அனைவராலும் மதிக்கப்படுபவர் யார்?
பிறர் பகைத்தாலும் நேசித்தாலும் நம்பினாலும் புகழ்ந்தாலும் வஞ்சித்தாலும் எவன் கவலைப்படுவதில்லையோ அவன் உயர்ந்தவன், புற அழகையும் சிறப்பையும் நாடும் உள்ளத்தில் புலன்கள் அடங்கா, ஐம்புலன்களை அடக்கி ஆளத் தெரியாதவன் தூய்மையற்ற உணவை உண்பவன், சோம்பேறி, கடமையில் ஊக்கமில்லாதவன் இத்தகையோர் வேரற்ற மரம் பெருங்காற்றில் முறிந்து விழுவது போல் அறியாமையாலும் துயரத்தாலும் சாய்க்கப்பெற்று வீழ்ந்து அழிவார்கள்.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற மேலும் அது கொழுந்துவிட்டு எரிவது போல் ஒருவன் உள்ளத்தில் பாவச் சிந்தனைகள் இடம்பெற்று விட்டால் அவன் மீண்டும் மீண்டும் தீமைக்கே ஆளாகிறான். தீய எண்ணத்துடன் சிந்தித்தாலும் செய்தாலும் தீமை அவனைத் தொடர்கிறது. எரியும் விளக்கில் விழுந்து மடியும் விட்டிலைப் போன்று தீமையிலேயே அவனும் மடிகிறான். அறியாமையில மூழ்கிக் கிடக்கும் ஒருவன் தன் அறியாமையை உணர்ந்தகணத்திலேயே அறிவாளியாகிறான். ஆனால் அறியாமையில் கிடந்து கொண்டே தன்னைப் புத்திசாலி என நினைக்கும் அறிவிலி உண்மையிலேயே மூடனாவான்.
பிறர் குற்றத்தைக் கூறுபவர்கள் தம் குற்றத்தை அறிவதில்லை. ஆகையால் தம்முடைய சொந்தக் குற்றம் மறைந்துவிடுகிறது. தம் குற்றத்தையும் பிறர் குற்றத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அறியாமை ஒருவனை பந்தப்படுத்தும். நீதிமானாகிய ஞானியை நிந்திக்கச் செய்யும். தீயவன் வானத்தை நோக்கி எச்சில் துப்புவனுக்கு ஈடாவான். அவன் உமிழ்ந்த எச்சில் வானத்தை அசுத்தப்படுத்துவது இல்லை. மாறாக, அவன் முகத்திலேயே விழுந்து அவனை அசுத்தமாக்கும்.
காமத்தினின்றும், அகந்தையினின்றும் விடுபட்டவன் அடக்கமுடையவனாய் பேரின்பமுற்றவனாய் உறுதியாய் இருப்பான். நம்பிக்கையும் நல்லொழுக்கமும் ஒருவனிடம் இருந்தால் அவனை எல்லோரும் மதிப்பார்கள்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 18 டிசம்பர், 2020
அனைவராலும் மதிக்கப்படுபவர் யார்?
பவுர்ணமியின் தனிச்சிறப்பு!
பவுர்ணமியின் தனிச்சிறப்பு!
சந்திரன் படிப்படியாக, ஒளி குறைந்து, முற்றுமாக, நம் கண்ணுக்குத் தென்படாத தினத்தை அமாவாசை என்றும், அதன் பிறகு, படிப்படியாக ஒளி கூடி, முழு இரவும் முழுமையாகத் தென்படும் நாளை பவுர்ணமி என்றும் கூறுகிறோம். பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால் தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியையும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுவதை அறிவோம். உதாரணமாக, சதுர்த்தி வினாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன் என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.
காலத்தைக் கணக்கிடும் பல முறைகளில், சூர்யமானம், சந்திரமானம் என்பவை மிக முக்கியமானவை. பொதுவாக, வடபாரத மாநிலங்களில் தான், சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டாலு<ம், சூரியனின் நகர்வைப் பின்பற்றும் தழிகத்திலும் பலமுக்கிய செயல்பாடுகளுக்கு நிலவின் நிலையும் கருதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறைவழிபாட்டில், அதுவும், ஆலய வழிபாட்டில் பவுர்ணமியும் அதை ஒட்டிய நக்ஷத்திரமுமே மிகவும் மேன்மையாகக் கருதப்பட்டிருக்கின்றன. சித்திரைத் தேர் முதல், பங்குனிக் காவடி வரை, லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்கள் அநேகமாக முழுநிலவு நாளன்றே நடைபெறுகின்றன. இத்தகு முக்கிய திருவிழாக்களில் ஒன்று தான் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையன்று நடைபெறும் தீபவிழாவும் ஆகும். அண்மையில் பிரபலமாகியுள்ள கிரி வலம் வரும் வழிபாடும் பவுர்ணமியின் மேன்மை கருதியே.
சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான். அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர். இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.
பண்டரீபுரம் ராமதாஸர்
பண்டரீபுரம் ராமதாஸர்
ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகா÷க்ஷத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.
பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.
துளசி ராமாயணம் தந்த துளசிதாசர்
துளசி ராமாயணம் தந்த துளசிதாசர்
தென்னிந்தியாவில் வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் பிரசித்தி பெற்றது போலவே, வட இந்தியாவில், குறிப்பாக கங்கை நதி பாயும் பிரதேசங்களில், ராமசரித் மானஸ் (துளசி ராமாயணம்) பிரசித்தி பெற்றது. இதை எழுதியவர் சந்த துளசி தாசர். இவர் உத்திரப் பிரதேசத்தில் அலஹாபாத்துக்குக் கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள ராஜ்பூர் என்ற ஊரில் 1532-ஆம் ஆண்டு ஆத்மாராம் தாபே, ஹுலசீபாய் என்கிற பிராமணத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் - ராம்போலோ. இவர் மூல நட்சத்திரத்தில் (அபுக்த மூலம்) பிறந்ததால், தாய் தந்தைக்கு மரணம் நிச்சயம் என்று அந்த நாளில் நம்பப்பட்டது. பிறக்கும்போதே குழந்தை ராம்போலாவுக்குப் பற்கள் வேறு முளைத்திருந்தன ! இதற்குப் பரிகாரமாக, குழந்தையைக் கைவிட்டுவிட வேண்டும்; குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளாவது குழந்தையின் முகத்தைப் பார்க்கக் கூடாது என்றது சாஸ்திரம். பரம ஏழையான ஆத்மாராமும் நாமகரணம் போன்ற சடங்குகள் செய்து மகிழும் நிலையில் இருக்கவுமில்லை. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஹுலசீபாய் மரணமடைந்தாள். அதன்பிறகு குழந்தை ராம்போலாவுக்குச் செவிலித்தாயாக இருந்து வளர்த்தவரும் சிறுவனுக்கு ஐந்து வயது முடியும் முன்பே காலமானாள். இதன்பின், ராம்போலா ஒரு கவளம் சோற்றுக்காகத் தெருவில் அலைந்தான். உள்ளூர் அனுமார் கோயில் அவனுக்கு அடைக்கலம் தந்தது. இந்த ராம்போலாவே பிற்காலத்தில் துளசிதாசர் என்று புகழ்பெற்றார். ராமானுஜரின் சிஷ்ய பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையினரான ஸ்வாமி ராமானந்தரின் வழித்தோன்றலான நரஹரி தாசர் கனவில் ஓர் அநாதைச் சிறுவன் வந்தான். அவனைக் கண்டுபிடித்து, அமரகாவியமான ராமாயணத்தை அவனுக்குக் கற்பிக்கும்படி உத்தரவாயிற்று.
