செவ்வாய், 10 செப்டம்பர், 2019

பாவங்களைப் போக்கும் காவிரி புஷ்கர புண்ய விழா!

 இனியமாலைவணக்கம்
ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பார்கள் முன்னோர்கள். அத்தனைப் பெருமை வாய்ந்தது மயிலாடுதுறை. ஆயிரம் வருடங்கள் கங்கையில் தினம் தினம் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் துலா கட்ட காவிரியில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

காவிரி மகாத்மீயம் எனும் நூலில், மகான்களின் பெருமை, துறவிகளின் பெருமை, சாளக்கிராமத்தின் ஆராதனை மகிமை, காவிரியின் சிறப்புகள் ஆகியவற்றை உபதேசிப்பதைக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள், ஜன்மாந்திரப் புண்ணியம் செய்தவர்களுக்கே காவிரியைக் காண்பதற்க்கான பாக்கியமும் அதில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும் என்கிறது. மேலும் காவிரி மகாத்மீயம் நதிகளில் உயர்ந்தது காவிரியே என்றும் கூறுகிறது.

கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள மூன்று மங்கையர் தரிசித்து நமஸ்கரித்தார்கள். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டார் மகரிஷி. தான் கங்கை என்றும், மற்றவர்கள் யமுனை, சரஸ்வதி என்றும் புண்ணிய நதிகள் என்றும், மனிதர்கள் செய்யும் பாவத்தை தங்களிடம் கொட்டித் தீர்த்ததனால், தாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டதாகவும் தாங்கள் எங்களுக்குப் பாவத்தை போக்க வழி வகை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதைக் கேட்ட மகரிஷி, அவர்களுக்காக கடும் தவம் புரிந்தார். தவமிருந்து கண் விழித்த கன்ம மகரிஷி, மூவரும் தென்பாரத தேசத்தில் உள்ள மாயூரம் நகரில் உள்ள துலா காவிரியில் துலா மாதத்தில் நீராடி, மயூர நாதரையும், பரிமள ரங்கநாதரையும் தரிசித்து பாவங்களை போக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதன்படி, மூவரும் துலா மாதத்தில், மாயூரம் வந்தனர். காவிரியில் புனித நீராடினர். தங்களது பாவங்களை தொலைத்து புதிய பொலிவுடன் வடபாரதம் சென்றனர் என்கிறது புராணம். அத்தகைய பெருமை வாய்ந்த துலா கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடுவது வழக்கம்.

இப்போது… காவிரியின் பெருமையைப் பறைசாற்றும் உன்னத விழா. நம் பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அற்புதப் பெருவிழா. புஷ்கர விழா.

நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி தவமிருந்தார். குருவின் கடும் தவ வலிமையைக் கண்டு வியந்து மகிழ்ந்த பிரம்மா, குரு பகவானின் முன்னே தோன்றி தரிசனம் தந்தார். பிரம்மாவைக் கண்டு சிலிர்த்த குரு பகவான், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

‘‘உங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்கு வழங்கி அருளுங்கள்’’ என்றார் குரு பகவான். ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்றார் பிரம்மா. இதைக் கேட்டு துடித்துப் போன புஷ்கரம், ‘‘உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’’ என்று கெஞ்சியது. என்ன செய்வது என்று ஒருநிமிடம் குழம்பித் தவித்தார் பிரம்மா. பிறகு, குருவுக்கும் புஷ்கரத்துக்கும் இடையே சமாதானமாகச் செல்ல வழியொன்றைச் சொன்னார்.

அதாவது, குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரையான 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது என்று புஷ்கரத்துக்குச் சொல்லப்பட்டது. அதன்படி புஷ்கரம் மேஷம்-கங்கை, ரிஷபம்- & நர்மதை, மிதுனம் & -சரஸ்வதி, கடகம் & -யமுனை, சிம்மம் & -கோதாவரி, கன்னி & -கிருஷ்ணா, துலாம் & -காவிரி, விருச்சிகம் & -தாமிரபரணி, தனுசு- & சிந்து, மகரம் & -துங்கபத்ரா, கும்பம்- & பிரம்மபுத்திரா, மீனம் & -பரணீதா ஆகிய நதிகளில் குருபகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அதே காலக்கட்டத்தில் பிரம்மா. விஷ்ணு, சிவனார், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து மக்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். மேற்படி காலகட்டத்தில், மக்கள் இந்தப் புனித நதிகளில் நீராடினால் அனைத்து துன்பங்கள் நீங்கி செழிப்பும் வளமும் கொண்டு வாழ்வு வாழ்வார்கள் என்பதே புஷ்கர மகிமை!

அதன்படி வருகிற 2017ம் ஆண்டு காவிரி புஷ்கரம் எனும் வைபவம் நிகழ்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநிகழ்வு ஆண்டு இது! அதனால்தான் இதை காவிரி மகா புஷ்கரம் என்று அழைக்கின்றனர்.

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறும் குருப் பெயர்ச்சி புண்ணிய காலத்தில் வருகிற 12.-9.- 2017ல் இருந்து மகா புஷ்கரம் நடைபெறுகிறது. குறிப்பாக, துலா ராசிக்கு உரிய காவிரியில், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டதில் அன்று முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கர புண்ணிய காலம். இதை ஆதி புஷ்கரம் என்று அழைப்பார்கள்.

அடுத்தஆண்டு குருப் பெயர்ச்சி நடைபெறும் முன் உள்ள 12 நாட்களை அந்தி புஷ்கரம் என்பார்கள். மேற்படி தினங்களில் காவிரியில் நீராடுவதால் பலவகை தோஷங்களும் நீங்கும். பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை,பஞ்சம் அகலும். உலகம் சுபிட்சம் பெறும்.

குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் காவிரியில் புனித நீராடுவதால் நல்ல நல்ல பலன்களைப் பெறுவார்கள். பித்ருக்கள் ஆசியும் காவிரித்தாயின் அருளும் கிடைத்து ஆனந்தமாக வாழலாம் என்பது ஐதீகம்.

காவிரியை வணங்குவோம். காவிரியில் நீராடுவோம். மகா புஷ்கரப் பலன்களைப் பெற்று வாழ்வோம்!

கருத்துகள் இல்லை: