பெரியாழ்வார் அருளிச்செய்தது பொது தனியன்கள்
வடகலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.
குருபரம்பரை தனியன்
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
எம்பெருமானார் தனியன்
யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.
நம்மாழ்வார் தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
ஆழ்வார்கள் உடையவர் தனியன்
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.
தென்கலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்.
குருபரம்பரை தனியன்
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
எம்பெருமானார் தனியன்
யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.
நம்மாழ்வார் தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
ஆழ்வார்கள் உடையவர் தனியன்
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
முதலாயிரம்
பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது
குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷாந்
நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமரவந்த்யம் ரங்கநா தஸ்ய ஸாக்ஷõத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
இரு விகற்ப நேரிசை வெண்பா
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்று, ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று,
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளிச்செய்தது)
முதற்பத்து
முதல் திருமொழி
1. திருப்பல்லாண்டு
மக்கள் தன்னலத்தையே விரும்புகிறார்களே! பிறர் நலத்தையும் எண்ண வேண்டாவோ! தம்முடைய நன்மையை விரும்பியே பகவானிடம் செல்லுகிறார்கள்; வேண்டியவற்றைக் கேட்டுப் பெறுகிறார்கள்; பகவானுக்கு ஒரு முறைகூடப் பல்லாண்டு பாடுவதில்லை! உலகின் தன்மையை அறிந்து பெரியாழ்வாரின் திருவுள்ளம் குமுறுகிறது. பல்லாண்டு பாடலாம் வாருங்கோள் என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே (மங்களாசாஸனம் செய்வதே) அடியார்களின் கடமை! அவர் காட்டிய வழியைத்தான் பின்பற்றுவோமே!
காப்பு- பல்லாண்டு வாழ்க
குறள் வெண்செந்துறை
1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2. அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
இராமனைப் பாடு
3. வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே
நமோ நாராயணாய
4.ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே
இருடீகேசனைப் பாடு
5.அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே
நரசிம்மனைப் பாடு
6. எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே
ஆழிவல்லானைப் பாடு
7. தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
கருடக் கொடியானைப் பாடு
8. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
நாகணையானைப் பாடு
9. உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
மதுரைப்பிரானைப் பாடு
10. எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
பவித்திரனைப் பாடு
11. அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே
சார்ங்கபாணியைப் பாடு
12. பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே
(இந்த 12 பாசுரங்களையும் உருக்கமாகப் பாராயணம் செய்பவர்கள் பக்தி சிரத்தையுடன் பல்லாண்டு வாழ்வர்)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
அடிவரவு: பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு- வண்ணம்.
(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ உடுத்தெந்நாள் கூறுதும், நெய்யுமல்லும் கூறுவனே)
இரண்டாம் திருமொழி
2. வண்ண மாடங்கள்
பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது! பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!
கண்ணன் திருவவதாரச் சிறப்பு
கலி விருத்தம்
திருக்கோட்டியூர்க் கேசவனே கண்ணன்
13.வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.
ஆயர்களின் மெய்ப்பாடு
14. ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
திருவோணத்தான் உலகாளும்
15. பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தானுல காளுமென் பார்களே.
ஆயர்களின் மெய்ம்மறந்த செயல்
16. உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.
அரும்பன்ன பல்லினர்
17. கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.
பிள்ளை வாயுள் வையம் கண்ட அசோதை
18. கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.
அருந்தெய்வம்
19. வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.
உத்தான விழா
20. பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.
குழந்தையின் செயல்
21. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.
பாவம் பறந்துவிடும்
22. செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே
அடிவரவு: வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை வாயுள் பத்து கிடக்கில் செந்நெல்.
மூன்றாந் திருமொழி
3. சீதக்கடல்
கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியிலுள்ள பெண்களை அழைத்துக் கண்ணனின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடிமுதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!
திருப்பாதாதிகேச வண்ணம்
(கண்ணனின் திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்)
கலித்தாழிசை
பாதக் கமலங்கள்
23. சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.
ஒளி விரல்கள்
24. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.
வெள்ளித் தளை இலங்கும் கணைக்கால்
25. பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
தவழும் முழந்தாள்
26. உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின்
பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலை யீர்வந்து காணீரே.
இரணியனை அழித்த தொடைகள்
27. பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்கு களைவந்து காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
28. மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே.
பரமனின் திருமருங்கு
29. இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன்
நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுத லீர்வந்து காணீரே.
நந்தன் மதலையின் உந்தி
30. வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.
தம்பினால் கட்டப்பட்ட திருவயிறு
31. அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.
கவுஸ்துபம் திகழும் திருமார்பு
32. பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
அசுரரை அழித்த திருத்தோள்கள்
33.நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே.
சங்கு சக்கரம் நிலவும் கைத்தலங்கள்
34. மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.
உலகங்களை விழுங்கிய கழுத்து
35. வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
ஆய்ச்சியர் விரும்பும் அழகிய வாய்
36. எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
முகத்தின் அழகு
37. நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.
வாசுதேவனின் கண்கள்
38. விண்கொ ளமரர்கள் வேதனை தீரமுன்
மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து
திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்வந்து காணீரே.
தேவகி மகனின் திருப்புருவம்
39. பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளிமணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண்முலை யீர்வந்து காணீரே.
மகரக்குழை பதிந்த திருச்செவிகள்
40. மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
பரமன் திருநுதல்
41. முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழை யீர்வந்து காணீரே.
கண்ணன் திருக்குழல்கள்
42. அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
தரவு கொச்சகக் கலிப்பா
திருப்பாதாதிகேசம் (அடியும் முடியும்)
43. சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே.
அடிவரவு: சீத முத்தும் பணை உழ பிறங்கிய மத்த இருங்கை வந்த அதிருங் பெருமா நாள்கள் மை வண்டு எந் நோக்கி விண்பருவம் மண் முற்றில் அழகிய சுருப்பார்- மாணிக்கம்
நான்காந் திருமொழி
4. மாணிக்கங்கட்டி
மக்கட் பேறு பெற்று மகிழும் இக்காலப் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி! தாலாட்டுப் பாடலிலும் பகவத் விஷயம் கலந்திருக்க வேண்டாமா! இப்பாடல்களையே தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாமே! இப் பாடல்களைக் கேட்டுப் பழகும் குழந்தைகள் பகவானின் திருவருளைப் பெறுவது திண்ணம். அவர்களுக்கு வாழ்வில் துன்பமே ஏற்படாது என்கிறாள் தெய்வ நங்கை யசோதை!
திருத்தாலாட்டு
(கண்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல்)
கலித்தாழிசை
பிரமன் விடுதந்த தொட்டில்
44. மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
அரனளித்த அரைவடம்
45. உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!
இந்திரனீத்த கிண்கிணி
46. என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!
அமரர் தந்த அரைஞான்
47. சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
குபேரன் தந்த முத்துவடம்
48. எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!
வருணன் அளித்த சாதிப்பவளம்
49. ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும்சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!
திருமங்கை அனுப்பிய திருத்துழாய் மாலை
50. கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!
பூதேவி கொடுத்தனுப்பிய உச்சிமணிச் சுட்டி
51. கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராய ணாஅழேல் தாலேலோ!!
துர்கை தந்த பொருள்கள்
52. மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்குஅஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!
இடரில்லை
53. வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.
(இந்த 10 பரசுரங்களைப் பாராயணம் செய்தால் எந்தக் கஷ்டமும் வராது. மேற்கொண்டு இம்மாதிரி பல பாசுரங்கள் காணலாம். பக்தி, சிரத்தை மஹாவிச்வாசம் மிக மிக அவசியம்.)
அடிவரவு: மாணிக்கம் உடை எந்தம் சங்கு எழில் ஓதக்கானார் கச்சொடு மெய் வஞ்சனையால்- தன்
ஐந்தாந் திருமொழி
5. தன்முகத்து
கண்ணன் வளர்ந்து தவழ்கிறான். திறந்த வெளியில் வருகிறான். வெண்ணிலவு! சந்திரனைப் பார்க்கிறான்; தன்னோடு விளையாட வருவான் என்று நினைக்கிறான். ஆனால் சந்திரன் வான வீதியில் வேகமாகச் செல்லுகிறான். இவனே பகவான். இவனை அலட்சியம் செய்தால் நீ தப்பமுடியாது என்று யசோதை சந்திரனுக்குக் கூறி, நமக்கும் உணர்த்துகிறாள்.
அம்புலிப் பருவம்
(சந்திரனை அழைத்தல்)
கலிநிலைத்துறை
கோவிந்தன் கூத்து
54. தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.
அஞ்சன வண்ணனோடு ஆடு
55. என்சிறுக் குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.
வித்தகன் வேங்கடவாணன்
56. சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.
சக்கரக்கையன்
57. சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.
சிரீதரன் மழலைச் சொல்
58. அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!
கண்ணனின் துயில்
59.தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன்
60. பாலக னென்றுபரிபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலி னிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந் தோடிவா.
கண்ணன் நெடுமால்
61.சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்
நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
வெண்ணெய் விழுங்கும் கண்ணன்
62.தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.
இடரில்லை
63.மைத்தடங் கண்ணி யசோதை தன்மக னுக்குஇவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனை யும்சொல்ல வல்ல வர்க்குஇட ரில்லையே
அடிவரவு: தன் என் சுற்று சக்கரம் அழகிய தண்டொடு பாலகன் சிறியன் தாழியில் மை-உய்ய
ஆறாந் திருமொழி
6. உய்யவுலகு
கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந் தாள்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை நிமிர்த்தி அசைத்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை! அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலை யசைத்து விளையாடிக் காட்டு என்று வேண்டுகிறாள் அவள்.
செங்கீரைப் பருவம்
(தலையை நிமிர்த்தி முகத்தையசைத்து ஆடுதல்)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பரம்பரனே ஆயர்கள் போரேறு
64. உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல்
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச் செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக
ஐயஎ னக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
கோளரியே ஆயர் போரேறு
65. கோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
திரிவிக்கிரமனே ஆயர் போரேறு
66. நம்முடை நாயகனே நான்மறை யின்பொருளே நாபியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்
தம்மனை யானவனே தரணி தலமுழுதும் தாரகை யின்னுலகும் தடவி அதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
நரகனை அழித்தவனே ஆயர் போரேறு
67. வானவர் தாம்மகிழ வன்சக டமுருள வஞ்சமு லைப்பேயின் நஞ்சமது உண்டவனே
கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே
தேனுக னும்முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம்மடியச் செருவத ரச்செல்லும்
ஆனை எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
மருதம் முறித்தவனே ஆயர் போரேறு
68.மத்தள வும்தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தினி ளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
காளியனுச்சியில் நடம்பயின்றவனே ஆயர் போரேறு
69. காய மலர்நிறவா கருமுகில் போலுருவா கானக மாமடுவில் காளிய னுச்சியிலே
தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆய மறிந்துபொரு வான்எதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்
ஆய எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
நப்பின்னை நாதனே ஆயர் போரேறு
70. துப்புடை யயார்கள்தம் சொல்வழு வாதுஒருகால் தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன்
அப்ப எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
ஏழுலகுடையவனே ஆயர் போரேறு
71. உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும்
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.
மறை ஏழும் பொருளே ஆயர் போரேறு
72. பாலொடு நெய்தயிர்ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக
நீல நிறத்தழகா ரைம்படை யின்நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ
ஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.
இடைக் குலத்தரசே ஆயர் போரேறு
73. செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்
மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.
புகழும் இன்பமும் அடைவர்
74. அன்னமும் மீனுருவும் ஆளரி யும்குறளும் ஆமையு மானவனே ஆயர்கள் நாயகனே
என்அவ லம்களைவாய் ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக வாடுகவென்று
அன்ன நடைமடவாள் அசோதை யுகந்தபரிசு ஆன புகழ்ப்புதுவைப் பட்ட னுரைத்ததமிழ்
இன்னிசை மாலைகள்இப் பத்தும்வல் லார்உலகில் எண்திசை யும்புகழ்மிக்கு இன்பம்அது எய்துவரே.
(இந்த 11 பரசுரங்களை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்பவர்க்கு மாபெரும் புகழ் உண்டாகும்)
அடிவரவு: உய்ய கோளரியின் நம்முடை வானவர் மத்தள காய துப்பு உன்னை பாலொடு செங்கமலம் அன்னம்-மாணிக்கம்
ஏழாந் திருமொழி
7. மாணிக்கக்கிண்கிணி
கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்தப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! கைதட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு மேலும் மகிழ்கிறான். இதைக் கண்டு பேரானந்தம் அடைகிறாள் யசோதை. கண்ணா! மீண்டும் ஒரு முறை சப்பாணி கொட்டு; உலகம் மகிழட்டும் என்று வேண்டுகிறாள்.
சப்பாணிப் பருவம்
(கைகொட்டி விளையாடுதல்)
கலித்தாழிசை
பண்டு காணி கொண்ட கைகள்
75. மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.
மாயவன் கண்ணன்
76. பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல்நின் றிழிந்துஉங்க ளாயர்தம்
மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.
ஆழியங்கையன்
77. பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன
என்மணி வண்ணன் இலங்குபொற் றோட்டின்மேல்
நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்
அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.
திருக்குடந்தை ஆராவமுது
78. தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலாஅம்புலீசந்திரா வாவென்று
நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்
கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.
பத்மநாபன்
79. புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.
தேவகி சிங்கம்
80. தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்குஅன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.
திருக்குடந்தை சார்ங்கபாணி
81. பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி.
திருக்குடந்தை சக்ரபாணி
82. குரக்கினத் தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை
அரக்கர் அவிய அடுகணை யாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.
சிங்கமதாகிய தேவன்
83. அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.
கடல் கடைந்த கார்முகில்
84. அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக்க்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி.
தீவினை போகும்
85. ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்
வேட்கையி னால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.
அடிவரவு: மாணிக்கம் பொன் பன் தூநிலா புட்டியில் தாரித்து பரந்து குரக்கினம் அளந்து அடைந்து ஆட்கொள்ள- தொடர்
எட்டாந் திருமொழி
8. தொடர்சங்கிலிகை
நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! கண்ணா நீ யல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி: என்று எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடையழகை எனக்குக் காட்டமாட்டாயா? உன் மெல்லடித் தாமரைகளைத் தரைமீது மெல்ல வைத்து யானைக்குட்டி போல் நடந்து வா! என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணைப் போன்று புகழ்மிக்க மகனைப் பெறுவார்கள்.
தளர் நடைப் பருவம்
(தளர் நடை நடத்தல்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வாரணம் கண்ணன்
86. தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்
உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க
தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.
அனந்த சயனன்
87. செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
இருடீகேசன்
88. மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
மின்னில் பொலிந்த தோர்கார் முகில்போலக் கழுத்திணில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ.
என் திரு மார்வன்
89. கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து
முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.
கருமலைக் குட்டன்
90. முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்
பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப் பலதே வனென்னும்
தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.
காமன் தந்தை
91. ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து
பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.
தடந்தாளிணையான்
92. படர்பங் கயமலர் வாய் நெகிழப் பனிபடு சிறுதுளிபோல்
இடங்கொண் டசெவ் வாயூறி யூறி இற்றிற்று வீழநின்று
கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென
தடந்தா ளினைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.
மணிவண்ணன் வாசுதேவன்
93. பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய
அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர
மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
திருவிக்கிரமன் வேழக்கன்று
94. வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல்
தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர் படவியர்த்து
ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து ஒன்றும் நோவாமே
தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.
செங்கண்மால் கேசவன்
95. திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல் செங்கண்மால் கேசவன்தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர
பெருநீர்த் திரையெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.
பக்தி மிக்க மக்களைப் பெறுவர்
96. ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.
(இந்த 11 பாசுரங்களையும் பாராயணம் செய்து ஆத்திகத்தில் அக்கறை கொண்ட குழந்தைகளைப் பெறுங்கள்)
அடிவரவு: தொடர் செக்கர் மின்னுக் கன்னல் முன்னல் ஒரு காலில் படர் பக்கம் வெண் திரை ஆயர்- பொன்.
ஒன்பதாந் திருமொழி
9. பொன்னியற்கிண்கிணி
பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெரியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார்முன் நிற்கும் நாராயணன் அவன். யசோதைக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!
அச்சோப் பருவம்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்)
கலித்தாழிசை
மின்னியல் மேகம்
97. பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ
பஞ்சாயுதன்
98.செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய
அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.
பஞ்சவர் தூதன்
99. பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.
கூனியின் கூனினை நிமிர்த்தவன்
100. நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திருவுடம் பில்பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்கஅன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.
துரியோதனனை அழல விழித்தவன்
101. கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்துஉன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ.
ஸ்ரீ பார்த்தஸாரதி
102. போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும்பேருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்
103. மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக்கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ.
நமுசியை வானில் சுழற்றியவன்
104. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.
திருமறுமார்வன்
105. கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஒவென்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.
ஹம்ஸாவதாரம்
106. துன்னிய பேரிருள் சூழ்ந்துஉல கைமூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்கஅன்று
அன்னம தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ.
நாரணனைப் பாடுவார்
107. நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன
மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல்
நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.
அடிவரவு: பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய கழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவார்-வட்டு
பத்தாந் திருமொழி
10. வட்டு நடுவே
குழந்தை ஓடி வந்து தாயின் முதுகைக் கட்டிக்கொண்டு மகிழும்; தாயும் மகிழ்வாள். கண்ணனும் தாய்க்குத் தெரியாமல் பின்புறத்தே மெல்ல நடந்து வந்து முதுகைக் கட்டிக் கொள்வான். அந்நிலையை விரும்பி யசோதை மகிழ்ந்தது போல் ஆழ்வார்தாமும் விரும்புகிறார்.
புறம் புல்கல்
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
கோவிந்தன் புறம் புல்குதல்
108. வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
எம்பிரான் கண்ணன்
109. கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
கொத்துத் தலைவனை அழித்த அச்சுதன்
110. கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.
விசயன் தேர் ஊர்ந்தவன்
111. நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்
வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
மண்பல கொண்ட வாமனன்
112. வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.
பத்திராகாரன் கண்ணன்
113. சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.
வயிறார வெண்ணெய் விழுங்கியவன்
114. பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயி றார விழுங்கிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.
மறையோர் வணங்கும் எம்பிரான்
115. மூத்தவை காண முதுமணற் குன்றேறி
கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
கற்பக மரத்தைப் பூமிக்குக் கொணர்ந்தவன்
116. கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
தரவு கொச்சகக் கலிப்பா
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
117. ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.
அடிவரவு: வட்டு கிங்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி-மெச்சூது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக