வியாழன், 12 செப்டம்பர், 2013

வில்வ இலை 

வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.

அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.

பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.

வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம்.

சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.

மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும்.

ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.

வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

புதன், 11 செப்டம்பர், 2013

அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்!

திருப்பதி என்றாலே அதில் எண்ணற்ற அதிசயங்கள் அடங்கியுள்ளது. திருப்பதி பெருமாளை தரிசிப்பதே நம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என்றால் அங்குள்ள ஒவ்வொரு விஷயங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கர்ப்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக் கர்ப்பூரம் ஒரு ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். பல கோடி ஆண்டுகள் கடந்து இறுகி நிற்கும் சிலா தோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக் கர்ப்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.
திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள். ஏழுமலையானின் திருமேனி அமைந்திருப்பதும், இந்தப் பாறைகளுக்கு நிகரானதே. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.
ஏழுமலையானுக்கு சாத்தப்படுவது, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. திருப்பதி திருக்கோயிலின் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மவுகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஆனாலும் லட்டுவே பிரதானமாக பேசப்படுகிறது. ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்வதற்காக தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய். சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை உள்ளது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய சடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் போல், உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ1000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்ரகம் கி.பி.966 ஜூன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார். மாமன்னர்களான ராஜேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.
திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழிமாதத்திலும் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று ÷க்ஷத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம்அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்ன மய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர் மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமம், வராளி ராகத்தில் பாடியுள்ளார். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது. ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளிய மரம். ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒருநாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும். வெள்ளிக் கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் வேங்கடமெனப்பெற்ற என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனைசெய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார். எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். 1781 -ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிரார்த்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள். திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள் பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவே அபிஷேகப் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திற்கு சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ. 50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன. கி.பி. 1543-ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி 1764-ல் நிஜாம் தவுலா என்பவனின் தலைமையில் வந்த அன்னிய படைகளால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன. திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது. ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார். திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுகள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909 ஆண்டு வரை கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளுள் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன.
லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?

புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், லட்சுமி நிவாஸ் என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே! லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன். பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.
பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன். பெரியோர் களுக்குப் பணிவிடை செய் தும் அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். பண்டங்களை வீணடிப்போர், கோபமுள்ளோர், தேவதைகள், பெரியோர்கள், வேத பிராமணர் களை பூஜிக்காத, மரியாதை செய்யாத பெண்களிட மும், கணவனுக்கு எதிராகவோ, விரோத மாகவோ இருக்கும் பெண்களிடமும் நான் வசிப்பதில்லை. எப்போதும் படுத்திருப்பவளும், சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும், நான் வசிப்பதில்லை. வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும் போது தொம், தொம்மென்று பூமி அதிர நடக்கும் பெண்களின் இல்லங் களிலும் நான் வசிப்பதில்லை. வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும், அன்றில் கூவுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பியும், சிம்மங்கள், யானைகளால் கலக்கப் பட்ட நதிகளிலும் நான் வசிக்கிறேன். யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன். எந்த வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யப் பட்டு தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படுகிறதோ அவ் வீடுகளிலும், நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளோரிடமும் வசிக்கிறேன். என்னிடத்தில் எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார், என்கிறார். இதையெல்லாம் கவனமாக படித்துப் பார்த்து, லட்சுமிதேவியின் அருள் பெறவும், நம் வீடுகளில் அவள் வாசம் செய்யவும் முயற்சி செய்யலாம் வெறும் போர்டு போட்டு விட்டால் அவள் வந்து விடுவாளா?
குளிகன் சேர்க்கையால் ஏற்படும் நன்மை தீமைகள்!

மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.
சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன் இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் கணவனை இழப்பாள் என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள் இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும் வேளையை நாம் தவிர்ப்போம். ராகு கால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும் குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும் தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின் கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும் அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில், கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு, பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும் இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம். பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில் குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில் தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26ல் இருந்து 22, அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில் இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன் இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன் தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக ஆரோக்கியமின்றி இருப்பார். 4வது வீட்டில் தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6ல் இருந்தால், எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7ல் இருந்தால், சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச் செய்வான். 8ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9ல் இருந்தால், தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11ல் இருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பான். 12ல் இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான். குளிகன், 11ல் மட்டும் நல்லவன்; மற்ற வீடுகளில் அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச் சொல்வர். 11ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு. ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை மறக்கக்கூடாது. வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ÷ஷாடசபலம் ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின் அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில், குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்; சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால், சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன் இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன் வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான். சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம் இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால், நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில் நெருப்பில் சேர்ந்துவிடும். குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக் கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும். நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு. குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன் (மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை, பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.
பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில் சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில் தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால், மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே, அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர். ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால் சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்; ஏமாற இடமிருக்காது ! ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன் இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல், குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம். அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும் செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில் மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே, வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12 முறை ஜபித்தாலே போதுமானது !
விளங்காத மர்மத்தை விளக்கும் யோக வசிஷ்டம்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது. விதியா, முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம். மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது, பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும்.... இத்யாதி கேள்விகள் ஏராளம். விடைதாள் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் யோக வாசிஷ்டம். ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம். அதனால்தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர். ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.
யோக வசிஷ்டம் எப்படி வந்தது?
ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக ளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32,000 தான்! இந்த உபதேசங்களைப் பெற்ற இராமர், தான் எப்போதும் பிரம்ம ஞானத்திலேயே இருக்க விரும்புவதாகக் கூறுகிறார். குரு வசிஷ்டர் இராமருக்கு அவரை உணர்த்தி, அவரின் அவதார நோக்கத்தைத் தெளிவுப்படுத்திய பிறகே தன்னை அறிந்து கொள்கிறார். ஸ்ரீராமசந்திர பிரபு. விதி என்பது இல்லவே இல்லை என்கிறது!
தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை 2518)
தைவம் ந வித்யதே(விதி என்பது இல்லவே இல்லை 2813)
மூடை: ப்ரகல்பிதம் தைவம்(மூடர்களால் உருவாக்கப்பட்டதே விதி-2816)
என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படி அது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது! மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப்படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி! பிறப்பு, இறப்பு, கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.
அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன.
சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததாஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம  (21618)
சந்தோஷம்(எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.
சந்தோஷம்: விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!
நல்லோர் இணக்கம்: மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!
விசாரம்: நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!
சமஸ்தம்: அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாகரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில். ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.
பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில்அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.
சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்
*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் காட்சி தருகிறார், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. *அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனைபோலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
*செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்
*மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள குஸ்மேசம் என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.
*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர். *ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.
*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.
*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர். விஷ்ணு சிறப்புச் செய்திகள்
*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.
*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.
*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.
*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன. *திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.
*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.
*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.
*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.
*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.
*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.
*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.
*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.
*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.
*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன, பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
ராகு கிரகத்தை வணங்குவதால் என்ன நன்மை?

சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).
கிரகணம் பிடித்த நிலையில், கருவட்டமாகக் காட்சி தருவான் சூரியன். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் ஒளிர்வான். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான். வேதத்தில், அந்த கிரகணத்தின் நிகழ்வு உள்ளது. ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் உண்டு (சன்னோ கிரஹா: சாந்திரமஸா: சமாதித்ய: சராகுணா...). வேத காலத்தில் இருந்து, தினமும் 3 வேளை, ராகுவுக்கு நீரை அள்ளி வழங்கி வழிபடுவர், வேதம் ஓதுவோர். பிறகு வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில், ராகுவை சுவர்பானு எனக் குறிப்பிட்டனர். ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம் (ராஹுக்ரஸ்தேதிவாகரே). மாயையின் தரம் மற்றும் அதன் இயல்பை விளக்க வந்த மகான் ஆதிசங்கரர், தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரத்தில் ராகுவைச் சுட்டிக்காட்டுகிறார். கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை. ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம். ராகு, தென்படும் ராசிக்கு உரியவன். அவனுடன் இணைந்தவன்; அவனைப் பார்ப்பவன். ஆகவே விகிதாசாரப்படி, ராகுவுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம். கேந்திர த்ரிகோணாதிபதிக்கு யோககாரகன் எனும் பெருமை உண்டு. அவனுடன் இணைந்த ராகு, நல்ல பலனை அளிப்பான் என்கிறது ஜாதக சந்திரிகை (யோககாரக ஸம்பந்தாத்...). தாம்பூலப் பிரஸ்னத்தில், லக்ன நிர்ணயம் செய்ய ராகு கேதுவைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை மட்டும் ஏற்பார்கள். ராகுவும் கேதுவும் இணையாத ஏழு கிரகங்களை வைத்து, ஸப்த க்ரஹ சித்தாந்தம் ஆரம்ப காலத்தில் இருந்தது. வராஹமிஹிரர் அந்த சிந்தாந்தத்தை ஆராதித்தவர் என்கிறது ஜைமினீய பத்யாமிருதம். கேமத்ரும யோகத்தில், ராசிக்கு 2-லும் 12-லும் ராகு இருந்தாலும், கிரகம் இல்லாததாகவே கருதப்படும்; வெற்றிடமாகவே ஏற்பர்; நிழல் கிரகம் என ஒதுக்குவர். ஒரு ராசிக்கு முன்னும் பின்னுமான ராசிகளில் (ராசிக்கு 2 மற்றும் 12-ல்) பாபக் கிரகம் இருந்தால், அதற்கு உபயபாபித்வம் என்று பெயர். இந்த இரண்டுகள் ஒன்றில் ராகு தென்பட்டால், உபயபாபித்வம் உருவாகாது. பாப கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துவிடுகிறான். முகூர்த்த சாஸ்திரம், லக்ன சுத்திக்கு, எட்டில் கிரகம் இருக்கக் கூடாது என்கிறது. அங்கு ராகு இருந்தால், கிரகம் இல்லாததாகக் கருதப்படும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். தசா புக்தி அந்தரங்கள், கிரகணம், ராகு காலம் ஆகியவற்றில் ராகு தென்படுவான். அடுத்து வந்த சிந்தனையாளர்கள் உச்சம், நீசம், ஸ்வ ÷க்ஷத்திரம் எனக் கொண்டு, மற்ற கிரகங்களின் அந்தஸ்தை ராகுவுக்கு ஏற்படுத்தினர். எல்லாக் கிரகங்களும் வலமாக வந்தால், இவன் இடமாக வருகிறான்.
ராகுவுக்கு சர்ப்பி எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, பாம்பின் வடிவமென ராகுவைச் சொல்வார்கள் (உரகாகார:) சர்ப்பம் என்றும் பாம்பைச் சொல்வர். சந்திரனின் பாதம் அது என்கிறது கணிதம். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம். பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய சந்திரர்களைத் துன்புறுத்துகிறான் ராகு என்கிறது புராணம். ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம் (சனிவத்ராஹு:) ஆக்னேய கிரகம் 7-ல் இருந்தால், கணவன் இழப்பை அளிக்கும். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை ஆக்னேயத்தில் சேரும்; ராகு இதில் சேரவில்லை. குரூரக் கிரகம் 7-ல் இருந்தால், கெடுதல் விளையும், செவ்வாயை, குரூரக் கிரகம் என்கிறது ஜோதிடம் (க்ரூரத்ருத்..) அதிலும் ராகுவுக்கு இடமில்லை. இப்படியிருக்க... ராகுவுக்கு தற்போது முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ராகு 5-ல் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லை; 7-ல் இருந்தால் கணவன் இழப்பு என்று பரிகாரங்களுக்கு காளஹஸ்தி தலத்தைச் சொல்வர். நாக தோஷத்துக்கு நாகப்பிரதிஷ்டை பரிகாரம்; ராமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் ஆகியவை பரிந்துரைக்கப்படும். ராகு தோஷ பரிகாரமாக, அம்பாள் வழிபாட்டை வலியுறுத்துவர். ஆக, பரிகாரத்தால் மறைகிற தோஷமாக, ராகு தோஷத்தைச் சொல்வர். 12 ராசிகளில் ராகு எங்கு இருந்தாலும் அது தோஷம் எனக் கருதி, பரிகாரத்தில் ஈடுபடுகிற நிலை வந்துவிட்டது. காலத்துக்குத் தக்கபடி, புதுப்புது பரிகாரங்களும் தற்போது வந்து விட்டன. 5 மற்றும் 7-ல் ராகு இருக்கிற ஜாதகங்கள், தீண்டத்தகாத ஜாதகங்களாக மாறிவிடுகின்றன. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் பாடு சொல்லில் அடங்காதது. கிரக வரிசையில் இடம்பிடித்த ராகு, நன்மையைவிட தீமையையே அதிகம் சுட்டிக்காட்டுவதாக சித்திரிப்பதால் ஏற்பட்ட பயம், மக்களின் சிந்தனையை முடக்கிவிடுகிறது. சம்பிரதாயம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுக்கிற மனம், சாஸ்திரத்தை மறந்துவிடுகிறது; ஆசையை அடையும் வழி தெரியாமல், முட்டுச் சந்து போல் முடங்கிவிடுகிறது. ஜோதிடத்தை மனம் சரணடைந்தால், சிந்தனையானது படுத்துவிடும். ஜோதிடத் தகவல் சிந்தனைக்கு இலக்காகியிருக்க, தகவலின் தரம் ஒருவனது முன்னேற்றத்தை வரையறுக்கும். ராகுவின் தரம், ஜோதிடத்தில் அவன் பங்கு ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிய வேண்டிய கட்டாயம் உண்டு. ஜாதகத்தில் உள்ள ராகு, கெடுக்கிற ராகு அல்ல; கொடுக்கிற ராகு எனும் விளக்கமும் இருக்கிறது. காலைச் சுற்றிய பாம்பு, (திருவாதிரை காலில் இருக்கும் ராகு) கடிக்காமல் விடாது (வேதனை அளிக்காமல் இருக்காது) என்று சிலேடையான விளக்கங்களை அளித்து ராகுவின் தரத்தைச் சொல்பவர்களும் உள்ளனர். தனி வீடு இல்லாததால், எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவான்; எவரோடும் சேராமல், எவராலும் பார்க்கப்படாமல், தனியே ஒரு வீட்டில் தென்பட்டால், வீட்டுக்கு உரியவனின் இயல்புக்கு இணங்க, தனது இயல்பையும் கலந்து மாறுபட்ட பலனை அளிப்பான். கெட்டவனுடன் சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவான். சூரியனுடன் இணைந்தால், ஜாதகரின் செல்வாக்கை இழக்கச் செய்வான். செயலை மங்கச் செய்வான். பெருந்தன்மையும் பேராதரவும் அங்கீகாரம் பெறாது. உச்சன் அல்லது வேறு வகையில் பலம் பொருந்திய சூரியனுடன் இணைந்தால், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து, தனித்தன்மையுடன் திகழ்வான். எதிரியிடம் இருந்து வெகுமதிகள் வந்தடையும்; எதிர்பார்ப்புகள் சாதகமாகும் ! சந்திரனுடன் இணைந்தால் சிந்தனை சுணங்கும்; செயல் வலுவிழக்கும். பலம் பெற்ற சந்திரனுடன் இணைந்தால், சங்கடம் நேராமல் தடுத்துவிடுவான் ராகு. செவ்வாயுடன் இணையும்போது, தேவையற்றதில் செயல்படத் தூண்டிவிட்டு, ஆயாசத்தை உண்டாக்குவான். வலுப்பெற்ற செவ்வாயுடன் இணைந்தால், எதிர்ப்பைச் சமாளித்து, எளிதில் முன்னேறலாம். புதனுடன் சேர்ந்தால், தவறான நட்பால் நொந்து போகும் நிலை ஏற்படும். வலுவுள்ள புதனுடன் இணைந்தால், பக்குவ அணுகு