பூவன் பழம் {பிரம்மாபழம்} மொந்தன் பழம், முகுந்தன் பழம் {விஷ்ணு பழம்} , பேயன் பழம் {சிவன் பழம்} , நேந்திரம் பழம் {இந்திரன்
பழம்} ஆன்மிக விளக்கங்கள்:
அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள்.
அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.
அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.
அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.
அநசூயை தாயாக, முப்பெருந் தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர்.
அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.
நெடுநாட்களாக பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.
பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.
வெகு நாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.
இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் {பிரம்மா, விஷ்ணு, சிவன்} அதிர்ச்சியளித்தது.
அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள்.
அவர்கள் மூவரும், தங்களைத் தாய் அந௲யையிடமிருந்து இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்து கொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.
பிரம்மா மறைந்து கொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.
விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம்.
விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம். சிவன் மறைந்து கொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம்.
சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன் பழமே சிவப் பழம்.
பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.
நேந்திரம் பழம் : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன், தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான்.
இந்திரனைக் காணாமல் நெடு நேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான்.
தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான்.
இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு தான் இந்திரன் இல்லை {ந: இந்திரன்} என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.