அவர் ராம்போலாவை அயோத்திக்கு அழைத்துப் போய் உபநயனம் செய்வித்தார். வடு வான ராம்போலா, ஸ்ரீராமனை நமஸ்கரித்தபோது, துளசிச் செடியிலிருந்த ஓர் இலை அவன் தலைமேல் விழுந்தது! அன்றுமுதல் ராம்போலா துளசிதாசர் ஆனார். சரயூ மற்றும் காக்ரா நதிகளின் சங்கமத்தில் உள்ள கிராமமாகிய சுகர் ÷க்ஷத்திரத்தில் துளசிதாசர் தங்கிய காலகட்டத்தில் ஸேஷநாதர் என்னும் சாது, துளசிதாசரை காசிக்கு அழைத்து வந்தார். அவருடைய குருகுலத்தில் 15 வருடம் தங்கி, சமஸ்கிருதம், வேத வேதாங்கம் மற்றும் ஏனைய பாடங்களைக் கற்றார் துளசிதாசர். இதன்பின்னர், தான் பிறந்த ஊரான ராஜ்பூருக்கே திரும்பினார். பிரபல ஜோதிடர் தீனபந்து பாடகரின் மகளான ரத்னாவளி இவர் மனைவியானாள். இளம் தம்பதியர், கிராமத்தில் எளிய வாழ்க்கை நடத்தினர். ரத்னாவளி படிப்பு, அறிவு, பண்பு இவற்றுடன் நல்ல அழகியும்கூட ! தன் மனைவியை அளவுக்கதிகமாக நேசித்தார் துளசிதாசர். இதனால், சுமார் 12 ஆண்டுகளுக்குத் தன் பிறந்த வீட்டுக்கே போகவில்லை ரத்னாவளி. அவர்களுக்குப் பிறந்த தாரகன் என்ற ஆண்குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டது. ஒருமுறை தன் தந்தை இறந்ததற்காக ரத்னாவளி, துளசிதாசர் வெளியூர் போயிருந்த சமயம் பிறந்த வீட்டுக்குப் போனாள். அந்த நேரம் பார்த்து ஊர் திரும்பிய துளசிதாசர், மனைவியை உடனே காண விழைந்தார். வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த யமுனையாற்றைக் கடந்து, மாமனார் வீட்டை அடைந்தார். நள்ளிரவில் தன் கணவரைக் கண்ட ரத்னாவளிக்கோ ஆச்சரியம், பயம், வெட்கம் எல்லாம் ஒருங்கே தாக்கின. அவள் துளசிதாசரிடம், எலும்பு, மாமிசம், மஜ்ஜைகளாலான மனிதப் பிறவி நான். என்மேல் தாங்கள் வைத்துள்ள ப்ரேமையை பகவான் ஸ்ரீராமன்பால் செலுத்தினால், அவர் உங்களைப் பிறவிக்கடலிலிருந்து கரை சேர்ப்பார் என்றாள். இந்தச் சின்ன சம்பவம், துளசிதாசரின் அகக்கண்ணைத் திறந்தது. அவர் மனதில் ஆன்மிக விளக்கு சுடர்விட்டு எரியலாயிற்று. அதன் பின் வீடு வாசல்களைத் துறந்து, ப்ரயாகைக்கு வந்து சந்நியாசி ஆனார் துளசிதாசர். ராமாயண உபன்யாசம் செய்தார். துளசிதாசர் தினமும் கங்கையில் காலைக்கடன்களை முடித்துத் திரும்பும்போது, சொம்பில் இருந்த நீரை வழியில் இருந்த ஆலமரத்துக்கு ஊற்றிவிட்டு வருவாராம். இவ்விதம் பல காலம் புனித கங்கையினால் ஜல தர்ப்பணம் பெற்று, அந்த மரத்தில் வசித்துவந்த பிரம்மராக்ஷஸன் முக்தியடைந்தான்.
தன் நன்றியைத் தெரிவிக்க, துளசிதாசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். துளசிதாசர், ஸ்ரீராமனின் தரிசனம் செய்து வைக்கும்படி கோரினார். அது தன்னால் ஆகாத காரியம் என்று சொன்ன பிரம்மராக்ஷஸன் ஆஞ்சனேயரை அணுகும்படி சொன்னான். ஹனுமான் ராம கதை கேட்க வருவார் என்றும், அவரை அடையாளம் காண்பது எப்படி என்பதையும் விளக்கினான். அவ்வாறே மாருதியை அணுகி, ராம தரிசனம் வேண்டினார். ஹனுமார் சொல்படி, சித்ரகூடத்துக்குப் போய் அங்கு ராம்காட்டில் வசிக்கலானார். வரும் பக்தர்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார். ஒருமுறை மௌனீ அமாவாசையன்று ராமன் சிறுவனாக வந்து, துளசிதாசரிடம் சந்தனம் கேட்டாராம் ! ராம தரிசனத்தால் மெய்மறந்துபோன துளசிதாசர் சமாதி நிலையில் இருந்ததால், ஸ்ரீராமனே அவர் நெற்றியில் திலகமிட்டுவிட்டு மறைந்து போனார் ! ஸ்ரீராம தரிசனத்தினால் புனிதரான துளசிதாசர் அம்மையப்பரான சிவ பார்வதியரின் ஆணையை ஏற்று, அயோத்திக்கு வந்து கி.பி. 1575-ஆம் ஆண்டு ராமநவமியன்று, ராம சரித மானஸம் எழுதத் தொடங்கினார். ஹிந்தியின் கிளையான அவதி மொழியில் எழுதப்பட்ட இந்தக் காவியம் இரண்டு வருஷம், ஏழு மாதம், இருபத்தாறு நாட்களில் ஸீதா ஸ்வயம்வரத்தின் ஆண்டுவிழா நாளன்று முடிவடைந்தது ! துளசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ராமசரித மானஸம், ஆத்யாத்ம ராமாயணத்தின் மாதிரியில் அமைந்துள்ளது. மற்ற ராமாயணங்கள் போலவே காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமனுடைய மானுட லீலைகளைச் சொல்லவும், தன் ஆத்ம சந்தோஷத்துக்காகாவுமே இதை எழுதினார் துளசிதாசர். இதில் ராமன், பரதன், அகல்யை, சபரி போன்றவர்கள் ஆதர்ஸத்தின் சிகரம் என்றால், ஹனுமான் பக்தியின் ஹிமாலயம். இதனாலேயே இந்த க்ரந்தம் எல்லா மனிதர்களையும் கவர்ந்திழுக்கிறது. முக்குணங்களையும் கடந்து நில்லும் ப்ரம்ம தத்துவத்தை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இயற்றப்பட்டுள்ள ராமசரித மானஸம் ஒரு ஞானப் பொக்கிஷம். கிரியர்சன் என்ற ஆங்கிலேயக் கலைஞர், இங்கிலாந்தில் பைபிள்கூட மக்களிடையே இத்தனை அங்கீகாரம் பெறவில்லை என்று வியக்கிறார். 16-ஆம் நூற்றாண்டில் நம் நாடு முகம்மதியர்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது ஹிந்துக்களுக்கு சனாதன தர்மம், சடங்குகளில் சிரத்தை குறையத் தொடங்கி இருந்த வேளையில் ராமசரித மானஸம், அவர்களை ஒன்றுகூட்டி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது ! தனது 91-வது வயதில் கி.பி.1623-ல் பூதவுடலைத் துறந்தார் துளசிதாசர்.
வியாழன், 17 டிசம்பர், 2020
ஞானேஸ்வரர்
ஞானேஸ்வரர்
கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச் சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக் கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து வேதனைப்பட்டார். பிறகு காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாயாக! என்றார். அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின. அந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).
அவரை விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர். வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர், அவற்றை மிக எளிமையாகப் போதித்து வந்தார். தான் செய்த தவற்றால், சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு, தான் அடைந்த துன்பத்தை குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா, தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி, உயிர்த் தியாகம் செய்தார். ஆதரவற்ற நிலையில் தவித்த குழந்தைகளைக் கண்டு, ஆலந்தி அந்தணர்கள் மனமிரங்கினர். குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு செய்தனர். இருப்பினும், பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று வரும்படி, அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர்கள் அந்த அந்தணர்கள். அவர்களின் முன், இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன் நின்றனர். அந்தணர்களின் புனிதக் கடமை, உபநயனம் செய்து கொள்வது ! எங்களது ஆலந்தி கிராமத்து அந்தணர்கள், எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக உள்ளனர். ஆனாலும், உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள் ! என்றனர். அதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர்கள், உபநயனம் செய்துகொள்ள, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனப் பரிகசித்தனர். அதில் ஆவேசமான மூவரும், மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர். உடனே பண்டிதர்கள், முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த மக்கள் நீங்கள். எனவே, உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை. அது, எங்களைப் போன்ற உயர் மக்களுக்கே உரித்தானது! என்று கர்வத்துடன் சொன்னார்கள். இதைக் கேட்டு, மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன், கொதித்து எழுந்தான்; அவனுக்கு வயது எட்டு.
அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக் கிடாவைச் சுட்டிக் காட்டி, வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே உரியதல்ல! இதோ... இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு, அந்த எருமையின் முதுகில் கைவைக்க... அப்போது நிகழ்ந்தது அந்த அதிசயம் ! மூவரும் வேதம் ஓதி நிறுத்தினார்கள், அல்லவா... அந்த இடத்தில் இருந்து வரி பிசகாமல், வேதம் ஓதத் துவங்கியது, எருமை. இறுதியில், பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாக இருப்பினும், கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும் ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி, நான்கு கவிதைகளை அழகாகச் சொல்லிற்று. எருமை வேதம் ஓதியதைக் கேட்டு, வாயடைத்துப் போனது பண்டிதர் கூட்டம். அனைவரும் ஓடோடி வந்து, சிறுவனை நமஸ்கரித்தனர். தனது மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று, குண்டலினி யோகம் முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருநாதர் அறிவுரைப்படி, தனது 15-வது வயதில், மராட்டிய மொழியில், பாமரர்க்கும் புரியும் வகையில், 18 அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார், ஞானேஸ்வர். பாவார்த்த தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை, பிறகு அவரது திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல், அவரின் மற்றொரு படைப்பு. அவர் நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம் ! இறை நம்பிக்கையற்ற ஒருவனைத் திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி, கொதிக்கச் செய்து, தனது சகோதரி முக்தாபாயை, தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார், ஞானேஸ்வர். தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின் மீது அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர் சாங்கதேவரை, தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி, அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். சகோதர - சகோதரிகள் மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22 - வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார். தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.
புரந்தரதாஸர்
புரந்தரதாஸர்
பண்டரிபுரம் அருகிலுள்ள வேமன்னபுரியில் வசித்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில், கி.பி.1484ஆம் ஆண்டு மாதவராவ்- ரத்தினாபாய் தம்பதியருக்கு ஆண்குழந்தை பிறந்தது. பிள்ளைக்கு ரகுநாதன் என பெயர் சூட்டினர். வட்டிக்கடை நடத்தி வந்த மாதவராவ், நேர்மையானவராகவும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றும் இருந்தார். ரகுநாதன் இளம்வயதிலேயே தந்தையின் தொழிலைக் கற்றுக் கொண்டு வியாபாரம் நடத்தினார். லட்சுமிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரது மனதில் செல்வந்தனாக வாழவேண்டும் என்ற பேராசை அதிகரித்தது. ஊர்மக்கள் ரகுநாதனை வெறுத்து ஒதுக்கினர். ஆனாலும், பணம் தேடி பைத்தியமாக அலைந்தார். தப்பி தவறி யாராவது யாசித்து வருவதைக் கண்டாலும், அவருக்குப் பிடிக்காது. யாராவது உதவி கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டுவார். ஒருமுறை, ஒரு முதியவர் ரகுநாதனின் வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அவரை எப்படியாவது ஒதுக்கி விட வேண்டும் என்று எரிச்சலும், ஏளனமும் கொண்டு ரகுநாதன் பார்த்தார். முதியவரோ ஒரு எலுமிச்சம்
பழத்தைக் கொடுத்து, சுவாமி! நீங்கள் மகாபிரபு! என் பிள்ளையின் திருமணத்திற்கு ஆயிரம் வராகன் பணம் தேவைப்படுகிறது. தானமாகக் கொடுத்தால் மனம் மகிழ்வேன்! என்று வேண்டிக் கொண்டார்.
இதென்ன தர்ம சத்திரமா! வேறு இடம் பாருங்கள்! என்று கடுமையாக கத்தி, அவரை வெளியேற்றினார். ரகுநாதனின் மனைவி லட்சுமிபாயோ சிறந்த குணவதி. முதியவர், அவளிடம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ரகுநாதனுக்கு தெரியமால், தன் வேண்டுகோளைச் சொல்லி யாசகம் கேட்டார். அவள் தன் வைரமூக்குத்தியைக் கொடுத்து, இதை விற்றால் ஆயிரம் வராகன் கிடைக்கும், என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள். முதியவர் அதை விற்க ரகுநாதனின் கடைக்கே வந்தார். மூக்குத்தியை விலைக்கு எடுத்துக் கொள்ளும்படி வேண்டினார். ரகுநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும், அவரிடம் காட்டிக் கொள்ளாமல், ஐயா! வீட்டுக்குச் சென்று பணம் எடுத்துவரும் வரை காத்திருங்கள், என்று சொல்லிவிட்டு அவசரமாக மனைவியைக் காண ஓடினார். படுவேகமாக வீட்டுக்குள் நுழைந்த ரகுநாதனைக் கண்ட லட்சுமிபாய் மனம் பதறியது. லட்சுமீ! நான் வாங்கித் தந்த வைரமூக்குத்தியை எடுத்து வா! என்று கட்டளையிட்டார். பகவானே! பாண்டுரங்கா! பண்டரிநாதா! என்னைக் காப்பாற்று! என்று பூஜையறையில் வேண்டிக் கொண்டு மூக்குத்தியைத் தேடுவது போல பெட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன ஆச்சர்யம்! பெட்டியில் அவளது வைரமூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து கொடுத்தாள். அதேநேரம், உண்மையை மறைக்காமல், முதியவர் தன்னிடம் உதவிகேட்டு வந்ததையும், அவரிடம் மூக்குத்தியை ஒப்படைத்ததையும் விபரமாக சொன்னாள்.
