திங்கள், 23 நவம்பர், 2020

ஸ்வாமியே சரணம் ஐயப்பா இன்று வீர சாஸ்தா

ஸ்வாமியே சரணம் ஐயப்பா இன்று வீர சாஸ்தா

சங்கரர் தொழும் சாஸ்தா

கேரளத்தில் அவதரித்தவர் ஸ்ரீசங்கர பகவத் பாதர்கள். ஐயப்ப சாஸ்தா அரும்புகழ் பெற விளங்குவதும் கேரளத்தில் தான். சகல தெய்வங்களையும் போற்றித் துதி செய்த ஆசாரியர் சாஸ்தாவை ஏத்தி தோத்தரித்திருக்கிறாரா? சிவானந்த லஹரியில் பாணத்வம் என்று தொடங்கும் ச்லோகத்தில் திருமால் சிவபெருமானிடம் எத்தனை விதங்களில் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று ஆசாரியர் எடுத்துரைக்கிறார். அதிலே முதலில் அர்த்த வபுஷா பார்யா த்வம் ஆர்யாபதே என்றும் பின்னர் ஸகிதா என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. முதலில் சொன்னதற்குப் பொருள் ஆரியை எனும் அம்பிகையின் பதியான சிவனின் பாதி உடலைத் திருமால் பெற்றிருப்பதால் திருமால் சிவனுக்கு மனையாளாகிறான் என்பதாகும். அர்த்த நாரீஸ்வரக் கோலத்தில் எந்த இடப்பாதியில் அம்பிகை இடங்கொண்டுள்ளாளோ அதே பாதியில் சங்கர நாராயணக் கோலத்தில் திருமால் விளங்குகிறான்.
எனவே அவனே சக்தி வடிவினன்; அதாவது சிவனின் பத்தினி ஆகிறான். இங்கே சங்கர நாராயண வடிவை மட்டுமின்றி திருமால் மோகினியாக வந்து மோன சிவனை மோஹிக்கச் செய்து அவனுக்கு நாயகியாகி ஐயப்பனைப் பெற்றெடுத்ததை வெகு அற்புத ஸூக்ஷ்மச் சுருக்கமாக ஸ்ரீசங்கரர் சுட்டிவிடுகிறார் ஆர்யாபதே! என்று பரமேச்வரனை அழைப்பதன் மூலம். அம்பிகைக்கு எத்தனையோ பேர் இருக்க ஆர்யா என்கிறார். புருஷ தெய்வங்களுள் ஆர்ய என்ற பெயர் சாஸ்தாவுக்கே உள்ளது. கேரளத்தில் அவர் இருப்பது ஆரியங்காவு. மஹாவிஷ்ணு பரமேஸ்வரனுக்குப் பத்தினி ஸ்தானத்தில் இருந்த போது ஆரிய சாத்தனை ஈந்ததைச் சுட்டவே இங்கே அம்பிகைக்கு ஆயிர நாமமிருக்க, ஆரியா நாமத்தைச் சொல்லி, ஆர்யா பதே என்று ஆர்யாம்பாளின் புதல்வரான ஆசாரியர் ஈசனை விளிக்கிறார் எனத் தோன்றுகிறது. பின்னால் ஸகிதா என்று வருவதில் இந்த மொட்டினை மேலும் சற்று இதழ் விரித்துக் காட்டுகிறார். ஸகிதா என்றால் தோழியாயிருக்கும் தன்மை. மோகினியாக வந்த சமயத்திலன்றி வேறெப்போது திருமால், ஈசனுக்குத் தோழியாக இருந்திருக்கிறான்? சிவபெருமானைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வருணித்து சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என பகவத்பாதர் அருளியிருக்கிறார். அதில் முதலில் ஈசன் வாஸம் செய்யும் கைலாஸத்தையும் அவனது திவ்யாயுதங்களையும் வாஹன ரிஷபத்தையும் தோத்தரித்து விட்டு சிவ குமாரர்களை தலைக்கொரு ஸ்லோகத்தால் போற்றுகிறார். இங்கே தான் ஆனைமுகனையும் ஆறுமுகனையும் துதித்தபின் ஒரு முழு ஸ்லோகத்தால் ஐயப்பனை வாழ்த்தி வழிபடுகிறார்.

