சனி, 3 மே, 2014

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

23. சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.
 
 

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

22. ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன் ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலங் கொள்ளுகிறார். மற்றொரு புறம் அழகே உருக்கொண்ட சுந்தரேச்வரராக அவர் காட்சியளிக்கிறார். அதே கடவுள் பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ மூர்த்தியாகத் தோன்றுகிறார். வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும் காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில் அந்த ஈசனே நடனமாடுகிறார். எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஞானத்தைக் கொடுக்கும் தெய்வமாக தக்ஷிணாமூர்த்தி வடிவத்துடன் அமர்ந்து மௌனத்தினால் சனகாதி முனிவர்களுக்கு அவரே உபதேசம் அருள்கிறார். இவைகளெல்லாம் பரமசிவனின் திருக்கோலங்கள்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

21. உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார்.
*************************************
பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான்!

மெட்ராஸை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது மூன்றாவதாக கருவுற்றாள். எட்டாவது மாசம். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை. ரெண்டு பேரும் பெரியவாளுடைய தர்சனத்துக்கு போனார்கள். அப்போ பெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தார். கூட அவளுடைய மாமாவும் போனார்.
“பெரியவா……இவ என் மருமாள். மொத ரெண்டும் பொண் கொழந்தேள்……இந்தத் தடவையாவது பிள்ளைக் கொழந்தை பொறக்க அனுக்ரகம் பண்ணணும்”

“ஏன்? ரெண்டு பொண்ணோட மூணாவது பொண்ணு பொறந்தா………ஜாஸ்தின்னா சொல்றே?” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டார். பின் தொடர்ந்தார்…….” இது எத்தனாவது மாசம்?”

“எட்டு நடக்கறது”

“ஏழு மாசம் கழிச்சு எங்கிட்ட வந்து பிள்ளை பொறக்கணும்…ன்னா…நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு” பாவம். இவரால் எதுவுமே முடியாதாம்! என்ன ஒரு நடிப்பு!
மருமாளின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்தது. பெரியவா அவளை பார்த்துக் கொண்டே, மாமாவிடம் “அவ ஏண்டா அழறா?” என்று கேட்டுக் கொண்டே எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் ஒன்றை எடுத்து தன் வலது தொடையில் தேய்த்துக் கொண்டே இருந்தார். பிறகு அப்பழத்தை அவளிடம் குடுத்து, ” இந்தா…….இதை சாப்டு! போயி பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிட்டு வா…….போக முடியுமொல்லியோ?”

பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிவிட்டு வந்தார்கள். மடத்தில் நான்கு நாட்கள் தங்கிவிட்டு போகச்சொல்லி உத்தரவானது. நான்காம் நாள் கிளம்பும்போது அவளிடம் “இப்டி வா! ஒனக்கு புள்ளைக் கொழந்தை பொறந்தா…….சந்திரமௌலி ன்னு பேர் வெக்கறையா?”
“பெரியவா என்ன சொல்றேளோ……அப்டியே நடக்கறோம் பெரியவா” நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்கள். அழகான பிள்ளைக் குழந்தை பிறந்தது. ஏழுமாசம் கழிச்சு குழந்தையை பெரியவாளிடம் அழைத்து வந்தனர். அப்போ பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார்.

“சந்த்ரமௌளிதானே?……..” ஞாபகமாக கேட்டார்.

“பெரியவா சொன்னபடி சந்திரமௌலி ன்னுதான் வெச்சிருக்கோம்…..ஆனா, கொழந்தையோட தலைல முன் நெத்திலேர்ந்து பின் கழுத்து வரைக்கும் நீளமா ஒரு பள்ளம் இருக்கு” என்று சொன்னாள்.

“கொழந்தைய நல்ல வெளிச்சத்ல கீழ துணிய விரிச்சு போடு! தலைல பள்ளம் இருக்கா….பாக்கலாம்” என்று சொன்னபடி வாழைபழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து கீழே கிடந்த குழந்தையின் முன்னால் வைத்தார்.

“இந்த பழம் எல்லாம் நோக்கு வேணுமா?…..ஒன்னால இதெல்லாத்தையும் சாப்ட முடியுமா?” விளையாட்டு தாத்தாவாக குழந்தையிடம் கேட்டார். அதுபாட்டுக்கு கையை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.அப்புறம் அம்மாவிடம் “இதெல்லாத்தையும் இவனுக்கு குடுக்கலாமா?” என்றார்.

“கொழந்தை பால்தான் சாப்டுவான்….”அம்மாக்காரி சொன்னாள்.

“எல்லாத்தையும் நன்னா மாவாட்டம் பெசைஞ்சு ஜலம் ஊத்தி கரைச்சு கஞ்சியாட்டம் பண்ணிக் குடு” என்று சொல்லி எல்லாப் பழங்களையும் அம்மாவிடம் குடுத்தார்.

“உத்தரவு பெரியவா…….ஆனா, இந்த தலைல பள்ளம்….” இழுத்தாள் அம்மாக்காரி.

“இவ…..எங்கிட்ட பிள்ளைக் கொழந்தை வேணும்…ன்னு எந்த ஊர்ல இருக்கறச்சே கேட்டா?” கணவரிடம் கேட்டார்.

“பண்டரீபுரத்ல”

“அங்க….பாண்டுரங்கனை தர்சனம் பண்ணினாளோ?”

“பண்ணினோம் பெரியவா”

“வெறும் தர்சனம் இல்லே…அஞ்சு ரூவா குடுத்தா, ஸ்வாமியோட தலைல இருக்கற தலைப்பாகையை எடுத்துட்டு காட்டுவா………அந்த பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான் பள்ளமா இருக்கும்…..வடக்கே, பக்தாள்ளாம் ஸ்வாமியை கையால தொட்டு கும்படற பழக்கம் உண்டு. அதே மாதிரி பாண்டுரங்கன் தலைல எல்லாரும் கையை வெச்சு வெச்சு, ஸ்வாமிக்கு தலைல பள்ளமே விழுந்துடுத்து! இவ, பிள்ளை வேணும்…ன்னு பாண்டுரங்கன்கிட்ட கேட்டாளோல்லியோ?…..அதான், கொழந்தையோட தலைலையும் பள்ளம் இருக்கு….செரியாப் போய்டும்”

தெய்வத்தின் அனுக்ரகத்தால் தெய்வத்திடம் பிள்ளைவரம் வேண்டி அனுப்பப்பட்டு, அத்தெய்வத்தின் சாயலாகவே பிறக்க அந்த குழந்தை என்ன பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்! அதை கருவில் சுமந்த தாய் எத்தனை பாக்யசாலி!

பெரியவா சொன்னபடி அந்த பழங்களை கஞ்சி மாதிரி பண்ணி, நாலு நாள் குடுத்ததும் ஊர் திரும்ப உத்தரவானது. ரயிலில் குழந்தையோடு கிளம்பி வரும்போது, குழந்தைக்கு உடை மாற்றும் போது, அதிசயமாக தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்துவிட்டிருந்தது!

தொகுப்பு:Mr.ராமசாமி (நன்றி)
 
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

மூலவர் :வரதராஜர் (தேவராஜர்)
உற்சவர் : அழைத்து வாழ வைத்த பெருமாள்
அம்மன்/தாயார் :பெருந்தேவி
தல விருட்சம் :அரசமரம்
தீர்த்தம் :அனந்த சரஸ்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :அத்திகிரி, திருக்கச்சி
ஊர் :காஞ்சிபுரம்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்: திருமங்கையாழ்வார், பூத்தாழ்வார்

மங்களாசாசனம்:அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின் தித்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் மூத்திமறையாவான் மாகடல் நஞ்சுண்டான்தனக்கும் இறையாவான் எங்கள் பிரான்.
பூதத்தாழ்வார்

திருவிழா:பிரம்மோற்ஸவம்- வரும் மே மாதம் 8/5/2014 ஆம் தேதி காலை கொடியேற்றம் - 10 நாட்கள் திருவிழா - பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

தல சிறப்பு:பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 44 வது திவ்ய தேசம்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம்,போன்:+91- 44- 2726 9773, 94439 90773

பொது தகவல்:நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம் . இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.

பிரார்த்தனை:இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்

தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.

தலபெருமை:பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார்.
பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.
எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு அத்திகிரி என பெயர் வந்ததாம்.
அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்லவேண்டும்.இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.

பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.

அத்தி வரதர் : நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது.அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

வினாடிக்குள் தரிசனம்: வரதருக்கு எடுக்கப்படும் வைகாசி பிரம்மோற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதை, "வையம் கண்ட வைகாசி திருநாள்' என்பர். இவ்விழாவின் 3ம் நாளில் சுவாமி, கருடசேவை சாதிப்பார். இந்த கருட சேவையைக் குறிப்பிட்டு சங்கீத மூர்த்தி தியாகராஜர் கீர்த்தனையும் பாடியுள்ளார். சோளிங்கரில் வசித்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர், இந்த கருடசேவையை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் இங்கு வரமுடியவில்லை. மனம் வருந்திய அவர் சோளிங்கரில் உள்ள தீர்த்தக்கரையில் நின்றபடி, சுவாமியை மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு வினாடி மட்டும் சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கருடசேவையின்போது, இப்போதும் சுவாமியை ஒரு வினாடி குடையால் மறைத்து எடுத்து விடுவர்.

தாயாருக்குரிய உற்சவங்கள்: பிருகு மகரிஷி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய மகாலட்சுமி, பெருந்தேவி தாயார் என்று பெயர் பெற்றாள். சரஸ்வதி பூஜை, வைகாசி திருவிழாவில் ஒருநாள், பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்று முறை மட்டும் வரதராஜர் இவளுடன் சேர்த்திக்காட்சி தருகிறார். வைகாசி முதல் வெள்ளியன்று இவளுக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும்.

