செவ்வாய், 10 செப்டம்பர், 2019

அவதாரங்களும் அவற்றின் ஆதார சக்திகளும்!

அம்பிகை பண்டாசுரனுடன் யுத்தம் செய்தபோது அவன், ஸர்வ அசுராஸ்திரம் எனும் அஸ்திரத்தால், ராவணன், பலி, ஹிரண்யாக்ஷன் முதலிய அசுரர்களை உண்டுபண்ணிப் போருக்கு அனுப்பினான். அவர்களை எதிர்க்க அம்பிகை தன் பத்து விரல்களிலிருந்து விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஆவிர்பவிக்கச் செய்தாள்.

கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : என்கிறது லலிதா சகஸ்ரநாமம். எந்த அவதாரத்திற்கு ஆதார சக்திகள் யார் யார் என்பதை அம்பாள் அஷ்டகம் விளக்குகிறது.

மத்ஸ்யாவதாரம் - கமலாத்மிகா: இவள் மகாலட்சுமியே. பொருள் மற்றும் அறிவு வறுமைகளையும் நீக்குபவள். அறிவுக் களஞ்சியமான வேதத்தைக் காக்க சக்தி அளிப்பவள்.

கூர்மாவதாரம் - பகளாமுகி: இவளை வழிபட்டால் ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் ஆகியவை செய்து நீரிலும் நெருப்பிலும் நிலை குலையாமல் வாழும் சித்தி கைகூடும். தன் அங்கங்களை உள்ளே சுருக்கி, ஸ்தம்பனம் செய்து கொள்ளும் பிராணி ஆமைதானே. பகளாமுகியே கூர்மாவதாரத்தின் உட்சக்தி.

வராஹ அவதாரம் - புவனேஸ்வரி: இவள் இதயாகாசத்தில் திகழும் ஞான வெளி. அன்பர்களுக்காகச் சிவந்த அன்னையாக வந்தவள். புவனம் முழுவதையும் நாசிமுனையில் தூக்கிய வராஹ அவதாரம் புவனேஸ்வரியின் ஆவிர்பாகம்.

நரசிம்ம அவதாரம் - திரிபுர பைரவி: திரிபுர பைரவி அன்பின் வடிவம். ஆனால் அச்சமூட்டக்கூடியவள். பைரவம் என்றால் அச்சமூட்டுதல். நரசிம்மமும் அப்படியேதான். அச்சமூட்டும் வடிவமானாலும் காருண்யமூர்த்தி.

வாமன அவதாரம் - தூமாவதி: நம் சிந்தனை என்கிற தவிட்டைப் புடைத்து, உண்மையான ஆத்ம அரிசியை நிற்கச் செய்யும் அனுக்கிரகம் செய்பவள் தூமாவதி. இவளைப் புகை சக்தி என்பர். ஒளிமய அக்னி இன்றிப் புகை ஏது? மஹாவிஷ்ணுவின் யோகநித்திரை இவள். இவளே வாமன சக்தி.

பரசுராம அவதாரம் - சின்னமஸ்தா: தன் தலையைத் தானே வெட்டிக் கொண்டு விளங்கும் வித்யுத் (மின்) சக்தியான இவளே பரசுராம சக்தி.

பரசுராமர் தன் அன்னையின் தலையை வெட்ட நேர்ந்ததல்லவா?

ராமாவதாரம் - தாரா: இவளது மந்திரமே ப்ரணவ தாரக மந்திரமான ஓம். தாரக நாமம் ராம நாமமே. அதற்கேற்ப ராமர் தாராவின் சக்தியாகக் கூறப்படுகிறார்.

கிருஷ்ணாவதாரம் - காளி: அழகும் அன்பும் உருவான கண்ணனே இவளது சக்தியைப் பெற்றவர். இவர் விளையாடியே காளியின் தொழிலாகிய சம்ஹாரத்தை மேற்கொண்டவர். காளியும் கருப்பு, இவரும் கருப்பு. காலோஸ்மி என்று கீதையில் கிருஷ்ணன் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

பவுத்தாவதாரம் - மாதங்கி: வாக்தேவி மாதங்கியே பவுத்த அவதார உட்சக்தி.

