை. கர்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அவை அவர்களின் உடலில் முத்துக்களாய் ஊறின (அம்மை). அந்த அம்மை முத்துக்கள் வெடித்து சிதறின. அவற்றில் இருந்து கத்தி, கேடயம், சூலம் ஆகிய ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தோன்றினர். ஒன்றல்ல... இரண்டல்ல... லட்சம் வீரர்கள் அங்கே இருந்தனர். அந்த குழந்தைச் செல்வங்களைப் பார்த்து சிவன் மிகவும் சந்தோஷப்பட்டார். ஒருமுறை பார்வதிதேவி சந்தோஷமாக இருந்த போது, அந்த தேவியர் தங்களது சேவையை ஏற்று, சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டனர். இனியும் கர்ப்பம் தாங்கும் சக்தியில்லை என்று கதறினர். சிவபெருமான் பார்வதியிடம், தேவி ! இந்த உலகின் நன்மை கருதியே என் அம்சமான வடிவேலன் தோன்றினான். அவனுக்கு பக்க பலமாக இருக்க இந்த லட்சம் வீரர்களை உருவாக்கினேன். இவர்களை வழி நடத்திச் செல்ல சேனாதிபதிகள் வேண்டாமா ? அதற்காகத்தான் இவர்களைக் கர்ப்பமுறச் செய்தேன். இது என் திருவிளையாடல்களில் ஒன்று, அவர்களை தவறாகக் கருதாமல், உன் சாபத்தை நீக்கிக் கொள், என்றார். கருணைமிக்க அந்த அன்னையும், சாப விமோசனம் கொடுக்க வரிசையாக குழந்தைகள் பிறந்தனர். ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஷஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், பின்னர் அவர்கள் தங்கள் தாய், தந்தையரை வணங்கி, பார்வதி தேவியின் கடாட்சமும் பெற்று பூரண சக்தியுள்ளவர்கள் ஆயினர். இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான். மற்ற சகோதரர்கள் வீர விளையாட்டுகளுக்கு சென்றால், அவர்களைக் கண்டதுமே போட்டியாளர்கள் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு ஓட ஆரம்பித்தனர். சிவன் அவர்களை ஆசிர்வதித்து, மக்களே ! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். என்னிடம் அருள்பெற்ற அவர்கள், எனக்கு பிடிக்காத செயல்களைச் செய்கின்றனர். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நடக்க நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம், என்றார். பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச் சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்த அவர்கள், தாங்கள் சென்ற காளை வாகனத்தில் இருந்து இறங்கினர். பார்வதிதேவி, ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள், அப்போது அவள் மார்பில் சுரந்த பாலை முருகக்குழந்தைகள் குடித்து மகிழ்ந்தனர். அப்போது சிந்திய சில துளிகள் சரவணப்பொய்கையில் கலந்தன. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
தொடரும்🌹🙏
கந்தபுராணம் பகுதி ஏழு
கந்தபுராணம் பகுதி ஏழு
ஒம் சரவணபவ
அஜாமுகி துர்வாசரை மறித்து தன் இச்சைக்கு அடி பணியச் சொன்னாள். தவ சிரேஷ்டரான அவர் இக்கொடுமையை செய்ய முடியாது என மறுத்த பிறகும், அவரைப் பல வந்தப்படுத்தினாள். இதன் விளைவாக அவளுக்கு இல்வலன், வாதாபி என்ற மக்கள் பிறந்தனர். அவர்கள் தன் தந்தையின் தவப்பயன் முழுவதையும் தங்களுக்கு தரவேண்டினர். அவரோ மறுத்தார். எனவே அவரைக் கொல்லவும் துணிந்தனர் மகன்கள். படுகோபக்காரரான துர்வாசர், என்னைப் போன்ற முனிவர்களை துன்புறுத்துவதாலேயே நீங்கள் அழிவீர்கள், என சாபமிட்டார்.பின்னர் இல்வலன் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து தன் தம்பி வாதாபியை வெட்டி அக்னி குண்டத்தில் போட்டான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மனிடம், பிரம்மனே ! நான் எத்தனை முறை என் தம்பியைக் கொன்றாலும், நான் அழைக்கும் போது உயிர் பெற்று வரும் வரம் தர வேண்டும், என்றான். அந்த வரம் அவனுக்கு கிடைத்தது. இல்வலன் அந்தணர்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து, தங்கள் இல்லத்தில் திதி நடப்பதாகவும், தான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும் என்றும் சொல்வான். வாதாபி உணவு வடிவில் அந்தணர்களின் வயிற்றுக்குள் போய், அவர்களின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். இப்படி வேதம் கற்ற அந்தணர்கள் பலரைக் கொன்று குவித்தான். இப்படியாக அசுர வம்சம் செய்த அட்டூழியம் பெருகியது. ஒரு சமயத்தில் இந்திரனின் மனைவி இந்திராணியை பார்த்த சூரபத்மன் அவளை அடைய விரும்பினான். அவர்கள் ஓடி ஒளிந்தனர். பின்னர் சாஸ்தாவின் அருளால் அவள் தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்திராணியைக் காப்பாற்ற, சிவ மைந்தரான சாஸ்தாவின் காவலர் மகாகாளர், சூரனின் தங்கையான அஜாமுகியின் கையை வெட்டி விட்டார். இப்படி சூரர்களுக்கும், தேவர்களுக்கும் பகைமை வளர்ந்தது. தேவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலரை சூரன் கொன்றான். ஆனால், அவர்கள் அமிர்தம் குடித்திருந்ததன் பலனாக மீண்டும் எழுந்து விட்டனர், வேறு வழியின்றி, அவர்களை தன்னாலான மட்டும் கொடுமை செய்தான் சூரபத்மன். தேவர்கள் மகாவிஷ்ணுவின் தலைமையில் கூடி, சூரர்கள் இந்தளவுக்கு வளரக் காரணமாக இருந்த சிவபெருமானால் தான், அவர்களை அழிக்கவும் முடியம். எனவே அவரை அணுகுவதென முடிவு செய்தனர். எல்லாருமாக, விஷ்ணுவின் தலைமையில் கைலாயம் சென்றனர். நந்திதேவரின் அனுமதி பெற்று, சிவபெருமானைச் சந்தித்தனர். அவருக்கும், பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாய் பிறந்த பார்வதிக்கும் அப்போது தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர்களிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். ஐயனே ! அசுரர்கள் எங்கள் பொருளை கொள்ளையடித்தனர். உலகங்களை ஆக்கிரமித்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேவர்களில் பலர் சிறையில் கிடக்கின்றனர். வேதம் கற்ற அந்தணர்களை வாதாபி என்ற அசுரன், கொன்று குவிக்கிறான். நவக்கிரகங்களும் தங்கள் பணியைச் செய்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், இப்போது மாற்றான் மனைவி எனத் தெரிந்தும், இந்திராணியை அடைய விரும்புகிறான் பத்மாசுரன். இந்த கேவலத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கேவலத்தை தடுக்க இந்திரனின் மகன் ஜெயந்தன் முயன்றான். இப்போது அவனும் சிறையில் கிடக்கிறான். இனியும் தாங்கள் பொறுத்தால், தேவர் உலகமே இல்லாமல் போய்விடும், என்றனர். சிவபெருமான் இதெல்லாம் தெரியாதவரா என்ன ! இருந்தாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார்.உலக மாந்தர் என்ன அட்டூழியம் செய்தாலும் பூமியும், வானமும் தாங்கும். ஆனால், விரும்பாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தும் போது மட்டும் தாங்கவே செய்யாது. பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்படும் இடம் பூலோகமாயினும் சரி.... ஏழுலகில் ஏதாயினும் சரி.... அங்கே அழிவு துவங்கி விடும். அசுர உலகத்துக்கும் அழிவு துவங்கி விட்டது. சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். தேவர்களே ! கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு, நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி, நீங்கள் சுகமாக வாழலாம். அந்த சுகத்தை எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு தருவான், என்றார். தேவர்கள் மகிழ்ந்து, ஐயனே ! எங்களை வாழ வைக்கப் போகும் இளவல் வடிவேலன் எப்போது வருவார் ? எனக் கேட்டனர்.சிவன் அவர்கள் முன்னிலையிலேயே, பார்வதியை ஆசையுடன் பார்த்தார். அப்போது அவருடைய நெற்றியில் இருந்து அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அந்த அனலின் வேகத்தை தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர். பார்வதிதேவியாலும் அந்த வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் எழுந்து ஓடினாள். சிவனின் நெற்றியிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் ஜொலிக்கும் ஆறு நெருப்பு பந்துகளாக மாறின. அவற்றின் அருகே நெருங்க முடியாத தேவர்களை நோக்கி, தேவர்களே ! நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்ப்பது வண்ண வடிவேலனின் நெருப்பு முகங்கள். அவன் ஆறுமுகம் கொண்டவனாக இருப்பான். இவனே உங்கள் வினை தீர்ப்பவன், என்றார்.தேவர்கள் அந்த நெருப்பு பந்துகளை வணங்கினர். அதே நேரம் இந்நெருப்பு பந்துகளை தங்களுடன் எடுத்துச் செல்வது எப்படி என ஆலோசித்தனர்.சிவபெருமான் அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, தேவர்களே ! கவலை வேண்டாம். இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் என் மகன் ஆறு குழந்தைகளாக வளர்வான். ஆமாம்... இவர்களை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்கப் போகிறீர்கள் ? என்றார். அப்போது ரிஷிபத்தினிகள் ஆறு பேர் சிவபெருமான் முன் வந்து நின்றனர். தேவாதிதேவா ! அந்த குழந்தைகளுக்கு நாங்களே தாயாக இருந்து வளர்த்து வருவோம். எங்களிடம் ஒப்படையுங்கள், என்றனர்.
தொடரும்..🙏🌹