புதன், 18 டிசம்பர், 2013

துவாரகா ராமதாசர்

புண்ணிய க்ஷத்திரமான துவாரகா அருகிலுள்ள டாங்கேர் நகரில் வாழ்ந்தவர் ராமதாசர். கிருஷ்ணரை தெய்வமாக ஏற்ற இவர், அப்பெருமானுக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்தார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வீடுவீடாகச் செல்வார். கிடைக்கும் அரிசியை சமைத்து, அடியவர்களுக்கு உணவிட்ட பிறகே சாப்பிடுவார். ஊர்மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு தானம் அளித்து வந்தனர். ஏகாதசி நாளில் துளசி, தீர்த்தம் மட்டும் எடுத்துக் கொள்வார். ஆடி மாத ஏகாதசியன்று, துவாரகை நாதனை தரிசிக்க செல்வது வழக்கம். டாங்கேரில் இருந்து நாம சங்கீர்த்தனம் இசைத்தபடியே, பாதயாத்திரையாக அங்கு செல்வார். கோமதி நதியில் நீராடி ஏகாதசி விரதத்தைத் தொடங்குவார். மறுநாள் துவாதசியில் துவாரகை நாதனை தரிசிப்பார். கண்ணனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாது என்பது போல, அவருக்கு அப்பெருமானை விட்டுப் பிரிய மனமிருக்காது. முதுமையை எட்டிய பிறகு, அவரது உடல்நிலை தளர்ந்தது. இருந்தாலும், மனம் தளராமல் தள்ளாடியபடியே துவாரகை சென்றார். அங்கிருந்து கிளம்பும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.

ஹே! துவாரகநாதா! அடுத்த ஆண்டு ஆடி ஏகாதசியன்று உன் தரிசனத்தை காண்பேனா! ஆயிரமாயிரம் கோபியரிடம் பிருந்தாவனலீலை செய்ய மாயக்கிருஷ்ணனாய் வந்தாயே! இந்த ஏழைக்காக, நான் குடியிருக்கும் டாங்கேருக்கு வரக்கூடாதா?, என்று பொலபொலவென கண்ணீர் சிந்தினார். இதைப் பொறுக்காத துவாரகாநாதன் நேரில் காட்சி அளித்தான். ராமதாசா! கவலையை விடு! என்னையும் உன்னுடன் அழைத்துச் செல். உங்கள் ஊரிலும் எழுந்தருள யாம் சித்தமாக உள்ளோம்!, என்று திருவாய் மலர்ந்தார். பகவானே!உன் கருணையே கருணை. நாம் எப்படி செல்வது? என்று கேட்டார். இன்று ஜாமத்தில் கோமதி நதிக்கரையோரம் வந்துவிடு. இருவரும்தேரில்சென்றுவிடுவோம், என்று சொல்லி மறைந்து விட்டார் துவாராகாநாதன். நாமசங்கீர்த்தனம் பாடியபடியே, கோமதி நதிக்கரைக்குச் சென்ற தாசர், ஒரு தேரைக் கண்டார். துவாரகாநாதன் அதில் தங்கச்சிலை வடிவில் அமர்ந்திருந்தான். ராமதாசரும் அதில் ஏறிக்கொள்ள, தேர் தானாகவே டாங்கேர் வந்தடைந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், துவாரகாநாதரின் மூலவரின் தங்கச்சிலை காணவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பதைபதைப்புடன் ஆலோசித்தனர். இரவு பூஜைக்குப் பிறகும் சந்நிதியில் நின்றிருந்த ராமதாசர் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக, அனைவரும் டாங்கேருக்கு புறப்பட்டனர். அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை அறிந்த தாசர், சிலையைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினார். சிலையை வாளிக்குள் வைத்து கிணற்றுக்குள் தள்ளினார். ஆனால், வாளி தண்ணீருக்குள் மூழ்காமல் பாதி கிணற்றிலேயே நின்றதைஅவர் கவனிக்கவில்லை. அர்ச்சகர்கள் அவரது வீடு முழுக்க தேடிமுடித்தனர். பின் கிணற்றை சோதனையிட்ட போது, அங்கே சிலை மினுமினுத்ததைக் கண்டு தூக்க ஆயத்தமாயினர். தாசருக்கு பகவானை விட்டுப் பிரிய மனமில்லை. குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அர்ச்சகர்களோ, செய்வதையும் செய்து விட்டு பக்திமான் போல் அழுகிறீரா? எனச்சொல்லி அவரை உதைக்கவும் தயங்கவில்லை.

அவ்வூர் மக்களோ, ஐயா! இப்பெரியவரை துன்புறுத்தாதீர்கள். உங்களுக்கு தேவை சிலை தானே! அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக கிளம்புங்கள்!, என்றனர். இந்தக் கிழம் செய்த காரியத்துக்கு இதற்கு ஆதரவாக வேறு பேசுகிறீர்களா! சாமான்யபட்ட சிலையா இது! சொக்கத்தங்கத்தால் ஆனது ! என்று ஆவேசமாக கத்தினர். தாசர் அவர்களிடம், உங்களுக்குப் பொன் தானே வேண்டும். வேண்டுமளவுக்கு நான் தருகிறேன். சிலையை என்னிடம் கொடுத்துவிடுங்கள், என்று கெஞ்சினார். ஊர் மக்களும் தாசரின் பேச்சை ஆமோதித்தனர். தங்கம் தான் பெரிதென்று எண்ணும் உங்களுக்கு தங்கம் கொடுத்தால் போதாதா? தங்கத்தை வாங்கிக் கொண்டு சிலையை இங்கே விட்டு செல்லுங்கள்!, என்று வாதம் செய்தனர். பிச்சை எடுத்து பிழைக்கும் இவரிடம் தங்கம் ஏது என்ற எண்ணத்தில், தராசில் இச்சிலையை வைத்து எடைக்கு எடை தங்கம் கொடுத்தால் போதும். நாங்கள் கிளம்பிவிடுகிறோம். சிலையை நீங்களேவைத்துக் கொள்ளுங்கள், என்று அர்ச்சகர்கள் நிபந்தனை இட்டனர்.

தராசில் சிலை வைக்கப்பட்டது. தாசரின் வீட்டில் தங்கம் ஏதுமில்லை. மனைவியின் ஞாபககார்த்தமாக ஒரு மூக்குத்தியை மட்டும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தார். அதைக் கண்ட அர்ச்சகர் ஒருவர், இந்த கிழத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும், என்று சொல்ல அனைவரும் சிரித்தனர். மறுதட்டில் மூக்குத்தியை வைத்த தாசர் கண்ணை மூடி பகவானை வணங்கினார். தராசின் இருதட்டுகளும் சரிசமமானது. தாசரின் பக்திக்கு கட்டுப்பட்டு தராசு நிற்பதைக் கண்ட அர்ச்சகர்களும், அதிகாரிகளும் சிலையாயினர். சிலையை தாசரிடம் கொடுத்து விட்டு, துவாரகை கிளம்பினர். அதன்பின், அந்த இல்லமே கோயிலாக மாறியது. ராமதாசரும் சங்கீர்த்தனம் பாடி துவாரகைநாதனை தினமும் வணங்கி மகிழ்ந்தார்.
ஹரி வியாசர்

வடமதுரை திருத்தலத்தில் ஹரிபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது நா எப்பொழுதும் ஹரிசரணம் என்று உச்சரித்துக் கொண்டே இருக்கும். இதனால் இவரை ஹரி வியாசர் என்று அழைத்தனர். ஒரு சமயம் இவர் பூரி ஜெகந்நாதப் பெருமான் தலத்திற்கு யாத்திரையாகப் புறப்பட்டார். வழியிலே ஓர் அழகிய வனத்தைக் கண்டார். அந்த வனத்தையடுத்து ஒரு சிற்றாறு ஓடியது. அதன் கரையிலிருந்த பிரமாண்டமான கோயிலில் புகுந்தார். புகுந்த உடனேயே அது காளிகோயில் என்பது புலனாயிற்று. அங்கே ஒரு குடியானவன் ஆடு ஒன்றை பலியிட்டுக் கொண்டிருந்தான். அதன் பரிதாபகரமான அலறல், அந்தக் கோயில் முழுமையும் எதிரொலித்தது. இதைப் பார்த்ததும், ஹரி வியாசர், சீ, சீ ! இதென்ன பேதமை ? என்று கோயிலை விட்டு வெளியே வந்தார். காளிதேவிக்கு இவர் வருத்தத்துடன் செல்வது தெரிந்தது. பரமபாகவதரான ஓர் அந்தணர் பசியோடு தனது இருப்பிடம் வந்து அருவருப்புடன் எழுந்து செல்வது பழிக்கிடமாயிற்றே, என்று நினைத்தவளாய், தன் உருவுடன் அவரை வழிமறித்து, பக்தரே ! நீர் இவ்விதம் பசியோடு செல்வது சரியன்று. உச்சிக்காலம் முடிந்ததும் அமுது உண்டு செல்லலாம் என்றாள். ஹரி வியாசர், அம்மணி ! தங்களது கோயிலில் ஜீவிப்பிராணிகள் வதை செய்யப்படுவதை தாங்கள் ஏற்று மகிழ்கிறீர்கள். ஆகவே, அந்தக் கொலைக்களத்திலே படைக்கும் நிவேதனம் தங்களுக்கு உகந்ததாக இருந்தாலும் என்மனம் ஒப்புக்கொள்ளாது என்றார். தேவி மிகவும் கனிவுடன் கூடிய குரலில், இவர்கள் பலியை ஏற்கிறேன் என்பது தவறு. நாம் விரும்பவே இல்லை. இவர்கள் தங்களது நாவின் ஆசையைத் தீர்த்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றனர் என்றாள்.

நீங்கள் விரும்பவில்லையானால், அவர்கள் செய்வதை ஏன் தடுக்கவில்லை ? தடுக்காமல் பார்த்திருப்பதும், ஏற்று மகிழ்வதும் ஒன்றுதானே ! நீங்கள் விரும்பியே தான் இந்த உயிர்ப்பலி நடக்கிறது. நான் இங்கே உண்ணமுடியாது என்றார் ஹரிவியாசர். தேவி மீண்டும் புன்முறுவலுடன், பக்தா ! மக்களுக்கு அறிவைக் கொடுத்து, நன்மை தீமைகளைத் தெரிந்து நடக்க வழியும் வகுத்துக் கொடுத்தோம். அவர்கள் அதைத் தவறான வழியிலே பயன்படுத்தி நரகிற்கு ஆளாகின்றனர். அறிவைக் கொடுப்பதும், அதை நல்ல முறையிலே பயன்படுத்துபவர்களுக்கு அருள் செய்வதும், தவறான வழியிலே செல்ல வேண்டாமென்று போதிப்பதும் உன் போன்ற அறிவாளர்களின் கடமை, பலியை நிறுத்த நீயே முயற்சி செய் என்றாள். உயிர்ப்பலி நாடு முழுவதும் உங்கள் பெயரால் இடப்படுகிறது. இதை நிறுத்துவது என்பது பெரிய செயல். என்றாலும், நீங்களே ஏன் இதை ஏற்காமல் மறுக்கக்கூடாது ? என்றார். அதற்கு தேவி, இனி இந்தக் கோயிலில் பலியிடாமல் செய்துவிடுகிறேன் என்று சொல்லி, அரசனது கனவில் தோன்றி, இனி இம்மாதிரி உயிர்ப்பலி இடுதல் வேண்டாம். நான் இதை ஏற்கவில்லை என்று கூற, அன்று முதல் கோயிலிலே உயிர்ப்பலி நின்றது. இதன்பின் அரசன், தானே கோயிலுக்கு சென்று பால் பொங்கலிட்டு நிவேதனம் செய்தான். அரசனே பலிநிறுத்தம் செய்ததும், தேவியே மனமுவந்து தன் விருப்பு வெறுப்புகளைத் தெரிவித்ததும் கண்டு ஹரிவியாசர் மேலும் சில நாட்கள் அந்த ஊரிலும், பக்கத்து ஊர்களுக்கும் சென்று கொல்லாமை பற்றியும், இறைவனுக்கு உகந்த பூசனை எது என்பதைப்பற்றி விளக்கியும் தன் யாத்திரையை தொடங்கினார். இப்படி ஹரிவியாசர் என்ற விஷ்ணு பக்தரின் வரவால் நாட்டில் உயிர்பலி குறைந்தது கண்டு அறிவாளிகள் பேரானந்தம் கொண்டனர். பாமர மக்கள் இது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம் நிறுத்தினால் தேவி கோபித்து எரித்து விடுவாள் என்றும் அங்கலாய்த்தனர். நாட்கள் செல்ல செல்ல அந்த பகுதியில் புலால் உண்பது குறைந்து விட்டது. ஹரி வியாசரின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
பவுரிதாசர்

நின்றால் ஜெகந்நாதன், நடந்தால் ஜெகந்நாதன், அமர்ந்தால் ஜெகந்நாதன்.... ஜெகன்னாதனின் நாமத்தை தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது. கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டுகளிக்க வேண்டும் என விரும்பியவர் பவுரிதாசர். இவரது பெற்றோர் நெசவுத்தொழிலை செய்துவந்தன. இந்த தொழில் மூலம் ஏதோ அவர்களுக்கு வயிற்றுக்குப் போதுமான அளவு வருமானம் கிடைத்தது. இந்த குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பூரி ஜெந்நாதர்தான். இவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை அந்த குடும்பத்தினர் வணங்கி செல்வார்கள். அதன்பிறகே அன்றாட பணிகள் தொடங்கும். ஜெகந்நாதர் கோயிலில் பெருமாளின் மகிமையை விளக்கி ஹரிகதை சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதையைக் கேட்க பவுரிதாசர் தவறாமல் சென்றுவிடுவார். இந்த வகையில் ஹரி கதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் புவுரிதாசரின் மனதில் நின்றன. குறிப்பாக, பெருமாளின் பெருமையை பாகவதர்கள் சொல்லும்போது, அதில் அப்படியே லயித்துவிடுவார் பவுரிதாசர். பெருமாளின் மீதான பக்தியை இந்தக்கதைகள் மென்மேலும் வளர்ந்தது. காலப்போக்கில் பக்தியின் வேகம் அதிகரித்தது. அவர் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. கண்கள் விழித்தபடியே இருக்கும். வாய் எந்நேரமும் ஜெகந்நாதன் பற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும்.

அந்த பக்தனை மேலும் சோதிக்க விரும்பவில்லை பெருமாள். தனக்காகவே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கும் பவுரிதாசரின் முன்பு தோன்றினார். பவுரிதாசர் ! நீ என்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அனைத்து பெண்களையும் தாயாராகவே கருதினாய். இந்த மனப்பக்குவம் உலகில்யாருக்கும் வருவதில்லை. நீ என்ன கேட்டாலும் கொடுத்து வரவேண்டும் என்பது உன் தாயார் எனக்கு இட்ட கட்டளை. அதன்படி உனக்கு வேண்டும் வரம் தருகிறேன், கேள் என்றார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பவுரிதாசர் என்ன கேட்டிருந்தாலும் இறைவன் கொடுத்திருப்பான். ஆனால், அவர் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. இறைவா ! நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். உன் திருக்காட்சியை எனக்கு காட்ட வேண்டும். உனது நினைவாகவே இருக்கும் நான். உன்னைத்தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன். நீயே என் அருகில் இருக்கும்போது, வேறென்ன எனக்கு வேண்டும் ? மற்றவை தானாகவே வந்து சேரும், என்றார். பவுரிதாசரின் பற்றற்ற நிலையை அறிந்து மகிழ்ந்த பெருமாள், அவர் கேட்ட வரத்தையே அருளினார். அன்றுமுதல் ஜெகந்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பவுரிதாசர் ஆண்டவனுக்குரிய காணிக்கைகளை கொடுத்து அனுப்பினார். ஒருமுறை இளநீர் ஒன்றை ஒரு பக்தர் மூலம் அனுப்பிவைத்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து இரு கைகளையும் நீட்டி அந்த இளநீரை பெற்றுக்கொண்டார் பகவான்.

இதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த பக்தர் ஓடோடிச்சென்று பவுரிதாசரிடம் இந்த அதிசயத்தை விவரித்தார். இதுகேட்டு பவுரிதாசர் ஆனந்தக்கூத்தாடினார். ஒரு முறை கூடை நிறைய மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார். கோயிலுக்குள் சென்றதும், கூடை மாயமாகிவிட்டது. சற்று நேரத்தில் கூடை கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே வந்து அமர்ந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அதை பார்த்தனர். கூடைக்குள் கொட்டைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. பக்தன் பக்தியுடன் கொடுத்த உணவை பகவான் ஏற்றுக்கொண்டார். இதைக்கண்டு பரவசமடைந்த கோயில் அர்ச்சகர், பவுரிதாசர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஓடினார். பகவானுக்கு அணிவித்த மாலையை அவரது கழுத்தில் அணிவிக்க முயன்றார். பவுரிதாசர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பகவானுக்குரிய பொருட்களை நாம் எடுக்கக்கூடாது. பகவானுக்கு நம்மால் முடிந்த பொருளை கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தி என்றார். நீண்ட நெடுங்காலம் பகவானுக்கு உணவளிக்கும் கைங்கர்யத்தை அவர் செய்துவந்தார். பகவான் முன்பு சென்றாலே அதைக்கொடு; இதைக்கொடு என கேட்கும் இக்காலத்தில், பவுரிதாசரின் வாழ்க்கை வரலாறு ஆசையற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. பவுரிதாசரின் பக்தியை பின்பற்றி அனைவரும் நடப்போம்.
சுதீட்சணர்

சுதீட்சணர் அகத்தியரின் சீடர். அகத்தியர் தந்த சிலையை பாதுகாக்க தவறியதால் அவரிடம் சாபம் பெற்றவர். ஐந்து வயதில் பெற்ற சாபம் ஐம்பது ஆண்டுகள் கடந்துதான் தீர்ந்தது. சுதீட்சணர் என்றால் கூர்மையான புத்தி உடையவர் என பொருள். சிறுவயதில் பெற்றோரை இழந்துவிட்ட சுதீட்சணர், அகத்தியரின் சீடரானார். அகத்தியர் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறு குழந்தை என்பதால் மிகவும் குறும்புத்தனம் செய்வான் சுதீட்சணன். ஆனால் அவனை நல்லமுறையில் வளர்ப்பதற்காக இளம் வயதிலேயே பூஜை, புனஸ்காரங்கள் பற்றி கற்றுக்கொடுத்தார் அகத்தியர். ஒருமுறை அவர் தலயாத்திரை கிளம்பினார். அப்போது தன்னிடமிருந்த சாளக்கிராமம் என்ற மூலிகைகளால் செய்யப்பட்ட நாராயணனன் சிலை ஒன்றை சுதீட்சணனிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், அதற்கு தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்படியும் கூறினார். சுதீட்சணனும் அதை வாங்கிக்கொண்டான். ஆனால் அகத்தியர் சொன்னதை விளையாட்டுப்பிள்ளையான அவன் கடைபிடிக்க வில்லை. ஏனோதானோவென சிலையை கண்ட இடத்தில் வைத்துவிடுவான். அகத்தியர் கிளம்பும்போது அந்த சிலைக்கு நதியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்யும்படி சொல்லியிருந்தார். ஆனால் சுதீட்சணன் அதைக் கேளாமல் நதிக்கே சிலையை எடுத்துச் சென்று அங்கு வைத்து அபிஷேகம் செய்தான். நதியிலிருந்து குடத்தில் தண்ணீர் எடத்துவர சோம்பல்பட்டு இப்படி செய்து வந்தான். அந்தச்சிலையை ஒரு பெட்டியில் வைத்து நதிக்கரைக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.

நதிக்கரையில் ஒரு நாவல்மரம் இருந்தது. மிகப்பெரிய பழங்கள் பழுத்துக்கிடந்தன. ரிஷிகுமாரர்கள் அந்த பழங்களை பறிப்பதற்காக நதிக்கரைக்கு கூட்டமாக வருவார்கள். சிறுவனான சுதீட்சணனுக்கும் நாவல்பழங்களை தின்பதில் விருப்பம் அதிகம். அவனும் ரிஷிகுமாரர்களுடன் சேர்ந்து கல்லெறிந்து பழங்களை பறிப்பான் . ஒருநாள் இவ்வாறு பழம் பறித்துக்கொண்டிருந்தபோது மரத்தின் உச்சியில் மாம்பழம் அளவுக்கு பெரிதான நாவல்பழம் ஒன்று தொங்கியது. அதை எப்படியாவது பறித்துவிடவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. சுற்றும்முற்றும் பெரிய கல் ஏதாவது கிடக்கிறது எனதேடிப்பார்த்தான். கல் கிடைக்கவில்லை. எனவே தன்கையில் இருந்த சாளக்கிராம சிலையை மரத்தின்மீது வீசினான். பழம் கீழே விழுந்தது. ஆனால் சிலை மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. சுதீட்சணனுக்கு பயம்தொற்றிக் கொண்டது. அகத்தியர் வந்தால் என்ன பதில் சொல்வது ? என தெரியாமல் திண்டாடினான். மரத்தின் மீது ஏறி சிலையை எடுக்க ரிஷிகுமாரர்கள் பயந்தனர். அந்த மரத்திலிருந்த பொந்தில் ஒரு பாம்பு வசித்தது. மரத்தில் ஏறினால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் யாரும் ஏற மறுத்துவிட்டனர். சுதீட்சணன் கவலையுடன் ஆசிரமத்திற்கு திரும்பினான். அவன் எதிர்பாராத விதமாக அகத்தியர் அன்று வந்து சேர்ந்து விட்டார். நாராயணன் சிலைக்கு தினம்தோறும் அபிஷேகம் செய்தாயா ? அதை எங்கே வைத்திருக்கிறாய் ? உடனே எடுத்துவா, பூஜை செய்ய வேண்டும், என்றார். சுதீட்சணன் விழித்தான். ஒரு சிலையை எடுத்துவந்தான். அது முன்னம் கொடுத்த சிலைபோல இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.தொட்டுப்பார்த்தபோது நசுங்கியது. தான் பறித்த நாவல் பழத்தில் நாராயணன் போல் சித்திரம் எழுதி, அதை அகத்தியரிடம் கொடுத்துவிட்டான். அகத்தியர் அதை கண்டுபிடித்து விட்டார். அதன்பிறகு மரத்தில் சிலை சிக்கிக்கொண்டது பற்றி சுதீட்சணன் பயத்துடன் சொன்னான். அகத்தியருக்கு கோபம் வந்த விட்டது. உண்மையைச் சொல்லாமல் தன்னை ஏமாற்றிய சீடனுக்கு, சிறுவன் என்றும் பாராமல் சாபம் கொடுத்து விட்டார். எப்போது நீ நாராயணன் சிலையுடன் வருகிறாயோ, அப்போது இங்கு வந்தால் போதும் அதுவரை உனக்கு இடமில்லை. என சொல்லி விரட்டி விட்டார்.

சுதீட்சணன் மீண்டும் மரம் இருக்கும் இடத்திற்கு சென்றான். மரத்தில் ஏறினான். ஆனால் பாம்பு அவனை விரட்டியது. பயந்துபோன சுதீட்சணன் அருகிலிருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். அவனுக்கு 50 வயதை எட்டிவிட்டது. அகத்தியரின் சீடன் என்பதால் காட்டிலிருந்த மற்ற முனிவர்கள் சுதீட்சணனுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். காட்டில் காலத்தை வீணாக கழிக்காமல் தன் குருவின் விருப்பப்படி மீண்டும் நாராயணன் சிலை கிடைக்கவேண்டும் என, அந்த நாராயணனை நினைத்தே தவம் இருந்தான். இதனால் சுதீட்சணன் சுதீட்சண முனிவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். அவரும் சாளக்கிராமத்தில் பல வணங்கி வந்தார். அந்த சிலைகளை சில குரங்குகள் எடுத்துச் சென்று அருகிலுள்ள ஏரியில் வீசி வந்தன. சுதீட்சணரும் மீண்டும் மீண்டும் சிலைகள் செய்து வணங்கிவந்தார். அகத்தியருக்கு பிடித்தமான சிலையை தொலைத்துவிட்டதால் தான் குரங்குகள் இவ்வாறு தனக்கு துன்பம் செய்வதாக சுதீட்சணர் நினைத்தார். மனம் தளராமல் பல சிலைகளை செய்து நாராயணனை வணங்கிவந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் குரங்குகள் அவற்றை ஏரியில் வீசிவந்தன. இதைக்கண்டு மனம் பொறுக்காத சுதீட்சணர், நளன், நீலன் என்ற அந்த குரங்குகளிடம், நீங்கள் இனிமேல் எந்த பொருளை தண்ணீரில் வீசினாலும் அவை மிதக்கும் என சாபம் கொடுத்தார். பிற்காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்றபோது அனுமானுடன் சென்ற நளன், நீலன் என்ற இந்த குரங்குகள் தான் கடலில் பாறைகளை தூக்கி வீசி பாலம் அமைத்தன. அந்த பாறைகள் தண்ணீருக்குள் மூழ்காமல் கடலில் மிதந்ததால் பாலம் அமைப்பது எளிதாக அருந்தது. இதனால் சுதீட்சணர் அளித்த சாபம்கூட ராமனுக்கு உதவியது. இதைக்கேள்விப்பட்ட ராமன். சுதீட்சணர் இருக்கும் இடத்திற்கு வந்து, இலங்கைக்கு செல்ல உங்களது சாபம்தான் எனக்கு மிகவும் பயன்பட்டது, எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நாராயணனே ராம அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தவர் என்பதை உணர்ந்த சுதீட்சணர், அவரை அழைத்துக்கொண்டு தனது குருவான அகத்தியரிடம் சென்றார். ராமனே தன் ஆசிரமத்திற்கு வந்ததும் மகிழ்ச்சியடைந்த அகத்தியர் அவரை வணங்கினார். சுதீட்சணர் அகத்தியரிடம், தாங்கள் நாராயணன் சிலை இல்லாமல் உங்களை பார்க்கக்கூடாது என சொன்னீர்கள். ஆனால் நான் நாராயணனையே இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். உங்கள் சாபம் இன்றோடு தீர்ந்தது. என்னை மீண்டும் உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்னை வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் நாராயண தரிசனம் எனக்கும் கிடைத்திருக்காது. என்மீது கொண்ட உண்மையான பாசத்தால், ராம தரிசனம் கிடைக்க எனக்கு தாங்கள் உதவியதை இப்போது புரிந்து கொள்கிறேன். உங்கள் சீடனாக இருக்க இனியாவது அனுமதிப்பீர்களா என கேட்டார். அகத்தியர் அவரை மகிழ்வோடு அணைத்து மீண்டும் தன் சீடனாக்கி கொண்டார்.
ஓத சுவாமிகள்

மலைகளுக்கும் மகான்களுக்கும் பெயர் பெற்றது நம் பாரத தேசம். இன்றைக்குத் திகிலைக் கிளப்பி, மனிதர்கள் நடமாடுவதற்கு சவாலாக இருக்கும் பல மலைகளில் சித்த புருஷர்கள் ஒரு காலத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு காடு மலைகளியே சுற்றித்திரிந்த சித்தபுருஷர்கள் நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றில் இருந்து தடம் மாறிப் போன மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு ஆசி புரிவதற்கென்றே மலைகளை விட்டு இறங்கி வந்தார்கள். பதிணெண் சித்தர்களில் ஒருவரான போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தர்கள் அவதரித்தனர். இவர்களில் ஓத சுவாமிகளும் ஒருவர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம் இவர் ஜீவசமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து அருள்புரிந்து வருகிறார். ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவரது திரு அவதாரமே மிகவும் சிலிர்க்க வைக்கும் ஒன்று. கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் ஓத சுவாமிகள். காசியில் வாழும் விஸ்வநாதரின் ஆசியோடும், அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஓதசுவாமிகள். பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ., தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம். ஓத சுவாமிகளின் தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர். ஒருமுறை வடமாநிலங்களுக்கு ÷க்ஷத்திராடனம் சென்றார்.

வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது இந்த யாத்திரை. அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகு தான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படித்தான் இருக்கும்.யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம். காய்ந்த சருகு மட்டுமே உணவு. எங்காவது நீர்நிலைகளில் ஓடுகின்ற தண்ணீரை மட்டுமே அருந்துவார். இப்படிக் கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்கு கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சன்னதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. பரமேஸ்வரா... இந்த காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாகப் பிறக்க போகிறான் பார், என்று அங்கே ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர். அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான ÷க்ஷத்திரங்களைத் தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர். மகான் வழங்கிய ஆசி மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லி பூரிப்பார். உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஓடின. காசி விஸ்வநாதரின் அருளால் பரமேஸ்வரரின் துணைவியார் கருவுற்றார். பிரசவ காலமும் நெருங்கியது. பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின் துணையோடு வீட்டின் தனியான ஓர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார். வீட்டிற்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார் பரமேஸ்வரர். என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப் போவதாக திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே தன் மனைவி படும் அவஸ்தையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின. உள்ளே எந்தவிதமான அலறல் சத்தமும் இல்லை. மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கன கம்பீரமாக அட்சர சுத்தமாகக் கேட்டது. பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும், அவரது உறவினர்களும் பிரமித்தனர். மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்பு தாங்க முடியவில்லை. எனவே, கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்து போனார்கள். பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. உள்ளே ரோஜாப்பூக்களுக்கு நடுவில் ஒரு ஆண் குழந்தை புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளின் அருளோடு அக்குழந்தை பிறந்தது. இவ்வாறு பிறக்கும் போதே பல அற்புதங்களை நிகழ்த்தினார் ஓத சுவாமிகள். குழந்தைக்கு முருகப்பெருமானின் திருநாமமான சுப்ரமண்யன் என்பதையே சூட்டி விட்டார் பரமேஸ்வர ஐயர். பின்னாளில் இவர் சுப்பையா என எல்லோராலும் அழைக்கப்பட்டார். சுவாமிகளுடைய ஐந்தாவது வயதில் அவருக்கு உபநயனம் நடந்தது. சிறு வயதில் இருந்தே இறை இன்பத்தில் நாட்டம் அதிகம் கொண்டவராகத் திகழ்ந்தார் சுவாமிகள். ஓம் என்றும் ஆதிசங்கரா என்றும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தந்தையார் மறைந்து விட்டார். அதன் பின் காடு, மலை என்று சுற்றித் திரிய ஆரம்பித்தார். ஒருமுறை தன் தாயாரிடம் நீ என்னை எப்போடு கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன். எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன என்று சொல்லி, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

தனது எட்டு வயதிலேயே அஷ்டமா சித்திகளும் சுவாமிகளுக்கு கைவரப் பெற்றதாகச் சொல்வர். தெருவில் குடிநீர் எடுத்துக்கொண்டு போகும் ஒரு வண்டியில் உள்ள ஒட்டுமொத்த நீரையும் ஒரே மடக்கில் விறுவிறுவெனக் குடித்து விடுவார். பின்பு அதை அப்படியே உமிழ்ந்து விடுவார். இவ்வாறு எண்ணற்ற லீலைகளை சிறு வயதிலேயே நிகழ்த்திக் காண்பித்தார் சுவாமிகள். பகவான் ரமண மகரிஷியைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த பெருமை ஓத சுவாமிகளையே சாரும். ஸ்ரீரமணர் திருச்சுழியில் பிறந்தவர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவரது குடும்பம், திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்து வந்தது. அப்போது நகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்ட ரமணர் துவக்கத்தில் ஒழுங்காகத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை அவதூராகத் தெருக்களில் வலம் வரும் ஓதசுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவர் செல்லும் இடமெல்லாம் ரமணரும் செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓதசுவாமிகள், அவரை அருகே அழைத்து திருவண்ணாமலைக்குச் செல்... அங்கே உனக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார் என்றார். அதன்பின் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு புறப்பட்டார் ரமணர். ஒரு சமயம் சிருங்கேரி மடத்தின் முப்பத்திரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கலுக்கு விஜயம் செய்திருந்தார். அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடம் இருந்தது. அங்கே முகாமிட்டிருந்தார் ஆச்சார்யர். சிருங்கேரி மடத்தின் மீது அபிமானம் கொண்ட எண்ணற்ற பக்தர்கள் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்து திண்டுக்கல் மடத்தில் குவிந்திருந்தார்கள். பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்பதற்றகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு தெருவழியாக செல்லும் போது அங்குள்ள சாக்கடை நீரில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார் ஓத சுவாமிகள். சிருங்கேரி ஆச்சாரியாரின் பல்லக்கை பார்த்து பெருமூச்சுவிட்டு ஹும்... பல்லக்கு, பட்டு பீதாம்பரம் தெரு வழியே போகுது பார் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். இதை ஞானத்தால் உணர்ந்த பாரதி சுவாமிகள் பல்லக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி நடந்து வந்தார். சாக்கடையில் அமர்ந்து ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஓதசுவாமிகளின் அருகே வந்தார் ஆச்சார்யார். அண்ணா என்ன கோலம் இது! என்று சுவாமிகளை பார்த்துக் கேட்டார். ஓ.. நரசிம்மனா வா நரசிம்மா, வா வா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் இவன் பித்து பிடித்தவன், இவனை ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்று கூறினர். அப்படியெல்லாம் கூறாதீர்கள் என்ற ஆச்சார்யார் மற்றவர்களின் அழுக்கைப் போக்குவதற்காகவே இவ்வாறு நீராடுகிறார். மாபெரும் சித்த புருஷர். இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது என்பது எவருக்கும் எளிதில் கைகூடாது. நானும் இது போன்ற நிலையை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பின்னர் சிருங்கேரி ஆச்சாரியாரின் மடத்திற்கு சென்ற ஓத சுவாமிகள் அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறு பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருப்பார் ஓதசுவாமிகள். இவ்வாறு பல லீலைகளை செய்து கொண்டிருந்த சுவாமிகள் ஒரு நாள் அவரது பக்தரான சதாசிவ ஐயரின் கனவில் தோன்றி, சதாசிவா... இன்னும் சில நாட்களுக்குள் நான் சித்தி ஆகப் போகிறேன். நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய் என்று சொல்லி மறைந்தார். ஓத சுவாமிகள் 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேத சித்தி ஆனார். அன்று திருவாதிரை நட்சத்திரம். சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது அதிர்ஷ்டானம் அமைக்கப்பட்டு அனைவரும் ஓதசுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை!

கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருப்பதி கோவிலில் இருந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த வேங்கடமுடையான் வஸ்திர மரியாதையுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாப்பிராஜு, நிர்வாக அதிகாரி கோபால், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஆகியோர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - சிறப்பு கோலங்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
திருவெம்பாவை-பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கோலம் போட்டுக் கோலாகலமாக வாழுங்க: கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். கோலங்கள் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை. இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கும்; மனை விளங்கும். வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும். கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது, சகல நன்மையும் தரும்.
அதிகாலையில் எழுபவரே உயர்ந்தவர்!

நம்மிடையே பல ஜாதிப்பிரிவுகள் உள்ளன. அவரவர், தங்கள் ஜாதியின் சிறப்பை எடுத்துக்கூறி உயர்ந்த ஜாதியாக கொள்கிறார்கள். ஆனால், யாரொருவன் காலையில் சூரியனைப் பார்க்கிறானோ அவனே உயர்ந்த ஜாதிக்காரன், என்கிறார் வேதத்திற்கு பதம் பிரித்த அத்ரி மகரிஷி. உதைநம் கோபா அத்ருஷன் அத்ருஷன் உதஹார்ய: அத்ருஷன் அத்ருஷன் என்கிறார். இதற்கு சூரியனை முதலில் பார்க்கும் ஜாதி உயர்ந்தது, என்று பொருள். அதாவது, காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எந்த நாடு எழுகிறதோ அந்த நாடே உருப்படும். திருப்பாவையில் ஆண்டாள் இதையே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்கிறாள். மதி என்றால் ஒளி என்றும் பொருளுண்டு. ஆயர்பாடி மக்கள், பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு காலையிலேயே கிளம்புகிறார்கள். அவர்களே முதலில் சூரியனைப் பார்க்கிறார்கள். அடுத்து பெண்கள் குடங்களுடன் நீராட கிளம்பி விட்டார்கள். அவர்கள் அடுத்ததாக சூரியனைப் பார்க்கிறார்கள். அவர்களும் கொடுத்து வைத்தவர்களே! இவர்களுக்கு பிறகு தான் சூரிய வெளிச்சம் தரையில் விழுந்து பூமியே சூரியனைப் பார்க்கிறதாம். மதியை நிலா என்று எடுத்துக் கொள்ளலாம். பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் ஒளிரும் நாளே நற்செயல்கள் செய்ய உகந்த நாள். அப்படிப்பட்ட உயர்ந்த நாளில் மார்கழி நோன்பு துவங்குகிறது, இதனால் தான் ராமபிரான் சூரியகுலத்திலும், கிருஷ்ணர் சந்திர குலத்திலும் அவதரித்தனர். இனிமேலாவது, சூரியோதத்துக்கு முன் எழும் பழக்கத்தை மேற்கொண்டு உயர்ஜாதியில் ஒரு உறுப்பினர் ஆவீர்களா!
பாவை உணர்த்தும் தத்துவம்!

துயில் நீக்கம் என்னும் ஆன்மிக மையங்கொண்ட அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன. சிறுமியர் தம் ஒத்த வயதினரை அதிகாலையில் எழுப்பி நீராட அழைக்கின்றனர். துயில் எழுப்புதலும் நீராட அழைத்தலும் இனிய ராகங்கள் துயில் எழுப்புதல் ஆன்மாவின் துயில் நீக்கத்தை உணர்த்துகின்றது. அருளாளர்கள் அனைவரும் அழைத்த அழைப்பின் சாரம் இதுவே.

உத்திஷ்டத ஜாக்ரத எழுமின்-விழிமின் எனும் உபநிடதக் குரலுக்கு மணிவாசகரும் ஆண்டாளும் தந்த இன்னமுதப் பாவைப் பாடல்களின் வாயில் நாடகப் பாங்கினது. உள்ளே துயில்வோர்; வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை. எழுப்பும் குரலிலோ நட்புரிமை. சில போது எள்ளல், சிலபோது நகையாடல், சிலபோது செல்லக் கடிந்துரைகள் என எப்போதும் நேயமிகு நெருக்கம். வன்செவியோ நின் செவிதான்? எனக் கேட்பவள் திருவெம்பாவைத் தோழி. ஊமையோ அன்றிச் செவிடோ? (9) என வினபுபவள் திருப்பாவைத் தோழி. ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ? (4) என்பது திருவெம்பாவைக் குரல் எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? என்பது திருப்பாவை. நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்ற வள் நாணாமே போன திசை பகராய்! (6) என்பது திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பர்கணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? (10) என்பது திருப்பாவையின் செல்லக் கடிந்துரை.

இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் பாவைப் பாட்டுகளின் நுழைவாயில் வரவேற்பினிமைகள், அழகியல் ஆர்வமும் ஆன்மீகத் தேடலும் உடையவர் தம் உள்ளத்தை எளிதில் பிணிக்கும் எழில் கோலங்கள்!

நீராடல் சித்திரச் சோலையும்
நோன்பின் சித்திரக்கூடமும்.

இரு பாவைப் பாடல்களுக்கும் அமைந்த பொது மையம் ஆழமானது. எனினும் அவற்றிடையே நுட்பமான வேறுபட்ட பரிமாணங்களும் உள. நீராடலின் சித்திரம் திருவெம்பாவையிலும் நோன்பின் சித்திரம் திருப்பாவையிலும் விரிகின்றன. வாழ்க்கையை இனிய நோன்பின் புனித நீராடலாக அனுபவிக்கும் ஆழப் பார்வையின் விகசிப்பாகவே திருவெம்பாவை ஒளிர்கின்றது. இயற்கை அரங்கின் அழகெல்லாம் உருக்கி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. பொய்கையின் கருங்குவளையும் செந்தாமரையும் நீலமேனியாளையும் செந்தமிழ் வண்ணனையும் நினைவூட்ட; அங்கம் குருகினம் அம்மையின் கைவளையும் பின்னும் அரவம் அப்பனின் பாம்பணியும் நினைவூட்ட; தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தல் நீராடும் பொய்கையினைப் பரம்பொருட்சுனை ஆக்குகிறது.

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம் போதால்
அங்கம் குரு கினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடு

என ஆனந்தமடைகிறது பாடல் (திருவெம்பாவை 13)

இப்பார்வையின் பரவசத்தில் இன்னும் ஆழங்கால் படும்போது வாழ்க்கை அரங்கே இறைத் தடாகமாகின்றது. வாழும் வாழ்க்கையே பரமானந்த நீராடல் ஆகின்றது. பாய்ந்து பாய்ந்து - பாடிப் பாடி - குடைந்து குடைந்து- தோழியருடன் ஆனந்த நீராடும் வைகறை இனிமையே- திருவெம்பாவையின் ஞான மொழியில்-ஆன்மிக வாழ்க்கையின் அற்புதக் குறியீடாகின்றது. மாமத யானை மரத்தில் மறைந்திடும் அழகியல் நுட்பம் இது. பார் முதல் பூதம் பரத்தில் மறைந்திடும் ஆன்மவியல் பரவசம் இது.

வாழ்க்கையை உன்னதமான இறைக்காலத்தில் நோன்பின் சித்திரகூடமாகக் காணும் காட்சிக்கு இட்டுச் செல்கிறது. திருப்பாவை. மார்கழித் திங்கள்..... என்று தொடங்கி, நெய்யும் பாலும் நீக்கிடல், மலரும் மையும் ஒதுக்கிடல், செய்யத் தகாதன தவிர்த்தல் எனும் விரதநெறிகளைத் தருகிறது.

குள்ளக் குளிரக் குளிர்ந்து நீராடல்-இங்கு விரத அங்கமே துயில் எழுப்பும் குரலே நீட்டிக் கொள்கிறது. நந்தகோபன் மாளிகைக் காவலனை உணர்த்தி துயில் எழுப்பி-அவனைப் போற்றி மகிழ்கின்றது. கோதையின் பாவை. நோன்பின் நிறைவில் கோவிந்தன் அருளால் பெற்ற நல்லுடையும் பல்கலனும் அணியும் குதூகலம் அங்குண்டு. மூடநெய்பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்து உண்ணும் பேறு உண்டு. அனைத்துக்கும் மேலாகச் சிங்கமென வந்து கண்ணன் சிங்காதனமிருந்து அருளும் காட்சியும் பறை பெற்றுய்தல் எனும் கைங்கர்ய பிராப்தியின் ஆனந்தமும் சித்திரக்கூடச் சிகரக் காட்சியாகின்றன.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நங் காமங்கள் மாற்று என்பது வாழ்க்கையையே நோன்பாகக் காணும் கோதைப் பார்வை.
சிவமணமும் மால்மணுமும் திருவெம்பாவை சிவமணம் கமழ்வது. திருப்பாவை மால்மணம் கமழ்வது.

இறைமுகட்டின் புகழை இடையறாது ஒலிக்கும் இன்னருவி ஓசை பக்தி இலக்கியங்களின் பொதுமை. இறைப் புகழ் ஒன்றே பக்தர் நோக்கில் பொருள்சேர் புகழ் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யாதலே நோக்கம். எனவே, என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே எனும் நெகிழ்வொலியைப் பக்தி இலக்கியங்களிலும் பொதுப் பண்பாகவே காணலாம்.

நெஞ்சம் நெகிழ்தலே பக்திவயல்களின் வளமை ஆதாரம். இறைப் புகழ்த் தொடர்களே நெஞ்சம் நெகிழ்தலின் ஊற்றுக் கண்கள். இறைப் புகழ்த் தொடர்கள் தத்துவக் களத்திலோ-புராணக் களத்திலோ-உரிமைகெழுமிய உறவுப் பிணிப்பிலோ-அல்லது இவை மூன்றும் விரவிய இனிய சுரப்பிலோ கிளர்ந்தெழுகின்றன. இரு பாவைகளும் இவ்வகையான இறைப்புகழத் தொடர்களால் மனம் பிணிக்ககின்றன; நெகிழச் செய்கின்றன.

தேசன்- சிவலோகன்-தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன்(2) என்றும்; ஆரழல் போல் செய்யா-வெண்ணீறாடி-மையார் தடங்கண் மடந்தை மணவாளன் (11) என்றும்; செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகன்-அங்கண் அரசு-அடியோங்கட்கு ஆரமுது(17) என்றும்; கண்ணாருமுதமாய் நின்றான்(18) என்றும்; என்னானை-என்னரையன்-இன்னமுது(7) என்றும், இன்னும் பல தொடர்களில் சிவமணம் தரும் திருவெம்பாவை.

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்-கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்றும், ஆழிமழைக்கண்ணன், மாயன்- மணிவண்ணன், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்(14) என்றும் பலவாறு புகழ்கிறது திருப்பாவை.

மாயனை-மன்னு வடமதுரை மைந்தனை-தூய பெருநீர் யமுதில் தோன்றும் அணிவிளக்கை-தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை (5) என வேகப் படிக்கட்டேறித் துரத்தித் தொடர்வது தோகைத் தமிழ்.

மழைக் காட்சியின் மனக்குளிர்ச்சியில் இரு பாவைகளும் பெறும் பரவசமும் குறிக்கத்தக்கது. இறையருளின் சாசுவதக் குறியீடு மழை. விண்ணும் மண்ணும் இணையும் அழகிய மழைக் காட்சி அழகியலாரின் கலைக் கண்களுக்கு என்றுமே, எங்குமே பெருவிருந்து. உலக ஆன்மிக இலக்கியச் சொல்லோவிய அருங்காட்சியகத்துக்கு இருபாவைகளும் தந்த அற்புதச் சித்திரங்கள் இவை.

கார்மேகத்தில் உமையவள் திருமேனி அழகையும் மின்னலில் அவளது இடையொளிக்கீற்றையும் இடிமுழக்கில் அன்னையின் பொன்னஞ்சிலம்போசையினையும் காண்பது திருவெம்பாவை. ஆழிமழைக் கண்ணா! என்ற திருப்பாவைப் பாடலிலோ மேக நிறத்தில் திருமாலின் திருமேனியையும், மின்னல் சுழற்சியில் திருக்கைச் சக்கர அருள் சீற்றத்தையும் இடிமுழக்கத்தில் பாஞ்சஜன்யத்தின் பேரொலியையும், வீசும் மழைச்சரங்களில் சார்ங்கக் கணைப்பொழிவையும் கண்டு பரவசம் கொள்கிறது. (4)

மாணிக்கவாசகர் பக்தி நெகிழ்வில் ஞானக்காட்சிகளே ததும்புகின்றன. ஞானப் பார்வையின் சொற்சித்திரங்களே திருவெம்பாவையின் பரம்பொருட் காதல் அனுபவத்தை இனிமை செய்கின்றன. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடங்கண் மாதே, வளருதியோ! என்னும் தொடக்கமே ஆதியந்தமில்லாத அற்புதச் சோதியாகப் பரம்பொருளைச் சுவைக்கிறது.

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே எனும் போதும்(அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம் என) புராண மொழியில் தரப்படும் எழுநிலைத் தாழ்மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதமலர் அழகும்; எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சி கொண்டு நிமிரும் போதார் புனைமுடி நலமும் ஞானச் சித்திரங்களாகவே அகம் நுழைகின்றன. அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை உணரலாம்.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும்பேர்த்துமப் பெற்றியனே!

என்னும் போதும் பரம்பொருளின் காலாதீதச் சித்திரமே மனம் கொள எடுத்துரைக்கப்படுகிறது. விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை எனும் போதும்; ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன் எனும் போதும்; பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி, மண்ணாகி இத்தனையும் வேறாகி, எனும்போதும் ஞானச்சுவையே காதற் சுவையாகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம்; பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம். அழகியல் மீதூர்ந்த அமுதச் சித்திரங்களும், புராணக் கால்வழி எழும் புனைவுச் சித்திரங்களும் அவளது ஆழ்மனம் உணர்ந்த அற்புத சத்தியங்கள்; அவளது பாவனா சக்தியின் அற்புத தரிசனங்கள்.

கோதைக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி ஆகின்றது. தோழியர் ஆயர் கன்னிகையர் ஆகின்றனர். வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை ஆகின்றது. அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணன் ஆகின்றான். இடையர்களது பேச்சும் இடையர் நடையும் இயல்பாகின்றன. தானே இடைச்சிறுமி ஆகின்றாள்.கோதை வாழ்வில் சீர்மல்கும் ஆய்ப்பாடி; அங்கு புழங்கும் நெய்யும் பாலும் விதவிலக்குப் பெறுகின்றன; சூழ நிற்பவை வாங்கக் குடம் நிரப்பும் வள்ளல் பெரும் பசுக்கள்; காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து ஆய்ச்சியர் மத்தினால் எழுப்பும் தயிர் அரவம் ஒலிக்கின்றது. எருமைகளைப் பனிப்புல்லுக்குச் சிறுமேய்ச்சலிடும் காட்சியும், எருமை தன் கன்றுக்கிரங்கிப் பால் சேரா நனைந்து இல்லம் சேறாகும் காட்சியும் அங்கு காணலாம். ஆயர்பாடி நாயகன் கண்ணன் ஆயர் குலத்து அணிவிளக்கு; அவனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்றும் பேய் முலை நஞ்சுண்டு- கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -வெள்ளதரவில் துயில் அமர்ந்த வித்து என்றும்; புள்ளின் வாய் கீண்டான் என்றும்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான் என்றும் பலவாறு புனைந்து மகிழ்வாள் ஆண்டாள். புராணக் கீற்றுகள் மாணிக்கவாசகரிடம் ஞானச் சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். வாதவூரரும், வில்லிபுத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாட்டுகளில் நாம் காண்பதெல்லாம்-நாம் ருசிப்பதெல்லாம் ஆன்மிக அமுத வளமே!