கல்கி அவதாரம் - திரிபுரசுந்தரி: காமமாகிய மன்மதன் எரிந்ததும் அந்தச் சாம்பலிலிருந்து காமத்தின் விளைவே குரோதம் என்று காட்டவே பிறந்தான் பண்டாசுரன். இவனை திரிபுரசுந்தரி சம்ஹரித்தாள். மாதுளை நிறத்தவளான இவள் செவ்வாடையும் செம்மலரும் பூண்டு, இதயச் செம்மையின் உருவாக பிரும்மத்தின் எண்ணமற்ற சாந்தத்தில் தோன்றிய முதல் எண்ணமாகிய தன் உணர்வு என்ற சிவப்பாகத் திகழ்கிறாள்.

கலியுக முடிவில் கருமையான அந்தகாரம் சூழும்போது மனச் செம்மையை மீண்டும் உண்டாக்க அவதரிக்கும் கல்கி, இவள் அருள் விலாசமே ஆவார்.
லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?

புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், லட்சுமி நிவாஸ் என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே! லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன். பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.

பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன். பெரியோர் களுக்குப் பணிவிடை செய் தும் அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். பண்டங்களை வீணடிப்போர், கோபமுள்ளோர், தேவதைகள், பெரியோர்கள், வேத பிராமணர் களை பூஜிக்காத, மரியாதை செய்யாத பெண்களிட மும், கணவனுக்கு எதிராகவோ, விரோத மாகவோ இருக்கும் பெண்களிடமும் நான் வசிப்பதில்லை. எப்போதும் படுத்திருப்பவளும், சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும், நான் வசிப்பதில்லை. வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும் போது தொம், தொம்மென்று பூமி அதிர நடக்கும் பெண்களின் இல்லங் களிலும் நான் வசிப்பதில்லை.

வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும், அன்றில் கூவுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பியும், சிம்மங்கள், யானைகளால் கலக்கப் பட்ட நதிகளிலும் நான் வசிக்கிறேன். யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன். எந்த வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யப் பட்டு தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படுகிறதோ அவ் வீடுகளிலும், நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளோரிடமும் வசிக்கிறேன். என்னிடத்தில் எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார், என்கிறார். இதையெல்லாம் கவனமாக படித்துப் பார்த்து, லட்சுமிதேவியின் அருள் பெறவும், நம் வீடுகளில் அவள் வாசம் செய்யவும் முயற்சி செய்யலாம் வெறும் போர்டு போட்டு விட்டால் அவள் வந்து விடுவாளா?
-------------------------------------------------------------------------------------------------------------------------
காசிக்குக் காவலரான ஆந்திரா காலபைரவர்!

காலபைரவர் கோயில்கள் இந்தியாவில் மட்டுமல்ல. இந்தோனேஷியா, நேபாள் முதலான வெளிநாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் காசி ÷க்ஷத்திரத்தை அடுத்து, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இஸன்னபல்லி என்னும் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹைத்ராபாத் நகரிலிருந்து சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிஜாமாபாத் நெடுஞ்சாலையில் உள்ளது இக்கோயில். காசிக்குக் காவலரான கால பைரவர் இங்கு எப்படி வந்து கோயில் கொண்டார்? மற்றொரு கிளைக் கதை கர்நாடகத்தை ஆண்ட பாமினி சுல்தான்களுக்கு தோமகொண்டா என்ற சமஸ்தானத்தை தங்களின் கீழ் பரிபாலித்து, வரி வசூலித்துத் தர சமஸ்தானாதிபதி ஒருவர் தேவைப்பட்டார். எனவே, அங்கே பிரபலமான காச்சா ரெட்டி என்பவரை அழைத்து சமஸ்தானத்தைப் பரிபாலிக்கும் உரிமையை அஹமத் ஷா மற்றும் அவரது மகன் அஹமத் கான் ஆகியோர் அளிக்கின்றனர். இது கி.பி 1415-1435 ல் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

காச்சா ரெட்டிக்குப் பின் அவர்களின் வம்சாவளியில் வந்த காமி ரெட்டிக்கு(1550-1600) பகைவர்களிடமிருந்து சமஸ்தானத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியமாகப் பட்டது. இந்தக் குழப்பத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்ற காமி ரெட்டியின் கனவில்காலபைரவர் தோன்றி காசிக்குப் போய் தன் சிலையைக் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்தால், அவர்களது சமஸ்தானத்தையும் அவர்களையும் தான் காப்பாற்றுவதாக உறுதி கூற, காமி ரெட்டி தன் சகோதரர் ராமி ரெட்டியுடன் காசிக்குச் சென்று சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வருகிறார்கள். அவர்களின் சமஸ்தானத்தை நெருங்கும் போது ஓர் இடத்தில் வண்டிச் சக்கரங்கள் தரையில் புதைந்து நின்று விடுகின்றன. எவ்வளவு முயன்றும் வண்டி நகரவில்லை. சிலையும் அசையவில்லை அதனால், பைரவருக்குக் கோயில் அங்கேயே எழுப்பப்பட்டது. அந்த இடம்தான் இஸன்னபல்லி

ஒவ்வொரு பிறப்பிலும் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உடற்பிணிகளும், பில்லி சூன்யம் முதலியவற்றால் ஏற்படும் துயரங்களும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் தீரும் என்பது நம்பிக்கை. கிராமங்களில் எட்டு திக்கும் பிரதிஷ்டை செய்யப்படும் அஷ்டதிக் பாலர்களும் காலபைரவர் உறுதுணையுடனே செயல்பட்டு, கிராமங்களை கெடுதல்களிலிருந்து காப்பதாக நம்பிக்கை. மார்கழி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் கடும் விரதம் அனுஷ்டித்து, கண் விழித்து காலபைரவரைத் தியானித்து, அருகிலுள்ள புஷ்கரிணியில் நீராடி, பைரவருக்கு தேங்காய், மலர்கள், கடுகு எண்ணெய், கறுப்பு எள் முதலியவற்றைப் படைத்து வழிபட, ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும். கெட்ட ஆவிகள் தரும் தொல்லை நீங்கும். எடுத்த காரியங்களும் வெற்றிபெறும். சிறைப்பட்டவரும் விடுதலை பெறுவர். இந்தப் புஷ்கரணியில் நீர் கோடையிலும் வற்றுவதில்லை. இதில் முழுகி எழுந்தால் பாவங்கள் மறையும் என்பதும் ஒரு நம்பிக்கை. காலபைரவரின் சக்தியால்தான் புஷ்கரணியில் நீர்மட்டம் குறைவதில்லை என்கின்றனர். சுண்டுவிரலில் பிரம்மாவின் துண்டிக்கப்பட்ட தலையுடனும், பைரவ (நாய்) வாகனத்துடனும் சித்தரிக்கப்படும் காலபைரவர், நேபாளத்தில் சுப்ரீம் ஜட்ஜ். இவர் சன்னிதியில் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
-------------------------------------------------------------------------------------------------------------------------
குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை!

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.

7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.

12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.

18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.

19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.

23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.

28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.

29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.

30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.

32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.

33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.

34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.

35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.

42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.

44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.

53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.

57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.

59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.

60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.

64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.

65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.

68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.

70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.

74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.

77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.

78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.

79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.

80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.

82. கோபுர தரிசனம் கோடி நன்மை.

83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.

84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.

87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.

88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.

92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.

94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.

95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.

97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.

98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.

100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
பஞ்சாங்கம் ஏன் படிக்க வேண்டும்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மாதிரி அமைவதுண்டு. ஒரு ஆண்டு முடிந்து இன்னொரு புத்தாண்டு பிறக்கும் சமயத்தில், இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்குமோ என்று மனதில் சஞ்சலமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதுண்டு. சென்றவருடம், செழிப்பாய் இருந்தேன். இந்த வருடமும் அதேபோல் இருக்க வேண்டுமே என்று புத்தாண்டை இனிய முகத்தோடு வரவேற்பவர்களுமுண்டு. சென்ற ஆண்டு பட்டதே போதுமடா சாமி, இந்த ஆண்டாவது நிம்மதியாய் இருக்க ஆண்டவனே எனக்கு அருள்புரிவாய் என்று அழுது புலம்புபவர்களும் உண்டு. ஆங்கிலப் புத்தாண்டை ஆவலோடு அமோகமாகக் கொண்டாடும் நம் தமிழர்களுக்கு, தமிழ்ப்புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ ஏற்படுவதில்லை. அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களையும் முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? கேரளத்தில் விஷுவுக்கு, ஆந்திராவில் யுகாதிக்கும் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து வைத்திருப்பவர்கள் கூட ஒருசிலர் மட்டுமே.

ஒவ்வொரு நாட்டிற்கும், அவரவர்கள் மொழி கலாச்சார வழக்கப்படி காலம் - நேரம் போன்றவற்றை கணக்கிடுகையில், ஆண்டுகள், வரிசைப்படி வருவதுண்டு மோதுவதுண்டு. தமிழ் கலாச்சாரப்படியும்,சம்பிரதாயப்படியும் சித்திரை முதல் தேதி தமிழ் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கலாச்சாரப்படி தமிழ் வருடப்பிறப்பை எப்படி யெல்லாம் கொண்டாடவேண்டுமென்று நமது பெரியோர்களும், தமிழ் அறிஞர்களும் சில வதிமுறைகளையும், வழிமுறைகளையும் வகுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். இதில் முக்கியமானது பஞ்சாங்கப் படனம் என்பது. மனிதனின் வாழ்வை அவனது ஜாதகம் எப்படி கணிக்கிறதோ, அதுபோல ஒருவருடத்தின் பாலபலன்கள், நன்மை தீமைகளை விவாஹ சக்ர, திதிநேத்ர, ஜீவமூர்த்தி, கிரஹ மூர்த்திகளை வழிபட்டு, வரவேற்று, எல்லோருக்கும் தெரிந்து கொள்ளும்படியாக அந்த பஞ்சாங்கத்தை இறைவன் முன்பு வைத்துப் படிப்பதே பஞ்சாங்கப் படனம் என்று அழைக்கப்படுகிறது.

ஓருநாட்டின் காலநேரம், வறுமை, செழுமை என எத்தனையோ விஷயங்கள் நமக்கு விஞ்ஞான ரீதியாகத் தெரிந்திருந்தாலும், அவைகளை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடுகிறது. எனவே, இந்தப் பஞ்சாங்கத்தை ஒரு கோயிலில் அதிகாலை வேளையிலே தூய்மையுடன் இறைவன் முன்பு வைத்து பூஜித்துவிட்டு படிக்க வேண்டும். தெய்வீகக் காரியங்களில் ஈடுபட்டுள்ள ஸத்சங்க நிர்வாகிகளோ, இறைபக்தியில் ஈடுபாடு கொண்ட பெரியோரோ, மரியாதைக் குரியவர்களோ இந்தப் பஞ்சாங்கத்தை ஊர்மக்கள் முன்னிலையில் படித்து, அந்த ஆண்டின் முக்கிய பண்டிகைகள் வரும் நாள், நல்ல காரியம் தொடங்க நல்ல நாள், முகூர்த்த வேளை போன்ற விவரங்களை விளக்கமாகக் கூற வேண்டும். திதியைப் போற்றினால் ஐஸ்வரியம் கிட்டும். வாரம், நான் போன்றவற்றை ஆராதனை செய்தால், தீர்க்கமான ஆயுள் நிறைந்திருக்கும். நட்சத்திர பூஜை செய்தால், கர்மவினைகள், நோய்கள் நீங்குகின்றன. கரணதேவதையைப் பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் நீராடி, புத்தாடை அணிந்து, தூய உள்ளத்துடன் தூய்மையாக அந்த ஆண்டின் அதிதேவதை முன்பு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்து, அக்கண்ணாடிக்குப் பொன்னால் அலங்காரம் செய்து பொட்டிட்டு, பூவிட்டு, பழவகைகளை வைத்து, விளக்கேற்றி அக்கண்ணாடியில் இவைகளைக் கண்டுகளித்து அந்த வீட்டின் மூத்த தம்பதியர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும். இப்படிச் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் நாட்டில் நல்ல மழை பெய்யும். செல்வம் செழிக்கும். தர்மம் என்பதும் நிலைத்திருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம். பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா  அமர்ந்திருந்தார்.  அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து  தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி  வைத்து விட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்தான். அவருடைய  சோர்ந்த முகம் மஹானின் கண்களில் பட்டது. மடத்து  ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே
அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை
விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி
நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?"
போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி
மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள்
என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம்
மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக
இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச்
சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல்
வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்
கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்,அதற்கேற்ற
விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா
வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு
வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி
அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்
புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!"
என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து  வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.  அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக
இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,
புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம்
குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத
விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும்
வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால்
தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம்
எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!
தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ள சிறு கிராமம் திருச்செங்காட்டங்குடி. அந்த ஊரில் தான் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரை சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டு சிறுத்தொண்டரும் தன் ஒரே மகன் சீராளனை படையலிட்டு சிவபெருமான் மீண்டும் சீராளனை உயிர்ப்பித்துக் கொடுத்த ஊர்.

சிறுத்தொண்டர் வழியில் தொடர்ந்து ஒரு ஆண்வாரிசு மட்டுமே இன்று வரை தொடர்கிறது. சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த வாரிசுதாரர் பணியின் காரணமாக பெங்களூர் குடியேறிவிட்டார். ஆண்டுதோறும் பிள்ளைக்கறியமுது படைக்கும் பொறுப்பு இவருக்கே உரியது. திருவிழா ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்பே ஊர்வெட்டியான் ஒருகட்டு விறகைக் கொண்டு வந்து இவர் வீட்டில் போட்டுச் செல்வான். தொடர்ந்து திருவிழாவின் பொறுப்புகளை இவர் நிறைவேற்ற வேண்டும்.

இனி இதைத் தொடரமுடியாதென்ற முடிவிற்கு வந்து ருத்ராபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகளிடம் இந்நிலையைக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் காஞ்சி மஹாப் பெரியவாளிடம் அனுமதி பெற்று வாருங்கள் என அனுப்பினர்.

காஞ்சி சென்று பெரியவாளைத் தரிசிக்கக் காத்திருக்கும் வரிசையில் அமர்ந்தார். உள்ளிருந்து வந்த ஊழியர் இவர் பெயரைச் சொல்லியழைத்தார். இவர் கவனமெல்லாம் எப்படி இப்பொறுப்பிலிருந்து விடுபடுவதென்பதிலேயே இருந்ததால் அழைப்பைக் கவனிக்கவில்லை. உள்ளே சென்ற ஊழியர் மீண்டும் வந்து சிறுத்தொண்டரை ஸ்வாமிகள் அழைக்கிறார் என்றதும், பதறிப் போய் எழுந்து உள்ளே சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார்.

மஹாப்பெரியவாள் மெதுவான குரலில் சொன்னார் “இந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை. உன் முன்னோர்கள் மிக்க பயபக்தியுடன் ஆண்டவன் நமது வீட்டிற்கு எழுந்தருளுகிறார் கிடைக்கக் கூடிய பாக்கியமா இது? என்ற பெருமிதத்துடன் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் பணி யார் செய்ய வேண்டுமோ அவரைத் தான் சிறுத்தொண்டர் வாரிசாக ஸ்வாமி அனுப்புகிறார். அது தான் ஒரு வாரிசாக வரும் ரகஸ்யம். இதை மீற உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எங்கிருந்தாலும் பிள்ளைக்கறியமுது பிரசாதம் திருச்செங்காட்டங்குடியிலுள் உன் வீட்டில் உன்னால் தயாரிக்கப்பட்டு அங்கு எழுந்தருளும் ருத்ராபதீஸ்வரக்குப் படைக்கவே நீ அனுப்பப்பட்டுள்ளாய். மறுக்காமல் இதைத் தொடர்ந்து செய்துவா. க்ஷேமமாய் இருப்பாய்” என்று பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தனுப்பினார்.

அப்பணி அக்குடும்பத்தினரால் தொடரப்படுகிறது.
குரு என்றால் கனமானது, பெரியது, அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹாகனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் அதிகமென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவிடமிருந்து புறப்பட்டு போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செல்லுவது 'தீட்சை' என்று அறியப்படுகிறது. மஹா பெரியவா
பாவங்களைப் போக்கும் காவிரி புஷ்கர புண்ய விழா!

 இனியமாலைவணக்கம்
ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பார்கள் முன்னோர்கள். அத்தனைப் பெருமை வாய்ந்தது மயிலாடுதுறை. ஆயிரம் வருடங்கள் கங்கையில் தினம் தினம் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் துலா கட்ட காவிரியில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

காவிரி மகாத்மீயம் எனும் நூலில், மகான்களின் பெருமை, துறவிகளின் பெருமை, சாளக்கிராமத்தின் ஆராதனை மகிமை, காவிரியின் சிறப்புகள் ஆகியவற்றை உபதேசிப்பதைக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள், ஜன்மாந்திரப் புண்ணியம் செய்தவர்களுக்கே காவிரியைக் காண்பதற்க்கான பாக்கியமும் அதில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும் என்கிறது. மேலும் காவிரி மகாத்மீயம் நதிகளில் உயர்ந்தது காவிரியே என்றும் கூறுகிறது.

கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள மூன்று மங்கையர் தரிசித்து நமஸ்கரித்தார்கள். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டார் மகரிஷி. தான் கங்கை என்றும், மற்றவர்கள் யமுனை, சரஸ்வதி என்றும் புண்ணிய நதிகள் என்றும், மனிதர்கள் செய்யும் பாவத்தை தங்களிடம் கொட்டித் தீர்த்ததனால், தாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டதாகவும் தாங்கள் எங்களுக்குப் பாவத்தை போக்க வழி வகை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதைக் கேட்ட மகரிஷி, அவர்களுக்காக கடும் தவம் புரிந்தார். தவமிருந்து கண் விழித்த கன்ம மகரிஷி, மூவரும் தென்பாரத தேசத்தில் உள்ள மாயூரம் நகரில் உள்ள துலா காவிரியில் துலா மாதத்தில் நீராடி, மயூர நாதரையும், பரிமள ரங்கநாதரையும் தரிசித்து பாவங்களை போக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதன்படி, மூவரும் துலா மாதத்தில், மாயூரம் வந்தனர். காவிரியில் புனித நீராடினர். தங்களது பாவங்களை தொலைத்து புதிய பொலிவுடன் வடபாரதம் சென்றனர் என்கிறது புராணம். அத்தகைய பெருமை வாய்ந்த துலா கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடுவது வழக்கம்.

இப்போது… காவிரியின் பெருமையைப் பறைசாற்றும் உன்னத விழா. நம் பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அற்புதப் பெருவிழா. புஷ்கர விழா.

நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி தவமிருந்தார். குருவின் கடும் தவ வலிமையைக் கண்டு வியந்து மகிழ்ந்த பிரம்மா, குரு பகவானின் முன்னே தோன்றி தரிசனம் தந்தார். பிரம்மாவைக் கண்டு சிலிர்த்த குரு பகவான், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

‘‘உங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்கு வழங்கி அருளுங்கள்’’ என்றார் குரு பகவான். ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்றார் பிரம்மா. இதைக் கேட்டு துடித்துப் போன புஷ்கரம், ‘‘உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’’ என்று கெஞ்சியது. என்ன செய்வது என்று ஒருநிமிடம் குழம்பித் தவித்தார் பிரம்மா. பிறகு, குருவுக்கும் புஷ்கரத்துக்கும் இடையே சமாதானமாகச் செல்ல வழியொன்றைச் சொன்னார்.

அதாவது, குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரையான 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது என்று புஷ்கரத்துக்குச் சொல்லப்பட்டது. அதன்படி புஷ்கரம் மேஷம்-கங்கை, ரிஷபம்- & நர்மதை, மிதுனம் & -சரஸ்வதி, கடகம் & -யமுனை, சிம்மம் & -கோதாவரி, கன்னி & -கிருஷ்ணா, துலாம் & -காவிரி, விருச்சிகம் & -தாமிரபரணி, தனுசு- & சிந்து, மகரம் & -துங்கபத்ரா, கும்பம்- & பிரம்மபுத்திரா, மீனம் & -பரணீதா ஆகிய நதிகளில் குருபகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அதே காலக்கட்டத்தில் பிரம்மா. விஷ்ணு, சிவனார், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து மக்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். மேற்படி காலகட்டத்தில், மக்கள் இந்தப் புனித நதிகளில் நீராடினால் அனைத்து துன்பங்கள் நீங்கி செழிப்பும் வளமும் கொண்டு வாழ்வு வாழ்வார்கள் என்பதே புஷ்கர மகிமை!

அதன்படி வருகிற 2017ம் ஆண்டு காவிரி புஷ்கரம் எனும் வைபவம் நிகழ்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநிகழ்வு ஆண்டு இது! அதனால்தான் இதை காவிரி மகா புஷ்கரம் என்று அழைக்கின்றனர்.

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறும் குருப் பெயர்ச்சி புண்ணிய காலத்தில் வருகிற 12.-9.- 2017ல் இருந்து மகா புஷ்கரம் நடைபெறுகிறது. குறிப்பாக, துலா ராசிக்கு உரிய காவிரியில், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டதில் அன்று முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கர புண்ணிய காலம். இதை ஆதி புஷ்கரம் என்று அழைப்பார்கள்.

அடுத்தஆண்டு குருப் பெயர்ச்சி நடைபெறும் முன் உள்ள 12 நாட்களை அந்தி புஷ்கரம் என்பார்கள். மேற்படி தினங்களில் காவிரியில் நீராடுவதால் பலவகை தோஷங்களும் நீங்கும். பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை,பஞ்சம் அகலும். உலகம் சுபிட்சம் பெறும்.

குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் காவிரியில் புனித நீராடுவதால் நல்ல நல்ல பலன்களைப் பெறுவார்கள். பித்ருக்கள் ஆசியும் காவிரித்தாயின் அருளும் கிடைத்து ஆனந்தமாக வாழலாம் என்பது ஐதீகம்.

காவிரியை வணங்குவோம். காவிரியில் நீராடுவோம். மகா புஷ்கரப் பலன்களைப் பெற்று வாழ்வோம்!
7:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

               7:ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                           (கி.மு.124-55)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த சூரிய நாராயணமஹி என்பவரின் தவப் புதல்வர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமம் சின்னையா சக்தி உபாசகர். அஷ்டமி, பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் கௌரி தேவிக்கு விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் அளவிட முடியாத படி இலக்கிய ஆற்றல் பெருகியது. ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கும், ஸ்ரீ சுரேஸ்வரர் அருளிய வார்த்திகங்களுக்கும் எளிய நடையில் குறிப்புரை எழுதினார். அதற்கு "ஆனந்த கிரி டீகா" என்று பெயர். இவர் வட நாடெங்கும் விஜயயாத்திரை புரிந்து திரும்பும் போது நடுவழியில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீ சைலத்தில் கி.மு.55 ஆம் ஆண்டு, குரோதனவருஷம், வைகாசிமாதம், கிருஷ்ணபக்ஷம், நவமியன்று சித்தியடைந்தார்.