புதன், 18 நவம்பர், 2020

பழனி முருகன்

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் :

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.

10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

14.அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

15.போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

18.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா
ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..


இடும்பன் வரலாறு

கந்த சஷ்டி விழா சிறப்பு பதிவு  இடும்பன் வரலாறு!

"வருபவர்களோலை கொண்டு நமனுடைய தூதரென்று'' என்று துவங்கும் "பரகிரியுலாவு செந்தி மலையினுடனேயிடும்பன் பழனிதனிலேயிருந்த குமரேசா'' என்ற அடிகளில் இடும்பனைப் பற்றிய வரலாற்றைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

அகஸ்திய முனிவர் கந்தகிரிக்குச் சென்று முருகனைத் துதித்து வணங்கி அங்கு சிவசொரூபமாகவும் சக்திரூபமாகவும் விளங்கும் சிவமலை, சக்திமலை ஆகிய மலைச் சிகரங்களைத் தந்தருள வேண்டும் என்றும் தான் அவற்றைப் பொதியமலையில் வைத்து வழிபாடு செய்யப்போவதாகவும் கூறுகிறார். முருகன் அவ்வாறே அவருக்கு அருள அவர் அந்த இரண்டு மலைகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு பூலோகம் வருகிறார். அவற்றை திருக்கேதாரத்திற்கு அருகில் பூர்ச்சவனம் என்ற இடத்தில் இறக்கி வைத்துவிட்டுப் பொதியமலை நோக்கிக் கிளம்புகிறார்.

இடும்பாசுரன் என்னும் அசுரன் வில் வித்தையில் மகா நிபுணன். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்களின் சேனைகளுக்கு வில்வித்தை கற்பித்த குரு. முருகனின் வேலாயுதத்தால் அசுரர்கள் யாவரும் மாண்டுபோகவே அவன் தன் மனைவி இடும்பியுடன் வனசஞ்சாரம் மேற்கொள்கிறான். இடும்பவனம் என்னும் வனத்தில் சிவபெருமானை நோக்கித் கடும் தவம்புரிய, அவர் அவன்முன் தோன்றுகிறார். இடும்பன் தான் ஆறுமுகக் கடவுளுக்கு அடிமையாகி அவருக்குத் தொண்டு செய்து வாழ அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டுகிறான். சிவனும், ""திருக்குற்றாலமலையை நோக்கிச் செல். உன் எண்ணம் ஈடேறும்'' என்று கூறி மறைகிறார்.

இடும்பன் இடும்பியுடன் திருக்குற்றாலம் வந்து அகஸ்திய முனிவரைக் கண்டு வணங்கித் தன் உள்ளக்கிடக்கையை வெளியிடுகிறான். அகஸ்தியருக்கு உள்ளூர மகிழ்ச்சி. தான் இறக்கி வைத்த சிகரங்களைத் தூக்கி வருவதற்குச் சரியான ஆள் கிடைத்துவிட்டான் என்று மகிழ்ந்து, ""அன்பனே! நீ கவலையுறாதே. குமரவேளின் அருள் உனக்கு நிச்சயம் கிடைக்கும். நீ நான் சொல்லும் இடத்திற்குச் சென்று இரு மலைச் சிகரங்களை எடுத்துக் கொண்டு வந்து இங்கே வைக்க வேண்டும்'' என்கிறார். அதற்கு இடும்பன் உடன்படவே அவனுக்குச் சில மந்திரங்களை உபதேசம் செய்கிறார் அகஸ்தியர்.

இடும்பன் வெகு வேகமாக பூர்ச்சவனத்திற்கு வழிகேட்டுக்கொண்டு சென்று அம்மலைச்சிகரங்களைக் காண்கிறான். மலைகளின் முன்புநிஷ்டையில் அமர்ந்து அகஸ்தியர் உபதேசித்த மந்திரங்களைப் பக்தியுடன் உச்சாடனம் செய்ய அப்போது பிரமதண்டம் புயதண்டாகவும் அட்டதிக்கு நாகங்களும் கயிறுகளாக அவன் முன் வந்தன!

அவற்றைக் கண்டு அதிசயித்த இடும்பன் அந்த நாகங்களை உறிபோல் அமைத்து இரு மலைகளையும் அதில் வைத்து பிரமதண்டுடன் பிணித்து மூலமந்திரத்தை ஓதி, முருகனை மனதால் பணிந்து, காவடியாக்கி எடுத்துத் தன் தோள்களில் அவற்றை வைத்து "அரோகரா! அரோகரா!'' என்று கூவிக்கொண்டு தென்திசை நோக்கி நடந்தான்.