ஆரூட - ப்ரௌட - வேக - ப்ரவிஜித - பவநம்
துங்க துங்கம் - துரங்கம்
சேலம் நீலம் வஸாந : கர - தல - விலஸத்
காண்ட - கோதண்ட - தண்ட :
ராக - த்வேஷாதி - நாநாவித - ம்ருக - படலீ
பீதி - ஹ்ருத் பூத - பர்த்தா
குர்வந் - நாகேட - லீலா மதிவஸது மன
கானனே மாமகீனே

காற்றையும் வெல்லும் வேகம் வாய்ந்து, ஓங்கி வளர்ந்ததொரு புரவியின் மீது ஐயப்ப ஸ்வாமி ஆரோஹணித்திருக்கிறான். நீல ஆடை பூண்டிருக்கிறான். கையிலே அம்பும் வில்லும் ஒளிர்கின்றன. (காண்ட என்றால் அம்பு எனும் பொருள் கொண்டால், காண்ட கோதண்ட என்பது அம்பும் வில்லும் என்றாகும். காண்ட எனில் கரும்பு என்றும் கொள்ளலாம். அப்படியாகில் காமாக்ஷி போலவே சாத்தனும் கரும்பு வில்லோனாக சங்கரருக்குக் காட்சி தந்ததாகும்.) விற்கையனாக விசைப்பரியேறிச் செல்வது வீரக்கோலம். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரனாகக் காடு சென்றதே போன்ற தோற்றம். ஆனால் இது மூல ஐயப்பனின் அவதாரத்திலே காணும் நிகழ்ச்சியே. ஆசாரியர் மூல ஐயப்பனை நினைத்தே துதிக்கிறார் எனக் கொண்டால், சிவ கணத் தலைவனாக அவன் வேட்டைக்குச் செல்வதைச் சொல்கிறாரென்று ஆகும். பூத பர்த்தா என்று அவர் சொல்வது, ஈசனின் பூதப்படைக்கு நாயகன் சாஸ்தாவே என்று அவர் கருதுவதைக் காட்டுகிறது. மூத்த பிள்ளை கணபதியை நாம் சிவ ஸேனா நாதனாக எண்ண, ஆசாரியரோ மூன்றாம் பிள்ளைக்கு இவ்வுயர்வைத் தருகிறார். (மலையாளத்தில் பூத நாதன் என்று ஐயப்பனைக் குறிப்பிடுதுண்டென்றும், மக்களும் அப்பெயர் வைத்துக் கொள்வதுண்டென்றும் அறிகிறோம்.) வேட்டையாடும் வீரனிடம் கனிந்து வேண்டுகிறார். பின் இருவரிகளிலே பூதநாதனே! உனக்கு வேட்டை விளையாடலில் தானே வேட்சை? அப்படியானால் வா, எண்ணங்கள் மண்டி வளர்ந்திருக்கும் என் மனமெனும் காட்டுக்கு! இந்தக் காட்டிலே விருப்பு, வெறுப்பு முதலான பல்வேறு விலங்கு கூட்டங்கள் திரிகின்றன. அவற்றுக்கு அச்சமூட்டி வேட்டையாடிப் பொலிவாய்! இப்படிப் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர். கிராத வேடம் கொண்ட பரமேசனிடம் இவ்வாறே தமது சித்த அரணியத்திலே வேட்டையாட, ஸ்ரீசங்கரர் வேண்டுவதை சிவானந்த லஹரியில் காண்கிறோம். இங்கே மூத்த பிள்ளையின் ஸ்தானத்தோடு அப்பனின் ஸ்தானத்தையும் ஐயப்பனுக்கே கொடுத்து விடுகிறார். வீரனாகக் கண்டவனை கருணை கூர்வான் என்று நம்பி வேண்டியதால் அவனது அன்பு ஈரத்தைக் காட்டிவிடுகிறார். அதோடு அவன் விருப்பு வெறுப்புகளை வெல்ல வல்லவன் என்பதால் இவ்விருமையற்ற ஞான ஸாரனாகவும் அவனை நமக்கு உணர்த்திவிடுகிறார். அதாவது சக்தி, பிரேமை, ஞானம் மூன்றிலும் பெரியோனாகச் சாத்தனைக் காட்டிவிடுகிறார் சங்கரர்.

ஆசாரியர் கண்ட ஆரியரின் பெருமை இதுவே!
__________________________________________________________________________


கருத்துகள் இல்லை: