திங்கள், 28 ஏப்ரல், 2014

ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:

நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.

வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.

குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.

உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!



அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்

மூலவர்:ஆயிரத்தெண் விநாயகர்
பழமை:3000 வருடங்களுக்கு முன்
ஊர்    :ஆறுமுகமங்கலம்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்    
           
திருவிழா:சித்திரை மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாளன்று பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.    
           
தல சிறப்பு:"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம் - 628 802, தூத்துக்குடி மாவட்டம்.     போன்:+91- 461 232 1486   
          
பொது தகவல்:ஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். முதலில் கர்ப்பகிரகமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. பிறகு கோயில் விரிவடைந்தது. திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.
   
பிரார்த்தனை:அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை  இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க  என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் இவர் பார்த்துக்கொள்வார்.   
          
நேர்த்திக்கடன்:வேண்டியது நிறைவேறியதும் 108, 1008 தேங்காய் சார்த்தி விநாயகரை வழிபடுகிறார்கள். அத்துடன் 108 தீப வழிபாடும் நடக்கிறது.   
          
தலபெருமை:ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் "கணேச பஞ்சரத்தினம்' பாடி, பின் திருச்செந்தூர் சென்று "சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி வியாதி நீங்கப் பெற்றார்.

தல வரலாறு:தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற  தகவல் புதுமையானதாகவே உள்ளது.மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.    
           
சிறப்பம்சம்:விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.



[Image1]
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்

மூலவர் :  மூகாம்பிகை
தீர்த்தம் :  அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கொல்லூர்
மாவட்டம் :உடுப்பி
மாநிலம் :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதி சங்கரர்.  
      
திருவிழா:பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.  
      
தல சிறப்பு:ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:நிர்வாக அதிகாரி அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8254 - 258 245, 094481 77892 
     
பொது தகவல்:கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர்,பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.
தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.
 
பிரார்த்தனை:மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள். 
     
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம். 
     
தலபெருமை:அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.
மாசி மகா தேர்த்திருவிழா வைபவம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காணக் கண்கோடி வேண்டும். திருத்தேர்விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், மலைவாசிகள் கலந்து கொண்டு அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.
 
தல வரலாறு:முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக் கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, "மூகாம்பிகை' என்ற பெயரில் தங்கினாள்.
 
சிறப்பம்சம்: இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.


[Image1]


அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

மூலவர்    :குக்கி சுப்ரமண்யர்
தீர்த்தம்    :குமாரதாரா
ஆகமம்/பூஜை     :வைகானஸம்
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :குக்கி சுப்ரமண்யா
மாவட்டம்    :தட்ஷின கன்னடா
மாநிலம்    :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதிசங்கரர்    
           
திருவிழா:கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.    
           
தல சிறப்பு:முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா-577 238 தட்ஷின கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8257 - 281 224, 281 700.   
          
பொது தகவல்:சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.    
           
பிரார்த்தனை:நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.   
          
தலபெருமை:தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும்.இது பல யுகம் கண்ட கோயிலாகும்.
கந்தபுராணத்தில் "தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.    
           
தல வரலாறு:காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.
வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, ""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.    
           
சிறப்பம்சம்:முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.



[Image1]
அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில்

மூலவர்    :சாரதாம்பாள்
தீர்த்தம்    :துங்கபத்ரா
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :சிருங்கேரி
மாவட்டம்    :சிக்மகளூர்
மாநிலம்    :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதிசங்கரர்.    
           
திருவிழா:ஏப்ரல், மே மாதத்தில் வரும் வைகாச சுக்ல பஞ்சமியில் 5 நாள் சங்கர ஜெயந்தி, வியாசர் பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாபா விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகிய விசேஷ நாட்களுடன், மகாசிவராத்திரி, நவராத்திரி முக்கிய திருவிழாக்களாக உள்ளன.    
           
தல சிறப்பு:சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி - 577 139, சிக்மகளூர் மாவட்டம். கர்நாடகா மாநிலம்.போன்:+91 8265 - 250 123, 250 192   
          
பொது தகவல்:சங்கரர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவருக்கு பின் 13 நூற்றாண்டு காலத்தில் சுரேசுவரர் முதல் 36 பேர் பீடாதிபதிகளாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதிசங்கரர் கூறியபடி அத்வைத வேதத்தை பரப்பி வருகின்றனர்.

தற்போது சிருங்கேரி மடத்தின் 36வது பீடாதிபதியாக "ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்' உள்ளார். இவருக்கென கோயில் அருகேயே துங்கபத்திரை ஆற்றைக்கடந்து தனி மடம் உள்ளது. தர்பார் தரிசனம் ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு. இந்த தரிசனத்தின் போது பஞ்சாங்கம் வாசித்து, நான்கு வேதங்கள் ஓதி, மேளதாளங்கள் ஒலிக்க தேவிக்கு தீபாராதனை நடக்கும். சாரதாதேவியின் இடதுபக்கம் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் தரிசனத்தின் போது பொன்னாடை போர்த்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் விலை உயர்ந்த நகைகள், கையில் ருத்ராட்ச மாலை, விரல்களில் பெரிய மோதிரங்களுடன் அம்மனின் பிரதிநிதியாக பீடாதிபதி அமர்ந்து தரிசனம் தருவார். இதுவே தர்பார் தரிசனம் ஆகும். மடத்தின் காவல் தெய்வங்கள் கிழக்கே - காலபைரவர் மேற்கே - அனுமன் வடக்கே - காளி தெற்கே - துர்க்கை கோயில் அமைப்பு சாரதாதேவி பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருளுகிறாள். அருகே வித்யாசங்கரர் பிரமாண்டமான கருங்கல் கோயிலில் இருக்கிறார். ஆதிசங்கரர், ஜனார்த்தனர், அனுமன், கருடன், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. 1907ல் இக்கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1916ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12 முதல் 3 மணிவரையிலும், இரவு 7 முதல் 9 மணிவரை அன்னதானம் நடக்கிறது.
   
பிரார்த்தனை:இவளை வேண்டினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமுன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு.   
          
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். இங்கு தினமும் லலிதா சகஸ்ரநாமம் கூறப்படுகிறது.   
          
தலபெருமை:சிர்ங்க கிரி என்பதே சிர்ங்கேரி என வழங்கப்படுகிறது. தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் "ரிஷ்யசிருங்கர்' என்ற முனிவர். இவர் விபாந்த முனிவரின் புதல்வர். ரிஷ்யசிருங்கர் என்றால் "மான் கொம்பு உடையவர்' என்று பொருள். அவர் வாழ்ந்த இப்பகுதி "சிருங்கேரி' ஆனது.

துங்கபத்ரா நதி:சிருங்கேரியில் ஓடும் புண்ணிய நதி துங்கபத்ரா. துங்கை, பத்ரா ஆகிய இரண்டு நதிகள் இணைந்து ஓடுவதால் இப்பெயர் பெற்றது. இவை இரண்டும் சகோதரி நதிகள். துங்கை கர்நாடகாவின் வடக்கே உள்ள வராஹ மலையில் உற்பத்தியாகி, 16 கி.மீ. தூரம் ஓடி, பத்ரா என்ற நதியுடன் இணைகிறது.

பீடத்தின் அமைப்பு:ஆதிசங்கரர் அமைத்த நான்கு பீடங்களும் தனி சிறப்பு பெற்றவை. இந்தியாவின் பரப்பளவு 1960 சதுர மைல். இதை நான்கு சம வட்டங்களாக்கினால் ஒவ்வொன்றும் 490 சதுர மைல் அளவானது. இந்த முறையில் தான் நான்கு பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி ஆகிய இடங்களில் ஆதிசங்கரர் மடங்களை ஸ்தாபித்தார். சிருங்கேரியில் ஆச்சாரியார் சுரேசுவரா தலைமையில் யஜுர்வேத முறையில் சாரதா பீடம் அமைக்கப்பட்டது.

மழைக்கடவுள்:சிருங்கேரியிலிருந்து 10கி.மீ. தூரத்தில் மலஹானிகரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள தூணில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இவரது உருவம் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மழை வருவதற்காகவும், இயற்கையின் சீற்றத்தை தடுக்கவும் இவருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இங்கு சிர்ங்க முனிவர் வழிபட்ட மலஹானிகரேசுவரரும், அம்மன் பவானியும் அருளுகின்றனர்.
   
