திங்கள், 25 மே, 2020

Shangini.M.Akilandeshwari🙏🏻🔔லலிதா ஸகஸ்ரநாமம்🙏🏻

ந்யாஸ:

ஓம் அஸ்யஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
வஸிந்யாதி வாக்தேவதா ருஷய:
அனுஷ்டுப் ஸந்த:
ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரீ தேவதா

ஓம் ஐம் பீஜம்
ஓம் ஸௌம் ஸக்தி:
ஓம் க்லீம் கீலகம்

ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரீ
ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

கரந்யாஸம் :

ஓம் ஐம் அங்குஷ்டாப்யாம் நம:
ஓம் க்லீம் தர்ஜநீப்யாம் நம:
ஓம் ஸௌ: மத்யமாப்யாம் நம:
ஓம் ஐம் அநாமிகாப்யாம் நம:
ஓம் க்லீம் கனிஷ்டிகாப்யாம் நம:
ஓம் ஸௌ: கரதல கர ப்ருஷ்டாப்யாம் நம:
ஓம் ஐம் ஹ்ருதயாய நம:
ஓம் க்லீம் ஸிரஸே ஸ்வாஹா
ஓம் ஸௌ: ஸிகாயை வஷட்
ஓம் ஐம் கவசாய ஹூம்
ஓம் க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்
ஓம் ஸௌ: அஸ்த்ராய ஃபட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:

🙏குரு👣பாதுகா👣வந்தனம்🙏

ஐங்கார ஹ்ரீங்கார
ரஹஸ்ய யுக்த
ஸ்ரீங்கார கூடார்தத
மஹா விபூத்யா
ஓங்கார மர்ம ப்ரதிபாதினீப்யாம்
நமோநம: ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

( ஐங்காரம் ஹ்ரீங்காரம் ஆகியவற்றின் ரகசியத்துடன் கூடிய ஸ்ரீங்காரத்தின் உட்கருத்தாகிய சிறந்த செல்வத்தால் ஓங்காரத்தின் மர்மத்தை விளக்க வைக்கும் ஸ்ரீ குருநாதரின் திருவடிகளுக்கு மீண்டும் நமஸ்காரம் )

🙏த்யானம்🙏

ஸிந்தூராருண விக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத்
தாரநாயக ஸேகராம் ஸ்மிதமுகீம்
ஆபீன வக்ஷோருஹாம்
பாணிப்யா மணிபூர்ண ரக்ன சக்ஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்ன கடஸ்த
ரக்தஸரணாம் த்யாயேத் பரமாம்பிகாம்

( செந்தூரம் போன்ற சிவந்த உடலும் முக்கண்ணும் சந்திரனின் ஒளி வீசும் மாணிக்க மகுடமும் சிரித்த முகமும் பெருத்த மார்பும் மது ( தேன் ) நிறைந்த இரத்தினத்தால் ஆன கோப்பையும்
செங்குவளை மலர் ஏந்திய திருக்கரங்களும்
இரத்தின கலசத்தில் பொருந்திய செவ்விய திருவடிகளையும் உடைய அழகு தெய்வமாக விளங்கும் பரதேவதையை தியானம் செய்ய வேண்டும் )


அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருத பாஸாங்குஸ புஷ்பபாண சாபாம்
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை
அஹமித்யேவ விபாவயே பவானீம்

( உதயசூரியனைப் போன்ற சிவந்த திருமேனியும்
கருணை அலைகள் பாயும் கடல் போன்ற கண்களும்
பாசமும் அங்குசமும் புஷ்பபாணமும் மற்றும் கரும்புவில் ஆகியவற்றை ஏந்திய கைகளும் உடையவளாய் அணிமாதி சக்திகுழாம் சூழ காட்சி தரும் அன்னை பவானியை
" அஹூ " என்ற தத்துவ வடிவமாக பாவிக்கிறேன் )

த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித லஸத்ஹேம பத்மாம் வாராங்கீம்
ஸர்வாலங்கார யுக்தாம் ஸததமபயதாம் பக்தநம்ராம் பவானீம்
ஸ்ரீவித்யாம் ஸாந்தமூர்த்திம் ஸகலஸுரதுதாம்
ஸர்வஸம்பத் ப்ரதாத்ரீம்

( தாமரை மலரில் வீற்றிருப்பவளும்
மலர்ந்த திருமுகத்தை உடையவளும்
தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை உடையவளும்
பொன்னைப் போன்ற ஒளியை உடையவளும்
பொன்னாடையை அணிந்திருப்பவளும்
பொற்றாமரையை கையில் ஏந்தியிருப்பவளும்
சிறந்த அங்கங்களை உடையவளும்
அனைத்து அலங்காரங்களும் பொருந்தியவளும்
ஆதரவளிப்பவளும் பக்தர்களுக்காக இரங்குபவளும்
ஸ்ரீவித்யா ரூபிணியும்
அமைதி தவழும் தோற்றத்தை உடையவளும்
ஸ்ரீவித்யா ரூபிணியாய் இருப்பவளும்
தேவர்களால் துதிக்கப்பட்டவளும்
அனைத்து செல்வங்களையும் அளிப்பவளும் ஆகிய அன்னை பவானி தேவியை எப்பொழுதும் வணங்க வேண்டும் )

ஸகுங்கும விலேபனா மளிகஸும்பி
கஸ்தூரிகாம ஸமந்த ஹஸிதேக்ஷணாம்
ஸசரசாப பாஸாங்குஸாம்
அசேஷஜன மோஹினீ
மருணமால்ய பூஷாம்பராம் ஜபாகு
ஸுபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம்

( குங்குமத்தை பூசியிருப்பவளும்
வண்டுகள் நாடும் கஸ்தூரியை பூசியிருப்பவளும்
புன்னகை பூத்த பார்வையை உடையவளும்
அம்பு ; வில் ; பாசம் ; அங்குசம் முதலியவற்றை கரங்களில் தரித்திருப்பவளும்
மக்களை மோகம் கொள்ள செய்பவளும்
சிவப்பு மாலை ஆபரணமும் ஆடையும் அணிந்திருப்பவளும்
செம்பருத்திப்பூவின் நிறத்தை உடையவளும் ஆன அம்பிகையை பூஜை காலத்தில் எப்போதும் சிந்திக்க வேண்டும் )

லம் - ப்ருதி வ்யாத்மிஹாயை கந்தம் ஸமர்ப்பயாமி

ஹம் - ஆகாஸாத்மிஹாயை புஷ்பாணி ஸமர்ப்பயாமி

யம் - வாய்வாத்மிஹாயை தூபமாக்ராபயாமி

வம் - அம்ருதாத்மிஹாயை அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

ஸம் - ஸர்வாத்மிஹாயை ஸர்வோபஸாரபூஜாம் ஸமர்ப்பயாமி.

🙏ஸ்ரீமாத்ரே நம:👣🌺🌺🙏🏻🙏
🙏வைணவத்தில் நவக்கிரகங்கள் உண்டா? இல்லையா?🙏

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது!
சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது!

ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா?

*தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்*

ஸ்லோகம் :-
சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி
தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!

நவக்கிரகங்கள் = ஒன்பது

சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது. சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர);

இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது!

அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்!

சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!

பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து கொண்டு இருப்பதாக ஐதீகம்!

படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது.

ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும்,
அவரை பாடிய ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்!

இதுவே அவரது அடியார்கள பெருமை! பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன்?

அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும்,வலிமையும்
முன்னிறுத்தப்படும்.
அடியவரை முன்னிறுத்தினால் அன்பும், பக்தியும் தானே வளரும்!

அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது!
அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிகாக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவரின் திருவுருவத்திலேயே நவ கிரஹங்களும் அடங்கி விடுகிறார்கள்!

பகவானின்
தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!

சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன்.        = கல்கி
வியாழன்.  = வாமானர்
வெள்ளி.    = பரசுராமர்
சனி =           கூர்மம்
ராகு.         = வராகம்
கேது.            = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன

(திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார்                                      திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம்        
             (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம்
            (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும்,நவகிரஹங்கள்
கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் யாரிடமும் பாரபட்சம் கிடையாது.

அவர்கள் தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,

த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்.....

சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்.

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!

இறைவனுக்குத் தானே அடியார்கள்?

அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?

அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனை
சகதொண்டர்களிட
"மும்" காண்பது!

அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது!
தொண்டர் அடிப்பொடி என்பர்!
( ஒரு ஆழ்வார் தன் பெயராகவே வைத்துக் கொண்டு உள்ளார்)

பகவத் கைங்கர்யம்என்னும் திருத் தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மகாபாவம்!

அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும்! அதை வெளிக் காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர்
மனோநிலையைப் பொருத்தது!

அதுபோல் தான் ஒருவரின் கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை...
சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை வளரும் சக்தி பெற்றது!

இதை பக்தியில் கூட சிலர் வெளிகாட்டுவர்.அங்கு பொறாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேசுவர்.

அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனை சேவிக்கும் போது, மற்றவர்களையும் சேர்க்க வேண்டும். நாம் மட்டும் தனியாக சேவிக்காமல் கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து நம் பக்தி சிறந்தது என்ற எண்ணம் துளிர் விட்டால்? ஏனெனில் அது மனித குணம் தானே!

அதனால் தான் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது! சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது.
அடியார்க்கு அடியவராகி விட்டால் பொறாமை தலை தூக்காது.

அன்பு தான் தலை தூக்கும்!
அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!
துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது!

பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப் படுகிறோமா?

இல்லையே!

அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.

அதாவது.....
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்;

அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.

நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, "பரிவுடனே" கொடுக்கின்றன!

எப்படிக் கொடுக்கின்றன?

சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.

ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!

அடியார்க்கு அடியாராய்,
அவை நல்ல நல்ல நல்ல,
என்று கொடுக்கின்றன!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். பிருகு முனிவரின் மகளாக பிறந்த லட்சுமிதேவியை மணம் முடிக்க திருமால் சார்ங்கம் என்ற வில் ஏந்தி வந்ததால், இத்தல இறைவனுக்கு சாரங்கபாணி என்று பெயர் வந்தது. இத்தலத்தில் அருள் புரியும் தாயாரின் திருநாமம் கோமளவல்லி என்பதாகும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு, ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கேட்டது ஆயிரம்.. கிடைத்தது நாலாயிரம்

பன்னிரு ஆழ்வார்களும், பெருமாளைப் பற்றி பாடி மங்களாசாசனம் செய்த பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ எனப் படுகிறது. இந்த பாடல்கள் அனைத்தும் கிடைப் பதற்கு காரணமாக இருந்தவர், இத்தல இறைவனே ஆவார்.

ஒரு முறை நாதமுனி என்பவர் சாரங்க பாணியை வழிபடுவதற்காக வந்தார். அப்போது சில பக்தர்கள் இறைவனின் பெருமையை ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி பாடினார்கள்.

இதைக் கேட்ட நாதமுனி, ‘இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?’ என்று வியந்து போய் கேட்டார். மீதி பாடல்களையும் பாடச் சொல்லி கேட்டபோது, அந்த பக்தர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்கும்’ என்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆனால் கிடைத்தது ஆயிரம் பாடல்கள் அல்ல.. நாலாயிரம் பாடல்கள். அதன்பிறகே அவை தொகுக்கப்பட்டது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘ஆராவமுதாழ்வார்’ என்ற பெயரும் உண்டு.

உத்தான சயனம்

திருமால் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தை ‘சயன கோலம்’ என்பார். இறைவனின் சயன கோலத்தில் பல வகை இருக்கின்றன. அதில் சாரங்கபாணி ஆலயத்தில் ‘உத்தான சயனம்’ என்ற கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். ஒரு முறை இத்தலம் வந்த திருமழிசையாழ்வார், இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், ‘நடந்து நடந்து கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?’ என்று இறைவனைப் பார்த்துப் பாடினார்.

உடனே இறைவன் சற்றே எழுந்தார். அவரின் அருளைக் கண்ட ஆழ்வார் மனம் மகிழ்ந்தார். ‘அப்படியே இரு’ என்று வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிருக்காமல், சற்றே எழுந்த கோலத்தில் இருப்பதையே ‘உத்தான சயனம்’ என்கிறார்கள்.

7 ஆழ்வார்களின் பாடல்

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோவிலே அதிகஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது. இத்தல இறைவனை பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய 7 பேர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசர்

தன்னுடைய திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே சென்று ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு தாயாரின் முன்பு தோன்றிய பெருமாள், அவரை மணந்து கொண்டார். பெருமாள் ஒளிந்த இடம், இத்தலத்தில் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் உள்ளது. தாயாருடன் பெருமாள் தனிச்சன்னிதியில் இருக்கும் இடம் ‘மேட்டு சீனிவாசர் சன்னிதி’ என்று அழைக்கப்படுகிறது.

வீட்டோடு மாப்பிள்ளை

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், தாயாரைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். அதற்கேற்றாற்போல தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில்தான் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆலயம் திறக்கும் போது, சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லி தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோ பூஜை தாயார் சன்னிதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னிதியில் நடக்கிறது.

சொர்க்கவாசல் இல்லை

திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். அப்படி சொர்க்கவாசல் இல்லாத ஆலயம் சாரங்கபாணி திருக்கோவில் தான். இத்தல பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக இந்த திருத்தலத்திற்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே பரம பதம் (முக்தி) கிடைத்து விடும் என்ற காரணத்தால் தான், சொர்க்கவாசல் இல்லையாம். மேலும் இங்குள்ள உத்தராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே, பரம பதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு ஏதுவாக தை முதல் ஆனி வரை உத்ராயண வாசலும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசலும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
படித்ததில் பிடித்தது !!

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.

அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.

ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.

கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் "என்ன ஆயிற்று..?" என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.

கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே
ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.

உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.
*ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர்..!*

சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார்.

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை.

அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான்.

ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது.

அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான்.

எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.

அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான்.

பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.

சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.

இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.

ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாப்பின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள்.

ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான்.

சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார்.

அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.
திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.

அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார்.

தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார்.

அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.

விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார்.

அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.

அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள்.

கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும்.

அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அவரது ஜீவசமாதிக்கு ‘ஒரு யோகியின் சுயசரிதை’யை எழுதிய பரமகம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார்.

அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

நன்றி:- திரு.ச.பாலகிருஷ்ணன்
சிவ..சிவ" என்ற அந்த இரண்டு எழுத்து கூட போதும் பலன் உண்டு.
"சிவ..சிவ" என்ற அந்த இரண்டு எழுத்தை எங்க வேண்டும்னாலும், எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்.

"யத் த்வயஷ்ரம் நாம் கிரேரிதம் ந்ருணாம் ஸ்க்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசுஹந்தி".

"த்வயஷ்ரம்" இரண்டு அஷரம். பிறகு, பஞ்சாக்ஷரமாக முன்னாடி ப்ரணவம், பின்னாடி நம: - இத முழுவதும் சொல்லனும் கூட இல்லை, வெறும் இரண்டெழுத்தை சொன்னா கூட போதும் "சிவ..சிவ".

எப்படி சொல்ல வேண்டும் ஸ்நானம் பண்ணி, மடி பண்ணி, மூச்சை அடக்கி...? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். "ஸ்க்ருத் ப்ரஸங்காத்" - அதாவது, ஏதோ  பேசும்போது தற்செயலாக "சிவ சிவ" என்று சொன்னாலே பலன் உண்டு. "ஸ்க்ருத்" - ஒரு தடவை, "ப்ரஸங்காத்" - அரட்டை அடிக்கும் போது. அகஸ்மாத்தா பேச்சுக்கு நடுவில் அந்த இரண்டு எழுத்து வந்தால்கூட  போதும், "சிவப்பு", "அரிசி வடாம்" என்றாலும், அதில் வரும் "சிவ" என்ற இரண்டு எழுத்து போதும்,

"அகம் ஆசு அந்தி" " அகம்" - பாபத்தை, "ஆசு" - உடனே, "ஹந்தி" -  அழித்து விடுவது. பேச்சுக்கு நடுவில் "சிவ" என்ற இரண்டு எழுத்து வந்தா கூட போதும், பாபத்தை அழித்து விடும். 

வேதத்தில் ஜீவரத்தினமாக "சிவ நாமத்தை" ரொம்பவும் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறது. நாலில் மத்தியாக யஜுர்வேதத்தில் (தைத்திரீய, க்ருஷ்ண), அதன் மத்தியில் நாலாவது காண்டம், அதன் மத்தியில் ஐந்தாம் ப்ரச்னம். இதன் நடுவில் "ஶ்ரீ ருத்ரம்", அதில் நடு நாயகமாக "பஞ்சாக்ஷரம்" வருகிறது. இதிலும் மையமாக "சிவ" என்ற த்வயஷ்ரம் வருகிறது. அதனால் எப்பொழுதும் "சிவ" என்ற இரண்டு எழுத்தை, அக்ஷரங்களை சொல்லி லோகமெல்லாம் சிவம் தழைக்க செய்ய வேண்டும்.

மஹா பெரியவா, தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி..
நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கவேண்டிய வராஹ மந்திரம்!
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡
நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கவேண்டிய வராஹ மந்திரம்!
'எப்பொழுதெல்லாம் பூமியில் தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள்தோறும் நான் அவதரிப்பேன்' என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறி இருப்பதுபோல், தர்மத்தை நிலைநிறுத்த எடுத்த அவதாரங்கள் 22. அவற்றுள் பிரத்தியேகமான பத்து அவதாரங்களை நாம் தசாவதாரம் என்று கொண்டாடுகிறோம். மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மூன்றாவதாக அமைந்த அவதாரம் ஶ்ரீவராஹ அவதாரம். விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்த நாளை வராஹ ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம்.  

ஒரு முறை  இரணியாட்சன் என்னும் அரக்கன், தனக்குச் சமமாகப் போர் புரியக் கூடிய எதிரியைத் தேடினான். தனக்குச் சமமானவன் எங்கும் இல்லை என்னும்  ஆணவத்தில்,  பூமியைப் பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். தன் கதையுடன், மிகுந்த ஆணவத்தோடு கர்ஜனை செய்தவாறு சுற்றி வந்தான் இரணியாட்சன். தேவர்கள் அனைவரும் அரக்கனின் கொடுமையைத் தாங்க முடியாமல் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர்.


"தன் பக்தர்களையும், தேவர்களையும் காக்க வேண்டி பிரம்மாவின் நாசித் துவாரத்திலிருந்து, வெள்ளைப் பன்றியின் உருவில் தோன்றினார் மகா விஷ்ணு. முதலில், கட்டை விரல் அளவாக இருந்தவர், அதன் பின் ஒரு யானையின் அளவாக வளர்ந்தார். அப்படியே மேலும் மேலும் மேகமண்டலம் வரை வராஹ மூர்த்தி வளர்ந்தார். தன் இரு கொம்புகளால் கடலுக்கு அடியில் இருந்த பூமியைத் தூக்கி, உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றினார். ஆத்திரம் அடைந்து, வராஹ மூர்த்தியிடமே போர் புரியத் துணிந்த இரணியாட்சனை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார்" என்கிறது புராணம்.

இங்கே, அரக்கன் என்பது மனிதனின் தீய குணங்களைக் குறிக்கிறது. பூமி என்பது மனிதனின் உடலாகும். தீய குணங்களுக்கு ஆட்பட்ட இந்த உடல் மிகவும் தாழ்மையான நிலைக்குச் சென்றுவிடுகிறது.இறைவனின் கருணையின்றி நம்மால் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஆகவே புனிதமான நாளான "வராஹ ஜயந்தி" அன்று  தீய பழக்கங்களில் இருந்தும் தீய மனிதர்களின் சூழ்ச்சியில் இருந்தும் இறைவா என்னைக் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ள, நிச்சயம் அருள் புரிவார் வராஹ மூர்த்தி.

வராஹப் பெருமானின் பிரபலமான ஆலயங்கள் :
* தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம்.

* சென்னை - மஹாபலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தையில் "சுவேத வராஹர்" என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். இது திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகும்.  திருமண வரம் அருளும் தலமாகவும் திகழ்கிறது.


* திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மிகப் பிரபலமான வராஹப் பெருமானின் ஆலயம் உள்ளது.


* கஜுராகோ எனும் இடத்தில் அமைந்துள்ள பெரிய வராஹரின் உடல் மீது 274 தேவர்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.



* மத்தியப்பிரதேசத்தில் உள்ள வராஹர் ஆலயங்களில், பன்றி ரூபத்தில் , நான்கு கால்களுடன் , தன் உடல் முழுவதும் எண்ணற்ற தேவதைகளைத் தாங்கி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.


* தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீயக்ஞவராஹர் ஆலயம் மிகப் பிரபலமானதாகும்.


வராஹ ஸ்லோகம் :

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்


கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்


தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்


பொருள்: சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.


கொடிய நோய்கள் தீர, பகை அழிய,  தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கலாம் இந்த வராஹ மந்திரத்தை..!
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡
-
*கடவுளை விட குருவே உயர்வானவர்*

 கடவுளை விட குருவே உயர்வானவர் என்பதை விளக்கும் ஆன்மிகக் கதையை படியுங்கள்.

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.
உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்று சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்று சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

 ஆனால் *குரு* என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே *கடவுளை விட குருவே உயர்வானவர்*” என்றார் கடவுள்.
#குடசாத்திரி_போயிருக்கிறீர்களா?

கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையை தரிசிக்க வருவோர் அவசியம் போய்ப் பார்க்கவேண்டிய அற்புத இடம் இது!

ஸ்ரீமூகாம்பிகைக் கோயிலை விட்டு வெளியே வந்து, தலையை உயர்த்தினால் போதும். சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குடசாத்திரி மலையைப் பார்க்கலாம். இங்குதான் ஆதிசங்கரர் ஸ்ரீமூகாம்பிகையைப் பார்த்து அழைத்து வந்தார் என்பர். அரிய மூலிகைகளும், புண்ணிய நதிகளும் கொண்ட ஸ்தலம் குடசாத்திரி மலை! இத்தனை விசேஷங்கள் இருந்தும் அநேகம் பேர் அங்கே போகாததற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

- ரிஸ்க்!

- காரும் போகாது!

- பஸ்ஸும் கிடையாது!

ஜாதகத்தில் ஆயுட்பாவமான எட்டாம் இடம் பலமாக உள்ளவர்களுக்கு மட்டும் ஜீப் கிடைக்கும் என்றார்கள். இந்த 'திகில்’ விவரங்கள் தெரிந்த உடனேயே 'பல்டி’ அடித்தேன். ''இங்கிருந்தே கும்பிட்டுக்கலாமே!'' என்றேன்.

''அப்பா! கட்டாயம் போயே ஆகணும்'' என்றான் என் மகன்.

''புரியாமல் உளறாதே! என் மாதிரி இளகின- பலவீனமான இதயம் உள்ளவர்களால் மலையெல்லாம் ஏற முடியாது. 'டிரெக்கிங்’ வேற இருக்காம்'' என்று நான் மறுபடியும் சொல்ல... ''இம்சை அரசன் மாதிரி புறமுதுகிட்டுப் பின்வாங்காதீங்கப்பா'' என்று வலுக்கட்டாயமாக இழுத்தான் மகன்.

திகில் பயணமும் திகட்டாத பேரின்பமும்..!

''இந்த மலை ஏற்றத்துக்கு உன் அம்மாவின் கால்முட்டி இடம் கொடுக்காதுடா...'' என்று நான் கரிசனமாகச் சொல்லி முடிப்பதற்குள், ''ஏங்க..! நான் அஹோபிலம் மலை மேலேயே நடந்திருக்கேன். இது என்ன ஜுஜுபி! இந்த மலையேற்றத்துக்கு நான் தயார்'' என்றாள் மனைவி.

வேறு வழி இல்லாததால் ஒரு ஜீப் பிடித்தோம், மலை மேல் ஏற! மேலே போய் திரும்புவதற்கு ரூ.2500 வாடகை என்றார் ஜீப் டிரைவர். எவ்வளவோ கெஞ்சியும் ஒரு பைசாகூட குறைக்கவே முடியாது என்று மலையாளத்தில் பிடிவாதம் பிடித்தார் டிரைவர்.

வேறு ஜீப்பும் உடனடியாகக் கிடைக்காததால், அந்த ஜீப்பிலேயே குடசாத்திரிக்குப் புறப்பட்டோம். ஸ்ரீமூகாம்பிகை கோயில் நிர்வாகத்தால் இயங்கி வரும் அன்னதானக் கூடத்தைக் கடந்து, இடது பக்கம் திரும்பினால் மலையேற்றம் ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் சாதாரண 'தார்’ சாலையில்தான் ஏறிக்கொண்டிருந்தோம். இருபுறமும், பச்சை பச்சையாக, உயரம் காண முடியாத மரங்கள் இது காட்டுப்பாதை என்பதை உணர்த்தின. அருகில் #சௌபர்ணிகா நதியும் எங்களுடனேயே வந்துகொண்டிருந்தது. நதியில் முழங்கால் அளவுதான் நீர் இருந்தது.

மலை உச்சிக்குப் போவதற்குள் இந்த நதி பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று பார்க்கிறேன்.

சௌபர்ணிகா என்பது கருடனின் இன்னொரு பெயர். கருடனின் தாய் வினூத்தா, பந்தயம் ஒன்றில் தோற்று, அடிமையாகி, நிறையச் சிரமப்பட்டதால், மனச் சாந்தி வேண்டி இங்கே தவம் புரிந்தது கருடன். அதன் தவத்தை மெச்சிய தேவி அதற்கு தரிசனம் தர... குடசாத்திரியில் உருவான இந்த சாதாரண நதி #சௌபர்ணிகா என்னும் புண்ணிய நதியாகிவிட்டது.

திடுதிப்பென்று, எங்கள் பயணத்தில் சாலையின் முகம் மாறி, கரடு முரடாகியது. தாறுமாறாகக் குதித்துக் குதித்து ஓடியது ஜீப். உட்கார்ந்தபடியே, அகப்பட்ட கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்.

''விட்டல் சார், இனி இந்த ரூட் பூரா இப்படித்தானா?'' என்று டிரைவரிடம் கேட்டேன். ''ம்ஹூம்!'' என்றார். ''போகப் போக இதைவிட இன்னும்கூட மோசமா இருக்கும். ஆனா, பயம் வேண்டாம்'' என்றார்.

ஆனால், நடுப் பிடரியில் 'ஜில்லிட்டது’ வியர்வை! காட்டுப் பகுதி கொஞ்சம் அடர்த்தியாய் மாற, திடீரென்று பாதையே இல்லாத மலை மீது, குத்துமதிப்பாக மையமாகப் போய்க்கொண்டிருந்தோம். ஜீப் கொஞ்சம் சாலையில் இருந்து தவறி இறங்கினாலும்... அதோ கதிதான்!

கடைசியில், ஒருவழியாக ஒரு சிறிய ஊருக்கு வந்து சேர்ந்தோம். சிலர் மலையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் துளிக்கூட பயம் என்பதே தெரியவில்லை! எங்களுக்குத்தான் இந்த திகில், பயம் எல்லாம்! எங்கள் உடம்பிலிருந்து வழிந்த வியர்வை உண்மை! கை, கால்கள் மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட நடுக்கம் உண்மை! மனசுக்குள் உண்டான வெதுக் வெதுக் உண்மை! முதல் தடவை என்பதால்தான் இப்படி பயந்தோம் என்று நாங்களே யூகித்துக்கொண்டோம்.

அந்தச் சிறிய ஊருக்கு மேல் ஜீப் போகாது என்பதால், மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். மலையின் அமைப்பு கொஞ்சம் ரம்மியமாக இருந்தது. சிறிது தொலைவுக்குப் பாதை இல்லாமல் பாறைகளும் மரங்களுமாக இருந்தது. பிறகு... மலை உச்சி! அங்கே போய்ச் சேருவதற்குள் குடசாத்திரி மலை பற்றிச் சொல்லிவிடட்டுமா?

மல்லிகை மலை என்பதுதான் குடசாத்திரியின் அர்த்தம். கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரம். வருடத்திற்கு எட்டு மாதங்கள் மழை இருக்கும். அங்கிருக்கும் காட்டுக்குள் புலி, சிறுத்தை, பாம்புகள் எட்டிப் பார்ப்பது உண்டு. 1862-ஆம் ஆண்டைய ரெக்கார்டுகளில், ஆங்கிலேயேர்கள் இம்மலையைப் பற்றித் தெளிவாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். ஒருமுறை, மலையில் இரும்புத் தாதுக்கள் இருப்பதால், சுரங்கம் தோண்டப் பார்த்தது அரசாங்கம். ஊரே கூடிப் போராடித் தடுத்துவிட்டார்களாம்.

சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு, மலை உச்சிக்கு வந்து சேர்ந்தோம். தூரத்தில்... நீலவானமும் கடலும் இணைந்து உடுப்பியும், மங்கணூரும் குத்துமதிப்பாய் அரபிக்கடல் அருகே எங்கள் பார்வைக்குத் தெரிந்தது.

அங்கிருந்து மேலும் 20 நிமிட பயணம். மீண்டும் ஒரு காட்டு வழிப் பாதை. அங்கே ஒரு கடைக்காரர் மோரும், தர்பூசணியும், வேர்கடலையும், விற்றுக் கொண்டிருந்தார். அங்கே ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தோம். ''இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?'' என்று, மோர்க்கடை நடத்துபவரிடம் கேட்டபோது, ''இப்படிப் போய் முதலில் குகை விநாயகரை பார்த்துவிட்டு வாருங்கள். அப்புறம் இங்கிருந்து நடந்தா பார்க்க வேண்டிய இடம் வரும்'' என்றார்.

அவர் சொன்னபடியே செய்தோம். மறுபடியும், காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி, மையமாய் நடந்தால்... மற்றொரு பரந்த பச்சைப்பசும் புல்வெளி. நடந்து நடந்து உடம்பில் அயர்ச்சி உருவானாலும், இதமான காற்று ஆதரவாக எங்களை வருடியது.

''பொல்யூஷன் இல்லாத நூறு சதவிகிதம் சுத்தமான காற்று'' என்றேன் நான்.

''இதுதான் தெய்விகக் காற்று'' என்றாள் மனைவி.

அங்கிருந்து இன்னொரு மலை உச்சி. 'ஏண்டா வந்தோம்’ என்று அலுத்துக்கொண்டே ஏறினால்..

ஒரு மண்டபம்!

இதை இப்படி அழைக்கக்கூடாதாம். 'சர்வஜன பீடம்’ என்றார்கள்! கோபுரம் இல்லை. கலசம் இல்லை. ஆகம விதிகள் ஏதுமில்லாமல் இருந்தாலும், அதைக் காணும்போது 'கஷ்டப்பட்டதுக்குப் பலன் இல்லாமல் இல்லை’ என்றுதான் எங்களுக்குத் தோன்றியது.

அந்த மண்டபத்தை நெருங்க நெருங்க, யாரோ உட்கார்ந்து வரவேற்பது போல இருந்தது. நெருங்கிவந்துவிட்டால்... அட! சாட்சாத் ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள்!

இது ஒன்றும் பெரிய ப்ரஹ்மாண்டமான சிலை இல்லைதான். கேதார்நாத்தில் அவரது பளிங்குச் சிலையைப் பார்த்திருக்கிறேன். கோகர்ணத்தில் கடல் பார்த்தபடி அவர் இருப்பதை தரிசித்திருக்கிறேன். ஸ்ரீசைலத்தில்கூட அவரை சிலை வடித்திருக்கிறார்கள். எவ்வித பூஜை புனஸ்காரங்கள், சிறப்பு தரிசனம், நேத்ர சேவா என்கிற அவஸ்தைகள் எல்லாம் இல்லாமல், அழகாய் அம்சமாய் இருந்தார் ஸ்ரீஆதிசங்கரர்!

இப்போது எங்களுக்கு அயர்ச்சி இல்லை. மலைகள் ஏறிய வலி மறந்தோம்! சோர்வு போயே போச்சு!

இருந்தாலும், 'இந்த மண்டபம், ஸ்ரீ ஆதிசங்கரர், இவ்வளவுதானா? இதற்கா இத்தனைப் பாடு?' என்று மனசு கேட்டது. கொஞ்சம் சத்தமாகக் கேட்டதோ என்னவோ, அங்கே இருந்த புரோகிதர் காதுகளில் இந்த கேள்வி விழுந்திருக்கும்போல! தானாக முன்வந்து, கன்னடம் கலந்த தமிழில் விளக்கினார்.

''இதே மாதிரியான பீடம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ளது. அதை நிர்மாணித்தவர் பகவான் சங்கரர். அதற்கு வயது இரண்டாயிரம் இருக்கும். இங்கிருந்து தவமிருந்த ஆதிசங்கரருக்கு, இந்த கோலம் போட்ட இடத்தில்தான் ஸ்ரீமூகாம்பிகை தேவி தரிசனம் தந்தாள்'' என்றவர், பிளந்த கற்தரையில் போடப்பட்டிருந்த அந்தக் கோலத்தை எங்களுக்குக் காண்பித்தார். அவர் இட்டுக்கட்டி சொன்னாரோ என்னவோ, அது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அந்த இடத்தைத் தொட்டு வணங்கும்போது, தேவியின் பாதத்தில் விழுந்து சேவித்தது போலிருந்தது. மேலும், அவரே தொடர்ந்தார்...

''இங்கே எழுந்தருளிய தேவியை, தனது ஊரான காலடிக்குக் கூட்டிச் செல்ல நினைத்து, தாயை அழைத்தார், சங்கரர். 'சரி வருகிறேன். நீ முன்னால் போ, பின்னாடியே நான் வருவேன். எக்காரணத்தைக் கொண்டும் திரும்பி என்னைப் பார்க்கக் கூடாது’ என்று நிபந்தனையிட்டாள் தேவி. ஒப்புக்கொண்டு நடந்தார் சங்கரர். மலையை விட்டு இறங்கி, கொல்லூர் வந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த தேவியின் ஜல், ஜல் என்ற கொலுசு சத்தம் நின்றுவிட்டது. தன்னையறியாமல் சங்கரர் திரும்பிப் பார்க்க, கொல்லூரிலேயே தங்கிவிட்டாள் ஸ்ரீ மூகாம்பிகை...' என்று விளக்கம் சொன்னார் அவர்.

இந்தத் தகவல்களைச் சொன்ன புரோகிதர், ''இங்கே தேவியின் தரிசனம் கண்ட பிறகுதான் #சௌந்தர்யலஹரியை இயற்றினார் ஆதிசங்கரர்'' என்ற இன்னொரு உபரித் தகவலையும் எங்களிடம் தெரிவித்தார்.

அந்த இடத்தில் இருந்து தொடர்ந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மலையேறினால், சௌபர்ணிகா நதி உற்பத்தியாகும் இடம் வரும் என்றார்கள். எங்களால் அதற்கு மேல் நடக்கத் தெம்பில்லை என்பதால், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக் கொண்டு, திரும்பி நடந்தோம்.

அப்போது எங்கள் மனத்தில் நிம்மதி இருந்தது. அமைதி நிரம்பியிருந்தது. கொல்லூரில் ஏற்படாத பரவசம் இங்கே உண்டாகியிருந்தது.

அனுபவித்துக்கொண்டே இறங்கினால், சட்டென்று மோர் கடை; மீண்டும் தொடர்ந்தால்... பெரிய இறக்கம்! முக்கால் மணி நேரம் மூச்சுப் பிடித்து ஏறியதை ஐந்தே நிமிடத்தில் இறங்கியது போலிருந்தது. ஜீப் நின்றிருந்த இடத்தை அடைந்தோம். மறுபடியும் ஜீப் பயணம். அதே அபாயகரமான சாலை. வயிற்றில் அமிலம் உண்டாக்கும் அதே இறக்கம். ஆனால், இப்போது பயம் எதுவும் தெரியவில்லை. காசு கொடுத்து, கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும், கஷ்டப்பட்டதற்கான பலன் கிடைத்த மகிழ்ச்சியை உணர முடிந்தது.

''பயணம் எப்படி இருந்தது?' - மனைவி கேட்டாள்.

''ஜென்ம சபால்யம் அடைந்தேன்!'' என்றேன்.

Copied
*லிங்க புராணம் ~ அறிமுகம்*

*சூதர்.,* நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது. இதைப் பக்தியுடன் கேட்பவர் நெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர் என்றார்.

பஞ்ச பூதங்களின் தோற்றம்
======================

பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும்., ஆதாரமானதும்., வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி., அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடமிருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும்., அதிலிருந்து காற்றும்., காற்றிலிருந்து நெருப்பும்., நெருப்பிலிருந்து நீரும்., நீரிலிருந்து நிலமும் உண்டாயின.

வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும்., கர்மேந்திரியங்கள் ஐந்தும்., மனமும் உண்டாயின. தத்துவங்கள் ஓரண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன்., அரி., அரன் என்று படைத்தல்., காத்தல்., அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப் படுகின்றார்.

பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயதின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர்.

தொடரும்....

*ப்ரம்மா முராரி சுரர்ச்சித லிங்கம்..!*

ஞாயிறு, 24 மே, 2020

*25/05/20*
*அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள்-*

*முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்*

எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிறோம்.

அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.
அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.

வயதான காலம். உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை.

இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது.

ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.

‘எல்லாம் இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!”

அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.

இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.

அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ‘ இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்’ என்று அமைந்திருக்கிறது.

ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!

என்ன சிரமத்தைப் படுவார் அவர்?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:

எல்லாவற்றுக்கும் பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை.

இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது. இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட ‘போய் சேர்ந்து விடுவதே நல்லது!’ அந்த மாதிரி ஒரு நிலை!

இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?

அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?

சொல்லமாட்டார்! அந்த சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.

அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.

‘பிறர்க்கே உழைத்து’ என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ‘பிறர்’ என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே ‘தான்’ அல்லாத தன் ‘சரீரத்துக்கே’ என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம்.

நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான்.

இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப்பட்ட சுவர் இது!

இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு!

அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!

இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.

இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே ‘இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது’ என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது.

சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது ‘வந்து திருவடியை அடைந்தேன்’ என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள்.

 நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது ‘உன்னிடத்திலே வந்தேன்’ என்று சொன்னால் அவன் ‘இப்போதாவது வந்தாயே’ என்று ஏற்றுக் கொள்கிறான்.

‘ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.

அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.

கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!

அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?

விவேகமுடையவனுக்குத்தான் வரும்.

விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.

விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👤📝 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