ரகுநாதன் திகைப்புடன் கடைக்கு ஓடினார். லட்சுமிபாயும் பின் தொடர்ந்தாள். ஆனால், அங்கு முதியவரைக் காணவில்லை. லட்சுமி! நான் பாவியாகி விட்டேனே! வந்தவர் சாக்ஷõத் பண்டரிநாதரே தான்! என்று சொல்லி கண்ணீர் பெருக்கி நின்றார். கடையில் அவர் அமர்ந்திருந்த இடத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் அனைத்தும் பண்டரிநாதனுக்கே உரியது என்று கூறி, அவரது
பக்தர்களுக்கு தானம் செய்தார். இசை நுணுக்கங்களை அறிந்திருந்த ரகுநாதன் பண்டரிநாதனை பாடி வணங்கினார். செய்த தர்மத்தால் செல்வம் முழுவதையும் இழந்து ஏழையானார். ஒரு காலத்தில், அளவுக்கு அதிகமான கஞ்சத்தனம்... இப்போதோ மிதமிஞ்சிய பக்திநாட்டம்.. என்று மனம் மாறிப்போன தன் கணவரைக் கண்டு லட்சுமிபாயும் அதிசயித்தாள். தனக்கு, திருமண வயதில் ருக்மணி என்னும் மகள் இருந்ததையே ரகுநாதன் மறந்துவிட்டார். பின், அதுபற்றிய நினைவு வந்து, கிஷ்கிந்தாபுரியில் வசித்த கேசவராவ் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன்பின், பகவத்பக்தியில் முழுவதுமாக ஆழ்ந்துவிட்டார். மக்கள் அவரை ரகுநாத தாசர் அழைக்கத் தொடங்கினர். ஒருசமயம் ரகுநாததாசர், மனைவியுடன் திருப்பதி சென்றார். அங்கே தெய்வபக்தியில் சிறந்த புரந்தரி என்ற தாசிப்பெண்ணைக் கண்டார். திருப்பதிக்கு வந்த தம்பதியர், அவளது வீட்டிலேயே தங்கினர். தாசியாக இருந்தாலும், புனிதமான வாழ்க்கையை புரந்தரி நடத்தி வந்தாள்.
ஒருநாள், இரவில் புரந்தரி தன்னை அலங்கரித்துக் கொண்டு கையில் வீணையும், காலில் சதங்கையும் கட்டிக் கொண்டு கிளம்பினாள். ரகுநாத தாசரும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார். புரந்தரி அவரிடம், சுவாமி! நான் கோயிலுக்குச் செல்கிறேன். பெருமாள் முன் நடனமாடுவேன். அப்போது என் நடனத்திற்கேற்ப பெருமாள் வீணை வாசிப்பார். பின் அவர் நடனமாட, நான் வீணை வாசிப்பேன். நான் சொல்வது அனைத்தும் உண்மை. நீங்கள் பக்தியில் சிறந்தவர் என்பதால் உங்களிடம் இந்த உண்மையைச் சொல்கிறேன், என்றாள் புரந்தரி. இதைக்கேட்டு அதிசயித்த ரகுநாததாசர், திருப்பதி வேங்கடவன் தரிசனத்தை தானும் பெறவேண்டும் என்று சொல்லி உடன் வந்தார். ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டார். புரந்தரி சொன்னபடியே அவள் நடனமாட, பெருமாளே வீணை மீட்டி பாட்டுப் பாடினார். ரகுநாததாசர் மறைவில் இருப்பதை பெருமாள் அறியமாட்டாரா என்ன! வேண்டுமென்றே பாட்டின் நடுவே அபஸ்வரம் வரும்படி பாடத் தொடங்கினார். இதைக் காதில் கேட்ட மாத்திரத்தில் ரகுநாததாசர் அவரிடம், ஐயோ! புரந்தரி! இதென்ன பெருமாள் அபஸ்வரமாகப் பாடுகிறார்! என்று கத்தினார். பெருமாள் உள்ளம் மகிழ்ந்து புரந்தரதாசரே, வெளியே வாரும் என்று அழைத்தார். அதன்பின் அவரது பெயர் புரந்தரதாசர் ஆயிற்று.
அவரிடமிருந்து தேனெனப் பிரவாகித்தன பாடல்கள். தென்னகம் முழுதும் யாத்திரைகள் மேற்கொண்டு, கன்னடம் மற்றும் சமஸ்கிருத மொழியில், ஸ்ரீபாண்டுரங்கனையும் திருவேங்கடவனையும், ஆயிரக்கணக்கான பாடல்களால் பாடித் தொழுதார். அனைவரும் இறையருளைப் பெறுவதற்கான நெறிமுறைகளை தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தினார். ஏழு ஸ்வரங்களையும் கொண்டு, மாயா மாளவ கௌள ராகத்தில் அவர் பாடியதைக் கேட்டுப் பரவசமானார்கள் மக்கள். கர்நாடக சங்கீதத்தில் பத்ததி எனப்படும் புதிய வழிமுறையை வரையறுத்துத் தந்ததே புரந்தரதாஸர்தான். கீர்த்தனைகள், சூளாதிகள், லக்ஷண, லக்ஷிய கீதங்கள் ஆகியவற்றை இயற்றி, சங்கீதத்துக்குப் பெரும் தொண்டாற்றிய புரகர்நாடகாவிலுள்ள தொட்டமளூர் கிருஷ்ணன் கோயிலுக்கு இவர் விஜயம் செய்துள்ளார். அத்தலத்துக்கு சென்று இவரது கீர்த்தனையைப் பாடுவோர் குழந்தை வரம் பெறுவர். சங்கீதத்தையும் ஹரி பக்தியையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த புரந்தரதாஸர், 1564ஆம் வருடம், ஹம்பியில் பாண்டுரங்கனின் திருவடியில் கலந்தார். எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் குரலில் ஒலிக்கும், ஜகதோத் தாரண... எனும் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விவரிக்கும் கீர்த்தனை, எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் ஒலிக்கும் வேங்கடவனைப் பற்றிய வேங்கடாசல நிலையம்... எனும் கீர்த்தனை ஆகியவற்றின் மூலம் புரந்தரதாஸர் நம்மிடையே இன்றும் வாழ்ந்து வருகிறார். எத்தனையோ திருவிளையாடல்களை இறைவனோடு அனுபவித்த இசைவித்தகர் புரந்தரதாசர், அருளாளராக இன்றும் போற்றப்படுகிறார்.
பத்ராசல ராமதாஸர்
பத்ராசல ராமதாஸர்
கிருஷ்ணதேவராயர் ஆண்ட விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதியர் வசித்தனர். இவர்களுக்கு தெய்வீகக்குழந்தையாக 1630ல் கோபன்னா பிறந்தார். இவரது இயற்பெயர் கஞ்செர்ல கோபராஜு. இளமையிலேயே ராமாயணக் கதையை விருப்பத்தோடு கேட்பார். இதன் காரணமாக, அவரது பிஞ்சுமனத்தில் ராமபக்தி ஆழமாக வேர் கொண்டது. மகான் கபீர்தாசரிடம் ராமநாம உபதேசம் பெற்று ஜபம் செய்யத் தொடங்கினார். இரவும் பகலும் அவருடைய நாவில் ராமநாமம் ஒலித்தது. தாய்மொழியாம் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபன்னா, இறைநாமத்தை சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான். இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க, கமலம்மா என்ற பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார். தம்பதியர் ஒருவருக்கொருவர் பக்தியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்வகையில் ஒரு நிகழ்ச்சி அவர்கள் வீட்டில் நடந்தது.
மகான் கபீர்தாசர் கோபன்னாவின் கனவில் தோன்றி, ராமநாம உபதேசத்தை அருளினார். அன்று கோபன்னாவின் வாழ்க்கை திசை திரும்பியது. எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து ராமபக்தியில் மூழ்கிப்போனார். ஒருமுறை ஸ்ரீராமநவமியன்று, வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாகவதகோஷ்டியினர் பஜனை செய்து கொண்டிருந்தனர். அடியார்களின் அன்னதானத்திற்காக சமையல்வேலை மும்முரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்ததால் கமலம்மா குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாள். மகன் தவழ்ந்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து சாதம் வடித்த சுடுகஞ்சியில் விழுந்துவிட்டான். சமையல் ஆட்கள் பதறிப்போய் கமலம்மாவிடம் தெரிவித்தனர். பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்ட தாய் மனம் துடித்தாள். ஆனால், யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டு கண்ணீர் பெருக்கி நின்றாள். பஜனை முடித்த பாகவதர்கள் விருந்துண்ட பின் வீட்டுக்கு புறப்பட்டனர். கோபன்னாவிடம் கமலம்மா நடந்த விஷயத்தைத் தெரிவித்தாள். தம்பதியர் ராமபிரானிடம் முறையிட்டு அழுதனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கீரைத்தண்டு போல துவண்டு கிடந்த பிள்ளையின் கண்கள் அசைந்தன. அம்மா என்று மெல்ல அழைத்தான். இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர். அன்று முதல் கோபன்னாவின் மனம் ராமபக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டது. ராமன் மட்டுமே இனி நமக்கு கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
கோபன்னாவின் தாய்மாமன்கள் அக்கன்னாவும், மாதன்னாவும் ஐதராபாத் அரசர் தானீஷாவிடம் பணியாற்றி வந்தனர். தங்களின் மருமகன் கோபன்னாவிற்கும் சமஸ்தானத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்தனர். பத்ராசலம் நகரத்தில் வரிவசூலிக்க கோபன்னா நியமிக்கப்பட்டார். அன்பு, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர், நியாயமான முறையில் வரி வசூலித்து அரசு கஜானாவுக்கு வழங்கினார். பத்ராசலத்தில் ராமர் கோயில் இருப்பதை அறிந்த கோபன்னா மகிழ்ச்சி அடைந்தார். காகேதய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதர் மண்டிக் கிடந்தது. வழிபாடு இல்லாமல் மோசமாக கிடந்த ராமசன்னதியைக் கண்டு வருந்தினார் கோபன்னா. அரசாங்கத்துக்காக வசூலித்த வரிப்பணத்தில் கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். கட்டுமானப்பணியைத் தொடங்கினார். வரிப்பணம் முழுவதையும் ராமர் கோயில் திருப்பணிக்கு செலவிட்டார். ஆறுலட்சம் வராகன் செலவில் கோயிலைக் கட்டியதோடு, பலவிதமான தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்தார். கோபன்னாவின் ராமபக்தியைக் கண்ட மக்கள் அவரை ராமதாசர் என்று அழைக்கத் தொடங்கினர். மக்கள் பாராட்டினாலும், வரிப்பணத்தை செலவிட்டால் அரசாங்கம் விடுமா? மன்னர் தானீஷா ராமதாசரை கோல்கொண்டா சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தாய்மாமனார்களால் ராமதாசருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார். அப்போது அவர் பாடிய பாடல்கள் மிகவும் உருக்கமானவை. இனிமேல் இந்த கோரமான அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னைக் கும்பிட்ட கைகளை தடி கொண்டு அடிக்கிறார்களே! என்று இவர் பாடிய பாடல்வரிகள் கல்லையும் கரையச் செய்யும் தன்மை கொண்டதாகும். இஷவாகுகுல திலகா என்று தொடங்கும் பாடலில் ராமனுக்காக கோயில் கட்டிய செலவுக் கணக்கைக் கூறி வேதனைப்படுகிறார். ராமா! உனக்கு கிரீடம், ஆபரணம் செய்து அழகு பார்த்தேனே! எனக்கு அளித்ததோ கை விலங்கு அல்லவா! அரசு பணத்தை உனக்காக செலவழித்தேன். அதை நீயே மன்னருக்கு அளித்துவிடு! என்று உள்ளம் உருகி வேண்டுகிறார்.
ஒருநாள் நள்ளிரவில், பாதுஷா தானீஷா பள்ளியறையில் இருந்தபோது ராமலட்சுமணர் இருவரும் ராமதாசரின் சேவகர் போல அவர் முன் வந்தனர். ராமதாசர் செலுத்தவேண்டிய ஆறுலட்சம் வராகன் பணத்தையும் திருப்பி அளித்து மன்னர் கையெழுத்திட்ட ரசீதையும் பெற்று, ராமதாசரின் அருகில் வைத்து விட்டு மறைந்தனர். ராமதாசரோ இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது யாரென்று தெரியாமல் தவித்தார். பின், ராமரும், லட்சுமணரும் ராமதாசரின் சேவகர் போல வந்து பணத்தைத் திருப்பி செலுத்தியதை அறிந்தார். பாதுஷா தானீஷா ராமதாசரை சிறையில் இருந்து விடுவித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார். பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பல நன்கொடைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் என் ராமனைக் கண்ட தானீஷாவே என்னும் பொருள்பட பாடிய தன்யுடை தானீஷா நீவு நன்னு கன்னய்யா பதமுலு என்ற அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. பத்ராசலம் கோயிலில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து வந்தார். 1688ம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார். ராமபக்தியில் சிறந்து விளங்கிய தியாகராஜருக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் ராமதாசர். ராமசந்திர மூர்த்தியின் பரமபக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என தியாகராஜர், தனது கீர்த்தனையில் புகழ்ந்து பாடியுள்ளார். ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடு இணையேது. அவர் பத்ரகிரிமலையில் ஏறியபோது விஷ்ணு தூதர்கள் வந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக பத்ராசலம் கோயில் தலவரலாறு கூறுகிறது.
பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ஸ யோகானந்தர்
சிறு வயதிலேயே முகுந்தனுக்குக் கடவுள் பக்தி அதிகம். கோயிலுக்குச் செல்வதிலும், சந்நியாசிகளை தரிசிப்பதிலும் அவனுக்கு அப்படியொரு ஈடுபாடு! ஒருமுறை, அண்ணனைக் காண ஆக்ராவுக்குச் சென்ற முகுந்தனிடம், நீ இப்படிக் கோயில், குளம், சாமியார் என்று அலைந்தால், அப்பாவின் சொத்தில் ஒரு நயாபைசாகூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும் என அறிவுறுத்தினார் அண்ணன். ஆனால் முகுந்தனோ, எனக்குத் தேவையானதை கடவுள் தருவார் என்றான் உறுதியாக! இதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்த அண்ணன், அப்படியா சேதி..? சரி .. இங்கிருந்து மதுரா செல்வதற்கு, உனக்கும் உன் நண்பன் ஜிதேந்திராவுக்கும் ரயில் டிக்கெட் மட்டுமே எடுத்துத் தருவேன்; செலவுக்குக் காசு தரமாட்டேன். நீங்கள் இருவரும் மதுராவில் வயிராகச் சாப்பிட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தபின், பிருந்தாவனம் முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு ஆக்ராவுக்கு திரும்பவேண்டும். எவரிடமும் பணம் கேட்கவோ, திருடவோ கூடாது. இதில் நீ ஜெயித்துவிட்டால், நானே உனக்குச் சீடனாகிவிடுகிறேன் என்றார். சவாலை ஏற்றுக்கொண்டு, ஜிதேந்திராவுடன் புறப்பட்டான் முகுந்தன். மதுராவுக்கு முந்தைய ரயில்நிலையத்தில், நடுத்தர வயதுடைய இரண்டு பேர் ஏறி, இவர்களுக்கு எதிரில் அமர்ந்தனர். மதுராவில் இறங்கியவர்கள், முகுந்தனையும் ஜிதேந்திராவையும் குதிரை வண்டியில் அழைத்துச் சென்றனர். அந்த வண்டி, ஓர் ஆஸ்ரமத்தை அடைந்தது. அங்கிருந்த பெண்மணியிடம், கௌரிம்மா, இளவரசியால் வரமுடியவில்லையாம். சேதி வந்தது. ஆனால், சமைத்த விருந்து வீணாகிவிடக் கூடாதே என்பதால், இரண்டு கிருஷ்ண பக்தர்களை அழைத்து வந்துள்ளோம் என்றனர். உடனே முகுந்தனையும் ஜிதேந்திராவையும் உள்ளே அழைத்துச் சென்று, முப்பது வகை பண்டங்களைப் பரிமாறினாள் கௌரிம்மா. கிட்டத்தட்ட ராஜ விருந்துதான்!
பிறகு ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பியவர்கள், இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் நின்றனர். அப்போது அவர்களை நோக்கி ஓடி வந்த ஓர் இளைஞன், முகுந்தனை வணங்கினான். என் பெயர் பிரதாப். என் கனவில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், உங்கள் இருவருக்கும் பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். தயவு செய்து மறுக்காதீர்கள்! எனக் கெஞ்சி, அவர்களின் பதிலுக்குக் காத்திரமால், இருவரையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று, கிருஷ்ண தரிசனம் செய்து வைத்து, பிருந்தாவனத்தையும் சுற்றிக் காட்டினான். இருட்டத் துவங்கியதும், ஆக்ரா செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகளையும் அவனே வாங்கித் தந்தான். எல்லாவற்றையும் கண்டு அழுதேவிட்டான் ஜிதேந்திரா, ஆக்ராவுக்கு வந்ததும், அண்ணனிடம் நடந்ததை முகுந்தன் விளக்க... நெக்குருகிப் போன அண்ணன் அனந்தன், தம்பி முகுந்தனுக்குச் சீடரானார். நம்பிக்கை, கடவுளைவிட மேலானது! என உணர்த்திய அந்த முகுந்தனே, அன்பின் அவதாரம் எனப் பின்னாளில் போற்றப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தர். உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில், 1893 ஜனவரி 5-ஆம் தேதி, வங்காள க்ஷத்ரியக் குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு, முகுந்தலால்கோஷ் எனப் பெயரிட்டனர் பெற்றோர். இளம் வயதிலேயே இறை பக்தியுடன் வளர்ந்த முகுந்தன், குருவைத் தேடி கோயில் கோயிலாக, ஆஸ்ரமம் ஆஸ்ரமமாக அலைந்தான். மகா ஞானியும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பூவுலகில் இருந்தபடி அருள்புரிவதாகக் கருதப்படுவருமான மகாவதார் பாபாஜியின் சீடர், ஞானி லஹரி மகாசாயா. இவருடைய அன்புச்சீடரான யுக்தேஷ்வர்கிரியின் அருட் பார்வை, 1910-ஆம் வருடம், முகுந்தனுக்குக் கிடைத்தது. அப்போது முகுந்தனுக்கு 17 வயது. குருவின் பார்வை பட்டதும், தேகம் சிலிர்த்தது முகுந்தனுக்கு. யுக்தேஷ்வர், இறைவனைத் தரிசித்த மகான். நமக்கு நல்வழி காட்டுபவர் இவரே! என உணர்ந்து, அவரைச் சரணடைந்தான். யுக்தேஷ்வரும், வா குழந்தாய்! உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன். உன்னை என்னிடம் அனுப்புவதாக பாபாவே சொல்லியிருக்கிறார் என்று அவனை அன்புடன் வரவேற்று, ஆசீர்வதித்தார்.
1915-ல், தனது 22-வது வயதில் துறவறம் மேற்கொண்ட முகுந்தன், அன்று முதல் யோகானந்த கிரி என அழைக்கப்பட்டார். இந்த உலகுக்கு அவர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டாரோ, அந்தக் கடமையை நிறைவேற்ற ஆங்கிலக் கல்வி அவசியம் என உணர்ந்த குருநாதர், யோகானந்த கிரியை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தார். அவரும் பட்டம் பெற்றார். யோகானந்த கிரியின் பிறப்பின் குறிக்கோள் நிறைவேறும் காலம் நெறுங்கியது. 1920 ஆம் வருடம், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில், இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள, கப்பல் பயணம் மேற்கொண்டார் யோகானந்த கிரி. கிரியா யோகம் என்கிற அற்புதமான யோகக் கலைப் பயிற்சி, பாரத மண்ணில் ரிஷிகள், ஞானிகள் ஆகியோரால் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுசரிக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வருகிறது. உடலின் இயக்கத்தையும் உள்ளத்தின் ஓட்டத்தையும் இணைத்து, பயிற்சியாலும் தியானத்தாலும் மனித உயிர்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் அந்த சூட்சுமக் கலை, மகாவதார் பாபாவிடமிருந்து, அவருடைய சீடர் பரம்பரை மூலம் யோகானந்த கிரிக்குக் கிடைத்தது. பாஸ்டன் மாநாட்டில் இந்து சமயப் பாரம்பரியம், யோகக் கலை, தியான நிலை ஆகியவை குறித்து அவர் ஆற்றிய உரை, அமெரிக்க மக்களை வியக்க வைத்தது. அந்த மண்ணில் தனது பணியைத் துவக்கியவர், அந்த வருடம் தன்னிலை உணர்வோர் சங்கம் எனும் இயக்கத்தையும் துவக்கினார். அமெரிக்கர்களிடையே இந்த யோகக் கலைப் பயிற்சியை அறிமுகப்படுத்தி, போதித்தார்.
இறையுணர்வு என்பது மூட நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது அல்ல. நேரடியான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இறைவன் என்ற பேருண்மையை அனுபவித்து அறிதலே ஞானம். பிரபஞ்சம், இறைவனின் நாடக அரங்கம். அவர் நடத்தும் நாடகத்தில், நமக்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். இறப்பு, மறுபிறப்பு என்பவை, ஒரு பாத்திரத்தில் நடித்து முடித்து, மற்றொரு பாத்திரத்தை ஏற்று நடிப்பது போலத்தான். இங்கே, மனிதர்களது துன்பங்களுக்குக் காரணம், அவர்கள் தாங்கள் ஏற்கும் பாத்திரத்துடன் ஒன்றிவிடுவதே! அதை விடுத்து, நாடகத்தின் சூத்ரதாரியான இறைவனிடம் ஒன்றுவதே, நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு. கிரியா யோகம், தியானம் ஆகியவற்றின் மூலம் இறைவனை அடையலாம் எனும் அவரது போதனைகள், அங்கே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. பிறகு யோகானந்த கிரி, குருநாதரை தரிசிக்கும் ஆவலுடனும், சத்சங்கப் பணியை இந்திய மண்ணில் பரப்பும் எண்ணத்துடனும், 1935- ஆம் வருடம் இந்தியாவுக்கு வந்தார். மகாத்மா காந்தி, சர்.சி.வி ராமன் முதலான சான்றோர்களைச் சந்தித்து, தனது கருத்துக்களை வலியுறுத்தினார். குருநாதர் யுக்தேஷ்வரைச் சந்தித்து நமஸ்கரித்தார். தனது சீடரின் வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைந்த குருநாதர், ஆன்மிகக் கரையைத் தொட்டவர் எனும் பொருள் படும்படி, பரமஹம்ஸர் எனும் பட்டத்தை யோகானந்த கிரிக்கு வழங்கினார். பிறகு, சில நாளில் இறைவனின் திருவடி சேர்ந்தார் குருநாதர்!
பரமஹம்ஸ யோகானந்தர், 1936- ஆம் வருடம் அமெரிக்கா திரும்பி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை எனும் தலைப்பில், ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம், உலகின் பெரும்பாலான மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அதிக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில், இன்றைக்கும் முக்கிய இடத்தில் உள்ளது அந்த நூல்! 1952-ஆம் வருடம், மார்ச் 7- ஆம் தேதி, அமெரிக்காவின் இந்தியத் தூதருக்கும் அவருடைய மனைவிக்கும், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட பரமஹம்ஸ யோகானந்தர், கங்கை நீர், இமயமலைக் குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக் கொண்ட பாரதப் புனித மண்ணை இந்த உடல் ஸ்பரிசித்ததே பெரும்பேறு! என்று சொல்லியபடியே சரிந்து விழுந்தார்; இறைவனுடன் இரண்டறக் கலந்தார்! அந்த நகரில் உள்ள, இறந்தவர் உடல்களைப் பாதுகாக்கும் பிணவறையின் இயக்குநர் எழுதிய கடிதம் ஒன்று, அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழில், 1952- ஆம் வருடம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியானது. அதில், இறந்து 20 நாட்களான பின்பும், பரமஹம்ஸ யோகானந்தரின் உடல், மிக நல்ல நிலையிலேயே இருந்தது. உடலின் எந்தப் பகுதியும் கெடவில்லை; துர்நாற்றமும் வீசவில்லை. உயிரற்ற உடல் ஒன்று, இத்தனை நாட்கள் கடந்தும்கூட, நல்லநிலையில் இருப்பது, இதுவரை நடந்திராத அதிசயம்! என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு, பல நாட்கள் கழித்து, யோகானந்தரின் திருமேனி, கலிபோர்னியா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யோகக் கலையின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மகானான பரமஹம்ஸ யோகானந்தரின் புகழ், உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நரசிம்ம மேத்தா
நரசிம்ம மேத்தா
1414- ஆம் வருடம், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில், தலாஜா எனும் ஊரில் வசித்த பலராம் மேத்தாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் பக்தரான பலராம் மேத்தா, தன் மகனுக்கு நரசிம்ம மேத்தா எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். நரசிம்ம மேத்தா, சிறுவயதில் எவருக்கும் அடங்காத பிள்ளையாக வளர்ந்தார். பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவது, மரம் ஏறுவது, குளத்தில் நீந்தி விளையாடுவது எனப்பொழுதைக் கழித்தார். சிறு வயதில், பெற்றோரின் மரணம்தான் இவரை வேறொரு திசைக்கு இட்டுச் சென்றது. தனிமரமாகிப் போன நரஸி, ஜூனாகாத் எனும் ஊரில் வசித்து வந்த சித்தப்பா யமுனாதாஸ் வீட்டில் அடைக்கலமானார். அங்கே சித்தப்பாவின் மகனும் மருமகளும் இருந்தனர். படிப்பில் நாட்டமின்றித் திரிந்த நரஸியை, அவரின் மதனி ஏசினாள். இந்த அவமானத்தால், வீட்டை விட்டு வெளியேறிய நரஸி, அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி, அங்கேயே தங்கினார். பிறகு, கோபமும் வேகமும் தணிந்து, தன்னைத்தானே நொந்து, கண்ணீர் விட்டு அழுதார். அருகில், பாழடைந்த நிலையில் சிவாலயம் ஒன்று இருந்தது. அங்கே சென்றவர், சிவலிங்கத்தின் முன்னே அமர்ந்து கொண்டார். உணவு, தாகம், தூக்கம் ஆகியவற்றை மறந்து, நாட்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்தார். ஒருநாள், நரஸிக்கு திருக்காட்சி தந்தார் சிவனார். சிலிர்த்துப் போனார் நரஸி. அங்கே, சிவ சன்னதியில் அவருக்கு ஞானம் கிட்டியது. பிறகு சிவனருளால், ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை தனது அகக்கண்ணால் தரிசிக்கும் பேறு பெற்றார். ராதை மற்றும் கோபிகையருடன் ஸ்ரீகண்ணன் புரிந்த ராஸக்கிரீடைகளைக் கண்ட நரஸி, கிருஷ்ண பக்தரானார். கண்களில் ஆனந்தக் கண்ணீரும், நாவினில் தேனினும் இனிய கவிதைகளும் பெருக்கெடுத்தன. இந்த நிலையில், நரஸியைக் காணாமல் சித்தப்பாவும் மற்றவர்களும் தேடினர். இறுதியில், சிவாலயத்தில் அவரைக் கண்டனர். அங்கே, பள்ளிக் கல்வியைக் கற்காத நரஸி, கண்ணன் மீது அர்த்தங்கள் பொதிந்த பாடல்களைப் பாடியது கண்டு வியந்தனர். அதன் பின், அனைவரின் வற்புறுத்தலுக்கு இணங்க, வீடு திரும்பினார் நரஸி. பெரியவர்களின் அறிவுரைப்படி, மானெக்பாய் என்பவளை மணந்து இல்லறத்தில் ஈடுபட்ட நரஸிக்கு, மகளும் மகனும் பிறந்தனர். ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பாடிய நரஸி மேத்தாவின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, குஜராத் மக்கள் இன்றைக்கும் கதைகதையாகச் சொல்லிப் பூரிக்கின்றனர்.
அவற்றில் ஒரு சம்பவம்...நரஸி மேத்தாவின் மகள் வளர்ந்து உரிய பருவத்துக்கு வந்தாள்.அவளுக்குத் திருமணத் தேதியும் குறித்தாகிவிட்டது. ஆனால் நரஸி மேத்தாவிடம் சல்லிக்காசு கூட இல்லை.இருப்பினும் இறை சன்னதியிலேயே காலத்தைக் கழித்து வந்தார் அவர்.அப்போது ஜூனாகாத் பகுதியை மான்லித் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.நரஸி மேத்தாவையும் அவரின் கிருஷ்ண பக்தியையும் அறிந்த மான்லித் நரஸிக்கு பாடம் புகட்ட நினைத்தான்.நரஸியைக் கைது சிறையில் அடைத்தான்.உன் மகளுக்குத் திருமணம்;உன்னிடம் காசு இல்லை.ஆனால் நீயோ எந்தக் கவலையுமின்றி கடவுள் சன்னதியிலேயே காலத்தை ஓட்டுகிறாய்? உன்னுடைய தாமோதரனின் கழுத்தில் ஜொலிக்கிற ஹாரம் சிறையில் இருக்கிற உன் கைக்கு வந்துவிட்டால் தாமோதரனையும் உன் பகுதியையும் ஏற்றுக்கொள்கிறேன்.தவிர தாமோதரனுக்கு அடிமையாகிறேன். உம்மையும் விடுதலை செய்கிறேன் என்றான் எகத்தாளமாக.இதைக் கேட்டதும் மெய்யுருகி தாமோதரனைப் போற்றிப் பாடினார் நரஸி மேத்தா. மணிவண்ணா! என்னை உன் காலடியில் இருந்து பிரித்துவிட்டாயே... நான் என்ன தவறு செய்தேன்? என அழுது புலம்பினார்.பக்தனின் கதறலைக் கேட்டுச் சும்மா இருப்பாரா தாமோதரன்?! நரஸி மேத்தாவுக்குத் திருக்காட்சி தந்தார். நரஸி கேதார ராகத்தில் என்னைப் பற்றிப் பாடு! என் கழுத்து ஹாரத்தை உனக்குத் தருகிறேன் என்று பகவான் சொல்ல... நிலைகுலைந்தார் நரஸி மேத்தா. ஐயோ...கேதார ராகத்தில் பாடமுடியாதே!அதனை அடகு வைத்து, வீட்டுச் செலவுக்கு ஏற்கெனவே பணம் வாங்கி விட்டேனே! என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார் நரஸி மேத்தா.உடனே ஸ்ரீகண்ணன் அடகுக்கடைக்காரரிடம் சென்று,ன நரஸி மேத்தா தரவேண்டிய தொகையை வட்டியுடன் தந்தார் கேதார ராகத்தை மீட்டெடுத்தார் அதற்குச் சாட்சியாக கடைக்காரரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் வாங்கி வந்து நரஸியிடம் கொடுத்தார்.இப்போது பாடலாமே! என்றார் புன்னகையுடன்.உடனே நரஸி மேத்தா ஹரி ஹார் தேகா ஹரி ஹார் தேகா எனத் துவங்கும் பாடலை கேதார ராகத்தில் மெய்யுருகப் பாடினார்.
அப்போது சன்னதியில் ஸ்ரீதாமோதரனின் கழுத்தில் இருந்த ஹாரம் அதுவாகவே கழன்று மெள்ளக் காற்றில் மிதந்து வந்து நரஸியின் கழுத்தில் மாலையென விழுந்தது! இதைக் கண்ட அரசன் சிலிர்த்தான். நரஸியின் காலில் விழுந்து பணிந்தான்.அவரை விடுதலை செய்ததுடன் நரஸியின் மகளது திருமணத்தையும் சிறப்புற நடத்தி வைத்தான்.அதுமட்டுமா? நரஸியின் மகள் கர்ப்பமுற்றபோது அவளுக்குச் செய்ய வேண்டிய மரேமு எனும் சடங்குகளை நடத்துவதற்கான பொருட்களையும் இறைவனே தந்தருளினான்.நரஸியின் மகனது திருமண வைபவத்தையும் செல்வந்தர்போல் வந்து மதுசூதனனே நடத்தி வைத்தருளினான்.ஒருமுறை அவரின் தந்தையின் திவச தினம். உரிய நேரத்துக்குப் புரோகிதர் வந்துவிட்டார்.திவசத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கடன்பட்டு வாங்கி வைத்திருந்தாள் மனைவி.இதோ... தாமோதரனைத் தரிசித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர் அங்கே பஜனையில் இறங்கி பரவசத்தில் மூழ்கிப் போனார்! அனைத்தையும் அறியாமலா இருப்பான் தாமோதரன்? சன்னதியில் இருந்து கிளம்பி தனது பக்தரின் உருவில் அவரது வீட்டுக்குச் சென்றான். மணையில் அமர்ந்து திதி கொடுத்துவிட்டுக் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.பரவச நிலையில் இருந்து மீண்டவருக்கு தந்தையின் திவசம் நினைவுக்கு வர விழுந்தடித்துக் கொண்டு ஓடினார் வீட்டுக்கு! மனைவி ஆச்சரியமுற்று முழுவிவரமும் சொன்னாள்.நடந்தவற்றைக் கேட்டதும் விக்கித்து நின்றார் அவர்.அந்தக் கண்ணனே தனது உருவில் வந்து தன் தந்தைக்குத் திதி கொடுத்திருக்கிறான் என உணர்ந்து சிலிர்த்தார்.அந்த பக்தர் யார் தெரியுமா?வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே ஜேபீட பராயி ஜானேரே பரதுக்க உபகாரு கரே தோயே மன அபிமானந அநேரே...எனத் துவங்கி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தமது தேன்குரலில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா?பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ அவனே உண்மையான வைஷ்ணவன்...எனத் துவங்கி பல உயரிய கருத்துகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடல் மகாத்மா காந்திக்குப் பிடித்தமானது.மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டங்களில், தவறாமல் ஒலிக்கும் பாடல்! பக்தி ஒழுக்கம் மனிதாபிமானம் நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்திய இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.மேலும் ஸ்ரீகண்ணன்,தன் வாழ்வில் நிகழ்த்திய அருளாடல்களை,ஹுண்டி,மரேமு,புத்ர விவாஹ் போன்ற கவிதைகளால் பாடியுள்ளார் நரஸி மேத்தா.குஜராத்தி மொழியின் தலைசிறந்த கவிஞர் என அவரைப் போற்றிக் கொண்டாடினர் மக்கள்.ரகுபதி ராகவ ராஜாராம் எனும் புகழ்மிக்க பாடலும் நரஸி மேத்தா இயற்றியதுதான்.இறுதி வரை இறைவனைப் பாடி மகிழ்ந்த நரஸி மேத்தா தனது 69-வது வயதில் மங்ரோல் எனும் இடத்தில் ஸ்ரீகண்ணனின் திருவடியை அடைந்தார்.அவரின் திருவுடல் எரியூட்டப்பட்ட மயானம் அவரது நினைவாக, நரஸிங் நூ ஸம்ஷான் என அழைக்கப்படுகிறது.
அருள் மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்
அருள் மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்
மூலவர்:திருமூலநாதர் (மூலட்டானேசுவரர்,சபாநாயகர்,கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர்,பொன்னம்பல கூத்தன்)
அம்மன் :உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம்:தில்லைமரம்
தீர்த்தம்:சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:தில்லை
ஊர்: சிதம்பரம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம்
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது.
திருவிழா:மார்கழி திருவிழா - 10 நாள் திருவிழா - திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும். ஆனித்திருமஞ்சனம் - 10 நாள் திருவிழா - ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.
தல சிறப்பு:இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்- 608 001.கடலூர் மாவட்டம்.போன்:+91- 94439 86996
பொது தகவல்:இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.
பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
நேர்த்திக்கடன்:பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தலபெருமை:இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.
சிதம்பர ரகசியம்: சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.
சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.
தேவாரம் கிடைத்த தலம்: மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது. திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.
நால்வர் வந்த வழி: சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள். சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார். நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார். சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர். மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.
இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
மூலவர் யார் தெரியுமா? : பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.
தரிசிக்க முக்தி : திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.
தேரில் நடராஜர்: இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.
சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை: ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.
உடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி: மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
தல வரலாறு:முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.