செவ்வாய், 24 செப்டம்பர், 2024

அன்னை மாயம்மா...


அன்னை மாயம்மா!

ஒழுங்காக வாரப்படாததால் பறக்கும் கேசம் கந்தலை விட மோசமாகத் தென்படும் உடை தோற்றத்தில் வினோதமாக அமைந்த சுருக்கங்கள்... இப்படித்தான் தோற்றமளித்தார் மாயம்மா. தபோ வனத்தில் தம்முடைய அதிஷ்டானத்தை அமைத்துக் கொண்ட சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஒரு முறை தன் பக்தர்கள் கேட்ட போது சொன்னார். கன்யாகுமரி கோவிலில் பகவதியாக இருப்பவள் தான் கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள் என்று. மஹான்களைப் பற்றி மஹான்களே அறிவார்கள் போலும். இறையருள் பெற்று பகவதியம்மன் பார்வையிலேயே இருந்த மாயம்மாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. தன்னை எவரும் வந்து வணங்கவில்லையே என்று மாயம்மா வருந்தியதும் இல்லை. எனது பிள்ளைகளைப் பாதுகாத்திடவே நான் இங்கு வந்தேன் என்பதே மாயம்மாவின் கூற்று. ஒருநாள் மாயம்மா பகவதியம்மன் கோயிலின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்ட சமயத்தில் அங்கு வந்த ஒரு தொழிலாளி வயிற்று வலியால் துடித்தபடி உருண்டு புரண்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர ஒருவரும் உதவி செய்யவில்லை. மாயம்மா அவனிடம் எழுந்திரு மகனே இந்த உணவை உட்கொள்! என்று தனது கைப்பிடி சோறை அந்தத் தொழிலாளிக்கு வழங்கினார். அதனை வாங்கி உண்ட அந்தத் தொழிலாளியின் வயிற்றுவலி சட்டென்று நீங்கியது. இந்நிகழ்வே மாயம்மாவின் கருணை உலகமெங்கும் பரவ காரணமாக அமைந்தது.

ஒருசமயம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று சாலையில் படுத்திருந்த நாயின் மீது ஏறி இறங்கியது. பஸ் ஏறியதால் குடல் வெளியே வந்து உயிருக்குப் போராடிய நாயை அங்கு இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். மாயம்மா அடிபட்டுக் கிடந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்தி நாயின் குடலை வயிற்றுக்குள் தள்ளி தான் வைத்திருந்த வைக்கோலால் நாயின் கிழிந்த வயிற்றைத் தைத்து தனது கையில் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். பின்னர் நாயின் உடலை நீவி விட்டார். அவ்வளவு தான்! மடியில் கிடந்த நாய் துள்ளிக்குதித்து எழுந்து ஓடியது. இந்நிகழ்வுக்குப் பின்னர் மாயம்மாவைச் சுற்றி நாய்கள் கூட்டமும் மிகுந்த அன்புடன் சுற்றிவர ஆரம்பித்தது. இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம். இதன்பின்னர் பக்தர்களின் கூட்டம் அவரை நாடி வந்தது. தன்னை நாடிவந்த அடியவர்களை மாயம்மா நல்வழிப்படுத்தியதுடன் தடுமாறுபவர்களை தனது அருளால் திருத்தவும் செய்தார். இந்நிலையில் அவரது பக்தரான ராஜமாணிக்கம் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாயம்மா தங்குவதற்கு கடற்கரையில் குடில் அமைத்துக் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் அபிவிருத்தி என பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து பக்தர்கள் அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை: