வியாழன், 17 டிசம்பர், 2020

புரந்தரதாஸர்

புரந்தரதாஸர்

பண்டரிபுரம் அருகிலுள்ள வேமன்னபுரியில் வசித்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில், கி.பி.1484ஆம் ஆண்டு மாதவராவ்- ரத்தினாபாய் தம்பதியருக்கு ஆண்குழந்தை பிறந்தது. பிள்ளைக்கு ரகுநாதன் என பெயர் சூட்டினர். வட்டிக்கடை நடத்தி வந்த மாதவராவ், நேர்மையானவராகவும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றும் இருந்தார். ரகுநாதன் இளம்வயதிலேயே தந்தையின் தொழிலைக் கற்றுக் கொண்டு வியாபாரம் நடத்தினார். லட்சுமிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரது மனதில் செல்வந்தனாக வாழவேண்டும் என்ற பேராசை அதிகரித்தது. ஊர்மக்கள் ரகுநாதனை வெறுத்து ஒதுக்கினர். ஆனாலும், பணம் தேடி பைத்தியமாக அலைந்தார். தப்பி தவறி யாராவது யாசித்து வருவதைக் கண்டாலும், அவருக்குப் பிடிக்காது. யாராவது உதவி கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டுவார். ஒருமுறை, ஒரு முதியவர் ரகுநாதனின் வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அவரை எப்படியாவது ஒதுக்கி விட வேண்டும் என்று எரிச்சலும், ஏளனமும் கொண்டு ரகுநாதன் பார்த்தார். முதியவரோ ஒரு எலுமிச்சம்
பழத்தைக் கொடுத்து, சுவாமி! நீங்கள் மகாபிரபு! என் பிள்ளையின் திருமணத்திற்கு ஆயிரம் வராகன் பணம் தேவைப்படுகிறது. தானமாகக் கொடுத்தால் மனம் மகிழ்வேன்! என்று வேண்டிக் கொண்டார்.

இதென்ன தர்ம சத்திரமா! வேறு இடம் பாருங்கள்! என்று கடுமையாக கத்தி, அவரை வெளியேற்றினார். ரகுநாதனின் மனைவி லட்சுமிபாயோ சிறந்த குணவதி. முதியவர், அவளிடம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ரகுநாதனுக்கு தெரியமால், தன் வேண்டுகோளைச் சொல்லி யாசகம் கேட்டார். அவள் தன் வைரமூக்குத்தியைக் கொடுத்து, இதை விற்றால் ஆயிரம் வராகன் கிடைக்கும், என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள். முதியவர் அதை விற்க ரகுநாதனின் கடைக்கே வந்தார். மூக்குத்தியை விலைக்கு எடுத்துக் கொள்ளும்படி வேண்டினார். ரகுநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும், அவரிடம் காட்டிக் கொள்ளாமல், ஐயா! வீட்டுக்குச் சென்று பணம் எடுத்துவரும் வரை காத்திருங்கள், என்று சொல்லிவிட்டு அவசரமாக மனைவியைக் காண ஓடினார். படுவேகமாக வீட்டுக்குள் நுழைந்த ரகுநாதனைக் கண்ட லட்சுமிபாய் மனம் பதறியது. லட்சுமீ! நான் வாங்கித் தந்த வைரமூக்குத்தியை எடுத்து வா! என்று கட்டளையிட்டார்.  பகவானே! பாண்டுரங்கா! பண்டரிநாதா! என்னைக் காப்பாற்று! என்று பூஜையறையில் வேண்டிக் கொண்டு மூக்குத்தியைத் தேடுவது போல பெட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன ஆச்சர்யம்! பெட்டியில் அவளது வைரமூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து கொடுத்தாள். அதேநேரம், உண்மையை மறைக்காமல், முதியவர் தன்னிடம் உதவிகேட்டு வந்ததையும், அவரிடம் மூக்குத்தியை ஒப்படைத்ததையும் விபரமாக சொன்னாள்.

ரகுநாதன் திகைப்புடன் கடைக்கு ஓடினார். லட்சுமிபாயும் பின் தொடர்ந்தாள். ஆனால், அங்கு முதியவரைக் காணவில்லை. லட்சுமி! நான் பாவியாகி விட்டேனே! வந்தவர் சாக்ஷõத் பண்டரிநாதரே தான்! என்று சொல்லி கண்ணீர் பெருக்கி நின்றார். கடையில் அவர் அமர்ந்திருந்த இடத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் அனைத்தும் பண்டரிநாதனுக்கே உரியது என்று கூறி, அவரது
பக்தர்களுக்கு தானம் செய்தார். இசை நுணுக்கங்களை அறிந்திருந்த ரகுநாதன் பண்டரிநாதனை பாடி வணங்கினார். செய்த தர்மத்தால் செல்வம் முழுவதையும் இழந்து ஏழையானார். ஒரு காலத்தில், அளவுக்கு அதிகமான கஞ்சத்தனம்... இப்போதோ மிதமிஞ்சிய பக்திநாட்டம்.. என்று மனம் மாறிப்போன தன் கணவரைக் கண்டு லட்சுமிபாயும் அதிசயித்தாள். தனக்கு, திருமண வயதில் ருக்மணி என்னும் மகள் இருந்ததையே ரகுநாதன் மறந்துவிட்டார். பின், அதுபற்றிய நினைவு வந்து, கிஷ்கிந்தாபுரியில் வசித்த கேசவராவ் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன்பின், பகவத்பக்தியில் முழுவதுமாக ஆழ்ந்துவிட்டார். மக்கள் அவரை ரகுநாத தாசர் அழைக்கத் தொடங்கினர்.  ஒருசமயம் ரகுநாததாசர், மனைவியுடன் திருப்பதி சென்றார். அங்கே தெய்வபக்தியில் சிறந்த புரந்தரி என்ற தாசிப்பெண்ணைக் கண்டார். திருப்பதிக்கு வந்த தம்பதியர், அவளது வீட்டிலேயே தங்கினர். தாசியாக இருந்தாலும், புனிதமான வாழ்க்கையை புரந்தரி நடத்தி வந்தாள்.

ஒருநாள், இரவில் புரந்தரி தன்னை அலங்கரித்துக் கொண்டு கையில் வீணையும், காலில் சதங்கையும் கட்டிக் கொண்டு கிளம்பினாள். ரகுநாத தாசரும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார். புரந்தரி அவரிடம்,  சுவாமி! நான் கோயிலுக்குச் செல்கிறேன். பெருமாள் முன் நடனமாடுவேன். அப்போது என் நடனத்திற்கேற்ப பெருமாள் வீணை வாசிப்பார். பின் அவர் நடனமாட, நான் வீணை வாசிப்பேன். நான் சொல்வது அனைத்தும் உண்மை. நீங்கள் பக்தியில் சிறந்தவர் என்பதால் உங்களிடம் இந்த உண்மையைச் சொல்கிறேன், என்றாள் புரந்தரி. இதைக்கேட்டு அதிசயித்த ரகுநாததாசர், திருப்பதி வேங்கடவன் தரிசனத்தை தானும் பெறவேண்டும் என்று சொல்லி உடன் வந்தார். ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டார். புரந்தரி சொன்னபடியே அவள் நடனமாட, பெருமாளே வீணை மீட்டி பாட்டுப் பாடினார். ரகுநாததாசர் மறைவில் இருப்பதை பெருமாள் அறியமாட்டாரா என்ன! வேண்டுமென்றே பாட்டின் நடுவே அபஸ்வரம் வரும்படி பாடத் தொடங்கினார். இதைக் காதில் கேட்ட மாத்திரத்தில் ரகுநாததாசர் அவரிடம், ஐயோ! புரந்தரி! இதென்ன பெருமாள் அபஸ்வரமாகப் பாடுகிறார்! என்று கத்தினார். பெருமாள் உள்ளம் மகிழ்ந்து புரந்தரதாசரே, வெளியே வாரும் என்று அழைத்தார். அதன்பின் அவரது பெயர் புரந்தரதாசர் ஆயிற்று.

அவரிடமிருந்து தேனெனப் பிரவாகித்தன பாடல்கள். தென்னகம் முழுதும் யாத்திரைகள் மேற்கொண்டு, கன்னடம் மற்றும் சமஸ்கிருத மொழியில், ஸ்ரீபாண்டுரங்கனையும் திருவேங்கடவனையும், ஆயிரக்கணக்கான பாடல்களால் பாடித் தொழுதார். அனைவரும் இறையருளைப் பெறுவதற்கான நெறிமுறைகளை தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தினார். ஏழு ஸ்வரங்களையும் கொண்டு, மாயா மாளவ கௌள ராகத்தில் அவர் பாடியதைக் கேட்டுப் பரவசமானார்கள் மக்கள். கர்நாடக சங்கீதத்தில் பத்ததி எனப்படும் புதிய வழிமுறையை வரையறுத்துத் தந்ததே புரந்தரதாஸர்தான். கீர்த்தனைகள், சூளாதிகள், லக்ஷண, லக்ஷிய கீதங்கள் ஆகியவற்றை இயற்றி, சங்கீதத்துக்குப் பெரும் தொண்டாற்றிய புரகர்நாடகாவிலுள்ள தொட்டமளூர் கிருஷ்ணன் கோயிலுக்கு இவர் விஜயம் செய்துள்ளார். அத்தலத்துக்கு சென்று இவரது கீர்த்தனையைப் பாடுவோர் குழந்தை வரம் பெறுவர். சங்கீதத்தையும் ஹரி பக்தியையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த புரந்தரதாஸர், 1564ஆம் வருடம், ஹம்பியில் பாண்டுரங்கனின் திருவடியில் கலந்தார். எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் குரலில் ஒலிக்கும், ஜகதோத் தாரண... எனும் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விவரிக்கும் கீர்த்தனை, எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் ஒலிக்கும் வேங்கடவனைப் பற்றிய வேங்கடாசல நிலையம்... எனும் கீர்த்தனை ஆகியவற்றின் மூலம் புரந்தரதாஸர் நம்மிடையே இன்றும் வாழ்ந்து வருகிறார். எத்தனையோ திருவிளையாடல்களை இறைவனோடு அனுபவித்த இசைவித்தகர் புரந்தரதாசர், அருளாளராக இன்றும் போற்றப்படுகிறார்.


கருத்துகள் இல்லை: