திங்கள், 23 நவம்பர், 2020

சாஸ்தா நம் {லோக வீரம்}

லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

2. விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம் ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம் கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

7. சில வீர்ய க்ஷமுத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம் சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்


வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)

11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே

(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)…

 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா இன்று வீர சாஸ்தா

ஸ்வாமியே சரணம் ஐயப்பா இன்று வீர சாஸ்தா

சங்கரர் தொழும் சாஸ்தா

கேரளத்தில் அவதரித்தவர் ஸ்ரீசங்கர பகவத் பாதர்கள். ஐயப்ப சாஸ்தா அரும்புகழ் பெற விளங்குவதும் கேரளத்தில் தான். சகல தெய்வங்களையும் போற்றித் துதி செய்த ஆசாரியர் சாஸ்தாவை ஏத்தி தோத்தரித்திருக்கிறாரா? சிவானந்த லஹரியில் பாணத்வம் என்று தொடங்கும் ச்லோகத்தில் திருமால் சிவபெருமானிடம் எத்தனை விதங்களில் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று ஆசாரியர் எடுத்துரைக்கிறார். அதிலே முதலில் அர்த்த வபுஷா பார்யா த்வம் ஆர்யாபதே என்றும் பின்னர் ஸகிதா என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. முதலில் சொன்னதற்குப் பொருள் ஆரியை எனும் அம்பிகையின் பதியான சிவனின் பாதி உடலைத் திருமால் பெற்றிருப்பதால் திருமால் சிவனுக்கு மனையாளாகிறான் என்பதாகும். அர்த்த நாரீஸ்வரக் கோலத்தில் எந்த இடப்பாதியில் அம்பிகை இடங்கொண்டுள்ளாளோ அதே பாதியில் சங்கர நாராயணக் கோலத்தில் திருமால் விளங்குகிறான்.
எனவே அவனே சக்தி வடிவினன்; அதாவது சிவனின் பத்தினி ஆகிறான். இங்கே சங்கர நாராயண வடிவை மட்டுமின்றி திருமால் மோகினியாக வந்து மோன சிவனை மோஹிக்கச் செய்து அவனுக்கு நாயகியாகி ஐயப்பனைப் பெற்றெடுத்ததை வெகு அற்புத ஸூக்ஷ்மச் சுருக்கமாக ஸ்ரீசங்கரர் சுட்டிவிடுகிறார் ஆர்யாபதே! என்று பரமேச்வரனை அழைப்பதன் மூலம். அம்பிகைக்கு எத்தனையோ பேர் இருக்க ஆர்யா என்கிறார். புருஷ தெய்வங்களுள் ஆர்ய என்ற பெயர் சாஸ்தாவுக்கே உள்ளது. கேரளத்தில் அவர் இருப்பது ஆரியங்காவு. மஹாவிஷ்ணு பரமேஸ்வரனுக்குப் பத்தினி ஸ்தானத்தில் இருந்த போது ஆரிய சாத்தனை ஈந்ததைச் சுட்டவே இங்கே அம்பிகைக்கு ஆயிர நாமமிருக்க, ஆரியா நாமத்தைச் சொல்லி, ஆர்யா பதே என்று ஆர்யாம்பாளின் புதல்வரான ஆசாரியர் ஈசனை விளிக்கிறார் எனத் தோன்றுகிறது. பின்னால் ஸகிதா என்று வருவதில் இந்த மொட்டினை மேலும் சற்று இதழ் விரித்துக் காட்டுகிறார். ஸகிதா என்றால் தோழியாயிருக்கும் தன்மை. மோகினியாக வந்த சமயத்திலன்றி வேறெப்போது திருமால், ஈசனுக்குத் தோழியாக இருந்திருக்கிறான்? சிவபெருமானைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வருணித்து சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என பகவத்பாதர் அருளியிருக்கிறார். அதில் முதலில் ஈசன் வாஸம் செய்யும் கைலாஸத்தையும் அவனது திவ்யாயுதங்களையும் வாஹன ரிஷபத்தையும் தோத்தரித்து விட்டு சிவ குமாரர்களை தலைக்கொரு ஸ்லோகத்தால் போற்றுகிறார். இங்கே தான் ஆனைமுகனையும் ஆறுமுகனையும் துதித்தபின் ஒரு முழு ஸ்லோகத்தால் ஐயப்பனை வாழ்த்தி வழிபடுகிறார்.

ஆரூட - ப்ரௌட - வேக - ப்ரவிஜித - பவநம்
துங்க துங்கம் - துரங்கம்
சேலம் நீலம் வஸாந : கர - தல - விலஸத்
காண்ட - கோதண்ட - தண்ட :
ராக - த்வேஷாதி - நாநாவித - ம்ருக - படலீ
பீதி - ஹ்ருத் பூத - பர்த்தா
குர்வந் - நாகேட - லீலா மதிவஸது மன
கானனே மாமகீனே

காற்றையும் வெல்லும் வேகம் வாய்ந்து, ஓங்கி வளர்ந்ததொரு புரவியின் மீது ஐயப்ப ஸ்வாமி ஆரோஹணித்திருக்கிறான். நீல ஆடை பூண்டிருக்கிறான். கையிலே அம்பும் வில்லும் ஒளிர்கின்றன. (காண்ட என்றால் அம்பு எனும் பொருள் கொண்டால், காண்ட கோதண்ட என்பது அம்பும் வில்லும் என்றாகும். காண்ட எனில் கரும்பு என்றும் கொள்ளலாம். அப்படியாகில் காமாக்ஷி போலவே சாத்தனும் கரும்பு வில்லோனாக சங்கரருக்குக் காட்சி தந்ததாகும்.) விற்கையனாக விசைப்பரியேறிச் செல்வது வீரக்கோலம். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரனாகக் காடு சென்றதே போன்ற தோற்றம். ஆனால் இது மூல ஐயப்பனின் அவதாரத்திலே காணும் நிகழ்ச்சியே. ஆசாரியர் மூல ஐயப்பனை நினைத்தே துதிக்கிறார் எனக் கொண்டால், சிவ கணத் தலைவனாக அவன் வேட்டைக்குச் செல்வதைச் சொல்கிறாரென்று ஆகும். பூத பர்த்தா என்று அவர் சொல்வது, ஈசனின் பூதப்படைக்கு நாயகன் சாஸ்தாவே என்று அவர் கருதுவதைக் காட்டுகிறது. மூத்த பிள்ளை கணபதியை நாம் சிவ ஸேனா நாதனாக எண்ண, ஆசாரியரோ மூன்றாம் பிள்ளைக்கு இவ்வுயர்வைத் தருகிறார். (மலையாளத்தில் பூத நாதன் என்று ஐயப்பனைக் குறிப்பிடுதுண்டென்றும், மக்களும் அப்பெயர் வைத்துக் கொள்வதுண்டென்றும் அறிகிறோம்.) வேட்டையாடும் வீரனிடம் கனிந்து வேண்டுகிறார். பின் இருவரிகளிலே பூதநாதனே! உனக்கு வேட்டை விளையாடலில் தானே வேட்சை? அப்படியானால் வா, எண்ணங்கள் மண்டி வளர்ந்திருக்கும் என் மனமெனும் காட்டுக்கு! இந்தக் காட்டிலே விருப்பு, வெறுப்பு முதலான பல்வேறு விலங்கு கூட்டங்கள் திரிகின்றன. அவற்றுக்கு அச்சமூட்டி வேட்டையாடிப் பொலிவாய்! இப்படிப் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர். கிராத வேடம் கொண்ட பரமேசனிடம் இவ்வாறே தமது சித்த அரணியத்திலே வேட்டையாட, ஸ்ரீசங்கரர் வேண்டுவதை சிவானந்த லஹரியில் காண்கிறோம். இங்கே மூத்த பிள்ளையின் ஸ்தானத்தோடு அப்பனின் ஸ்தானத்தையும் ஐயப்பனுக்கே கொடுத்து விடுகிறார். வீரனாகக் கண்டவனை கருணை கூர்வான் என்று நம்பி வேண்டியதால் அவனது அன்பு ஈரத்தைக் காட்டிவிடுகிறார். அதோடு அவன் விருப்பு வெறுப்புகளை வெல்ல வல்லவன் என்பதால் இவ்விருமையற்ற ஞான ஸாரனாகவும் அவனை நமக்கு உணர்த்திவிடுகிறார். அதாவது சக்தி, பிரேமை, ஞானம் மூன்றிலும் பெரியோனாகச் சாத்தனைக் காட்டிவிடுகிறார் சங்கரர்.

ஆசாரியர் கண்ட ஆரியரின் பெருமை இதுவே!
__________________________________________________________________________


ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும்

” ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும்”

 பதிவு சற்று பெரிது பொறுமையாக படிக்கவும்.

ஸ்ரீசக்ரத்தை ஸ்ரீயந்த்ரம் என்றும்  சொல்வதுண்டு. ‘ஸ்ரீவித்யா பூஜை’ என்றாலே ”ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?” என்றுதான் கேட்கிறோம். ”ஆமாம்” என்றே பதில் வரும். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்த்ரங்கள் வைத்துப் பண்ணுவதில்லை.

ஆலயங்களில் வேணுமானால் ஸந்நிதிகளில் விக்ரஹங்களுக்குக் கீழே அந்தந்த யந்த்ரம் பூமிக்குள்  சில இடங்களில் வெளியிலேயே கூட ப்ரதிஷ்டையாகி இருக்குமே தவிர அகங்களில் அப்படியில்லை. [சிவனுக்கு] பாணம், [விஷ்ணுவுக்கு] ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் ‘ஸ்வர்ண ரேகா சிலா’ என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள்.

ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று அவயவங்களோடு கூடின மூர்த்தி அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடு கூட தனியாயில்லை ஸ்ரீசக்ரத்தோடு கூட அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது. ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை [வழிபாட்டு முறையை] எடுத்துக் கொண்டாலும் அதில் ‘மந்த்ரம்’, ‘யந்த்ரம்’ என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷாத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்; சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு; அபார சக்தியுண்டு. ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன ஆவாஹனாதிகளில் ப்ரயோஜன படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு. அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம் அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது. அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுக்கு [அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி] ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். அகங்களில் மாத்திரமில்லை;ஆலயங்களிலும் இப்படி இருக்கிறது. திருவண்ணாமலை கிரிப்ரதக்ஷிணத்தில் ஒரு ப்ரஸித்தமான துர்க்கையம்மன் கோவிலிருக்கிறது. அங்கே யந்த்ரத்தைப் பார்த்தால் ஸ்ரீசக்ரமாகவே இருக்கிறது. சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்ரமே பூஜை நடக்கிறது.

இப்படி மற்ற எந்த ஸ்வாமியையும் விட அம்பாளுக்கே யந்த்ரம் விசேஷமாகவும், அம்பாளுக்கே இருக்கப்பட்ட அநேக ரூபங்களுக்கான யந்த்ரங்களிலும் ஸ்ரீயந்த்ரத்திற்கே விசேஷம் என்றும் இருக்கிறது. கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி அபரிமிதமான சக்தி இருக்கிறது. [சிரித்து] கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும் திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன. ஸ்ரீ சக்ரத்தில் சக்ரம் என்று வட்டமாக இருக்கும் மத்ய பாகத்தில் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று வெட்டிக் கொள்வதில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்ய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. ஆவரணம் என்றால் மறைப்பு என்பது நேர் அர்த்தம். இங்கே சுற்று, ப்ராகாரம், ரோவ் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஒருத்தரைச் சுற்றிப் பல பேர் நின்றால் ஆஸாமி தெரியாமல் மறைக்கத்தானே செய்யும்? அதனால் ஆவரணம் என்று பேர். மத்ய பிந்துவையும் கோணம் என்று சொன்னாற் போலவே ஆவரணம் என்றும் சொல்கிறது. வாஸ்தவத்தில் அதைச் சுற்றி நாற்பத்து மூன்று கோணங்களே ஐந்து ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. அதையும் சேர்த்து ஆறு ஆவரணம். நவாவரணம் ‘நவாவரணம்’ என்று ஒரு வார்த்தை பல பேர் கேட்டிருக்கலாம். இப்போது தீக்ஷிதரின் நவாவரண க்ருதிகளுக்கு மவுஸு ஏற்பட்டு ரேடியோவில் ஒலி பரப்புவதால் அந்த வார்த்தை ப்ரசாரத்தில் வந்திருக்கிறது. நவாவரணம் என்பது ஸ்ரீசக்ரத்திலுள்ள ஒன்பது சுற்றுக்கள் தான். அந்த ஆவரணம் ஒவ்வொன்றிலும் யாரார் இருக்கிறார்கள், என்னென்ன தத்வங்கள் இருக்கின்றன அதற்கு அதிதேவதை யார் அவர்கள் என்ன அநுக்ரஹம் செய்கிறார்கள் அங்கே என்ன முத்ரை காட்ட வேண்டும் என்றெல்லாம் சாஸ்திரங்களில் இருக்கிறது. அதையே சுருக்கமாக தீக்ஷிதர் கீர்த்தனத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆவரணத்திற்கு ஒரு க்ருதி. இப்போது அதில் ஆறு சொன்னேன். இந்த ஆறில் தான் 44 கோணங்கள் இருப்பது. இந்த ஆறுக்கு வெளியிலே இன்னும் மூன்று சுற்று. அதையும் சேர்த்தாலே நவாவரணம். அதிலே இரண்டு தாமரை இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்துள்ள சுற்றுக்கள். இந்த எட்டு ஆவரணத்திற்கும் சேர்த்து வெளி மதிலாக ஒரு ஆவரணம். அது மூன்று காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பினாற்போல மூன்று கோடுகளாக வெளியே இருக்கும். அவை சக்ராகாரமில்லை. சதுரம், சதுரமாகவே இருக்கும். இப்படி ஒரு டிஸைன், அபரிமிதமான திவ்ய சக்தியோடு…. ஆனால் இதில் ஜாக்ரதை வேண்டும். ஒரு யந்த்ரம் என்றால் அதில் ஒவ்வொரு கோடும், கோணமும் என்ன பரிமாணத்தில் இருக்க வேண்டுமோ அப்படிக் கணக்காக இருக்க வேண்டும். கொஞ்சம் கூட முன்னே பின்னே இருக்கக் கூடாது. ஒரு மந்திரத்தில் சப்தம் கொஞ்சம் மாறு பட்டால் கூடப் பெரிய தோஷமாகி விடலாம் என்பது போலவே யந்த்ரத்திலும் டிஸைனில் சின்னத் தப்பிதம் இருந்தாலும் கெடுதல் உண்டாகி விடும். டிஸைன் முழுக்க ஸரியாயிருந்தால் கூட ஸ்ரீ யந்திரத்தில் நடு முக்கோணம் கிழக்கு நோக்கி இல்லாமல் மேற்கு நோக்கியிருக்கும் படி வைத்து விட்டால் பலனே மாறிவிடும். பூஜா மூர்த்திகளைக் கிழக்குப் பார்க்க வைப்பதே கிரமம். எனவே ஸ்ரீசக்ரத்தையும் அவ்வாறே வைக்கவேண்டும். அதாவது நடு முக்கோணத்தின் கூர்முனை கிழக்குப் பார்க்க இருக்கவேண்டும்.

அதற்கு எதிரே அமர்ந்து பூஜகர் பூஜிக்கும் போது ஸ்ரீசக்ரத்தின் ஒன்பது முக்கோணங்களில் நடு முக்கோணம் உள்பட ஐந்தின் முனை அவரை நோக்கியும் மீதம் நான்கின் முனைகள் எதிர்த் திசை நோக்கியும் இருக்கும். இன்னொரு அம்சம் ஜாக்ரதை தேவைப்படும் அம்சம் என்ன வென்றால் விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும் போது சாஸ்திரோக்தமாகவும் மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும். தற்காலத்தில் தெரியாத்தனத்தால் கொஞ்சம் ஜம்பத்துக்காகக் கொஞ்சம் இது ஒரு ஃபாஷன் என்று கொஞ்சம் என்பதாகப் பல ‘கொஞ்சம் பேர். சேர்ந்து அதுவே நிறைய ஆகி ரொம்ப வீடுகளில் ஸ்ரீ சக்ர பூஜை என்ற பேரில் ஒன்று நடக்கிறது. ஆனால் நியமங்கள் போதாததால் துர்பிக்ஷம் அசாந்திகளும் விருத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன! ஆசைப்பட்டால் மட்டும் போதாது அது அதற்கு எப்படி சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதோ பெரியவர்கள் செய்து காட்டியிருக்கிறார்களோ அப்படி நாமும் செய்தால் தான் பலன் வரும். ஸ்ரீசக்ரத்தின் விசேஷத்தைப் பற்றி சாஸ்திரத்தில் நிரம்பச் சொல்லியிருப்பது வாஸ்தவம். ஆனால் அதை எப்படிப் பூஜிக்க வேண்டுமென்றும் அதே சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைத் தள்ளிவிட்டு இஷ்டப்படி ஸெளகர்யப்படி [பூஜை] பண்ணுவேன்!” என்றால் பலன் கிடைக்காது. விபரீத பலனே கிடைக்கலாம். யந்த்ரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாகவும் அது மாத்திரமில்லாமல் ஸாக்ஷத் அந்த தேவதைக்கு ப்ரதிநிதியாகவுமே இருப்பது ‘ப்ரதி’நிதி என்பது கூட ஸரியில்லை. ‘ப்ரதி’- ‘காப்பி’- இல்லை; அஸலே அந்த தேவதை தான் இப்படி டிஸைன் ரூபத்திலிருப்பதும். அதிலும் அம்பாள் ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும் போது யந்த்ர ரூபத்திலேயே விசேஷமாக ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாளென்பதால்தான் அந்த ஸ்ரீயந்த்ரத்திற்கு அலாதியான சிறப்பு இருக்கிறது. அம்பாளுடைய பரம ஸெளந்தர்யமான அவயவ ரூபத்தைவிடக் கூட இந்த யந்த்ர ரூபத்திற்கே சிறப்புத் தந்து பூஜிப்பதாக இருக்கிறது. (நாமம், ரூபம் என்ற இரண்டை விசேஷமாகச் சொல்கிறோம். ஆனால் பொதுவாகவே தாய்த் தெய்வத்தின் மந்திரங்களில் நாமம் என்பதே மிகப் பெரும்பாலும் இல்லை. ஸ்ரீவித்யா மந்திரங்களிலோ அடியோடு இல்லை. பீஜாக்ஷரங்களே உள்ளன. அவ்வாறே ஸ்ரீவித்யா தேவதை த்ரிபுர ஸுந்தரி என்று அழகு உருவத்தாலேயே பெயர் பெற்றிருந்தும் அவளுக்கு உருவம் அமைக்காமல் யந்திரத்திலே வழிபடுவதே அதிகம் காண்கிறது. ஏன் இவ்வாறு நம் அன்னை விஷயத்தில் மட்டும் நாமம், ரூபம் இரண்டும் முக்யம் பெறாமலுள்ளன என்று ஸ்ரீசரணர்களிடம் கேட்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களோ இவ்விதம் இருப்பதைத் தாமும் திரும்பச் சொல்லி வியந்து கொள்வதாகக் கட்டினார்களே தவிர விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.)

அம்பாளுக்கு இரண்டு வாஸ ஸ்தானம். அம்ருத ஸாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா? அதோடு மூன்றாவது வாஸஸ்தானமாக ஸ்ரீசக்ரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்….. இப்போது நான் சொன்னதில் இரண்டு தப்பு. ஒன்று, ஸ்ரீ சக்ரம் அம்பாளுடைய வாஸஸ்தானம் மட்டுமில்லை; அவளுமே தான்! வாஸஸ்தானம் + வஸிக்கிற ஆஸாமியாக அது இருக்கிறது! இன்னொரு தப்பு என்னவென்றால் அம்ருதஸாகரம் மாதிரியும் மேரு சிகரம் மாதிரியும் இது மூன்றாவது [வாஸ ஸ்தானம்] இல்லை. அம்ருத ஸாகரமானாலும் ஸரி, மேரு சிகரமானாலும் ஸரி, அங்கே சிந்தமணி க்ருஹம் என்ற அரண்மனையிலே இந்த ஸ்ரீ யந்த்ரம் இருக்கும். நம் அகங்களில் ஒரு கையளவு இருக்கும் யந்த்ரம் அங்கே ஆயிரம் பதினாயிரம் மடங்கு பெரிசாக ஆவரணம் என்று சொல்லும் ஒன்பது சுற்று அங்கணங்களோடு இருக்கும். அந்த ஒன்பதிலும் அநேக தேவதைகள் தத்வங்கள் அம்பாளின் பரிவாரங்களாக இருப்பார்கள். ஒன்பதாவதாக உள்ள மத்ய பிந்துதான் பஞ்ச ப்ரம்மாஸனத்தில் அம்பாள் இருக்கிற இடம். மேரு சிகரத்திலே அம்பாள் இருக்கும் போது இந்த ஒவ்வொரு ஆவரணமும் அந்த சிகர மத்தியிலே சிகரத்திற்கு மேல் சிகரங்களாகத்தானே எழும்பியிருக்கும்? அந்த அமைப்பில்தான் ஸ்ரீ சக்ரத்தையே ஸமதளத்தில் நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிணாமத்தில் பண்ணுவது மாத்திரமில்லாமல் உயரமும் சேர்த்து அடுக்கடுக்காக மூன்று தளத்தில் ஆக [கூம்பாக] ப் போய்முடிகிற விதத்திலும் பண்ணுவதாக இருக்கிறது. இப்படி மூன்று பரிணாமத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்திற்கு மேரு ப்ரஸ்தாரம் என்றே பேர். மேரு என்று மாத்திரம் அதைச் சொல்வதாகவும் ஏற்பட்டு விட்டது. ஸமதளமாக பூமி மட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு பூப்ரஸ்தாரம் என்று பெயர். இரண்டும் கலந்து ஆரம்ப ஆவரணங்கள் உயரவாட்டிலும் பிற்பாடு வருபவை ஸம தளமாகவும் அமைந்ததை அர்த்த மேரு என்பார்கள். எல்லா ஆவரணமும் மேரு ப்ரஸ்தாரமாயிருந்தால் பூர்ண மேரு. காஞ்சீபுரத்தில் காமகோஷ்டத்தில் இருப்பது பூப்ரஸ்தாரம். நம் மடத்தில் பூர்ண மேரு. மாங்காட்டில் அர்த்த மேரு. திருவிடைமருதூர் மூகாம்பாள் ஸந்நிதியில் பூர்ண மேரு. தனிப் பெயரில்லாத யந்திரம், தந்திரம், தலைநகரம் அம்பாள் பக்தர்கள் பெருமையாக ஒன்று சொல்லிக் கொள்வார்கள். மற்ற ஸ்வாமிகளின் யந்த்ரங்களுக்கு அந்தந்த ஸ்வாமியின் பெயரையோ வேறே அந்த ஸ்வாமிக்கு உள்ள அடையாளத்தையோ சேர்த்து சிவசக்ரம், மேதா தக்ஷிணாமூர்த்தி யந்த்ரம், ஸுதர்சன யந்த்ரம், ஷடக்ஷர சக்ரம் என்றிப்படிப் பெயர் சொல்ல வேண்டியிருக்கிறது.

லலிதா த்ரிபுரஸுந்தரியின் யந்த்ரதிற்கு மட்டும் இப்படி ஒரு பெயரும் அடைமொழியும் கொடுக்காமல் பூஜிதமானது மங்களமானது என்பதால் ‘ஸ்ரீ’மட்டும் போட்டு ‘ஸ்ரீசக்ரம்’ என்றே சொல்லியிருக்கிறது. சக்ரம் என்றாலே இது தான் தனியாகப் பெயர் கொடுக்க வேண்டாம் என்கிற மாதிரி இருக்கிறது. அதேபோலத்தான் அவளுடைய உபாஸனா மார்க்கந்தான் மார்க்கம் என்று காட்டுகிற மாதிரி அதற்கும் ‘ஸ்ரீவித்யை’ என்றே பெயர் கொடுத்திருக்கிறது. இங்கேயும் ‘ஸ்ரீ’ என்பது பூஜிதமான அடைமொழியே தவிர ஸ்ரீதேவி என்ற லக்ஷ்மியைக் குறிப்பிடுவதில்லை. உபாஸனா மார்க்கங்களை வித்யை என்றும் தந்த்ரம் என்றும் சொல்வது. அப்படிச் சொல்லும் போது மற்ற ஸ்வாமிகளின் உபாஸனைக்கு அந்த ஸ்வாமியின் பெயரையோ அல்லது அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரையோ வைத்துப் பெயர் கொடுத்திருக்கும். ஆனால் த்ரிபுரஸுந்தரி வித்யைக்கு மட்டும் தனிப்பெயர் வைக்காமல் ஸ்ரீவித்யா என்றே சொல்வதாக இருக்கிறது. அந்த ஸ்ரீவித்யா மந்திரத்திலேயே சிலசில வித்யாஸங்களோடு பல தினுஸான மந்திரங்கள் இருக்கிறது. இங்கே மட்டும் எப்படி ஸ்ரீவித்யா மந்திரம் என்று ஒரே பேரைச் சொல்வது? வித்யாஸம் தெரியும் படியாக வேறே வேறே பேர் சொன்னால் தானே ஸரியாயிருக்கும்? அதனால் அந்த மந்திரத்தின் முதலெழுத்தை வைத்தோ அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரை வைத்தோ காதி வித்யா, ஹாதி வித்யா, லோபாமுத்ரா வித்யா, துர்வாஸ வித்யா என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பொதுவாக லலிதா தந்த்ரம் என்பதை ‘ஸ்ரீவித்யா’ என்றே சொல்லியிருக்கிறது. யந்த்ரம், தந்த்ரம் மட்டுமின்றி அவள் இருக்கிற ராஜதானிக்கும் தனிப் பெயரில்லை! ‘ஸ்ரீபுரம்’ அல்லது ‘ஸ்ரீநகரம்’ என்றே அந்த இடத்திற்குப் பெயர். புரம், நகரம் என்றால் வெறுமே ஊர் என்று தான் அர்த்தம். அப்படிச் சொன்னாலே போதும் அது அத்தனை ஊர்களும் இருக்கும் ஜகத்துக்கு ஜனனியாக இருக்கப்பட்ட அவளுடைய தலைநகரந்தான் என்று தெரிவிப்பதாக இப்படி ஸ்ரீபுரம், ஸ்ரீநகரம் என்றே பேர் இருக்கிறது! நித்யஸ்ரீயை, [அதாவது] என்றும் அழியாததான ஆத்மானந்தச் செல்வத்தை தருகிறவள் அம்பாள் என்பதால் அவளுக்கு [ஸஹஸ்ரநாமத்தில்] முதல் பேரே ‘ஸ்ரீமாதா’ என்று சொல்கிறோம். அதற்கேற்க ஸ்ரீவித்யை, ஸ்ரீசக்ரம், ஸ்ரீபுரம் என்றே அவளுடைய ஸம்பந்தமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன…… ஸ்ரீசக்ரம் என்ற ஸ்ரீயந்த்ரத்தைப் பற்றி ஸெளந்தர்ய லஹரியில் ஸ்லோகம் வருவதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆறு ஆவரணங்களாக உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று ‘கட்’ பண்ணிக்கொண்டு நாற்பத்து நாலு முக்கோணம் ஏற்படுவதாகச் சொன்னேனல்லவா? இந்த ஒன்பதிலே நாலு சிவ சக்ரங்கள் என்று ஐந்து சக்தி சக்ரங்கள் என்றும் சொல்லப்படும். பிந்துவைச் சுற்றியிருக்கும் நடு முக்கோணம் சக்தி சக்ரங்களில் சேர்ந்ததுதான். அகங்களில் பூஜிக்கும் போது அது பூஜிப்பவருக்கு அபிமுகமாக இருக்க வேண்டும். சிவ சக்திகளின் ஐக்யமான அத்வைதத்தைக் காட்டுவதாக ஸ்ரீ சக்ரத்தில் இரண்டு பேருடைய சக்ரங்களையும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னி வைத்திருக்கிறது. அதனால் ஏற்படும் கோணங்கள் அவற்றுக்கு வெளிச் சுற்றுக்களில் உள்ள பத்ம தளங்கள், வட்டக்கோடுகள், சதுரக் கோடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் இந்த [11வது] ச்லோகம் கணக்குக் கொடுக்கிறது.

இதெல்லாம் ஏதோ நாவல் படிக்கிற மாதிரியோ அல்லது academic interest -காகவோ தெரிந்து கொள்கிற விஷயமில்லை. குரு முகமாக உபதேசம் பெற்று குப்தமாக [பஹிரங்கப்படுத்தாமல்] ரக்ஷிக்கப்பட்ட வேண்டிய விஷயம். அடியோடு சொல்லாமல் விட வேண்டாமென்று கொஞ்சம் சொன்னேன். அதனால் ‘லைட்’டாக நினைத்து விடக்கூடாது! ஸ்ரீ சக்ரம் இல்லத்தில் இருந்து அதை முறைப்படி பூஜிக்க இயலாதோர் கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வழிபடவும்.

ஸ்ரீ சக்கரம் :
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ


ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா?

ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா?

கடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு கொடுப்பார் என்றும் மற்ற நாட்களில் அருள் வழங்கும் அளவை குறைத்துக்கொள்வார் என்றும் யாரிடமாவது கூறியுள்ளாரா? இல்லையே...

உண்மையான பக்தன் நம்மை தேடி வரமாட்டானா... அவனுக்கு நாம் எந்நேரமும் அருள்பாலிக்க வேண்டுமே.. என்று பகவான் நமக்காக  காத்து கொண்டிருக்கிறார்.  அப்படி அருளை அள்ளி வழங்க இறைவன் தயார் நிலையில் இருக்கும் போது, நாம் மட்டும் ஏன் திருவிழா காலத்தில் மட்டும் கோயிலுக்கு சென்று கூட்டத்தில் முண்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்வது, அறைகுறையாக வழிபாடு செய்வது என செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் வரை மண்டல கால பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்காலங்களில் பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து குவிந்து விடுவார்கள். மலைப்பகுதியில் உள்ள சபரிமலையில் கோடிக்கணக்கான பக்தர்கள் சீசன் சமயத்தில் ஒரே சமயத்தில் தரிசனத்திற்கு செல்வதால் சபரிமலையே ஸ்தம்பித்து விடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. யாரும் சரிவர சுவாமியை தரிசனம் செய்ய இயலாமல் போய்விடுகிறது. வயதான பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த சீசன் சமயத்தில் சென்று அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமின்றி விபத்தும் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த சீசன் சமயத்தில் புல்மேட்டுப்பகுதியில் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பில்லா பல உயிர்கள் பறிபோனது. இதனால் அந்த புனிதமான மலையின் புனிதம் கெட வாய்ப்பு ஏற்படலாம்.

இப்போதெல்லாம் மாதமாதம் தமிழ் மாதப்பிறப்பிற்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல்,  பிரதிஷ்டை தினவிழா, ஓணம், சித்திரை ஆட்டத்திருநாள் என சில மாதங்களில் இருமுறை கூட சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்போது சபரிமலை சென்று ஐயப்பனை சிறப்பாக, நிம்மதியாக, எளிதாக தரிசனம் செய்து வேண்டும் வரங்களை பெறலாமே.

எப்போது சென்றாலும் அள்ள அள்ளக் குறையாமல் அருளை வாரி வழங்கும் நம் ஐயப்பனை பற்றி நாமே புரிந்து கொள்ளாவிட்டால் எப்படி?


பாகப்பிரிவினையால் வந்த விபரீதம்!

பாகப்பிரிவினையால் வந்த விபரீதம்!

சாதாரணமாக குடும்பங்களில், அண்ணன்  தம்பிகளுக்குள் பாகப் பிரிவினையின் போது, பகை ஏற்படுவது சகஜம்.தகப்பனார் இருக்கும் போதே அவர், யார், யாருக்கு என்னென்ன என்பதை பங்கு போட்டுக் கொடுத்து விடுவது நல்லது. ஒன்றும் எழுதி வைக்காமல் மண்டையைப் போட்டு விட்டால், பாகப் பிரிவினையின் போது, அண்ணன் தம்பிகளுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், விஷயம் சுமூகமாகத் தீர்ந்து விடும். அது போன்ற எண்ணம் இல்லாவிட்டால் அண்ணன், மனைவி, மச்சினன், மாமனார் இவர்கள் ஒரு அணியாகவும், தம்பியின் மனைவி, மாமனார், மச்சினன் போன்றவர்கள் ஒரு அணியாகவும் நின்று, சண்டை போட வாய்ப்பு உண்டு.

இந்தப் பகை தற்காலிகமானதாகவும் இருக்கலாம் அல்லது ஜென்மப் பகையாகவும் மாறலாம். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால், குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். விபவசு என்று ஒரு ரிஷி இருந்தார். அவருக்கு, சுப்ரதீகர் என்ற தம்பி இருந்தார். தம்பி, அண்ணனிடம் பேசும் போதெல்லாம், பாகப் பிரிவினையைப் பற்றியே வற்புறுத்துவது வழக்கமாகி விட்டது. அதற்கு அண்ணன் விபவசு, பெருந்தவமுள்ள தம்பி... பாகப் பிரிவினை என்பது பல பிழைகள் ஏற்படக் காரணமாகக் கூடும். சொத்துகளை பிரித்துக் கொண்ட பிறகும், திருப்தி ஏற்பட்டு விடும் என்று சொல்ல முடியாது. எனக்கு அதைக் கொடுக்காமல் அண்ணன் ஏமாற்றி விட்டான் என்று தம்பி நினைக்கக் கூடும். விலையுயர்ந்ததை தம்பி எடுத்து விட்டானே என்று அண்ணன் நினைக்கக் கூடும். இப்படி, இவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டு, அதுவே பகையாகி விடும்.

இந்த சமயம் பார்த்து சந்தர்ப்பவாதிகள் இதில் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதாகச் சொல்லி, நண்பர்கள் போல பேசுவர். இப்படி அண்ணனுக்கு நாலு பேர், தம்பிக்கு நாலு பேர் சேர்ந்து, இரண்டு அணிகள் உருவாகி குடும்ப சண்டை, கட்சிச் சண்டையாகி விடும். அதனால், பாகப் பிரிவினையைப் பற்றி அதிகம் பேசாதே... என்றார். இவ்வளவு தூரம் சொல்லியும் சுப்ரதீகர் மகரிஷி மீண்டும் பாகப் பிரிவினை பற்றியே பேசினார். இதனால், கோபம் கொண்ட விபவசு முனிவர் தம்பியைப் பார்த்து, சுப்ரதீகா... நான் எவ்வளவு நல்ல வார்த்தை சொன்னாலும் நீ கேட்கவில்லை. பாகப் பிரிவினையையே விரும்புகிறாய். மதம் பிடித்தவன் போல் பேசுகிறாய். அதனால், நீ யானை ஜன்மத்தை அடைவாயாக... என்று சபித்தார்.

இதைக் கேட்ட தம்பி சுப்ரதீகர், நீயும் கொழுப்பினால் பாகப்பிரிவினைக்குச் சம்மதிக்காததுடன், என்னையும் சபித்து விட்டாய். அதனால், நீ ஆமை ஜன்மத்தை அடைவாயாக... என்று மறு சாபமிட்டார். என்ன இருந்தாலும் முனிவர்கள் சாபமல்லவா, பலிக்காமல் இருக்குமா! இருவருமே அடுத்த ஜென்மத்தில் தம்பி, யானையாகவும்,  அண்ணன், ஆமையாகவும் பிறந்தனர். இரண்டுமே பெரிய உருவத்துடன், மகாபலம் வாய்ந்தவைகளாக இருந்தன. இப்படி ஆன பிறகும் கூட இவைகளுக்குள் இருந்த விரோதம் தீரவில்லை. ஒன்றை ஒன்று கொன்றுவிட முயன்று, நீண்ட காலம் போராடியது. இந்த சமயம் கருடன் ஒன்று, தன் தகப்பனாரிடம் என் பசியைத் தீர்க்குமளவுக்கு ஆகாரம் எங்கே உள்ளது என்று கேட்க, தகப்பனார் கச்யபரும், இந்த யானை, மற்றும் ஆமையைக் குறிப்பிட்டு சொல்லி, அவற்றைச் சாப்பிட்டு, பசியைத் தீர்த்துக் கொள்ளச் சொன்னார். அதன்படியே, கருடன், ஏரிக்கரைக்குப் போய், இரண்டையும் கபளீகரம் செய்து, ஏப்பம் விட்டது.

பாகப் பிரிவினை என்பது, எங்கே போய் முடிந்தது பாருங்கள்! தகப்பன், பாட்டன் சேர்த்து வைத்த சொத்துக்கு அண்ணன், தம்பிகள் விரோதப்பட்டுக் கொள்வது நியாயமா? யோசிக்க வேண்டும்!


வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

-திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம்.  ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே. நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே. ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார். சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார். சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார். சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.


கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?

கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். சூரியோதயே சாஸ்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.


யோகினி என்றால் யார் தெரியுமா?

யோகினி என்றால் யார் தெரியுமா?

அண்மையில் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1100 வருடங்களுக்கு முற்பட்ட யோகினி சிலை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டது. யோகினி என்றால் யார்? இவர்கள், பராம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள். முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள். இப்படித் தோன்றிய 8 யோகினிகளும் 8*8 யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி அவனது சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.

இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன. இந்த யோகினி வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து (ஆண்களும் பெண்களும்) இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று சொல்கிறார்கள். இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது.

இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் கீழ்க்கண்ட இடங்களில் கோயில்கள் உள்ளன.

1. ஒடிசா மாநிலத்தில், குத்திரா மாவட்டம் ஹிராஸ் பூரில் உள்ளது. (புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ.), 2. ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் ரானிப்பூர் ஜரியலில் உள்ளது. 3. மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராகோ மலைப்பகுதியில் உள்ளது. 4. ஜபல்பூர் ஜில்லா பெக்காட் என்னும் இடத்தில் உள்ளது. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது பெக்காட்-ல் உள்ள கோயில். இதை பேராகாட் என்றும் அழைக்கிறார்கள். வட்டமாக அமைந்த மண்டலம் போன்ற சுவர். அதில் 64 யோகினிகளின் வடிவங்களையும் காண்கிறோம். பத்தாம் நூற்றாண்டில் அமைந்த கோயில். அதாவது தஞ்சை பெரிய கோயில் உருவாவதற்கு முன்பு அமைந்த கோயில்.

64 கலைகளின் வடிவாகத் திகழ்பவள்; 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுபவள் மட்டுமல்ல; 64 கோடி யோகினி கணங்களால் பூஜிக்கப்படுபவள் லலிதா பரமேஸ்வரி என்று குறிப்பிடும் லலிதா சஹஸ்ரநாமம். இங்குள்ள யோகினியர் சிற்பத்தின் கீழே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. காமதா, அந்தகாரி, சர்வதோமுகி, அஜிதா, ஆனந்தா.. என்று பெருகின்றன அவர்களின் பெயர்கள்.  இந்த யோகினி வழிபாட்டு முறையில் யோகாவும் இணைந்துள்ளது. மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி உடலிலுள்ள அதன் ஏழு விதமான பீடங்களும் எடுத்துச் செல்வதாகும். இந்த வழிபாடு மிகவும் கடினமான ஒன்று. ஆனாலும் இந்த வழிமுறையில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு சிறந்து விளங்கினார்கள் என்பது பழைய சுவடிகளிலிருந்து தெரிய வருகிறது. சவுட்யோகினி மந்தீர் என்று குறிப்பிடப்படும். இந்த கோயில், தொன்மையான வழிபாட்டை மட்டும் காட்டவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத மூர்க்கத்தனத்தின் வெளிப்பாட்டை, பிற்காலத்தில் பின்னமான சிலைகளின் வடிவத்தில், இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

கணவன் மனைவிக்குள் பிரச்னையா?

கணவன் மனைவிக்குள் பிரச்னையா?

கணவன் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம் வெறுப்பு வளர்ந்து விட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். சில நேரங்களில் விவாகரத்து வரை போய் விடுகிறது. இந்தநேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே. பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை சிவபெருமானே நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆண்பாதி பெண்பாதியாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள். பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று,

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே - என்ற தேவாரப்பாடலை மூன்று முறை சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலரும்.

திருவண்ணாமலை கோவில்

ஒரு தடவை கிரிவலம் சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன் திருவண்ணாமலையில் கிடைக்க வேண்டுமா?

கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும், மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை  ஆன்மீக குரு திரு. சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார்.அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது: நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது. துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார். சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது. 30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு  ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுகிறது. பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;அவ்வாறு புறப்படும்போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு செல்லவேண்டும் கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.எனவே,இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்; நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது  ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!  மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்; இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.

ஓம் அருணாச்சலாய நமஹ!!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!


அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்



 
மூலவர்    :அக்னீஸ்வரர்
அம்மன்   :சுந்தரநாயகி
தல விருட்சம்    :வன்னி, வில்வம்
ஆகமம் பூஜை     :சிவாகமம்
பழமை    :1000வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :திருநல்லாடை
ஊர்    :நல்லாடை
மாவட்டம்    :நாகப்பட்டினம்
மாநிலம்    :தமிழ்நாடு

திருவிழா:ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம். கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு.      
             
தல சிறப்பு:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.      
             
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:    +91 4364-285 341,97159 60413,94866 31196     
            
பொது தகவல்:பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர்.

இக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.      
             
பிரார்த்தனை:பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.     
            
தலபெருமை:    கார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.      
             
தல வரலாறு:மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.