JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 5 அக்டோபர், 2020
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21
இன்றைய பதிவில் தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன என்பதை அறியலாம்.
மூன்றாவது பிழை
பெரிய நம்பிகள் தம் மனைவியுடன் இளையாழ்வான் வீட்டில் தங்கியிருந்தபோது, ஒருநாள் இளையாழ்வான் ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்தார். அந்த சமயத்தில் இளையாழ்வானின் மனைவியும், பெரிய நம்பிகளின் மனைவியும் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது இரண்டு வாளியும், நீர் இறைக்கும் பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி நீர் தெளித்தது. இதைக்கண்ட தஞ்சம்மாள் பெரிய நம்பிகளின் மனைவியிடம் பேச ஆரம்பித்தார். இவள் பேச பதிலுக்கு பெரிய நம்பிகளின் மனைவி பேச வாதம் விவாதமானது.
இதை தெருவில் குடியிருந்தோர் அனைவரும் கேட்டு விட்டனர். இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாளை சற்று அதிகமாகவே விவாதம் செய்து விட்டாள். இதை அறிந்த பெரிய நம்பிகள், தன் மனைவியைக் கோபித்துக் கொண்டார்.
"வா! நாம் திருவரங்கம் செல்லலாம்" என்று கூறி, பெரிய நம்பிகள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இளையாழ்வான் வீட்டை விட்டுக் கிளம்பினார். ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்த இளையாழ்வான் வரும்முன்னே பெரிய நம்பிகள் சென்றுவிட்டார்.
தன் வீட்டிற்கு வந்திருந்த பெரிய நம்பிகளை வீட்டில் அழைத்தபோது இல்லை. "எங்கே சென்றார்?" என்று அருகில் இருந்தோரிடம் விசாரித்த பொழுது, அவர் திருவரங்கம் புறப்பட்டுச் சென்றதையும், தஞ்சம்மாள் நடந்து கொண்டதையும் அருகிலிருப்போர் கூற, தஞ்சம்மாளிடம் பெரிய நம்பிகள் பற்றி விசாரித்தார். தஞ்சம்மாளும் நடந்ததைக்கூற, இளையாழ்வானுக்கு அதிகமாகவே கோபம் வந்துவிட்டது.
"ஆச்சாரியனைத் தேடி தேடி அலைந்து கொண்டிருந்ததற்கு பரிசாக, இறைவனே பெரிய நம்பிகளை ஆச்சாரியனாக ஆக்கிக் கொடுத்தார். அந்த ஆச்சாரியனுக்கே பெரிய பாவத்தை பண்ணிவிட்டாய்" என்று கூறினார். வைஷ்ணவ சம்பிரதாயத்தை பொறுத்தவரை, பாகவதன் பாவத்தை விடவும், ஆச்சாரியானுக்குச் செய்யும் பாவத்தைத் தொலைக்கத்தான் பிராயச்சித்தம் இல்லை. அதற்கு என்ன பரிகாரம் செய்தாலும், செய்த பாவத்தைத் தொலைக்க முடியாது. "இந்த பாவத்தை நான் எப்படி நான் தொலைப்பேன்? என்ன செய்வேன்?" என்றெல்லாம் உரைத்தார்.
தஞ்சம்மாளுடன் குடும்பப் பொறுப்பில் இருக்கும் வரையில், தம்முடைய நோக்கமும், பிரார்த்தனைகளும், ஸ்ரீ வைஷ்ணவ செயல்பாடுகளும் முழுமையாக செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். "இனி, நீ உன் பிறந்தகம் செல்லலாம்" என்று தஞ்சம்மாளிடம் கூறிவிட்டார். தஞ்சம்மாளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்களை வரவழைத்து அவர்களுடன் தஞ்சம்மாளை அனுப்பி வைத்து விட்டார்.
'தஞ்சம்மாளுக்கும் எனக்கும் இருக்கும் உறவு முறிந்துவிட்டது. இனி, ஸ்ரீ வைவஷ்வ சம்பிரதாயங்களில் சுதந்திரமாகச் செயல்படலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின் இளையாழ்வான் செய்த செயல் என்ன? இளையாழ்வானுக்கு இன்று உலகமே போற்றும் இராமானுஜர் எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது? நாளைய பதிவில் அறியலாம்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20
தஞ்சம்மாளின் செயல்கள்
மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும் அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார். பெரிய நம்பிகளும் இளையாழ்வானின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
காஞ்சிபுரம் வந்த பெரிய நம்பிகளையும், அவரது பத்தினியையும் தம் இல்லத்தின் ஒரு பகுதியில் தங்குமாறு இளையாழ்வான் சொல்ல அவரும் சம்மதித்தார். இளையாழ்வான் வீட்டில் அவர்கள் தங்கினார்கள். இளையாழ்வான் பெரிய நம்பிகளிடம் வீட்டில் இருந்தவாறே காலட்சேபம் பயின்று வந்தார். நம்பிகள் வியாச சூத்ர அர்த்தத்தை கற்றுக் கொடுத்தார்.
ஒரு சமயம் வீட்டிற்கு ஸ்ரீ வைஷ்ணவர் வர, அவருக்கு உணவிடும் படி தஞ்சம்மாளிடம் சொன்னார் இளையாழ்வான். ஆனால், தஞ்சம்மாளோ உணவு ஏதும் இல்லை என்று கூறிவிட்டாள். அப்போது இளையாழ்வான் உள்ளே சென்று பார்த்த பொழுது ஒரு பாத்திரம் நிறைய பழைய சாதம் இருப்பதைக் கண்டார். "வீட்டில் உணவை வைத்துக்கொண்டே, ஸ்ரீ வைஷ்ணவருக்கு உணவில்லை என்று சொல்வது அபச்சாரம் இல்லையா?" என்று தஞ்சம்மாளிடம் தன் சினத்தை வெளிப்படுத்தினார். வீட்டிற்கு வந்த பாகவதற்கு உணவில்லை என்பது பெரிய அபச்சாரம்.
ஆனால், எல்லை மீறிய சினத்தை இளையாழ்வான் கட்டுப்படுத்திக் கொண்டு தஞ்சம்மாளை திட்டுவதோடு விட்டுவிட்டார். இது தஞ்சம்மாள் செய்த இரண்டாவது பிழை. முதல் பிழை திருக்கச்சி நம்பிகள் உணவருந்திய போது இலையைக் கையால் எடுக்காமல் கோலால் எடுத்து, குப்பையில் போட்டு வீட்டை சுத்தம் செய்து, தானும் சுத்தப்படுத்திக் கொண்டது.
இப்போது நடக்கும் சம்பவத்தின் மூலம் தஞ்சம்மாள் பெரிய பிழையைச் செய்கிறாள். அதுதான் அவள் இளையாழ்வானைப் பிரிய காரணமாக அமைந்தது. இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாள் அப்பேற்பட்ட மனம் படைத்தவளா என்று எண்ண வேண்டாம். ஆளவந்தார் காஞ்சிபுரம் வந்தபொழுது ஸ்ரீ வைஷ்வண சம்பிரதாயத்திற்கு இளையாழ்வானைத்தான் ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் அல்லவா? அந்த வேண்டுதல் தான் இப்போது தஞ்சம்மாளுக்கும், இளையாழ்வானுக்கும் உண்டான பிரிவு மூலம் நிறைவேறப் போகிறது.
காஞ்சி பேரருளாளன் எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடியவர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ சாம்ராஜ்யம் உருவாவதற்கு இந்த காஞ்சி பேரருளாளனின் அருள் தான் காரணம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறப்பு பெற்ற ஆச்சாரியர்கள், 12 ஆழ்வார்களில் மூன்று ஆழ்வார்கள் அவதாரம் பண்ணியது என்ற எல்லா சிறப்பும் காஞ்சிபுரத்திற்கு உரியதே. எல்லோருடைய பிரார்த்தனை எதுவானாலும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியவர் காஞ்சி பேரருளாளன். அவர் தான் இப்பொழுது ஆளவந்தாரின் பிரார்த்தனையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
சரி, தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன?
!! சாதீயத்திற்காக சம்சாரபந்தத்தை துறந்த ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் !!
சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். அவரின் தாம்பத்ய வாழ்வில் மூன்று முறை ராமானுஜரின் மனைவி இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்துகிறார்.
திருக்கச்சி நம்பிகளுக்கு வீட்டின் நடையிலேயே உணவு அளிக்கிறார் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள். அதன் பின், வைணவர் ஒருவருக்கு ஆகாரம் அளிக்குமாறு கூற வீட்டில் ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிவிடுகிறார்.
ராமானுஜரின் குரு பத்தினியாருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து நீர் அள்ளும் போது தகாத சொற்கள் கூறி அதன்காரணமாக அவர்கள் வீட்டை விட்டே வெளியேறுவதற்குக் காரணமாயிருக்கிறார். இந்த மூன்று நிகழ்வுகள் அவரை துறவறத்துக்கு தூண்டுவதாக அமைந்தன.
ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளோ மிகுந்த ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவள்.
ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளோடு பேசுவதையே விரும்பாதவள்; அவரையே குருவாக ஏற்றுக் கொண்டது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.
இந்த நிலையில் ராமானுஜர் தஞ்சம்மாளிடம், ‘திருக்கச்சி நம்பிகளை அமுதுண்ண அழைத்துள்ளேன். விரைவில் தளிகை (சமையல்) செய்’ என்றார்.
தஞ்சம்மாள் வேண்டா வெறுப்பாக தளிகை செய்ய, ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை அழைத்து வர புறப்பட்டுப்போனார். நம்பிகளோ, வேறு வேலை இருந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ராமானுஜரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
தஞ்சம்மாள் இரண்டு திண்ணைகளுக்கிடையில் இருக்கும் நடைபாதையில் அவரை அமரச் செய்து உணவிட்டாள். திருக்கச்சி நம்பிகள் சென்றபின் அவர் சாப்பிட்ட இலையைக் கோலால் எடுத்தெறிந்து, வீடு முழுவதும் சாணம் தெளித்து சுத்தம் செய்து, தானும் குளித்துவிட்டு, புதியதாக சமையல் செய்து ராமானுஜரின் வருகையைப் பார்த்துக் காத்திருந்தாள்.
விவரம் அறிந்த ராமானுஜர் கோபம் கொண்டார். தன் பக்தி மார்க்கத்திற்கும் மனித நேயத்திற்கும் வைணவ வளர்ச்சிக்கும் தஞ்சம்மாள் உறுதுணையாக இருக்கமாட்டாள்; உபத்திரமாகத்தான் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டார்.
இன்னொரு சமயம், ராமானுஜருக்கு எண்ணெய்த் தேய்க்க ஒரு வைணவர் வருவார். ஒருநாள் அந்த வைணவர் பசிக்கிறது என்றுகூற, ராமானுஜர் தஞ்சம்மாளை அன்னமிடச் சொல்கிறார்.
அவளோ தளிகை இன்னும் செய்யவில்லை என்கிறாள். அப்படியா? சரி! பழைய சாதம் இருக்குமே! அதைப் போடு என்கிறார்.
தஞ்சம்மாள் அதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். அப்போது உள்ளே சென்று பார்த்த ராமானுஜர், உணவு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டார்.
மற்றொரு சமயம் பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட ராமானுஜர் அவரையும் அவரது மனைவி விஜயாம்பாளையும் தம் இல்லத்திற்கு அழைத்து வந்தார்.
அவர்களை வீட்டில் இருக்கச் செய்து மேல்மாடியில் பெரிய நம்பிகளிடம் உபதேசம் பெற்று வந்தார். ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார்.
அப்போது தஞ்சம்மாளுக்கும் விஜயம்பாளுக்கும் கிணற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த போது மனஸ்தாபம் ஏற்பட்டது.
விஜயம்பாள் எடுத்த குடத்து நீர்த்துளிகள் தஞ்சம்மாளின் குடத்து நீரில் சிந்திவிட்டன. மிகுந்த ஆசாரம் பார்க்கும் தஞ்சம்மாள், விஜயாம்பாள் பிராமணளாக இருப்பினும் தன் தாழ்ந்தவள்; செல்வத்திலும் தனக்குச் சமமாக இல்லை என்று கருதி, ‘ஏம்மா! குரு பத்தினி என்ற நினைப்போ?’ என்று கேட்டுவிட்டாள்.
பெரிய நம்பிகளும் விஜயம்பாளும் ராமானுஜர் வருவதற்கு முன் கிளம்பிவிட்டனர்.
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து வந்த ராமானுஜர் செய்தி அறிந்து மிகவும் விசனப்பட்டார். சாதி வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என்ற தம் கொள்கைகளுக்கு தன் மனைவியே எதிரி என்று புரிந்து கொண்ட ராமானுஜர்,
‘சற்றே ஏறுமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்’
என்பதற்கேற்ப துறவறம் மேற்கொண்டார். ஓடும் உதிரத்தில் உருண்டு விழும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ? என்ற உண்மை தஞ்சம்மாளை போன்று பலருக்குப் புரியாமல் இன்றளவும் இருப்பது புரியாத புதிரேயாகும்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19
பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு
வாழியெதிராசன் வாழியெதிராசன்
திருக்கச்சி நம்பிகள் மூலம் பெரிய நம்பிகளையே குருவாக ஏற்றுக்கொள்ளும்படி பேரருளாளன் இட்ட கட்டளையை மேற்கொண்டு, பெரிய நம்பிகளை சந்திக்கப் புறப்பட்டார் இளையாழ்வான்.
இந்த சமயத்தில் திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷம் பெற்ற இளையாழ்வாரை அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்று பெரிய நம்பிகளிடம் விண்ணப்பித்தனர். பெரிய நம்பிகளும் அதனை ஏற்றுக் கொண்டு தன் மனைவியுடன் இளையாழ்வானைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.
பெரிய நம்பியும் அவரது மனைவியும் மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்றடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஏரிகாத்த பெருமாளின் சந்நிதியில், அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். இளையாழ்வானும் அப்பொழுது மதுராந்தகம் ஏரிகாத்த பெருமாளின் கோவிலுக்கு வந்தடைந்தார், பெரிய நம்பிகளைச் சந்தித்தார். இந்த எதிர்பாராத சந்திப்பினால் பெரிய நம்பிகளும் இளையாழ்வானும் மகிழ்ந்தனர். பெரிய நம்பிகளைச் சந்தித்தது பேரருளாளன் கருணையே என்று மகிழ்ந்த இளையாழ்வான் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
பெரிய நம்பிகளும் இளையாழ்வானை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். பெரிய நம்பிகள், "காஞ்சி பேரருளாளன் சந்நிதி முன்பு 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ளலாம்" என்றார். இளையாழ்வானோ "எனக்கு இவ்ளோ நாள் தவம் செய்து இப்போது தான் குருவாக தாம் கிடைத்திருக்கிறீர். காஞ்சிபுரம் செல்லலாம் என்றால், அதற்குள் என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால் இந்த மதுராந்தகத்திலேயே பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிடலாமே" என்று வேண்ட, பெரியநம்பிகளும் ஏரிகாத்த ராமர் கோவிலிலுள்ள மகிழ மரத்தடிக்கு அழைத்துச் சென்று 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்தார்.
🌺🌺 பஞ்ச சம்ஸ்காரம்
பஞ்சசம்ஸ்காரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள முக்கிய சம்பிரதாயம் ஆகும்.
🍁 சங்கு - சக்கரம்
தீயிலிட்டு நன்கு பழுக்க காய்ச்சிய சங்கினை இடது தோளிலும், சக்கரத்தினை வலது தோளிலும் இடுவார்கள். பெரிய நம்பிகள் இளையாழ்வானின் வலது, இடது தோளில் சக்கரம், சங்கினை இட்டார்.
🌻 திருமண் காப்பிடல்
சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள்பட்டை, வயிறு ஆகிய இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களைக்கூறி ஆச்சாரியர் காப்பிடுவார். பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு திருமண் காப்பிட்டார்.
🌹 தாஸ்யநாமம் சூட்டுதல்
ஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாஸன் என்றும், பெண் அன்பர்களுக்கு இராமானுஜ தாசி என்று பெயரிடுவார்கள். விஷ்ணு பக்தரின் பிறப்புப்பெயர் வாசுதேவன் இருப்பின் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவார்கள். இராமானுஜர் தங்கள் தொடர்புடையவர் என்பதைக் குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியாரால் சூட்டப்படுகிறது.
ஆனால், இளையாழ்வானான இராமானுஜர் அவதரித்து வைஷ்ணவ ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வரை "தாஸன்" "தாசி" என்ற திருநாமத்தை இட்டுக் கொள்வார்கள். "இளையாழ்வான் தாஸன்" என்ற திருநாமத்தை பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு இட்டார்.
🌺 மந்திரதீட்சை அளித்தல்
மூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத் திரயம்) எனும் எட்டெழுத்து மந்திரம், துய மந்திரம் மற்றும் சரம ஸ்லோகம் ஆகிய மந்திரத்தை தீட்சை பெறும் சீடரின் காதுகளில் மட்டும் கேட்கும்படி ஆச்சாரியார் மந்திர தீட்சை அளிப்பார்.
இளையாழ்வானின் காதில் துய மந்திரம், சரம ஸ்லோகம் மந்திரங்களை பெரிய நம்பிகள் கூறினார். எட்டெழுத்து மந்திரம் இளையாழ்வான் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்றார். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.
🍁 யக்ஹம்
திருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம் மற்றும் பிற வைஷ்ணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை ஆச்சாரியன் சீடருக்கு விளக்குவார். இவற்றையெல்லாம் இளையாழ்வானுக்கு பெரியநம்பிகள் எடுத்துக் கூறினார்.
ஆளவந்தாரின் கருணை தம்மூலம் இளையாழ்வானுக்கு பிரகாசித்து அருளுகிறது என்று கூறி, சர்வமந்திரம், த்வய மந்திரம் அனைத்தையும் உபதேசித்தார் பெரிய நம்பிகள்.
மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும், அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார்.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த
அமலனாதி பிரான்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பெரிய நம்பிகள்
அருளிச்செய்த தனியன்
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயானம் மத்யேகவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஸ்சிகாய மநவை முநிவாஹனம் தம்
விளக்கவுரை :
எந்த ஒரு திருப்பாணாழ்வார் திருக்காவேரியின் மத்தியில் திருப்பள்ளி கொண்டிருக்கின்ற
அழகிய மணவாளப் பெருமாளை,
திருவடி தொடங்கி திருமுடி வரைக்கும்
கண்குளிர அனுபவித்த மகிழ்ந்த சிந்தையராய், தமது கண்கள் அப்பெருமாளை தவிர வேறு ஒன்றையும் பார்க்காது என்று திடமாக சொன்னாரோ , அப்படிப்பட்டவரும்,
லோகசாரங்க முனிவரை வாஹனமாக உடையவருமான திருப்பாணாழ்வாரை
சிந்திக்க கடவேன்.
திருமலைநம்பிகள்
அருளிச்செய்த தனியன்
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.
விளக்கவுரை :
லோகசாரங்க முனிவரின் தோளில் ஏறி, தனியே திருவரங்கனின் சந்நிதியிலே புகுந்து, அம்முனிவர் திருவரங்கனை காண்பிக்கவே,
தான் கண்ட திருவரங்கனின்
திருவடித் தாமரைகள்,
நல்ல பீதாம்பரம்,
திரு உந்திக்கமலம், கிடைத்தற்கு அரிய பொன் அரைநாண், பிராட்டி வாழ்கின்ற மார்பு, திருக்கழுத்து, சிவந்த திருவாய், சோர்வில்லாத திருக்கண்கள் இவற்றை பாசுரங்களாக பாடி மகிழும் திருப்பாணாழ்வாருடைய திருவடிகளை துதிக்கப் பெற்றோமே.
மலர்க்கண்ணில் வேறொன்றும்
வையாதான் வாழியே!
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 18
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 18
காஞ்சி தேவப்பெருமாள் சொன்ன வார்த்தைகள்
======
இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க உபாயம் சொல்லவேண்டி வரதராஜரான தேவப்பெருமாளிடம் கேட்டுச் சொல்லும்படி சொல்ல, திருக்கச்சி நம்பிகளும் தேவப்பெருமாளுக்கு பரிவட்டம் வீசச் செல்லும் பொழுது கேட்பதாக உறுதியளித்தார்.
நம்பிகள் வழக்கம்போல காஞ்சி பேரருளாளனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து முடித்தார். முடிந்ததும் உடனே கிளம்பாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட தேவப்பெருமாள் "நீர் இன்னும் கிளம்பலையா? இங்கேயே நிற்கிறீர்? எதுவும் முக்கியமான விசயமா?" என்று தன் திருவாய் மலர்ந்தார். திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வான் தன் சந்தேகத்தைத் தீர்க்கச் சொன்னதைப் பற்றி சொன்னார். "அவருக்கு என்ன சந்தேகம்? எதில் சந்தேகம்?" என்று புரியாதவாறு கேட்டார் மாயக்கண்ணன் தேவப்பெருமாள்.
திருக்கச்சி நம்பிகளும், "இளையாழ்வானிடம் கேட்டால் உங்களுக்குத் தெரியும். தேவரீர் நிச்சயம் தீர்த்து வைப்பீர் என்று சொல்கிறார். நீரோ என்னிடம் என்னவென்று கேட்கிறீர்!" என்றார்.
🌾🌾 உரைத்த ஆறு
காஞ்சி வரதராஜப் பெருமாள் உரைத்த ஆறு விசயங்கள் புகழ் பெற்றவை. திருக்கச்சி நம்பியிடம் இராமானுஜர் கீழ்க்காணும் நான்கு கேள்விகளைத் தம் பொருட்டுக் கேட்டார்.
1. உபாயங்களில் எது நல்லது?
2. மோட்சம் அடைவதற்கு முன் அந்திமஸ்ருதி வேண்டுவது எப்போது?
3. எந்த ஜென்மத்தில் மோட்சமடைவது?
4. எந்த ஆச்சார்யரை நான் ஏற்றுக் கொள்வது?
இக்கேள்விகளை இராமானுஜர் கேட்பதாக திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளான வரதரிடம் கேட்க அவர் 6 வார்த்தைகளில் பதில் கூறுகிறார்.
1. அஹம் மேவபரம்தத்வம்
2. தர்சனம் பேத ஏவச
3. உபாயேஷ் பேத ஏவச
4. அந்திமஸ்மருதி வர்ஜனம்
5. தேக வஸானே முக்தில் ஸ்யாத
6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய
🥀🥀 அதன் விளக்கமானது:
👉 அஹம் மேவபரம்தத்வம்
"நானே பரம்பொருள்!"
ஸ்ரீமந் நாராயணனான நானே உலகிற்கும், உலக காரணிகட்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள் என்பதாகும். முடிவான உண்மை நானே.
👉 தர்சனம் பேத ஏவச
"ஜீவாத்மா, பரமாத்மா (ஜீவன்-ஈஸ்வரன்) இரண்டும் வெவ்வேறானவை"
(ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை. அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை). நாம் எல்லாம் ஜீவாத்மா. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ஒருவரே பரமாத்மா.
👉 உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்
"என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.
பகவானை அடைய (மோட்சம் அடைய) சரணாகதியே சிறந்தவழி. அதைத்தான் ப்ரபத்தியே உபாயம் என்பார்கள். எம்பெருமானிடம் நாம் "பூரண சரணாகதி" அடைந்தாலே போதும்.
👉 அந்திமஸ்மருதி வர்ஜனம்
மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, "உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன்." (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆச்சார்யாரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்).
ஒரு மனிதனின் அந்திமகாலத்தில் பெருமாளை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை. இந்த ஜீவனானது சரீரத்தில் இருக்கும் இளமைக் காலங்களில் எம்பெருமானைத் துதித்தால் போதும். ஆகையால் அந்திமக் காலத்தைப் பற்றி நினைக்காமல், நம்முடைய கடமையைச் செய்தும், இறைவனுக்குத் தொண்டு செய்யலாம்.
👉 தேக வஸானே முக்தில் ஸ்யாத
சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்.
"என்னை உபாயமாகக் கொண்ட இத்தகைய பக்தருக்கு இந்த உடல் கழிந்தவாறே (இப்பிறவி முடிந்ததும்) மோட்சத்தை நானே அருளுகிறேன்."
இறுதிக் காலத்தில் நாம் பகவானை நினைக்காமல் விட்டாலும் பகவான் நம்மைத் தேடி வந்து நமக்கு "மோட்ச சாம்ராஜ்ஜியமான சரீர விடுதலை" அளிக்கிறார்.
👉 பூர்ணசச்யார்ய ஸமாச்ரய
"நற்குண பண்டிதராய் இருக்கும் மகா பூர்ணரான பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்வாயாக."
🍁🍁 திருக்கச்சி நம்பிகளின் மகிழ்ச்சி
இவ்வாறு ஆறு வார்த்தைகள் கேட்ட திருக்கச்சி நம்பிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
"இளையாழ்வானோ ஆதிசேனின் அவதாரம், அவரோ உம்மிடம் கேட்காமல் என்னிடம் கேட்கிறார். நீரோ அவருக்கு எதையும் உணர்த்தாமல், என் மூலம் இளையாழ்வானின் சந்தேகங்களுக்கு விடையளித்து, கட்டளையிடுகிறீர். உங்கள் இருவருக்கும் இடையில் நானா? நான் பாக்கியம் பெற்றிருக்கிறேன்" என்று அருளாளப்பெருமாளிடம் கூறினார்.
நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார். இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக நன்றி தெரிவித்தார்.
அதே சமயம், இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை குருவாக ஏற்பது தன்னுடைய விருப்பமும் கூட என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
*வந்தாரை வாழ்விக்கும் பேரருளாளர்*
ஆளவந்தாரின் சீடரான திருமலையாண்டானிடம் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியையும், திருவரங்கப் பெருமாள் அரையரிடத்தே ஏனைய மூவாயிரம் பாடல்களையும், ராமானுஜர் கற்றார். பின், யஜ்ஞமூர்த்தி எனும் அத்வைத வித்வான் கங்கைக்கரையில் உள்ள பண்டிதர்களை எல்லாம் வென்று திருவரங்கத்தில் வந்து ராமானுஜரோடு வாதிட்டார். வாதப்போர் பதினேழு நாட்கள் ஆகியும் தொடர்ந்தது. கவலையுற்ற ராமானுஜரின் கனவில் காஞ்சி தேவப்பெருமாள் தோன்றி வேதாந்தத்தின் கருத்தான வசிஷ்டாத்வைதத்தின் ஆழ்பொருளை உணர்த்தினார். அடுத்த நாள் அக்கருத்துகளைக் கேட்ட யஜ்ஞமூர்த்தி மனம் மாறினார். ராமானுஜர் திருவடிகளைப் பற்றினார். அவரையணைத்த உடையவர், ஸ்ரீவைஷ்ணவ மரபுப்படி பஞ்சஸம்ஸ்காரம் செய்து தன் பெயரையும் தேவப்பெருமாள் திருநாமத்தையும் சேர்த்து " அருளாளப் பெருமாள் எம்பெருமானார் " என்று பெயர் சூட்டினார். அன்று முதல் தன் பூசைக்குரிய பெருமாளையே அவரிடம் ஒப்படைத்து திரு ஆராதனம் செய்து வரச் சொன்னார். வந்தாரை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் பேரருளை நினைத்து சீடர்கள் போற்றினர்.
"
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?..."
தேவராஜ! தயாஸிந்தோ! தேவதேவ ஜகத்பதே!
"ஹஸ்து ஸ்ரீஸ்தந கஸ்தூரீ
வாஸநாவாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்"
-காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் திருவடிகளே சரணம்
*ஸ்ரீ உடையவர் திருவடிகளே சரணம்.*
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 17
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 17
வாழியெதிராசன் வாழியெதிராசன்
திருக்கச்சி நம்பிகளைச் சந்தித்தல்
யாதவப் பிரகாசரிடம் அத்வைதம் கற்றுக் கொண்டிருக்கும் போதே, இளையாழ்வானின் அன்னை காந்திமதியும் இறைவனடி அடைந்துவிட்டார். அதன் பின் திருக்கச்சி நம்பிகளிடம் சிஷ்யராகக் கேட்க அவரும் மறுத்து விட்டார்.
ஆளவந்தாரையாவது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் ஸ்ரீ வைஷ்ணவ காலட்சேபம் பண்ணலாம் என்றால் அதுவும் முடியவில்லை. மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும், காஞ்சிபுரம் வந்தடைந்தபின் பேரருளானனுக்கு சாலக்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கைங்கரியம் செய்தார்.
அப்போது திருக்கச்சி நம்பிகளை வழக்கம் போலச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரைப் பற்றி விசாரித்தார். இளையாழ்வானும் தான் திருவரங்கம் சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும் சொன்னார்.
திருக்கச்சி நம்பிகளும் ஆளவந்தார் இறைவனடி அடைந்ததை நினைத்து வருத்த மடைந்தார். நம்பிகளுடைய குரு அல்லவா ஆளவந்தார்? திருக்கச்சி நம்பிகளும் சில மணி நேரம் கழித்து மன சாந்தியடைந்தார்.
இளையாழ்வான் ஆளவந்தாரின் மூன்று ஆசைகள் நிறைவேறாததை அங்கிருந்தோர்களிடம் இருந்து தெரிந்து கொண்டதாகவும், அந்த மூன்று ஆசைகளை தான் நிறைவேற்றுவதாக சபதம் சொன்னதையும், அப்போது மடங்கிய மூன்று விரல்களும் நிமிர்ந்தன என்பதையும் சொன்னார்.
🌺🌾 வசிஷ்டாத்வைதம்
பிரம்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் எழுத வேண்டும் என்றால், அதற்குத் தம்மை முதலில் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இளையாழ்வானின் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. ஆதிசங்கரருடைய அத்வைதத்துடன் மாறுபட வேண்டும் என்றால், அதற்கு முதலில் தம்மைச் சிறந்த முறையில் தயார் செய்ய வேண்டும்.
அப்படித் தயார் செய்தால்தான், அவருக்கு இணையான ஞானத்தைப் பெற முடியும். இதனால், இளையாழ்வான் வசிஷ்டாத்வைத வியாக்யானம் எழுதுவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
திருக்கச்சி நம்பிகளிடம் அதைப்பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார். நம்பிகளும் "தொடர்ந்து கைங்கரியம் செய்து கொண்டிரு, இளையாழ்வா! தக்க காலம் வரும் வரை காத்திரு" என்றார். இளையாழ்வானும் "காத்திருக்கிறேன்" என்று கூறினார்.
ஆனால், இளையாழ்வானுக்கு ஆளவந்தார் இறுதி சடங்கில் சபதம் செய்த நினைவு வந்து கொண்டே இருக்கவே, 'தன்னால் இந்த மூன்றையும் நிறைவேற்ற முடியுமா? யாரை குருவாக ஏற்றுக் கொண்டால் இது நிறைவேறும்?' என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
சில தினங்களில் திருக்கச்சி நம்பிகளிடமே தம்முடைய குழப்பத்தைச் சொல்லி, அவர் காஞ்சி பேரருளாளனிடம் கேட்டு தன்னுடைய குழப்பத்திற்குத் தீர்வு சொல்லும்படி கேட்குமாறு வேண்டினார். நம்பி அதற்கு ஒப்புக்கொண்டார். இளையாழ்வானும் மகிழ்ச்சி அடைந்தார்.
நாளை காஞ்சி பேரருளாளன் தன் திருவாய் மலர்ந்து இளையாழ்வானின் சங்கடத்தைத் தீர்த்து வைத்தாரா என்பதைப் பற்றி அறியலாம்.
இன்னும் அனுபவிப்போம்...
மாசி மிருகசீரிடம்-
ஶ்ரீதிருக்கச்சி நம்பிகள்
திருஅவதார திருநட்சித்திரம்.
ஸ்வாமிகளின் தனியன்:
"தேவராஜ தயாபாத்ரம் ஶ்ரீ காஞ்சிபூரணம் உத்தம ம்,
ராமானுஜ முநேர் மாந்யம்
வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்"
"தேவப் பெருமாளுடைய திருவருளுக்குக் கொள்கலமானவரும்,
ஶ்ரீ காஞ்சிபூரணர் என்னும் மிகச் சிறந்தவரும்,ராமானுஜருக்குப் பூஜ்யரும்,சத்வகுணமுடையவர்களுக்கு
ஆச்ரயபூதருமானவரைத் தொழுகிறேன்"
பொதுவாகத் தனியனில் போற்றப்படும் ஸ்வாமிகளின், ஆச்சார்யரைப் பற்றிய குறிப்பு இருக்கும்.ஆனால் நம்பிகளின் தனியனில் அவரது அற்புதச் சீடர் ராமானுஜரைப் பற்றிப் பாடியிருப்பதே
ராமானுஜருக்கும்,இவருக்கும் உள்ள தெய்வீக உறவைக் காட்டுகிறது
(தனியனை இயற்றியதும் இராமானுசப்பிள்ளை என்னும் பெயருடைய ஒருவர்)
திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாருக்குப் பல வகையிலும் புருஷகாரம் செய்து அவரை அகிலம் போற்றும் இராமானுஜர் ஆக்கினார்.
அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1.ஐகதாசார்யாருக்கு,முதல் ஆசார்யர்
ராமானுஜர் யாதவப்பிரகாசர் குருகுலத்தில் பயிலும் போதே,அவருக்கு இருந்த ஐயங்களுக்கு நம்பிகளிடம் விளக்கம் கேட்பார்.ஒரு கட்டத்தில் யாதவப்பிரகாசரின் போக்கை ஒத்துக்கொள்ளாத ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளையே ஆசார்யராக வரித்து தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்
உயர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த
ராமானுஜருக்கு,வைசிய குலத்தில் பிறந்த தாம் ஆசார்யராக முடியாது என்று மறுத்து விட்டார்.ஆயினும் தம் முயற்சியை விடாத ராமானுஜர்,அவர் பிரசாதப்பட்ட தளிகையின் சேஷத்தை(மிச்சத்தை)த் தாம் உண்டு அவரிடம் சீடராகிவிடலாம்(ஆசார்ய சேஷப்பிரசாதம் சீடர்களுக்கு மஹாபிரசாதம்) என விழைந்தார்.
நம்பிகளை தம் திருமாளிகைக்கு எழுந்தருளுமாறு வேண்டினார்.
அவ்வாறே அவர் ராமானுஜர் திருமாளிகைக்கு வந்து
பிரசாதப்பட்டார்.ஆனால் ராமானுஜர் அவர் சேஷத்தை உண்பதற்குள் அவர் துணைவியார் தஞ்சமாம்பாள்,நம்பிகள் பிரசாதப்பட்ட மிச்சத்தைத் வெளியே எறிந்துவிட்டு,அவர் அமர்ந்து உண்ட இடத்தையும் கழுவித் துடைத்துவிட்டார்(அந்தக்கால வைதீக க்குடும்பங்களில் இருந்த வழக்கப்படி).ஆனால் எப்படியும் நம்பிகளையே தம் (முதல்)ஆசார்யராக
மனதளவில் வரித்துவிட்டார்.
2.ஞானசீலர் ராமானுஜரை கைங்கர்ய சீலராக்கிய கஜேந்திரதாசர்
(நம்பிகளின் இயற்பெயர்)
ஶ்ரீ வைஷ்ணவத்தின் மேலான சிறப்பே
ஞானம்/பக்தி/அனுஷ்டானம் எல்லாவற்றையும் விட கைங்கர்யத்துக்கு(பகவத்/ஆசார்ய/பாகவத) உள்ள ஏற்றம் தான்.சிறந்த
ஞானவானான ராமானுஜரை தேவப்பெருமாளுக்கு தீர்த்தக்கைங்கர்யம் செய்யும் பணியில்
ஈடுபடுத்தினார் நம்பிகள்.
கோவிலிலிருந்து இரண்டு மைல்
தொலைவில் உள்ள சாலைக்கிணற்றிலிருந்து,தினமும்
பெரியகுடத்தில் ராமானுஜர் தீர்த்தம்
கொண்டு வந்தார்.மேலும்
ராமானுஜருக்கு பூமாலை/ந ந்தவனக் கைங்கர்யங்களைச் செய்யத் தூண்டியதும்,நம்பிகள் தேவப்பெருமாளுக்கு செய்த பூமாலைக் கைங்கர்யமே.ராமானுஜர்
திருவாய்மொழி வியாக்யானம் செய்தபோது 'சிந்துபூமகிழும் திருவேங்கடத்து'என்னுமிடத்தில் நிறுத்தியவர் ,அனந்தாழ்வானை,தம் சீடர்களுள் 'ஆண்பிள்ளை' என்று போற்றி ,திருவேங்கடத்துக்கு பூமாலைக் கைங்கர்யம் செய்ய அனுப்பினார் என்பது வரலாறு.ஆனால் இதற்கு ஆதாரமாக இருந்த து,திருக்கச்சி நம்பிகளின் பூமாலைக் கைங்கர்யமே.
3.கலங்கி நின்ற ராமானுஜருக்கு,
வரதராஜரிடம் 'ஆறு வார்த்தைகள்'
பெற்று கலக்கம் போக்கிய 'பார்க்கவ
பிரியர்'(நம்பிகளின் தந்தையார்,
திருமழிசை ஆழ்வார் மீது வைத்திருந்த
பக்தியால் இந்தப் பெயராலும் அழைத்தார்):
ராமானுஜருக்கு நம்பிகள் செய்த
ஈடு,இணையற்ற புருஷகாரம் இதுவே.
ராமானுஜருக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு,தேவப்பெருமாளிடம் இருந்து ஆறு விடைகளைப் பெற்று
அவரிடம் உரைத்தார் நம்பிகள்:
1.அஹம் ஏவ பர த த்வம்(நானே பரமாத்மா)
2.தர்சனம் பேத ஏவ சா(சித்,அசித்,ஈஸ்வரன் மூன்றுக்கும் இடையே பேதமுள்ளதே நம் மதம்-விசிஷ்டாத்வைதம்)
3.உபாயேதி பிரபத்திஸ்யாத்(என்னை அடைவதற்கு சரணாகதியே உபாயம்)
4.அந்திம ஸ்மிருதி வர்ஜனம்(என்னைச் சரண டைந்தோர்,இறக்கும் தருவாயில் என்னை நினைக்காவிட்டாலும் அவர்களுக்கு மோட்சமுண்டு).
5.தேஹ வாஸநே முக்திஸ்யாத்(இந்தப் பிறவியின் இறுதியிலேயே,உயிர்,
உடலைப் பிரிந்தவுடன் மோட்சம்)
6.பூர்ணாசார்ய ஸமாஸ்ரயே
(மஹாபூரணர் என்னும்
பெரிய நம்பிகளை ஆசார்யராக ஏற்றுக்கொள்)
4.ஆளவந்தாருக்கு 'ஆம் முதல்வனை'
க்காட்டிய காஞ்சீபூரணர்
நம்மாழ்வார்,நாதமுனிகளுக்குக் காட்டிய ,நாதமுனிகள் (உய்யக்கொண்டார்,மணக்கால் நம்பி மூலம்) ,ஆளவந்தாருக்குக் காட்டிய பவிஷ்யத ஆசார்யரைக் காணத் தவம் இருந்தார் ஆளவந்தார்.அவர் காஞ்சிக்கு எழுந்தருளிய போது,சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த இளையாழ்வாரைக் காட்டினார் காஞ்சிபூரணர்.இளையாழ்வாரின் பொருந்திய தேசைக் கண்ட ஆளவந்தார்"ஆம்,முதல்வன்"(இவரே சம்பிரதாயத் தலைவர்) என்று கொண்டாடினார்.
5.இளையாழ்வாரை ராமானுஜர்/எதிராசர் ஆக்கிய பேர ருளாள தாசர்(
பேர ருளாளர் வரதர் மேலிருந்த பக்தியினால் ,ஆசார்யர் ஆளவந்தார் சூட்டிய திருநாம ம்)
குறிப்பு 1 ல் கூறியது போல்,நம்பிகளின் சேஷத்தை ஏற்க விடாமல் செய்த தம் துணைவியார் மீதும்/இல்லற வாழ்க்கை மீதும் விரக்தியில் இருந்தார் இளையாழ்வார்.விரைவில்
மேலும் இரண்டு நிகழ்வுகளிலும் தஞ்சமாம்பாள்,இளையாழ்வார் எண்ணப்படி நடந்து கொள்ளாத தால்,இளையாழ்வார் சந்யாசம் பூணத்துணிந்தார்.தேவப்பெருமாள்
திருவடிகளில் வணங்கி,கோவில்
அமிர்தசரஸ் புஷ்கரணியில் தீர்த்தமாடி
காவி வஸ்திரம் தரித்து,திரிதண்டம் ஏந்தி உதய ஞாயிறாக ஒளிர்ந்தார்.
அப்பொழுது அங்கு வந்த நம்பிகள்
தேவப்பெருமாள் அருளிய 'எதிராசரே'
'ராமானுஜரே' என்னும் திருநாமங்களிட்டு அழைத்தார்
6.அதியற்புத சீடர்,கூரத்தாழ்வானை ராமானுஜர் திருவடிகளில் சேர்த்த காஞ்சீமுனி(காஞ்சியில் முனிவர் போல் தவ வாழ்வில் இருந்தார்)
காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள கூரம் கிராமத்தில் திருமறுமார்பன் என்னும் சிற்றரசரும்,சிறந்த ஶ்ரீவைஷ்ணவரும் ஆன கூரேசர் திருமாலுக்கும் திருமால் அடியார்களுக்கும் பல கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.அவருடைய திருமாளிகையில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில்
இருந்து நடு இரவு வரை அடியார்களுக்குத் த தீயாராதனை
(உபசரிப்பு) நடந்து கொண்டே இருக்கும்.ஒரு நாள் ,காஞ்சியில் கோவில் கதவுகளை மூடியபின்,
இரவில் கூரத்தில் கூரேசரின் திருமாளிகைக் கதவுகள் மூடும் ஒலி தேவப் பெருமாளுக்கும்,
பெருந் தேவித் தாயாருக்கும் கேட்டது.தாயார்,பெருமாளிடம் 'இது என்ன?நம் கோவில் கதவுகளின் ஒலியைவிடப் பெரிய ஒலியாக உள்ளதே;இவ்வளவு பெரிய திருமாளிகையுடைய செல்வந்தர் யார்?'என்று கேட்க,பெருமாள் கூரேசரின் பெருமைகளைத் தாயாரிடம் கூறினார்.
ஆலவட்டம்(விசிறி) கைங்கர்யம் செய்து கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகள் இதைச் செவியுற்றார்.மறுநாள் கூரேசரிடம்
பெருமாளும்,தாயாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசியதைச் சொன்னார்.இதைக் கேட்ட கூரேசர்
திவ்யதம்பதிகள் பேசும் அளவுக்கு தம் செல்வம் பெரிதா என்று
பதைபதைத்தார்.உடனே
அனைத்தையும் துறந்துவிட்டு,
உடுத்திய ஆடையுடன்,தம் துணைவியார் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு ராமானுஜர் திருவடிகளில் வந்து தஞ்சமடைந்து விட்டார்.கூரேசர் முக்குறும்பு அறுத்து,
சிறந்த சீடருக்கு இலக்கணமாகத் திகழ்ந்து கூரத்தாழ்வானாக உயர்ந்த தற்கு,மூலகாரணம் தேவப்பெருமாள் நம்பிகளை விட்டுப் பேச ச்ச்செய்த தாகும்.
படங்கள்:
1.அவதார ஸ்தலமான பூவிருந்தவல்லியில் கோவிலும்,
நம்பிகளும்.
2.&3.காஞ்சீபுரத்தில் நம்பிகள் சந்நிதி.வரதராஜப் பெருமாள் கோவிலில் நம்பிகள்.
4.ஆறு வார்த்தை பெற்றவரும்,
பெற்றுக்கொடுத்தவரும்,
சொன்னவரும்.
5,6,:ஶ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள்
உய்ய ஒரேவழி உடையவர் திருவடி💐🙏
அருந்ததி நட்சத்திரம்
அருந்ததி நட்சத்திரம்...
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பில் சிறந்தவள். அவளது கற்புத்திறனை உலகத்திற்கே தெரிய வைக்க வேண்டும் என்ற ஆவலுடன், இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் பூலோகம் வந்தனர்.
அருந்ததி தண்ணீர் எடுப்பதற்காக, இடுப்பில் குடத்துடன் நின்று கொண்டிருந்தாள். வசிஷ்டர் அப்போது ஆஸ்ரமத்தில் இல்லை.
இந்திரன் அவளிடம் ""அருந்ததியே! உன் புகழ் தேவலோகத்தையே எட்டி விட்டது. எனவே உன்னைப் பார்க்க வந்துள்ளோம்,'' என்றான்.
""நான் தண்ணீர் எடுத்து வரும் வரை ஆஸ்ரமத்தில் காத்திருங்கள். வந்து விடுகிறேன்,'' என்று சொல்லி புறப்பட்டாள்.
"ஆற்றுக்கு செல்ல வேண்டாம். தானாகவே தண்ணீர் குடத்தில் நிரம்பட்டும்,'' என்று சொல்லி சூரியன் கையைக் காட்ட, குடத்தில் கால்பங்கு நிரம்பியது.
இந்திரன் தன் பங்குக்கு கால் பங்கு தண்ணீரை நிரப்ப, அரைகுடம் ஆனது. அக்னியால் முக்கால்பங்கை எட்டியது. அதன் பின் மூவரும் எவ்வளவோ முயற்சித்தும் குடம் முழுமை அடையவில்லை.
அருந்ததி அவர்களிடம்,
"" தேவர்களின் தெய்வீக சக்தியை விட, கற்பின் சக்தி மகத்தானது '' என்று சொல்லி முழுக்குடமும் நிரம்பட்டும் என்றாள். அது நிறைகுடம் ஆனது. கற்புக்கரசியான அவளே நட்சத்திர அந்தஸ்து பெற்று வானில் மின்னிக் கொண்டிருக்கிறாள். திருமண நாளன்று மணமக்கள் அருந்ததியை வணங்குகின்றனர்...
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 16
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 16
இளையாழ்வானை திருவரங்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்
பெரிய நம்பியிடம் இளையாழ்வான் ஆளவந்தார் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
"இந்தத் தெய்வத் திருமனிதரைக் காணும் நாள் எந்நாளோ?" என்றார் இளையாழ்வான். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரைக் காண விருப்பம் இருந்தால் உடனே புறப்பட்டு வரும்படியும் கூறினார் பெரிய நம்பி.
இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பெரிய நம்பிகளுடன் திருவரங்கத்திற்குச் சென்றார்.
திருவரங்கத்து எல்லையை அடைந்தவுடன், கொள்ளிடம் ஆற்றின் அருகே கூட்டம் கூட்டமாக சீடர்கள், மக்கள் திரண்டிருந்தனர். அங்கு பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சந்தித்துப் பேசுவதை அறிந்த இவர்கள் "என்ன என்று விசாரிக்கலாம்" என்று, பெரிய நம்பி விசாரித்தார். அவர்கள் கூறிய செய்தி பேரிடியாக இருந்தது.
ஆளவந்தார் இறைவனடி அடைந்து விட்டார். "விதி நம்மை வஞ்சித்து விட்டது" என்று புலம்பினார் இளையாழ்வான். ஆளவந்தாருக்குச் செய்யும் சம்பிரதாய சடங்குகளைச் சீடர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
🌺🌹 மடங்கிய மூன்று விரல்கள்
காஞ்சியிலிருந்து வந்த இளையாழ்வானுக்கு ஆளவந்தாரின் திருமேனி தரிசனம் மட்டுமே கிடைத்தது. ஆளவந்தாரின் வலக்கையில் மூன்று விரல்கள் முடங்கியிருந்ததை இளையாழ்வான் கண்டார். அப்போது அருகில் உள்ள சீடர்கள்களிடம் விசாரித்தார். ஒருவருக்கும் அதுபற்றிய சரியான காரணம் கூற இயலவில்லை.
"ஆளவந்தாருக்கு ஏதேனும் மனக்குறை உண்டோ?" என்று கேட்டார் இளையாழ்வான். அப்போது ஒரு சிஷ்யன் கூறினார்:
1. வியாச சூத்திரத்திற்கு வசிஷ்டாத்வைத வியாக்யானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அது முடியாமல் போய்விட்டது.
2. பராசருடைய திருநாமமும், திருவாய்மொழியை அருளிச் செய்த நம்மாழ்வாருடைய திருநாமமும் விளங்கும்படியாக, அப்பெயர்களை இரண்டு பிள்ளைகளுக்குச் சாத்த வேண்டும்.
3. அவர்களுடைய கல்வி அறிவுக்கான நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்க விரும்பினார்.
"இம்மூன்றும் நடைபெறாமலே போய்விட்டது" என்றார் அந்த சீடன்.
இதைக்கேட்ட இளையாழ்வான், ஆளவந்தாரை வணங்கினார். அவரது மனதில் ஓர் உறுதி ஏற்பட்டது. அந்த மன உறுதியுடன், "இறைவன் திருவருள் எனக்குக் கிடைக்குமானால் இம்மூன்றையும் நான் நிறைவேற்றுவேன்!" என்றார். உடனே, ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் நிமிர்ந்தன. இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
அருகிலிருந்த அனைவருக்கும் இளையாழ்வான் இதைச் செய்து முடிக்கக் கூடியவர் என்று தான் தோன்றியது. ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ இயக்கத்தைத் தலைமை ஏற்கும் தகுதி உடையவர் இளையாழ்வானே என்று அங்குள்ள பெரியோர்கள் கருதினார்கள்.
ஆளவந்தாரின் சாமக் கிரியைகள் நடைபெற்றது. இளையாழ்வான் மிகுந்த வருத்தம் கொண்டிருந்தார். 'தனக்கு குருவும் சரியாக அமையவில்லை. இனியாவது இவரை குருவாக பற்றிக் கொள்ளலாம் என்று பார்த்தால், இவரின் திருமேனி தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைத்தது' என்று நொந்து கொண்டார்.
'எனக்குக் குருவாக ஆளவந்தாரைக் கொடுக்காத இந்த திருவரங்கத்துப் பெருமாளை இப்போது தரிசிப்பதில்லை. அவர் நினைத்திருந்தால் குருவிடம் சிஷ்யனாக இருக்கும் பாக்கியத்தைக் கொடுத்திருப்பார் அல்லவா? எனக்குக் குரு தரிசனம் கொடுக்காத, திருவரங்கத்து பெரிய பெருமாளைத் தரிசிக்கப் போவதில்லை' என்று சொல்லிக்கொண்டு, காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார்.
நாம் சாதாரணமாகவே திருவரங்கத்திற்குச் செல்ல நேரிட்டால், நிச்சயம் அரங்கனைத் தரிசித்துவிட்டு வருவோம். இல்லையெனில் கோபுரத்தைப் பார்த்தாவது தரிசித்துவிட்டு வருவோம்.
ஆனால், வைஷ்ணவர்களுக்கு குரு இல்லையேல் பெருமாளே இல்லை. குருவின் தரிசனம் கிடைத்தால்தான் அரங்கனைத் தரிசிப்பார்கள். குரு அவ்வளவு உயர்ந்தவர்கள். இப்போது, இளையாழ்வானும் குரு தரிசனம் கிடைக்காததால் காஞ்சிபுரத்தில் இருந்து, திருவரங்கத்திற்கு இவ்வளவு தூரம் நடந்து வந்தும், அரங்கநாதனை தரிசிக்கவில்லை என்றால், குருவின் தரிசனம் எவ்வளவு அவசியமானது?!
கே.13:− இளையாழ்வார் என்னும் இராமானுஜரின் உடன் பிறந்தோர் எத்தனைப் பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?.
விடை:− இராமானுஜருக்கு இரண்டு இளைய சகோதரிகள் இருந்தார்கள்.
அவர்களது பெயர் பூமிநாச்சியார், கமலாம்பாள் என்பதாகும்.
கே.14:− இராமானுஜரின் சிற்றன்னையாகிய பெரிய பிராட்டியின் முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டியது யார்? என்ன பெயர் சூட்டினார்?
விடை:− பெரியபிராட்டியின் முதல் குழந்தைக்கு, "கோவிந்தன்" என்ற திருநாமத்தை, தாய்மாமன் ஆகிய பெரிய திருமலை நம்பிகளே சூட்டியருளினார்.
கே.15:− குழந்தைக்கு அந்தப் பெயரிடக் காரணம் என்ன?
விடை:− சத் ஆத்ம குணங்களை உடைய அக்குழந்தை, சர்வ வித்தைகளிலும் தேர்ந்தவனாய், வைதிக பட்சத்தில் நிலை நிற்பான் என்கிற தீர்க்க த்ருஷ்டியால், இப்பெயர் இடப்பட்டது.
கே.16:− குழந்தை "கோவிந்தன்" யாருடைய அம்சம்? அவர் எப்போது அவதரித்தார்?
விடை:− குழந்தை "கோவிந்தன்" கருடனின் அம்சமாகும்.
அவர் இராமானுஜர் அவதரித்து எட்டு,ஆண்டுகளுக்குப் பின்னர், கலியுகம் 4127, குரோதன ஆண்டு (1025ம் ஆண்டு), தைத்திங்கள், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.
கே.17:− இராமானுஜரின் சிற்றன்னையின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன? அவரது திருநட்சத்திரம் என்ன?
விடை:− இரண்டாவது குழந்தையின் பெயர் சிறிய கோவிந்தன் என்னும் சிறிய கோவிந்தப் பெருமாள் ஆகும்.
அவர் மாசிமாதம் அச்வினி நட்சத்திரத்தில் அவதரித்தார்
கே.18:− இளையாழ்வார் இராமானுஜர் இளமையில் யாரிடம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றார்? எந்த வயது வரை?
விடை:− இராமானுஜர், தமது தந்தை கேசவ சோமாயாஜியிடம், தமது பதினைந்தாவது வயது வரையிலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.
கே.19:− இராமானுஜரின் கைங்கர்யங்களால் ப்ரீதி அடைந்த ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், இராமானுஜருக்கு இட்ட திருநாமம் என்ன?
விடை:− "ஶ்ரீபூதபுரீசர்"
கே.20:− இராமானுஜரின் தங்கைகள் யாருக்கு வாழ்க்கைப் பட்டனர்?
விடை:− முதல் தங்கை பூமிநாச்சியார், புருஷமங்கலம் என்று கொண்டாடப்படுகின்ற மதுரமங்கலம் வாதூல கோத்ரம் அனந்த தீட்சிதருக்கும்,
இரண்டாவது தங்கை கமலாம்பாள், திருக்கச்சி நடாதூர் அக்ரஹாரம் ஶ்ரீவத்ஸ கோத்ரம், குருகைக் காவலப்பரின் திருக்குமாரர் மஹாதயாதீசருக்கும் வாழ்க்கைப்பட்டனர்.
கே.21:− இளையாழ்வார் இராமானுஜருக்கு எந்த வயதில் திருமணமானது?
விடை:− இராமானுஜருக்கு, அவரது 16வது வயதில், தஞ்சாம்பாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.
கே.22:− இராமானுஜரின் திருத்தகப்பனார் எப்போது திருநாடு அலங்கரித்தார்? (பரமபதித்தார்?)
விடை:− இராமானுஜருக்குத் திருமணமான மறுமாதமே, அவரது திருத்தகப்பனார் பரமபதித்தார்.
கே.23:− திருத்தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றிய இரு நம்பிகள் யார்?
விடை:− பெரிய திருமலை நம்பிகளும், திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றினர்.
கே.24:− தந்தை மறைந்த சோகத்திலிருந்து விடுபட, இராமானுஜரும், அவரது தாயாரும் செய்தது என்ன?
விடை:− ஶ்ரீபெரும்புதூரை விட்டு, திருக்கச்சி என்னும் காஞ்சீபுரம் வந்து குடியேறினார்கள்.
கே.25:− இராமானுஜர் யாரிடம் தமது வேதாந்தக் கல்வியைத் தொடர்ந்தார்?
விடை:− "வேத விருட்சம்" "வேத சாகரம்" என்றெல்லாம் தொண்டை மண்டலத்திலும், அண்டை மண்டலங்களிலும் புகழ் பெற்றவரான, காஞ்சிக்கு மேற்கே சுமார்
9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புட்குழியின் "யாதவப்ரகாசர்" என்னும் அத்வைத வேதாந்தியிடம், தமது கல்வியை இராமானுஜர் தொடர்ந்தார்.
கே.26:− இராமானுஜர் கூடவே தங்கியிருந்து, உடன்சென்று, யாதவப்ரகாசரிடம், வேதாந்தக் கல்வியைப் பயின்றவர் யார்?.
விடை:− இராமானுஜரின் சிற்றன்னையின் முதல் புதல்வரான கோவிந்தன்.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
இளையாழ்வார் அத்வைத சந்நியாசியான யாதவப்பிரகாசரிடம் பாடம் கற்றபோது உலகில் பேதம் கிடையாது. பரமாத்மா மட்டுமே உண்மை. மற்றவை பொய் என்று அத்வைத சித்தாந்தத்தை போதித்தார். இந்த அத்வைத விளக்கத்தில் இளையாழ்வார் திருப்தி அடையவில்லை. அந்த விளக்கங்களில் எழும் கேள்விகளுக்குப் பதில்களையே தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலம் தந்தருளினார்.
சித்தாகிய ஜீவாத்மா ஈச்வரனாகிய பரமாத்மாவில் இருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க இவ்விரண்டாவது வார்த்தையை அருளினார் பேரருளாளன். அதோடு ஜடப்பொருட்களான அசித் மற்றும் சித்தாகிய ஜீவாத்மாவுடன் கூடிய (விசிஷ்ட) பரமாத்மாவே முழுமையான உண்மை. அதாவது விசிஷ்டாத்வைதமே பூர்ணமான மதம் என்பதை தேவப்பெருமாளே ஸ்தாபித்து கொடுத்தார்.
இதை நம் பூர்வாச்சாரியர்கள் பல வழிகளில் விளக்கியுள்ளார்கள். ஒரு எடுத்துகாட்டை பார்ப்போம். அத்வைதத்தில் கயிறு பாம்பாகத் தோன்றுவதாகச் சொல்லப்படும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
_கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல ப்ரம்ஹம் மட்டுமே உள்ளது, அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம்._
அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? ப்ரம்ஹத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக் கொள்கை.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி ராமானுஜரின் 72 கட்டளைகள்!
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி ராமானுஜரின் 72 கட்டளைகள்!
1. ஆச்சார்யர் திருவடி பணிந்து போவது போல் அனைத்து வைஷ்ணவர்களிடமும் நடக்க வேண்டும்.
2. ஸம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில் நம்பிக்கை வேணும்.
3. புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும்.
4. மதச்சார்பற்ற ஞானம், அறிவுடன், போதும் என்று இராமல் இருக்க வேண்டும்.
5 . பகவத் சரித்ரங்கள் சேஷிடிதங்கள் வாக்யங்களில் உகந்த ஈடுபாடுடன் இருக்க வேண்டும்.
6. ஆச்சார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு . மீண்டும் புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும்.
7. அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.
8. சந்தனம்,மலர்,நறுமணம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்க கூடாது.
9. கைங்கர்யபரர் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது,எம்பெருமானின் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது அடையும் இன்பம் அடைய வேண்டும்.
10. அடியார் அடியானே, அவனை அவன் அடியானை விட சீக்கிரம் அடைகிறான், என்பதில் உறுதி கொள்ள வேண்டும்.
11. ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ இன்றி அழிவான்.
12. வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும் உபாயம் என்று கருத கூடாது.
13. அவன் ஒருவனே அடையும் குறிக்கோள்.
14. கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது.
15. ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல் இருக்க கூடாது.
16. பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும் ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது.
17. திரு கோவிலை நோக்கியோ . ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ காலை நீட்ட கூடாது.
18. காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும்.
19. பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி பார்த்ததும் த்வயம் மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு சேவிக்கவும்.
20. திருநாம சங்கீர்த்தனத்தின் நடுவிலோ,கைங்கர்யபரர் களை பாராட்டும் பொழுதோ நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும்.நடுவில் கூட்டத்தில் இருந்து போவது மிக பெரிய பாவமாகும்.
21. உன்னை தேடி வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே சென்று வர வேற்க வேண்டும் . அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட செல்ல வேண்டும் . இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்.
22. அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள வேண்டும்.அவர்கள் திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து,அவர்களை உனக்கு முன், மரியாதையாக நடத்தவேண்டும்.
23. திருகோவிலையோ, திரு கோபுரத்தையோ, திரு விமானத்தையோ கண்டால் கைகூப்பி வணங்கவேண்டும்.
24. மறந்தும் புறம் தொழாமல்,அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும் காணாமல் இருக்கவேண்டும்.
25. மற்றை தெய்வ சேஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும் ஈர்க்க கூடாதவை.
26. அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுதோ, நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது.
27. ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது.
28. நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும்.
29. நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும்.
30. ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்,அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது.அப்படி நடத்தினால் மிக பெரிய பாபம் வரும்.
31. ஸ்ரீவைஷ்ணவர் உன்னை முதலில் வணங்கி அடியேன் என்றால்,அவருக்கு அவமரியாதை காட்டக் கூடாது . அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும்.
32. ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள். சோம்பல்தனம் . தூங்கி வழிவது . தாழ்ந்த பிறவி . போன்றவை . அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்துகொள்ள வேண்டும் . அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும்.
33. பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில் சுவீகரித்து கொள்ள கூடாது.
34. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் சுவீகரித்து கொள்ள கூடாது.
35. ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும்.
36. கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும்.
37. அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்.
38. பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.
39. அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்,நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும்.
40. நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது.
41. அப்படிபட்டவர்கள் வீட்டில் பெருமாளை சேவிக்க கூடாது.
42. ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும் பெருமாள் பிரசாதம் ஸ்வீகரிக்காமல் இருக்கக் கூடாது.
43. விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால் மறுக்க கூடாது.
44. பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம். பாபங்களை போக்கும். வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் மறுக்க கூடாது.
45. ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது.
46. மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது.
47. அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா பொழுதும் போக வேண்டும்.
48. நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும்.
49. திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும்.
50. தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம்.
51. வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது.
52. பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது.
53. மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க, நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் .
54. அவன் அடியாரை களங்க படுத்தும் ,ஆச்சர்யர்களை இகழும், புலி தோல் போத்திய மானிடரை மதிக்க கூடாது.
55. த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும்.
56. உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும்.
57. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும்.
58. ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும்.
59. ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல் அவர்களை பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும்.
60. பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு பாடு பட வேண்டும்.
61. சரணாகதன். கைங்கர்ய பரர் வித்திக்கு கட்டளை படிக்கு மாறாக தனக்கு நன்மையே பயத்தாலும் நடக்க கூடாது.
62. பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ . பெருமாளுக்கு சாத்தாத சந்தனமோ வெத்தலையோ புஷ்பமோ பானகமோ சுவீகரித்து கொள்ள கூடாது.
63. ஐஸ்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து கொள்ளக் கூடாது.
64. நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே ச்வீகரிகலாம்.
65. சாஸ்திரம் விதித்த ஒன்றையே, பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது.
66. சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும்.
67. பெருமாள் பிரசாதம், புஷ்பம், புனிதம் என்ற உணர்வுடன் சுவீகரிக்க வேண்டும். போக பொருளாக கொள்ள கூடாது.
68. சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும்.
69. ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால்,பேரு இழப்பு நிச்சயம். அவர்கள் அனுக்ரஹத்தால் பேரு சீக்கிரம் நிச்சயம் பெறுவோம்.
70. அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள வேண்டும் அவர்கள் மனம் கோனும் படி நடந்தால் நாம் இழப்போம்.
71. திவ்ய திருமேனியை வெறும் கல் என்றோ,ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ, பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ, புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ, திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ, பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று எண்ணுபவனோ, அகல பாதாள இருட்டு நரகம் புகுவான்.
72. ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம். பெருமாள் திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே நிச்சயம் பேரு பெறுவான். ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிக்காதவனை விட அதிக பாபம் செய்தவன் ஆகிறான்.ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது. இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும்.
வெள்ளி, 2 அக்டோபர், 2020
லட்சுமி நாராயணர் திருக்கோவில்
மூலவர் : லட்சுமி நாராயணர்
தாயார் : லட்சுமி ஊர் : காரிசேரி
மாவட்டம் : விருதுநகர்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : மூலவரின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. மிகச்சிறிய கோயிலாக இருந்தாலும், நவபாஷாணத்தில் பெருமாள் சிலையை பார்ப்பது அரிது என்பதாலும், கீர்த்தி பெரிது என்பதாலும் சனிக்கிழமைகளில் மக்கள் வந்து செல்கின்றனர்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை காலை 8 - மாலை 6 மணி வரை திறந்திருக்கும். முகவரி,
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி- 626 119 விருதுநகர் மாவட்டம்.
தகவல் : இங்கு மார்கழி திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில், நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கும் யாகம் நடத்துகின்றனர்.
பெருமை : பெருமாள் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து லட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகார தெய்வங்கள் இல்லை.
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 15
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 15
பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு
திருக்கச்சி நம்பிகளிடம் ஆளவந்தார் திருவரங்கத்திற்கு இளையாழ்வானை அழைத்து வரச் சொன்னதாக சொன்னார் அல்லவா, பெரிய நம்பிகள்?
அந்த காலத்தில் குரு சிஷ்யன் எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் உடனே முன்னாடி போய் பேச மாட்டார்கள். ஒருவரிடம் பேசவேண்டும் என்றால் தனக்குத் தெரிந்ததை முதலில் வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் அடுத்த நாள் காலை நீராடிவிட்டு பெரிய நம்பியும் தான் ஆளவந்தாரின் சிஷ்யன் என்று சொல்லாமல், காஞ்சி பேரருளாளன் முன்பு பாடுகிறார் ஆளவந்தார் இயற்றிய தோத்திர ரத்தினத்தை.
"ஸ்வாதயந்நிஹா சர்வேஷாம் |
த்ரயந்தார்தம் ஸூதுர்க்ரஹம் ||
ஸ்தோத்ரயாமாச யோகின்ற |
தம் வந்தே யமுனாஹ்வயம் ||"
(சாதாரணவர்கள் வேதார்த்தத்தை புரிந்துகொள்வது வெகு கடினம். அப்படிப்பட்டோருக்காக வேதார்த்தத்தின் மீது ஈர்ப்பும் புரிதலும் ஏற்பட ஸ்தோத்திர ரத்தினத்தை வழங்கிய ஸ்ரீ யமுனாச்சாரியாருக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவிக்கின்றேன்.)
"நமோ நமோ யமுனாய |
யமுனாய நமோ நமஹ ||
நமோ நமோ யமுனாய |
யமுனாய நமோ நமஹ ||"
(ஆளவந்தருக்கு நமஸ்காரம், ஆளவந்தருக்கு நமஸ்காரம்; ஆளவந்தருக்கு நமஸ்காரம், ஆளவந்தருக்கு நமஸ்காரம்!)
"நமோ சிந்யாத்புதாக்லிஷ்ட
ஞான வைராக்கிய ராசாயே..."
இதற்கிடையில் திருமஞ்சனத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்த இளையாழ்வானின் காதுகளில் இந்த தோத்திரம் பாய்ந்தது. அவர் மெய் மறந்து அப்படியே நின்றுவிட்டார். பெரிய நம்பிகள் பாடி முடிக்கும் வரை அங்கேயே நின்றார் இளையாழ்வான்.
தோத்திரம் முடிந்ததும் அவரிடம், "இந்த தோத்திர ரத்தினம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க அவரோ "இது ஆளவந்தார் இயற்றியது. ஆளவந்தார் என் குரு" என்கிறார்.
இளையாழ்வானுக்கு எப்படி தோத்திர ரத்தினம் பற்றி தெரியும் என்றால் திருக்கச்சி நம்பிகளும் தன் குருவான ஆளவந்தார் பற்றியே ஜெபம் பண்ணுவார். ஒருமுறை இளையாழ்வான் அவரிடம் "எந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபம் செய்கிறீர்கள்?" எனக் கேட்டார். அப்போது "ஆளவந்தார் திருநாமத்தைச் சொல்லி ஜெபம் செய்கிறேன்" என்றார் திருக்கச்சி நம்பிகள். தோத்திர ரத்தினம் பற்றி மேலும் சொல்லி இருக்கிறார் திருக்கச்சி நம்பிகள்.
இப்போது பெரிய நம்பிகள் பாடவும், இந்த பாடல் அவருக்கு எப்படி தெரியவந்தது என வினவுகிறார்.
அப்போதுதான் இளையாழ்வானைக் கண்ட நம்பிகள், அவரிடம் வைஷ்ணவத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்கான எல்லாத் தகுதியும் இருக்கக் கண்டார். ஆளவந்தார் தம்மிடம் இளையாழ்வானை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்கிறார். இளையாழ்வான் அவருடன் சென்றாரா என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
பெரிய நம்பிகள் வைபவம்.....
அரங்கன் முன்பு அனைவரும் சமமே என்றவர் ராமானுஜர்.
தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பிக்கு,ஈமக்கிரியைகளை செய்து,ராமானுஜரை ஊக்குவித்தவர்,ராமானுஜரின் ஆச்சார்யரான பெரிய நம்பிகள்.ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில்,ஜாதி பேதம் இல்லை என்பதை,உலகறியச் செய்தவர் பெரிய நம்பிகள்...
ஆளவந்தார் (என்னும் ஆசாரியர்) அவதரித்து, 21 ஆண்டுகள்
கழித்து, கி.பி.997-998 ஹேவிநம்பி வருடத்தில்,மார்கழி
மாதத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில், புதன் கிழமை
ப்ருஹச்சரண ப்ராஹ்மண குலத்தில், பாரத்வாஜ கோத்திரத்தில்
ஸ்ரீ பராங்குஸதாஸர் என்னும் திருநாமம் உடையவராய்,
குமுதர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக அவதரித்தவர் பெரியநம்பி.
எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)
செய்த ஆசார்யர் இவர். ஆகையால்தான், ஆளவந்தாருடைய சீடர்களுக்குள் பெருமை பெற்றவராய், "பெரியநம்பி" என்று அழைக்கப்பெற்றார்
ஆளவந்தார் நியமனத்தின் பேரில் இவரே, ஸ்ரீ ராமானுஜரைத் திருவரங்கத்துக்கு அழைத்துவந்தார். ஆளவந்தார் காலத்திற்கு
பின், ஆளவந்தாருடைய மற்ற சீடர்களாலே ப்ரார்த்திக்கப்பெற்ற இவரே,ஸ்ரீ ராமானுஜருக்கு ஸமாஸ்ரயணம் செய்து அழைத்து வருவதற்காகஸ்ரீ காஞ்சிக்குப் புறப்பட்டார். அதே சமயம், தேவப்
பெருமாளின் (ஸ்ரீ வரதராஜர்) நியமனம் பெற்று, பெரியநம்பியை ஆஸ்ரயிப்பதற்காக ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். ஒரே நோக்குடன்புறப்பட்ட இருவரும்,
மதுராந்தகம் ஏரி காத்தபெருமாள் கோயிலிலே சந்திக்க,
அங்கு "ஸ்ரீ ராமானுஜ ஸமாஸ்ரயணம்" நடைபெற்றது.
பெரியநம்பிகள் தம் ஆசார்யரான ஆளவந்தாரின் மற்றொரு
சீடராய், தாழ்ந்த குலத்தில் தோன்றிய மாறனேறி நம்பி, ஆளவந்தாரை ராஜபிளவை என்னும் கொடிய நோய் தாக்க, அவருடைய புண்ணைக் கழுவி, மருந்திட்டு, உணவும் அளித்து கைங்கர்யங்கள் புரிந்து வந்தார்.
அதனால், மற்ற பிராமணர்கள் அவரைத் திட்டுவதையும்
அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு சமயம், ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் அனுபவிக்கும் உபாதை நோயைத்
தனக்குப் பிரசாதமாக அளிக்கவேண்டும் என்று வேண்ட, ஆளவந்தாரும் அவரது ஆசார்ய பக்தியைப் பார்த்து மகிழ்ந்து,
தன் நோயை மாறனேரி நம்பிக்குக் கொடுத்தார்.
அந்தக் கொடியநோயை வாங்கிக் கொண்டதால்,
மாறனேறி நம்பி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே,
இந்தப் பூத உடலை விட்டு அகன்று, திருநாடு அலங்கரித்தார்.
அவர் இறந்த பின்பு இறுதிக் காரியங்களைச் செய்ய எவருமே முன்வரவில்லை. அப்போது பெரியநம்பி,
மாறனேறி நம்பியின் தியாக உள்ளத்தை மெச்சி, அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பாராமல், ஆசார்ய பக்தியில்,
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயதத்திற்கே ஏற்றம் அளித்தவர் என்று போற்றி, மாறனேர் நம்பியின் உடலுக்கு இறுதி
சம்ஸ்காரங்களைச் செய்தார்.
பெரியநம்பியின் இச்செயல், வைஷ்ணவர்களைச் சினம்
கொள்ளச் செய்தது. “உயர்குலத்தில் பிறந்த பெரிய நம்பி,
தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவரின் ஈமக்கிரியைகளை
எப்படிச் செய்யலாம்?” என்று கூக்குரலிட்டார்கள்.
பெரியநம்பி வயதில் மூத்தவர். ஆளவந்தாரின் அருமைச் சீடர். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல்,
வைஷ்ணவர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள். எவரும்
அவரிடம் நீரும் நெருப்பும் பெறக்கூடாது என்றும்
உத்தரவிட்டார்கள். ஆனால் பக்தராகிய பெரியநம்பி அதைப்
பற்றிக் கவலைப்படவில்லை. இதய புண்டரீகத்திலே
வாசம் செய்யும் பெருமாளைப் பூஜித்து வணங்கிவந்தார்.
மிகச் சிறந்த ஞானியாகத் திகழ்ந்த பெரிய நம்பிகளுக்கு
அத்துழாய் என்ற மகள் இருந்தாள். துளசி என்பதற்கு
திருத்துழாய் என்று பெயர். அதனையே பெரியநம்பி,
தம் மகளுக்குச் சூட்டி மகிழ்ந்தார்.
ஆனால் பெரியநம்பியின் மகள் அத்துழாய் வைஷ்ணவர்கள்,
தங்கள் தந்தைக்கு இழைத்த அநீதியைக் கண்டு உள்ளம்
கொதித்தாள். அவள் நாள்தோறும் கோவிலுக்குச் சென்று
அரங்கராஜப் பெருமாளைச் சேவித்து வந்தாள். தன் தந்தை
பூஜை செய்யும்போது உதவி செய்தாள். வைஷ்ணவர்கள்
தந்தைக்கு எதிராகச் செய்த செயலை என்றாவது ஒரு நாள்,
தவறு என்று அவர்கள் அறியச் செய்ய வேண்டும் என்று வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.
அவளுடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் விரைவிலே
அத்தகைய வாய்ப்பு ஒன்றை அளித்தது. ஸ்ரீரங்கநாதர் வருட உற்சவத்திலே வீதி உலா வந்து கொண்டிருந்த நேரம். மங்கல வாத்யங்கள் முழங்க, சேவார்த்திகள் பெருமாளைச் சுமந்த
வண்ணம் வீதியிலே வந்துகொண்டிருந்தார்கள். வண்ணச் சப்பரத்திலே பெருமாள் சர்வாலங்காரங்களுடன் புன்முறுவல் பூத்தவண்ணம் காட்சிதந்தார்.
வீதிவீதியாக உலாவந்து அடியவர்களுக்கு தரிசனம் தந்து ஆட்கொள்ளும் எம்பெருமான் வீதியுலா பெரிய நம்பிகளின்
வீதிக்கும் வந்தது. வீட்டினுள்ளே இருந்து அத்துழாய் வீதிக்கு
ஓடோடி வந்தாள். வணங்கினாள். நேருக்கு நேராக நின்றாள்.
“பெருமாளே! நான் கூறுவதைக் கேளும். இதோ இங்கே
உங்களைச் சுமந்தும், உங்கள் புகழைப் பாடிக்கொண்டும் வருகிறவர்கள் அனைவருமாகக் கூடி என் தந்தை செய்தது
மாபாதகச் செயல் என்று கூறுகிறார்கள். அப்படி என்ன செய்தார் என்பதைக் கூறுங்கள். அனைத்தும் அறிந்த தங்களுக்குத்
தெரியாதது ஒன்றுமில்லை. பெருமாளே கதி என்றும் ஆசார்யரே தெய்வம் என்றும், சேவை புரிந்து வந்த மாறனேர்நம்பிக்கு, என் தந்தை ஈமக்கடன் செய்து விட்டார். இது தவறா? பதில்
கூறிவிட்டு இங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள்.” என்று
அத்துழாய் ஆணையிட்டு விட்டாள்.
“மொய்த்துக் கண்பனிசோர மெய்கள்
சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
ஆடிப்பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்
மற்றையார் முற்றும் பித்தரே!”
“பரமனை நினைத்து கண்ணீர் சோர ஆனந்தக் கண்ணீர் பெருக
உடல் மயிர்க் கூச்செரிய ஏங்கித் தவித்து, கூத்தாடி பலவிதப் பாட்டுகள் பாடி வணங்கி எந்தையும் என் அண்ணனுமான
அரங்கப் பெருமாளைப் பற்றியவர் பித்தர் அல்லர். அவர் பால்
பற்று இல்லாதவரே பித்தர் என்று குலசேகர ஆழ்வார் பாடியது உண்மையல்லவா? யார் பக்தர்? பெருமாளே கூறிவிட்டுச் செல்லுங்கள்.”
என்று அத்துழாய் ஆவேசம் வந்தவள் போலப் பேசி முடித்தாள். அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.
உடனே வீதிஉலா வந்த அரங்கன் வாய் மலர்ந்தார்.
“மாறனேர் நம்பிக்கு, பெரியநம்பி செய்த ஈமக்கிரியைகள்
நமக்கும் சம்மதமே! நாம் ஒப்பிய பரமபாவனமான செயலே!”
என்று பெருமாள் அசரீரியாக அருள் மொழி கூறியதும்
அத்துழாய் பூரித்தாள்.
வீட்டினுள்ளே அடைந்து கிடந்த பெரிய நம்பியும் அதைக் கேட்டுக் கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீரங்கநாத வீதி உலாவுக்கு வந்திருந்த வைஷ்ணவர்கள் அனைவரும் விதிர் விதிர்த்தார்கள்.
சிறுபெண் என்று அத்துழாயை எண்ணிய அறிவீனத்தை நினைத்து ஊரார் வருந்தினார்கள். தாம் செய்ததை எண்ணி வருந்தி, பெரிய நம்பிகளுக்குச் செய்த அபசாரத்திற்காக மன்னிப்புக் கோரினார்கள்.
அத்துழாயியின் பக்தியும் தீரமும் வைணவ உலகிலே புதிய சகாப்தத்தை நிலை நிறுத்தியது.
இதை அறிந்த எம்பெருமானார், வர்ணாஸ்ரம தர்மத்தின் வரம்பை மீறி நீர் இப்படிச் செய்யலாமோ என்று பெரியநம்பிகளிடம் கேட்க, நம்பிகள் அதற்கு,
சாமான்ய தர்மத்தை நிலைநாட்டுகிற சக்கரவர்த்தித்
திருமகனார் (ஸ்ரீ ராமர்), பக்ஷி ஜாதியான (பறவை) ஜடாயுவுக்கு இறுதிச் சடங்ககுகளைச் செய்தாரே! அவரிலும்நான் பெரியனோ? அந்தப் பறவையைக் காட்டிலும், இவர் (மாறனேறி நம்பி
சிறியவரோ? என்றும்,
மேலும் யுதிஷ்டிரர் (தருமர்) விதுரருக்கு (தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாகத் தோன்றியவர்) இறுதிக் கிரியைகள் செய்தாரே! நான் என்ன யுதிஷ்டிரரைக் காட்டிலும் பெரியவனோ? மாறனேறி நம்பி விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரோ? என்றும்,
மேலும், நம்மாழ்வார், "பயிலும் சுடரொளி"
(திருவாய்மொழி, 3.7) என்ற பதிகத்திலும்,
"நெடுமாற்க்கடிமை"(திருவாய்மொழி, 8.10) என்ற பதிகத்திலும், பாகவதர்களின் (பெருமானின் அடியார்கள்) சிறப்பைக்கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும்,"என் கொழுகுலந் தாங்களே"
என்றும் கூறினவையெல்லாம் வெறும் வெற்று
வார்த்தைகளோ? அவை நடப்பிற்கு ஒத்துவராததோ?
என்றும் கேட்டு பாகவத உத்தமர்கள் எல்லாவற்றாலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்பதை நிலை நிறுத்தினார்.
இவற்றைக் கேட்ட எம்பெருமானாரும் சந்தோஷம் அடைந்தார். இவற்றையெல்லாம் தாம் அறிந்திருந்தாலும், பெரியோர்
மூலமாக உணர, உணர்த்தவேண்டும் என்பதற்காகவே
கேட்டேன் என்றாறாம் எம்பெருமானார்.
ஒரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் சற்று தூரத்தில் வந்து
கொண்டிருக்க, அவருக்குப் பெரியவரான பெரிய நம்பிகள்
கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாராம். சிறியவரின் காலில் பெரியவர் விழலாமா, அதுவும் ஸமாஸ்ரயணம் செய்த ஆசாரியராயிற்றே நீர்? சிஷ்யன் காலில் விழலாமா என்று
கேட்க, நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரின் தோற்றம், தன்
ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தாரைப் போலவே இருந்ததால்,
இவர் ராமானுஜர் என்பதை மறந்து, ஆளவந்தாராகவே
பாவித்து வணங்கினேன் என்று கூறினாராம் .