முறையால் காரியங்களைச் சாதிக்கச் செய்வான் ! சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்திய வாழ்வில் சங்கடம் நேரும். தவறான வழியில் செல்வம் பெருகும். பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைய, எதிர்பார்த்த உலகவியல் சுகங்களை அனுபவிக்கலாம். பெரிய மனிதர்களது தொடர்பால், பொருந்தாத பெருமைகளும் வந்தடையும். சனியின் சேர்க்கையால், நண்பர்கள் எதிரிகளாவர். பலம் பொருந்திய சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த வழியில் முன்னேறும் நிலை உண்டாகும். இக்கட்டான சூழலில், அவனுக்குப் பெருமைகள் தேடி வரும். குருவுடன் இணைந்தால், சௌக்கியங்களை இழக்க நேரிடும்; எத்தனை முயன்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் தோல்வியைத் தழுவ நேரும். மனச்சோர்வு அதிகரிக்க, கடமைகளை மறக்கும் நிலை உருவாகும். வலுப்பெற்ற குருவுடன் இணைந்தால், சங்கடம் தீர்ந்தாலும், சந்தோஷம் இருக்காது; காரியங்கள் காலம் கடந்து நிறைவேறும். குருவின் சேர்க்கையால், மற்ற கிரகங்களின் தோஷங்கள் முழுவதும் முடங்கிவிடும். ராகுவின் சேர்க்கையில் குரு செயலிழந்துவிடுவான். அதனை, குரு சண்டாள யோகம் என்கிறது ஜோதிடம். நல்லவனின் சேர்க்கை, கெட்டவனை நல்லவனாக்கும். ஆனால் ராகுவின் சேர்க்கை, குருவைக் கெட்டவனாக்கிவிடும் என்கிறது, அது ! அதேநேரம், யோக காரக கிரகங்களின் சேர்க்கையில், நல்லவனாக மாறுவதுடன் நிற்காமல், இணைந்த கிரகத்தின் நல்லபலன்களை இரட்டிப்பாக்கி, மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வான் ராகு. அசுர வேகத்தில் முன்னேற்றம் நிகழும். இதில் தடம்புரளாமல் இருக்க, ராகுவின் இடையூறு சாதகமாக மாறுவது உண்டு. இனிப்பின் அதீத தித்திப்பை, காரமானது குறைக்கும். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தாலும், ராகுவின் சேர்க்கையில் துன்பத்துக்கு இடமளித்து, இன்ப சேர்க்கையில் துன்பங்களின் கலப்படமே வாழ்க்கை எனும் நியதியை நிறைவுசெய்ய... ராகுவின் பங்கு சில தருணங்களில் பயன்படும். ராகுவை வைத்து, காலசர்ப்ப யோகம் உருவானது. அதுவே, விபரீத கால சர்ப்ப யோகம் எனும் பெயரில் விரிவாக்கம் பெற்றது. சஞ்சாரத்தில் 180 டிகிரி விலகி நிற்பதால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சேர்க்கை நிகழாது. சமீப காலமாக, குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் விழாக்கோலம் கொண்டுவிட்ட நிலையில், ராகுப் பெயர்ச்சியும் அதில் இடம் பிடித்துவிட்டதுதினமும் ராகுகாலத்தைச் சந்திக்கிறோம். ராகு வழிபாடு என்பது, வேத காலத்தில் இருந்தே தொடர்கிறது. உலகம் தோன்றும் வேளையில், வானசாஸ்திரத்தில், ராகு இடம் பிடித்துவிட்டான். வராஹமிஹிரர், பிருஹத்சம்ஹிதையில் ராகுசாரத்தை விளக்கியுள்ளார். ஆகவே, போற்றுதலுக்கு உரிய கிரகங்களில் ராகுவையும் சேர்க்கலாம். ராகுவை அழைக்க, கயான: சித்ர: என்கிற மந்திரத்தை ஓதச் சொல்கிறது வேதம். ராம் ராஹவே நம: எனும் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொல்லலாம்; 16 உபசாரங்களை இந்த மந்திரம் சொல்லி நிறைவேற்றலாம். சதுர் பாஹும் கட்க வரசூலசர்மகரம்ததா காலாதி தைவம் ஸுர்யாஸ்யம் ஸர்பப்ரத்யதி தைவதம் என்ற ஸ்லோகம் சொல்லி, ராகுவுக்கு மலர் சொரிந்து, வணங்கலாம். வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்குவான் ராகு. கைகளுக்கு வலுவூட்டுபவன் ராகு என்கிறது புராணம் (ராஹோர்பாஹுபலம்...) செயல்படுவதற்குக் கைகள் தேவை. பிறர் உதவியின்றி வாழச் செய்வான் ராகு ! இன்றைய சூழலில், ராகுவின் அருள் அவசியம். ராகு பகவானை வணங்கினால், ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் !

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்?

மனித வாழ்க்கை எப்படி எல்லாமோ முடிவுக்கு வந்து விடுகிறது. இப்படி, எப்படியாவது வாழ்க்கை நடத்தி விட்டால் போதுமா! நமக்கு நற்கதி ஏற்பட, ஏதாவது செய்ய வேண்டாமா... வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாகி விட்டது. இதெல்லாம், பிறருக்கு தான் உதவும். நமக்கு உதவுவது, நாம் செய்யும் புண்ணியம் மட்டும் தான். இதை சுலபமாக சம்பாதித்து விடலாம் என்கின்றனர் முன்னோர். ஆலயத்தை பிரதட்சணம் செய்வது ஒரு புண்ணியம். வாக்கிங் போகிற மாதிரி, சாயந்திரம் கிளம்பி, ஒரு ஆலயத்தை சுற்றி விட்டு வந்தாலே, ஆலயப் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைத்து விடும். ஒரு சின்ன கதை! சோழ மகாராஜா ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், ஹரதத்தர் என்ற மகானை தரிசிக்க வந்தார். மகானை சந்தித்த ராஜா, அவரை வணங்கி, நான் கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு ஹரதத்தர், நீர் கஞ்சனூர் முதலான ஏழு சிவ ஸ்தலங்களை, அரை யாம நேரத்தில் தரிசித்து வந்தால், உன் ஆசை நிறைவேறும்... என்றார். உடனே ராஜா, இதென்ன பிரமாதம்... என்று சொல்லி, பஞ்ச கல்யாணி குதிரை மீது ஏறி, குடைபிடித்து ஒருவன் ஓடிவர, ஏழு சிவஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்தார்.  
அதே சமயம், குதிரையும், குடைபிடித்து ஓடிவந்தவனும் மயங்கி விழுந்து, இறந்து போயினர். அந்த நிமிடமே, வானிலிருந்து ஒரு விமானம் வந்து, குதிரையையும், குடைபிடித்தவனையும் ஏற்றிக் கொண்டு, கைலாசம் சென்றது. அந்த அதிசயத்தை கண்டு ஆச்சரியப்பட்ட சோழ ராஜன், தானும், ஆலயத்தை சுற்றி வந்திருக்கும் போது, குதிரைக்கும், குடை பிடித்தவனுக்கு மட்டும், கைலாயம் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே... நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று எண்ணினார். நேராக ஹரதத்தரிடம் சென்று, நடந்த விபரத்தை சொன்னார். அதற்கு ஹரதத்தர், குதிரையும், குடை பிடித்தவனும் காலால் நடந்தே, ஆலயத்தை வலம் வந்தனர். அந்த புண்ணியத்தால், அவர்களுக்கு கைலாசம் போகும் பாக்கியம் கிடைத்தது. நீ, குதிரை மேல் ஏறி வந்ததால் சரீர சுகம் தான் கிடைத்தது. கைலாயம் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை... என்றார். அரசன் மறுபடியும் அவரை வணங்கி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்... என்று கேட்க, நீ பாதசாரியாகவே அந்த ஏழு சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்... என்றார். அரசனும், ஆசார சீலனாக பக்தியுடன், நடந்தே ஏழு சிவாலயங்களையும் வலம் வந்து, அவர் முன் வணங்கி நின்றார். அடுத்த வினாடி, விமானம் வந்து அரசனை, கைலாசத்துக்கு சகல மரியாதைகளுடன், அழைத்துச் சென்றது. இதன் மூலம் அறிந்து கொள்வது என்னவென்றால், ஆலயம் வலம் வருவது என்பது, காலால் நடந்து வலம் வர வேண்டும். ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறி பவனி வந்து, நான் நூறு சுற்று சுற்றி விட்டேன்... என்றால், அது பயன்படாது. புண்ணியம் என்பது சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டியது; விலைக்கு வாங்குவதல்ல.
அமாவாசையன்று வாசலில் கோலம் போடக் கூடாது?

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. சதுர்த்தி-விநாயகருக்கு சஷ்டி-முருகனுக்கு, ஏகாதசி-மகாவிஷ்ணுவுக்கு. அஷ்டமி-பைரவருக்கு, சதுர்த்தசி-சிவனுக்கு. பவுர்ணமி-அம்மனுக்கு... இதைப் போலவே, மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்துக்கு வரவழைத்து, அவர்களின் பசி தாகம் தீர எள்ளு கலந்த ஜலத்தால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள்ளு கலந்த ஜலத்தை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை,  அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும்(தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.
பேராசைப்படுபவரா நீங்கள்?

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது. ஆசை இருந்தால் தானே அது நிறைவேற ஏதாவது செய்ய வேண்டும்! ஆசை இல்லாமையால் அவர்கள் எந்த யாக யக்ஞங்களோ, கர்வங்களோ செய்யவில்லை. அதனால், கவலைப்பட்ட தேவர்கள். அவர்களது குருவான பிரகஸ்பதியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், நான் இதில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரம்மாவிடம் முறையிடுங்கள்... என்றார். இதே சமயம் சத்யலோகத்தில், மற்றொரு காரியத்தில் ஈடுபட்டிருந்தார் பிரம்மா. பிரம்மாவிடம் சென்ற தேவர்கள், பூலோகவாசிகள் யாகம், யக்ஞம் எதுவும் செய்வதில்லை. எங்களை மதிப்பதில்லை... என்று புகார் செய்தனர். அதற்கு அவர், உலகில் மானிடர்கள் தனக்கு ஏதாவது பயன் உண்டாக வேண்டும் என்பதற்காகவே பிறருக்கு உதவி செய்கின்றனர். மானிடருக்கு உங்கள் உதவி தேவையில்லை. அதனால், அவர்கள் வேள்வி செய்யவில்லை. இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் மகாலட்சுமியிடம் முறையிடுங்கள்.என்றார்.
தேவேந்திரனும், மற்ற தேவர்களும் இமயமலை சென்று மகாலட்சுமியைக் குறித்து, ஸ்தோத்திரம் செய்தனர். மகாலட்சுமி, அவர்கள் முன் தோன்றி, தேவர்களே... உங்கள் துதியைக் கேட்டு சந்தோஷப்படுகிறேன். உங்கள் குறை யாது? என்றாள்; தேவர்களும் தங்கள் குறையைத் தெரிவித்து; ஸ்தோத் திரம் செய்தனர். அந்த ஸ்தோத்திரத்தை கேட்ட மகாலட்சுமி, மனிதர்களில் யார் இந்த நாமாக்களை சொல்லி, ஸ்தோத்ரம் செய்கின்றனரோ, அவர்கள் செல்வந்தர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பர்... என்று சொல்லி, மறைந்தாள். சில காலம் சென்றது. அப்படியும் தேவர்கள் குறை தீரவில்லை. மறுபடியும் மகாலட்சுமியை துதித்தனர்; மகாலட்சுமியும் வந்தாள்; விவரம் தெரிந்தது. ஓஹோ... இதற்குக் காரணம் மனிதர்களிடம் ஆசை என்பதே இல்லாமல் இருப்பதுதான். ஆசை இருந்தால் தானே அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணம் எழுந்து, யாக யக்ஞங்களைச் செய்வர். அதற்கு ஒரு வழி செய்கிறேன்... என்று சொல்லி, காமன் என்ற குழந்தையை உண்டாக்கி, தேவர்களிடம் கொடுத்து, இதை நன்றாக வளருங்கள். உங்கள் குறையை தீர்த்து வைப்பான்... என்று சொல்லி மறைந்தாள். இந்த காமன் தான் (காமன் என்றால் ஆசை, விருப்பம்!) மனிதர்களின் மனதில் புகுந்து, பலவித ஆசைகளை உண்டாக்கி அவை நிறைவேற வேண்டி, பூஜை, ஹோமம், யாகம், யக்ஞம் எல்லாவற்றையும் செய்யும்படி செய்தான். தேவர்களுக்கு முன்போல் அமிர்தம் கிடைத்து, நிம்மதியாக இருந்தனர் என்பது கதை. ஆக, மனிதர்களுக்கு காமம் (ஆசை, விருப்பம்) என்பது இருந்தால் தான், பலவித காரியங்கள் நடைபெறும். மனிதர்களும், தேவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இந்த ஆசை என்பது நிதானமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். பேராசையாகவும், அநியாயமாகவும் இருக்கக் கூடாது; ஞாபகம் இருக்கட்டும்!
மங்கல வாழ்வு அருளும் மதுரைக்கு அரசி!

மதுரையில், மலையத்துவஜ பாண்டியன் நீண்டகாலமாக மகப்பேறு வாய்க்காமல் வருந்தினான். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். பாண்டியனின் மனைவியான காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதி என்ற பெயரில் பிறந்து, பராசக்திக்கு சேவை செய்து வந்தாள். இன்னொரு பிறவியில், அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தாள். அதன் பயனாக, அவள் மூன்றுவயது பெண்குழந்தையாக யாகத்தீயில் தோன்றினாள். தடாதகை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்தனர். குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்ததைக் கண்டு காஞ்சனமாலை வருந்தினாள். காஞ்சனமாலையே! வருந்தாதே!  தடாதகை தனக்கு மாலைசூடும் மணாளனைக் கண்டதும் மூன்றாவது தனம் மறைந்துவிடும்! என்று வானில் அசரீரி ஒலித்தது. ஆதிபராசக்தியின் அவதார மான தடாதகை வீரதீரம்மிக்கவளாக வளர்ந்தாள். தக்கவயதை அடைந்ததும் மன்னன் பாண்டியநாட்டின் இளவரசியாக முடிசூட்டினான்.  
உலகில் உள்ள தேசங்களை எல்லாம் கைப்பற்ற எண்ணிய தடாதகை, திக்விஜயம் புறப்பட்டாள். அஷ்டதிக்பாலகர்களான (எட்டுதிசை காவலர்கள்) இந்திரன், அக்னி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்களை வென்று கைலாயம் அடைந்தாள். அங்கு கயிலைநாதனைக் கண்டாள். அவளின் வீரம் நொடியில் காணாமல் போனது. நாணத்தால் முகம் சிவந்தாள். அசரீரியின் வாக்கை மெய்ப்பிக்கும் விதத்தில் தடாதகையின் மூன்றாம் தனம் மறைந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சியாக உருவெடுத்தாள். ஐயனும் சொக்கேசப்பெருமானாக வந்து அவளின்கரம் பற்றினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடிநிற்க மதுரையில் மீனாட்சிகல்யாணம் நடந்தேறியது. அம்மையும் அப்பனும் பாண்டியநாட்டின் மன்னராக பட்டம் சூடி அரசாட்சி நடத்தினர். மீனாட்சியை மீன்+அக்ஷி என பிரிப்பர். மீன் போன்ற கண்களையுடையவள் என்பது இதன் பொருள். மீன் தன் பார்வையாலேயே குஞ்சுகளின் பசியைப் போக்கி விடும். அதுபோல், அங்கயற்கண்ணி எம்பிராட்டியும் தம் பார்வையாலேயே பக்தனின் குறையைப் போக்கிடுவாள். இதனால் தான் அவள் மீனாட்சி என்ற பெயர் பெற்றாள். மதுரையில் மீனாட்சி சந்நிதி விசேஷமானது. இங்கு அம்மனுக்கு நடக்கும் தனிவிழாக்களில் நவராத்திரி சிறப்பானது. கொலுமண்டபத்திற்கு எழுந்தருளும் மீனாட்சியம்மன் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தந்து மங்கல வாழ்வு அருள்வாள். கொலுவும் வைக்கப்படும்.