தல வரலாறு:மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரஸ்வதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.

17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி,"" சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார். சங்கரரோ பிரமச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார் சங்கரர்.

இல்லறம் பற்றி யோசித்து கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார்.  தன் கணவர் விசுவரூபர் துறவறம் ஏற்க அனுமதித்தார். சங்கரர் இவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.

சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்,""தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி,""சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிபார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். அதன் பின் தொடர்ந்து வரமாட்டேன்,''என்ற நிபந்தனையுடன் புறப்பட்டார்.

சங்கரருக்கு விசுவரூபருடன் நான்கு சீடர்கள் அமைந்தனர். இவர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னால் உபயதேவி "கலீர்',"கலீர்' என கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிர்ங்ககிரி வந்து சேர்ந்தார்கள். இந்த இடத்தில் நல்லபாம்பும் தவளையும் சேர்ந்திருந்தது. பசுவும்புலியும்இணைந்திருந்ததை கண்ட சங்கரர், யோகிகள் தங்குவதற்கு தகுந்த இடம் என தீர்மானித்தார்.இந்த இடம் வரை கேட்டு வந்த தேவியின் சிலம்பொலி நின்று விட திரும்பிபார்த்தார் சங்கரர்.நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. அங்கேயே பாறை மீது ஸ்ரீசக்ரம் வடித்து தேவியை "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். இவருக்கு காட்சி கொடுத்த அன்னை,""சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சிர்ங்கேரி சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரரே சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.
   
சிறப்பம்சம்: சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.



[Image1]
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

மூலவர்    :காமாட்சி அம்மன்
உற்சவர்    :காமாட்சி
தல விருட்சம்    :செண்பகம்
தீர்த்தம்    :பஞ்ச கங்கை
ஆகமம்/பூஜை     :சிவாகமம்
பழமை    :3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :கச்சி
ஊர்    :காஞ்சிபுரம்
மாவட்டம்    :காஞ்சிபுரம்
மாநிலம்    :தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்.    
           
திருவிழா:மாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள். ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவாள்.    
           
தல சிறப்பு:அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.    
           
திறக்கும் நேரம்:காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்   
         
முகவரி:அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் -631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91 - 44-2722 2609   
          
பொது தகவல்:காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது.

அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.
   
பிரார்த்தனை:இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள்.
அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை. எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.
   
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.   
          
தலபெருமை:துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.

இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.

இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.

துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும். பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.

சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.

காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சன்னதி கிடையாது.

கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு. இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி ,லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீ ஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்குள் உள்ள இவரது சன்னதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.

இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.

துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.

இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.

காமாஷி தத்துவம் : காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.
   
தல வரலாறு:பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம்   நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.
   
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.


[Image1]
 ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்!

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திர திருநாட்கள், மாத சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமாவாரம் (திங்கட்கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் உள்ள சுத்தியுடன் இந்த ஸ்லோகங்களைப் பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி

1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

பொருள் : ஐஸ்வர்யம் மிகுந்தவரும் குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரம் (இது நான்கு முறை சொல்லப்படுகிறது).

2. பரணி

2. கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

பொருள் : யமனுக்குப் பயந்திருந்த அந்தணக் குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமுமாக விளங்கும் உமக்கு வணக்கம். இப்போது என்னைக் காப்பாற்றும்.

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

பொருள் : இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் காரணமானவரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், ஜலம், தேஜஸ், காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவனுக்கு வணக்கம்.

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

பொருள் : மலை போன்ற ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவ நதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவமுமாகிய உமக்கு வணக்கம்.

5. மிருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

பொருள் : ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் <உடையவருக்கு அடையமுடியாதவருமாகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

பொருள் : ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாகக் கொண்டவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவனுக்கு வணக்கம்.

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

பொருள் : தன்னலம் கருதாது செய்யப்படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் சவுக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் சவுக்கியமுற்றவருமான சிவனுக்கு வணக்கம்.

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

பொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானத்தையே ஒரே உருவமாயுடையவரும், என் மனத்தின் இஷ்டத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவனுக்கு வணக்கம்.

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

பொருள் : யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயையுடையவரும், பொன் மயமான வில்லை வலக் கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இருதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக்கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அக்ஷரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாக்ஷர தீøக்ஷ பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

பொருள் : வெள்ளி மலை என்று  பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சி மாதிரி சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழன் என்பதை வெளிப்படுத்துபவருமான சிவனுக்கு வணக்கம்.

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

பொருள் : ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேரு மலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குக் கடுமையான கதிரவன் போன்றவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

பொருள் : ஸர்வமங்களை எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவனுக்கு வணக்கம்.

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

பொருள் : குறைந்த அளவு பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வத்தைக் கொடுத்தாலே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவனுக்கு வணக்கம்.

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

பொருள் : எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களைக் காப்பவரும், தப்புக் காரியங்களில் ஈடுப்படும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடையவரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

பொருள் : உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பவரான ஈசனே, எனக்கு வரம் அருளும்.மஹரிஷிகளின் மனைவிகளை மோகிக்கச் செய்தவரும், தன்னிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவனுக்கு வணக்கம்.
(குறிப்பு: தாயுடன் கூடிய தகப்பனாகிய ஈஸ்வரனே பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் வேண்டியதைக் கொடுப்பார் என்பது விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

பொருள் : மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் உடையவரும், போரில் இறங்கிய சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்கு சத்ருவும், கையில் மானை உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

பொருள் : பக்தர்கள் வேண்டியதைக் கொடுப்பவரும், யாகம் செய்பவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் உடற்காந்தி (உடலில் ஒளியை) உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

பொருள் : முக்கண்ணரும், எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தக்ஷ ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

பொருள்: மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் பயத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவனாருக்கு நமஸ்காரம்.

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

பொருள்: கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் நமஸ்கரிக்கப்பட்டவருமான சிவனாரைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன்.

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் நமஸ்கரிக்கப்பட்டவரும், ஒழுக்கமுள்ள அந்தணர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரும்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவராகவும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவனாருக்கு நமஸ்காரம்.

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

பொருள்: அளவிடமுடியாத தெய்விக மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த நல்ல ஜனங்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், அந்தணக் குழந்தையிடம் (மார்க்கண்டேயர்) தன் அன்பைக் காட்டியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

பொருள் : பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம் கருணை காட்டும். இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெப்பைக் கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும், தன்னுடைய திருவடியை நமஸ்கரிக்கும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

பொருள் : இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதிலேயே கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனதாகிய தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவனாருக்கு நமஸ்காரம்.

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய சவுக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவனாருக்கு நமஸ்காரம்.

27. ரேவதி

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

பொருள் : சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவருக்கு நமஸ்கரிக்கும். ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


மோரின் தத்துவம் – மகா பெரியவர்

“எல்லோரும் ’ஈகோ‘வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம். அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு‘சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை. இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா? அதுதான் ‘மோர்‘. அந்த நிலை சாஸ்வதமானது. மஹா பெரியவா பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை. மோர் சாதம் முடிந்தபின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

(எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து )
பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம், ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர்(இப்போதைக்கு அவர் வம்பர், ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது, மந்திரம் வைப்பது, பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர், யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்).

பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி, ‘நான் பெரியவனா, இல்லை அவரா, பார்த்துவிடுகிறேன் இன்று, என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும், இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்’ என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.

அவர் குடும்பத்தார் மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று ‘கடைசியில் கடைசியாய்’ இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார் செய்தார் செய்தார்.அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார்.

பூசை முடிந்தது, திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது.ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் சனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே…யாரை வசியப்படுத்துவேன் என்றாரோ, அவரிடமே வசியப்பட்டு, யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார், அமர்ந்தார்.
பெரியவர் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார்.

‘பின்னாடி திரும்பி பார்’.

பார்த்தார் வம்பர். நடுநடுங்கினார்.
பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும், பெரியவராய் தெரிந்தது அவருக்கு. ஆம், அத்துணை அத்துணை பெரியவர்கள்.

மேலே, கீழே, இடது, வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் பெரியவரடா…

கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.

சொன்னார் பெரியவர், ‘சித்து பெரிய விஷயமே இல்லே, ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே, கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே’.

‘அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்’.

‘இல்லே, இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை, ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை, அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு, நீயும் க்ஷேமமா இருப்பே’.

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு.
 
 
பக்தர்களின் அனுபவங்கள்….காஞ்சி மகானின் கருணை நிழலில்…!!

விழுப்புரம் அருகில் உள்ளது வடவாம்பலம் கிராமம். 1926-ம ஆண்டு மகா பெரியவர் அந்த வழியாக போகும்போது மனதில் ஏற்பட்ட திடீர் சலனத்தின் காரணமாக அந்த கிராமத்துக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்.”இங்கே ஒரு சந்நியாசி இருந்தாரே, ஞாபகம் இருக்கிறதா? என்று எதிர்பட்ட கிராமத்து முதியோர்களிடம் கேட்டார், யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த கும்பலில் இருந்த ஒரு முதியவர் மட்டும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் ஒரு துறவி இருந்ததாகவும், அவர் அதே ஓரில் சமாதி அடைந்ததாகவும் சொன்னார். இரண்டு, மூன்று வருடங்கள் அவரது சமாதிக்கு பூஜைகள் தொடர்ந்து நடந்ததாகவும், பிறகு அது நின்று போனதாகவும் சொன்னார்.

ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி அங்கேதான் சமாதி அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மகான் அந்த கிராமம் முழுக்கத் தேடி அவரது சமாதியை கண்டுபிடித்தார். பிறகு தன்னுடன் வந்த அடியார்களில் ஒருவரிடம் அந்த இடத்தை தோண்ட சொன்னார்.’அகலமாக வேண்டாம், ஆழமாக தோண்டுங்கள்’ என்று கட்டளையிட்டார். மண்வெட்டிஎடுத்து மகான் காட்டிய இடத்தை தோண்டினார் ஒருவர். அப்போது அருகில் இருந்த குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மெய்மறந்து ‘தோண்டாதே தோண்டாதே’ என்று கூச்சலிட்டு அங்கேயே மயங்கி விழந்தார். தோண்டிய ஆசாமி திகைத்துபோய் உடனே தோண்டுவதை நிறுத்தினார். வெகு நேரத்துக்கு பிறகுதான் அவரது மயக்கம் தெளிந்தது. மகான் சாம்பமூர்த்தி சாஸ்திரியிடம் மெதுவாக விசாரித்தார்.

‘உடலில் காவி .. கையில் தண்டம். கழுத்தில் ருத்திராட்ச மாலை .. நெற்றி நிறைய விபூதி .. இத்துடன் ஆகாயத்தை தொடுமளவு ஒரு துறவியின் உருவம் என் கண் முன் தோன்றியது. அவருக்கு முன்னால், ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதைக் கண்டேன். ஒரு கட்டத்தில் அவர் மெல்லிய குரலில் ‘தோண்டாதே .. தோண்டாதே’ என்று கூறியது என் செவிகளில் விழுந்தது. அதையே நானும் சொல்லியிருப்பேன் போலிருக்கிறது. பின்னர் அந்த நெடிய உருவம் சிறிதாகி மறைந்து போனது! ‘சதாசிவம். சதாசிவம்’ என்று யாரோ ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்!’ என்றார்.

அதே இடத்தில்தான் ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதை உறுதிசெய்துகொண்ட மகாபெரியவா, 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அதிஷ்டானத்துக்கு பிருந்தாவனம் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கே வருடா வருடம் ஆராதனை நடக்கிறது.

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர். கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: “ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?”

‘இன்னும் போகலை’ என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : “ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!’ ‘அந்த ஊர் எங்கே இருக்கிறது?’ என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.
இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் ‘பெரியவா கிரஹம்‘ ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார். சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: “ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?”

‘சட்‘ டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றார். ஒருவித பிரமிப்புடன்.

“வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்” என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. “இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க” என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, “வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!” என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!