பலமுறை நடுவில் வழிதெரியாது மயங்கி தவறான பாதைகளில் சென்று மீண்டும் சரியான பாதையை கண்டுபிடித்து இறுதியில் வராகமலை வழியாக திருவாவினன்குடியை அடைந்தான். அங்கு வந்ததும் அவன் தோள்மேல் சுமந்திருந்த மலைகள் மிகவும் கனக்கத் தொடங்கி அவற்றின் பாரம் தாளாமல் கீழே இறக்கி வைத்துச் சற்று இளைப்பாறுகிறான். அவன் கூடவே வந்த இடும்பி காட்டில் தேடி காய்கனி, கிழங்குகளைக் கொண்டு வந்துதர அவற்றை உண்டு பசியாறுகிறான். மீண்டும் கிளம்பலாம் என்று எத்தனித்து காவடியைத் தூக்க முயன்றால்... முடியவில்லை! சுற்றுமுற்றும் பார்த்தான். சிவகிரியின் மீது ஒருபுறம் குராமர நிழலில் ஒரு சிறு குழந்தை! "இது யார் குழந்தை? எதற்கு இந்த மலைமீது தனியாய் நிற்கிறது. ஏதாவது துஷ்ட மிருகங்கள் வந்து அடித்துப் போட்டால் குழந்தையின்கதி என்னாவது' என்று பதைத்தான் இடும்பன்.

காரணம் அந்தக் குழந்தை ஆயிரம் கோடி சூரியர் ஒன்று திரண்டாற் போன்ற பேரொளியுடன் விளங்கியது! இடும்பன் அந்தக் குழந்தையிடம் பல கேள்விகள் கேட்டு அது யார் குழந்தை என்று அறிய முயல்கிறான்.

ஆனால் அந்தக் குழந்தையோ இவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாது இவனைப் பார்த்து புன்னகை புரிந்து கொண்டிருந்தது. இடும்பனுக்கு கோபம் வந்துவிட்டது. சிறுவன் மீது பாய்கிறான் அடிக்க.

ஆனால் அந்தச் சிறுவனோ ""இது என்னுடைய மலை. இதிலிருந்து என்னை ஏன் போகச் சொல்லுகிறாய்? உனக்கு வலிமையிருந்தால் இவற்றை எடுத்துக் கொண்டு போ பார்க்கலாம்!'' என்று சவால் விடவே, இடும்பன் ""நான் அகஸ்திய மாமுனிவரின் சீடன். என்னிடம் வம்பு வைத்துக் கொள்ளாதே... உன்னைப் பொடிப் பொடி ஆக்கி விடுவேன்!'' என்று கூறி சிறுவனை அடிக்க கையை ஓங்கினான்.

குராவடி குழந்தையாக வந்தது சாஷாத் அந்தக் குமரக் கடவுள் அல்லவா? குமரன் தன் திருக்கரத்தில் விளங்கும் தண்டாயுதத்தினால் இடும்பன் மீது லேசாக இடிக்க, அந்த இடியைத் தாங்காது இடும்பன் கீழே விழுந்து மாண்டான்.

மகா வீரனான தன் கணவன் இறந்ததைக் கண்ட இடும்பி ஓடிவந்து கதறுகிறாள். சிறுகுழந்தை வடிவில் இருந்த குமரக்கடவுள் காலடியில் விழுந்து கதறுகிறாள். உடனே முருகன் மயில்மீது அவளுக்குக் காட்சி தருகிறார். தூங்கி எழுந்தது போல் இடும்பனும் எழுந்து கொள்கிறான். தன்னைச் சோதித்தது தான் தொண்டு செய்ய விரும்பிய பழநியாண்டவராகிய குமரக் கடவுள், ""இடும்பனே... இந்த மலைகள் இனி இங்கேயே இருக்கட்டும். குறுமுனியும் இங்கு வந்து வழிபடட்டும். பக்தர்களும் உன்னைப்போல் காவடி கட்டி எடுத்துக் கொண்டு வந்து முதலில் உன்னை வணங்கி வழிபட்டு, பின் என்னை வந்து வழிபடட்டும்!'' என்று கூறி மறைகிறார். அதுமுதல் பழநிமலைக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் முதலில் இடும்பனையும் பின் தண்டபாணியையும் வழிபட்டு வரலானார்கள்.


கந்த சஷ்டி

கந்த சஷ்டி விழா சிறப்பு பதிவு மூன்றாவது நாள் படம் ஆவுடையார் கோயில் சிற்பம் குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை

கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும்.

இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும். சிலர் இதனை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று வேறுவிதமான பழமொழியாக்கி பொருள் சொல்வது மிகவும் தவறாகும்.

சஷ்டி என்பவள் ஒர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்ம தேவனின் மானசபுத்ரி.

முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்  இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியா கத் திகழ்ந்த (தேவ சேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள்.

அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது. சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாதப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை.

மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள். அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர்.

அப்போது இவளை சம்பத் ஸ்வரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம். ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக ஓர் ஆண் குழந்தையின்றி புத்ரதோஷம் இருந்தது. அவர்கள் சஷ்டி விரதமிருந்து சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது.

ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் அக்குழந்தையை மயானத்தில் கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு அழுது புலம்பினர். அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையிடம் சென்று அதனை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள்.

உடனே இறந்த அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து அரசு புரிவான் என்று ஆசீர்வதித்தாள் பிறகு அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.

சுவிரதன் என்றால் நன்கு விரதம் அஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.


கந்தபுரானம் பகுதி மூன்று

கந்தபுராணம் பகுதி-3

ஒம் சரவணபவ

அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர்.அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார். காஷ்யபா ! இதென்ன கோலம் ? மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காமவயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக, அவரைக் குறித்து கடும் தவம் செய், புறப்படு, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார். மாயையால் தூண்டிவிடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி, அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார். அசுரர்களின் குருவாயினும் கூட, இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது, பத்மாசுரன், அவரிடம், நீர் யார் ? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நின்றீர் ? என்றான் உறுமல் குரலுடன்.சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே, அடேய்! நீங்கள் யார் ? அசுர சிங்கங்களா ? என்றார். ஆம்... நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரித்தீர் ? என்ற சூரபத்மனிடம், பிழைத்தேன், நான் அடேய் ! சீடர்களே! நான் தான் உங்கள் குலத்திற்கே குரு அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள் ? என்றார் சந்தேகத்துடன். பத்மாசுரன் ஆம் என்றான். குருவே ! தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர்.பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர், அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார்.புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து, வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகமாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாதராண யாகசாலையா அது ? பத்தாயிரம் யோஜனை பரப்பின் யாகசாலை அமைக்கப் பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பதி இதை அமைத்திருக்கிறான். யாகமாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார். இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் என்றால் அப்படி ஒரு யாகம்... உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள், சிங்கமுகன் 108 குண்டங்களிலும், தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும், சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான்.தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று. ஆனால், புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன், சிவபெருமானே ! என் பக்தி நிஜமானதெண்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி, யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர்விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர்.சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார்.மக்களே ! நீங்களெல்லாம் யார் ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்றார் சிங்கமுகன் அவரை வணங்கி, தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே ! நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள். அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன். என்றான், கவலை வேண்டாம் மகனே ! நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது, என்றவர் சற்றே தலை குனிந்தார். அவரது தலையில் இருந்து ஒரு நதி பெருக்கெடுத்து ஒடி அத்தனை குண்டங்களில் இருந்த நெருப்பையும் அணைத்தது. அப்போது ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது.

தொடரும்


கந்தபுரானம் பகுதி இரண்டு

கந்தபுராணம் பகுதி-2

ஒம் சரவணபவ

தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே, உம் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறும் பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும் நானும் பல <உருவங்கைள எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும், என்றாள்.காஷ்யபர் அதற்கும், சம்மதித்து, பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால், பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான். இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர். மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர்.இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன்பெற்றோர் முன்வந்து வணங்கினான்.தாயே தந்தையாரே ! லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் ? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன ? சொல்லுங்கள். தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம், என்றான்.காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார்.மக்களே ! இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார்.இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார்.தன் மக்களை தாய் மாயா அழைத்தாள்.என் அன்புக் குழந்தைகளே ! பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை, இன்பமும் இல்லை, சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன்.அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும், யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல.நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில், நானே கொண்டு வந்து தருவேன், என்றாள்.தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர்.கண்விழித்த காஷ்யபர், அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார்.தவசீலரே ! அவர்கள் மட்டுமல்ல, நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க, வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர். என் பணி முடிந்தது. நானும் செல்கிறேன், என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல ! அவள் எழுப்பிய மாட, மாளிகை, கூட கோபுரங்களும் மறைந்தன.காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து, காஷ்யபா, என் அன்பு மகனே, என அழைத்தது ஒரு குரல்.

தொடரும்


கந்தபுராணம் பகுதி ஒன்று

கந்தபுராணம் பகுதி-1

ஒம் சரவணபவ

இந்து சமயத்தில் மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று கந்தபுராணம். வாசகர்களின் வசதிக்காக கந்தபுராணம் கதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும், தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால், இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில், சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி, யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில், அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி, தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சனை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால், இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார். பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும், அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் - மங்களகேசினியின் தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து, பெயரையும் மாயா என மாற்றிவிட்டார். அவளிடம், மாயா ! நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி, நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம், தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா, தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல, அவனும் அகமகிழ்ந்து, மகளை வாழ்த்தி அனுப்பினான். சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால், புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒருபகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா. அவள் எதிர்பார்த்தபடியே, காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ ? என்று மனதில் கேள்விகள் எழ, ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகுசுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி, விளையாடுவதைக் கண்ட காஷ்யபர், ஆஹா... உலகில் இப்படி ஒரு அழகியா ? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை, இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால், இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றாள். அழகுப்பெண்ணே ! நீ யார் ? இந்த கானகத்தில் உனக்கென்ன வேலை ? இந்த மாளிகையை எப்படி உருவாக்கினாய் ? உன் அங்கங்கள் என் மனதைக் குலைக்கிறதே ! ஏற்கனவே திருமணமானவன். தவசீலன். அப்படியிருந்தும் என் மனம் உன்னைக் கண்டு அலை பாய்கிறதே, என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவள் காஷ்யபரிடம் நல்லவள் போல் நடித்தாள். தவசீலரே ! இந்த மலைப்பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவள். எனக்கு இந்த மாளிகைகள் எப்படி வந்தன எனத் தெரியாது. ஆனால், யாரும் இல்லாததால், இங்கே புகுந்தேன். வேண்டுமானால், இந்த மாளிகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முனிவராக இருந்தும், என் அழகை வர்ணிப்பதில் நியாயமில்லை. நான் இளங்கன்னி. நீங்களோ முதியவர். வயதிற்காவது மரியாதை கொடுங்கள் சுவாமி ! என்றவளை காஷ்யபர் மீண்டும் வற்புறுத்தினார். அவள் மாயா அல்லவா ? அங்கிருந்து மறைந்து விட்டாள். காஷ்யபர் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. அழகே ! எங்கே போனாய். நீ இல்லாமல் எனக்கு இனி வாழ்வில்லை. எங்கு மறைந்திருந்தாலும் வந்துவிடு. என்னை ஏற்றுக்கொள். நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன், என நாள்கணக்கில் புலம்பிக் கொண்டு, அங்கேயே பசி பட்டினியுடன் கிடந்தார். மன்மதனின் வலைக்குள் சிக்கிய பிறகு தவசீலனாயின் என்ன ! சாதாரண மனிதனாயின் என்ன ! எல்லாரும் ஒன்றும் தான். காஷ்யபர் மயக்க நிலையில் கிடந்தார். அப்போது அவர் முன் மீண்டும் தோன்றினாள் அப்பெண். காஷ்யபர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை. அவர் பரவசத்துடன் அவளை நோக்கி ஓடினார். தான் ஒரு முனிவர் என்பதையும், பிரம்மாவின் புதல்வன் என்பதையும் மறந்து அவளது காலிலேயே விழுந்து விட்டார்.

தொடரும்


ஜாதகம்

உங்கள் ஜாதக கட்டத்தில் நவகிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட உங்களது  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த தவறுகளை நீங்கள் செய்திருந்தால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுக துக்கங்களுக்கு நல்லவை கெட்டவைகளுக்கு ஜாதக கட்டங்களும் அதில் அமர்ந்திருக்கும் நவகிரகங்களும் தான் காரணம் என்று சொல்கிறது ஜோதிடம். இருப்பினும் சில பேருக்கு ஜாதக கட்டத்தில் எந்த தோஷமும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனாலும் கிரகங்களின் அனுகிரக பார்வை கிடைக்கவில்லையே!

அது எதனால்?
 

நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப்படுவதற்கு என்ன காரணம்
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவார்கள்!

இது கூடவா ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

அந்த காரணம் என்ன?
தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
 

எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.

 இப்படியாக சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.

 சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?
 

எந்த கிரகத்துக்குரிய சொந்த, பந்தம் எது என்பதையும் பார்த்து விடலாம்.
 

உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,
உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.

 வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால் அப்பா ஸ்தானத்தை குறிப்பது சூரியன். உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,
கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால் அம்மா ஸ்தானத்தை குறிப்பது சந்திரபகவான்.
 

நீங்கள் கணவனாக இருந்தால்,
உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை என்றால், உங்கள் வீட்டில் மஹாலட்க்ஷ்மி இல்லை. வீடு, மனை, வாகனம், சொத்து, பத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால் மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
மனைவி இடத்தை குறிப்பது சுக்கிரன்.


நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்க வேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது குரு. உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் புதன். தாய்மாமன் மட்டுமல்ல,
அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.

 உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும். சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்ங செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது. உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். (இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

 கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.
மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)
அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும். இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது. அதாவது ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.
ஆகவே இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.
முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

 இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!

ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள்  இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்
பார்க்காமல் பேசாமல் இருப்பதை
தவிர்த்து அவர்களுடன் அன்புடன்
பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி அதன் மூலம் நாமும் சந்தோஷமாய் வாழ்வோம். நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்..!

வாழ்க வளமுடன்...

செவ்வாய், 17 நவம்பர், 2020

குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்

10. குலசேகர ஆழ்வார்

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
பாடிய பாடல் : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். (கவுஸ்துபாம்சம்)
பிற பெயர்கள் : கொல்லிகாவலன், கூடல்நாயகன், கோழிக்கோன், சேரலர்கோன், வில்லவர்கோன்

திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு  கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார். தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டியமன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினார். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும்

செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்;

வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே

என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர் ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர் இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


திங்கள், 16 நவம்பர், 2020

வள்ளல்கள் இருவர்!

வள்ளல்கள் இருவர்!

கொடை வள்ளல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கர்ணன்தான். ஆனால், அவன் வள்ளல் தன்மைக்கே சவால் விடும்படியாக செயற்கரிய செயல்புரிந்த இரு அடியவர்களைப் பற்றி அறியும்போது வியப்பாகத்தான் உள்ளது. யாருமே  செய்வதற்கு அஞ்சுகின்ற அச்செயலை, இறைவன் மீதும் இறை அடியார்கள் மீதும் கொண்ட தூய பக்தியின் நிமித்தம் செய்த அருளாளர்கள் இயற்பகை நாயனார் மற்றும் ஜலராம் பாபா.

இயற்பகை நாயனார்: சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர் குலத்தில் இயற்பகையார் அவதரித்தார். சிவபெருமானுக்கு அடிமை செய்தும், சிவனடியார்களுக்கு இல்லை என்னாது இனிது வழங்கியும், அடியார்கள் பணியை நிறைவேற்றுவதையே கொள்கையாகக் கொண்டு சிவப்பணி செய்து, இல்லாளோடு இனிதே இல்லறம் நடத்தி வந்தார். இயற்பகையாரின் கொடைச்சிறப்பை உலகிற்குக் காட்ட திருவுள்ளம் கொண்டான். திருச்சிற்றம்பலக் கூத்தன், பால் வெண்ணீறணிந்து, அந்தனர் வேடந்தாங்கி, பார்வதி மணாளன் இயற்பகையார் இல்லத்துக்கு வருகை புரிந்தான். அகமும், முகமும் மலர அவரை ஓடிச்சென்று வரவேற்றார் இயற்பகையார். அந்தணராக வந்த அரனார், சிவனடியார் வேண்டிய பொருள் எதுவாயினும் இல்லை என்னாது நீ கொடுப்பதை அறிந்து நாம் இங்கு வந்துள்ளோம். நாம் ஒரு பொருளை விரும்புகிறோம். நீ கொடுக்க உடன் பட்டால் நான் சொல்கிறேன் என்று கூறினார். என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவனின் உடைமையே. அடியவர் பெருமானே! நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருக்குமானால், உங்களுக்கு உடனே கொடுப்பேன். இது உறுதி என்று இயற்பகையார் கூற, வந்திருந்த வேதியர், அப்படியானால் உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்டார். இதைக் கேட்டதும் சீறி எழுந்தாரா நமது தொண்டர்? இல்லை. மாறாக, சிரித்த முகத்துடன், நீர் கேட்ட பொருள் என்னிடம் இருக்கிறது. இது இறைவன் தந்த பேறு. என்று மகிழ்ந்து, மனைவியிடம் சென்று நடந்ததைக் கூறினார். அம்மையாரும் முதலில் கலங்கினாலும், பின்பு தெளிவு பெற்றார். இயற்பகையாரின் சுற்றத்தாரால் தனக்குத் துன்பம் நேராவண்ணம் வழித்துணையாய் வரவும் தொண்டருக்கு ஆணையிட்டார் அந்õணர். என்ன விபரீதம்? மனைவியுடன் மாற்றான் செல்ல, பாதுகாப்பிற்குச் சென்றார் இந்த விநோத சிவத் தொண்டர். கேட்கக் கூடாததை வாய்கூசாமல் கேட்டு வேதியர் வேடம் தரித்த இறைவன் பெற்றுக்கொண்டது வேடிக்கையாய் உள்ளதென்றால், துறவி வேடம் பூண்டு மற்றொரு தொண்டனிடமும் இதையே யாசகமாய்  கேட்டுப் பெற்றான் இறைவன் என்று அறியும்போது வியப்பு இரட்டிப்பாகிறது.      

ஜலராம் பாபா: குஜராத்திலுள்ள வீர்பூர் கிராமத்தில் பிரதான் தாக்கர் என்ற வணிகருக்கு ராஜ்பாய் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக அவதரித்தார் ஜலராம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஜலராமுக்கு தெய்வபக்தி அதிகம். அவருக்குப் பத்து வயது ஆனபோது அவர்கள் இல்லத்துக்கு ஒரு துறவி வந்தார். இரண்டாவது மகனைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். வீட்டுக் குள்ளிலிருந்து வெளியே வந்த ஜலராம், துறவியைக் கண்டான். உள்ளத்தில் ஒளிவெள்ளம் பாய, பரவச நிலையை அடைந்தான். புன்னகையுடன் துறவி, அவனை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து சீதாராம், சீதாராம் என்று இடைவிடாமல் உச்சரிக்கத் தொடங்கினான் ஜலராம். என்னைப் பார்க்க வந்தவர் ராமதூதனான ஆஞ்சநேயர்தான் என்று பின்னாளில் ஜலாராம் குறிப்பிட்டுள்ளார். இல்லறத்தில் அவருக்கு விருப்பமில்லா விட்டாலும், பதினாறு வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைத்து, வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள கடைசியில் உட்கார வைத்தார்கள். ஆனால், அவர் மனம் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவர் போல் காணப்பட்டார். சித்தப்பாவின் அறிவுரைப்படி பல புனிதத் தலங்களுக்கு மனைவியுடன் சென்று வந்ந்தார். ஃபதேபூர் என்ற இடத்தில் போஜலராம் என்ற மகானிடம் உபதேசம் பெற்றார். இருபது வயதில், அன்னதானத்தை ஏற்றுக்கொள்ள வந்த ஒரு துறவி, ஜலராமுக்கு தன்னிடமிருந்த ஒரு விக்ரகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிரத்தையாக அந்த விக்ரகத்தைப் பூஜை செய்து வந்த ஜலராம், அந்த விக்ரகத்தில் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை ஆன காட்சியைக் காணும் பேறு பெற்றார். ஒரு மாலை நேரம். ஜலாராமும் அவர் மனைவியும் ஆஞ்சநேயர் ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். வாசலில் அம்மா என்ற குரல் ஒலித்தது. கணவனும் மனைவியும் வெளியே வந்து பார்த்ததுபோது, திண்ணையில் ஒரு துறவி, தோளில் துணிப்பை, கையில் தண்டத்துடன் இருந்தார்; மூச்சுவிடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பசியாற உள்ளே அழைத்தனர் தம்பதியர். மறுத்த துறவி ஜலாராமைப் பார்த்து,
வயதானதால் என் வேலைகளைச் செய்துகொள்ள எனக்குச் சிரமமாக உள்ளது. உன் மனைவியை எனக்கு சேவை செய்ய என்னுடன் அனுப்புவாயா? என்று கேட்டார். ஜலராம் அதிர்ச்சியுறவில்லை. அவரது மனைவியோ, கணவனிடம் அனுமதிகூட கேட்காமல் அவருடன் புறப்பட்டாள். துறவி தோள் பை, தண்டம் சகிதம் அந்த இளம்பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றார்.ஜலாராம் சோகம் சற்றுமின்றி ஆஞ்சநேய பூஜையைத் தொடர்ந்தார். மாதவருக்கு மனைவியை தாரை வார்த்துக் கொடுத்த மகிழ்ச்சி ஒருபுறம் தம்மைப் பாதுகாப்பாக உடன்வர ஆணையிட்ட சந்தோஷம் மறுபுறம்.

இயற்பகையார் களிப்புடன் இல்லத்துக்குள் சென்று பொன்னாடை தரித்து ஆயுதம் தாங்கினார்.அக்னி சாட்சியாய் மணமுடித்த அன்பு மனைவி அன்னிய ஆடவனுடன் முன்செல்ல அவர்களுக்குப் பாதுகாவலனாய் அருமைக் கணவன் பின்செல்ல பயணம் தொடர்ந்தது.ஊர் முழுவதும் செய்தி பரவியது.தன் மனைவியை மாற்றனுடன் அனுப்பி வைக்கும் இயற்பகையாரை பித்தன் என்று ஏசியும் பிறன்மனை விழைந்த வேதியர் மீது ஆயுதங்கள் வீசியும் சுற்றத்தார்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.அஞ்சி நின்ற அந்தணருக்கு அபயம் அளித்து, சுற்றி நின்று எதிர்த்தவர்களைத் தாக்கினார் இயற்பகையார்.அந்தத் தாக்குதலில் பலர் மாண்டனர்.திருச்சாய்க்காடு என்னும் ஊருக்கு அருகில் வந்தவுடன் சிவனடியார் இயற்பகையாரை நோக்கி இனி நீ திரும்பிச் செல்லலாம்!என்று கூறி விடை கொடுத்தார். விடைகொடுத்துச் செல்வது விடையேறும் பரமன் என்று அறியவில்லை அந்த பரமபக்தர்.மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பிக்கூட பார்க்காமல் தனது இல்லம் திரும்பினார்.அவரது அச்செயலைக் கண்டு நெகிழ்ந்த இறைவன் இயற்பகையானே! என்னை எப்போதும் மறவாதவனே! அன்புடையவனே! செயற்கரிய செயல் செய்தவனே! ஓலம்! என்று பலமுறை ஓலமிட்டு அழைத்தார். மறுக்கறு மறைஓலிட்டு மாலயன் தேட நின்றான் குரல் கேட்டு ஓடோடியும் வந்தார் இயற்பகையார். இறையடியார்க்கு இன்னல் ஏதேனும் வந்துவிட்டதோ என்றெண்ணி விரைந்து வந்தார்.தொண்டரை மேலும் சோதிக்க எண்ணாத தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார். தம் மனைவியார் மட்டும் அங்கு நிற்பதை நாயனார் கண்டார்.அப்போது, வானத்தின் மீது உமையம்மையுடன் சிவபெருமான் காளையூர்தியின் மீதமர்ந்து காட்சியளித்தார். இயற்பகையார் உணர்ச்சி மேலிட தரையில் வீழ்ந்து வணங்கினார். இவ்வுலகில் நீ செலுத்திய அன்புகண்டு மகிழ்ந்தோம்.நீரும் உம் மனைவியும் நம்மிடம் வருக!என்று அருள் செய்ததோடு இறந்த இயற்பகையாரின் சுற்றத்தார்க்கு வீரசுவர்க்கமும் அளித்தார் மறைபோற்றும் இறைவன்.

கணவனின் கட்டளைப்படி முனிவர் பின் சென்றார் இயற்பகையாரின் மனைவி என்றால் ஜலாராமின் துணைவியோ வந்திருந்த துறவியுடன்பதியின் ஆணைக்குக்கூட காத்திராமல் புறப்பட்டாள்.இருவரும் ஊரைக்கடந்து அருகில் இருந்த ஒரு வனத்தை அடைந்தனர்.ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் துறவி வீர்பாயிடம் தனது தோளில் தொங்கிய பையையும் தண்டத்தையும் கொடுத்து விட்டு, இதை பாதுகாப்பாக வைத்திரு. நான் வரும் வரை இந்த இடத்தைவிட்டு நகரக் கூடாது என்று கூறிச் சென்றார்.இரவு வந்தது. இருள் சூழ்ந்தது.ஆனால் துறவி வரவில்லை.வீர்பாய் பொறுமையாய் அமர்ந்திருந்தாள்.அப்போது வானிலிருந்து மகளே! தணடத்தையும் பையையும் எடுத்துக்கொண்டு போய் உன் கணவனுடன் சேர்ந்து வாழ்வாயாக! உங்களைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்று அசரீரி ஒலித்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் வீர்பாய். அன்று முதல் ஜலாராமும் வீர்பாயும் இறைவனின் பரிசான அந்தப் பையையும் தண்டத்தையும் ஆராதித்து வந்ததோடு அவர்கள் இல்லத்துக்கு வந்தவர்க்கெல்லாம் வயிறாற அன்னமிட்டு நிறைவாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தனர்.இன்றும் ராஜ்கோட் மாவட்டத்திலிருக்கும் வீர்பூர் கிராமத்து ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜலராம் வணங்கிய ஆஞ்சநேயரையும் இறைவன் வீர்பாய்க்கு அளித்த தோள்பை மற்றும் தண்டத்தையும் தரிசித்துச் செல்கின்றனர். பூஜ்யத்துக்குள்ளிலிருந்து ராஜ்யம் நடத்துபவனைப் புரிந்து கொள்வது கடினம். புரிந்துகொண்டால்? அவன்தான் இறைவன்!

அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
 



மூலவர் :  பசுபதீஸ்வரர்
அம்மன்:  திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  கொன்றை
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருஆமூர்
ஊர் :  திருவாமூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
 
பாடியவர்கள்:தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றது எனலாம்.

இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.
 
திருவிழா:அப்பர் குருபூஜை சித்திரை சதயத்திலும், அவதார நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது.   
       
தல சிறப்பு:சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாமூர் - 607106, கடலூர் மாவட்டம்.போன்:+91 4142- 239 6333.  
      
பொது தகவல்:இந்த பசுபதீசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் திருவுருவம் நின்ற திருக்கோலத்துடன் மூலாதாரமாக விளங்குகிறது. அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாமூர் நாற்புறமும் கழனிகள் சூழ்ந்த மிக அழகிய சிறிய கிராமம்.தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது.
 
பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. இத்தலத்து ஈசுவரனைத்தான் அப்பரின் தாய் தகப்பனார் வழிபட்டுள்ளனர். ஈசுவரன் மீது மாறாத பக்தியும் சிரத்தையும் கொண்டோர் இத்தலத்து பசுபதீசுவரனை வணங்கினால் அத்தனை பேறுகளும் கிடைக்கும்.மேலும் நின்ற நிலையில் உள்ள அப்பர் பெருமானை வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
 
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.  
      
தலபெருமை:இங்கே பசுபதீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். சைவ சமயத்தின்மீது பற்றுக்கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும். இங்கே பசுபதீஸ்வருரம் திரிபுர சுந்தரியும் அருள்பாலித்தாலும் அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் போரில் இறந்துவிட்டதால் இவ்வூரில் திருமணத்துக்கு முதல் நாளிலோ அல்லது திருமணத்தன்றோ தான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் இங்கு தனி சன்னதிகள் உள்ளன. ஊரைச்சுற்றிலும் கழனிகள் அதிகம். நாவுக்கரசர் பாடிய ஒரு பாடல் குழந்தைகளும் கற்றுக்கொள்ள கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.

நாவுக்கரசர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி மக்கள் பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கி.பி.7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம், 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

அப்பர் குருபூஜை தினமான சித்திரைச் சதயத்தில் பெருவிழாவும் திருமுறை மாநாடும் நிகழ்ந்து வருகின்றன. திருநாவுக்கரசர் நினைவாக ஆண்டுதோறும் இவ்விழாவில் மூத்த திருமுறை இசைவாணர் (சிறந்த ஓதுவாமூர்த்தி) ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும் பொன்னாடையும் இரண்டாயிரம் பணமுடிப்பும் ஸ்ரீ லஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பர் சுவாமிகள் பரம்பரையினர் பக்கத்து ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்பர் சுவாமிகள் பங்குனிமாதம் ரோகினியில் அவதரித்ததாகக் கொண்டு அன்றைய நாளிலும், அவர் இறைவனடி கூடிய சித்திரைச் சதயத் திருநாளிலும் அப்பருக்கு வழிபாடுகள் நிகழ்த்தி வருகின்றனர். தவிர விசேஷ நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.
 
தல வரலாறு:திருவாமூர் என்ற இந்த தலத்தில்தான் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார்; தாயார் மாதினியார்; சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்துவைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர்சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
 
சிறப்பம்சம்: சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.

அருள் மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்

அருள் மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்
 



மூலவர் :  ரேணுகாம்பாள்
தல விருட்சம் :  மாமரம்
தீர்த்தம் :  கமண்டலநதி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  படவேடு
மாவட்டம் :  திருவண்ணாமலை
மாநிலம் :  தமிழ்நாடு
 
திருவிழா:ஆடி மாதம் - ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும். இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். புரட்டாசி மாதம் - நவராத்திரி கொலு ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும். மார்கழி பூஜை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும். வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.   
       
தல சிறப்பு:இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. மற்ற அம்மன் சன்னதிகளில் குங்குமம்தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமத்திற்கு பதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது. பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.   
       
திறக்கும் நேரம்:காலை 6.40 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , படவேடு. திருவண்ணாமலை மாவட்டம்.போன்:+91- 4181 - 248 224, 248 424.  

பொது தகவல்:சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.   
       
பிரார்த்தனை:அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள்(துலாபாரம்) , நெய்தீபம் ஏற்றுகின்றனர். சிலை கண்ணடக்கம், உருவ வகையறா, மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள். வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும். முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.  
      
தலபெருமை: பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண்ணே திருநீராக தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாக தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவத ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கருவறைச் சிறப்பு : இத்திருக்கோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள். மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகா தேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு.பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் இங்கு சுயம்புவாய் எழுந்தருளியிருப்பது முக்கிய சிறப்பம்சம். அதோடு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக் கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது சிறப்பாகும். ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும்இத்திருத்தலத்தில்தான். தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும்.

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர். ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.

பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
 
தல வரலாறு:ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற, அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் "பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன்,' என்று கூற முனிவரும், "வரம் கேள்; தருகிறேன்,' என்று பரசுராமரிடம் கூறினார்.தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார்.

முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார். இதற்கிடையில் கார்த்தவீரிய அர்ச்சுனன் முனிவரிடம் இருந்த காமதேனுவை கேட்டும் தர மறுத்ததால் அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து செல்கிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ய கொப்புளங்களுடன் ஆடை இன்றி வேப்பிலை கட்டி மகன் பரசுராமனை சந்தித்தாள். பரசுராமன் வந்து கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப,சத்திரிய குலம் முழுவதும் அழிக்க சபதமிடுகிறான்.

பின் சிவபெருமான் வந்து நடந்திருப்பது விதிச் செயல் என்று சமாதானம் செய்தார். பின் ஜமதக்னி முனிவரை உயிரத்தெழ செய்கிறார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூலகில் பூஜைக் கருவாய் விளங்குவதோடு, உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சொர்க்கத்துக்கு சென்றது. இவ்வாறே அன்னை ரேணுகை இப்பூவுலகில் சிரசை மட்டுமே பிரதானமாக கொண்டு படவேட்டில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
 
சிறப்பம்சம்: இங்கு அம்மன்(சிரசு மட்டும்)சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.