மேல்படப்பை
*மூலவர்*ஸ்ரீதழுவக்கொழுந்தீஸ்வரர்
*தாயார்* காமாட்சி
*உற்சவர்* சோமாஸ்கந்தர்
*தலவிருட்சம்* மாமரம்
*ஸ்தலவரலாறு*
ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களைப் பொத்தினார். சர்வ லோகத்தையும் கட்டிக் காத்தருளும் ஈசனின் கண்கள் மறைக்கப்பட்டதால், உலகில் இருள் சூழ்ந்தது; இயக்கம் நின்றது; எல்லாமே அற்றுப் போயின. சர்வலோகத்துக்கு அதிபதியான ஈஸ்வரன், உமை யைப் பார்த்துக் கடுகடுத்த குரலில் சொன்னார்: ‘‘உமையே... விளையாட்டின் உச்சத்துக்குப் போவதாக எண்ணி, வினையை உன்னிடம் வரவழைத்துக் கொண்டு விட்டாய். ஒரு நொடிப் பொழுது என் கண்கள் மூடப்பட்டால், என்னென்னவெல்லாம் ஆகும் என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டாயா? நம்மை நம்பி இருக்கும் உயிர்களுக்கு நாமே அம்மை- அப்பன் என்பதை ஏன் மறந்தாய்? அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காப்பதே நமது பொறுப்பு. இதை அறியாதவளா நீ? போ, பூலோகம்! உன்னைச் சூழ்ந்த வினையை வேரறுத்து விட்டு என்னிடம் வா. இதுதான் உனக்கு சாபம்!’’ என்று இறுக்கமுடன் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஈசன். கலகலப்பாக ஆரம்பித்த சூழல், கவலையைத் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டதே என்று வருந்திய தேவி, பூலோகம் வந்தாள். தன்னைச் சூழ்ந்த சாபத்தை விரட்ட அந்த சர்வேஸ்வரனையே துதித்து, அவன் தரிசனம் பெற்று பாவம் போக்க எண்ணினாள். மந்திர மலையில் இருந்து புறப்பட்ட அவள் அப்படி வந்து சேர்ந்த இடம்தான் காஞ்சி மாநகரம். தனது தவத்துக்கு இந்த நகரையே தேர்ந்தெடுத்தாள்.
தெள்ளிய நீர் பொங்கிப் பெருகும் கம்பா நதிக் கரையில் லிங்கத்தை ஸ்தாபித்து, தூய அன்புடன் நறுமலர்கள் கொண்டு பூஜை மற்றும் வழிபாடுகளைச் சிறப்பாகவே செய்து வந்தாள். உமையம்மையின் தொடர் வழிபாட்டில் மகிழ்ந்த ஈஸ்வரன், ஒரு நாள் தேவியைச் சோதிக்க நினைத்தார். எனவே, கம்பா நதியில் திடீர் வெள்ளத்தை வரவழைத்தார். திடீரென பெருக்கெடுத்து வரும் வெள்ளம் கண்டு திகைத்தாள் தேவி. தனது, ‘பூஜையில் என்ன குறை வந்ததோ?’ என்று கலங்கினாள்.க ஈஸ்வரனை நினைந்து பிரார்த்தித்தாள். எனினும், வெள்ளத்தின் வேகம் அடங்கவில்லை. கம்பா நதிக் கரையில், தான் ஸ்தாபனம் செய்து வழிபட்டு வரும் லிங்கத் திருமேனியை இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமோ என்று பயந்தாள். தவித்தாள். ஒரு கட்டத்தில் ஓடிப் போய் தன் நாயகனாம் சிவலிங்கத் திருமேனியை, மெல்லிய தன் இரு கரங்களால் அணைத்து மார்போடு இறுக்கிக் கொண்டாள். பார்வதிதேவியின் தழுவலுக்குக் குழைந்ததால் இறைவன் பின்னாளில் ‘தழுவக் கொழுந்தீஸ்வரர்’ ஆனார்.
*ஆலய அமைப்பு*
கிழக்குத் திசை பார்த்த ஆலயம். மூன்று நிலை ராஜ கோபுரம். ஐந்து கலசங்கள். உள்ளே நுழைந்தவுடன் தழுவக்கொழுந்தீஸ்வரரைப் பார்த்த வண்ணம் சூரியன் மற்றும் சந்திரனின் விக்கிரகங்கள், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியன உள்ளது.வலப் பக்கம் அன்னை ஸ்ரீகாமாட்சி சந்நிதி. இதை அடுத்து, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்கள் அமைந்துள்ள தனி மண்டபம். சுதையால் ஆன துவாரபாலகர்களைதாண்டி உள்ளே நுழைந்தால், தழுவக்கொழுந்தீஸ்வரர் கருவறை. ஈஸ்வரனை வணங்குவதற்கு முன் பிராகார வலம் வருவோம். பிராகார வலத்தின்போது முதலில் நால்வர் தனி மண்டபத்தில் தரிசனம் தருகின்றனர். வீரபத்திரர், சரபேஸ்வரர், வெற்றி விநாயகர், காசி விஸ்வநாதர், நந்தி தேவர்- பலிபீடத்துடன் கூடிய திருவாலீஸ்வரர்- திருநல்லழகி அம்பாள், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வர பகவான், நவக்கிரகம் முதலான சந்நிதிகள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. தவிர, கோஷ்ட தெய்வங்களான நர்த் தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் தங்களுக்கு உரிய இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். மகா மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி விசாலமான கருவறை. உள்ளே- தழுவக்கொழுந்தீஸ்வரர், லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு இடப் பக்கம், காமாட்சி அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. பிராகார வலத்தின்போது கோஷ்ட தெய்வங்கள் வைஷ்ணவி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சன்னதிகள் உள்ளன.
*அமைவிடம்*
சென்னை- தாம்பரம்- காஞ்சிபுரம் பாதையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள படப்பையில் உள்ளது இவ்வாலயம்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் கோயில் இருக்கிறது.
*ஆலய முகவரி*
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்,
மேல்படப்பை கிராமம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் 601 301
இவ்வாலயம் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.