மலையாளன்: இந்திரனுக்கு அருளிய யோகநரசிம்மர், இத்தலத்தில் குடவறை மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கான தாயார், ஹரித்ராதேவி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளை மலையாள நாச்சியார் என்றும் அழைப்பர். சிறிய மலையின் மீது காட்சி தருவதால் வரதராஜருக்கு, "மலையாளன்' என்றும் பெயருண்டு.

தங்கத்தாயார்: வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை அவரிடம் பொருள் வேண்டினான். அவர் அந்த ஏழைக்காக பொருள் கேட்டு, பெருந்தேவி தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவருக்கு இரங்கிய தாயார், தங்கமழையை பெய்வித்தாள். இதனால் இவளை பக்தர்கள், "தங்கத்தாயார்' என்று அழைக்கிறார்கள்.

கிணற்றுக்குள் வலம் வரும் சுவாமி: சித்ரா பவுர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். பின்பு, சுவாமி அருகிலுள்ள நடவாவி கிணற்றிற்கு எழுந்தருளுவார். மண்டபம் போன்ற உள்கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான கிணறு இது. இந்நாளில் மட்டும் கிணற்று நீரை வெளியேற்றிவிடுவர். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.

வித்தியாசமான நம்மாழ்வார்: பெருமாள் கோயில்களில், பொதுவாக சின்முத்திரை காட்டியபடி இருக்கும் நம்மாழ்வாரை, இத்தலத்தில் மார்பில் கை வைத்த நிலையில் தரிசிக்கலாம். இவர் வரதராஜரை, "தேவர்களுக்கெல்லாம் தலைவன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் சுவாமிக்கு, "தேவராஜன்' என்ற பெயரும் பெயருண்டு.

வேடர் பெருமாள்: ராமானுஜர் மீது பொறாமை கொண்ட அவரது குரு யாதவப்பிரகாசர், அவரை கங்கையில் தள்ளிவிட வஞ்சகமாக அழைத்துச் சென்றார். இதை, தனது சித்தி மகன் கோவிந்தர்(எம்பார்) மூலமாக அறிந்த ராமானுஜர், பாதியிலேயே திரும்பிவிட்டார். வழி தெரியாத அவர் காட்டுவழியில் கலங்கி நின்றபோது, வரதராஜரும், தாயாரும் வேடர் வடிவில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். ராமானுஜர் அருகிலுள்ள சாலக்கிணற்றில் நீர் எடுத்து அவர்களுக்கு கொடுத்தார். அதைப் பருகியவர்கள் மறைந்து விட்டனர். சுவாமியே வேடனாக வந்ததை ராமானுஜர் அறிந்தார். இதன் அடிப்படையில் சுவாமி நீர் பருகிய கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காலை 6மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.மார்கழியில் சொர்க்கவாசல் விழா முடிந்த 12ம் நாளில் சுவாமி, தாயார், ராமானுஜர் மூவரும் இந்த கிணற்றிற்கு எழுந்தருளுவர். இவ்வேளையில் சுவாமியின் பரிவட்டமும், மாலையும் ராமானுஜருக்கு அணிவிக்கப்படும். சுவாமிகளுக்கு வேடர் அலங்காரம் செய்யப்படும். பின், ராமானுஜர் சுவாமிக்கு தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடக்கும். இதன்பின்பு சுவாமியும் தாயாரும், கிழக்கு கோபுரம் அருகிலுள்ள ராமானுஜர் வாழ்ந்த வீட்டிற்கு (திருமாளிகை) எழுந்தருளுவர்.

வெள்ளையர் கொடுத்த ஆபரணம்: ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையர், வரதராஜர் மீது கொண்ட பக்தியால் மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தார். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.

அபூர்வ சக்கரத்தாழ்வார்: அனந்தசரஸ் தீர்த்தக்கரையில் சக்கரத் தாழ்வார் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் இட்லி: வல்லபாச்சாரியார் என்ற பக்தர் இங்கு சுவாமிக்கு, மூங்கில் குழாய் கொண்டு தயாரித்த இட்லியை படைத்து வழிபட்டார். இதுவே, "காஞ்சிபுரம் இட்லி' எனப் பெயர் பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இட்லியை காலை 6 மணி பூஜையின்போது நைவேத்யம் செய்கின்றனர்.

மாந்துளிர் உற்சவம்: பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர். பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.

சிறப்புக்கள் சில...

* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

தல வரலாறு:பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

சிறப்பம்சம்:மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சன்னதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.


 

 

 

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும். நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டு வாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால் சரீர சரீரி பாவ சம்பந்தம். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி பாவமும். இந்த உடலுக்கு உயிர் இருக்கிறது. இந்த உயிருக்கு இன்னோர் உயிர் ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று சொல்வர். பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எது? அம்பாள்தான். ‘சரீரம் த்வம் சம்போ:’ என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.