சக்தி பீடங்கள்
அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோவி
ல்
மூலவர்:ஜ்வாலாமுகி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:ஜ்வாலாமுகி
மாவட்டம்:காங்ரா
மாநிலம்:ஹிமாச்சல பிரதேசம்
திருவிழா:பலவித பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. துர்க்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது, தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுக்கிறார்கள்.
தல சிறப்பு:அம்மனின் 51 சக்திபீடங்களில் இது ஜுவாலாமுகி தலம். இது அன்னையின் நாக்கு பகுதி விழந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் தீச்சுடர் எண்ணெயில்லை, திரியில்லாமல் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகளையே அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.
திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் காங்ரா, ஹிமாச்சல பிரதேசம்-176031.போன்:+91 01970-222223, 01970-222137
பொது தகவல்:சரஸ்வதி, லெட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.
பிரார்த்தனை:பில்லி சூன்யம் , ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும், மனதில் வேதனைகள் குறையவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். பில்லி, சூன்யம், ஏவல் விரட்டும் மந்திரவாதிகள் இங்கு வந்து யந்திரபூஜை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் பாலும், நீரும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:அன்னை ஆதிபராசக்தியானவள் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் கோவில்கொண்டு அருள்பாலித்து வருவது நாமறிந்ததே அவற்றில் சதிதேவியின் உடற்பகுதிகள் வீழ்ந்த 51 இடங்கள் சக்திபீடங்களாக புகழ்பெற்று விளங்குகின்றன. அவற்றிலொன்றான ஜ்வாலாமுகி தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக விளங்குகிறது. ஹீமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தலம் தேவியின் நாக்குப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு தலங்களிலும் தன்னை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் அன்னை. இங்கு தீச்சுடராகத் தன்னை வெளிப்படுத்துகிறாள். இங்குள்ள மிகப் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகள் இயற்கையாகவே வெளிப்படுகின்றன ஒன்பது இடங்களில் வெளிப்படும் இந்த ஜுவாலைகளையே தேவியின் வடிவமாக வழிபடுகின்றனர். பிரதான தெய்வமாக காளிதேவி வழிபடப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.
இந்த ஜுவாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றனவாம்! என்ணெயில்லை; திரியில்லை. ஆனால் தீச்சுடர்! இந்த பாறை இடுக்குகளிலிருந்து ஒருவித வாயு தொடர்ந்து வெளிப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு:வெகு காலத்துக்குமுன் இப்பகுதியை காங்ரா நகரைத் தலைநகராகக் கொண்டு பூமிசந்த் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த தேவி பக்தன். அவன் கனவில் தோன்றிய இவ்வன்னை தான் சுடர் வடிவில் கோவில் கொண்டிருக்கும் இடத்தை உணர்த்தினாள். அதன்பின்னர் அவ்விடத்தைக் கண்டுபிடித்த மன்னன் அங்கே ஆலயம் எழுப்பினான். நேபாள அரசன் ஹங் என்பவன் மண்டபம் அமைத்து. மிகப்பெரிய வெண்கல மணியையும் வழங்கினான் என்ற குறிப்பும் காணப்படுகிறது.
கி.பி 1009-ல் இஸ்லாமிய மன்னன் கஜினி முகம்மதுவால் இவ்வாலயம் கொள்ளையிடப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதன்பின்னர் ஆட்சிபுரிந்த மொகலாயப் பேரரசர் அக்பர் இவ்வாலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு. அங்கு எரிந்துகொண்டிருக்கும் ஜுவாலைகளை அணைக்க உத்தரவிட்டாராம். படைவீரர்கள் நீரைப்பாய்ச்சி பலவிதங்களில் முயன்றும் ஜுவாலைகள் அணையவில்லை. அதன்பின் தேவியின் ஆற்றலைப் புரிந்து கொண்ட அக்பர் ஒரு தங்கக் குடையை காணிக்கையாகச் செலுத்தி தன் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தருமாறு தேவியிடம் வேண்டினாராம். அதற்கு அன்னை உடன்பட வில்லை. அதற்கு அடையாளமாக அக்பர் அளித்த தங்கக்குடை சாதாரண உலோகமாக மாறிவிட்டதாம்.
இவ்வாறு பல வரலாற்று நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டதாக விளங்குகிறது இந்த ஜ்வாலமுகி ஆலயம். இறுதியாக கி.பி 1813-ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் இங்கு வருகை புரிந்து ஆலயத்தை சீரமைத்து கோபுரத்துக்கு தங்கக் கவசம் அணிவித்தானாம். வெள்ளியாலான கதவையும் அமைத்தான்.
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் 51 சக்திபீடங்களில் இது ஜுவாலாமுகி தலம். இது அன்னையின் நாக்கு பகுதி விழந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் தீச்சுடர் எண்ணெயில்லை, திரியில்லாமல் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகளையே அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.