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ஊறி, அதன்
அமுதச் சுவையை நன்கு புருகியவர் ஸ்ரீ ராமானுஜர்.
இதனாலேயே அவருக்குத் "திருப்பாவை ஜீயர்" என்ற
பெயருமுண்டு. ஒரு நாள் காலை, இப்படி அவர் திருப்பாவைப் பாசுரங்களை சொல்லிக்கொண்டு, நம்பிகளின் இல்லத்தை
நெருங்க, நம்பிகளின் திருக்குமாரத்தியான (மகள்) அத்துழாய் ராமானுஜரைத் தரிசிக்க, தன் இல்லத்தின் வாசற்க் கதவைத்
திறக்க, அவளைப் பார்த்த ராமானுஜர் அவளை விழுந்து
வணங்கி மயக்கமுற்றுக் கிடந்தாராம்.
ஒரு பெரியவர் தன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிய அத்துழாய்,தன் தந்தையான நம்பிகளை அழைத்து, இதைத் தெரிவிக்க, நம்பிகள் துளியும் பதறாமல், எம்பெருமானாரைப் பார்த்து, "உந்து மதகளிற்றன்" பாசுரம் (திருப்பாவை, 18) அனுஸந்தானமோ என்று கேட்டாராம்.
அதாவது, இந்தப் பாசுரத்தில் "நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்" என்ற வரியை ராமானுஜர் அனுசந்திக்கும்
அதே சமயம், அத்துழாய்க் கதவைத் திறக்க, அத்துழாய்
அவர் கண்ணிற்கு "நப்பின்னைபிராட்டியை"ப் போலத்
தெரிந்தாளாம். இராமருக்கு சீதபிராட்டியைப் போல்,
ஸ்ரீ வராஹருக்கு பூமிப்பிராட்டியைப் போல், நப்பின்னை
கண்ணன் எம்பெருமானின் திருத்துணைவி ஆவாள். இது "மூவாயிரப்படியில்" உள்ளபடி.
(ஆனால், இந்தசம்பவம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருக்குமாரத்தியான தேவகி பிராட்டியார் விஷயத்தில்
நடந்ததாக "ஆறாயிரப்படி" தெரிவிக்கிறது.)
அத்துழாய் திருமணம் ஆகி தன் புகுந்த வீட்டிற்க்குச் செல்ல, அத்துழாயின் மாமியார் உனக்கு சீதனமாக பணிப்பெண்
ஒருவரையும் அனுப்பவில்லையே உன் தந்தை (நம்பிகள்)
என்று கேட்க, அத்துழாய் தன தந்தையிடம் இதைத் தெரிவிக்க, நம்பிகள் வருத்தமுற்று பணிப்பெண்ணுக்கு நான் எங்கே
செல்வேன் என்று கேட்டு, ராமானுஜரிடம் சென்று இதைப்
பற்றிக் கூறு என்று அவளிடம் சொல்ல, அவளும் உடனே
சென்று அவரிடம் இதைக் கூற, இதைக் கேட்ட ராமானுஜர்,
தன் சீடரான முதளியாண்டனை அழைத்து அவளுடன் பணிப்பெண்ணாகச் செல்லும்படி கட்டளையிட, முதலியும் ஆசார்யனின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றும்
வண்ணம், அத்துழாயின் பணிபெண்ணாக, அவள் மாமியார் வீட்டிற்க்குச் சென்றார்.
ராமானுஜர் துறவறம் பூண்டபோது, அனைத்தையும் துறந்தேன், முதளியாண்டனைத் தவிர என்று கூறியவர். அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் முதலியாண்டான். அவரையே அத்துழாயுடன் பணிப்பெண்ணாக அனுப்பி, தியாகம் செய்தார் என்றால்,அது ராமானுஜர் தன் ஆசார்யரான பெரிய நம்பிகளுக்குச் செய்யும்
கடமை என்ற எண்ணத்தில்தான்.
ஒரு சமயம், வைணவ மதம் சிறந்ததா, சைவ மதம் சிறந்ததா
என்று வாதம் எழ, சைவ மதமே சிறந்தது, சிவனைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை" என்று அதில் ஊற்றம் கொண்ட
சோழ மன்னன் கூற, அவன் சபையில் இருந்த மந்திரிகள்,
இதை ஒரு வைணவர் சொன்னால்தான் எடுபடும் என்றும்,
மேலும் அவர் ஒரு சாதாரண வைணவராக இருக்கக்கூடாது
என்றும், வைணவ சம்பிராதயத்தில் ஊற்றம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று கூற, அப்படிப்பட்டவர் யார் இருக்கிறார் என்று கேட்க, வைணவ மதம் சிறக்கத் தோன்றிய ராமானுஜரே அப்படிப்பட்டவர் என்றும், அவரை அழைத்துவந்து, சைவ மதமே சிறந்தது என்று கூறி, கையெழுத்து இட்டால்தான் அரசனின்
கூற்று எடுபடும் என்று தெரிவித்தார்கள்.
உடனே, அரசன், ராமானுஜரை அழைத்துவரும்படி
ஊழியர்களைப் பணிக்க, ராமானுஜர் அங்கு சென்றால்
இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும்,ஒப்புக்
கொள்ளாமால் போனால், மன்னன் அவரைக் கொன்று
விடுவான் என்றும் நினைத்து, அவரது சீடரான
கூரத்தாழ்வான் இதை ராமானுஜரிடம் தெரிவித்து,
ராமானுஜருக்கு தான் உடுத்தியிருந்த வெள்ளை வேட்டியைக் கொடுத்து உடுத்தச் சொல்லி, அவரது காவி உடையைத் தான் அணிந்துகொண்டு, ராமானுஜராய் அரசனின் சபைக்கு,
ஆழ்வான் பெரிய நம்பிகளுடன் சென்றார்.
சபைக்குச் சென்றவுடன், ராமானுஜராய் வேடமனிந்த
ஆழ்வானைப் பார்த்து,"சிவாத் பரதரம் நாஸ்தி" என்று கையெழுத்திடச் சொன்னான். அதற்கு ஆழ்வான்,
ஒருவன் உலகளந்தான் (எம்பெருமான்); ஒருவன் (பிரமன்)
அவன் திருவடிகளைக் கழுவினான்; கழுவப்பட்ட அந்தத்
தீர்த்தத்தை ஒருவன் (சிவன்) தலையில் தாங்கிப் புனிதனானான். இதனால், யார் சிறந்தவன் என்பதை நீயே உணர்ந்து பார்
என்று பல படியாக ஸ்ரீமந்நாராயணனே பரதெய்வம் என்று உறுதிபடுத்தினார்.
நீர் வித்வான் ஆகையால் எப்படியும் பேச அல்லவர். இதில்
நீர் கையெழுத்திடும் என்று அரசன் ஆணையுடன் நிர்ப்பந்திக்க, ஆழ்வான், சிவனைத் தாழ்த்தி விஷ்ணுவை உயர்த்திவைத்து கையெழுத்திட்டார். இதனால் கோபமடைந்த அரசன், பெரிய நம்பியைப் பார்த்து, கையெழுத்திடும்படி கட்டளையிட,அவரும் அதற்கு மறுத்தார். உடனே, தன் ஊழியர்களை அழைத்து,
அவர்கள் இருவரின் கண்களையும் பிடுங்கும்படி கட்டளையிட்டான்.
உடனே ஆழ்வான், துஷ்டனான உன்னைக் கண்ட கண்கள்
எனக்கு உதவாது என்று கூறித் தம் நகங்களைக் கொண்டே
தம் கண்களைப் பிடுங்கி அரசன் மேல் வீசினார். பெரிய நம்பிகளின் கண்கள் பிடுங்கப்பட்டன. பின்னர் இருவரும் ராஜ சபையிலிருந்து வெளியேறினர். வழியில் வலி தாங்காமல் அந்திம காலத்தை அணுகினார் நம்பிகள். அதனால் விரைவில் ஸ்ரீரங்கத்தை அடைவோம் என்று ஆழ்வானும் அத்துழாயும் கூறினர்.
அதுகேட்டு நம்பிகள், "அது வேண்டாம்; அப்படி செய்வோமானால் பெரியநமபிகள் திருமேனியை விடுவதற்கு ஸ்ரீரங்கம் போனார்; அதனால், நாமும் திவ்யதேசத்தில்தான் சரீரம்
விடவேண்டுமென்று அனைவரும் எண்ணுவர். முதலிலே ஆசார்யனாலே அனுக்ரஹிக்கப் (அங்கீகரிக்கப்)பட்டவருக்குப் பரமபதம் நிச்சயமாகையாலே,அந்த தேச நியமம் என்று கூறி,
தன் ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரை தியானித்துக்கொண்டு
ஆழ்வான் மடியிலே திருமுடியும், மகள் அத்துழாய் மடியிலே திருவடியுமாகப் பரமபதம் அடைந்தார். இதனால், பகவானே பேற்றுக்கு உபாயம் என்று அவனைத் தஞ்சமாகப் பற்றிவனுக்கு, இறுதிக் காலத்தில் இன்ன தேசத்தில் தேகத்தை விடவேண்டும்
என்ற கட்டுப்பாடில்லை என்பதை நிலை நாட்டினார் நம்பிகள்.
திருப்பாணாழ்வார் அருளியுள்ள "அமலனாதிபிரான்" என்னும் பிரபந்தத்திற்கு, "ஆபாதசூடமனுபூய ஹரிம் ஸயாநம்" என்று தொடங்கும் அற்புதமான வடமொழித் தனியன் இட்டவர் பெரியநம்பிகள்.
இனியும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையர் திருவடி!!
அருள் மிகு கோலவில்லி ராமர் திருக்கோவில்
திருவெள்ளியங்குடி அருள் மிகு கோலவில்லி ராமர் திருக்கோவில்
108 திவ்யதேசத்தின் 22 ஆம் ஸ்தலம்* 🌿🌿
🔥மூலவர் : கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்
🔥உற்சவர் : சிருங்கார சுந்தரர் (தன்னை அழகுபடுத்திக்
கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
🔥தாயார் : மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)
🔥தல விருட்சம் : செவ்வாழை
🔥தீர்த்தம் : சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்
🔥ஆகமம்/பூஜை : வைகானஸ ஆகமம்
🔥பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
🔥புராண பெயர் : பார்கவ க்ஷேத்திரம், திருவெள்ளியங்குடி
🔥ஊர் : திருவெள்ளியங்குடி
🔥மாவட்டம் : தஞ்சாவூர்
🔥மாநிலம் : தமிழ்நாடு
🔥பாடியவர்கள்:
மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்
ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில் பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே
-திருமங்கையாழ்வார்
🔥திருவிழா:
ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி
🔥தல சிறப்பு:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 22 வது திவ்ய தேசம்.
🔥திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
🔥முகவரி:
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி - 612 102 தஞ்சாவூர் மாவட்டம்
🔥போன்:
+91- 435-245 0118
🔥பொது தகவல்:
இத்தல பெருமாள் புஜங்க சயனத்தில்,கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்தக விமானம் எனப்படுகிறது.. சுக்கிரன், பிரம்மா, இந்திரன், பராசுரர், மயன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இதுதான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார்.
🔥பிரார்த்தனை
கண்ணில் குறைபாடு உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
🔥நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
🔥தலபெருமை:
இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக் கிறார்.இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.
🔥தல வரலாறு:
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன்.ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளி(சுக்கிரன்)யங்குடி என அழைக்கப்படுகிறது.சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன்,""தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார். இதன் காரணமாகவும் இது "வெள்ளியங்குடி' ஆயிற்று.
🔥சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார்.